Wednesday, November 28, 2012

அந்த மூன்று சொற்கள்.


இங்கே பக்கத்துலே தான் இருக்கு.  நானும்  ஒருமுறை  அங்கே அண்ணன் குடும்பத்தோடு போயிருக்கேன்.  மாயாஜாலைத் தொட்டடுத்து வந்துரும்.  கண்ணில் படாமப்போக சான்ஸே இல்லை. அங்கேயே ஒரு காஃபியைக் குடிச்சுக்கலாம்.

ஆனா....காணோம்!  மெயின் ரோடில் குத்துக்கல்லாட்டம் கம்பீரமா நின்னதைக் காணோம்!!! வழிதவறிட்டோமோ? நோ ச்சான்ஸ்:( இதோ இருக்கே மாயாஜால். அப்ப அது எங்கே? காக்கா வூஷ்..... அறுசுவை அரசு காணாமல் போச்சுதே!  போகட்டும் மாயாஜாலுக்குள் நுழைஞ்சோம்.  காஃபிக்கு முன்னால் ஓய்வறைக்குப்போயிட்டு வரலாமுன்னு போனேன்.  ஊஹூம்.... ஒன்னும் சரி இல்லை.  என்னவோ போங்க..........   காஃபியும் வேணாம்  ஒன்னும் வேணாம்......

நித்தியகல்யாணப் பெருமாள் கோவிலில்  வண்டியைவிட்டு இறங்கும்போதே ஓடி வந்து வரவேற்றார் ஒரு மாடு பாப்பா. இருடா உள்ளே போயிட்டு வரேன்னுட்டு, வழக்கத்துக்கு மாறா ஒரு மாலை வாங்கிக்கிட்டேன்.

இந்தக் கோவில் சமாச்சாரம் தெரியுமோ?   இங்கிருக்கும் உற்சவர்  தினம்தினம் கல்யாணம் பண்ணிக்கிறார்.  கல்யாணக்க்வலையில் இருப்போர் ஜோடி மாலை வாங்கிப்போய் பட்டரிடம் கொடுத்தால் அவர் அவைகளைப் பெருமாளுக்குச் சாத்திட்டு, அதில் ஒரு மாலையைக் கொண்டுவந்து  கவலையில் இருக்கும் பொண்ணுக்கோ, பையருக்கோ  தருவார். அதைக் கழுத்தில் போட்டுக்கிட்டு ஒன்பது சுத்து சுத்திவரணும்.   விளக்கமா கதை சொல்லி முன்னே ஒருக்கில் எழுதியது இங்கிருக்கு.  பார்த்துக்குங்க.

பிரார்த்தனையான்னு கேட்ட பட்டரிடம் அதெல்லாம் ஒன்னும் இல்லை. சும்மாப் பெருமாளுக்குச் சார்த்திடுங்கோன்னேன். அவரும் சார்த்தியதும், பழக்க தோஷம் காரணமா  அந்த மாலையை எங்களுக்கே பிரசாதமாக் கொடுத்துட்டார்! கல்யாணக் கவலையில் இருப்போருக்கு  கைமேல் பலன்! எனக்கும்தான் பலிதம் ஆச்சு. ஹிஹி..... பெருமாளுக்கு மாலை சாத்தின மூணாம்நாள் எங்க (அறுபதாம்) கல்யாணம் கேட்டோ!!!

வெளியில் வந்தால் மாடுப்பாப்பா வழிமேல் விழிவச்சுக் காத்திருந்தது.  நந்தகோபாலிடம் இளநீர்களை  வாங்கிக் குடிச்சுட்டு உள்ளே இருக்கும் தேங்காயை, பாப்பாவோடு ஷேர் பண்ணிக்கிட்டோம். குழந்தை ஆசையாச் சாப்பிட்டான்.

கொடிசம்பங்கின்னு சொல்வோமே அந்தப்பூக்கள் அதிசயமாக் கிடைச்சது.  பச்சையை விடமுடியுதா?


ஒரு மூணுவருசத்துக்கு முன்னே  சென்னையில்  இஸ்கான் கோவிலைத் தேடிப்போனோம். புதுக்கோவில் ஒன்னு பக்கத்துலேயே கட்டிக்கிட்டு இருந்தாங்க.  அடுக்கடுக்கான கோபுரங்களும் அலங்காரமுமா இருந்துச்சு. அந்தக் கோவில் முழுசும் கட்டி முடிச்சு இப்போ  ஏப்ரல் மாசம் திறந்துட்டாங்கன்னு  பத்திரிகை செய்தி பார்த்தது நினைவில் இருந்ததால் அங்கேயும் ஒரு எட்டு எட்டிப்பார்த்துடலாமேன்னு  போனோம்.  ஈஸிஆர்  ரோடிலேயே விஜிபி தாண்டி கொஞ்ச தூரத்தில்  எதிர்ப்புறமா  நுழைவுக்கான அலங்கார வளைவு வச்சுருக்காங்க.

வளைவு தாண்டி ஒரு ரெண்டு ரெண்டரைக்கிலோமீட்டர் உள்ளே போகணும். சாலை  ஒன்னும் அவ்வளவா சரி இல்லை. வெறும் மண் ரோடு.  கோவில் அமைஞ்சுருக்கும் இந்தப்பகுதிக்கு அக்கரைன்னு பெயராம்.  பெரிய அன்னப்பறவை வந்து இறங்கி நிற்பதுபோல் தூரத்தே  வெள்ளை மாளிகையாத் தெரியுதுகோவில். ஒன்னரை ஏக்கர் நிலமாம். 10 கோடி ரூ  செலவு. அகலமான முன்படிகளுக்கு ரெண்டு புறமும் நம்மை மாலையும் (தும்பிக்)கையுமா  வரவேற்கும் யானைகள். உள்ளே ஏறிப்போனதும் 'ம்மா..........'ன்னு சொல்லும்  (தோட்டத்தில் மேயும் வெள்ளைப்)பசுவும் கன்றும்.





நல்ல பெரிய முன்முற்றம்தான். அதைக்கடந்தால் பிரமாண்டமான ஹால்!  நேரெதிரா ஒரு அரங்கமேடை. விழாக்களுக்கும் பிரசங்கங்களுக்கும் பயன்படுத்துவாங்களா இருக்கும். இதெல்லாம் கீழ்த்தளம்.  ஹாலுக்குள்ளே இருந்தும் மாடிக்குப்போக வழி இருக்கு.

வெளியே பசுவுக்கு ரெண்டு பக்கங்களிலும் மாடிக்குப்போகும் படிகள்.  படிகள் ஆரம்பிக்கும் இடத்தில்  ரெண்டு பக்கமும் ஒரு அறை போன்ற அமைப்பு. இதுதான்  இவர்கள் வெளியிடும் புத்தக விற்பனைக்கான ஸ்டால்.  மாடிப்படிகளின் முடிவில்   அகலமான டபுள் கதவுகளுக்கப்பால்  பிரமாண்டமான ஹாலும்  கருவறை மேடையும்.   ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோவில்.

