Wednesday, December 24, 2008

பசிச்சவள் பார்த்தப் பழங்கணக்கு.

'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரக்' ன்னு காதுக்குள்ளே வந்து விழுந்த சத்ததில் அப்படியே ஆடிப்போயிட்டேன். 'ஐயோ'..... எங்கே வெட்டறீங்க?

"ஒன்னுமில்லை. நீ ஆடாம இரு. சரியாத்தான் வெட்டறேன்"

தப்பான ஆள்கிட்டேத் தலையைக் கொடுத்துட்டேன். நம்பியே இருக்கக்கூடாது.....காதுக்குள்ளே இன்னும் சத்தம் வந்து விழுது. இனிக் கூக்குரலிட்டுப் பயன் இல்லை. ஆனாலும் கத்தாம இருக்க முடியுதா? ஒரு பேயாட்டம் ஆடிட்டுத்தான் ஓய்ஞ்சேன்.

போன வருசத்தின் கடைசிநாள். குளித்து முடிச்சு ஈரத்தலையைப் படிய வாரி எல்லா முடிகளையும் சேர்த்துப்பிடிச்சுக் கச்சிதமா ஒரு க்ளிப் போட்டுக்கிட்டு இருந்தப்ப, எங்க வீட்டுக்கு மேலே ஆகாயத்துலே பறந்து போய் ஆளைத் தேடிக்கிட்டு இருந்த சனியன், 'ஆப்ட்டுக்கிட்டாண்டா' என்ற சந்தோஷத்துடன் சட்னு இறங்கிவந்து உக்கார்ந்தது, கோபாலின் நாவில்.

" ஒரே லெவலில் இல்லையே. நான் வேணுமுன்னா கொஞ்சம் ட்ரிம் செஞ்சு விடவா?"

சனியன் இடம் மாறி என் தலையிலே வந்து உக்கார்ந்தது தெரியாமல் தலையை ஆட்டுனேன் நான்(-:

பின்பக்கத் தோட்டத்தில் நான் நிக்கக் கத்திரியும் கையுமா இவர். ( கொஞ்சம் முதல் வரிக்குப் போங்களேன்). சரியா அந்தக் க்ளிப்புக்குக் கீழே, அதைத் தொட்டதுபோல 'நறுக்.'

நான் ஆடுன ஆட்டத்தில் பயந்து போய் இடதுகையில் பிடிச்சிருந்த மயிர்க்கற்றையை லூஸில் விட்டு, அது தோட்டம் பூராவும் பரவி ஓடிப்பிடிச்சு விளையாடுது.

வாலறுந்த நரியாக நான். 'அதெல்லாம் வளர்ந்துரும். கவலைப்படாதே'ன்னு சொன்னார் கோபால்.


ஸ்க்ரஞ்சின்னு சொல்லும் துணியால் ஆன ரப்பர்பேண்ட்களை வச்சுச் சமாளிச்சேன். பெரிய சோகம் என்னன்னா.... இங்குள்ள நட்புவட்டத்தில் ஒருத்தரைத் தவிர வேற யாருமே கண்டுபிடிக்கலை:-)))))

இதோ அடுத்த புதன் வந்தால் டிசம்பர் 31. சரியா ஒரு வருசம். பழங்கணக்குப் பார்க்கும்போது அவ்வளவு பிரமாதமான வருசம் இல்லைன்னாலும் அவ்வளவு மோசமும் இல்லை. இந்தப் பதிவோடு 183 பதிவுகள். நம்ம வகுப்புக்குக் கூடுதலா இன்னும் சில மாணவர்கள். வாசகர் வட்டம் கொஞ்சம் பெருசா ஆகி இருக்கு. ஒரு சிலருக்காவதுப் பயன்படும் பதிவுகள் வந்துருக்குன்னு 'இலா'வின் பின்னூட்டம் சொல்லுது:-)

தமிழில் புகைப்படக்கலை என்ற நம் PIT பெருமக்களால் புகைப்பட ஆர்வம் கூடிப்போய் இருக்கு. எதை பார்த்தாலும் கை 'பரபர' தான். வரப்போகும் போட்டிகளுக்கு இந்தத் தலைப்பு வந்துருச்சுன்னா...... (பதிவுகள் எண்ணிக்கை கூடுனதுக்கு இதுவும் ஒரு காரணம்.)

அடுத்த வருசமாவது இன்னும் கவனமா எழுத்தை மேம்படுத்திக்கணும், மனசுலே குறிச்சுவச்சுருக்கும் சில சரித்திர நிகழ்வுகளை மறக்காம எழுதணும். எங்கெ போனாலும் கெமெராவைக் கையோடு எடுத்துப்போக மறக்கக்கூடாது.24 செ.மீ. வளர்ந்துருக்கு. அஸினோ பிஸினோ வரும் விளம்பரத்தைப் பற்றிப் படிச்சதைக் கவனமா மனசுலே இருத்திவச்சுக்கிட்டேன். ப்ளாட்டினம் எப்படி இருக்குமுன்னு கோபாலுக்குத் தெரியாதாமே!!!! அந்த தனிஷ்குக்கு நியூஸிவரக் கொடுத்துவச்சுருக்குதோ என்னவோ:-)

ஃபாலோ அப்ன்னு சொன்னால், 'வோடாஃபோனு'க்குக் கண்ணீர்க்காவியமெல்லாம் சொல்லி அவுங்க பாதி இறங்கிவர, நானும் சமாதானக்கொடி பிடிச்சு மெதுவா மேலேறி நடுவழியில் சந்திச்சு 40 டாலர் நம்ம கணக்குலே வரவு வந்துருக்கு. 50% வெற்றி. 'அடிசறுக்குன யானை'யை பாதிவரை தூக்கிவிட்டாச்சுன்னு வச்சுக்கலாம்.


உலகம் முழுசும் பொருளாதாரம் கொஞ்சம் கீழ்நோக்கி இருக்கும் இந்த சமயத்தில் அனாவசியச் செலவுகளைக் குறைக்க முதலில் கத்துக்கணும். எந்தக் காரியமும் அது நல்லதோ அல்லதோ வீட்டில் இருந்துதானே ஆரம்பிக்கணும். அதனால் இந்த வருச கிறிஸ்மஸ் பண்டிகைக்கான அலங்காரத்தில் முதலில் கை வச்சேன். பழைய அலங்காரப் பொருட்கள் இருந்த அட்டைப் பெட்டிகளைக் குடைஞ்சு கிறிஸ்மஸ் ரீத் செஞ்சு மாட்டியாச்சு. இந்த வகையில் 25 டாலர் மிச்சம்!
நாமும் பண்டிகை கொண்டாடுவொம்லெ:-))))ரீத்துக்கான வளையம் குக்கர் கேஸ்கட்:-))))
நம்ம வகுப்புக் கண்மணிகளுக்கு விடுமுறை விட்டாச்சு. நாளை முதல் 15 நாள் டீச்சரை மறந்துருங்க. ஆனால் வகுப்பை மறக்காதீங்க. புதுவருசத்தில் உங்களையெல்லாம் மீண்டும் சந்திக்கும் வரை உங்கள் அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்மஸ் பண்டிகை & புதுவருசத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

என்றும் அன்புடன்,

துளசி,

கோபால்
&
கோகி என்ற கோபாலகிருஷ்ணன்.

நம்ம ஊர் விழாக் காட்சிகளில் சில:
நேட்டிவிடி ஸீன் நம்ம ' டிபிஆர்ஜோ' வுக்காக.

Monday, December 22, 2008

அக்கா ( பாகம் 15 ) கடைசிப் பகுதி.

நவராத்திரி சீஸன். குறளகத்தில் பொம்மைக்கொலு ரொம்ப நல்லா இருக்குன்னுன்னு, நானும் என் அறைத்தோழியும் சாயங்காலம் போய்ப் பார்த்துட்டு, அப்படியே ஹோட்டல், ஷாப்பிங்ன்னு சுத்தியடிச்சுட்டு ஒம்போது மணி இருக்கும்போது விடுதிக்கு வந்தோம். வந்து ஒரு அரைமணி நேரம் கழிச்சு, வார்டன் கூப்புடறாங்கன்னு போனா, அந்தம்மா எங்க மாமா பேரைச் சொல்லி, அவரை உனக்குத் தெரியுமான்னு கேட்டாங்க. அடடா....வந்துட்டுப் போயிருக்கார் போல! எங்க மாமாதான்னதும், ஒரு தந்தியை எடுத்துக் கொடுத்தாங்க. ' ஃபாதர் எக்ஸ்பையர்டு. ஸ்டார்ட் இம்மீடியெட்லி'

எப்ப வந்துச்சுன்னா, சாயங்காலம் நாங்க கிளம்பிப்போன கொஞ்ச நேரத்துலே வந்துருக்கு. "நாங்க திரும்பிவந்து இவ்வளோ நேரமாச்சே, உங்க அறையைத் தாண்டித்தானே போனோம். நீங்களும் பார்த்துக்கிட்டுத்தானே இருந்தீங்க. அப்பவே சொல்லக்கூடாதா?"

" சொன்னா உனக்கு ஷாக் ஆயிருமேன்னுதான் உடனே சொல்லலை. வண்டி எப்ப இருக்குமுன்னு தெரியுமா? "

"ரயில் இந்நேரம் போயிருக்கும் பஸ் இருக்கான்னு தெரியலை."

இங்கே அங்கேன்னு போன்லே விசாரிச்சுத், தனியார் பஸ் கிடைக்குமுன்னு தெரிஞ்சு, டாக்ஸி பிடிச்சு எக்மோர்வரை வந்து ஏத்திவிட்டாங்க என் அறைத்தோழியும் வார்டனும். என்ன, எப்படின்னு ஒன்னும் விவரம் தெரியாமக் குழப்பமா வண்டியிலே போய்க்கிட்டு இருக்கேன். அப்பத்தான் நினைவுக்கு வருது, சித்தப்பாச்சித்திக்குத் தெரியுமா..... சொல்லாமக் கிளம்பிட்டேனேன்னு. எங்கேன்னு போய்ச் சொல்றது? இருந்த அவசரத்துலே, மாத்திக்கட்ட ஒரு புடவை, பை ன்னு ஒன்னுமே எடுக்காம, வெறும் கைப்பையோட போய்க்கிட்டு இருக்கேன். காலையில் ஆறரைக்குப் போய்ச் சேர்ந்துச்சு பஸ். அங்கே இருந்து இன்னொரு வண்டி புடிச்சு பைபாஸ் ரோடுலே இறங்குனப்ப ஒம்போதேமுக்கால். வீட்டுக்குப் போனா .......

சாகறதுக்குன்னே ஒவ்வொருத்தரா இங்கே வர்றீங்களா''ன்னு அக்கா அழறாங்க. நல்லாத் தூங்குற மாதிரியே அப்பா. புள்ளைங்க எங்கேன்னு கண்ணைச் சுழட்டிப் பார்த்தால்......பெரியவ மட்டும் உள்ளே வந்து அம்மாகிட்டே உக்காந்தாள். மாமா, வெளியே இருந்து, இங்கே வான்னு கூப்புட்டாரேன்னு போனால்..... 'அண்ணன் கிளம்பிருச்சா'ன்றார். யாருக்குத் தெரியும்?

முகமாவது கழுவலாமுன்னு கிணத்தடிக்குப் போனால்..... மதீனாக்கா என் கையைப் புடிச்சு அவுங்க வீட்டுக்கு இழுத்துக்கிட்டுப் போனாங்க. எப்பக் கிளம்புனேன்னு கேட்டு சூடா ஒரு டீ போட்டுக் கொடுத்தாங்க. இருந்த தலைவலி, கண் எரிச்சலுக்கு இதமா இருந்துச்சு. மதீனாக்கா மகன் ஓடிப்போய் தலைவலி மாத்திரை வாங்கியாந்து கொடுத்தான். திரும்ப வந்து அக்கா பக்கத்துலே உக்காந்துக்கிட்டேன். சித்திதான் பழைய திண்ணையில் சாஞ்சு உக்காந்துருந்தாங்க. உடம்பு சரியில்லையாம் . வயசாகுதுல்லே.....

அப்பா எப்படிப் போனாருன்னு அவுங்க சொன்னதைக் கேட்டு எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. நேத்துக் காலையில் அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்குமுன்னு ஆப்பம் தேங்காய்ப்பால் செஞ்சு கொடுத்துருக்கு அக்கா. அவர் காலை ஆகாரத்தை முடிச்சுக்கிட்டுக் கடைவீதிவரை போயிட்டு வந்துருக்கார். (எல்லாம் சிகெரெட் வாங்கத்தான்) புதுவீட்டுலே தெருவைப் பார்த்து இருக்கும் அறையில்தான் அப்பாவுக்கு ஜன்னல்கிட்டே கட்டில். (ஜன்னலில் கை நீட்டிச் சிகெரெட் சாம்பலைத் தட்டறதுக்கு தோதா இருக்குமே) அப்பாவுக்குப் படிக்கும் பழக்கம் இருக்கு. மாமாதான் பள்ளிக்கூட நூலகத்தில் இருந்து புத்தகங்கள் நிறையக் கொண்டுவந்து கொடுப்பாராம். இப்ப மாமாதான் தலைமை ஆசிரியர். இவர் படிச்சுக்கிட்டே இருந்து அப்படியே தூங்கிட்டார். .

மத்தியானம் சாப்பாட்டுக்கு மாமா வந்துருக்கார். எப்பவும் மாமனாரும் மருமகனுமா ஒன்னா உக்காந்து சாப்புடுவாங்களாம். இன்னிக்கு மாமா வரும்போதே கொஞ்சம் நேரமாயிருச்சாம். பள்ளிக்கூடத்துலே ஒரு அவசர மீட்டிங். சீக்கிரம் சாப்புட்டுட்டு ஓடணுமுன்னு வந்துருக்கார். அப்பா அறையிலே எட்டிப் பார்த்தப்ப அவர் தூங்கறதைக் கவனிச்சுட்டு, இவர் மட்டும் தனியா உக்காந்து சாப்புட்டுட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பி இருக்கார். மணி ரெண்டு ஆகுதே. எழுப்பிச் சாப்புடச் சொல்லலாமுன்னு எட்டிப் பார்த்தப்ப அதே நிலையில் அப்பா. கண்ணுலே கண்ணாடி போட்டது போட்டபடி. புத்தகம் மார்மேலே விரிச்சபடிக் கிடந்துருக்கு இவர் போய், தொட்டு எழுப்புனா..... உடம்பு கொஞ்சம் சில்லுன்னு இருந்துருக்கு. உலுக்கிப் பார்த்துருக்கார். மூக்குக்கிட்டே கைவைச்சுப் பார்த்தா......ஊஹூம்........

அப்புறம் டாக்டருக்கு ஆள் அனுப்பி அவர்வந்து பார்த்து...... எல்லாம் முடிஞ்சுபோச்சு. புண்ணியவான், உறக்கத்துலேயே போயிட்டார்னு சொன்னாராம். எனக்கும் அண்ணனுக்கும் தந்தி கொடுத்துருக்கார். போனுலே கூப்புட்டுச் சொல்லி இருக்கலாமுல்லே?

சனிக்கிழமை. பள்ளிக்கூடம் லீவுன்றதாலே வாத்தியாருங்க எல்லாம் வந்து அங்கங்கே சின்னக் கூட்டமா நின்னு பேசிக்கிட்டு இருக்காங்க. அன்னு அண்ணன் வீட்டுலே சாப்பாட்டுக்கு என்னவோ ஏற்பாடு. புள்ளைங்களை அங்கே கூட்டிட்டுப்போய் சாப்புடவச்சாங்க. நேத்துச் சாயுங்காலத்துலே இருந்து அதுங்களும் பட்டினி.

இங்கே நேரமாகிட்டுப் போகுது. நாலுமணிக்கு எடுத்துறலாமுன்னு பேச்சு. அண்ணன் இன்னும் வரலை. போன் போட்டுச் சொல்லுங்கன்னா.... தபால் ஆபீஸ்க்கு அனுப்புன ஆள், அங்கே போன் ரிப்பேர். லைன் கிடைக்கலைன்னு வந்துட்டார். இந்தப் பக்க அறையிலே இருந்து அத்தையம்மா எந்திருச்சு வந்தாங்க. தளர்ச்சி இருந்தாலும், பார்வை கூர்மையா முந்திமாதிரியே இருக்கு. என்னைப் பார்த்து, வான்னு தலையை அசைச்சுட்டு, விடுவிடுன்னு நடந்து வெளியே போய் மாமாவைக் கூப்புட்டாங்க. நானும் எழுந்து போனேன்.

'தாய்க்குத்தான் தலைப்புள்ளை. தகப்பனுக்குக் கடைசிப் புள்ளை செய்யலாம். அதான் இவ வந்துருக்காளே. இவளை வச்சுச் சாங்கியம் இங்கே செஞ்சுட்டுக் கொள்ளியை நீயே வச்சுரு'ன்னாங்க. நாங்க பேசறதைப் பார்த்துட்டு அக்காவும் மெதுவா எழுந்து வந்துச்சு. அண்ணன் வரலைன்னதும் அதுக்கும் சேர்த்துக் கொஞ்சம் கண்ணீர் விட்டுட்டு, 'செய்யறதைச் செய்யுங்க'ன்னுட்டு வீட்டுக்குள்ளே போய் அப்பா தலைமாட்டுலே உக்காந்துக்கிச்சு.

