Thursday, March 31, 2005

இணைய மகாநாடு!!!!!!!!

( ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாளின் தொடர்ச்சி. பாகம் 2)

'சட்'ன்னு சொல்லி முடிக்காம, வந்துட்டா நீட்டி முழக்கி விஸ்தரிக்க'ன்னு நீங்க முணுமுணுக்கறது கேக்குது!
'டக்'குன்னு சொல்லிட்டா துளசியா இருக்க முடியுமோ?

மூணரைக்கு கூட்டம் ஆரம்பிக்குதுன்னு சொல்லியிருந்தாங்க. சரியா பத்து நிமிஷத்துக்கு முன்னாடி போய்ச்
சேர்ந்தோம் நானும், மகளும்.


இடம் லக்கி டவர். அட்டகாசமான அடுக்குமாடிக் கட்டிடம்.அருமையான நீச்சல் குளம். அதை ஒட்டி இருந்த
ஒரு ரெண்டுமாடிக் கட்டிடத்துலே கூட்டம்.ஃபங்ஷன் ஹால்ன்னு பேராம்!

இந்த அடுக்கு மாடிங்கறது எங்க ஊரிலே அநேகமா இல்லை.அதான் ஏராளமான இடம் பரவிக்கிடக்கே! கூட்டமும்
ரொம்ப இல்லை. இப்ப எங்க ஊரோட ஜனத்தொகை ஏறக்குறைய 4 லட்சம்! இதுவே இப்ப 'ஹாங்காங்'ச்சீனாவிடம் போயிடுதுன்னு ஆனபிறகு அங்கிருந்து வந்து குடியேறுன ச்சீனர்களாலேதான்.அதுக்கு முன்னே,
நாங்க இங்கே வந்தப்ப( 18 வருசம் முந்தி!) 3 லட்சம்தான் இருந்துச்சு!

இங்கே எல்லாமே தனித்தனி வீடுங்கதான். சில இடங்களிலே ஒரே மனையிலே 4 ஃப்ளாட் வரை இருக்கும்.
அதுவும் பக்கத்துலே ஒட்டி ஒட்டி இருக்குமே தவிர கட்டிடம் எல்லாம் உயர வளராது!

ஆக்லாந்து, வெல்லிங்டன் என்ற ஊர்களிலே அடுக்குமாடி வந்திருக்கு. அதுவும் நாலோ அஞ்சோ மாடிகள்தான்!
ஆனா, சிங்கப்பூரிலே எங்கே பார்த்தாலும் ஒரே அடுக்கு மாடிகள்தான். ஏறக்குறைய ஒரே டிஸைன் வேற!!!!

மாடிப்படியேறிப் போனப்ப, அங்கே வெளியே 'லேண்டிங்'லே ஒருத்தர் ரொம்ப பிஸியா ஃபோன்லே அளந்துக்
கிட்டு இருந்தாரு. எங்களைப் பார்த்து மிரண்ட மாதிரி ஒரு பார்வை-))))

உள்ளெ போனா, அளவான சிறிய ஹால்!!!! நடுவிலே மேஜை போட்டு, அதைச் சுத்தி நாற்காலிகள் போட்டு
வச்சிருக்காங்க! அங்கே எனக்கு ஏற்கெனவே அறிமுகமான ஜெயந்தியும், இன்னொரு 'லேடி'யும் இருந்தாங்க.




அப்புறம் நடுநாயகமா, ஒரு நாற்காலியிலே ஒருத்தர் உக்காந்திருந்தாரு. முகம் எனக்குப் பழக்கமானதுதான். அடிக்கடி
அவரோட இணையப் பக்கத்துலே பார்த்த அதே முகம்!!! அதே கண்கள்!!!

" நீங்க அருள் குமரன்?"

" ஆமா. கரெக்டாக் கண்டுபிடிச்சிட்டீங்க!!!"

