Wednesday, December 10, 2008

அக்கா ( பகுதி 9 )

ஆம்பளைப்பிள்ளைப் பிறந்து முரளின்னு பேர் வச்சுருக்காங்களாம். ரெண்டு
வாரத்துக்கு ஒரு முறைதான் விசிட்டர்ஸ் டே. அண்ணன் வந்தப்பச் சொன்னார். இன்னும் அவரும் போய்ப் பார்க்கலையாம். வயசான காலத்துலே, பாட்டி மட்டும் தனியாப் போய்ப் பார்த்துட்டு வந்துருக்காங்க. அக்காவோட மாமியார் இப்ப மகன் இருக்கும் ஊருக்கே வந்துட்டாங்க. ஆனாலும் இவுங்ககூட வந்து இருக்காம, ஊருக்குள்ளே பஸ் ஸ்டாண்டு பக்கம், கடைவீதியிலே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கிட்டு, அவுங்க சாப்பாட்டுக்கடை நடத்திக்கிட்டு இருக்காங்களாம். ரெண்டு பையனுங்க வேலை செய்யறானுங்களாம். கூடமாட நிர்வாகம் செய்ய, உறவுக்காரப் பையன் (மாமாவுக்குத் தம்பி முறை) ஒருத்தனு(ரு)ம் வீட்டோடயே வந்துட்டாராம்.

பேரன் பிறந்தபிறகுதான் வீடே நல்லாகுமுன்னு யாரோ ஜோசியர் கொளுத்திப் போட்டுருக்கார். பெரிய லீவு வரட்டும். நாம போய்ப் பார்த்துட்டு வரலாமுன்னு அண்ணன் சொன்னார். கிறிஸ்மஸ் லீவு விட்டப்ப நான் பாட்டி வீட்டுக்குப் போனேன். அண்ணனும் பாட்டி வீட்டுலேதான் இருக்கார். எங்க பாட்டியும் ஒரு சித்தியும் அவுங்க மகனும்தான் அங்கே இருந்துக்கிட்டுருக்காங்க. இப்ப நாங்க ரெண்டு டிக்கெட் கூட:-)

எங்க பாட்டி வீடுதான் எல்லாருக்கும் ஹெட் ஆஃபீஸ் மாதிரி. தாய்மாமனுங்க, சித்திங்க எல்லாரும் அங்கே வரப்போகன்னு இருப்பாங்க. காலையில் ஒரு அஞ்சுமணிக்குக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டாக் 'கண்ணை மூடிக்கிட்டு'ச் சொல்லிறலாம் அது எங்க அக்கா மாமான்னு. எங்க பாட்டிதான் உறக்கம் வராம நாலுமணியில் இருந்தே வீட்டுக்குள்ளே நடந்துக்கிட்டு இருப்பாங்க பாத்ரூம்வரை போறதும் வாரதுமுன்னு. சிலசமயம் இருட்டுலே எங்க கை, காலை மிதிச்சுருவாங்க. நாங்கதான் படுக்கறது ஒரு இடமுன்னா உருண்டு புரண்டு ஹால் முழுக்க போய்க்கிட்டு இருப்போமே:-) இந்தப் படுக்கைப் போடறதைப் பத்திக்கூடச் சொல்லனும். 'அப்புறம் கதை' களில் சேர்த்தால் ஆச்சு:-)

மாமா, உடற்பயிற்சி ஆசிரியருன்னு சொன்னது நினைவு இருக்குங்களா? பள்ளிக்கூடத்துக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கிப்போகறதுக்குன்னு வருசத்துக்கு நாலைஞ்சுமுறை, மெட்ராஸுக்கு வந்து போவார். செண்ட்ரல் போய் இறங்காம, நம்மூர்லேயே இறங்கி பத்துப் பதினைஞ்சு நிமிச நடையில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு வந்து எல்லாரையும் பார்த்துப்பேசிக் குளிச்சு முடிச்சு அப்புறம் ஒரு ஒம்பது மணி வாக்குலேக் கிளம்பி மவுண்ட் ரோடுக்குப் போய் வேண்டியதையெல்லாம் வாங்கிக்கிட்டு ராத்திரி வண்டியில் திரும்பிப் போயிருவார்.