மூணாகப்போகுது. நீ கிணத்தாண்டை போய் நில்லு. ரெண்டு வாளி சேந்தி ஊத்தறேன்னு அத்தையம்மா சொன்னதும் நான் கிணத்தாண்டை போறதுக்குத் திரும்பறேன்.......சின்னதா ஒரு பையைக் கையில் புடிச்சுக்கிட்டு அண்ணன்.

அப்பாடான்னு எனக்கு நிம்மதி. இவ எப்ப வந்தான்னு என்னைப் பார்த்து மொறைச்சதோ? அண்ணனைப் பார்த்துட்டு அக்கா, தலையில் அடிச்சுக்கிட்டு ஒரே அழுகை. பசங்க எல்லாம் பயந்துபோய் நின்னுக்கிட்டு வேடிக்கை பார்க்குதுங்க.

மளமளன்னு காரியங்கள் நடக்க ஆரம்பிச்சு, நாலரைக்கு எடுத்துட்டாங்க. வீட்டைக் கழுவித்தள்ள ஆரம்பிச்சதும், நானும் அக்காவுமா இந்தப் பக்கம்
திண்ணைக்கு வந்துட்டோம். என் கையைப் புடிச்சுக்கிட்டு கொஞ்சநேரம் சும்மா ஒன்னும் பேசாம இருந்துட்டு, 'நீ என்னத்துக்கு இப்படி அண்ணன் பேச்சை மீறி என்னென்னவோ செய்றே? என்னத்துக்குக் கண்காணாம இருந்தவரைப்போய் கூட்டிக்கிட்டு வந்தே? இப்பப் பாரு, இங்கே வந்து செத்துட்டார். இருக்கறது போதாதுன்னு இன்னும் பேச்சுக் கேக்கணுமுன்னு எனக்கு விதி. எல்லாம் உன்னாலவந்த வினை. சும்மா இருக்கமாட்டேங்கறே.... உன்னைவச்சுக்கிட்டுப் பட்டதெல்லாம் போதும். இன்னும் என்னென்ன செஞ்சு எங்களைக் கொல்லப்போறயோ?'

அக்கா முகமெல்லாம் எப்படியோ கருத்துப்போய், தலையெல்லாம் கலைஞ்சு, கண்ணெல்லாம் சிவந்து பார்க்க நல்லாவே இல்லை. பாவம். நேத்து இருந்து ஒன்னும் சாப்புட்டும் இருக்காது. தூக்கமும் இருந்துருக்காது. பாவம், இல்லே?


'பிள்ளை கையாலே கொள்ளீ வாங்கிக்க அவருக்கு நல்ல விதி இருந்துதானே இத்தனை வருசம் இல்லாம இப்பத் திடீர்னு வந்துசேர்ந்தார். அதுவும் எப்பேர்ப்பட்ட சாவு. கொடுத்துவச்சுருக்கணும்' னு சித்தி சொன்னாங்க.

'யார்கிட்டே அக்கா பேச்சுக் கேக்கும்? மாமியார் கிட்டேயா இல்லை மாமாகிட்டேயா?' அத்தையம்மா மட்டும் கிணத்தடியில் துவைக்கும் கல்லுமேலே உக்கார்ந்துக்கிட்டு எல்லாரையும் குளிக்க விரட்டிக்கிட்டு இருந்தாங்க. பெரிய அண்டாவுலே தண்ணி சேந்தி ஊத்திக்கிட்டு இருந்தாங்க ஒரு அம்மா. யாருன்னு எனக்குத் தெரியலை. புள்ளைங்க எல்லாம் சொம்புலே மொண்டு தலையிலே ஊத்திக்கிட்டு ஓடுச்சுங்க.

இதுக்குள்ளே ஆம்பளைங்க கூட்டம் திரும்பி வந்துட்டாங்க. அண்ணன் விடுவிடுன்னு கிணத்துக்கிட்டே போய் தானே நாலுவாளி தண்ணீர் சேந்தித் தலையில் ஊத்திக்கிச்சு. பையைக் கொண்டான்னதும் ராணி ஓடிப்போய்க் கொண்டுவந்து கொடுத்தாள்.

மாமாவைப் பார்த்ததும் அத்தையம்மா எழுந்து வந்தாங்க. 'இப்பவே திரும்பிப் போகறேன்றான்'னார். அதெப்படி? காரியம் முடியும்வரை இருக்கணுமுன்னாங்க அவுங்க. வந்தே இருக்கமாட்டேன். வரவே பிடிக்கலை. சித்தி வற்புத்தியதாலே வந்தேன். இவருக்கு இவ்வளோ செஞ்சதே அதிகம். என்னை வேற எதுக்கும் எதிர்பார்க்காதீங்க'ன்னு சொல்லிட்டாராம் அண்ணன்.

இதுக்குள்ளே அண்ணன் உடுப்பு மாத்திக்கிட்டு வந்தவர், அக்காகிட்டே வந்து போயிட்டுவரேன்னு சொல்லிட்டு நடந்தார். சாவு வீட்டுலேச் சொல்லிட்டுப் போகக்கூடாதுன்னாங்க அத்தையம்மா. தலையைத் திருப்பிப் பார்த்து 'தெரியும்'னு சொல்லிட்டு அண்ணன் போயிட்டார்.

அண்ணன் அங்கிருந்த மூணு மணி நேரத்துலே என்னை ஏறிட்டுக்கூடப் பார்க்கலை.

அக்காவைக் குளிக்கச் சொல்லிச் சித்தி கூட்டிட்டுப் போனாங்க. சின்னத் தள்ளாட்டத்தோட அக்கா, குளியலறைக்குள்ளே நுழையறதைப் பார்த்தப்ப எனக்கு மனசு என்னவோ போல வெறுமையா இருந்துச்சு. சாவு வீட்டுலேதான் சொல்லிட்டுப் போக வேணாமேன்னு ..................... நானும் கிளம்பிட்டேன்.


இதுதான் அக்காவை நான் கடைசியாப் பார்த்தது.

இனி தொடராது.............

என் உரை:
வர்ற வழியில் எல்லாம் என்னாலேதான் எல்லாருக்கும் தொந்திரவு. நான் பிறந்தே இருக்க வேணாம் அழுகையா வந்துச்சு. பஸ்ஸுலே ஏறிக் கொஞ்ச நேரம் ஆனபிறகுதான் முன்னாலே ட்ரைவருக்கு இடதுபக்கம் இருக்கும் ஸீட்டுலே, அண்ணன் தலையை ஜன்னல் கம்பியிலே சாய்ச்சுக்கிட்டுக் கண்ணை மூடி உக்கார்ந்து இருந்ததைக் கவனிச்சேன். சே..... தெரிஞ்சுருந்தா வேற வண்டியில் ஏறி இருக்கலாம்.
கொஞ்ச நேரம் அந்தப் பக்கம் பாராமல் வேற பக்கம் வேடிக்கை பார்த்துக்கிட்டே வந்தேன். என்னையும் மீறி அப்பப்பக் கண்ணு அங்கே போய்க்கிட்டு இருந்துச்சு. இன்னும் அதே தூக்கம்? எனக்குத்தான் துக்கமாத் தொண்டை அடைப்பு. சின்னப் புள்ளையா இருந்தப்ப எவ்வளவு அன்பா சிநேகமா இருந்தோம். அதெல்லாம் எங்கே போச்சு? 'தான் ஆடாட்டாலும் தன் சதை ஆடும்' னு ரத்த உறவுகளுக்குப் பழமொழியெல்லாம் சொல்லிவச்சுருக்கே அதெல்லாம் நெசந்தானா? உறவு, பாசம், சொந்தம் இப்படியான சொற்களுக்கெல்லாம் பொருளே இல்லாத ஒரு பெருவெளியில் நான் அப்படியே மிதந்து போறேனோ?

மெட்ராஸுக்கு ரயில் புடிக்க ஸ்டேஷனுக்குள்ளே போனப்பவும் அண்ணன் டிக்கெட்டு கவுண்ட்டர்கிட்டே நின்னுகிட்டு இருந்தார். அதே ரயிலுக்குத்தானே நானும் போகணும். அவர் நகர்ந்து போகட்டுமுன்னு இருந்துட்டு நானும் போய் டிக்கெட்டு வாங்கிக்கிட்டு வண்டி வந்ததும் லேடீஸ் பெட்டியிலே ஏறிட்டேன். அதுக்குப்பிறகு அவரையும் நான் பார்க்கவே இல்லை.

உண்மைக்கதைகளை எழுதும்போது மகிழ்ச்சியான முடிவுகள் பெரும்பாலும் வர்றதில்லை. இந்த முடிவு பிடிக்காதவங்களுக்காக ஒரு
கற்பனை முடிவையும் வச்சுக்கலாமா?

அழுவாச்சிக் காவியங்கள் பிடிக்காதவங்க...கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம். இதோ......இது உங்களுக்காகவே.
அப்பாவின் எரியூட்டலுக்குப் பிறகு அண்ணனும் மாமாவும் சேர்ந்துவந்து திண்ணைகிட்டே நின்னாங்க. கோவமா இருந்த அண்ணனுக்கு மாமாவும் அக்காவும் சமாதானம் செஞ்சு, என்னையும் ரெண்டு திட்டுத் திட்டி அண்ணன்கூடச் சமாதானமாப் போகச் சொன்னாங்க. அன்னிக்கு மாலையே கிளம்பி நானும் அண்ணனுமா மெட்ராஸ் வந்தோம். வழியெல்லாம் சின்ன வயசுலே நானும் அண்ணனும் செஞ்ச குறும்புகளையெல்லாம் ஒவ்வொன்னா நினைச்சு நினைச்சுப் பேசிக்கிட்டு இருந்தோம். நடுவில் எதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்னப்ப, அண்ணன் போய் சாப்பிட என்னவோ வாங்கிவந்தார். இருந்த கொலைப்பசியில் என்னன்னு தெரியாமலேயே முழுங்கி வச்சேன். 24 மணி நேரம் ஆகி இருந்துச்சு நான் கடைசியாச் சாப்புட்டு. அண்ணனும் அதேதானாம்.

மறுநாள் காலையில் செண்ட்ரல் வந்து இறங்குனோம். வாராவாரம் வீட்டுக்கு வரணுமுன்னு கண்டிப்பாச் சொல்லிட்டுச் சிரிச்சார். நானும் வராம எங்கே போறதுன்னு முணுமுணுத்துட்டு விடுதிக்குப் பஸ் பிடிக்கப் போயிட்டேன். அவரும் பாட்டி வீட்டுக்குப் போகும் பாசெஞ்சர் வண்டிக்கு போயிருப்பார்,

வாராவாரம் ஞாயித்துக்கிழமை அண்ணனைப் பார்க்கப் போகும் வழக்கம் வந்துச்சு. சித்தியும் சொன்னாங்க அண்ணனுக்குக் கலியாணம் செஞ்சு வச்சுறலாமுன்னு. ஒரு நல்ல இடத்துலே பொண்ணு அமைஞ்சது. கலியாணம் ஜோரா நடந்துச்சு. அக்கா, மாமா குழந்தைங்க எல்லோரும் வந்துருந்தாங்க. பொண்ணு வீடு காஞ்சீபுரம். எங்களுக்கெல்லாம் நல்ல பட்டுப்புடவைகள் எடுத்துக் கொடுத்தார் அண்ணன். அதுக்குப்பிறகு அண்ணனுக்குன்னு தனியா வீடு வாடகைக்குப் பார்த்து அண்ணனும் அண்ணியும் புதுக்குடித்தனத்தை ஆரம்பிச்சாங்க.

அண்ணிக்கு என் மேலே உயிர். ரொம்ப நட்பாப் பழகுனாங்க. எனக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டாப் பொறுப்பு விட்டுச்சு அண்ணன் நினைச்சார். கோபாலுக்கும் எனக்கும் திருமணம் ரொம்ப விமரிசையா நடந்துச்சு. பெரியக்கா குடும்பம் முழுசும் அத்தையம்மா, சித்தி எல்லோரும் வந்துருந்தாங்க. சித்தப்பாச்சித்தியும் வரணுமுன்னு அண்ணன்கிட்டே தயங்கித் தயங்கிக் கேட்டதுக்கு , சரின்னு அண்ணன் தலையாட்டுனார். அண்ணி வந்தபிறகு அண்ணன் கொஞ்சம் மாறித்தான் இருக்கார். பழைய மென்மையான சுபாவம் வந்துருக்கு. அண்ணியும் இப்போ கர்ப்பமா இருக்காங்க.

பெண் குழந்தை பிறந்துச்சு அண்ணிக்கு. நாங்க எல்லாரும் காஞ்சீபுரம் போனோம். குழந்தை அச்சு அசல் எங்க அம்மாவைப்போலவே இருந்தாள்.

போதுமா? இப்படிச் சொல்லிக்கிட்டேப் போகலாம். எல்லை ஏது?

அக்காவின் கூடவே வந்து வாசிச்சுப், பின்னூட்டி ஆதரவு கொடுத்த அன்புள்ளங்களுக்கு நன்றி.

Sunday, December 21, 2008

அக்கா ( பாகம் 14 )

அப்பா...... கடிதம் வந்தே ரெண்டு மாசம் ஆகி இருக்கு. என் பெயருக்கு வந்துருக்கு. ஆனாலும் அதை எல்லாரும் படிச்சுட்டாங்க(-: கர்நாடகாவில் ஒரு புண்ணிய க்ஷேத்திரத்தில் இருக்காராம். 'செஞ்ச பாவத்துக்குப் புண்ணியஸ்தலம் போனாலும் மோட்சம் கிடைக்காது'- இது பாட்டி. மறுநாளே சித்தப்பாச்சித்தி வீட்டுக்குப் போனேன். அண்ணனின் கையெழுத்தைப் பார்த்தே சித்தப்பாவுக்குக் கண்களில் வெள்ளம். அண்ணனும் தம்பியும் அப்படி ஒரு ஒட்டுதல். அதனால்தான் அக்காதங்கையாவே பார்த்துக் கலியாணம் கட்டுனாங்களாம்.

எப்பப் பார்த்தாலும் பாட்டிவீட்டுலே இவரைக் கரிச்சுக் கொட்டுறாங்களே. அந்தக் குடும்பமே அப்படின்னு....... இவர் என்ன தன் குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சு போயிட்டாரா? என்னதான் ஒரு தாய் வயித்துப் பிள்ளைகள் என்றாலும் குணம் ஒன்னுபோலவா இருக்கு? நாங்க அக்காதங்கை மூவரும்............. ஒருத்தர் சிதம்பரம், ஒருத்தர் மதுரை. நான்...?

திருச்செங்கோடு:-)

போய்ப் பார்க்கலாமான்னு ஆசையா இருக்கு. சித்தப்பாவுக்கும் அப்படித்தான். ஆனா பயணம் போகும் அளவு உடல்நலம் இல்லை. அந்த அண்ணன், நான் வரேன். ரெயில்வே பாஸ் இருக்கேன்னார். கிளம்பி வர்றோமுன்னு பதில் கடிதம் எல்லாம் போடலை. சொல்லிட்டுப் போனா அதுலேயும் ஆபத்து இருக்கு. கம்பி நீட்டிட்டாருன்னா?

(அங்கே போய் அவரைச் சந்திச்சது, விடாப்பிடியாக் கையோடு கூட்டிவந்தது, சித்தப்பா வீட்டுலே நேராப்போய் இறங்குனதுன்னு எல்லாம் அப்புறம் கதைகளில் வேணுமுன்னாச் சொல்லலாம். இப்ப நம்ம கதை நாயகி 'அக்கா' என்றதை ஞாபகப்படுத்திக்க வேண்டி இருக்கு அடிக்கடி.)

சித்தப்பா வீட்டுக்குச் சரியா எதிர்ப்பக்கம் வீடு வாடகைக்குக் கிடைச்சது எனக்கு நல்லகாலம். நானும் அப்பாவுமா அங்கே இருந்தோம். (பேசாமச் சித்தப்பாகூடவே இருந்துருக்கலாம்) அண்ணனும் தம்பியுமா இங்கே இல்லேன்னா, அங்கேன்னு உக்காந்து பேசிக்கிட்டே இருப்பாங்க. வாக்கிங் போறோமுன்னு போய் டீக்கடையில் சாயா, சிகெரெட்,பீடி. சித்தப்பா பீடி என்றதால் அப்பாவும் அப்பப்பப் பீடி. எனக்கு எரிச்சலா இருந்தாலும் போகட்டும் ஒன்னும் சொல்லவேணாம். வேதாளம் முருக்கை மரத்துலே ஏறிடப்போகுதேன்னு இருந்தேன். அதுவுமில்லாம காலையில் கிளம்பிப் போயிட்டு மாலையில் வீடுவரவே ஏழு ஏழரை ஆயிரும். வந்துட்டு ஒரு சோறு மட்டும் வடிப்பேன். குழம்பு பொரியல் எல்லாம் எதுத்த வீடு. அப்பாவுக்குப் பகல் சாப்பாடு சித்தப்பா கூடவே .