அதுக்குள்ளே அங்கே இருந்த மற்றொரு சிரித்த முகம் உள்ளவரை நம்ம ஜெயந்தி அறிமுகம் செஞ்சாங்க.'செந்தில் நாதன்'
நாதன் என்ற பகுதி மட்டும் காதுலே விழுது, ஏன்னா கண்ணு தானா, அவர் கழுத்துலே போட்டுக்கிட்டு இருக்கற
கனமான தேர்வடச் சங்கிலிக்குப் போயிருச்சு! கிரிக்கெட் விளையாடறவர் போல!!!

'ஈழநாதனா?'ன்னு கேக்கறேன். அவரு வேற மாதிரி இருந்தாரே, ஃபோட்டோலே( முதல் இணைய நண்பர்கள்
சந்திப்பு) பார்த்தப்பன்னு மனசு சொல்லுது!

அப்புறம் குழப்பம் தீர்ந்தது. அதுக்குள்ளே மாடிப்படிக்குப் பக்கம் ஃபோன்லே பேசிக்கிட்டு இருந்தவர் உள்ளெ
வந்தார்.அவர்தான் 'அல்வா' விஜய்!!!

ஜெயந்திகூட இருந்த இன்னொரு லேடிதான் 'ரம்யா நாகேஸ்வரன்' இந்த ஹாலை ஏற்பாடு செய்து தந்தவுங்க!
அவுங்க தனியா'ப்ளாக்' வச்சுக்கலைன்னாலும், வெகுஜனப் பத்திரிக்கையிலே கதைகள் எழுதற எழுத்தாளர்! கதை,
கட்டுரைன்னு கலக்கறது மட்டுமில்லாம, 'ஸோஷியல் சர்வீஸ்'ம் செய்யறாங்க!!!! ரியலி க்ரேட்!!!

அதுக்குள்ளே நண்பர்கள் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சுட்டாங்க.'பளீர்'ன்னு சிரிப்போட வந்தவர்தான் நம்ம
ஃபில்டர் காஃபி எம்.கே. குமார்! அப்புறம் நம்ம பாலு மணிமாறன் அடக்கமான சிரிப்போடு. மனஸாஜென் என்ற
ரமேஷ் சுப்பிரமணியம் புன்முறுவலோடு!

அன்பு, மூர்த்தி ரெண்டுபேரும் 'பளிச்'சுன்னு சிரிச்சுக்கிட்டே வந்து சேர்ந்தாங்க. நெடு நெடுன்னு உயரமா, அறிவுக்களை
முகத்திலே தீவிரமா ஜொலிக்க வந்தவர்தான் நம்ம 'ஈழநாதன்'( ஃபோட்டோவிலே பார்த்திருந்த முகமேதான்!)
ச்சின்ன வயசு! என் மகளைவிடவும் ஒண்ணு ரெண்டு வயசு கூட இருக்கலாம்னு நினைச்சேன். அது சரியாவும்
இருந்துச்சு!

எல்லோரும் அன்போடு 'மா.கோ' என்று சொன்ன மா. கோவிந்தசாமி என்றவர் தன்னுடைய நண்பரான சிவசாமி
என்கிற ஓய்வுபெற்ற தமிழாசிரியரோடு வந்தார். வந்தவுடனே அறிமுகம் ஆச்சு! கூடவே கொண்டு வந்திருந்த ஒரு
பொதியைப் பிரிச்சு, உள்ளேயிருந்த 'தமிழா' என்ற புத்தகத்தை ஆளுக்கொண்ணா கொடுத்தாங்க. இந்தப் புத்தகத்தை
எழுதுனவர்தான் கூட வந்திருந்த தமிழாசிரியர் 'சிவசாமி ஐயா'

அப்புறம் என்னென்ன விவாதம் எல்லாம் நடந்ததுன்னு மூர்த்தி, பாலு, விஜய், குமார் இவுங்க பதிவுகளிலே பர்த்திருப்பீங்க!

நம்ம சிங்கை நாதன் என்கிற செந்தில் நாதன்( விவரம் உதவி: மதியின் நேர்காணல்!) ச்சும்மான்னு ஒரு பதிவு
ஆரம்பிச்சு, ச்சும்மாவே வச்சிருக்கார்!எழுதறதுக்கு இன்னும் வேளை வரலையாம்!!!! எல்லாம் ச்சும்மா!!!!

