Wednesday, March 30, 2011

பிரபலத்தின் மறுபாதியா இருந்ததுக்கு தண்டனையோ:(

இது மூணாவது வருசமாம் இங்கே சண்டிகரில். எது? அந்த ஆர்ட்ஸ் அண்ட் ஹெரிடேஜ் ஃபெஸ்டிவல். டிக்கெட்டுன்னு ஒன்னும் இல்லை. பாஸ் வந்து வாங்கிக்கோன்னு தினசரியில் இருந்துச்சு. இவர் வேலை முடிஞ்சு வந்து நாம் போகும் நேரமும் தாகூர் தியேட்டர் வேலை நேரமும் ஒத்துவரலை. அடிச்சுப்பிடிச்சு நேரம் உண்டாக்கி அங்கே போனால்............. கிடைச்சது. பரதநாட்டியத்துக்கு மட்டுமே . மத்ததெல்லாம் தீர்ந்து போச்சாம். கைவிரிச்சுட்டார் கவுண்ட்டரில் இருந்தவர். கொடுத்துச் சிவந்த கை! சாணக்யா நாடகம் போச்:(

நடனக்கலைஞர், கூடவே தனியா நடனப்பள்ளி நடத்தறாங்க. வீட்டு உள் அலங்கார நிபுணர். சினிமாவில் கதாநாயகனுக்கு ஆடை வடிவமைப்பு இப்படி பன்முகத்திறமை வாய்ஞ்ச பெண்மணி. ஆதரவற்ற முதியோர்கள் குழந்தைகள் இல்லம், உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான மறுவாழ்வு இல்லம் இப்படி பல தரும காரியங்களுக்கு ஓசைப்படாம உதவி செய்யும் நல்ல குணம், அவுங்களுக்கு நிதி திரட்ட நடனக்கச்சேரிகள் இலவசமா நடத்தித்தருவதுன்னு வாழ்க்கையை படு பிஸியா வச்சுக்கிட்டாங்க.

ஆறரைக்கு நிகழ்ச்சி. நாங்கள் போய்ச்சேரும்போதுதான் அவுங்களும் உள்ளே நுழைஞ்சாங்க. வாசலில் சண்டிகர் ஸ்பெஷல் குதிரைகள், ராக் கார்டன் பசங்க, பூந்தொட்டிகள் இப்படி அணிவகுப்பு. தீபம் ஏற்றும் அமைப்பில் இருந்த அலங்கார வளைவில் விளக்கு வச்சுக்கிட்டு இருந்தார் ஒருவர்.