ஆடுனகாலு மட்டுமா சும்மா இருக்காது? ஓடுன காலும்தான். எண்ணி ரெண்டே மாசம். பேசறதெல்லாம் பேசி முடிச்சுட்டாங்க போல. பெரியக்கா வீட்டுக்குப் போகணுமுன்னு சொல்ல ஆரம்பிச்சார். அண்ணனைப் பார்க்கணுமுன்னு ஆசையா இருக்குன்னார். எனக்குப்போய் அண்ணன்கிட்டே சொல்ல தயக்கமா இருந்துச்சு. ஆனாலும் சரின்னு பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பாட்டி வீட்டுக்குப் போனேன். வாசத் திண்ணையிலே பாட்டி உக்காந்து பூ கட்டிக்கிட்டு இருந்தாங்க. 'உங்க அண்ணன் பார்த்தா வெட்டிப் போடுவான். உசுரோட திரும்பி ஓடு'ன்னாங்க. 'சம்பாதிக்கிற திமிர். அசிங்கம் வேணான்னு நாங்க ஒதுங்கி இருக்கோம். (நம்ம கதைகள் எல்லாம் தெரிஞ்சுதான் இருக்கு போல.) இப்பத்தான் அவன் நிம்மதியா தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பிக்க நினைக்கிறான். இப்பப்போய் அப்பா, கிப்பான்னு வந்தா செருப்புப் பிஞ்சுரும்.......'.

வெளியே போன அண்ணன் அப்பத் தான் திரும்பி வந்தவர், என் பக்கம்கூடத் திரும்பாம செருப்பை வாசலில் உதறிப்போட்டுட்டு வீட்டுக்குள்ளே போய் கதவை அடிச்சுச் சாத்துனார். கோவமா நிக்கிறேன்னு பேருதானே ஒழிய , என் கண்ணுலே கரகரன்னு கண்ணீர் பொங்குது. நின்ன இடத்துலேயே ஆணிஅடிச்சாப்புலே நின்னேன். அஞ்சே நிமிசம். கண்ணைத் துடைச்சுக்கிட்டு விறுவிறுன்னு 'என் வீட்டுக்கு' வந்தேன். யார்கிட்டேயும் ஒன்னும் சொல்லலை. காலையில் , 'அக்கா வீட்டுக்குப்போய்ப் பார்த்துட்டு வரேன்'னு ஆரம்பிச்சார் அப்பா. எனக்கிருந்த ஆத்திரத்துலே, கைப்பையைத் திறந்து 'இந்தாங்க டிக்கெட்டுக்குக் காசு' ன்னு எடுத்து ஜன்னல் கட்டையில் வச்சுட்டு வேலைக்குக் கிளம்பிப் போயிட்டேன். வழக்கமா அண்ணன் கூடத்தான் போறது. நான் வேகமாப் போறதைப் பார்த்துட்டு, அவரும் பாதிச் சாப்பாட்டுலே எந்திருச்சுச் சட்டையை மாட்டிக்கிட்டு, ஓடோடிவந்து 'எக்ஸ்ப்ரெஸ் கெட்டது போ' ன்னு என்னைப் பிடிச்சார். ரெயில்வேக்காரனுக்கு ரயிலை விட்டா வேற உதாரணம்கூட வராது போல.

'பெரியப்பாவைக் குற்றம் சொல்ல முடியாது. அவர் வழி அப்படி. கொஞ்சநாள் அக்கா வீட்டுக்குப் போயிட்டுத்தான் வரட்டுமே' ன்னதும்தான் அக்காவுக்கு இவர் வரப்போறதைச் சொல்லணுமேன்னப்ப, . அண்ணந்தான் கார்டு போட்டுருன்னுச்சு. வேலைக்குப் போனதும் அங்கிருந்து. 'இதுபோல அப்பா இங்கே எங்கூட இருக்கார். உங்களையெல்லாம் பார்க்கணுமாம். வருவார்'னு ரெண்டு வரி எழுதிப்போட்டேன். சாயங்காலம் வீட்டுக்கு வந்தா, பையைத் தூக்கிக்கிட்டு அண்ணனும் தம்பியுமா தயாரா இருக்காங்க. இன்னிக்கே போறாராம். நானும் அண்ணனுமா கூடவே போய் ரயிலேத்திட்டு வந்தோம்.
இன்னிக்கு நடந்த நடையிலே...... மனசும் உடம்பும் தளர்ந்து போயிருந்துச்சு.
சித்திதான் வெறும் வயித்துலே படுக்கக்கூடாதுன்னு தொந்திரவு செஞ்சு சோத்தை போட்டாங்க. என் லெட்டர் போய்ச் சேர ரெண்டு நாளாகுமே, அதுக்குள்ளே திடீர்னு போகணுமுன்னா எப்படின்னதுக்கு, அண்ணனும் தம்பியுமா மத்தியானம் தபாலாபீஸ்லே போய் 'அப்பா வந்துக்கிட்டு இருக்காரு'ன்னு தந்தி கொடுத்தாங்களாம். நல்ல விவரம்தான்.....
ஆனா..... தந்தின்னதும் அக்கா பயப்படாம இருக்கணும்.

ஒரு நாலைஞ்சு நாளுலே, அப்பா, நுணுக்கி நுணுக்கி ஒரு கார்டுலே நிறைய எழுதி அனுப்புனார். எல்லாரும் நல்லா இருக்காங்களாம். மாமா ரொம்பத் தங்கமானவராம். (இவர் மகளோட கல்யாணத்துக்கூட வராமப் போனவர், இப்போ ஏழு பிள்ளைங்க பிறந்தபிறகு முதல்முறையா மருமகப்பிள்ளையைத் தங்கமா பித்தளையான்னு உரைச்சுப் பார்க்கறார்) ரொம்பப் பிரியமா இருக்காங்களாம். கொஞ்சநாள் அங்கேதான் இருக்கணுமுன்னு மாமா வற்புறுத்திச் சொல்றாராம். என் கவலைதான் அவருக்கு இப்போ இருக்காம். கொஞ்ச நாளுன்னா எவ்வளோ நாள்? எனக்கும் அதுதான் கவலையா இருக்கு.

சித்திதான் சொன்னாங்க, 'எதுக்காக வீட்டை அனாவசியமா வாடகைக்கு எடுத்தே? பேசாம இங்கேயே இருந்துருக்கலாம்.' அதுவும் சரியாத்தான் இருந்துச்சு. வீட்டைக் காலி செஞ்சு எதிர்வீட்டுக்கே போயிட்டேன். ஒன்னும் சரிவராத மாதிரி இருக்கு. குடும்பம் என்றதே குழப்பமோன்னு ஒரு பயம். திரும்ப விடுதிக்கே போயிறலாமான்னு இருந்துச்சு. என்னுடைய அதிர்ஷ்டம், பழைய அறையிலேயே இடம் காலியா இருக்குன்னு தெரிஞ்சதும் அங்கே போயிட்டேன். சித்தப்பாச்சித்திக்கு மன வருத்தம்தான். ஆனா புரிஞ்சுக்கிட்டாங்க. வாராவாரம் வந்துட்டுப் போகணுமுன்னு சொல்லிட்டுச் சித்தி அழுதாங்க. இந்தச் சித்திக்கு இது ஒரு பழக்கம். ஆன்னா ஊன்னா அழுதுருவாங்க. நானும் சின்னப் பிள்ளையா இருந்தப்ப, (அம்மா இருந்த காலத்துலே) அம்மாவோ,அக்காங்களோ எதாவது சொன்னவுடனே அழுது ஆகாத்தியம் பண்ணுவேன். நீலிக்குக் கண்ணீர் நெத்தியிலேன்னுவாங்க எங்கம்மா. பாவம் இந்தச் சித்தியும். சொந்தம் பந்தம் இவ்வளவு இருந்தும் மூத்தார் செய்கைக்கு இவுங்க குடும்பத்துக்குத் தண்டனை.

ஒரு சமயம் அங்கே போனப்ப, பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு விவரம் கிடைச்சது. ஆஸ்பத்திரியில் இல்லையாம். வீட்டுக்கு அனுப்பிட்டாங்களாம். சித்திக்கும் ரொம்ப ஆசையா இருக்காம் போய்ப் பார்க்க. ஆனா அங்கே பேயாட்டம் ஆடுவாங்கன்ற பயம்தான். 'தலையைச் சீவிடுவாங்களா?'ன்னு கேட்டாள் சித்தி பொண்ணு. 'சீவுனா பரவாயில்லை. பேச்சுக் கேக்க முடியாது'ன்னேன். அடுத்தவாரம் வரேன். போய்ப் பார்க்கலாமுன்னு சொன்னேன். எண்ணி நாலாவது நாள், வேலையில் இருக்கும்போது அண்ணன், ஃபோன் செஞ்சு, இதுமாதிரி பாட்டி இறந்துட்டாங்க. இன்னிக்கே எடுக்கப்போறாங்க. நான் லீவு போட்டுட்டேன். நீயும் வர்றதா இருந்தா வா'ன்னார். கிளம்பிப்போனோம். போற வழியில்தான் எப்படி உனக்குத் தெரியும்? யார் சொன்னான்னதுக்கு, சித்தப்பா காலையில் மருந்து வாங்க மெடிக்கல்ஸ்க்கு போனப்ப, அங்கே யாரோ சொன்னாங்களாம். அதுக்குள்ளே அண்ணன் கிளம்பி வேலைக்குப் போயிட்டாருன்னதும், பேங்க் மேனேஜர் வீட்டுலே போய் ( சித்தியும் அந்தம்மாவும் சத் சங்கம் பஜனைன்னு சிநேகிதம். சித்தி நல்லோணம் மலையாளம் சம்சாரிக்குன்னதாணு காரணம்) மகனுக்கு போன் போட்டுச் சொல்லி இருக்காங்க..

பாட்டி வீட்டு வாசலில் நல்ல கூட்டம். அந்த ஊர்லே முக்காவாசிப் பசங்களுக்குப் பாட்டிதான் முதல்வகுப்பு டீச்சர்ன்னு மரியாதை கூடுதல் நல்ல நாளுலேயே கல்யாணம், காது குத்து, குழந்தை பொறந்துருக்குன்னு ஆளுங்க வந்து பத்திரிக்கை வச்சு அழைக்கிறது உண்டு. நானும், சித்தப்பாச்சித்தி குடும்பமும் வாசல்கூட்டத்துலேயே ஓரமா நின்னுக்கிட்டு இருந்தோம். சொந்தக்காரங்க கூட்டம் எக்கச்சக்கம். யாரும் எங்களைச் சட்டையே செய்யலை. சாங்கியம் செய்யும்போது 'பேரப்புள்ளைங்க எல்லாம் நெய்ப்பந்தம் பிடிக்க வாங்க'ன்னாங்க. போறதா வேணாமான்னு தயக்கம். அதுக்குள்ளே மத்தவங்க எல்லாம் சுத்தி முடிச்சாங்க. இன்னும் யார் இருக்கான்னு அவுங்க கேட்டுக்கிட்டு இருக்கறப்பவே.... 'அவ்வளவுதான் எல்லாரும் ஆச்சு' ன்னு அண்ணன் சொல்லிட்டார். சாவு எடுத்துட்டாங்க. சாவு வீட்டுலே சொல்லிக்கிட்டுப் போற வழக்கம் இல்லைன்றது நல்லதாப் போச்சு.

எங்களுக்கு இருந்த உரிமையைக்கூட நிலைநாட்டிக்க முடியலைன்னு நானும் சித்தப்பாசித்தி பசங்களும் குமுறிக்கிட்டே வீட்டுக்கு வந்தோம். போனாப் போகுது. அந்தவரைக் கடைசியா முகம் பார்த்தோமே அது போதுமுன்னு சித்தி சொன்னாங்க. சாவு சமாச்சாரம் அக்காவுக்குப் போயிருக்குமா? மாமாவாவது ஓடிவந்துருப்பாரே. அவர் வந்துருந்தா நம்மை இப்படி ஓரங்கட்டி இருக்கமாட்டார். சொன்னாங்களா இல்லையான்னு எனக்கு மண்டைக் குடைச்சல்.


தொடரும்......................

Friday, December 19, 2008

அக்கா ( பாகம் 13 )

ஒயிட் & ஒயிட் போட்டுக்கிட்டுத் தங்க ஃப்ரேம் மூக்குக் கண்ணாடி, கையில் சதா புகையும் சிகெரெட், எல்லாரையும் 'என் ரேஞ்சே தனி, நீங்க எல்லாரும் புல்'லுன்னு பார்க்கும் ஒரு அகம்பாவமான பார்வையில் ஒருத்தர் இருந்தாருன்னா அது இந்த பிரகஸ்பதின்னு ( எங்க ரெண்டாவது சித்தியோட புருஷன்) கண்ணை மூடிக்கிட்டுச் சொல்லிறலாம். அந்த ஆளை ஒரு மகான் ரேஞ்சுக்குக் கொண்டுவச்சுக்கிட்டுப் பாட்டியும் மத்த சித்திகளும் ஆலோசனை கேப்பாங்க. ஆனா... அந்த ஆள் சரியில்லை. எனக்கென்னன்னா...இதைப் பத்தி நல்லாத் தெரிஞ்சுக்கிட்டும்கூட குடும்பம், அவரை ஏன் உச்சாணிக்கொம்புலே வச்சு ஆடுதுன்றதுதான்.

பெரியதனக்காரர்போல வீட்டுப் பின்பக்கத்து கிணத்தடிக்கிட்டே ஈஸிச்சேர்லே சாய்ஞ்சுக்கிட்டு அம்பது சிகெரெட் வரும் வட்ட டப்பாவைப் பக்கத்து ஸ்டூலில் வச்சுக்கிட்டு ஒன்னு மாத்தி ஒன்னுன்னு ஊதித்தள்ளிக்கிட்டு வானத்தைப் பார்த்துக்கிட்டு இருப்பார். பெரிய சிந்தனாவாதி. சித்தி போய் பவ்யமா.... அவர்கிட்டே யோசனை கேக்கப் பாட்டியோ இல்லை குடும்ப அங்கங்களில் ஓன்னோ வந்துருக்குன்னதும் ரொம்பப் பெரியமனசு பண்ணி வரச்சொல்லுன்றதும், இவுங்க போய் அந்த ஸ்டூலில் அடக்க ஒடுக்கமா உக்கார்ந்து அவர்கிட்டே பேசறதும் ஒரு கேலிக் கூத்தாத்தான் எனக்குப் பட்டுச்சு. எப்பவும் தனித்தனியாத்தான் கூப்புட்டுப் பேசுவார். எல்லாரையும் ஒன்னாக் கூப்புட்டுவச்சுப் பேசுனா என்ன? பொம்பளைங்களைத்தான் மூளைச்சலவை செஞ்சு வச்சுருக்கார் போல. இவரோட பிள்ளைகளுக்கும் இவர் பவிஷூ எல்லாம் தெரிஞ்சுதான் இருக்கு. ஆனா அவுங்க எல்லாருக்கும் இவர் சிம்ம சொப்பனம். அப்படி ஒரு தோற்றத்தைத் தன்னைச்சுத்தி உருவாக்கிக்கிட்ட கில்லாடி. எங்க தாய்மாமனுங்க யாருக்கும் இவரைப் பிடிக்காது.

இந்த மாமனுங்க, வீட்டுக்கு லட்சணமாப் பொறுப்பை ஏத்துக்கிட்டு இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும். ஒன்னும் உருப்படலை. தாத்தா சொந்தமாக் கம்பெனி வச்சுச் செல்வாக்கா இருந்து, பிள்ளைகளுக்கு ஒரு குறைவுமில்லாமப் நாலுதலைமுறைக்கு வருமளவுச் சொத்து சேர்த்து வச்சுருந்தார். அவர் இறந்ததும் கிடைச்சதையெல்லாம் பங்கு போட்டுக்கிட்டுத் தாந்தோணித்தனமா ஆடுனது என்ன............ அவுங்கவுங்க தன்னோட குடும்பத்து க்ஷேமத்தை மட்டும் மனசுலே வச்சிக்கிட்டு, எங்க பாட்டியின் பாஷையில் சொன்னால் 'பெண்டாட்டிக்கு மணைக் கட்டையா' ஆகிக் கிடந்தாங்களே. ஒரே ஒரு மாமா மட்டும் நியாயவானா இருந்தார். அதனாலேயே என்னமோ சீக்கிரம் சாமிகிட்டே போயிட்டார். அவருக்குப் பிள்ளைங்க இல்லாததால் அவர் பங்கையும் அழிச்ச பெருமை மிச்சம்மீதி இருந்த தம்பிகளுக்குத்தான்.

என்னவோ இருக்கு என்னன்னுதான் தெரியலை.
குடும்பங்களுக்குள் ரகசியங்கள் பதுங்கிக் கிடக்கின்றன என்றது மட்டும் புரிஞ்சுபோச்சு.

எவ்வளவுக்கெவ்வளவு எனக்கு இவரைப் பிடிக்காதோ அவ்வளவுக்கவ்வளவு 'எங்க சித்தப்பாசித்தி'யை எனக்குப் பிடிச்சிருந்துச்சு. நல்லவங்களுக்குக் காலம் இல்லை என்றது உண்மைதான்.

அக்காவைப் பத்திச் சொல்லும்போது அங்கங்கெ அலைபாய்ஞ்சுக்கிட்டுப் போறேன் பாருங்க. நல்லவேளையா என்னை மேலே படிக்க வச்சது எல்லாம் விவரமா அப்புறம் 'என் கதை'களில் சொல்றேன். விடுதியில் இருந்தப்ப, எங்க சித்தப்பாச்சித்தி குடும்பத்தோடு எப்பவாவது பார்க்க வருவாங்க. அப்படித்தான் ஒரு சமயம் வந்தப்ப , அவுங்க பொண்ணு நிறைய நகையோடு வந்துச்சு. சித்தியும் நல்ல பட்டுப் புடவையில். சித்தப்பா உடம்பு சுகமில்லைன்னு வேலையை விட்டுட்டாராம். அப்போ கிடைச்சப் பணத்துலேதான் இந்த நகைநட்டு எல்லாம். அந்த அண்ணனுக்கு வேலை கிடைச்சுருச்சாம், அதே ரெயில்வேஸ்லே. இந்தக் குடும்பம் பூராவும் ரெயில்வேஸ் வேலைதான் எங்க அப்பா உள்பட.