பலநாள், பேச்சுச் சத்தம் கேட்டு அரைமுழிப்பு வந்தாலும், எந்தக் கவலையும் இல்லாமத் தூங்குவேன். 'பக்கத்துலே குண்டு போட்டால் கூடத் தெரியாது. ராட்சஸத் தூக்கமு'ன்னு பாட்டி சொல்வாங்க. அவுங்களுக்கு வயசாகிப்போச்சு. தூக்கமே வர்றதில்லைன்னு புலம்பும்போது, என் தூக்கம் ஒருவேளை புகைஞ்சுருக்கும்! சிலசமயம் கனவுபோல அவுங்க பேசறதெல்லாம் கேக்கும்தான்.

"பேரனைப் பார்க்காம ஒரு நாளு கூட இருக்க முடியாது.. அதான் அம்மா ஊரோடு வந்துட்டாங்க. அவுங்க கடை இங்கே ரொம்ப நல்லாப் போகுது. நானும் பள்ளிக்கூடம் விட்டதும் அங்கே போய் அம்மாவுக்கு உதவியா(??) இருந்துட்டு வருவேன். அக்காவுக்கு இப்ப நல்ல ரெஸ்ட். வேலையே இல்லை"

இப்படி மாமா வரும்போதெல்லாம் அக்காவைப் பத்தின சேதி, புள்ளைங்க எப்படி இருக்காங்க என்ற விவரமெல்லாம் கிடைச்சுக்கிட்டு இருந்துச்சு. கடுதாசி எழுதுற வழக்கம் அத்துப்போனது போலத்தான் பாட்டி வீட்டுலே . ஆனா எங்க பள்ளிக்கூடத்துலே மாசம் ஒருமுறை, நாங்க வீட்டுக்கு லெட்டர் எழுதணுமுன்னு ஒரு நியமம். அதுக்காக நான் மாசம் ஒருக்கா, அக்காவுக்குக் கடிதம் எழுதுவேன். எல்லாக் கடிதத்தையும் டீச்சர் படிச்சுப் பார்த்து அனுப்புவாங்க. இதுலே வம்பு என்னன்னா..... ஆங்கிலத்துலேதான் எழுதணும். நம்ம ஸ்பெல்லிங் & க்ராமர் மிஸ்டேக்குகளுக்கு வகுப்பிலே எல்லார் முன்னாலேயும் நமக்கு லெக்சர் கிடைக்கும். இதுக்குப் பயந்துக்கிட்டேத் தொந்திரவு இல்லாம 'டியர் அக்கா, ஹௌ ஆர் யூ? ஐ ஆம் டூயிங் வெல் & ஸ்டடியிங் வெல்'ன்னு ஆரம்பிச்சு நாலுவரியோடு நிப்பாட்டிக்கறதுதான். எப்படா பெரிய லீவு வரும் அக்காவைப் பார்க்கலாமுன்னுக் காத்திருந்தேன்.

எங்க சின்னக்காவும் இதே ஊர்லேதான் இருக்காங்க. அவுங்க வீட்டுக்குப் போய்வரணுமுன்னா அண்ணன் அனுப்பவே அனுப்பாது. நாந்தான் அடம்பிடிச்சுப் போய்ப் பார்த்துட்டு வருவேன். பள்ளிக்கூட விஸிட்டர்ஸ் டே வில் சின்னக்காவும், மாமாவும் சில சமயம் வந்து பார்த்துட்டுப் போவாங்க.
சின்னக்கா அப்போ கர்ப்பமா இருந்துச்சு. பிரசவத்துக்குப் பெரியக்கா வீட்டுக்குப் போகணுமுன்னு ஒரேதாப் பிடிவாதம் பிடிச்சுப் போயிருந்துச்சு. அஞ்சு பிள்ளைப் பெத்த அனுபவஸ்தியாச்சே அக்கா.