மனஸாஜென் எழுத்தாளர் மட்டுமில்லை. அருமையான ஓவியரும் கூட!! அவர் வரைஞ்ச சில ஓவியங்கள் அதிர்ஷ்ட
வசமா, அங்கே ரம்யாவின் வீட்டிலேயே இருந்ததால் அவைகளையும் எடுத்துவந்து எங்கள் பார்வைக்கு வைத்தார்கள்.
எதுக்கு 'அதிர்ஷ்டம்'ன்னு சொன்னேன்னா, அங்கே இல்லாமப் போயிருந்தால் எனக்கு ஒரு அருமையான ஓவியம்
பரிசாக் கிடைச்சிருக்குமா?

'மீரா' எனக்குக் கிடைத்தாள்! 'சிம்பிள் அண்ட் ஸ்வீட்'

நம்ம 'அன்பு' ஒரு பை நிறைய புத்தகங்களோடு வந்திருந்தார். எல்லாருக்கும் இரவல் தரவாம்! எனக்கும் ஒரு
புத்தகம் எஸ்.ரா. வோட 'துணையெழுத்து' கிடைக்கறமாதிரி(!) இருந்தது. ஆனா கடைசியிலே அதிர்ஷ்டம்
கை நழுவிப் போயிருச்சு! ஆனா அவரோட 'குப்பை'யிலே சேர்த்துவச்சதையெல்லாம் சி.டி.யிலே பதிவு செஞ்சு
கொண்டுவந்திருந்தது கிடைச்சது.

இதுக்கு நடுவிலே கேசரி, கேக்குன்னு தின்பண்டங்கள் வேற!!!! கேசரி 'ரொம்ப நல்லா இருந்துச்சு'ப்பிச்சுக்கு'ன்னு
ஒட்டாம நல்லா மணல்மணலா ( மண்ணு இல்லீங்க, அப்படிச் சொல்றது!)அருமையான சுவையோடு இருந்தது!
யாரு கொண்டுவந்தாங்கன்னு கேட்கலை, ஆனா ஜெயந்தியோடதுன்னு மத்தவங்க பதிவுலே இருந்து தெரிஞ்சுக்கிட்டேன்!
ரெண்டு மூணு ஃப்ளாஸ்க்குலே காஃபி வேற!! நம்ம குமார் கொண்டுவந்ததோ ?

அப்புறம் மா.கோவும், சிவசாமி ஐயாவும் கிளம்பிப் போயிட்டாங்க. அவுங்க எங்ககிட்டத் தந்த 'தமிழா'வுக்கு பத்து
வெள்ளின்னு எல்லோரும் கொடுத்தாங்க. நானும் கொடுத்தப்ப , அன்பு அதை வாங்க மறுத்துட்டாரு.

அவுங்கெல்லாம் போனபிறகு, அதுவரை நாகரிகம் கருதி 'அதை'ப் பற்றிப் பேசாமலிருந்த நாங்க அதைப் பத்திக்
கொஞ்சம் எங்களுக்குள் எங்க கருத்தைப் பகிர்ந்துக்கிட்டோம்.( இதைப் பத்தி மூக்கன் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார்
அப்பவே பிடிக்கலைன்னு சொல்லி யிருக்கணும். பின்னாலெ சொல்றது சரியில்லேன்னு. அவரோ இணைய எழுத்தாளர்
கிடையாது. இன்னொருத்தர்கூட 'கெஸ்ட்'டா வந்திருக்கார். அவர் மனசு நோகவேணாமுன்னுதான் சும்மா இருந்தோம்)

நம்ம அருள் சொன்னார், 'இது சரியில்லை. இனிமே நம்ம கூட்டத்துலே இந்த மாதிரி நடக்காமப் பார்த்துக்கணும்'ன்னு.
கரெக்ட்!! நானும் ஆமோதிக்கறேன். பத்து வெள்ளின்றது ஒரு பெரிய காசு இல்லை. ஆனா நாம வாங்கற புத்தகத்தைத்
தேர்ந்தெடுக்கற உரிமை நமக்கு இருக்கணும். இல்லையா?