ரெண்டு மூணுவருசமா நான் அக்கா வீட்டுக்குப் போகவே இல்லை. என் உலகமே இப்ப வேற. பாட்டி வீட்டுக்குப் போனாலும் எதுலேயும் பட்டுக்காம இருக்க ஆரம்பிச்சேன். இப்பச் சித்தப்பாச்சித்தி, ஒரு நல்ல வீட்டுக்குக் குடிபோயிட்டாங்க. எனக்குத் தோணும்போது அவுங்க வீட்டுக்குப் போயிட்டு வருவேன். 'இவ அடங்கமாட்டா. திட்டித்திட்டி நம்ம வாய்தான் வலிக்குது'ன்னு முணங்கிட்டு, எனக்குத் தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க.


அக்காமாமாவுக்கும் நாப்பது வயசுக்கு மேலே ஆயிருச்சே. வாழ்க்கை பூராவும் விளையாடணுமுன்னு உடற்பயிற்சி வாத்தியாரா இருந்தவருக்கு ரத்தக்கொதிப்பு, அது இதுன்னு வர ஆரம்பிச்சதும் ஒரு வருசம் லீவு எடுத்துக்கிட்டு, பி.டி. படிக்க ஆசிரியர் பயிற்சியிலே சேர்ந்துட்டார். அங்கே மாமாவின் அக்காவின் கணவர் இறந்ததும் அவுங்களும் அவுங்க பங்குக்குக் கிடைச்ச சொத்துக்களோடு தம்பி வீட்டோடு வந்துட்டாங்க. துணைக்கு அவுங்களும் இருக்காங்க. ஒரு வருசம் இதோ முடிஞ்சுருமுன்னு எடுத்த முடிவுதான்.

அக்காவுக்கு ஆறாவது பொறந்துச்சு. பையன். இதுக்குள்ளே மூத்தவனைச் செல்லம் கொடுத்துக் கெடுத்துவச்சுருந்தாங்க அவன் பாட்டி. எதுக்கெடுத்தாலும் அடாவடி, பிடிவாதமுன்னு வளர்ந்துருந்தான். நாலாம் வருசம் நான் போனப்ப, ஏழாவதும் பொறந்து நாலு மாசம். 'ஏழை ஆசிரியனுக்கு ஏழு பிள்ளைகளா' ன்னு மாமாவைக் கேட்டேன். ஒரு ரைம்ஸ்க்குத்தான் ஏழு, ஏழைன்னு சொன்னேனே தவிர, வீட்டில் பண நடமாட்டம் பளிச்சுன்னு தெரியுது. பழைய திண்ணை இருந்த இடத்தையும், ஹால் வீட்டுலே பாதியையும் விட்டுட்டு, அந்தப் பக்கமாச் செங்கல் சுவர் எடுத்துப் புது வீட்டைக் கட்டியிருந்தாங்க. பத்து செண்ட் பூமியாச்சே. முக்கால்வாசி இடத்தையும் நல்லா வளைச்சுப்போட்டுக் கட்டுனதுதான். அங்கேயும் நடுவுலே கூடம் பெருசா வச்சு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமா ரெவ்வெண்டு அறை. கரண்டு வந்துருச்சு. தரையெல்லாம் சிமெண்ட்ப் பூச்சுப் பளபளக்குது. கிணத்துப் பக்கம் இருந்த குளியலறைக்குக் கதவு வந்துருச்சு. அதுக்கு எதுத்தாப்போல ஒரு கழிப்பறை. கிணத்தடி மேடையும் விஸ்தாரமாப் பெருசாப் பண்ணி சிமெண்டு போட்டுருக்கு. அந்திமந்தாரை, டிசம்பர் பூச் செடிகள் மண்டிக்கிடக்குது. கனகாம்பரம், ரோஜாச் செடிகள் கொஞ்சம் வந்துருக்கு. அக்காவின் நாத்தனார் ஏற்பாடு. தினம் தண்ணி ஊத்தறதெல்லாம் பொண்ணுங்க வேலையாம்.

சோளக் காட்டுக்கிடையில் குறுக்காலே ஒரு ரோடு வந்துருக்கு. பைபாஸ் ரோடாம். லாரி, பஸ்ஸுன்னு போய்க்கிட்டு இருக்கு. எட்டிமரம் இருந்த சுவட்டையே காணோம். கணேஷ் சாரும் பாலாக்காவும் வேற ஊருக்கு மாத்திப் போயிட்டாங்களாம். அந்த வீட்டுக்கு இப்போ புது பி.டி. மாஸ்டர் வந்துட்டார். ஒண்டிக் கட்டை. அன்னு அண்ணன் அம்மா இறந்துட்டாங்க.
எபிநேசர் சாரோட மூத்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் கலியாணம் கட்டிக் கொடுத்தாச்சு. மூணாவதுக்குப் பார்த்துக்கிட்டு இருக்காங்களாம். அவுங்க உள்ளூர் ஆரம்பப் பாடசாலையில் டீச்சர். ரேணு அவுங்க வகுப்பாம்.


மாமா, இப்ப அதே பள்ளிக்கூடத்துக்கு உதவித்தலைமை ஆசிரியர். சர்வீஸ் இருக்கே. சீனியாரிட்டிப்படி கிடைச்சுருச்சாம். அடுத்தவருசம் தலைமை ஆசிரியர் ஓய்வு பெறுவதால் இவருக்கு அந்த இடம் கிடைக்குமாம். அரசாங்கத் தேர்வு விடைத்தாள் திருத்துவது இன்னும் கூடுதலான உபரி வருமானத்துக்கு வழி செஞ்சுருக்கு. எப்பவும் கணக்குப் பேப்பர்தான் திருந்துவார். இந்த வருசம் நான் கூடவே உதவி செஞ்சேன்.

ராணி அழகாப் பெரியவளா வளர்ந்து இருந்தாள். அசப்புலே எங்க அம்மாவேதான். அதே கண்ணு. தரணி கொஞ்சம் எங்க சின்னக்கா மாதிரி.
மத்த புள்ளைங்க எல்லாம் அப்படியே அத்தையம்மாதான். இப்ப எல்லாம் தினமும் இவுங்க யாரும் கடைக்குப் போறதில்லையாம். பசங்களுக்குப் படிக்கவே நேரமில்லாமப் போகுது. மாமா மட்டும் தினம் மாலையில் போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு அங்கேயே சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வந்துருவாராம். இவருக்கும் மறுநாளைக்கு எடுக்க வேண்டிய பாடங்களுக்கு நோட்ஸ் ஆஃப் லெஸன் அது இதுன்னு பள்ளிக்கூட வேலைகள் கூடியிருக்காம்.

பெரியவன், பாட்டிகூடயே இருக்கானாம். கடையில் இப்ப வியாபாரம் ஓஹோன்னு நடக்குது. இன்னும் நாலைஞ்சு ஆட்களை வேலைக்கு வச்சுருக்காங்களாம். அத்தையம்மாவுக்குத்தான் உடல்நலம் கொஞ்சம் குறைஞ்சுபோச்சு. போதும்மா, கடையை வித்துறலாமுன்னா............ அத்தையம்மா ஒரு ஆறுமாசம் போகட்டுமுன்னு இருக்காங்களாம். அந்தம்மா ரொம்ப சுதந்திரமான வாழ்க்கைக்குப் பழகுனவுங்க. மகன் வீடா இருந்தாலும் சரிப்படாது. உழைக்க அஞ்சமாட்டாங்க. அவுங்க சேர்த்து வச்சுருக்கும் காசுபணமெல்லாம் சொந்த சம்பாத்தியம். எல்லாம் பெரிய பேரனுக்குத்தான்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதான் அவனும் மிதப்புலே இருக்கான். சித்தி இங்கே நம்மகூடத்தான் இருக்காங்க. வீட்டுக்கானச் சமையலை ரெண்டு பேருமாச் சேர்ந்து ஒருமாதிரி செஞ்சுக்கறோமுன்னு அக்கா சொல்லுச்சு.

சமையல்கட்டு, இன்னும் பழையதிண்ணைப் பகுதியில்தான். அக்காவுக்கு அந்தத் திண்ணையைவிட மனசில்லே.

இதுக்குள்ளே எனக்கும் வேலை கிடைச்சு, வேலை செய்யும் மகளிர் விடுதிக்குப் போயிட்டேன். எப்பவாவது வீட்டுக்குப் போனால் அதிசயம். அப்படி ஒருசமயம் போனப்ப, ஒரு தபால் கார்டை எடுத்து என் முன்னே வீசிப் போட்டார் அண்ணன்.

தொடரும்....

Tuesday, December 16, 2008

அக்கா ( பகுதி 12 )

அக்காவுக்கு வீட்டில் சமையல் வேலையே இல்லாமப் போச்சு. ஸ்டாப் ,ஸ்டாப்...... நாந்தான் சமையல் செஞ்சேன்னு கற்பனை செஞ்சுக்காதீங்க. அத்தையம்மா ( அக்காவோட மாமியார்) கடையில் இருந்து காலையிலே பெரிய தூக்கில் காஃபி வந்துரும். மாமாவோட கஸின் இருந்தாருல்லே. அவர் சைக்கிளில் கொண்டுவந்து தருவார். ஒரு மணி நேரம் கழிச்சுச் சுடச்சுட இட்லி, தோசை, இடியாப்பம் இப்படி ஏதாவது எடுத்துக்கிட்டு வருவார். காலை உணவு கொடுத்துப் பிள்ளைங்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டால் போதும். ரேணு மட்டும் இன்னும் பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கலை. அடுத்தவருசம் போடலாமுன்னு அக்கா சொல்லுச்சு.

பலகாரம் கொண்டுவந்து கொடுத்துட்டு, ரேணுவைச் சைக்கிளில் வச்சுக்கிட்டுக் கடைக்குப் போயிடுவார் அப்புறம் அக்கா குளிச்சுமுடிச்சுக் கைக்குழந்தையைத் தூக்கிக்கிட்டுக் கடைக்குப் போயிரும். பகல் சாப்பாட்டுக்கு எல்லாரும் கடைக்கே வந்துருவாங்க. பசங்க பள்ளிக்கூடம் பக்கத்துலேதான். மாமாவுக்குத்தான் கொஞ்சம் தூரம். சாயங்காலம் எல்லாருமா அங்கே கூடி இருந்து சாப்பாடெல்லாம் ஆனதும் எட்டு எட்டரைக்குக் கிளம்பி வீடு வந்து சேருவோம். தினம் பிக்னிக் மாதிரி இதென்னடான்னு இருந்துச்சு எனக்கு. ஹோட்டலில் சாப்புட்டா ஜாலின்னு நினைச்சு, மூணுவேளையும் ஹோட்டலிலேயே சாப்புட்டா..........


ராத்திரியில் புள்ளைங்களைதான் இம்மாந்தூரம் இழுத்துக்கிட்டு வரக் கஷ்டமாயிரும். சிலநாள் அதுங்க அங்கேயே தூங்கிரும். சில சமயம் குதிரைவண்டி கிடைச்சா அதுலே வருவோம். வண்டிக்கார பாய் நம்ம பேட்டை ஆள். குதிரைதான் ரொம்ப சொண்டியா இருக்கும். அதெல்லாம் ஒன்னும் ஆகாது. ஏறி உக்காருங்க ரெண்டுபேருமுன்னு பாய் சொன்னாலும் எனக்கு என்னவோ பாவமா இருக்கும். அதுலே போறதுக்கு நடந்தே போகலாமுன்னு அக்காவும் கேலி பண்ணும். அவ்வளோ வேகமான குதிரை:-)

தினம்தினம் இப்படிப்போய் வர்றது தொல்லையா இருக்குமேன்னதுக்கு, 'அதுக்கென்னா பண்ணறது? கஷ்டத்தைத் தாங்கிக்கத்தான் வேணும். தினம் பேரனைப் பார்க்கணுமுன்னுதான் அத்தை இந்த ஊருக்கே வந்துட்டாங்க. இங்கே கடையும் நல்லாப் போகுது. சாப்பாடு அது இதுன்னு எல்லாச் செலவும் அங்கேயே முடிஞ்சுருது பாரு. இல்லேன்னா உங்க மாமா சம்பாத்தியத்துலே அஞ்சு புள்ளைங்களைக் காப்பாத்துறது எப்படி? அதான் நான் ஒன்னும் சொல்லலை'ன்னுச்சு. 'கொஞ்சம் காசு சேர்த்துக்கிட்டு, வீட்டை இடிச்சுக் கல்லுவீடாக் கட்டிக்கலாமுன்னு சொல்றார். பொண்ணுங்களும் வளருதுங்க. இந்தப் பக்கம் எல்லாம் கரண்டு வரப்போகுதுன்னு பேச்சு. அப்படியே நம்ம வீட்டுக்கும் லைட் போட்டுக்கிட்டா நல்லா இருக்கும்.' தனக்கு எது விருப்பமுன்னு சொல்லாம இவுங்க இழுப்புக்கெல்லாம் ஆடற அக்காவைப் பார்த்து லேசா எரிச்சலா இருந்துச்சு எனக்கு.

வீட்டுக்கு வர்ற வழியிலேதான் சினிமாக் கொட்டகை. படத்துலே வர்ற பாட்டு, வசனமுன்னு நல்லாக் கேக்கும். கேட்டுக்கிட்டே நடக்கறதுதான்.
இந்த வழக்கம் ஆரம்பிச்சப்ப ரெண்டு மூணு சினிமாவைப் பார்க்கமுடியாமப் போயிருச்சாம். அக்காவோட கூட்டு இல்லாம மதீனாக்காவும் சினிமா இல்லாம நொந்து போயிருக்கு. ரெண்டுபேருமாச் சேர்ந்து இப்ப ஒரு வழி கண்டுபுடிச்சுட்டாங்க. என்னைக்குப் போகணுமுன்னு காலையிலேயே கிளம்பும்போது சொல்லி வச்சுக்கிட்டு, கடையில் இருந்து கொஞ்சம் லேட்டாக் கிளம்பி வருவாங்களாம். புள்ளைங்க எல்லாம் குதிரை வண்டியிலே. மாமாவும் அக்காவும் பேசிக்கிட்டே நடந்து வர்றது. சினிமாக் கொட்டாய்கிட்டே, கொழுந்தனார், இல்லேன்னா வீட்டுக்காரர் துணையோடு வந்து காத்துக்கிட்டு இருக்கும் மதீனா அக்கா. அவுங்களைப் படம் பார்க்க அனுப்பிட்டு, ஆம்பளைங்க பேசிக்கிட்டே வீட்டுக்கு வந்துருவாங்க. படம் விடுற நேரத்துக்கு யாராவது போய்க் கூட்டி வர்றது. இதுலே மட்டும் யாருக்கும் சோம்பலே இல்லை.

இந்த சினிமா மட்டுமில்லை, அக்கா மிஸ் செய்யறது அந்த லேடீஸ் க்ளப் மீட்டிங்ஸையும்தான். முந்தியெல்லாம் காலை வேலை முடிஞ்சு பிள்ளைங்களைப் பள்ளிக்கூடம் அனுப்பிட்டு, இட்லி அவிச்ச அதே அடுப்பில் சோத்தையும் பொங்கி வடிச்சுரும். அப்புறம் பருப்பை வேகப் போட்டுட்டுத் தண்ணி எடுக்கப் போகும் பாருங்க, அம்புட்டுத்தான். அதுவும் கைக்குழந்தைத் தூங்கிக்கிட்டு இருந்தால் பரம சுகம். அங்கே பேச்சு சுவாரசியத்துலே நேரம்போறதே தெரியாது. சிலப்பப் பிள்ளைகள் மத்தியானம் பள்ளிக்கூடம்விட்டு வரும்வரையில்கூட பேச்சான பேச்சும் சிரிப்பும் தூள் பறக்கும். புள்ளைங்களைப் பார்த்ததும்தான் 'ஐயோ மணி ஆகிருச்சே'ன்னு பாயும். இங்கே வந்தால் வடிச்ச சோத்துப் பானை அப்படியே குனிஞ்சது குனிஞ்சபடி கிடக்குமா....... அக்காவுக்கு உள்ளூர ஒரு பயம் வந்துரும். வடிச்ச சோத்துப்பானையை நிமித்தாம ரொம்ப நேரம் அப்படியே விட்டுட்டால்..... பிரசவ சமயத்தில் இடுப்புநோவு கூடிப் பிள்ளைப் பேறு ஆக லேட்டாகுமாம். பொழுதண்ணிக்கும் பெத்துப்போடறவங்களுக்குப் பயம் இருக்கத்தானே செய்யும்? ஆனா இது உண்மையா இல்லையான்னு தெரியாது. பருப்பும்கூட சிலசமயம் தண்ணீர் வத்தி அடிப்புடிச்சுரும். அதுக்காகத் தீயைச் சின்னதா வச்சுட்டு, நாலு தம்ப்ளர் தண்ணியைக் கூடுதலா ஊத்திவைக்கறதுதான். ரசத்துக்கும் ஆச்சுல்லே!