திடீர்னு ஒரு நாளு, அண்ணன் வந்து, 'ப்ரின்ஸி'கிட்டே அனுமதி வாங்கி ரெண்டு நாளுக்கு வீட்டுக்குக் கூட்டிப்போனார். அடுத்த வாரம் பரிட்சை வருது. அதுக்குப் படிக்கணும். இப்போ எதுக்காக வீட்டுக்குப் போகணும்? இது வீகெண்ட் கூட இல்லையேன்னு இருக்கேன். கூடப்படிக்கிறப் பசங்க, 'ஜாலிதான் உனக்கு. போயிட்டு வா'ன்னு பெருமூச்சு விட்டுச்சுங்க. பஸ்ஸுலே வரச்சொல்ல அண்ணன், நான் கேட்டதுக்கு ஒன்னும் சொல்லாமப் பொதுவாப் பேசிக்கிட்டு வந்தார். சின்னக்கா வீட்டைத் தாண்டிதான் ஊருக்குள்ளே வண்டி போகும். அங்கேயே இறங்கிக்கலாமுன்னு அண்ணன் சொல்லி நாங்க இறங்கிக்கிட்டோம். எனக்கு ஒரே ஆச்சரியம். அண்ணனும் அக்காவும் பழம் விட்டுட்டாங்க போல! வீட்டு வாசலில் கொஞ்சம் கூட்டமா மத்த சொந்தக்காரங்க நடமாடிக்கிட்டு இருந்தாங்க. சரிதான். சின்னக்காவுக்குக் குழந்தை பிறந்து, ஊருக்கு வந்துருச்சு, அதான் விசேஷமுன்னு வீட்டுக்குள்ளே ஓடுனேன்.

அக்கா போட்டோவை வச்சு, அதுக்கு முன்னாலே அக்காவோட நகைநட்டு, துணிமணின்னு வச்சுப் படைச்சிருந்தாங்க. சுவத்தோரமாப் பெரியக்காக் கண்ணீரோட முகம் வீங்கி உக்கார்ந்துருக்கு. மடியிலே ஒரு புள்ளை. நாலைஞ்சு மாசம் இருக்கும். அக்காகிட்டேத் தாவி ஓடுனேன். ஒருகையாலே என்னை அணைச்சுப் பிடிச்சுக்கிட்டுக் கதறுது. எனக்கும் ஒரே அழுகை. அங்கே இருந்த எல்லாருக்கும் அடக்கமுடியாமப் போய்.........ஹூம்....
(சம்பவத்தைப் பத்தி இங்கே இருக்கு பாருங்க)

அக்கா மகன் முரளி, அழகா இருந்தான். அக்காவை மட்டும் கைக் குழந்தையோடு ரயிலேத்தி விட்டுட்டு மாமா வரலையாம். மத்த புள்ளைங்களையும் பார்த்துக்கணுமே. சோத்துப் பிரச்சனை இல்லை. மாமியார் கடைதான் இருக்கே. நாலைஞ்சு நாள் இருந்துட்டுப் போயிருமாம். எனக்குத்தான் மறுநாளே திரும்பிப்போகணும். இன்னும் ரெண்டுநாள் லீவு கேட்டுருக்கலாமுல்லே இந்த அண்ணன்னு இருந்துச்சு. ஆனா.... எப்படித்தான் இந்த அண்ணன், அக்கா வீடுவரை வந்துச்சுன்னு எனக்கு ஆச்சரியம். பாட்டிதான் சொன்னாங்களாம்...... 'உயிரோடு இருந்தப்பதான் பேச்சுவார்த்தையில்லாமக் கிடந்தே. இப்ப செத்தவகிட்டே என்ன சண்டை?' எனக்குப் பரிட்சை வருது அதனாலே சொல்லவேணாமுன்னும் அண்ணன் சொல்லிக்கிட்டு இருந்துருக்கு. பாட்டிதான் உடம்பிறந்தாளுக்குச் சொல்லலைன்னா அநியாயம். அந்தப் பாவத்தைச் சுமக்காதேன்னு சண்டை போட்டுருக்காங்க.