இதே புத்தகங்களை, அங்கே மேஜையிலே வச்சுட்டு, அதைப் பத்தின விவரம் சொல்லி, 'இது விற்பனைக்கு இருக்கு. விருப்பப்
பட்டவுங்க வாங்கிக்கலாம்'ன்னு சொல்லியிருந்தா சந்தோஷமா இருந்திருக்கும்!

தம்பி ஈழநாதன், அங்கே தமிழ்ப் புத்தகங்கள் ( நியாய விலையில்!) கிடைக்கற இடத்தைச் சொல்லி, என்னை அங்கே கூட்டிட்டுப்
போய்க் காமிக்கறேன்னும் சொன்னார். அவர் சொன்ன இன்னொரு விஷயம்தான் ஒரு 'இன்ப அதிர்ச்சி'யா இருந்துச்சு!
நம்ம மதி அவருக்கு ஃபோன் போட்டுச் சொன்னாங்களாம், துளசி அங்கே வர்றப்ப தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கிற இடத்தைக்
காமிச்சுக் கொடுக்கணுமுன்னு! மதி, மதி, எப்படி உங்களுக்கு நன்றி சொல்றது?

அவர் சொன்ன இடம் ( அந்தத் தெரு) ஏற்கெனவே எனக்குப் பழக்கமான இடம்( பஃபெல்லோத் தெரு!!!)
என்றதாலே நானே போய் பார்த்துக்கறேன். சிரமப்பட வேணாமுன்னு சொன்னேன்.

எல்லோரும் கொஞ்சநேரம் ஓய்வா பேசிக்கிட்டு இருந்தப்ப 'பனசை நடராஜன்' வந்தார். சிங்கை இணைய
எழுத்தாளர்கள் உள்ளூர் பேப்பர் 'தமிழ் முரசு'க்கு, அவுங்க படைப்புகளை அனுப்பணுமுன்னு சொல்லி அதோட
சாதக, பாதகங்களைப் பற்றி ஒரு சின்ன விவாதம் நடந்தது.

எட்டு மணிவரைக்கும் நாங்கெல்லாம் இருந்து பேசிக்கிட்டு இருந்தோம். மூர்த்தி மட்டும் கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பிட்டார்.
அநேகமா எல்லோருடைய பதிவுகள் மூலமாகவும் ஒரு பரிச்சயமான உணர்வு இருந்ததாலே, யாருமே புது மனுஷங்களா
எனக்குத் தோணலை! நீண்டநாள் நண்பர்களோடு பேசற உணர்வுதான்.

அருமையான சந்திப்பு! ஏற்பாடு செஞ்சிருந்த சிங்கை நண்பர்களுக்கு நன்றி!! எல்லோரும் அக்கா, அக்கான்னு அன்பாப்
பழகுனாங்க. எனக்கு 'ரொம்ப நல்லா இருந்தது'( குமார். கவனிக்க! எல்லாப் பின்னூட்டத்திலும் 'ரொம்ப நல்லா
இருக்கு'ன்னு நான் எப்பவும் எழுதறேன்னு சொல்லிக் கலாய்ச்சுக்கிட்டு இருந்தார்) அது சரி, நல்லா இருக்குன்றதை
வேற எப்படிச் சொல்றதாம்?

இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தபிறகு, கொஞ்ச நேரம் வெளியே போய்ப் பார்த்தா, 'சிராங்கூன் ரோடு' முழுக்க
பலாப்பழத்துலே ஈ மொய்ச்ச மாதிரி மனுஷர்கள்!!!!!! ஏன்னா,அன்னைக்கு ஞாயித்துக் கிழமையாம்!!!!!

இன்னும் கொஞ்சம்தான் இருக்கு!




Wednesday, March 30, 2005

ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள்......