அக்காவோட மாமியார், இவுங்களை எல்லாம் மிஞ்சுனச் சினிமாப் பைத்தியம். சிவாஜி படமுன்னா மூணுநாலுதரம் பார்த்துருவாங்க. ராத்திரி கடை மூடுற சமயம் சட்னு கிளம்பிப் போயிருவாங்க. ரொம்ப ஒல்லியா இருப்பாங்களா, விசுக் விசுக்குன்னு அஞ்சே நிமிச நடைதான். மச்சினர் மகந்தான் இருக்காரே. அவர் எல்லா வேலையும் முடிச்சுக்கிட்டுப் படம் விடும் சமயம்போய் பெரியம்மாவை இட்டாருவார். எல்லாம் எப்பவும் ரெண்டாவது ஆட்டம்தான் என்றதாலே பிரச்சனை இல்லை. மாமியாரும் சரி,மருமகளும் சரி அவுங்கவுங்க சினிமாப் ப்ரோக்ராமைச் சொல்லிக்க மாட்டாங்க.நல்லவேளையா, சமையல் கட்டுக்குப் பக்கத்துலே, கடைக் கொல்லைப்புறக் கதவு வரை, திறந்த வெளியா இருந்த இடத்துக்குப் பந்தல் போட்டு வச்சுருந்தாங்க. வெங்காயம் வெட்டறது, காய் நறுக்குறதுன்னு எல்லா வேலையும் அங்கேதான். தேங்காய்த் துருவும்போது மட்டும் எங்ககிட்டேக் கவனமா இருப்பாங்க. தின்னே தீர்த்துருவோம்லெ. அத்தையம்மா, பேரனை இடுப்பைவிட்டு இறக்காமத் தூக்கிவச்சுக்கிட்டே ஆளுங்ககிட்டே வேலை வாங்குவாங்க. நாங்க எல்லாம் கூடமாட வேலை செய்யலாமுன்னா..... பெரிய பெரிய அடுப்பும் பாத்திரங்களுமா இருக்கு. பசங்க ஓடியாடி விழுந்துறப் போறீங்கன்னு துரத்திருவாங்க. நாங்களும் ச்சும்மா.... எதாவது செய்யட்டுமான்னு வாய்வார்த்தையாக் கேக்கறதுதான்.

அங்கேயே ஒரு பக்கமா ஏரோப்ளேன் பாண்டி விளையாடுவோம். தாயக்கட்டம் போட்டுக்கறதும் உண்டு. மாமா ஒரு கேரம்போர்டு கொண்டுவந்து வச்சதுலே இருந்து அந்த ஆட்டமும்தான். எல்லா ஆட்டத்துலேயும் நாந்தான் ஜெயிப்பேன். என்கூட உப்புக்குச் சப்பாணியா ஆடறது நம்ம ரேணுதானே:-)))) பசங்க எப்போடாப் பள்ளிக்கூடம் முடிஞ்சு வருவாங்கன்னு இருக்கும். அக்கா மட்டும் அப்பப்ப வந்து ஒரு ஸ்டூல் போட்டு உக்கார்ந்துக் கணக்கு எழுதிக்கிட்டு இருக்கும். பலசரக்கு என்னென்ன வேணுமுன்னு பார்த்து லிஸ்ட் போட்டு வைக்கறதும், அரிசி பருப்பெல்லாம் ஸ்டோர் ரூமிலே இருந்து எடுத்துக் கொடுக்கறதும் அக்காவோட வேலை.

கடைக்கு வரும் தினத்தந்தி பேப்பரையும் விட்டுவைக்க மாட்டேன். ஆனாலும் சிலநாள் ரொம்பவே போரடிக்கும். போரடிக்கணுமுன்னே, ஜூலியஸ் சீஸர், இன்னும் சில ஷேக்கஸ்ப்பியர்.....எல்லாம் கொண்டுவந்து தருவார் மாமா. மச்சினிச்சிப் பீட்டர் விடட்டுமுன்னு:-) போதுண்டா சாமின்னு இருக்கும். அப்பெல்லாம் அத்தையம்மா பக்கத்துலே போய், அவுங்க வாயைப் பார்த்துக்கிட்டு இருப்பேன். ராத்திரி போய்வந்த சினிமாவை (அதுவும் சிவாஜி படமானால் உத்தமம்) ரொம்ப சிலாகிச்சுப் பேசிக்கிட்டு இருப்பாங்க. சிலசமயம் பேச்சுவாக்குலேக் குடும்பக் கதைகள் வந்து விழும். பச்சமிளகாய் நறுக்கிக்கிட்டே இருந்த சமையல் உதவி ஆள், தெரியாமக் கண்ணுலே கையை வச்சுக்கிட்டார். ஐயோ ஐயோன்னு கத்திக்கிட்டுப் பச்சத்தண்ணீரை முகத்துலே அடிச்சு ஊத்திக் கழுவிக்கிட்டு கிடந்தாரா......... ' ஐயோ....ராணி கண்ணுலே மொளகாய்விதை இருந்தது ஞாபகம் இருக்கா?' ன்னு அக்காட்டே சட்னு கேட்டாங்க. அக்கா, தலையைத் திருப்பி மாமியாரைப் பார்த்தாங்க. 'சரியான பூனைப்புசுக்கி'ன்னு சிரிச்சாங்க அத்தையம்மா.

' பெரியம்மா' ஒரு காலக்கட்டதில் 'தனிஆளா' ஆனதும் அத்தையம்மாதான் 'நாத்தனார் ஆச்சே.... எப்படி விட முடியுமு'ன்னு கூட வச்சுருந்தாங்களாம். அப்போ ராணி ரெண்டு வயசோ என்னவோ.....

ஒரு நாள் பெரியம்மா வெங்காயம், பச்சமிளகாய் நறுக்கிக்கிட்டு இருந்ததை வேடிக்கைப் பார்த்துக்கிட்டு விளையாடிக்கிட்டு இருந்த குழந்தை,
திடீர்னு வீறிட்டுக் கத்தி அழுது முகமெல்லாம் சிவந்து போச்சாம். குழந்தை பெரியம்மாவைக் கைகாட்டி அழுவுது. நான் ஒன்னும் செய்யலைன்னு அந்தம்மா சொல்லி இருக்காங்க. குழந்தை, கண்ணைத்தேய்ச்சுக்கிட்டு கத்துதேன்னு கண்ணைக் கவனிச்சா, ஓரமா ஒரு மொளகாய் விதை ஒட்டிக்கிட்டு இருந்துருக்கு. பாரு செய்யறதையும் செஞ்சுட்டுப் பூனைப்புசுக்கியாட்டம் இருந்தான்னு அன்னிக்கு அக்கா மாமியார் சொன்னாங்களாம். ராணிதான் அதுக்குப்பிறகு, 'பூனைப்புசுக்கி அவ்வா'ன்னு ரொம்பநாளாச் சொல்லிக்கிட்டு இருந்தாளாம். பெரியம்மா பேச்சு எதாவது வந்துச்சுன்னா..... அதைச் சொல்லிட்டு அக்கா முகத்துலே ஏதாவது ரியாக்ஷன் தெரியுதான்னு பார்ப்பாங்களாம். அக்காவுக்கு ரொம்பப் பிடிக்கவே பிடிக்காத விஷயம் இது.

அந்தப் பெரியம்மா, கடைசி காலத்துலே கண்ணுத் தெரியாமப்போய்க் கஷ்டப்பட்டு செத்தாங்க. மாமாதான் கொள்ளி போட்டுருக்கார். இவுங்களைப் பத்தி நம்ம 'அப்புறம் கதைகள் ஆயிரத்து நூறு'லே பார்க்கலாம். இவுங்க ஒரு முக்கியமான பாத்திரம் நம்ம கதைகளில்!!!!


கடைவீதியிலேயே பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்துலே ஒரு இன்ஸ்டூட்டுலே என்னை டைப்ரைட்டிங் கத்துக்க மாமா சேர்த்துவிட்டார். தினம் ஒரு மணி நேரம். பரிட்சை முடிவு வர்ற வரை எதாவது படிக்கட்டுமுன்னுதான். முடிவு வந்தப்ப நல்ல மதிப்பெண் கிடைச்சுருந்துச்சு. மறுபடி எல்லாருக்கும் நான் பிரச்சனையா ஆகி இருந்தேன். என்னை என்ன செய்யலாமுன்னு ஆளாளுக்கு யோசனை சொல்லி அண்ணனைக் குழப்பிக்கிட்டு இருந்துருக்காங்க. டீச்சர் வேலைக்குப் படிக்க வைக்கணுமுன்னு பாட்டிக்கு ஒரே பிடிவாதம். வீடு முழுக்க டீச்சருங்க இருக்காங்களே..அந்தக் கூட்டத்தில் இன்னொன்னு இருந்தா என்ன குறைஞ்சுறப்போகுதுன்னு.

மாமா மட்டும், மேலே படிக்க வைக்கணுமுன்னு விடாப்பிடியா நின்னார். உங்களாலே முடியலைன்னா நான் படிக்க வச்சுக்கறேன்னு வீறாப்பு. அடுத்த ஊர்லே இருக்கும் கல்லூரிக்கு அனுப்பிடலாமுன்னு அவர் நினைப்பு. ஒரு பிரகஸ்பதி மட்டும், பேசாமக் கலியாணத்தைப் பண்ணி வச்சுறலாமுன்னு ஐடியாக் கொடுத்தாராம். நல்லாப் படிக்கிறாள். முடிஞ்சவரை படிக்கட்டுமுன்னு அண்ணன் நினைச்சாலும் சொந்தக்காரக் கூட்டம் எல்லாம் சேர்ந்து அவரைக் குழப்பிக் குட்டையிலே மீன் புடிச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆக மொத்ததுலே ஒரு ஆளுன்னா ஒரு ஆள்,'என்ன செய்யப்போறேன்னு என்கிட்டே ஒரு வார்த்தைக் கேக்கலை.

தொடரும்.....................

Sunday, December 14, 2008

அக்கா ( பகுதி 11 )

ஆரத்தி மட்டும்தான் எடுக்கலை. மத்தபடி அங்கே போனதும்.... எனக்கு பயங்கர வரவேற்பு. சித்தப்பா போய்ப் பலகாரமெல்லாம் வாங்கிட்டு வந்தார். சித்தி பொண்ணு, (என்னைவிட நாலு வயசு சின்னவ) கைக்கு நெயில் பாலீஷெல்லாம் போட்டு விட்டாள். வாழ்க்கையில் முதல்முறையாக் கை நகம் சிவப்பாப் பவழமாட்டம் மின்னுது சித்தி, பக்கத்துலே வந்து உக்காந்துக்கிட்டு என் கையைப் புடிச்சுக்கிட்டுக் கொஞ்சம் அழுதாங்க. எங்க ரெண்டு பேருக்கும் தலை பின்னிவிட்டுப் பூவெல்லாம் வச்சுவிட்டாங்க. மல்லிப்பூ வாசம் அப்படியே ஆளைத் தூக்குது. எனக்குக் கொஞ்சம் கூடவே பூவு. அப்புறம் நல்லா ஆக்கிப் போட்டாங்க. ராத்திரி ஆட்டத்துக்குச் சினிமாவுக்கு நாங்கெல்லாம் போனோம். போன வருசம் பெரிய லீவுக்குக்கூட அக்கா வீட்டுக்குப் போகாம இங்கேதானே போரடிச்சுக் கிடந்தோம். அப்ப இவுங்களையெல்லாம் பார்க்காமப் போயிட்டோமேன்னு இருந்துச்சு.

மறுநாள் ரொம்ப லேட்டா எந்திரிக்கறேன். சித்தி பெட் காஃபி இல்லை..... பெட் டீ கொண்டுவந்து தந்தாங்க. எங்க பாட்டி வீட்டு நடைமுறை, இங்கே அப்படியேத் தலைகீழாக் கிடக்கு. எங்க பாட்டிக்குத் தூக்கம் வராதுன்னு சொன்னேன்லெ, பொழுது எப்படா விடியுமுன்னுட்டுக் காத்திருந்தாப்போல ரேடியோவில் 'மங்கள வாத்தியம் டும்டும் டுடுடும்'னு சத்தமா வச்சு எல்லாரையும் தூங்கவிடாம எழுப்பிருவாங்க. பல்லு தேய்ச்சு, முகம் கழுவுனாத்தான் சமையக்கட்டுக்கே போக முடியும். எல்லாரும் வேலைக்குப் போறதாலே சமையல் அது இதுன்னு வேலை பரபரன்னு நடக்கும். இதுலே பாட்டியோட பூஜை புனஸ்காரங்கள் வேற. ஒத்தை நந்தியாவெட்டையும் அரளியுமாத் தோட்டத்துலே பூத்துக் குலுங்கும். அதைப் பறிச்சுத் தர்றது என் வேலை. பாட்டி சாமிக்குப் பூத்தொடுப்பாங்க. அதையேதான் எனக்கும் தலைக்கு வச்சுக்கத் தருவாங்க. கனமா இழுக்கும். ஆனாலும் நாந்தான் பூ பிசாசு ஆச்சே. எதுவானாலும் தலை இத்து விழறமாதிரி வச்சுக்குவேன். பாட்டியும் சித்தியும் கைம்பெண் என்றதால் பூச்சூடிக்க மாட்டாங்க. அங்கே பொதுவா வீட்டுலே பூ வாங்கறதே இல்லை.


ஒம்போது ஒம்போதே காலுக்குள்ளே எல்லாம் கிளம்பிப் போயிருவாங்க. அண்ணன் காலை ஏழரைக்கே போயிருவார். பள்ளிக்கூட லீவு நாளானாலும் இதே மாதிரிதான் அவதிஅவதின்னு இருக்கும் வீடு. சினிமா அது இதுன்னு மூச்சு விடக்கூடாது. ஊரெல்லாம், குறிப்பா மத்த டீச்சருங்க ரொம்ப நல்ல படமுன்னு சர்ட்டிஃபிகேட் கொடுத்த படமுன்னா, அதுக்கே ரொம்ப யோசனை செஞ்சு கூட்டிப் போவாங்க. ஆறுமணி ஆட்டம்தான் போவோம். சினிமாவுலேகூடச் சிரிப்புப் பகுதி வந்தாச் சத்தமாச் சிரிக்கக்கூடாது. இப்படி ஏகப்பட்டக் கட்டுப்பாடு.

திடீர்னு கிடைச்ச இந்த சுதந்திரம் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ரெண்டு நாள் நல்லா ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன். சித்திச் சித்தப்பாகிட்டே..... 'அப்பா இருக்கற இடம் தெரிஞ்சுக்கிட்டுச் சொல்லமாட்டேங்கறீங்களாமே. அதுதான் அங்கே எல்லாருக்கும் கோவம்'னேன். எங்க சித்தி உடனே புள்ளைங்க தலைமேலே கைவச்சுச் சத்தியம் செஞ்சாங்க அவுங்களுக்கு ஒன்னுமே தெரியாதுன்னு. அழுதாங்க. "சொந்த அக்கா சாவுலே, தெரிஞ்சுருந்தா சொல்லி இருக்கமாட்டொமா?"

வீட்டுலே அன்பு நிறைஞ்சுருக்கே தவிர, பொருளாதாரம் அவ்வளவா சரியில்லாமக் கிடக்குன்னு புரிஞ்சது. ஆனா..புள்ளைகளுக்கு எந்தக் குறையும் இல்லாம கேக்கறதெல்லாம் வாங்கிக் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. எனக்குக்கூட ஒரு புதுப் பாவாடைச் சட்டை மறுநாளே எடுத்துத் தைச்சாங்க. அதான் ஒன்னும் மாத்துத்துணி எடுத்துக்காம வந்தேனே.

மூணாம்நாள், அந்தச் சித்திப் பையன், என்னைக் கூட்டுட்டுப்போக வந்தான். அவனையும் அன்பா வீட்டுக்குள்ளே கூப்புட்டுப் பலகாரமெல்லாம் கொடுத்துத் திங்கச் சொல்லுச்சு சித்தி. நானு அவன்கூடக் கிளம்பி இங்கே வந்தேன். நல்லவேளையாப் பள்ளிக்கூடம் திறக்கும் நாள் நெருங்கிருச்சு. தினமும் இவுங்ககிட்டே திட்டு வாங்கி வெறுத்துப் போயிருந்தேன். அடங்காப்பிடாரி. சொன்ன பேச்சு கேக்காத களுதை, திமிர் ஏறிக்கிடக்கு, தாயில்லாப் புள்ளைன்னுச் செல்லம் கொடுத்தது தப்பாப் போச்சு, அது இதுன்னு. அண்ணனும் என்கிட்டேக் கொஞ்சம் கோபமா இருந்தார். அண்ணனுக்கும் எனக்கும் நடுவிலே ஒரு கசப்பு மெதுவா ஊறி வந்துக்கிட்டு இருந்துச்சு.

ஹாஸ்டலுக்குப் போனதும் நினைச்சுப் பார்த்தப்பத்தான் இந்த ரெண்டுவருச ஹாஸ்டல் வாழ்க்கை, என்னைக் கொஞ்சம் நல்லாவே மாத்தியிருக்குன்னு புரிஞ்சது. எனக்குச் சுதந்திரம் வேணுமுன்னு தோணிக்கிட்டு இருந்துச்சு. ஆனா...எது உண்மையான சுதந்திரமுன்னு புரியும் பக்குவம் அப்ப வரலை.