அசப்பில் பார்த்தால் சண்டிகர் இஸ்கான் கோவிலின் ஜாடை, அந்த மேடை!  மூன்று பகுதிகளா அமைச்சுருக்காங்க. நடுவில்  குழலூதும் கண்ணனும் ராதையும் தோழிகள் லலிதா & விசாகாவுடன்.  இடதுபக்கம்  Nitai Gauracandra  சந்நிதியும் வலப்பக்கம் அண்ணன் பலராமன் தங்கை சுபத்ராவுடன் ஸ்ரீ  கிருஷ்ணர் சந்நிதியுமா இருக்கு. நடுச்சந்நியின் முன்பக்கம்  பண்டிட் ஓரமா உக்கார்ந்து  பிரசாதம் தர்றார்.

எல்லாமே பளிங்கு மூர்த்திகள்.  முன்புறம்  தனிமேடையில் அவரவர்களின் பாதச்சுவடுகள் பளிங்கில். (படம் எடுத்துக்க அனுமதி கிடைச்சது) பனிரெண்டரைக்கு ஆரத்தி இருக்குன்னார்.  இருந்து சேவிச்சுட்டே போகலாமுன்னு நாங்களும் மெதுவா ஒவ்வொரு இடமாப் பார்த்துக்கிட்டே வந்தோம்.  யசோதாவும் கண்ணனுமா ஒரு சின்ன மண்டபத்தில். ரொம்பவே ஹாயா உக்கார்ந்துக்கிட்டு  ஒரு உத்தரணி தீர்த்தம்( துளிப்பால்) வழங்கினார்  கோவில் வாலண்டியர்களில் ஒருவர்.  இவரைப்போல் பல இளைஞர்கள்  அப்பப்போ வந்து கோவில் வேலைகளில் பங்கெடுத்துக்கறாங்களாம்.

சந்நிதி மேடைக்கு நேரா எதிர்ப்புறம் ஹாலின் மறு கோடியில் ஸ்ரீ ப்ரபுபாதா அவர்களின் சிலைஉருவம். ஹரே க்ருஷ்ணா இயக்கத்தை வெளிநாட்டுக்குக் கொண்டு போனவர் இவர்.  வெறும் மூன்றேசொற்கள்தான் சொல்லணும்.  ராமா, கிருஷ்ணா, ஹரே  இதையே வெவ்வேற  வகையில்  மாத்தி மாத்தி அமைச்சுட்டா மகாமந்த்ரம் வந்துருதுன்னார்.

நம்மூர்ப்பக்கங்களில் அந்தக் காலக்கூட்டுக்குடும்பங்களில்  எப்படியும்  ரெண்டு பாட்டி தாத்தாக்கள் இருப்பாங்கதான். " வயசாயிருச்சுல்லே...  யாரையும் தொந்திரவு பண்ணாம  பேசாம ராமா கிருஷ்ணான்னு திண்ணையில்  உக்கார்ந்துக்கப்டாதோ? எதுக்கு இன்னும் உள்வீட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கணும்?"  வயசான மாட்டுப்பொண்களின்  குமுறல்கள்.  ஏன்னா அவுங்களுக்குமே மாட்டுப்பொண்களும்  மாப்பிள்ளைகளும்  பேரன் பேத்திகளுமா  வீடே நிறைஞ்சு  வழியும்.  இன்னும் சில வருசங்களில் போறவழிக்குப் புண்ணியம் தேடிக்க அதே ராமா கிருஷ்ணாவைச் சொல்லிக்கிட்டுத் திண்ணையில் இடம் பிடிக்கப்போவது இவுங்கதான் என்பது (வசதியா) மறந்து போயிருக்குமோ என்னவோ!

அந்த ரெண்டு சொற்களுடன் ஒரு ஹரே வைக் கூடச்சேர்த்துக்கிட்டால்  மகாமந்த்ரம் சொல்லி நாம சங்கீர்த்தனம் பாடிட முடியும்.  ஸ்ரீ சைதன்ய மகாப்ரபு   1486 வது ஆண்டு அவதரித்தார்.  கிருஷ்ணனும் ராதையுமா சேர்ந்து ஒரே உருவத்தில்  சைதன்யராகப்பிறந்தார் என்று ஐதீகம். வேதங்களிலும் உபநிஷதுகளிலும்  நிபுணத்துவம்  அடைஞ்சவர்.  இறைவனை அடைய எளியவழி நாம சங்கீர்த்தனம்தான். வெறும் மூன்றே சொற்களை மாத்தி மாத்திப்போட்டு  சாமியை  வசீகரிக்கலாம் என்றார்.

ஹரே ராம  ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

அவ்ளோதான் இந்த மந்த்ரம்.  மஹா மந்த்ரம்.  சொல்லிச் சொல்லி நாமும் மந்த்ரவாதி ஆகிடலாம். எவ்ளோ ஈஸி பாருங்க!!!!

கோவிலுக்கு வலதுபக்கம் பழைய கோவில் கட்டிடம் அப்படியேதான் இருக்கு.  அங்கிருந்த சிலைகளில்  பூரி ஜகந்நாத் க்ரூப் மட்டும் இங்கே புதுக்கோவிலில் ஒரு சந்ந்தியில் இடம் பிடிச்சுருக்கு.  மற்ற சிலைகள் உலோகம் என்பதால் உற்சவமூர்த்திகளாக  வச்சுருக்கலாமுன்னு நினைக்கிறேன்.

புதுக்கோவில் திறந்து அஞ்சு மாசம்தான் ஆகுது.  வெளியே தோட்ட நிர்மாணம் ஒன்னும்  ஆரம்பிக்கலை.  நிலத்தைச் சுத்தப்படுத்தும் வேலைகள் நடக்குது. பெண் தொழிலாளர்களுக்கு  புடவை யூனிஃபார்ம் கொடுத்துருக்காங்க.  வளாகத்தின் ஒரு மூலையில் கழிப்பரை(?) இருக்கு.  மழைக்காலங்களில்  அங்கே போய் வரும் சனம் சகதியைக் கொண்டுவராமல் இருக்கணும்.   வெளிவேலைகள் முடிஞ்சதும்  மேற்கூரையுடன் நடைபாதை போடுவாங்கன்னு எனக்குள்ளே  சொல்லிக்கிட்டேன்.

மகளுக்குக் கொஞ்சம் போரடிச்சது. படிக்கட்டுகளிலும் அங்கேயும் இங்கேயுமா உக்கார்ந்து அரைமணி நேரம் போக்கினாள்.  ஆரத்தி சமயம் சமீபிச்சதும்  கொஞ்சம் மக்கள்ஸ் வந்து சேர்ந்தாங்க.  பனிரெண்டு மணிக்கு சந்நிதியை மூடிட்டு ஆரத்திக்காக பனிரெண்டரைக்கு   சங்கொலியுடன் திறக்கறாங்க. ஒரே சமயத்தில் மூன்று பண்டிட்டுகள்  மூன்று சந்நிதிக்கதவுகள் முன்னே நின்னு  ' சங்கே முழங்கு................பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்'

ஸ்விட்ச் போட்டதுபோல மூணு ஜோடிக் கதவுகளும்  ஒன்னாத்திறக்க  மூலவர்களுக்கு உபசாரங்கள் ஒரே சமயம் ஒன்னுபோல நடக்குது.  ஜோதித்திரிகளுடன் அடுக்கு தீப ஆரத்தி!  இதுவரைக்கும் எல்லாமே அருமையோ அருமை!   எல்லா தீபங்களையும் ஒரு தட்டுலே வச்சு  தீவட்டி மாதிரி புகையோடு எரிய எரிய அப்படியே தூக்கி வந்து  ஸ்ரீப்ரபுபாதா  சிலைக்கு ஆரத்தி காமிச்சுட்டு  மக்கள்ஸ்க்கு  தொட்டுக்கும்பிட(!!) தட்டை நீட்டறாங்க.