எல்லாருக்கும் வணக்கம். நல்லா இருக்கீங்களா? 'ஊரெல்லாம் சுத்தி என் பேரு முத்தி'ன்னு ஊர்வலத்தை
முடிச்சுக்கிட்டு வந்து சேர்ந்துட்டேன்.

சிங்கப்பூர் இணைய நண்பர்களின் மகாநாடு(!) அருமையா நடந்து முடிஞ்சது. பங்கேற்றவுங்க எல்லாம் அதைப்
பத்தி விலாவரியா வரிக்கு வரி எழுதிட்டாங்கதான்! 'சரி'ன்னுட்டு அப்படியே விட்டுற முடியுதா? என்னுடைய
பார்வை( ஏதோ ஒரு குருட்டுப் பார்வை?)யில் அதைப் பத்தி எழுதலேன்னா 'ப்ளாக்' வச்சிக்கிட்டு ஏதாவது
பிரயோஜனம் இருக்கா?


வெள்ளிக்கிழமை ராத்திரி அங்கே போய்ச் சேர்ந்தேன்.எப்பவுமே, தங்கறதுக்கு விருப்பமான இடம் 'லிட்டில் இந்தியா'தான்.
'ஆலயம் தொழுவது சாலவும் நன்று'ன்னு பெரியவுங்க சொன்ன மாதிரி, ஆலயத்துக்குப் பக்கத்துலே இருக்கறதுதான் வசதி!!
பொழுது விடிஞ்சதும், பக்திப் பரவசமா 'ஸ்ரீநிவாசனை' தரிசிக்கப் போனேன். ஏற்கெனவே சுமார் முப்பதுபேர்
கூடியிருக்காங்க! எல்லோருமாச் சேர்ந்து 'சுப்ரபாதம்' சொல்லித் திருப்பள்ளிஎழுச்சி முடிஞ்சது! அருமையான
தரிசனம்!!! ச்சுடச்சுட சக்கரைப் பொங்கல் பிரசாதம்!!! எல்லா சனிக்கிழமைகளும் இப்படித்தானான்னு கேட்டேன்.
இல்லையாம். ஆனா யாராவது 'ஸ்பான்சார்' செஞ்சாமட்டும் இப்படி நடக்குமாம்! நமக்கு நல்ல நாளுன்னு இருந்துச்சு!

ஆனா, இணைய நண்பர்கள் சந்திப்புன்றது எனக்கு மட்டும் 19 ஆம் தேதியே ஆரம்பிச்சாச்சு!( ஆஹா..மத்தவங்களுக்கு
ஒரு நாளு லேட்டு!)

அங்கெ போய்ச் சேர்ந்த மறுநாளே நம்ம 'ஜெயந்தி சங்கர்' வீட்டுலே அருமையான பகல் சாப்பாடு!!!!
ஃப்ரைய்டு ரைஸ், தயிர் வடை, பாயாசம் இப்படி வகைவகையாச் செஞ்சு வச்சுருந்தாங்க!!!நம்மளை நம்புனவங்களைக்
கைவிட முடியுமா? அதனாலே அவுங்க மனம் கோணாம எல்லாத்தையும் ஒரு வெட்டு வெட்டினோம்! அந்த 'னோம்'
யாருன்னா, நானும் என் மகளும்!

உண்ட களைப்புத் தீரணுமேன்னு, சூடா ஒரு 'ச்சாயா'வேற! அதுக்கப்புறமும் இன்னும் களைப்பு மாறலியேன்னு
ஆளுக்கு ஒரு இளநீர்!! ( இப்படித் தின்னாதான் உடம்பு இளைக்குமுன்னு டாக்டர் சொல்லவேணாமோ?)

'வயிற்றுக்கு வேலை கொடுக்காத நேரத்துலே மட்டும் கொஞ்சம் பேச்சு'ன்னு போய்க்கிட்டு இருந்தது! அப்படி இப்படின்னு
பேச்சுத்தடத்துலேயே போனப்பதான் விஷயம் தெரியுது, அவுங்களுக்கும், நமக்கும் ஒரு 'நெருங்கின'தொடர்பு
இருந்துருக்குன்னு!