'டெர்ம் லீவு ' வரும்போது வீட்டுக்குப் போகாமலிருக்க வழி இருக்குன்னு அப்போதான் கண்டுபிடிச்சேன். எங்க பள்ளிக்கூடத்துலே வெளிநாட்டு மாணவிகள், பெற்றோர் துபாய் அபுதாபின்னு போய் வேலையில் இருக்கும் குடும்பத்து மாணவிகள் இப்படிப் பலருக்கு 10 நாள் விடுமுறைக்குப் போய்வரமுடியாதுன்னு அவுங்க விடுதியிலேயே இருந்துருவாங்க. ஆனா லீவு எப்ப வருமுன்னு அவுங்க எல்லாரும் காத்துக்கிட்டு இருப்பாங்க. ஒரே ஜாலிதானாம். தினம் பீச், சினிமா, ஷாப்பிங் இப்படிச் சுத்தலாமாம். இப்பப் பார்க்கும் வார்டன் வேற, லீவில் பார்க்கும் வார்டன் வேறன்னாங்க. அட! வெவ்வேற ஆளா? இல்லையாம். ஒரே வார்டந்தான். கண்டிப்பு அதிகம். ஆனா லீவு சமயத்துலே மட்டும் ஆளே சுபாவம் மாறி இருப்பாங்களாம். ஆஹா.....எங்க வார்டன் மலேசியாக்காரங்க. அவுங்க தம்பி மகள்களும் இங்கே படிச்சுக்கிட்டு இருக்காங்க. ......

அந்தப் பத்து நாட்களும் சொர்க்கம்தான். தினம் பூ வச்சுக்கறது என்ன..... நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு வெளியே போய் வர்றது, ஹோட்டலில் மசால் தோசை, பூரி, நல்ல காஃபின்னு முழுங்கறதென்ன...... ஜாலியோ ஜாலி.

பாட்டு நல்லாப் பாடுவேன் என்றதால் 'சர்ச் கொயர்'லே சேர்த்துருந்தாங்க. இப்ப நான் விடுதியிலேயே இருக்கறதால் கொயர் டீச்சருக்கு பயங்கர சந்தோஷம். குட் ஃப்ரைடே, ஈஸ்டர் சர்வீஸ்ன்னு முடங்காமல் பள்ளிக்கூடத்து சார்பில் பாடமுடியுதேன்னு. டீச்சர் பியானோ வாசிக்க நான் ஸோலோவாப் பாடுவேன். கிறிஸ்மஸ் லீவுக்கும் வீட்டுக்குப் போகலை. நடுராத்திரியில் சர்ச்சுக்குப் போறது, பாடறது, இஷ்டம்போல கேக், ஸ்வீட்ஸ் அது இதுன்னு தாளிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா இவ்வளோ தின்னும்கூட உடம்பு ஒல்லிக்குச்சியாத்தான் கிடந்துச்சு.

எங்க பாட்டிதான் வீட்டுலே உக்காரவச்சுச் சங்கீதம் சொல்லிக்கொடுப்பாங்க. அப்ப நான் சரியாப் பாடலைன்னா.... கைங் கொய்ங்ன்னு சர்ச்சுல்லே பாடிக் குரலே கெட்டுப்போச்சுன்னு புலம்புவாங்க.

என் கஷ்டகாலம், இந்த வருசத்தோடுப் பள்ளிக்கூட வாழ்க்கை முடியுது. லீவு விட்டவுடன் ரெண்டே நாள் பாட்டி வீட்டில். அப்புறம் என்னை அக்கா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இங்கேயே இருந்தால் சித்தப்பா வீட்டுக்குப் போவேன் என்ற வெறுப்போ என்னவோ!


தொடரும்......................

Saturday, December 13, 2008

நிழல்கள். பட விமரிசனம்?

மகள் அனுப்பிய சில படங்களை நிழல்களுக்காக இங்கே போட்டுருக்கேன். படம் பார்த்துட்டு விமரிசனம் செய்யுங்க.
பிட்டு ஆசான்கள் கொடுத்த மாதிரிப் படம் போலவே ( ரொம்பத்தான் ஆகிக் கிடக்கு எனக்கு) ஒன்னு நம்ம கைவசம் இருந்துச்சு.

சங்கு சக்கர சாமி ஜிங்கு ஜிங்குன்னு ஆடாம இருக்கு பாருங்க.
தாமரை மொட்டு(கள்)

நிழலுருவம்

Friday, December 12, 2008

அக்கா ( பகுதி 10 )

"சிறு குனனுக்கு நேந்த விபத்து யது?" முக்கால் வாசி காலை விட்டுட்ட கோணல் மாணல் கையெழுத்து. சிரிச்சு, உருண்டு பொரண்டு.... சித்தியோட வகுப்புப் பரீட்சைத்தாள்களை நான் திருத்திக் கொடுத்தேன். பாட்டியும் டீச்சர்தான். ஆனா பரிட்சைப் பேப்பர் திருத்தும் வேலையெல்லாம் இருக்காது. அவுங்க ஒன்னாப்பு டீச்சர்:-) ஒரு மாசம் கழிச்சு வந்த பெரிய லீவுக்கு அக்கா வீட்டுக்குப் போகலை. பாட்டி வீட்டுலேயே இருந்து போரடிச்சுக்கிட்டுக் கிடந்தேன்


சித்தி மகன் என்னைவிட 3 வாரம் மூத்தவன். அவனுக்கு ஊர் சுத்துவதுதான் வேலை. தப்பித்தவறி வீட்டுலே இருந்தால் சைக்கிளைக் கழட்டி மாட்டுறதும் சின்னச் சின்ன நட்ஸ், ஸ்க்ரூ, தகடு அது இதுன்னு சேர்த்துவச்சுருக்கும் டப்பாவை எடுத்துவச்சுக் குடையறதுமா இருப்பான். ஜன்னல் வழியாக வரும் வெளிச்சக் கீத்துலே லென்ஸ் வச்சு சினிமாக் காட்டுவான். சிங்கிள் ஷாட்:-) சினிமாக் கொட்டகை ஆப்பரேட்டர் மகன், இவன் வகுப்பு. துண்டு துண்டா ஃப்லிம் ஒரு ஜாமெண்ட்ரி பாக்ஸ்லே வச்சுருக்கான். வீட்டுக்கு எதாவது வேணுமுன்னா கடைகண்ணிக்குப் போயிட்டு வருவான். ஒருநாள், சித்தி மகனோடு கடைக்குப் போனப்பக் கடைவீதியிலே எங்க பெரிய சித்தியைப் பார்த்தேன். அவுங்களை சின்னக்காக் கருமத்தன்னிக்குப் பார்த்ததுதான். அன்னிக்குச் சரியாப் பேசக்கூட முடியலை. அவுங்களையும் அந்தச் சித்தப்பாவையும் மற்ற உறவினர் கூட்டங்களுக்குப் பிடிக்காது. உள்ளுக்குள்ளேயே புகைஞ்சுக்கிட்டு இருக்கும் பகை. அவுங்களும் நல்ல விசேஷத்துக்கு வராட்டாலும், ஏதும் துக்க சமாச்சாரங்களுக்கு வந்துட்டு உடனே போயிருவாங்க.

என்னைப் பார்த்ததும் சித்தி வேகமா வந்து என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க. அந்த நிமிசம் எனக்கு மனசுக்குச் சந்தோஷமா இருந்துச்சு. 'வீட்டுக்கு வரக்கூடாதா? அவுங்களை மாதிரியே நீயும் இருக்கணுமா' ன்னாங்க. நான் ஒருநாள் வரேன்னேன். 'அண்ணன்கிட்டே சொல்றேன். நீங்க இங்கேயா இருக்கீங்க? எனக்குத் தெரியாதே'ன்னேன்.
ஏன் இவனுக்குத் தெரியுமேன்னு என்கூட வந்த சித்திப் பையனைப் பார்த்தாங்க. 'ஏம்ப்பா பெரியம்மா வீட்டுக்கு நீயாவது வரலாமுல்லே, இவளையும் கூட்டிக்கிட்டு ஒரு நாள் வா'ன்னாங்க.

வீட்டுக்கு வர்ற வழியில் , 'இவுங்க வேற ஊர்லே இருந்தாங்களே, எப்ப இங்கே வந்தாங்க' ன்னு கேட்டதுக்கு 'ரெண்டு மூணு வருசமா இங்கேதான் இருக்காங்க'ன்னான். 'அம்மாகிட்டே, பாட்டிகிட்டே எல்லாம் இவுங்களைப் பார்த்தோமுன்னு சொல்லிடாதே.. ஏன் போய்ப் பேசுனேன்னு திட்டுவாங்க'ன்னான்.

இதுலே என்ன ஒரு விசயமுன்னா..... இவுங்க இவனுக்குச் சொந்தப் பெரியம்மா மட்டுமே. எனக்கு? சித்தி ரெண்டுவகையில் சொந்தம். எங்க அம்மாவுக்கு தங்கச்சி, எங்க அப்பாவோட (சித்தப்பா பையன்) தம்பி பொண்டாட்டி.

நான் வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம வீட்டுக்கு வந்ததும், சித்தி சித்தப்பா இந்த ஊருலே இருக்காங்களாமே. எனக்கு ஏன் சொல்லலை? நான் ஒரு நாள் வரேன்னு சொல்லியிருக்கேன். போகணுமுன்னு சொன்னதுக்கு, 'உங்க அண்ணன் கிட்டே கேட்டுக்கிட்டுப் போ'ன்னு சொன்னாங்க எங்க சித்தி. குரலில் ஒரு நக்கல் இருந்துச்சோ......

அண்ணன் வேலையில் இருந்து வந்ததும், நான் இன்னமாதிரி இன்னமாதிரின்னு எல்லாத்தையும் ஒப்பிச்சேன். 'அதெல்லாம் போகவேணாம்'னு சொன்னார். எதுக்குன்னதுக்கு, 'சின்னப்பிள்ளை உனக்கு எதுக்கு ஊர்வம்பு. பேசாமச் சொன்னதைக் கேளு' ன்னார். நான் விடாம 'நை நை'ன்னு பாட்டிகிட்டேக் கேட்டுக்கிட்டே இருந்தேன். பிடுங்கி எடுக்கறேன்னு திட்டிட்டு, அப்புறமாச் சொன்னாங்க.

ரொம்ப சிம்பிளான ஒரு லாஜிக். எங்க அப்பாமேலே அம்மாவின் குடும்பத்தாருக்கு இருந்த கோவம். அது அவர் குடும்பத்து ஆட்கள் மேலே
பாய்ஞ்சிருக்கு. ஓஹோ..... அக்காவின் கல்யாணத்துக்கு இவுங்க யாருமே வராததுக்கு இதுவும் ஒரு காரணம்.

"உங்க அப்பாவால் உங்க அம்மாவுக்கு ஏகப்பட்ட கஷ்டம். அந்தக் குடும்பமே அப்படித்தான். அவுங்க சம்பந்தம் ஏதும் வேணாமுன்னுதான் பேச்சுவார்த்தைகூட வச்சுக்கறதில்லை. இப்பக்கூட உங்க அப்பா எங்கே இருக்காருன்னு அவுங்களுக்குத் தெரியும். ஆனாலும் சொல்ல மாட்டாங்க. அவ்வளோ அழுத்தம். உங்க அம்மா செத்தப்ப எப்படிக் கெஞ்சிக்கேட்டோம். சொன்னாங்களா ?"

எனக்கு லேசா நினைவு வந்துச்சு, அம்மா இறந்தப்பச் சித்திசித்தப்பாக் குடும்பம் பூரா சாவுக்கு வந்துருந்தாங்க. அப்ப இருந்தே இதே ஊர்லேதான் இருக்காங்க போல. எனக்குத்தான் தெரியாமப் போயிருச்சு. சின்னப்புள்ளேன்னு குடும்ப விசயங்களை யாரும் என் காதுலே படறமாதிரி பேசறதே இல்லை. அப்பாமேலே அண்ணனுக்குச் சரியான கோபம். அதை இவுங்க வேற நெய் ஊத்தி வளர்த்து வச்சுருக்காங்க.

இவுங்க போகக்கூடாதுன்னு சொன்னதுலே இருந்து எனக்கு அங்கே போகணுமுன்னு ஆசையா இருக்கு. ஒருநாள் ஞாயித்துக்கிழமைன்னு நினைக்கிறேன், அண்ணன் வீட்டுலே இருந்தார். அப்பப் பார்த்து சித்தப்பா பையன் (என்னைவிட நாலு வயசு பெரியவன்) பாட்டிவீட்டுக்கு வந்து, வெளியே கேட்டுக்குப் பக்கத்துலே இருந்த நந்தியாவட்டைச் செடிகிட்டே நின்னான். வெளி வெராண்டாத் திண்ணையில் இருந்த அண்ணன் 'எதுக்கு வந்தே?'ன்னார். நான் அதுக்குள்ளே வெளியே ஓடிப்போய் 'வீட்டுக்குள்ளார வா(ங்க)'ன்னேன். அவன் தயங்கித்தயங்கி, என்னைப் பார்க்க வந்ததாச் சொன்னான். 'பார்த்தாச்சுல்லே போ'ன்னு சொன்னார்.

'எங்கம்மா. தங்கச்சியைக் கூட்டிக்கிட்டு வரச் சொன்னாங்க'ன்னதும் எனக்கு ஒரே குஷியா இருந்துச்சு. அண்ணன், 'அவ வரமாட்டா'ன்னார். எனக்கு எரிச்சலாப் போச்சு. நான் போகப் போறேன்னேன். அதுக்குள்ளே பாட்டியும் சித்தியும் வெளியிலே வந்து அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணுறாங்க. நான் பிடிவாதமாப் போகப் போறேன்னதுக்கு, 'போனால் அப்படியே போயிரணும். திரும்பி வரக்கூடாது'ன்னார். எனக்கும் வீம்பு கூடி, 'சரி. வரலை'ன்னுட்டு விடுவிடுன்னு அந்த அண்ணன்கூடப் போயிட்டேன்.

தொடரும்......................

Thursday, December 11, 2008

கார்த்திகை தீபம்

அனைவருக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.


விளக்கு அலங்காரங்களையெல்லாம் நண்பர்களின் பதிவுகளில் பார்த்தாச்சு.

நைவேத்தியத்துக்கு மீனாட்சியின் குரலில் 'தமிழ் நீ -தமிழ் நீ' யும் இதோ இங்கே இருக்கும் பொரி உருண்டையும்.

இந்தப் பொரி போதுமா..... இன்னும் கொஞ்சம் வேணுமா?


Wednesday, December 10, 2008

ரத்னேஷ்: சீனியர் & ஜூனியர்.

இந்த வருசம் நம்ம வீட்டுத் தோட்டத்துலே மகசூல் தாராளமா இருக்கு.

டாக்குட்டர் வேற பழங்கள் சாப்புடுங்கன்னு சொல்லிட்டார்.அதுவும் ஃப்ரெஷாச் சாப்புடுங்கன்னு.

இதைவிட ஃப்ரெஷுக்கு எங்கே போறது?தினம் ஒரே ஒரு கை(அளவா இருக்கணுமுலே?) நிறையப் பறிச்சோமா, தின்னோமா ன்னு இருக்கணும்.

கோபால் வேற ஊருலே இல்லீங்களா.......

தனியாவே முழுங்க வேண்டியதாப் போச்சுங்க(-:
பழுக்காமக் காயா இருக்கும்போது பார்க்க அவ்வளோ அழகா இல்லை(-:

கனி இருப்பக் காய் கவர்ந்தற்று. வலது பக்கம் பூ.ராஸ்பெர்ரி பல நிறங்களில் இருக்குது. ஒரு ஏழெட்டு வகை கறுப்பு, மஞ்சள் ( இதை கோல்டன் ராஸ்பெர்ரின்னு சொல்றாங்க) பர்ப்பிள், லேசா ஆரஞ்சு ன்னு. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் இந்த அழுத்தமான பிங்க், ரெட் இதுதான்.

வைட்டமின்கள் ஏ, கே, சி, மாங்கனீஸ், கால்சியம், மக்னீசியம், ஃபோலெட், பொட்டாசியம், இரும்புச்சத்துன்னு ஏகப்பட்ட விஷயங்கள் இந்த ராஸ்பெர்ரியில் அடங்கிக்கிடக்கு. இத்தனைக்கும் ரொம்பச் சின்னப் பழங்கள். ஒவ்வொன்னும் 3 கிராம் எடை இருந்தாவே அதிகம்.

இந்தச் செடிகளில் பூக்கும் பூவுலே, இருக்கும் நெக்டர் (தேன்னு சொல்லலாமா) வண்டுகளுக்கும் தேனீக்களுக்கும் ரொம்பப் பிடிக்குமாம். ஆமாம்ப்பா. ஒரே பம்பிள் பீ கூட்டமா மொய்ச்சுக்கிட்டு இருக்கு அங்கே.

இந்த செடியின் ( செடி என்ன செடி? புதர்ன்னு சொல்லலாம்) இலைகள் மருத்துவ குணம் நிறைஞ்சதாம். மூலிகை தேநீர் போட்டுக் குடிக்கலாமாம். பெண்களுக்கு வரும் மாதவிலக்கு சம்பந்தமான வலிகளுக்கு கைகண்ட நிவாரணியாம் இந்த இலை போட்டுச் செஞ்ச 'டீ'.

