Wednesday, December 26, 2018

எதிர்பாராமல்... கிடைச்ச..... (பயணத்தொடர், பகுதி 46 )

இருபத்தியஞ்சு ஏக்கர் நிலத்தில், கோவிலைச்  செவ்வகமாக் கட்டி இருக்காங்க. ஒன்பது கோபுரங்கள். நாம் நுழைஞ்சு வந்த பதினொரு நிலை ராஜகோபுரம்,  இருநூத்திப் பதினேழு அடி உயரமாம்!
சின்னதும் பெருசுமா, ஆயிரங்கால் மண்டபம் உட்பட முன்னூத்தியாறு மண்டபங்கள், ஏராளமான சந்நிதிகள்னு கணக்குவழக்கே இல்லாமல் இருக்கே!
மூலவரை நாம்தான்  சாயரக்ஷை பூஜை அபிஷேகத்தில் கடைசியா தரிசிச்சோம். ஆரத்தி எடுத்தாங்க!  அப்புறம் திரை போட்டுட்டு அலங்காரம்  செய்ய ஆரம்பிச்சாங்க.  நாங்க பிரகாரம் சுத்திவரப் போனோம். ஏழு பிரகாரங்கள்! கிரிவலப்பாதைதான் ஏழாவது!  கோவிலைச் சுத்தி இருக்கும் மாடவீதிகள், ஆறாவது! ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே வந்தால் அஞ்சாவதுன்னு..... போகுது!



தினமும் ஆறுகால பூஜை. காலையில் அஞ்சுமணிக்கு நடையைத் திறந்தால் ராத்திரி ஒன்பதரைக்கு நடை யடைப்பு.   இடையில்  பனிரெண்டரை முதல் மூணரை வரை லஞ்சு டைமுன்னு  மூடி வச்சுடறாங்க.
பஞ்சபூதங்களால் ஆனது இந்த உலகு!  காற்று, நிலம், நீர், அக்னி, ஆகாயம்னு  அஞ்சுமா இருக்கார் சிவன். பஞ்சபூத ஸ்தலங்கள் என்றே  காளஹஸ்தி, காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, சிதம்பரம்னு  இந்த ஊர்களில் எல்லாம்  சிவன் கோவில்தான் முக்கியமானதா இருக்கு.  இங்கே, அக்னி வடிவா இருக்கும் அண்ணாமலையார் கோவிலிலேயே மற்ற நால்வரையும் ஒரே இடத்தில் தரிசனம் செஞ்சுக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துட்டாங்க. (தனிக்கோவில்போலத்தான் ஒவ்வொரு சந்நிதியுமே அமைச்சுருக்காங்க) 
நாலு பஞ்சபூத ஸ்தலங்களுக்கான சந்நிதிகளும், பிடாரி அம்மனுக்கு ஒரு சந்நிதியும், கோவில் தல விருக்ஷங்களும்,  தோட்டமும்,  எங்கே பார்த்தாலும் சிவலிங்கங்களுமா இதுவே ஒரு தனி உலகம்தான்!



ரெண்டு வெவ்வேற மரங்கள் இணைஞ்சுருக்கு இங்கே, பிடாரி அம்மன் சந்நிதிக்குப்பக்கம். இலந்தையும், அரசமரமும்னு நினைவு.
மகிழமரம்தான் கோவிலின்  இப்போதைய தலவிருக்ஷம்!  முந்தி ஒரு காலத்தில் ஆலமரமா இருந்ததாம்.  வேர்கள் ஆழமாகப்போய், தரை விரிசலாகப் போனதால்  மகிழமா மாத்திட்டாங்களாம்!

உள்பிரகாரமே இங்கே அஞ்சு இருக்குன்னாலும் இப்போ நாம்  எங்கே இருக்கோமுன்னும் தெரியலை.   முதல்முறை பார்க்கும் உணர்வுதான் என்பதால் அப்படியே கால் போன போக்குலே சுத்தி வர்றோம்.  பிரகார மதில்சுவரில்  யானை ஒன்னு  முகம் காண்பிச்சது :-)  ஒரு கட்டடம், அசப்பில் செட்டிநாடு வீடு போல  இருந்தது.

இன்னொரு கோபுரத்தாண்டை வந்தப்போ பார்த்தால்.... மேலே கோபுர இடுக்குகளில் ஒட்டிப்பிடிச்சுக் கிடக்குதுகள் ஆஞ்சிகள்.  அடப்பாவமே....
அப்போதான் பத்தவைக்கிறதைப் பார்த்தோம். ஹைய்யோ..... எவ்ளோ நாளாச்சு!  கிட்டக்கப்போய் நின்னால்  உஸ் உஸ்ஸுன்னு....
பெட்ரோமாக்ஸ் விளக்கு.

சின்னதா ஒரு வீடியோ எடுத்துக்கிட்டே விசாரிச்சதில் புறப்பாடு இருக்காம். ஆஹா.....  இருந்து பார்த்துட்டுப் போகணும். என்ன விசேஷமாம்? அவுங்களுக்குத் தெரியலை.  அப்புறம்  வேறொரு இடத்தில் தெரியவந்தது.....   இன்றைக்குக் காலையில் தக்ஷிணாய புண்ணிய கால கொடியேற்றம்  நடந்துருக்கு!  ( 7. 7. '18.)   அதையொட்டிச் சாயங்காலம் புறப்பாடு!