ச்சீப்ப்ப்ப்ப் கெஸ்ட்டு காமணி லேட். குத்துவிளக்கேத்தி வச்சுத் துவக்கினார். விளக்குலே எண்ணெய் ஊத்தலைன்னு நினைக்கிறேன். கொளுத்திய ரெண்டாவது நிமிசம் (அவர் மேடையை விட்டு இறங்குனதும்) அணைஞ்சே போச்சு.
காத்திருந்த நேரத்தில் 'பிரியா கோவிந்த்' வந்து ஆடக்கூடாதான்னு கோபாலுக்கு ஒரே மனத்தாங்கல். ஏனாம்? இப்போ ஆடப் போறவங்களுக்கு என்ன குறைச்சல்? இதுவரை இவுங்க ஆடிப் பார்த்துருக்கீங்களா? அதெப்படி எல்லா ஆம்பளைகளுக்கும் ஒருத்தரை பற்றி முன்முடிவு வந்து உக்காந்துக்குது? மீடியா ஊதி ஊதி வேண்டாததையெல்லாம் பெருக்கி வைக்க அப்படியே அதை உண்மைன்னு நம்பிருவீங்களா? பிலுபிலுன்னு பிடிச்சுக்கிட்டேன். இல்லை..... நடனக்கச்சேரி சீஸன்லே பேர் அடிபடலையேன்னு...............ஒருவேளை அவுங்களுக்குச் சிலபல காரணங்களால் சென்னையில் ஆடப்பிடிச்சிருக்காது! இவுங்க நல்லாவே ஆடுவாங்களா இருக்கும். இங்கே சண்டிகரில் கிடைப்பதே அபூர்வம். அதிலும் பைசா செலவில்லாம பார்க்கப்போறீங்க. புண்ணியத்துக்கு பசு தானம் கிடைச்சா பல்லைப் பிடிச்சு பார்க்கணுமா?
நடனமணி யாருன்னு சொல்லலை பாருங்க....... நம்ம வாணி கணபதிதான். கணேச வந்தனத்தோடு முதல் ஐட்டம். கணேச சுப்ரபாதமுன்னு சொன்னாங்க. மணி ஓசை ஒலிக்க யானை காதுகளை அசைச்சுக்கிட்டே அசைஞ்சு வந்துச்சு. நடனத்தைச் சொன்னேன். அவுங்க சைஸைச் சொல்லலைங்க. நல்லா ச்சிக்குன்னு ஒல்லியாத்தான் இருக்காங்க. ரொம்ப லேசா, கொஞ்சமா உடல் கட்டுவிட்டுருக்கு. ஒப்பனையையும் மீறி முகத்தில் வயசு தெரியுது. மற்றபடி நல்லாவே இருக்காங்க.
அடுத்து புரந்தரதாஸரின் ஜெகத்தோ தாரண............யசோதா அந்தப்பிள்ளை கண்ணனை வாரியெடுத்துக் கொஞ்சி, சோறூட்டி, அவனோடு விளையாடி, அவன் செஞ்ச குறும்புக்காக மரத்தில் கட்டிப்போட்டு, தூங்காமல் ஆட்டம் காட்டுபவனை மடியில் போட்டு தாலாட்டி..............அப்படியே கோகுலத்தில் போய்ப் பார்த்த ஒரு எஃபெக்ட்டு!
எனக்கு என்ன ஆச்சரியமுன்னா.......... ஆடிக்கிட்டே சடால்னு கீழே சம்மணம்போட்டு உக்காருவது, சட்னு அப்படியே எழுந்திருப்பது .... நானோ முட்டி வலி கேஸ். கையைக் கீழே ஊன்றித்தான் உக்காரணும் எழுந்திருக்கணும். முதலாவதாக கீழே உக்காரணுமுன்னு நினைச்சாவே வயித்தைக் கலக்கிரும். நம்மால முடியாத ஒரு காரியத்தை லகுவா அப்படியே லட்டாட்டம் செஞ்சு காமிக்கும்போது .............கண்ணு பிதுங்கி வெளி வந்துருமோன்னு எனக்கே பயமா இருக்கும் என் பார்வையை நினைச்சால்.
நடராஜர் அஞ்சலின்னு ஒரு ஐட்டம். டமருகம் ஒலிக்க நல்லாவே இருந்துச்சு. புது ஐட்டமா ஜுகல்பந்தின்னு ஒன்னு செஞ்சாங்க. நிகழ்ச்சியின் ஆரம்பத்துலேயே மேடையில் ஒரு மைக் இருப்பதைப் பார்த்தேன். பொதுவா கதக் ஆட்டத்துக்குத்தான் இப்படி மைக் வைப்பாங்க. தாளக்கட்டும் ஜதியும் பாத வேலைகளுடன் ஒன்னுக்கொன்னு ஈடு கொடுத்து எப்படி வருதுன்னு காமிக்க. ஏறக்கொறைய அதே போல கஞ்சிரா வாசிப்புக்கு இவுங்க ஃபுட் ஒர்க் ஆடிக்காமிச்சாங்க. தேசபக்தி பாடல் ஒன்னும் வருமுன்னு சொன்னப்ப..... நான் ஊகிச்சது வந்ததுலே எனக்கு மகிழ்ச்சி. எப்படி என் கணிப்புன்னு கோபாலுக்கு ஒரு வெற்றிப்பார்வை வீசினேன்:-) வந்தே மாதரம்...................
ஒவ்வொரு அயிட்டத்துக்கு முன்னாலும் அதை பற்றி அழகா விவரிச்சதுலே டர்பன்காரர்களுக்கு ரொம்பவே சந்தோஷமுன்னு அப்பப்ப வாரிவிட்ட கைதட்டுகளில் தெரிஞ்சது.

கடைசியா..............மீரா பஜன் ஒன்னு. இதிலும் தொடக்கம் யானைதான். கஜேந்திரன் காலை முதலை கவ்விப்பிடிச்சுக் குளத்துக்குள் பிடிச்சிழுக்க, காப்பாத்துன்னு யானை கண்ணீருடன் கதறி அழைக்க......கருடன்மேல் ஏறி நொடிக்குள் பறந்து வந்த மகா விஷ்ணுவே, பாலகன் பிரஹலாதனுக்காக நரசிங்கமா வந்தவரே........த்ரௌபதியின் மானம் காத்த.............. இந்தக் கட்டம்
சகுனியுடன் தருமர் சூதாட்டம் ஆடுனதில் இருந்து விஸ்தரிச்சு நடக்குது. ஒவ்வொரு ஆட்டத்திலும் சகுனி ஜெயிக்க, துரியோதனின் சிரிப்பு மகிழ்ச்சி, பாண்டவர்களின் துயரம்....கடைசியில் த்ரௌபதியைப் பணயம் வைப்பது..... துச்சாதனன் போய் அவளை சபைக்கு இழுத்து வருவது, புடவையை உருவும்போது, கையாலாகாத அஞ்சு கணவர்களைப் பார்த்துப் புலம்பி கடைசியில் கோவிந்தனை சரணடைவதுன்னு............... அட்டகாசமான அபிநயம்.

துடிக்கும் த்ரௌபதியைப் பார்த்து எனக்கு(ம்) நெஞ்சு அடைச்சு கண்கள் குளம்கட்டி அருவியானதென்னவோ நிஜம். அற்புதனமான ஒரு நடனம் பார்த்த மனநிறைவு. திரும்பிக் கோபாலைப் பார்த்தேன். அதிசயிச்சுப்போய் மிரண்ட பார்வையுடன் இருந்தார்! (இதுக்குத்தான் சொல்றது யாரையும் முன்முடிவோடு அணுகலாகாதுன்னு! எந்தப்புத்துலே எந்தப் பாம்பு இருக்கோ???)