அநேகமா இன்னும் ஒரு வருசத்துலே புதுக்கருக்கு அழிஞ்சு கரிப்புகை பிடிக்காம இருந்தால் பாக்கியம்!வேறென்ன சொல்ல?:(

பழைய கட்டிடத்துக்கும் புதுக்கட்டிடத்துக்கும்  நடுவில் இருக்கும் இடைவெளியில் மேற்கூரையா துணிப்பந்தல் போட்டு பிரசாத விநியோகம். ரவா கேஸரி கிடைச்சது.


ISKCON  அன்றும் இன்றும் என்று ஒரு ஆல்பம் போட்டு வச்சேன்.  நேரமும் விருப்பமும் இருந்தால் பாருங்க. மகள் எடுத்தவையும் இதுலே இருக்கு.



மால்குடிப்போகலாமுன்னு   கிளம்பிப்போனால் புது ட்ரைவருக்கு  வழி தெரியலை.  ஈஸிஆர் ரோடில் இருந்து அலங்கார வளைவுக்குள் நுழையறோம் பாருங்க  அந்த வளைவை ஒட்டியே மால்குடிக்கு வாசல் இருக்கு.  அதைத் தவறவிட்டுட்டால்..... வளைவுக்குள் நுழைஞ்சதும் இடதுபுற வழியா ச்சட்னு  நுழைஞ்சுடலாம்.  மால்குடின்னு கீழ்ப்பகுதியில் இருந்ததை கண் பார்க்கலை:(

வாசலைத் தவறவிட்டு ஈஸிஆரில் இன்னொரு சுத்துப்போய் ரைட் எடுத்து மீண்டும் வந்து சேர்ந்தோம்.வளாகத்தில் ரெண்டு உணவகம். அந்த இன்னொன்னுதான் அந்த பஞ்சாபி தாபா. பெயர் ஸ்வதேஷ்! . சென்னை விஜயத்தில் ரெண்டு முறை மால்குடிக்கு வந்ததில் கோபாலுக்குப் பிடிச்சுப்போச்சு. மகளை அங்கே கூட்டிப்போய் சாப்பிடவைக்கணுமுன்னு   நேர்ந்துக்கிட்டார் போல:-)

எனக்கு அங்கிருக்கும் திண்ணை, நவநாகரீக (!!)மண் அடுப்புகள் எல்லாம் ரொம்பப்பிடிக்கும். மகளுக்கும் இடம் ரொம்பப் பிடிச்சதுன்னாள். கிராமத்து செட்டிங், கிணறு, குடிசை , தோட்டத்துலே உக்கார்ந்து சாப்பிடும்வகையில்  இருக்கைகள், குட்டியா ஒரு அல்லிக்குளம் இப்படி. ஊதுபத்தி, மெழுகுவர்த்தி,  வாசனை எண்ணெய், ஸ்கார்ஃப்கள்ன்னு  விற்கும் சின்னக் கடை. சுற்றுலாப்பயணிகளைக் கவனத்தில் வச்சு செஞ்சுருந்த அமைப்பு.  சுவாரசியமாவே இருக்கு.

அவரவர் விருப்பத்தில் சாப்பாடு ஆச்சு. உள்ளூர் மக்கள்தான்  கண்ணில் பட்டாங்க.  அறைக்குப்போய் கொஞ்ச நேரம் ஓய்வு.  புது ட்ரைவரையும்  வண்டியையும்   திருப்பி அனுப்பிட்டோம்.  காலையில் நடந்த களேபரம்  முடிஞ்சுருச்சு. நானே வந்துருவேன்னு சீனிவாசன் கூப்பிட்டுச் சொல்லி இருந்தார்.

மாலையில் அவர் வந்ததும் 'கண்டுபிடிச்சு' வச்சுருந்த கடைக்குப்போனோம்:-)

பிகு: அடுத்த பதிவு வரும்வரை அந்த மூன்று சொற்களை  பிடிச்ச மாதிரி மாற்றிப்போட்டு பிடிச்ச ராகத்துலே பாடிக்கிட்டே  இருக்கலாமா?   கடவுளைக் காண  ஈஸி ரூட் இதுதானாம்!!!





Tuesday, November 20, 2012

துளசி வதம்

அனைத்து நட்புகளுக்கும்  விழாக்காலத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள். என்னடா இவ.... தீவுளி போய் இம்மாநாளாச்சு இப்பச் சொல்றாளேன்னு பார்க்கறீங்களா? பரவாயில்லைங்க. அதான் கந்த சஷ்டி, கார்த்திகை தீபம்  விழாக்கள் எல்லாம் வரிசைகட்டி நிக்குதே!

போன வார இறுதியில் தெருக்கூத்து பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது. விஷ்ணு புராணம்.  எதோ ஒரு அசுரனின் வதம்.  கூத்துக் கட்டியங்காரர்....அசுரனின் பெயர் குந்த மகராஜ்  என்றார். ஃபிஜி இந்தியர்கள் நடத்திய கூத்து என்பதால் எனக்குத் தலையும் புரியலை வாலும் புரியலை.

உங்களுக்காக விழுந்து விழுந்து தீபாவளிப் பலகாரங்கள் செஞ்சுக்கிட்டே இருந்ததில் நாட்கள் பறந்தது தெரியலை:-)

இதெல்லாம் போதுமான்னு பாருங்க!   நம்மூர் கோவிலில் நேத்துதான் அன்னக்கூட் விழா நடந்து முடிஞ்சது. இதுவும் தீபாவளியை ஒட்டி வரும் விழாதானே!







சொன்னால் நம்ப மாட்டீங்க.....மொத்தம்  பதினோராயிரம் அறைகள்  இருக்கும் 'மாளிகை'யில் ஏழாயிரத்து  ஐநூறு அறைகளுக்குச்  சின்னதும் பெருசுமாப் பாதிப்பு.  எல்லாம்  கடந்துபோன  நிலநடுக்கம்  ஆட்டி வச்ச கூத்து.  அங்கே (தாற்காலிகமாக)  வசிக்கும் மக்களுக்கு அதிகம் பாதிப்பு நேராத வகையில் பழுது பார்க்கும் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.  அரசு மருத்துவமனை.


இது ஒரு தனி உலகம். ஒரு ஒன்பது நாட்களாக  அநேகமா இங்கேதான் இருக்கேன். மகளுக்குக் கொஞ்சம் உடல்நிலை சரி இல்லை.  அறை சன்னலில் இருந்து பார்த்தால் அட்டகாசமான காட்சி. பேசாம இந்தப்படத்தைப் பிட்டுக்கு அனுப்பி இருக்கலாம், இல்லை?