நாங்க கேரளாவுலே இருந்தோமுன்னு முன்னேயே சொல்லியிருந்தேன்ல, அப்ப, கோபால் வேலை செஞ்ச அதே
ஃபேக்டரியிலே அவுங்க சங்கரும் இருந்திருக்கார்! என்னா, வருசம்தான் வேற! ச்சும்மா ஒரு நாலு வருசத்துக்குப்
பிறகு!( அப்பவே சந்திக்கற வாய்ப்பு கிடைச்சிருந்தா.......)

இப்படி 'சொந்தக்காரங்களா' ஆகிட்டோம்! அவுங்களோட ரெண்டு மகன்களும் அருமையானவுங்க! கொஞ்சநேரம்
கழிச்சு, சங்கர் ஒரு வேலையா வெளியே போறதாச் சொன்னார். சனிக்கிழமை வேலைநாளான்னு கேட்டப்பதான்
விஷயம் வெளியே வருது. அவர் ஒரு முதியோர் இல்லத்துலே தன்னார்வத் தொண்டு செஞ்சுக்கிட்டு வரார்! ஓசைப்
படாம ஒரு உயர்ந்த சேவை!!!!

அப்புறம் 'ஜெயந்தி' எப்படிப்பட்ட எழுத்தாளர்! எவ்வளவு எழுதியிருக்காங்க, எத்தனையெத்தனை பரிசுகள் வாங்கினவுங்க!
ஒரு துளியாவது 'கர்வம்' இருக்கணுமே..ஊஹூம்!! ரொம்ப அடக்கமா இருக்காங்க. நிறைகுடம்! அதான் ஒரு
தளும்பலும் இல்லே! அவுங்களோட பேசிக்கிட்டு இருக்கறதே ஒரு தனி அனுபவம்!!!!

அவுங்க வீட்டுக்குப் பக்கத்திலே ஒரு கோயில் இருக்கறதாச் சொல்லி, எங்களைக் கூட்டிக்கிட்டுப்போனாங்க.
என்னோட ஆன்மீகத்தேடலை( அப்படி சொல்லிக்கிறதுதான்) புரிஞ்சுக்கிட்டாங்க போல!
ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில்!!! புதுக்கருக்கு அழியாத வர்ணம்!!!! மண்டபத்துலே, மேலே விதானத்துலே
அழகழகான ஓவியங்கள்!!! எல்லாமே அம்மனுடைய பலதோற்றங்கள்!!!! நம்ம ரம்பா, ஊர்வசி, மேனகா
( சினிமாக்காரங்க இல்லை. எல்லாம் தேவலோக சமாச்சாரம்!!!)இவுங்கெல்லாம் கூட ஒரு அம்மனா வரையப்
பட்டிருந்தாங்க!!!! புள்ளையாரையும், முருகனையும், சிவனையும் தவிர 'எங்கெங்கும் காணினும் சக்தியடா'ன்னு
ஒரே மகளிர் மன்றம்தான்!!!!! இங்கே பூலோகத்துலேதான் 33 சதவீதத்துக்கு போராட்டம்!!!! ஹூம்...
'மன்மதாம்பாள்'ன்னுகூட பார்த்த ஞாபகம்!!!!!!!

ஏறக்குறைய 7 மணிநேரம் அவுங்களோட இருந்திருக்கேன். ரொம்ப சிம்பிள், பழகறதுக்கு எளிமை!! ரொம்பப்
பிடிச்சிருக்கு!!!!!

மறுநாள் மற்ற இணைய நண்பர்களைச் சந்திக்கப்போறோம் என்ற எதிர்பார்ப்போட இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தேன்!!!

(மறு)நாளைக்கு நடந்தது நாளைக்கு.....




Wednesday, March 16, 2005

முகங்கள்!!!!! அறிமுகங்கள்!!!