ஒப்பனையில் கொஞ்சம் பின் தங்கி இருக்காங்களோன்னு ஒரு சம்சயம் எனக்கு. மத்தபடி அவுங்களோட இசைக்குழுவில் வந்த அஞ்சு பேரையும் கவுரவமா அறிமுகப்படுத்துனது எனக்குப் பிடிச்சு இருந்துச்சு. வழக்கமா அவுங்க அம்மாதான் பாட்டு பாடுவாங்களாம். அவுங்க மறைஞ்சு ரெண்டு வருசம் ஆகிருச்சு,ஆனாலும் அவுங்களோட ஆத்மா என்கூடவேதான் இங்கே இருக்குன்னு சொன்னது மனசுக்கு இதமா இருந்துச்சு. இசைக்குழுவின் பாடகர் பாலு அவுங்க அம்மா தேர்ந்தெடுத்தவர்தானாம். அருமையாப் பாடினார்.


இந்தப் பதிவு எழுதுமுன் வாணியைபற்றி இன்னும் எதாவது குறிப்புகள் கிடைக்குமான்னு தேடுனா....................... சொந்த வாழ்க்கையில் கடந்துபோன சம்பவத்தையெல்லாம் ஜூஸியாக் கொடுத்துவச்சுருக்காங்க சிலர். இவுங்களுடைய தனிப்பட்ட திறமைகளைக் கண்டுக்க ஆளே இல்லை என்றது மனசுக்கு வருத்தமா இருந்துச்சு.

மறுநாள் உள்ளூர் தினசரியில் இவுங்க நிகழ்ச்சியைபற்றி ஒரு சின்னக் கட்டுரை வந்துருக்கு. பாய்ஞ்சு பாய்ஞ்சு எடுத்தபடங்கள் எல்லாம் எங்கே போச்சோ தெரியலை. த்ராபையா ஹைதரலி காலத்துப் படம் ஒன்னை ஸ்கேன் செஞ்சு போட்டு அவுங்க ஆத்தாமையைத் தீர்த்துக்கிட்டாங்க. அதுகூட ப்ரிண்ட் ஒழுங்கா இல்லாம கலர் மை இங்கிட்டும் அங்கிட்டுமா நகர்ந்து போய் .................... என்ன ஜனங்களோ!! ச்சீன்னு வெறுத்துப்போச்சு. பயனா ஒரே ஒரு குறிப்பு மட்டும் கிடைச்சது, அவுங்க நடனப்பள்ளியைப் பற்றி. எண்ணிப் பத்து மாணவர்களுக்கு மட்டுமே நடனம் சொல்லித் தருவாங்களாம். பெரிய கூட்டத்தைச் சேர்த்துவச்சுக்கிட்டு கும்பலில் கோவிந்தா இல்லாம தனித்தனியாக் கவனிச்சுச் சொல்லித்தரத்தான் இத்தனை குறைவான எண்ணிக்கையாம்.

என்ன உலகமப்பா.............. பிரபலத்தின் மறுபாதியா இருந்ததுக்கு தண்டனையோ:(

PIN குறிப்பு: இனி யாராவது தமிழில் இவுங்க பேரைப்போட்டுத் தேடினால் குறைஞ்சபட்சம் இந்தப் பதிவு வரட்டும்!Tuesday, March 29, 2011

குப்பை கொட்டுவது என்றால்................

கடைக்குள்ளே நுழைஞ்சால் இளைஞர் ஒருவர் துணிப்பொதிகளுக்கிடையில் முக்கால்வாசி படுத்த நிலையில் கண்ணை எங்கியோ உயரே நட்டமாதிரி கிடக்கார். அவர் கண் போன திசையில் என் கண்ணை ஓட்டினால்...... மேலே உள்புறக்கூரையையொட்டி சின்னதா ஒரு தொலைக்காட்சிப் பொட்டி. படம் ஒன்னும் ஓடலை. ஆஃப் செஞ்சநிலையில் இருக்கு. பொழுதன்னிக்கும் டிவியில் கண்ணு நட்டபழக்கதோஷமாம்! புதன் வரவைக் காத்து இப்படியே கிடப்பாராம்.

சண்டிகரில் பல செக்டர்களில் கடைகள் அறுவதாண்டுப் பழக்கத்தில் உறைஞ்சு கிடக்கு. கடைக்குள்ளே நுழையக் கஷ்டப்படவேணாம். வரிசையாக் கட்டிவிட்ட கடைகள் அதுக்கு முன்னே வெராந்தாபோல ஒரு நடைபாதை. நடக்கும்போதே பக்கவாட்டில் ஒரு காலைக் கொஞ்சம் நீட்டினால் கடைக்குள்ளே இருப்போம். மொத்தம் மூணுபேர் இங்கே. கிடந்தவர் கடை முதலாளியின் மகனாக இருக்கணும்.

"அஞ்சு நூறு இப்ப எட்டாயிரம். இன்னும் ரெண்டு நாளுக்குள்ளே வித்தால்தான் உண்டு."

"ஆனா யாருக்கு வேணும்? நிம்மதியா டிவியிலே பார்த்துக்கலாம். அங்கே போனா தண்ணிகூட காசு கொடுத்துல்லே வாங்கணும். பவுண்டரி, சிக்சர் எல்லாம் அடிச்சால் அங்கே ஒருக்காத்தான் பார்க்கலாம். டிவின்னா நிறையவாட்டி பார்க்கலாம்"

கள்ளப்பணம் 'சம்பாரிச்சு' கண்மண் தெரியாமச் செலவழிக்கும் கூட்டத்தைவிட இப்படி சின்ன வருமானத்துலே வாழ்க்கை நடத்தும் மக்கள் சரியான வழியிலேதான் சிந்திக்கறாங்க.