பெரிய (குறு) நாவல் எழுதும் அளவுக்கு விவரங்கள் சேகரிச்சுக்கிட்டே இருக்கேன்.  தலைப்பு மட்டும்  முடிவு செஞ்சுட்டேன். அதான்  மேலே பார்த்தீங்களே!  உங்களை வதைக்காமல் விடுவதில்லையாக்கும் கேட்டோ!!

பின்குறிப்பு: தனி மடலிலும் பதிவின் பின்னூட்டங்களிலும் தீபாவளி வாழ்த்துகளை அனுப்பிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் அன்பும் , ஆசிகளும் நன்றிகளும் இத்துடன்.









Friday, November 09, 2012

ஃபுல்லுக்கட்டும் புல்லுக்கட்டும்...............



காலையில் ஃபோன் பண்ணி  டேபிள் ரிசர்வேஷன் செய்யலாமுன்னா.... இன்னும்  முழுசா செயல்பட ஆரம்பிக்கலை. நீங்கள் மாலை ஏழுமணிக்கு இங்கே வந்துருங்கன்னாங்க.  ட்ரெஸ் கோட்  இருக்கான்னு தெரியலை. ஆனாலும் நட்சத்திரத்துக்குரிய அந்தஸ்தை தரத்தானே வேணும்.

ஹொட்டேல் க்ராண்ட் ச்சோழா. பெஷாவ்ரி ரெஸ்ட்டாரண்ட். மொத்தம் பத்து உணவகம் உள்ளே இருக்குன்னு தகவல். ஆனால் திறந்து இன்னிக்கு மூணே நாள் ஆனபடியால்  பெஷாவ்ரி மட்டுமே திறந்துருக்கு.

புது ஹொட்டேலில் பத்துமாடிகள். 600 அறைகள். 1000 கார்களுக்கான பார்க்கிங் வசதி. பணத்தின் ஜொலிப்பு தகதகன்னு எங்கெபார்த்தாலும் தெரிஞ்சது. அரண்மனைகளைப்போல வெளிப்புறச் சுவர்களும் அதில் சுற்றிவர நிற்கும் ரெட்டை யானைகளுமா அட்டகாசம் போங்க. அருமையான தோட்டம், செயற்கை நீரூற்று. லாபியில்  விதானம் முழுக்க வரிசைகட்டி நிற்கும் விளக்குகள்.  பிரமாண்டமான ஷாண்டிலியர்கள். தரையில் தாமரைக்குளம். எல்லாம் மாசுமருவில்லாமல் தூய்மை! ( நிஜத் தாமரைப் பூக்களைப் போட்டு வைக்கப்டாதோ?) 



தமிழ்நாட்டுலே மின்வெட்டு இருக்குன்னு சொல்றாங்க?  தனி பவர் ஸ்டேஷன் வச்சால்தான் இப்படி தாளிக்கமுடியும்!!!!



கான்ஃப்ரன்ஸ் ஹால்கள், பார்கள் , ஏழு லவுஞ்சுகள் இப்படி அங்கங்கே  நிறைய 'கள்'கள்தான். ஒத்தைபடையா ஒன்னுமே இல்லை ஒன்னைத்தவிர !

சோழன் வந்திறங்கிய குதிரை ஒன்னு மட்டும் நின்னது:-)))

எட்டு ஏக்கர் நிலத்தை வளைச்சுப் போட்டுருக்காங்க. அம்பத்தியேழு வகையான  பளிங்கு/மார்பிள் கற்களை வச்சு இழையோ இழைன்னு இழைச்சுவச்சுருக்காங்க.  இதுமட்டும் பத்து லக்ஷம் சதுர அடிகள். எல்லாம் இடாலி  இறக்குமதி. தனியா ஒரு க்வாரி  அங்கே இதுக்குன்னே  வேலை செஞ்சுருக்கு.  உள் அலங்காரத்தில் நுணுக்கமான வேலைகளுக்கு நம்ம மாமல்லபுரத்தில் இருந்து  நாலாயிரம் சிற்பக் கலைஞர்களைக் கொண்டு வந்தாங்களாம். சோழப்பேரரசு  காலத்து  திராவிடக் கலை  கட்டுமானம்னு சொல்றாங்க.  இந்த அரசர்களின் அரண்மனையை விட்டு வச்சுருக்கக்கூடாதோ?  அட்லீஸ்ட் கம்பேர் பண்ணிக்க வசதியா இருக்குமே! சிங்கையில் இருக்கும் அமெரிக்க கம்பெனி ஒன்னு வடிவமைச்சுக் கொடுத்துருக்கு. இந்தியாவில் மூணாம் பெருசு இது.

செலவு கூட அவ்வளோ அதிகமில்லை. ஆயிரம் கோடி  பட்ஜெட். ஆனால் எதுதான் நினைச்ச பட்ஜெட்டுலே அடங்குது.  நகைக்கடைக்கும் புடவைக்கடைக்கும் போன அனுபவம் எல்லாருக்கும் இருக்குமே!  ஒரு 20 சதம் கூடிப்போயிருச்சு.  ஆயிரத்து இருநூறு கோடிகள்.  ( அட இவ்ளோதானா?  அப்ப ஒரு லட்சத்துக்கு  எழுபத்தி ஆறாயிரம் கோடிகளுக்கு  இதைப்போல  எத்தனை கட்டலாமுன்னு அசட்டுத்தனமாக் கணக்குப்போடும் மனசை அதட்டி உக்காரவச்சேன்)

  ஏகப்பட்ட பணியாட்கள். நாலாயிரமாம்.  வரவேற்பில் பெண்களுக்கு  யூனிஃபார்ம் அருமையான டிஸைனில் புடவைகள். போகட்டும்.... நிறைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள். மகளிர்  மட்டும் என்று ஒரு முழு மாடி.  ஹொட்டேலில் தங்கவரும் பெண் விருந்தினர்களுக்கு மட்டும்! ஆஹா.... அந்தப்புரம்!!!  ஆண்களுக்கு  அனுமதி இல்லை கேட்டோ!

ப்ரெசிடென்ஸியல் ஸ்யூட்  ஒன்றின் பெயர் கரிகாலன் ஸ்யூட்!  கலை என்ற பெயரில் ஒரு கலையரங்கம் கூட இருக்கு.  நாப்பத்தியஞ்சே பேர் தான் உக்காரமுடியும். ஸோ.... பதிவர் சந்திப்புக்குப் போதாது கேட்டோ:(

பெயர் வைப்பதில் கில்லாடிகள் நாம் என்று நிரூபிச்சுட்டாங்க.  ஹெல்த் ஸ்பா இருக்கும் இடத்துக்கு காயகல்பம் என்று பெயர்!

சுற்றுச்சூழல் எனர்ஜிக்கான  பசுமைச் சான்றிதழ் 'லீட் ' கிடைச்சுருக்கு.  அதிலும் தர வரிசையில் மேலான ப்ளாட்டினம் சான்றிதழாம். ( Leadership in Energy and Environmental Design (LEED), an internationally recognised green building certification system. ) கூடிய விரைவில் மொட்டை மாடியில் ஹெலிபேட்  ஒன்னு வருதாம்.  அதானே..... ட்ராஃபிக்லே மாட்டிக்காம ஜம்முன்னு வந்து இறங்கிக்கலாம், இல்லை?