தொடரும்......................

32 comments:

said...

அய்!எல்லோரும் கடைய சாத்திட்டுப் போயிட்டாங்க!ராப் ஸ்டைல்ல நான் தான் முதல்!

said...

சோகமும் சுமையும்.
ஹும் அப்புறம்..

said...

கதை ரொம்ப ஜெர்க் ஆவுது. கொஞ்சம் வேகமாப் போகணுமுன்னு மெனக்கிட்டு விரட்டற மாதிரி தோணுது. நீங்க நிதானமா உங்க ஸ்பீடில் ஓட்டுங்க. அதான் நல்லா இருக்கு.

said...

அய்யய்யோ, துளசி மேடம், ரொம்ப சாரி. நான் முன்ன போட்ட பின்னூட்டத்தை வெளியிடாம டெலிட் பண்ணிடுங்க:(:(:(

said...

அடடா, அப்போவும் அண்ணன் தானா வரலையா, பாட்டி சொல்லித்தான் வந்தாரா:(:(:( அவ்ளோ சீக்கிரமா, ரெண்டு நாள் கழிச்சு பள்ளிக்கூடம் போனப்போ உங்களால பள்ளி விஷயங்களில் கவனம் செலுத்த முடிஞ்சுதா?

said...

அழ வச்சிட்டீங்க...இதுக்கு மேல எழுத முடியல...மிச்சத்தை அப்புறமா எழுதறேன்

said...

நேத்து யதேச்சையா உங்க பழைய பதிவுகள லிங்க்கினப்போ, சின்னக்கா கதையப்படிச்சேன்..அண்ணன்கூட பேசாத வைராக்கியம், கடின உழைப்பு, நிதிமதி(மதியூக நிதிமந்திரி எனப்பொருள் கொள்க)....கடவுள் அழைக்கலன்னா உங்க எல்லோரையும்விட ரொம்ப டாப்-ல இருந்திருப்பாங்கன்னு தோணுது...

said...

//சிலசமயம் இருட்டுலே எங்க கை, காலை மிதிச்சுருவாங்க. நாங்கதான் படுக்கறது ஒரு இடமுன்னா உருண்டு புரண்டு ஹால் முழுக்க போய்க்கிட்டு இருப்போமே:-) இந்தப் படுக்கைப் போடறதைப் பத்திக்கூடச் சொல்லனும். 'அப்புறம் கதை' களில் சேர்த்தால் ஆச்சு:-)//

டீச்சர், அந்தக் கதையையும் போட்டிருக்கலாம்ல..:)

உங்க நடை இன்னிக்கு ஸ்பீடா இருக்கிற மாதிரி இருக்கு.. :(

said...

சின்னக்கா கதைக்குப் பின்னால இவ்வளவு இருக்கா? அண்ணா பேசத்தான் இல்லை..அன்னிக்கு அழக்கூட இல்லையா டீச்சர்?

said...

இந்தப் பாகத்தின் வேகத்துக்கு காரணம் ரசித்து அனுபவித்து சொல்லக் கூடிய விஷயங்களை விட மடமடவென கடக்க வேண்டிய விஷயங்கள் அதிகம் இருந்ததே. சரியா?

எம்.ரிஷான் ஷெரீப் said...
// அண்ணா பேசத்தான் இல்லை..அன்னிக்கு அழக்கூட இல்லையா டீச்சர்? //

வருத்தம் இருந்திருக்கும். அதை ஈகோ அமுக்கியிருக்கும். சரியா?

said...

சகோதர சகோதரிக்குள் இது போன்ற உரசல்கள் இருக்கும். ஆனால் உள்ளுக்குள் பாசத்துடன் தான் இருப்பார்கள். ஒரு ஈகோவில் தான் எல்லாம்.
அப்புறம் கொஞ்சம் சோகமாவும் ஆயிடுச்சி...

Anonymous said...

சின்னக்காவைப்பத்தி அண்ணன் எதுவும் பேசவேயில்லையா

said...