மொஹாலிப் பக்கமும், தாஜ் இருக்கும் செக்டர் 17 பக்கமும் சாதாரணமா நடமாட முடியாதபடி போலீஸ் கெடுபிடியும், விட்டேனா பாருன்னு முண்டி அடிச்சுப்போகும் கூட்டமுமா நகரே ஒருவிதமாத்தான் கிடக்கு! இன்னும் ரெண்டு நாள் இப்படித்தான்..................... இந்தியா x பாகிஸ்தான்............வாழ்வா சாவா...........

இருநூத்தியம்பதை பத்து மடங்கு வச்சு வித்தாருன்னு (பெயருக்கு) ஒரு ஆளைப் பிடிச்சுருக்கு காவல் துறை. கழுவிவிட்ட கண்ணைத் துடைச்சுக்கணும் நாம்!

ஒரு சில செக்டர்களில் மட்டும் வெளிநாட்டுக்காரர்களுக்குன்னே கடைகள். உள்ளூர் ப்ராண்ட் சாமான் ஒன்னுகூட இருக்காது. குட்டி அமெரிக்கான்னு சொல்லிக்கலாம். இன்னும் சில கடைகளில் உள்ளூர் பணக்காரர்களுக்கு...........பற்பசையில் இருந்து மேக்கப் சாமான்கள் வரை உள்நாட்டுத் தயாரிப்பு ஒன்னுமே கண்ணுலே படாது. ஹைபர் ஸ்டோர்க்குள்ளே நுழைஞ்சு ஹமாம் சோப்பு கேட்டால் முழிக்கிறாங்க!
வீக்கோ வஜ்ரதந்தி இருக்கா? ஆங்..... அப்டீன்னா?

புரிஞ்சு போச்சு. இதெல்லாம் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியக் கடைக்களுக்கான ஸ்பெஷல் ஏற்றுமதிச் சாமான்கள்:-)

ஆனா ஒன்னு இந்தக் கடைகளில் காலடி வச்சுட்டா யாராவது கடைக்காரப்பொண்ணு நம்மை ஒட்டிப்பிடிச்சுக்கிட்டே......... கூடவே வர்றது என்னவிதமான ஸேல்ஸ் டெக்னிக்கோ! எரிச்சல்தான் மிச்சம்:(

எப்பப்பார்த்தாலும் இந்த ரெடிமேடு கலாச்சாரம் என்ன வேண்டிக்கிடக்கு? சின்னக்கடைகள் இருக்கும் செக்டர் ஒன்னில் கடைவாசலில் தைய்யல் மெஷீன் போட்டுத் தைச்சுக்கிட்டு இருக்கும் ஒருத்தர்கிட்டே கோபாலுக்கு ஒரு பேண்ட் துணி அங்கேயே வாங்கித் தைக்கக் கொடுத்தோம். பரிசோதனைதான். ஆனால் அபார வெற்றி. ஆறுபாலில் 36 எடுத்தமாதிரி!

இன்னொரு நாள் ஒரு ஷர்ட் தைச்சுப் பார்க்கலாமுன்னு கொடுத்தோம். அளவு எடுத்துக்கிட்டு இருந்தபோது கால் சரியில்லாத ஒருத்தர் கோபாலைப் பார்த்துச் சிரிச்சமுகத்தோடு சமீபிச்சார். பொதுவா இங்கே பிச்சைக்காரர்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்காங்க. முக்கியமா கோவில் வாசல்களில். அவருக்குக் கொஞ்சம் காசு கொடுத்தார் கோபால். காசு வேணாமாம். சர்ட்டும் பேண்ட்டும் வேணுமாம். நிறைய துணிகள் போடாமலே வீட்டுலே கிடக்கு. ஒன்னு ரெண்டு முறை மட்டும் போட்டவை. அதென்னவோ (ஆளு ஊதாமல்) சட்டைமட்டும் சின்ன்ன்ன்ன்ன்ன்ன்னதா ஆகிப்போச்சாம்! நாளைக்குக் கொண்டுவந்து கொடுக்கறேன்னார். 'அதெல்லாம் வேணாம். கஷ்டப்படாதே. இந்தத் தைய்யல்காரரிடம் அளவு கொடுத்துடலாம். புதுத்துணி வாங்கித்தா' ன்றார்! பணக்கார மாநிலமாம், இந்தியாவில் நம்பர் ஒன்னு. அதுக்காக இப்படியா? நகைக்கடைக்குப் போனால்............. எனக்கும் ஒரு செயின் வாங்கிக்கொடுன்னு கேப்பாங்களோ?
மரங்களுக்கு ஒரே சோம்பல். இலை உதிர்காலமுன்னு தனியா ஒன்னு எதுக்கு? புதுசு வரும்போதே பழசைக் கழிச்சாலாச்சுன்னு ஒரு பக்கம் புது இலைகளும் பூக்களும் வரும் வஸந்த காலத்தில் இலையுதிர்காலமும் ஒட்டிக்கிச்சு. ஊர் பூராவும் உலர்ந்த இலைகளின் குப்பை. அடிச்சுப்பத்தன்னே வீசும் காற்று.
மாவும் லைச்சியும் கொல்லுன்னு பூத்தாச்சு!