அளவுக்கு மீறிய பணிவோடு அழைச்சுப்போய் உக்காரவச்சு நமக்கு பிப் எல்லாம் மாட்டி மெனுப்பலகையைக் கொண்டுவந்து வச்சாங்க. ஒரு பக்கம் வெஜ் மறுபக்கம் நான் வெஜ் பட்டியல்.

உட்காரும் இடத்துக்கு டபுள் மடங்கு சமையலறை. பெரிய மேடைகளுக்குள்ளே ஒளிஞ்சுருக்கும் தந்தூரி அடுப்புகள்.  எல்லாமே படு சுத்தம்.  இந்த செட்டிங்ஸ், பாத்திர பண்டம் எல்லாமே  தில்லி மௌரியாவில் இருக்கும் பெஷாவ்ரி போலவே அச்சு அசலா இருக்குன்னார் கோபால். நெசமாவான்னதுக்கு .... ஒன்னே ஒன்னைத்தவிர....ன்னு இழுத்தார்.  அவர் கண் போன இடத்தைப் பார்த்தவுடன் புரிஞ்சு போச்சு. மெனுவின்  வலது பக்கம்......  ஓ.... குறைவா இல்லை அதிகமா? கொஞ்சம் மலிவுதான்னார்:-)

சமையல் நிபுணர்களைக்கூட தில்லியில் இருந்துதான் கொண்டு வந்துருக்காங்களாம். போகப்போக  உள்ளூர் மக்களுக்குப் பயிற்சி தருவாங்களா இருக்கும்.

சாப்பாடு வகைகளின் ப்ரஸண்டேஷன், ருசி ,  சர்வீஸ் எல்லாம் அருமை. விலை கொஞ்சம் அதிகம் என்றாலும்  தினந்தினம் வரமாட்டோமுல்லெ. எப்பவாவது ஒரு நாள் என்றால்  சரிதானே?  நல்ல பெரிய சர்விங் என்பதால் நீங்கள் கொஞ்சம் பார்த்து ஆர்டர் செய்யுங்க.  சாப்பிட்டுட்டுக்  கூடுதல் வேணுமுன்னா   அப்புறம்  ஆர்டர் செஞ்சுக்கலாமே! ஃபுல்லா  கட்டணுமுன்னு நினைச்சால்  ஒரு வேளை பட்டினி கிடந்துட்டுப்போனால்.....ஜஸ்டிஃபை  பண்ணிக்கலாம்:-)

ரெஸ்ட்டாரண்டில்  கூட்டமே இல்லை. ஒரு பத்துப்பதினைஞ்சு பேர் இருந்தாலே அதிகம்.  பீடா, பான் வகைகள் எல்லாம் கூட அருமையாத்தான் இருந்துச்சு. அங்கங்கே பூச்சாடியில்  சிம்பிளான பூக்கள் அலங்காரம் , பளபளக்கும் ரெஸ்ட் ரூம்ஸ் என்று  எல்லாம் மனசுக்குப்பிடிச்ச மாதிரி பாந்தமா இருக்கு. அறிமுகச் சலுகையா அறை வாடகையைக்கூட அம்பது சதமானம்போல  குறைச்சுருக்காங்க.  முதலிலேயே தெரிஞ்சுருந்தா ஒரு மூணுநாள் வந்து தங்கி இருக்கலாம். மகளுக்கும்  மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.  ( போகட்டும் அடுத்த ஹொட்டேல் கட்டும்போது வந்து தங்கினால் ஆச்சு:-))))

வெளிப்புறச் சுவர் யானைகளைக் கிட்டக்கப்பார்த்தால்.........  வேறென்னவோ மாதிரி தெரியுதே:(   இதென்னடா   யானைக்கு வந்த சோதனை????    கண்ணாடி மாத்தணுமோ என்னவோ! 

மறுநாள் சில கோவில்களுக்குப் போகலாமுன்னு கொஞ்சம் சீக்கிரமாவே கிளம்பினோம். நம்ம கெஸ்ட் ஹவுஸ்லே  காலை ஏழரை முதலே ப்ரேக்ஃபாஸ்ட்  கிடைச்சுருது.  அறைவாடகையோடு  இதுவும் சேர்த்தி என்பதால்  ஒருவிதத்தில் சௌகரியமாத்தான் இருக்கு. இன்னிக்குக் காலையில்   நம்ம சீனிவாசன்  கண் முழிச்ச நேரம் சரியில்லை போல!

அண்ணாசாலையில் போய்க்கிட்டு இருக்கோம்.  இடது பக்கம் திரும்பி பாரதிதாசன் சாலைக்குள்  நுழையணும்.  எங்களுக்கு  இடதுபுறமிருந்து  ஒரு நானோ வேகமா வந்து   ஒரு அறிவிப்பும்  கொடுக்காம  சடார்னு  நம்ம வண்டிக்கு முன்னால் ரைட் லேனுக்குப் பாய்ஞ்சது. சீனிவாசன்  சடார்னு ப்ரேக் போட்டாலும்  முடியாம  நானோவைப் பின்புறம் தட்டும்படி ஆச்சு.  எதிர்பாராத  சடன்ப்ரேக்கால் நான் முன்சீட்டில்  முகத்தை இடிச்சுக்கிட்டேன்.  என் லிப்ஸ்டிக் எல்லாம் முன்ஸீட்டின் முதுகுலே  ஒட்டிக்குச்சுன்னா பாருங்க!  மகளும் கொஞ்சம் இடிச்சுக்கிட்டாள்தான்.  ஸீட் பெல்ட் ஏன் இந்த வண்டியில் இல்லேன்னு அவள் விசாரம்.

இதுக்குள்ளே அங்கே சின்னதா ட்ராஃபிக் ஜாம் ஆகி  போலீஸ்காரர்  ஓடிவந்தார். ரெண்டு வண்டிகளையும் ஓரம் கட்டியாச்சு.  போலீஸோடு பேச்சுவார்த்தை நடக்குது. என்ன  ஆக்‌ஷன் எடுக்கப்போறாங்கன்னு  எனக்குத் தெரிஞ்சுக்கணும்.  அதெல்லாம்  ஒன்னும் வண்டியை விட்டு இறங்க வேணாம். ஸ்ரீநிவாசன்  பேசிக்குவார்ன்னு கோபால் சொல்றார்.  இறங்கிப்போய்ப் பார்க்கலைன்னா அம்,மாக்கு மண்டை வெடிச்சுருமுன்னு  மகள்  சொல்ல அதானே...ன்னு கீழே இறங்கிப்போய்ப் பார்த்தேன்.  நானோவைப் பார்த்ததே இல்லைன்னு சொல்லிக்கிட்டே இருந்தவளுக்கு நானோவைப் பக்கத்துலே பார்க்க ஒரு சான்ஸ்:-)


லெஃப்ட்லே  வந்து ஓவர்டேக் பண்ணியவர்  தன்னுடைய தப்பு எதுவுமே இல்லைன்றமாதிரி நிக்கறார்.  இன்ஷூரன்ஸ் இருக்கான்னு (எங்கூர் வழக்கப்படி) கேட்டேன்.  இருக்குன்னார்.  அதுக்குள்ளே கோபால் இறங்கி வந்து  எங்கே அடிபட்டுருக்குன்னு  பார்த்துக்கிட்டே  விவகாரம் எப்படி தீரப்போகுதோன்னு  கவலை முகத்தை மாட்டிக்கிட்டார்.  மகள் வேற தனியா உக்கார்ந்துருக்காளேன்னு நான் நாலைஞ்சு க்ளிக் செஞ்சுக்கிட்டு போயிட்டேன்.