இந்தப் பழங்களும் லேசுப்பட்டதில்லை. பட்டியலைப் பாருங்க.
inflammation, pain, cancer, cardiovascular, disease, diabetes ,allergies, age-related cognitive decline, degeneration of eyesight with aging......

பேசாம சகல வியாதிகளுக்கும் ஒரே மருந்துன்னு சுருக்கமாச் சொல்லிக்கலாம். தினமும் சாப்பிட்டா மேற்கண்ட வியாதிகள் வராம உடலைப் பேணிக்கிட்டு, உடல் பலத்தோடுத் தினம் தினம் பதிவு எழுதலாம்,இல்லை.

ஆனால் வெறும் கோடைகாலத்துலே மட்டும்தான் பழங்கள் சீஸன். குளிர் வந்தவுடன் இந்தச் செடிகளும் இலைகளை உதிர்த்துட்டுக் குச்சிகுச்சியா நிக்குது. வெறுங்குச்சின்னுட்டு இதையெல்லாம் பிடுங்கிப்போடப் பார்த்தவர்கிட்டே இருந்து நம்ம செடிகளைக் காப்பாத்துன பெருமை யாருக்குன்னு உங்களுக்குத் தனியாச் சொல்லணுமாக்கும்!

இந்தச் செடிகளுக்குத் தானாவே அப்படியே பரவிப் பல்கிப் பெருகும் குணம் இருப்பது நல்லதாப் போச்சு. ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இந்தச் செடிகளை நடணுமாம். சில வருஷங்களில் அப்படியே எல்லா இடத்தையும் அடைச்சுப் புதர்கள் உருவாகிரும். (நம்ம வீட்டுலே முந்தி இருந்த பாட்டி செஞ்ச கைங்கரியம். இப்ப நமக்கு பலன் தருது)


ஆமாம் இப்ப எதுக்கு இப்படி ஒரு தலைப்புன்னு கேக்கறீங்களா?

ம்ம்ம்ம்ம் மாட்டீங்களே..... அதையும் இவளே சொல்லிட்டு போட்டுமுன்னுதானே?


போனவருசம் ராஸ்பெர்ரி பதிவு போட்டப்ப,


RATHNESH said...

மேடம்,

// பழங்களைத் தினம் பறிச்சு ஃப்ரெஷா முழுங்கிக்கிட்டு இருக்கேன், can you ever get fresher than this?னு:-)))'

தினம் பழம் சாப்புடணுமுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க:-)//

ஒருவார காலத்துக்குள் உங்களுக்கு உத்தரவாதமாக வயிற்றுவலி வரா விட்டால் ஒர் தமிழ்ப் பழமொழியே தப்பாகிவிடும் அபாயம் இருக்கிறதே!


இந்தவருசம் என்னன்னா அவரை ஆளையே காணோம். அஸாம்லே இணையம் இணைப்பு எல்லாம் சரியாச்சோ என்னவோ..........

இந்தப் பதிவுதான் நம்ம ரத்னேஷுக்கு நாமெல்லாம் சேர்ந்து அனுப்பும் ஃப்ரெண்ட்ஷிப் கார்ட்.

வாங்கப்பா எல்லாரும். கார்டுலே (பின்னூட்டக்)கையெழுத்துப் போட்டுப்போங்க.

அக்கா ( பகுதி 9 )

ஆம்பளைப்பிள்ளைப் பிறந்து முரளின்னு பேர் வச்சுருக்காங்களாம். ரெண்டு
வாரத்துக்கு ஒரு முறைதான் விசிட்டர்ஸ் டே. அண்ணன் வந்தப்பச் சொன்னார். இன்னும் அவரும் போய்ப் பார்க்கலையாம். வயசான காலத்துலே, பாட்டி மட்டும் தனியாப் போய்ப் பார்த்துட்டு வந்துருக்காங்க. அக்காவோட மாமியார் இப்ப மகன் இருக்கும் ஊருக்கே வந்துட்டாங்க. ஆனாலும் இவுங்ககூட வந்து இருக்காம, ஊருக்குள்ளே பஸ் ஸ்டாண்டு பக்கம், கடைவீதியிலே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கிட்டு, அவுங்க சாப்பாட்டுக்கடை நடத்திக்கிட்டு இருக்காங்களாம். ரெண்டு பையனுங்க வேலை செய்யறானுங்களாம். கூடமாட நிர்வாகம் செய்ய, உறவுக்காரப் பையன் (மாமாவுக்குத் தம்பி முறை) ஒருத்தனு(ரு)ம் வீட்டோடயே வந்துட்டாராம்.

பேரன் பிறந்தபிறகுதான் வீடே நல்லாகுமுன்னு யாரோ ஜோசியர் கொளுத்திப் போட்டுருக்கார். பெரிய லீவு வரட்டும். நாம போய்ப் பார்த்துட்டு வரலாமுன்னு அண்ணன் சொன்னார். கிறிஸ்மஸ் லீவு விட்டப்ப நான் பாட்டி வீட்டுக்குப் போனேன். அண்ணனும் பாட்டி வீட்டுலேதான் இருக்கார். எங்க பாட்டியும் ஒரு சித்தியும் அவுங்க மகனும்தான் அங்கே இருந்துக்கிட்டுருக்காங்க. இப்ப நாங்க ரெண்டு டிக்கெட் கூட:-)

எங்க பாட்டி வீடுதான் எல்லாருக்கும் ஹெட் ஆஃபீஸ் மாதிரி. தாய்மாமனுங்க, சித்திங்க எல்லாரும் அங்கே வரப்போகன்னு இருப்பாங்க. காலையில் ஒரு அஞ்சுமணிக்குக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டாக் 'கண்ணை மூடிக்கிட்டு'ச் சொல்லிறலாம் அது எங்க அக்கா மாமான்னு. எங்க பாட்டிதான் உறக்கம் வராம நாலுமணியில் இருந்தே வீட்டுக்குள்ளே நடந்துக்கிட்டு இருப்பாங்க பாத்ரூம்வரை போறதும் வாரதுமுன்னு. சிலசமயம் இருட்டுலே எங்க கை, காலை மிதிச்சுருவாங்க. நாங்கதான் படுக்கறது ஒரு இடமுன்னா உருண்டு புரண்டு ஹால் முழுக்க போய்க்கிட்டு இருப்போமே:-) இந்தப் படுக்கைப் போடறதைப் பத்திக்கூடச் சொல்லனும். 'அப்புறம் கதை' களில் சேர்த்தால் ஆச்சு:-)

மாமா, உடற்பயிற்சி ஆசிரியருன்னு சொன்னது நினைவு இருக்குங்களா? பள்ளிக்கூடத்துக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கிப்போகறதுக்குன்னு வருசத்துக்கு நாலைஞ்சுமுறை, மெட்ராஸுக்கு வந்து போவார். செண்ட்ரல் போய் இறங்காம, நம்மூர்லேயே இறங்கி பத்துப் பதினைஞ்சு நிமிச நடையில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு வந்து எல்லாரையும் பார்த்துப்பேசிக் குளிச்சு முடிச்சு அப்புறம் ஒரு ஒம்பது மணி வாக்குலேக் கிளம்பி மவுண்ட் ரோடுக்குப் போய் வேண்டியதையெல்லாம் வாங்கிக்கிட்டு ராத்திரி வண்டியில் திரும்பிப் போயிருவார்.

பலநாள், பேச்சுச் சத்தம் கேட்டு அரைமுழிப்பு வந்தாலும், எந்தக் கவலையும் இல்லாமத் தூங்குவேன். 'பக்கத்துலே குண்டு போட்டால் கூடத் தெரியாது. ராட்சஸத் தூக்கமு'ன்னு பாட்டி சொல்வாங்க. அவுங்களுக்கு வயசாகிப்போச்சு. தூக்கமே வர்றதில்லைன்னு புலம்பும்போது, என் தூக்கம் ஒருவேளை புகைஞ்சுருக்கும்! சிலசமயம் கனவுபோல அவுங்க பேசறதெல்லாம் கேக்கும்தான்.

"பேரனைப் பார்க்காம ஒரு நாளு கூட இருக்க முடியாது.. அதான் அம்மா ஊரோடு வந்துட்டாங்க. அவுங்க கடை இங்கே ரொம்ப நல்லாப் போகுது. நானும் பள்ளிக்கூடம் விட்டதும் அங்கே போய் அம்மாவுக்கு உதவியா(??) இருந்துட்டு வருவேன். அக்காவுக்கு இப்ப நல்ல ரெஸ்ட். வேலையே இல்லை"

இப்படி மாமா வரும்போதெல்லாம் அக்காவைப் பத்தின சேதி, புள்ளைங்க எப்படி இருக்காங்க என்ற விவரமெல்லாம் கிடைச்சுக்கிட்டு இருந்துச்சு. கடுதாசி எழுதுற வழக்கம் அத்துப்போனது போலத்தான் பாட்டி வீட்டுலே . ஆனா எங்க பள்ளிக்கூடத்துலே மாசம் ஒருமுறை, நாங்க வீட்டுக்கு லெட்டர் எழுதணுமுன்னு ஒரு நியமம். அதுக்காக நான் மாசம் ஒருக்கா, அக்காவுக்குக் கடிதம் எழுதுவேன். எல்லாக் கடிதத்தையும் டீச்சர் படிச்சுப் பார்த்து அனுப்புவாங்க. இதுலே வம்பு என்னன்னா..... ஆங்கிலத்துலேதான் எழுதணும். நம்ம ஸ்பெல்லிங் & க்ராமர் மிஸ்டேக்குகளுக்கு வகுப்பிலே எல்லார் முன்னாலேயும் நமக்கு லெக்சர் கிடைக்கும். இதுக்குப் பயந்துக்கிட்டேத் தொந்திரவு இல்லாம 'டியர் அக்கா, ஹௌ ஆர் யூ? ஐ ஆம் டூயிங் வெல் & ஸ்டடியிங் வெல்'ன்னு ஆரம்பிச்சு நாலுவரியோடு நிப்பாட்டிக்கறதுதான். எப்படா பெரிய லீவு வரும் அக்காவைப் பார்க்கலாமுன்னுக் காத்திருந்தேன்.

எங்க சின்னக்காவும் இதே ஊர்லேதான் இருக்காங்க. அவுங்க வீட்டுக்குப் போய்வரணுமுன்னா அண்ணன் அனுப்பவே அனுப்பாது. நாந்தான் அடம்பிடிச்சுப் போய்ப் பார்த்துட்டு வருவேன். பள்ளிக்கூட விஸிட்டர்ஸ் டே வில் சின்னக்காவும், மாமாவும் சில சமயம் வந்து பார்த்துட்டுப் போவாங்க.
சின்னக்கா அப்போ கர்ப்பமா இருந்துச்சு. பிரசவத்துக்குப் பெரியக்கா வீட்டுக்குப் போகணுமுன்னு ஒரேதாப் பிடிவாதம் பிடிச்சுப் போயிருந்துச்சு. அஞ்சு பிள்ளைப் பெத்த அனுபவஸ்தியாச்சே அக்கா.


திடீர்னு ஒரு நாளு, அண்ணன் வந்து, 'ப்ரின்ஸி'கிட்டே அனுமதி வாங்கி ரெண்டு நாளுக்கு வீட்டுக்குக் கூட்டிப்போனார். அடுத்த வாரம் பரிட்சை வருது. அதுக்குப் படிக்கணும். இப்போ எதுக்காக வீட்டுக்குப் போகணும்? இது வீகெண்ட் கூட இல்லையேன்னு இருக்கேன். கூடப்படிக்கிறப் பசங்க, 'ஜாலிதான் உனக்கு. போயிட்டு வா'ன்னு பெருமூச்சு விட்டுச்சுங்க. பஸ்ஸுலே வரச்சொல்ல அண்ணன், நான் கேட்டதுக்கு ஒன்னும் சொல்லாமப் பொதுவாப் பேசிக்கிட்டு வந்தார். சின்னக்கா வீட்டைத் தாண்டிதான் ஊருக்குள்ளே வண்டி போகும். அங்கேயே இறங்கிக்கலாமுன்னு அண்ணன் சொல்லி நாங்க இறங்கிக்கிட்டோம். எனக்கு ஒரே ஆச்சரியம். அண்ணனும் அக்காவும் பழம் விட்டுட்டாங்க போல! வீட்டு வாசலில் கொஞ்சம் கூட்டமா மத்த சொந்தக்காரங்க நடமாடிக்கிட்டு இருந்தாங்க. சரிதான். சின்னக்காவுக்குக் குழந்தை பிறந்து, ஊருக்கு வந்துருச்சு, அதான் விசேஷமுன்னு வீட்டுக்குள்ளே ஓடுனேன்.

அக்கா போட்டோவை வச்சு, அதுக்கு முன்னாலே அக்காவோட நகைநட்டு, துணிமணின்னு வச்சுப் படைச்சிருந்தாங்க. சுவத்தோரமாப் பெரியக்காக் கண்ணீரோட முகம் வீங்கி உக்கார்ந்துருக்கு. மடியிலே ஒரு புள்ளை. நாலைஞ்சு மாசம் இருக்கும். அக்காகிட்டேத் தாவி ஓடுனேன். ஒருகையாலே என்னை அணைச்சுப் பிடிச்சுக்கிட்டுக் கதறுது. எனக்கும் ஒரே அழுகை. அங்கே இருந்த எல்லாருக்கும் அடக்கமுடியாமப் போய்.........ஹூம்....
(சம்பவத்தைப் பத்தி இங்கே இருக்கு பாருங்க)

அக்கா மகன் முரளி, அழகா இருந்தான். அக்காவை மட்டும் கைக் குழந்தையோடு ரயிலேத்தி விட்டுட்டு மாமா வரலையாம். மத்த புள்ளைங்களையும் பார்த்துக்கணுமே. சோத்துப் பிரச்சனை இல்லை. மாமியார் கடைதான் இருக்கே. நாலைஞ்சு நாள் இருந்துட்டுப் போயிருமாம். எனக்குத்தான் மறுநாளே திரும்பிப்போகணும். இன்னும் ரெண்டுநாள் லீவு கேட்டுருக்கலாமுல்லே இந்த அண்ணன்னு இருந்துச்சு. ஆனா.... எப்படித்தான் இந்த அண்ணன், அக்கா வீடுவரை வந்துச்சுன்னு எனக்கு ஆச்சரியம். பாட்டிதான் சொன்னாங்களாம்...... 'உயிரோடு இருந்தப்பதான் பேச்சுவார்த்தையில்லாமக் கிடந்தே. இப்ப செத்தவகிட்டே என்ன சண்டை?' எனக்குப் பரிட்சை வருது அதனாலே சொல்லவேணாமுன்னும் அண்ணன் சொல்லிக்கிட்டு இருந்துருக்கு. பாட்டிதான் உடம்பிறந்தாளுக்குச் சொல்லலைன்னா அநியாயம். அந்தப் பாவத்தைச் சுமக்காதேன்னு சண்டை போட்டுருக்காங்க.


தொடரும்......................

Tuesday, December 09, 2008

அவந்திகாவின் அழைப்பை ஏற்று......

உண்மையைச் சொன்னாக் கண்டதையும் போனதையும் எழுதிக்கிட்டு இருக்கும் நான் மும்பைச் சம்பவம் பற்றியும் சொல்லி(?) இருக்கணும்தான். ஆனா.... தொலைக் காட்சியில் பார்த்து திக்கிச்சுப்போய் இருந்தேனே.....


சாதாரண மக்களுக்கு இருக்கும் போக்குவரத்துகளில் ரொம்பவே முக்கியமானது ரயில்வண்டிகள்தான். (ரெயில்வே சம்பந்தம் இன்னும் கொஞ்சம் என் ரத்தத்தில் ஒட்டியிருக்கு) அங்கேயும் தீவிரவாதமுன்னா.....

அதான் மீடியா பண்ண அட்டகாசத்தில் பார்த்துருப்பீங்களே..... என்ன? இல்லையா? ஆமாம். நீங்க சொல்றது ரொம்பச் சரி. தாஜ் ஹோட்டல் அமர்க்களத்தைக் காமிக்கத்தான் டைம் இருந்துச்சு. ரெயில்வே ஸ்டேசனையும், ஏழைபாழைகளையும் கவனிக்க யாருக்கு நேரம் இருக்கு?

சம்பவம் நடந்த மறுநாளும் அதுக்கு அடுத்த நாளும் நான் ஆஸ்தராலியாவில் இருந்தேன். அங்கே தொலைக்காட்சியில் 'தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகளால் ரெண்டு ஆஸ்தராலியர்கள்' கொல்லப்பட்டதைத் திரும்பத்திரும்பக் காட்டிச் சொல்லிக்கிட்டே இருந்தாங்களா....... கேட்டுக்கேட்டு ஒரு கட்டத்தில் அது என்னவோ 'நேற்று மழை பெய்தது' ன்னு சொல்றது போல ஒரு காதுக்குள்ளே புகுந்து மறு காது வழியா வெளியே போச்சு.

முதலில் கேட்ட,அதிர்ச்சியான நிகழ்வுகளை போகப்போக மனம் எப்படிச் சர்வசாதாரணமா எடுத்துக்குதுன்னு பார்த்தப்ப.....