சோம்பல் மரத்துக்கு மட்டுமில்லை. வீட்டு வேலைக்கு 'உதவும்' மக்களுக்கும்தான். ஒரு நாள் சரோஜ் வரலையேன்னு அடுக்களையைப் பெருக்கினேன். கப்போர்ட் அடியில் வாரியலை விரட்டுனா..........ஐயோ......!
க்ளிக்கிட்டு மறுநாள் அதைக் காமிச்சா............. 'அஞ்சு வருசத்துக்குமுன்னாலே போட்டுருக்காங்க. நான் இப்ப நாலே முக்கால் வருசமாத்தான் இந்த வீட்டுலே வேலை செய்யறேன்'! (மாடி கட்டி வருசம் அஞ்சுதான் ஆகுது)
ஹவுஸ் ஓனர் வீட்டுலே வேலை செய்யறவங்ககிட்டே வேறு ஆள் கிடைக்குமான்னு கேட்டால்..............'தப்பு உங்க மேலேதான். வேலையைச் செய்ன்னு சொல்லிட்டு நீங்கபாட்டுக்கு இருக்கறீங்க. கூடவே போய் பின்னால் நின்னு இதைச் செய், இங்கே துடை, இதைப் பெருக்குன்னு சொல்லிக்கிட்டே நிக்கணும்'னாங்க. வேலை 'வாங்க'த் தெரியலைன்ற கெட்ட பெயரை சம்பாதிச்சுட்டேன்:(

கோபால் ஆஃபீஸ்லே மெஷீன்போட வந்த சீனருக்கும் சமைச்சுப்போடும் நேப்பாளிக்கும் சின்னக் கைகலப்பாம். ராத்திரி ஃபோன் வந்துச்சு. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போய் மருந்து போட்டுவிடுங்க. காலையில் வந்து விசாரிக்கிறேன்னு சொன்னார். சமயம் பார்த்து நம்மகிட்டே சொம்பு ஒன்னு இல்லாமப் போச்சு:( ஒரு மேல்துண்டு இருந்தாலும் தேவலாம்.

"போயிட்டு வாங்க ஐயா. ரெண்டு பேரையும் விசாரிச்சு 'ஐயா' தீர்ப்பு சொன்னாச் சரியாத்தான் இருக்கும்!!!"


Monday, March 28, 2011

உள்ளூர் சமாச்சாரம் ஒன்னுரெண்டு

மாதேவி சொன்னாங்க பாருங்க...அது பலிச்சுருச்சு. அதுவும் எப்போ? சொன்ன ஒன்னுரெண்டு நாளுலேயே! அவுங்க வாயிலே சக்கரையைப் போட்டுக்கச் சொல்லணும்:-)

வெள்ளி தொடங்கி செவ்வாய் வரை அஞ்சு நாளைக்கு சண்டிகர் ஆர்ட்ஸ் அண்ட் ஹெரிடேஜ் ஃபெஸ்டிவல் நடக்குது. ட்ரைபல் நடனம், உஸ்தாத் அம்ஜத் அலிகான் சரோட், உஸ்தாத் ரஷீத் கான் பாட்டு, பரதநாட்டியம், நாடகம், கூடவே ஆர்ட் வொர்க்ஷாப் இப்படி.............

முதல் நாளுக்கு நார்த்ஸோன் கல்ச்சுரல் செண்டர் சண்டிகரில் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செஞ்சுருந்தாங்க. செக்டர் 17 இல் உள்ள ப்ளாஸாவில். இது ஷாப்பிங் ஏரியாவிலேயே இருக்கு. செயற்கை நீரூற்றுகள் எல்லாம் வச்ச பெரிய இடம்தான். மாலை 7 மணிக்கு ஆரம்பம். சங்கு ஊதி (!) ஆரம்பிச்சாங்க! சீப்ப்ப்ப்ப் கெஸ்ட்டுகள் வரவுக்காகக் கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டியதாப் போச்சு. லேட்டா வந்து ஒரு பத்தே நிமிசத்துலே கிளம்பிப் போயிட்டாங்க பூங்கொத்துகளை வாங்கிக்கிட்டு:(
மணிபுரி, நாகாலாந்து, மேகாலயா, அஸ்ஸாம்ன்னு பழங்குடிகள் நடனம். ஏற்கெனவே ரெண்டுமூணுமுறை பார்த்ததுதான். அப்புறம் ஒடிஸாக்காரர்களின் துர்கை நடனம் அட்டகாசமா இருந்துச்சு. பெரிய சைஸ் நாய்கள்(?) ரெண்டும் அதோட குட்டி ஒன்னுமா தாடிக்காரத் தாத்தாவுடன் ஒரு நடனம். சைனீஸ் ட்ராகன் டான்ஸ் நினைவுக்கு வந்துச்சு.