விவகாரம்  முடிவுக்கு  வர எல்லாம் ஒரு இருவது நிமிஷம் எடுத்துருக்கு.  இன்னொரு போலீஸ்  ஆப்பீஸர்  வந்து சேர்ந்தார். எந்த வண்டி  பின்னாலே  இடிச்சதோ அதடோ தப்புதான்னு ஆப்பீஸ்ஸர் முடிவு செஞ்சார். லெஃப்ட்லே இருந்து  ரைட்டுலே பாய்ஞ்சு ஓவர்டேக் செய்யலாமா என்பதெல்லாம்  பிரச்சனையே இல்லை(யாம்!)  கேஸ் புக் பண்ணனுமுன்னு சொன்னாராம்.

இதுக்குள்ளே ட்ராவல்ஸ்க்கு ஃபோன் செஞ்சு விஷயத்தைச் சொன்னதும் வேற வண்டி அனுப்பறேன்னுட்டார் ஓனர்.  கொஞ்ச நேரத்துலே வண்டியும் வந்துருச்சு.  எங்களை அதுலே ஏத்திவிட்ட  சீனிவாசன்  நான் பார்த்துக்கறேம்மா. நீங்க   கவலைப்படாதீங்கன்னார்.

எல்லா ட்ரைவர்களுக்கும் அவரவருக்கு  ஒரு ரூட் இருக்கும்போல!  புது ட்ரைவர் நல்ல (!!) சாலையில் போகாம, குழி தோண்டிப் போட்டுருக்கும்  சின்னச்சின்னத் தெருக்கள் வழியா  உலுக்கி உலுக்கிக்,குலுக்கிக் குலுக்கி  வண்டியை ஓட்டிக்கிட்டு ஈஸிஆர் ரோடுலே போய்ச் சேர்ந்தார்.

அதுக்குள்ளே சீனிவாசனின் ஃபோன் வந்துச்சு. விவகாரம் செட்டில் ஆயிருக்கு. ஆயிரம் ரூபாய் கட்டச் சொன்னாராம் ஆப்பீஸ்ஸர்.  யாருக்குன்னு புரியலை!  ஒரு வேளை பசித்த மாட்டுக்குப் புல்லுக்கட்டோ? ட்ராவல் கம்பெனி கொடுக்காதாம். இவரே சொந்தக் காசுலே கட்டிருவாராம். ஆமாம்..... ட்ராவல்ஸ் நடத்துறவங்க  அவுங்க வண்டிகளுக்கு இன்ஷூரன்ஸ்  எடுத்துக்கமாட்டாங்களா?  குறைஞ்சபட்சம் தேர்டு பார்ட்டி இன்ஷூரன்ஸ்?





Wednesday, November 07, 2012

வேங்கட க்ருஷ்ணனின் குடும்பம்.



உள்ளுர் தினசரியில் அன்றைக்கு வந்த விளம்பரத்தைப் பார்த்து வாய் பிளந்து நின்னது என்னவோ உண்மை. இவ்வளாம் பெருசா? எப்போ? அந்தப்பக்கம் எத்தனை முறை பகலிலும் இரவிலுமாப்போயிருக்கோம்? கண்ணுக்கே தெம்படலை!!!   அல்லும்பகலும் நெருக்கியடிக்கும் போக்குவரத்து  நெரிசலிலே  மாட்டிக்கிட்டு  பயப்பிராந்தியோடு சாலையிலேயே கண்ணு நட்டுக்கிட்டு இருந்தால் அக்கம்பக்கம் யானையே நின்னாலும்  கண்ணுக்குத் தெரியுமா?

அண்ணா சாலையில்தான்னு சொல்றீங்க..... இன்னிக்குக் கட்டாயம் கண்ணால் பார்க்கணும் என்ற முடிவோடு இருந்தேன். ராத்திரிக்கு எப்படியும் விமானநிலையம் போயாகணும்.வர்றாள். அப்ப மறக்காமல் யானையைப் பார்க்கலாம்.

சனிக்கிழமையா இருக்கேன்னு பார்த்தசாரதியை தரிசிக்கக் கிளம்பினோம்.  ஏழுமணி வாக்கில்பதிவர் சந்திப்பு ஒன்னு இருக்கு.  தில்லக்கேணி ஐயா வழக்கம்போல் இருக்கார்.  ஸ்பெஷல் தரிசனம் இப்போ சீக்ர தரிசனம் ஆகி இருக்கு.  நேரக்குறைவு காரணம் சீக்ரமா எனக்குப் பெருமாளை ஸேவிக்கணும். சந்நிதிக்கு இடப்புறம் டிக்கெட் கொடுக்கறாங்க. கூடவே கொஞ்சம் மஞ்சள் குங்குமப்ரசாதமும்.  நேரா நம்மைக்கொண்டுபோய்  மூலவருக்கு  முன்வாசலில் விட்டாறது. தர்ம தர்சனம் வரிசைக்குப் பாரலலா ஒரு வரிசையில் போய் நிக்கணும்.ரெண்டே நிமிசத்தில்  முழிச்சுப் பார்க்கும்  மூலவர் முன் சடாரி, தீர்த்தம் எல்லாம் ஆச்சு.  வழக்கத்துக்கு மாறா மூலவர் பளிச்ன்னு இருக்காரேன்னால் நல்ல மின்விளக்கு ஃபோகஸ் செய்யுது அவர் முகத்தை!அடடா.... பாரதப்போரின் விழுப்புண்கள் ,அம்பு கொத்திய இடங்கள் எல்லாம் தழும்புகளாய்த் தெரியுதே!!!!

மூலவரை நாம் பார்த்த(னின் தேரை ஓட்டிய )ஸாரதின்னு சொல்றோமே தவிர இவருக்கு  அசல்பெயர் வேங்கடக்ருஷ்ணன். ரெண்டே கைகளுடன் குடும்ப சமேதராய் இங்கே காட்சி கொடுக்கிறார்.  அண்ணனும், தம்பியும், மனைவியும்,மகனும் பேரனுமா கூட்டம்தான். மூணுதலைமுறை!  ஆனால் நட்ட நடுவில் ஒன்பதடி உசரத்தில் ஆஜானுபாகனாய் முறுக்கு மீசையுடன் புஷ்ப அலங்காரங்களுடன்  ஜொலிப்பவனை விட்டு  இந்தப்பக்கம் அந்தப்பக்கம் கண்களை ஓட்டினால்தானே குடும்பம் தெரியும்? எங்கே ஓட்ட விடறான். முட்டைக்கண்ணால் நம்ம முழிச்சுப் பார்க்கிறானே!!! அவன் கண்ணைவிட்டு அகலுதா நம் கண்கள்?