வாங்க ராஜ நடராஜன்.

போணி பண்ணுனதுக்கு நன்றி:-)

நாந்தான் ஊருக்கு முந்தி கடை தொறக்கற ஆள். டேட் லைனில் உக்கார்ந்துருக்கேனே:-)))

said...

வாங்க நசரேயன்.

இது ரெண்டும் இல்லாத வாழ்க்கை இருக்கா என்ன?

said...

வாங்க கொத்ஸ்.

நடுவில் தடிமனா ஸ்பீட் ப்ரேக் இருக்குப்பா. அதான் ஜெர்க் ஆகிருச்சு:-)

said...

வாங்க ராப்.

இழந்ததின் அருமை அவ்வளவாத் தெரியாத ஒரு ரெண்டுக்கட்டான் பருவம் அது(-:

said...

வாங்க நரேன்.

அப்புறமாத்தான் வாங்க. நோ ப்ராப்ளம்.

said...

வாங்க தங்ஸ்.

நீங்க சொன்னதையே நானும் பலமுறை நினைச்சுருக்கேன். அவுங்க மட்டும் இருந்துருந்தா.....நெசமாவே டாப்லேதான்.

said...

வாங்க ரிஷான்.

இந்தப் பகுதியில் அக்காவோடு நேரடித் தொடர்பு இல்லாம வெவ்வேற இடத்துலே இருந்துட்டோமே. அதுதான் ஸ்பீடாப் போறமாதிரி தெரிஞ்சுருக்கு.

ஆம்பளை அழக்கூடாதுன்னு சொல்லி வச்சுருக்கும் சமூகமாச்சேப்பா நம்மது. அப்ப எப்படி அண்ணன் அழுதுருப்பார்?
நோ சான்ஸ்

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கதை அக்காவைச் சுத்தின்றதாலே இந்தப் பகுதி வேகமாத் தோணி இருக்கலாம்.

//வருத்தம் இருந்திருக்கும். அதை ஈகோ அமுக்கியிருக்கும். சரியா?//

ஆமாம். இப்படியும் இருக்க வாய்ப்பு உண்டு

said...

வாங்க தமிழ் பிரியன்.

நம்மாட்களுக்கு 'ரோசம்' கூடுதலாச்சேப்பா. அதுதான் காரணம்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

எனக்குத் தெரிஞ்சு அவர் எப்பவுமே பேசுனதில்லை (-:

said...

ஸாரி டீச்சர் :-(

said...

ம்....

உதவிக்கு பக்கத்துல என்ன ஒரு கேள்விக்குறி.. மாமா உதவி செய்து பாத்ததே இல்லியேன்னு வந்த டவுடா அது..

said...

வாங்க நான் ஆதவன்.


இப்போ எதுக்கு சாரி? நடந்து நாப்பதுவருசம் ஆகுதே.

said...

வாங்க கயலு.

என்ன உதவி என்ற குழப்பம்தான்:-))))

said...

இந்தப் படுக்கைப் போடறதைப் பத்திக்கூடச் சொல்லனும். 'அப்புறம் கதை' களில் சேர்த்தால் ஆச்சு:-)
இப்படியா..........ய் நெறைய சேர்த்து வெச்சிருக்கீங்க. சீக்கிரம் இன்னொரு ப்லாக் ஆரம்பிங்க, அப்புறம் கதைகள்னு.


ஆங்கிலத்துலேதான் எழுதணும். நம்ம ஸ்பெல்லிங் & க்ராமர் மிஸ்டேக்குகளுக்கு வகுப்பிலே எல்லார் முன்னாலேயும் நமக்கு லெக்சர் கிடைக்கும். இதுக்குப் பயந்துக்கிட்டேத் தொந்திரவு இல்லாம 'டியர் அக்கா, ஹௌ ஆர் யூ? ஐ ஆம் டூயிங் வெல் & ஸ்டடியிங் வெல்'ன்னு ஆரம்பிச்சு நாலுவரியோடு நிப்பாட்டிக்கறதுதான்.//
வாட் ப்ளட் சேம் ப்ளட்

சம்பவத்தைப் பத்தி இங்கே இருக்கு பாருங்க)//
படிச்சேன் மேடம்,
ரொம்ப நெகிழ்ந்துட்டேன்
............

said...