உண்மை முகத்தில் வந்து அறைவது போல்,

இதுதான் தீவிரவாதிகளின் தாக்குதல் முதல்முறையா நடக்குதா? காலங்காலமாய்ப் பட்டுமா புத்தி வரலை? எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார் அமெரிக்காவைப் பாருன்னு சொல்றதை இங்கேயும்சொல்லியாச்சு அங்கத்து 9/11 மாதிரி இங்கே நடந்துருக்குன்னு.

உலகத்துக்கே ஒரே ஒரு 9/11 போதாதா? அதுலே இருந்து,மத்த நாடுகள் ஒன்னுமே படிக்கலையா? இதென்ன திருவிழாவா? எங்க நாட்டுலேயும் கொண்டாடுறோமுன்னு பெருமையடிச்சுக்க........


நாட்டின் பாதுகாப்பைப் பலமாக்கி இருக்கவேணாமா ? இதுக்குன்னு வருசாவருசம் ஒதுக்கும் மக்கள் வரிப்பணம் எங்கே போகுது? தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுன நம்ம பாதுகாப்பு வீரர்கள் ரெண்டு பேர் ஒரு துப்பாக்கியை மாத்திமாத்திப் பங்குவச்சுக்கிட்டு எதிரியைச் சுட்டுத் தள்ளுனாங்களாம்- எங்கூர் டிவி நியூஸ். விடிஞ்சது போங்க.

'என் கண்ணுக்குத் தீவிரவாதி தெரியறான். கொஞ்சம் துப்பாக்கியைத் தரயா? சுட்டுட்டுத் திருப்பிக் கொடுத்துடறேன்'

இப்போ... அண்டைநாடுதான் காரணம். அதோடு போர் நடத்தப்போறோம்...

வேணாம். நிறுத்து.ஆணிவேரையே பிடுங்க முடியுமா உன்னாலே? பேசாம உள்நாட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்து. போருக்குச் செலவு செய்யும் தொகையைக் கொண்டு கூடுதல் பலம் செஞ்சுக்கோ. அதே 9/11க்கு பிறகு அதே அமெரிக்காவின் பாதுகாப்பு முறைகளைப் பார்க்கலையா?


மனித உசுருங்க மலிஞ்சு போன நாடு, பணம் பதவி அதிகாரம் இவற்றை மட்டுமே வாழ்க்கையின் உன்னத நோக்கங்களாக் கடைப்பிடிக்கும் அரசியல்வாதிகளைக் கொண்ட அதிர்ஷ்டம் கெட்ட நாடு....


அதெப்படிங்க...தேனை எடுத்தவன் கையை நக்காமல் விடுவானா? நக்கிக்கோ. ஆனால் கொஞ்சூண்டு நக்கிக்கோ. முழுசையும் நக்கிட்டு, வெறும் பாத்திரத்தைக் காமிச்சா எப்படி?

நாட்டு மக்கள் எல்லாம் செத்து நாடே சுடுகாடு ஆனபிறகு என்ன பண்ணப்போறே? எல்லாத்துலேயும் ஊழல் செஞ்சு அமுக்குனதைச் செலவு செய்யவாவது நாடு வேணாமா?

பெருச்சாளிகளை ஒன்னும் செய்ய முடியாதுன்னா.....

மதத்தின் பெயரால் அக்கிரமம் செய்யும் தீவிரவாதிகளும் எல்லாரையும் கொன்னுட்டு அப்புறம் மதத்தை எங்கே போய் பரப்புவாங்க?

நினைச்சுப் பார்க்கப்பார்க்க மனசுதான் சரியில்லாமப்போகுது(-:

ஆனா நம்பிக்கையே இல்லைன்னா நாம் வாழறதுக்கு ஒரு அர்த்தமே இல்லாமப் போயிருமே. இப்போதைய நம்பிக்கை இளைய சமுதாயம்தான்.
இவுங்க தன்னம்பிக்கையோடு, செயல்பட்டா ஊழல் இல்லாத ஒரு சமூகத்தை, நாட்டை உருவாக்க முடியும். ஊழல் தொலைஞ்சாவே பாதி பலம் வந்த மாதிரி. மீதி பலத்தைப் பாதுகாப்பு கொடுக்கும்.

புலம்ப ஒரு சான்ஸ் கொடுத்த அவந்திக்கு நன்றி.அவுங்களுக்கு இருக்கும் நாட்டுப்பற்று, போற்றிப் பாராட்டவேண்டியதொன்று.


தொடர்பதிவுக்கான அழைப்பு உங்கள் எல்லாருக்கும்தான். எழுதுங்க.

Monday, December 08, 2008

அக்கா ( பகுதி 8 )

டிசம்பர் லீவுக்கு நான் மறுபடி அக்கா வீட்டுக்குப்போனேன். அக்காவுக்கு உடம்பு சரியில்லை. உதவிக்கு என்னைவிட்டா வேற யார் இருக்கா? அக்காவுக்கு ஒரு கருச்சிதைவு நடந்து இருந்த சமயம். வீடு அப்படியே இருந்தாலும் புதுசா ஒரு அட்ராக்ஷன் என்னைக் கவர்ந்தது. ஹைய்யான்னு கூத்தாடுனேன். நம்ம வீட்டில் கிணறு வந்துருச்சு. அதை ஒட்டி ஒரு குளியல் அறை. ஆமாம்......ஒரு கதவு வச்சுருக்கக்கூடாது? முந்தி ஓலை முடைஞ்ச தட்டிவச்ச 'பாத்ரூம்' இருந்த இடத்தில் கொத்துக்கொத்தாக் காய்களோடு நாலைஞ்சு பப்பாளி மரங்கள். கிணறுக்குப் பக்கத்தில் துணி துவைக்கும் கல்.

வீட்டுக்குள்ளே தண்ணீர் பிடிச்சுவைக்கும் தவலைகள் எல்லாம் மூலையில் கவுத்திக்கிடக்கு. ரெண்டே குடம் மட்டும் முன்பக்கம் இருக்கும் சமையல் அடுப்பையொட்டி. பக்கத்து வீட்டு கணேஷ் சாருக்குக் கலியாணம் ஆகி இருந்துச்சு. அவுங்க மனைவி பாலா, நம்ம அக்காவுக்கு ரொம்ப தோஸ்த்தாப் போயிட்டாங்க. இங்கேயேதான் நாள் முச்சூடும் இருக்காங்க.
பாலா அக்கா நல்ல கலகலப்பானவங்க.. கணேஷ் சார் நல்லா கலரா இருப்பார். பாலா அக்கா நேரெதிரா இருப்பாங்க. முகத்துலே வேற நிறைய பரு இருக்கும். அதனால் என்னமோ ஒரு சோப் போட்டு முகத்தைக் கழுவிக்கிட்டே இருப்பாங்க. அவுங்க வீட்டுக் கிணத்தடியிலேயே அந்த சோப்பு டப்பா கிடக்கும். அவுங்க வீட்டுப் பக்கம் வேலி இன்னும் நல்லா அகலமாப் பிரிச்சுவிட்டுக் கிடக்கு. நடமாட்டம் கூடிப்போச்சுல்லே!

மதீனா அக்காவுக்கு இப்போ மூணாவது, வயித்துலே. முதல் பையனுக்கு இன்னும் சோறும் குழம்பும் நம்ம வீட்டுதுதான் வேணுமாம். வழக்கம்போல் மதியானத்துக்கு, வாத்தியார் வூட்டம்மா''ன்னு கூப்புட்டுக்கிட்டே வந்து கொஞ்சம் குழம்பு வாங்கிக்கிட்டுப் போறாங்க.

ரேணு நல்லாவே வளர்ந்துருக்கு. வயிறு சரியாப்போச்சு போல. கிண்டியில் பால் குடிக்கிறாள். 'பால் குடிச்சு முடிச்சதும் கிண்டியைப் பிடுங்கி வச்சுரு'ன்னு அக்கா சொன்னது முதலில் எனக்குப் புரியலை. குடிச்சு முடிச்சதும் தத்தக்கா பித்தக்கான்னு நடை போட்டுக்கிட்டே நேராக் கிணத்துக்குள்ளே வீசி எறிஞ்சது கிண்டியை!!! கையில் எது கிடைச்சாலும் இப்பெல்லாம் கிணத்துக்குத்தானாம். பேச்சு சரியா வரலை. அவளுக்குச் சொல்லவரும் ஒரே சொல் 'நானு'

ஆஹா.....

வசதியாப் போச்சு வீட்டுலே இருக்கறவங்களுக்கெல்லாம். யார் எதை உடைச்சாலும் அந்தப் பழி ரேணுவுக்கு! மாமா கத்தறார்,

"புது ஃப்ளாஸ்க், யார் உடைச்சா? "

"ரேணு ப்பா"

கோரஸ் ஒலிக்குது.

ரேணு.....யார் உடைச்சா?. சொல்லு"

"நானு"

ஐயோ....................பொரியல் தீஞ்சதுக்குப் பழியை ரேணு மேலே போடலாமான்னு எனக்கும் ஒரு யோசனை :-)))))

மெட்ராஸ்லே பெரிய டாக்டர்கிட்டே காட்டலாமான்னு கேட்டதுக்கு, 'என்னத்து அதெல்லாம்? தானே சரியாயிரும். நீகூடத்தான் திக்கு வாயா இருந்தே'ன்னு குண்டைத் தூக்கிப் போட்டுச்சு அக்கா. நானா? எப்போ?

ரெண்டு வயசுலேயே கொள்ளுகொள்ளூன்னு பேசிக்கிட்டு இருந்தேனாம். அப்புறம் திடீர்னு பேச்சு திக்க ஆரம்பிச்சதாம். பேச ஆரம்பிக்கும் முதல் சொல்தான் கஷ்டமாம். நான், பெ பெ பெ பெ பென்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே, 'ம் சொல்லு பெரியக்கா' நா நா நா நா........ நானு
இப்படியே எடுத்துக் கொடுப்பாங்களாம் சின்னக்காவும் அண்ணனும். முதல் சொல்லைச் சொல்ல நேரமெடுத்தாலும் ரெண்டாவது சொல்லில் இருந்து திக்காமப் பேசுவேனாம். ஆனா மொதச் சொல்லைச் சொல்லவிடாம செஞ்சா எப்படி? அக்காதான் 'அவ சொல்லட்டும். நீங்க போங்க இங்கெ இருந்து'ன்னு அவுங்களை விரட்டுமாம். தொண்டை நரம்புலே எதோ கோளாறுன்னு அம்மா மருந்து மாத்திரை கொடுத்தாங்களாம். அக்கா சொல்லச் சொல்ல 'ஆஆஆஆ' ன்னு கேட்டுக்கிட்டு இருந்தேன்.

தினம் தினம் காலையில் மொக்கன் என்ற ஆள் வந்து கிணத்துக்குள்ளே இறங்கி, தட்டு, கிண்டி, கரண்டி ன்னு ஏழெட்டு சாமானை வாரிக் கொண்டுவந்து கிணத்துலே தொங்கும் வாளியில் வைக்கறதும், நாங்க வாளியை வெளியே இழுத்துப் பாத்திரங்களையெல்லாம் தேய்ச்சு வைக்கிறதுமா இருக்கு. மொக்கனுக்குப் பலகாரச்செலவு நாலணா கொடுத்துறணும். நாங்கள் ரெகுலர் கஸ்டமர்கள்:-))))

இப்பெல்லாம் வீட்டுலே எதுவும் காணோமுன்னா தேடல்லாம் மாட்டொம். கிணத்துக்குள்ளே கிடக்கும். நாளைக்கு மொக்கன் வரட்டும்.

வீட்டுக்குள்ளே பழைய அடுப்பங்கரை இருட்டுமூலையில் ரெண்டு கயித்துக்கட்டிலைத் தடுப்பாட்டம் சரிச்சு நிக்கவச்சு ஒரு ரூம்! அதுக்குள்ளே என்னென்னவோ பாத்திரங்கள். ரேணுவின் கைக்கு எட்டாமல் இருக்கணுமுன்னு வச்ச தடுப்புகளாம். நம்மூட்டுது மாதிரி இல்லையேன்னு பார்த்தப்ப...... வாசலில் யாரோ அக்காவோட பேசற சத்தம் கேட்டு வெளியில் வந்தா..... அடுத்த தெருக்காரம்மா ஒரு சருவச்சட்டியையும் செப்புத் தோண்டியையும் வச்சுக்கிட்டு நிக்குது. தண்ணி எடுத்துட்டுப்போக வந்துருப்பாங்கன்னு நினைச்சா...........அக்கா இடுப்புலே இருந்து ஒரு சுருக்குப்பையை ( அட! இது எப்போலே இருந்து?) எடுத்து அஞ்சு ரூபாயைக் கொடுத்துச்சு. அந்தம்மா பாத்திரத்தை ஓரமா வச்சுட்டுப் போனாங்க.

"ஈரமா இருக்கா பார்"

"இல்லேக்கா"

"சொட்டைகிட்டை இருக்கா"

"இல்லியேக்கா"

" கொண்டுபோய் கட்டிலுக்கு அந்தப் பக்கம் மூலையில் வச்சுட்டுவா. பார்த்து, சரிஞ்சுபோகாமக் கவுத்து வை.அங்கெயே ஒரு உறி இருக்கு பாரு. அதுலே இருக்கும் பானையில் ஒரு சின்ன நோட்டு இருக்கும் கொண்டா"

அக்கா இப்போ வியாபாரம் பண்ணுதா என்ன? சித்தி, காசு கொடுத்துவச்சுருக்காங்களாம்.எல்லாம் அவுங்க ஏற்பாடுதானாம். அக்கம்பக்கத்து பொம்பளைங்க, ஆத்திர அவசரத்துக்கு எதாவது பாத்திரபண்டம் கொண்டுவந்து ஈடுவச்சுட்டுக் காசு வாங்கிட்டுபோறாங்களாம். அப்புறமா வந்து மூட்டுக்கிட்டுப் போயிருவாங்களாம்.

வட்டிக்கடையா வச்சுருக்கு? சரியான பிஸினெஸ் உமன் தான். வட்டின்னு ஒன்னும் பெருசா இல்லையாம். அஞ்சு ரூபாய்க்கு அம்பது காசாம். பாத்திரங்களை நாம ஆண்டுக்கலாம். முந்திமாதிரி இருந்தா அக்கா அதுலேகூட தண்ணீ ஊத்தி வச்சுக்கும். இப்பக் கிணறு வந்துட்டதாலே வேணுங்கறப்ப சேந்திக்கறதுதான்.

அக்கா திண்ணையைவிட்டு மெதுவா எழுந்துவந்து உள்ளே கூட்டிக்கிட்டுப் போச்சு. பொட்டியைத் திறந்து ஒரு பழைய பாரீஸ் மிட்டாய் டப்பாவை எடுத்து என் கையில் கொடுத்து, 'திறந்து பாரு'ன்னுச்சு. அம்மாடியோவ்.....
நகைங்க! இதுவரை நான் பார்க்காத டிஸைன். கறுப்புக் கயறுலே அங்கங்கே தங்கத்துலே மல்லி மொட்டு கோர்த்து வச்சுருக்கு. சிலதுலே காப்பவுன் காசு,
சிலது கறுப்பு பாசி மணிக்கிடையில் வட்டவட்ட பில்லையா இருக்கு. அந்த பில்லையில் நிலா, நட்சத்திரமுன்னு டிஸைன். பெரிய பெரிய கம்மலுங்க, பட்டை பட்டையா மாட்டலு இப்படி. ஒரு பதக்கம் வச்ச அட்டியல் கூட இருந்துச்சு. அடகுக்குவந்த நகைகளாம். எதாவது பிடிச்சிருந்தாப் போட்டுக்கோன்னு சொல்லுச்சு. சங்கிலியா ஒன்னும் இல்லை. மோதிரம் ரெண்டு மூணு இருக்கு. அளவு பெருசா இருக்கே.

அப்புறம் ஒரு நாள் அக்காவோட பனாரஸ் புடவையைக் கட்டிக்கிட்டு, அந்த அட்டியலைப் போட்டுக்கிட்டேன். மாமா வந்து பார்த்துட்டு, ஆச்சரியப்பட்டுப் போனார். புடவையைக் கழட்டி வைக்காம இங்கே அங்கேன்னு நொரைநாட்டியம் பண்ணிக்கிட்டு இருந்தேனா..... அடுப்புலே நீட்டிக்கிட்டுக் கிடந்த விறகுக் கட்டை முள்ளில் புடவை மாட்டிக்கிட்டு அடிப்பக்கம் கரையிலே கிழிஞ்சுருச்சு. அப்பெல்லாம் புடவைக்கு ஃபால்ஸ் வச்சுத் தைக்கும் வழக்கம் வரலையே(-:


தொடரும்................

Sunday, December 07, 2008

PIT ம் BITS ம்


போட்டோ போட்டிக்கு


மகள் வீட்டு மரம்:-)ஏ குருவி.... சிட்டுக்குருவி


இன்றலர்ந்த லில்லிஆரஞ்சுபருத்திப்பூ?பட்டு வண்ண ரோசாவாம்.... பார்த்த கண்ணு மூடாதாம்முள்ளுக்கு ஒரு மலர்க்கிரீடம்காஸ்மாஸ் ( தமிழில் மாங்காய்நாரி)

ரோசாப்பூ சின்ன ரோசப்பூசெம்பருத்திப்பூவு...சித்திரத்தைப் போல....காத்திருப்பான் கமலக் கண்ணன்:-)பறிக்கவா உன்னை?
என் ரசிகர்களே...... ....என்னை தெரியுமா?