இடக்கையில் இருக்கும் சங்கு வலக்கையில் வந்துருக்கு. சக்கரத்தை விஷ்ணு லோகத்துக்கு அனுப்பி இருக்கார், சாரதி வேஷம் கட்டுனப்ப! அதான் போரில்ஆயுதம் எடுக்கமாட்டேன்னு துரியோதனனுக்கு வாக்குக் கொடுத்துருந்தாரே! கையில் ஒரு சாட்டை  தேர்க் குதிரைகளை விரட்ட. ஆனால் இடுப்பில் இருந்து தொங்கும் வாள் எதுக்கு? இது ஆயுதம் இல்லையோ????  ஒருவேளை தற்காப்புக்கோ? என்னவோ போங்க 'சாமி'யைப் புரிஞ்சுக்கவே முடியலை. சப்தரிஷிகளுக்கும் தரிசனம் தந்துருக்கார். நமக்கும்தான்........... இல்லையோ?

மீசைக்காரனை மீசையில்லாமல் கூட தரிசிக்கலாமாம். வருசத்துக்கு அஞ்சு நாட்கள்.  பகல்பத்து உற்சவத்தின் ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரை! சென்னைக்கு வரும்போதெல்லாம் தவறாமல் ஒருமுறையாவது  வந்து தரிசிக்கும் கோவில் என்றாலும்  இதுநாள்வரை  மைனஸ் மீசை பார்க்கக் கிடைக்கலை. ராப்பத்து மட்டும் ஒரே ஒருநாள் கிடைச்சது.ஸ்ரீராமர் அலங்காரம்.

சீக்ர தரிசனத்துலே வந்தால் நாம்  மிஸ் பண்ணுவது  ராமனையும் ரங்கனையும்:(  பக்கத்துலே கம்பித் தடுப்பு வரிசைகளில் வரும் சனம் பார்வையை மறைச்சுருது. கூட்டம் இல்லேன்னா.....  அப்ப எதுக்கு சீக்ரம்? பொது தரிசனத்துலே வந்தால் மூணு சந்நிதிகளையும் தரிசிக்கும்   சான்ஸ்  கிடைச்சுருமே!  என்னவோபோங்க..........இடப்பக்கம் இருக்கும் ஹனுமனையும் ஆழ்வார்களையும்  மட்டுமே சேவிக்க முடிஞ்சது.

கோவிலை வலம் வந்து வேதவல்லித்தாயார், யோக நரசிம்மர்,  கஜேந்திர வரதர், நம்ம ஆண்டாளம்மா எல்லோரையும் தரிசனம் செஞ்சுக்கிட்டு  கருவறை விமானத்துக்குக் கண்ணைச் செலுத்தும்போது கீழே முற்றத்தில் (யோகநரசிம்மர் சந்நிதிக்குப்பின்பக்கம்)  மேடையில் குழலூதும் கிருஷ்ணனும் பசுவுமா ஒரு சுதைச்சிற்பம். புதுசு. என்னவோ அங்கே இருக்கும்  பழைய அமைப்புக்கு ஒட்டாமல் இருந்ததா  கோபால் சொன்னார்.  பெருமாள் திருவடிகளைக் கும்பிட்டுவிட்டு, பக்கத்துலே கண்ணாடிப்பொட்டியில்,  கோவில் எப்படி இருக்குன்ற டிஸ்ப்ளே  பார்த்தால்  அருமையான அமைப்புதான்.  ஆனால் கோவில் உள்ளே நிஜமாவே நாம் இருக்கும்போது  அந்த  ஒரிஜனல் அழகு தெரியறதில்லை:( பஞ்சமூர்த்திகள் உள்ள  திருக்கோவில்!!!

பிரஸாத ஸ்டாலில்    புளியோதரையும் மைசூர்பாகும் சக்கரைப் பொங்கலும்கிடைச்சது.  இங்கே சக்கரைப் பொங்கல் ரொம்ப விசேஷம்.  ஆண்டாள் சொன்ன முழங்கைநெய்வார என்பதைக் கடைப் பிடிக்கிறார்கள்.  போரில் சும்மா இருந்தவரையும் எதிரிகளின் அம்பு தாக்கி காயம் ஆச்சே.  புண்கள் ஆறிக்கிட்டணுமேன்னு  ரொம்ப காரம் இல்லாமல் வெறும் மிளகுப்பொடி மட்டும் சேர்த்த  புளியோதரையும், ஏகப்பட்ட நெய்யும் முந்திரிப்பருப்புமா கலந்து செஞ்ச  சக்கரைப்பொங்கலும்  சூப்பர். ஒரு கிலோ அரிசிக்கு 700 கிராம்  முந்திரியும் 350 கிராம் நெய்யுமாம். !!!! (எனக்குக் கிடைச்ச சக்கரைப் பொங்கலில்  மூணே முந்திரிதான் இருந்துச்சு. நான் ஒன்னும் சொல்லப்போறதில்லை  மூச்....)

ப்ருந்தாரண்யத்தில் இருந்து கிளம்பினோம்.  ஆஹா... அதென்ன?  இதுதான் பழைய பெயராம் இந்த தலத்துக்கு. துளசிவனம்.  அப்புறம்தான் அல்லிக்கேணியாச்சு.  பீச் ரோடுவழியா திரும்பி வந்தோம்.  விவேகாநந்தர் இல்லத்தில்  150 வது பிறந்தநாள் விழான்னு  நடந்துக்கிட்டு இருக்கு.  மறுநாள்  மாலை 4 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சி வச்சுருக்காங்க.



அறைக்கு வந்தகொஞ்ச நேரத்தில்  பதிவர் மின்னல்வரிகள்  பாலகணேஷ் வந்தார்.  புதுமுகம் என்ற  பிரமிப்பு  ஒன்னும் இல்லாமல் எதோ காலங்காலமா தினமும் பார்த்துப்பேசிவந்ததைப் போல் ஒரு  தோணல்.  நேத்து விட்ட இடத்துலே இருந்து பேச ஆரம்பிக்கிறோம். பதிவர் குடும்ப லக்ஷணம் என்பது இதுதான்.  அவருக்கும் அநேகமா இப்படித்தான் இருந்துருக்கணும்.  விதிவிலக்காக நம்ம கோபால் மட்டும்  இருந்தார்:-)))))

நேரம் போறது தெரியாமல் ஒரு அரட்டை.  அவர் வீட்டு புத்தக அலமாரியை ஒரு நாள் அபேஸ் பண்ணிடணுமுன்னு இருக்கேன்.  பதிவுலகம் ஒன்னு இப்படி அராஜகம் பண்ணிக்கிட்டு இருக்குன்னு அவருக்கு ரொம்பநாளாத் தெரியாதாம். அப்புறம்தெரிஞ்சதும்  கண்ணைத்  திறந்துக்கிட்டே  கடலில் குதிச்சுட்டாரு:-)))))  இப்பதான் ஒரு வருசம் ஆகி இருக்குன்னார். மனம்கவரும் அருமையான பதிவுகளை எழுதிவரும் நண்பர்களைப்பற்றி, ' இதைப்படிச்சீங்களா? அதைப்படிச்சீங்களா? ன்னு  விசாரிச்சுக்கிட்டோம். விழாவுக்குக் கட்டாயம் வந்துருங்கன்னு சொல்லி நினைவூட்டுனதும் நண்பர் ஒருவரையும் கூட அழைச்சுக்கிட்டு வரேன்னார்.  நண்பர் பெயரை நான் சட்னு சொன்னதும்  வியப்புதான்.  ஒரே  குட்டையில் இருக்கும் மீன்களுக்கு  ஒன்றையொன்று புரியாதா?:-))))))) இவ்ளவு பேசுனவ சரிதாவைப் பற்றி மட்டும் ஒன்னும் விசாரிச்சுக்கலை!