வாங்க அமித்து அம்மா.

'அப்புறம் கதைகள் ஆயிரத்து நூறு' ன்னு தலைப்பு வைக்கப்போறேன்.:-)))

said...

சரோ அக்காவுக்கும் உங்களுக்குமான நெருக்கம் எப்படி? உங்களுக்கும் பெரிய அக்காவுக்கும் இருந்ததை விட கொஞ்சம் குறைச்சல் போல படுதே...சரோ அக்கா அண்ணன் கூட பேசலை சரி..மத்தவங்க கூட எப்படி இருந்தாங்க? உங்க கூட..பெரிய அக்கா கூட..பட்டும் படாமே தானா..இல்ல நீங்க யாருமே அவங்க கூட ரொம்பவும் ஒட்டலியா? குடும்பத்துல நடுப் பிள்ளைகளுக்கான வரம் இது தானோ ? மூத்த பிள்ளைக்கும் கடைக்குட்டிக்கும் கிடைக்கிற பாசம் இவங்களுக்கு எப்பவுமே கிடைக்கறதில்லையோ? பாசம் இல்லாம இருக்காது.. ஆனா எப்பவும் ஏதோ ஒண்ணு குறையிற மாதிரியே....ஆனா இவாங்களைத் தான் ரொம்பவும் பொறுப்பா இருக்கணும்னு வேற எதிர் பாப்பாங்க... அதனாலேயோ என்னவோ இந்த பிள்ளைகள் ரொம்பவும் deciplined-ஆ இருப்பாங்க..அது தான் போன இடத்துல அக்கா ரொம்பவும் பொறுப்பா கட்டு செட்டியா இருந்தாங்களோ? ஹரி கதைக்கான inspiration நீங்க நாலு பேரும் தானா? விஜயாவும் சரோ அக்காவும் ஒண்ணு தானா..

said...

நரேன்,

அடுக்கடுக்காக் கேட்டுட்டீங்க!!!!

பெரியக்காவின் திருமணம் முடிஞ்சவுடன் நம்ம வீட்டிலே கோ ஆர்டினேட்டர் இல்லாத விழா போலத்தான்.....

சின்னக்கா, அண்ணனைவிட மூத்தவுங்க. அவுங்கதான் பேசிக்கமாட்டாங்களே.

நான் ரொம்பச் சின்னவ. வயசு வித்தியாசம் கூடுதல் என்றபடியால் அவுங்க உணர்வுகளைப் புரிஞ்சு ஒரு தோழியா இருந்துருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் நல்ல கம்பெனி குடுத்துருக்கேன், அவுங்க கல்யாணம் நடக்கும்வரை:-)

நானும் லேசுப்பட்டவ இல்லை. அந்த வயசுலே, நியாயமுன்னு எனக்குத் தோணுதைச் செஞ்சுருக்கேன்:-))))

ஹரியின் கதையில் பிஜயாவை சின்னக்காவை வச்சு எழுதலை. ரெண்டு பேருக்கும் குணத்தில் ஆயிரம் வித்தியாசங்கள் உண்டு.



அது தனி, இது தனி.

எல்லாத்துலேயும் கொஞ்சம் புனைவும் வரும் வாய்ப்பு இருக்குல்லே:-)))

said...

இங்கையும்..அங்கையும் படிச்சிட்டேன்..;(

தங்ஸ் அண்ணாச்சி சொன்னது போல அவுங்க டாப்பு தான்..

சின்ன அக்காவை கும்பிட்டுகிறேன்..

said...

வாங்க கோபி.

மறுஜென்ம நம்பிக்கை இருக்கா?

அப்ப வேற எங்கியாவது பொறந்து நிதி மந்திரியா இருக்காங்களோ என்னவோ!!!