மேடை ஒளி அமைப்பு மகா மட்டம். இவ்வளவு மோசமான ஒன்னை நான் இதுவரை பார்த்ததே இல்லை. வெளிச்சம் மேடையில் ஆடுறவங்களுக்குப் போடாம பார்வையாளர்கள் கண்களைப் பதம் பார்த்துக்கிட்டே இருக்கு. என்னதான் இருக்கைகள் போட்டு சுத்திவரக் கயிறு கட்டி வேலி போட்டுருந்தாலும் தப்பிச்சுப் போயிருவோமோ என்ற பயமாவும் இருக்கலாம். போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு சரியா எனக்கு முன் ஸீட்டுலே ஒரு சர்தார். பஞ்சாப் பக்கம் வந்துட்டு இப்படி டர்பனுக்குப் பயப்படும்படியா ஆயிருச்சு என் நிலைமை.

கேமெராவைப் போகஸ் செய்வது படா முஷ்கில் த்தா:( கோபால்கிட்டே கொடுத்துட்டேன். அவர் பங்குக்கு கெடுப்பதைக் கெடுத்து வச்சார்:-)))) அதிலும் தப்பிப்பிழைச்சதில் சில உங்கள் பார்வைக்கு. அதிவேக நடனமா இருக்கே எல்லாம்!!!!
ராஜஸ்தானி போ(ல்)க் டான்ஸ் நல்லாவே இருந்துச்சு. அதில் ஒரு மயில் நடனம் கண்ணனும் ராதையும் கோபிகைகளுமா அட்டகாசம் போங்க! இதுலே கண்ணன் ஒரு தாம்பாளத்தைக் கையில் வச்சுச் சுழற்றிக்கிட்டே இருக்கார்(விஷ்ணு சக்கரம்?) ராதை காலமுக்கி விடும்போது கூட!!!

கண்ணைக் கூசவைப்பது ஒரு பக்கமுன்னா காதைக்கிழிப்பது இன்னொரு பக்கமுன்னு விடாது நடந்த யுத்தத்தில் நான் தோத்துப்போய் சீக்கிரம் கிளம்பிட்டேன்:(

ஃபோட்டோக்காரர்கள் இம்சை ஒரு பக்கம். குறுக்கும் நெடுக்குமா முன்னாலே பாய்ஞ்சு பாய்ஞ்சு படம் எடுத்து........ மறுநாள் தினசரியில் ஸ்டாம்ப் அளவு படம் போட்டுக் கடமையை ஆத்திடறாங்க.
கீழே ஹவுஸ் ஓனர் வீட்டு நாக்குட்டி பிக்ஸி நடுவில் மூணு மாசமா சொந்தக்காரர் வீட்டுப் பண்ணையில் போய் நல்லொழுக்கம் எல்லாம் படிச்சுட்டுத் திரும்பி வந்துருக்கார் .. குழந்தைத்தனத்தையெல்லாம் சட்னு கழட்டிப்போட்டு பெரியமனுசனா வந்துருக்கு இந்த அஞ்சு மாசக் குழந்தை. கோபால்தான் ஓடிவந்து சொன்னார் அவன் வந்துட்டான்னு!! என்னிடம் நாய் பூனையெல்லாம் இனி வளர்க்கவே கூடாதுன்னு வாக்கு வாங்கிக்கிட்டு இப்போ பிக்ஸியைக் கொஞ்சறார் பாருங்க!
பிக்ஸி அன்றும்

அடுத்த வீட்டுக் குழந்தையைக் கொஞ்சினால் பிரச்சனை இல்லையாம்!!!! நானும் அப்பப்ப பேபி ஸிட் பண்ணுவேன். அவனோட அம்மாவை ஒரு வேலையும் செய்ய விடலைன்னு மாடிக்குக் கொண்டுவந்து கொஞ்சநேரம் விட்டுவைப்பாங்க. போய்ப் பார்த்தால் கூப்டவுடன் ரொம்ப பொலைட்டா வந்து காலருகில் உக்கார்ந்தான். வெயிலா இருக்கே தண்ணி குடிப்பாட்டுங்கன்னா......... லஸ்ஸிதான் குடிப்பானாம். 100% அஸ்லி பஞ்சாபி:-))))


பிக்ஸி இன்றும்


பிரபல எழுத்தாளர்ன்னா நாய் இருக்கணுமாம்:-))))))))))))) நான் சொல்லலைப்பா. கோபால் வாக்கு.


Friday, March 25, 2011

நகர்வலம் போகும் நேரமிது.............யானை மேல் குடை நிழலில் வந்த உற்சவருக்குப் பூரணகும்பம் ஏந்தி வரவேற்றார் நம்ம கோவில் குருக்கள் பிரகாஷ். வேதபாடசாலை மாணவர்கள் வேத கோஷங்கள் ஓத, ஆரத்தியெடுத்து மாலை மரியாதை, பட்டு உருமால் சாத்துதல் எல்லாம் ஆகி நம்ம கோவில் கருவறை அர்த்தமண்டபத்தில் வச்சு பூஜைகள் செஞ்சுட்டு, வசந்த மண்டபமேடையில் கொண்டுபோய் தரிசனத்துக்கு வச்சாங்க.
வேதபாடசாலை மாணவர்கள் முன்வரிசையில்
ஐய்யப்ஸ் கோவில் உள்ளே ஒவ்வொரு சந்நிதிக்கும் போய் அங்கிருக்கும் சக ஸ்வாமிகளுடன் ரெண்டொரு வார்த்தை பேசிட்டு அப்புறமாக் கருவறைக்குள்ளில் போய் முருகனுடன் நாலு வார்த்தை பேசுனார்.
தந்திரிகள் விசேஷ பூஜை செய்ய செண்டைக் கொட்டு முழங்க எல்லாம் திவ்யமா நடந்துச்சு. தீபாராதனை, தீர்த்தம் (கல்கண்டுத் தண்ணீர்) எல்லாருக்கும் கிடைச்சது. வழக்கம்போல் தீர்த்தம் வாங்கித் தலையில் தெளிச்சப்பிறகுதான் ............கையெல்லாம் பிசுக்........... :(