விமானநிலையம் போகணுமுன்னு கோபால் நினைவுபடுத்தினார். போறவழியில் கவனிச்சுக்கிட்டே வந்தேன். ஆஹா.... அட்டகாசமான விளக்கொளியில் மின்னுவதை எப்படித்தவறவிட்டேன்?

இன்னிக்குத்தான் திறப்புவிழா.  அதான் பளிச் பளிச்.

இத்தனைநாள்  எப்படியோ மறைச்சு வச்சுருந்தாங்க போல. பிரமாண்டமாத்தான் நிக்குது! மகளுடன் திரும்பி வரும்போது  யானையைக் காமிச்சேன்.  மெட்ரோ வேலைகள் நடப்பதால் முழு வியூவும் பார்வைக்கு அகப்படலை.  ஒருநாள் போகத்தான் வேணும்.  மகளுக்குப் பிடிக்கும்.

அடுத்த ரெண்டு நாட்களும் மகளுக்குத் துணிகள் எடுப்பது தைக்கக்கொடுப்பது, உறவீனர் வீடுகளுக்கு விஸிட் என்று  அலைஞ்சோம்.  எங்க வீட்டு இமெல்டா மார்கோஸ் என்ற பட்டத்துக்கு உரிய  மகளை  எகஸ்ப்ரெஸ் அவென்யூவுக்குக் கூட்டிப் போனோம்.  நானும் ஒரு கிளாஸ் மனப்பால் குடிச்சுட்டுக் கிளம்பினேன். எனக்கு அங்கே ஸ்ரீரங்கா ஜுவல்லர்ஸ்  பார்க்கணும்.  (கவனிக்க: பார்க்கணும்)  சான்ஸ் கிடைச்சா எதாவது சின்னதா.............

எனக்கு முன்னாலேயே என் அதிர்ஷ்டம் (ஒருவேளை கோபாலின் அதிர்ஷ்டமாகக்கூட  இருக்குமோ?)    அங்கே போய் உக்கார்ந்துவிட்டது. மூணுதளமும் மாறிமாறி ஏறி இறங்கினது மிச்சம். கடையைக் காணோம்:(  போச்சு என் காமதேனு...........

எனெக்கென்னமோ   இங்கே பார்க்கிங் சார்ஜ் கூடுதல் என்று தோணுது.  ஒருவேளை எங்கூர் மால்களில்  எல்லாம் இலவச பார்க்கிங் என்பதால் இருக்கலாம். பார்க்கிங் மட்டுமா...உள்ளே இதர சாமான்களும் இப்படித்தான் தீ பிடிச்ச விலை.  சாதாரண ப்ரிண்ட் (மயிலிறகு டிஸைன்) உள்ள புடவை பத்தாயிரத்துச் சொச்சம்.   புளிப்பு திராக்ஷை!

வீட்டு அலங்காரச் சாமான்கள் கடையில்  யானை மந்தைகள். எல்லாமே ரொம்ப அழகா நீட்டா வச்சுருக்காங்க. அசப்பில் எங்கூர் கடைகள் போல ஒரு ஃபீலிங்ஸ். அதான் ஒன்னும் வாங்கிக்கலை:-)










பகலுணவு நேரமாச்சேன்னு ஃபுட்கோர்ட் பக்கம் போனால் நளாஸ் ஆப்பம் கண்ணில் பட்டது.  நம்ம பதிவர் மோகன்குமார் ஒரு பதிவில் குறிப்பிட்ட நினைவு வரவே அங்கேயே சாப்பிடலாமுன்னு முடிவு.  முதலிலேயே காசைக் கட்டணும். மீதிச் சில்லறை கிடைக்காதுன்னு பதிவுகளின் மூலம் தெரிஞ்சதால்  சரியாக் கணக்குப் போட்டு அதுக்குண்டான தொகையை மட்டும் கட்டி  ப்ரீபெய்டு  கார்டு  வாங்கினோம்.  எக்ஸ்ட்ரா எதாவது வேணுமுன்னா.... மூச்.   இந்த சிஸ்டம்  சரியானதில்லைன்னு எனக்குப் படுது.  மீதியை நம்ம  டெபிட் கார்டுக்கு அனுப்பக்கூடாதா?  இல்லை சாப்பாட்டு பில்லை சாப்பிட்டப்பிறகு நம்ம க்ரெடிட் கார்டைக் கொண்டு கட்டலாம் என்று இருக்கக்கூடாதா?  இங்கெல்லாம் அப்படித்தானே செய்யறோம்.  என்னவோ போங்க..... உள்ளுர் விவகாரம் ஒன்னும் புரிபடமாட்டேங்குது:(


அறைக்குத் திரும்பும்  வழியில்  அண்ணாசாலையில் ஒரு ஆண்டீக் கடை பெயர்பலகை பார்த்தது நினைவுக்கு வர அங்கே போனோம். ஒரே இருட்டு. தட்டுத்தடவி  கண்கள் இருட்டுக்குப் பழக்கமானதும்  ரெண்டு மனிதர்கள் இருப்பதைக் கண்டேன். பவர் கட்டாம்.  இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம் வெளிச்சம் வர.  ஜன்னல் வழியா சூரிய ஒளி புக முடியாமல் அடைச்சுவச்ச சாமான்கள்.   தெருபக்கம் ஷோ விண்டோ.  பொருட்கள் ஒன்னும் சரிவரலைன்னு நினைச்ச சமயம் உள்ளே இருந்து ஒரு மணியைக் கொண்டுவந்தார்.  பித்தளை மாதிரி இருக்கு.  ஆனால்...ஏழு உலோகங்களின் கலவை. Tibetan Prayer Bell  தியானத்துக்கானதாம்.  ஒரு மரக்கட்டையால் விளிம்பைச் சுத்தினால்  ஒருமாதிரி 'ஓம்' என்ற ஒலி வருது.

ரெண்டு சைஸ் இருக்கு. கொஞ்சம் பெரியதை (11 செமீ விட்டமும்  20 செ.மீ உயரமும்) வாங்கினோம். பேரம் பேசத் தோணலை.கடை இருக்கும் அழகைப் பார்த்தால் அன்றைக்குப் பூராவும் நாங்க மட்டுமே  கஸ்டமராக இருப்போம் போல. ரெண்டு பேர் காலையில் இருந்து கடையைத் திறந்துவச்சுக்கிட்டு  மொட்டு மொட்டுன்னு உக்கார்ந்துருக்காங்க. போயிட்டுப் போகுது போ!




ஒரு 46 விநாடி  வீடியோ இது. நின்னு நிதானமா  கட்டையை சுத்திவர ஓடவிட்டா நல்ல சப்தம் வருது. இங்கே அவசரடியா ... ச்சும்மா ஒரு சாம்பிள்.