அம்மன் சந்நிதிக்கு வந்துருந்தோம்.  தரிசனம் ஆச்சு.



தண்டபாணி சந்நிதியில்  முருகன் தனியாக நின்னுக்கிட்டு இருக்கார்.

இப்பெல்லாம் துலாபாரம் எல்லாக்கோவில்களுக்குமா ஆகிப்போச்சு!




ஒரு கோபுரத்தை (!) ஒட்டி இருக்கும் மண்டபத்தில் (காட்சி மண்டபம்?)  தேவாரப் பதிகம் ஓதி, ஒரு சொற்பொழிவு மாதிரி ஒன்னு. ஒரு ஏழெட்டுப்பேர் இந்த கைங்கரியத்தில். நாங்க புறப்பாட்டுக்குக் காத்திருந்தோம்.
கிடைச்ச ஒரு இடத்தில் உக்கார்ந்தப்ப, ஒரு சிவனடியார் நம்ம பக்கத்தில் வந்து உக்கார்ந்தார்.  சிவனின் பெருமையைச் சொல்லக் கேட்டோம். படங்களும் ஆச்சு.  அடியாருக்கு அமுது  செய்விக்க வேண்டுமென விண்ணப்பித்தார்.  இட்லி அமுது செஞ்சுக்கணுமாம். (அப்பல்லோ இட்லி இல்லை என்பதால்  நம் சக்திக்கு ஏற்ப ஒரு தொகை கொடுத்தார் 'நம்மவர்' )
மேள நாயனம் ஒலிக்க இதோ வந்துட்டாங்க அம்மையும் ஐயனும். முதலில் புள்ளையார் வந்தார்.  அம்மன் தனியாகவும், ஐயனோடு சேர்ந்தும்.......  ஆஹா.... கண்குளிர தரிசிச்சோம்.









இந்தப் பிரகாரம்  சுற்றி அடுத்த பிரகாரத்துக்குள்  போனாங்க. நாமும் கூடவே..... இங்கேதான் பெரிய சிறிய நந்தி மண்டபங்கள். பிறகு தெருவுக்குள்  போய் ஒரு சுத்து உண்டாம்.
நாங்க கிளம்பி வெளியே  போகும் வழியில் பாதாளலிங்கம்  தரிசனம் செஞ்சோம்.  ஒரு கீழ்தளத்தில் இருக்கு. ரமணர் இளவயதில்( மஹரிஷி)  இங்கே  இருந்து தியானம் செஞ்சாராம். சிலபல விவரங்கள் கிடைச்சது. க்ளிக்ஸ் ஆச்சு.


(சந்நிதியை எந்த அழகிலே வச்சுருக்காங்க பாருங்க....  ப்ச் )

கோவிலைவிட்டு வெளியே வரும்போது,   எதிர்பாராமல் புறப்பாடு கண்ட மகிழ்ச்சியும் திருப்தியும் இருந்தாலும்......   கோவிலை முழுசாச் சுத்திப் பார்க்காதது ஒரு குறையாகத்தான் மனசில் நின்னு போயிருந்துச்சு. இருட்டுலே என்னன்னு....?   ப்ச்.....

ஹோட்டேல் அர்ப்பணாவுக்குத் திரும்பிப்போகும் வழியில்  பார்க்கக் கொஞ்சம் டீஸண்ட்டாத் தெரிஞ்ச இடத்தில்  நம்ம டின்னர் ஆச்சு!  ஆளுக்கு ரெண்டு இட்லியும்,  பனங்கல்கண்டு  சேர்த்த பாலும்!  ரமேஷிடம் அவருக்குத் தேவையானதை வாங்கிக்கச் சொல்லிட்டோம்.

ரொம்பவே சுத்துன நாளாக  இன்றைக்கு அமைஞ்சுபோச்சு. கால்வலியும் எட்டிப் பார்க்க ஆரம்பிச்சது.....

தொடரும்........  :-)


6 comments:

said...

மிக அருமை. நன்றி.

said...

உண்மையிலயே அண்ணாமலையாரை நேரில் பார்த்த திருப்தி


அம்மா ஒரு திருத்தம்/ஒருதகவல் /" பஞ்சபூதங்களால் ஆனது இந்த உலகு! காற்று, நிலம், நீர், அக்னி, ஆகாயம்னு அஞ்சுமா இருக்கார் சிவன். பஞ்சபூத ஸ்தலங்கள் என்றே காளஹஸ்தி, திருவாரூர், திருவானைக்காவல், திருவண்ணாமலை, சிதம்பரம்"/ இதில் நிலத்துக்கு காஞ்சிபுரம் திருவாரூர் இல்லை

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க செந்தில்பிரசாத்,

ஆமாம். காஞ்சிபுரம்தான். அங்கே ஏகாம்பரேஸ்வரர் சந்நிதி பார்த்தும் கூட புராணப்பிழை செஞ்சுட்டேனே.......... அட ராமா......

நல்லவேளை, நீங்க பார்த்துக் கவனத்துக்குக் கொண்டுவந்தீங்க !

என் மனம் நிறைந்த நன்றிகள் ! _/\_

said...

சென்ற இடம்தான்.உங்கள் பகிர்வின் மூலம் புதியதாக தரிசித்தோம் .

said...

நாங்க போன போதும் இப்படி ஒரு புறப்பாடு பார்க்கும் பாக்கியம் பெற்றோம் மா..

அம்மன் ஆஹா அழகு ..

அருமையான தரிசனம்