இதுக்கிடையில் வெள்ளைக் கொண்டைக்கடலை சுண்டல், தண்ணீர், ஏலக்காய் தட்டிப்போட்ட தேநீர் எல்லாம் விநியோகம் ஆச்சு. சரியா ஒரு மணி நேரத்தில் விஸிட்டிங் முடிச்சுட்டு டாண்னு அஞ்சரைக்குப் புறப்பட்டுட்டார் ஐய்யப்பன். போகுமிடம் வெகுதூரமில்லை. அவருடைய கோவில் பக்கத்து செக்டர்தான்.

பிரசாதம் விளம்ப, தாலப்பொலித் தட்டில் தீபம் ஏற்றன்னு நம்ம கோபால் பயங்கர பிஸியாக்கும் கேட்டோ! நம்ம கோபாலுக்கு இந்த பிரசாத விநியோகம், பந்தியில் சாப்பாடு பரிமாறுதல் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். சந்தோஷத்தைக் கெடுப்பானேன்னு விட்டுருவேன்.
குழந்தைக்குக் காலை மடிச்சு உக்காரத் தெரியலை:( இன்னும் சரியாப் பழக்கலை போல இருக்கு! நம்மூர் யானைகளுக்குச் செய்யும் அலங்காரமும் மிஸ்ஸிங். ஒரு ஃபேஸ் பெயிண்டிங் உண்டா? ஒரு மணி உண்டா? கையை நீட்டிக் காசு வாங்கிப் பாகனாண்டை கொடுத்தானோ? ஊஹூம்.........இவ்வளோ என்னத்துக்கு..... கோவிலில் கொடுத்த வாழைப்பழத்தைச் சரியா வாங்கி வாயில் போட்டுக்கத் தெரியலை!!!!!


தெருவின் ரெண்டு பக்கங்களிலும் மங்கையர் தாலப்பொலியோடு நடக்க, செண்டை மேளக்கார் அடிச்சு வாசிக்க, ஸ்வாமி மண்டபத்தோடு ட்ரெயிலர் உருள, கனகம்பீரமா நம்ம குஞ்ஞன் ஆனை உற்சவரையும் அவருக்குப் பிடிச்ச குடையையும் சுமந்து காலடி எடுத்து வச்சு நடக்கன்னு........... எல்லாம் கேமமாயிருந்நு!

நல்ல தெரக்கு. இத்தரை மலையாளிகளோ??? அதும் ஈ நேரத்து..........
ஊர்வலத்துக்குப் பாதுகாப்பா ஒரு வேன் நிறைச்சு சண்டிகர் போலீஸ் வந்து இறங்கி அவுங்க பாட்டுக்குக் கதையடிச்சுக்கிட்டு இருந்தாங்க கோவில் மைதானத்துலே! உள்ளூர் பத்திரிகை போட்டோகிராஃபர்கள் பெரிய பெரிய கேமராக்களுடன் பாய்ஞ்சு பாய்ஞ்சு படம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க. வரிசையில் தாலப்பொலி ஏந்தி நிற்கும் மங்கையரை பயங்கரமா zoom செஞ்சு எடுத்துக்கிட்டு இருந்தாங்க. மறுநாள் சண்டிகர் நியூஸ்லைனில் சுண்டுவிரல் அளவு ஒரு படம் வந்துச்சு:(
ஐய்யப்பன் கோவிலில் இந்த மூணு நாளும் பகல் இரவு ரெண்டு நேரமும் பப்படம், ப்ரதமன், அவியலோடு சத்யா. கச்சேரிகள்னு கொண்டாட்டம். கோவில் முன்பக்க மைதானத்தில் துணிக்கூடாரம், மேடை எல்லாம் வடக்கத்தி ஸ்டைலில் அமைச்சுருந்தாங்க. கூடாரத்தில் சரவிளக்குகள் கூடப் போட்டு வைக்கிறாங்க இந்தப் பக்கங்களில். தமிழ்நாட்டில் இப்படிக் கூடாரங்கள் அமைச்சுத் தரைவிரிப்பெல்லாம் போட்டு நான் பார்த்ததே இல்லை. ரசிகர்கள் உக்கார உறைபோட்ட நாற்காலிகள். தில்லி பஞ்சவாத்ய ட்ரஸ்ட் ஏற்பாடு செஞ்சுருந்த கதகளி, மோஹினியாட்டம், ராஜஸ்தானி பாவா டான்ஸ், மணிப்புரி டான்ஸ்ன்னு இருந்துருக்கு. நமக்குக் காணக் கிடைக்கலை.
மஹாகணபதி ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம், சர்ப்பபலி, ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், விளிச்சிச்சொல்லி ப்ராயச்சித்தம் பகவதி சேவான்னு பலவித பூஜைகள் நடந்துருக்கு.

கடைசி நாள் மட்டும் கொஞ்சநேரம் போயிருந்தோம். விளக்கு பூஜை நடந்துக்கிட்டு இருந்துச்சு. ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனை. மைக்கில் நம்பூதிரி ஓவ்வொன்னாச் சொல்லச்சொல்ல பக்தர்கள் திருப்பிச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நாமும் கலந்தோம்.

கோவிலின் முன்பக்கம் பெரிய ஹால் .ஹாலுக்கு அந்தப்பக்கம் ஓட்டுக்கூரைகள் போட்ட மூணு சந்நிதிகள். முன்வாசலுக்கு நேரா இருக்கும் சந்நிதி ஐயப்பனுக்கு. ரெண்டு பக்கமும் இடுப்பளவு கம்பித்தடுப்புப் போட்டு அதனிடையில் வரிசையா நடுத்தர சைஸில் கேரள வகைக் குத்து விளக்குகள். வாசல் பக்கம் ஒரு ஏழடுக்குப் பித்தளை விளக்கு. சந்நிதிக்கு முன்னால் ஆள் உயரக் குத்துவிளக்குன்னு எல்லாம் அம்சமா இருக்கு. ஐய்யப்பனுடைய இடது பக்கம் சந்நிதியில் பகவதி. வலது பக்கம் சந்நிதியில் புள்ளையார். புள்ளையாருக்குப் பக்கம் சின்ன மரத்தின் சுவட்டில் கல் பாம்புகள் நாலு. (ஸர்ப்பக்காவு)

இன்னிக்கு மூவரும் சந்தனக்காப்பில் ஜொலிச்சுக்கிட்டு இருந்தாங்க. சந்நிதியின் வெளிப்புறச் சுவற்றில் பிடிப்பிச்சு இருந்த அகல்விளக்குகளையெல்லாம் ஏற்றியிருந்தாங்க. சந்நிதி வாசலை சுத்தி இருந்த விளக்குகளும் எல்லாக் குத்துவிளக்குகளும் ஏற்றி அந்த இடம் பூராவுமே அமைதியான அழகோடு சொல்ல முடியாத மனநிறைவு தந்தது.

ஒரு டீ கெட்டிலில் எண்ணெய் ஏந்திய நபர் ஒருமுகமான கவனத்துடன் தேவையான விளக்குகளுக்கு எண்ணெயை ஊத்திக்கிட்டே இருந்தார். இன்னொருவர் பெரிய தாம்பாளத்தில் உதிரிப்பூக்களுடன் விளக்குப்பூஜை செய்யும் பெண்களுக்கு, அவர்கள் தட்டில் பூக்கள் குறையக்குறைய அதை நிறைவு செஞ்சுக்கிட்டு இருந்தார். எல்லாம் பயங்கர சிஸ்டமேடிக்கா நடத்தறாங்க.

கோவிலுக்குள் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் ஒரு போர்டில் எழுதி வச்சுருக்காங்க. சொன்னால் நம்ப மாட்டீங்க. எட்டுக்கட்டளையில் முதல் விதியே 'பகவான் கா ஃபோட்டோ லேனா மனா ஹை! ஆஹா...... பாடில்லா.............. ஆய்க்கோட்டே:(
மற்ற எதுக்கும் காத்திருக்காமல் நம்ம முருகன் கோவிலுக்கு வந்தோம். பங்குனி உத்திர ஸ்பெஷலைக் கொஞ்சமாவது பார்க்கணுமே. கோவில் மைதானத்தில் ஹோலிகா எரிஞ்சுக்கிட்டு இருந்தாள். வளாகத்தில் இருக்கும் லக்ஷ்மிநாராயணன் கோவில் நிகழ்ச்சி. நம்ம கோவிலுக்குள்ளில் மயில் வாகனத்தில் ஏறி பிரகாரம் சுற்றி ஆற அமர ஓய்வெடுக்கும் உற்சவர்கள்.
ரொம்பப் பக்க்க்க்க்க்க்க்க்க்கத்தில் நின்னு தரிசனம் செஞ்சேன்.
கோவில் மேடையில் ஒரு பக்கம் சத்தியநாராயணா பூஜை நடந்துக்கிட்டு இருந்துச்சு. வழக்கமா இருக்கும் கூட்டம் மிஸ்ஸிங். ஒரே சமயத்துலே எல்லாம் நடந்தால் ஜனங்க எங்கேன்னு போகும்?


வழக்கமா ஒவ்வொரு பவுர்ணமிக்கும் மாலையில் நடக்கும் கிருஷ்ண மாரியம்மனுக்கான அபிஷேகம் ஆரம்பிச்சது.பொறுமை காக்க முடியாதாம், கோபாலுக்கு. எதோ வேலை இருக்காம். வீடுவந்து சேர்ந்தோம். இந்த கலாட்டாவில் பெரிய நிலவை விட்டுட்டேன். சாஸ்த்திரத்துக்கு நம்ம மொட்டை மாடியில் இருந்து நாலு க்ளிக்.