முகம் தெரியாத நண்பர்களின் முகங்களைப் பார்க்கப் போற வாய்ப்பு இப்படித் திடீர்ன்னு
கிடைக்குமுன்னு எதிர்பார்க்கவேயில்லை!

எங்க வீட்டுலே 'இவர்'தான் எப்பவும் வேலைவிஷயமா'ஊர் ஊராவும், நாடுநாடா'வும் சுத்தறது!
நானு? எங்கதையைச் சொல்லணுமுன்னா, 'நாய்க்கு வேலை இல்லே, ஆனா நிக்க நேரமில்லே'!



என்ன, எதுக்குன்னு தெரியாமலேயே ஒரே சமயத்துலே பல விஷயத்துலே 'மூக்கை' நீட்டிக்கிட்டு
ஓடுறதே என் 'தொழிலாப்'போச்சு!

இந்தியாவுக்குப் போகணுமுன்னு 'கொஞ்ச நாளா' நினைச்சுக்கிட்டே இருந்தேன். 'டக்'க்குன்னு
போகமுடியாம ஏகப்பட்ட 'கமிட்மெண்ட்.' இதுக்கு இடையிலே ஒரு வாரம் எனக்குத்தோதா அமைஞ்சுடுச்சு!

ஒரேவாரம் சென்னைக்குப் போய்த்திரும்பறது ஒரு கொடுமைங்கறதாலே இப்ப வேணாமுன்னு இருந்தாலும்,
கிடைக்கப்போற ஒரு வாரத்தை விட்டுறக்கூடாதேன்னு வேற இருக்கு.

ம்ம்ம்ம்ம்ம்ம்... எங்கே போலாம்? அக்கம்பக்கத்து இடமாவும் இருக்கணும், அதே சமயம் என்னுடைய
ஆன்மீகத்தேடல்,( என்னாமாதிரி வார்த்தை வந்து விழுதுன்னு பார்த்தீங்களா? அடாடாடா) வயித்துப்பாடுன்னு
மனசுக்கு நிறைவா இருக்கற இடமாவும் இருக்கணுமுன்னு தேடுனதுலே, வாய்ப்பா இருந்த இடம் சிங்கப்பூர்!

சரின்னு முடிவு செஞ்சு, நம்ம ஜெயந்தி சங்கருக்குத் தகவல் தெரிவிச்சேன். அப்படியே நம்ம இணைய நண்பர்களைச்
சந்திக்கமுடிஞ்சா மகிழ்ச்சியாவும் மன நிறைவாயும் இருக்குமுன்னு நினைச்சதுக்கும் அவுங்களே ஒரு வாய்ப்பையும்
உண்டாக்கிக் கொடுத்திருக்காங்க!( நம்ம விஜய், மூர்த்தி, ரம்யா இன்னும் மத்த நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து
ஒரு கலகலப்பான ஒன்றுகூடும் தருணத்தை அட்டகாசமா ஏற்படுத்தறாங்கன்னு ஒரு பட்சி இப்பத்தான் சொல்லிட்டுப்போகுது!)


'மரத்தடி'யிலே போய்ச் சேர்ந்தும் இந்த மாசம் 26ஆம் தேதியோட ஒரு வருசம் ஆகப்போகுது. ஆண்டுவிழாக்
கொண்டாட்டம்தான்!!!

நண்பர் 'காசியின் தமிழ்மணம்' வாசனையைப் புடிச்சுக்கிட்டே அப்படியே போய் அதே வேகத்துலே ஒரு பதிவையும்
ஆரம்பிச்சு 6 மாசம் ஆகப்போகுது. இப்ப இந்த அரைவருசக் கொண்டாட்டமும் சேர்ந்துக்கிச்சு!

ஏராளமான நண்பர்களும்,இந்த நட்புவட்டமும் தந்த மகிழ்ச்சியைக் கொண்டாடிட்டுத்தான் மறுவேலை!

அக்கா, அக்கான்னு அன்பா இருக்கற தம்பிங்களையும், தங்கச்சிங்களையும் பார்த்துட்டு ஓடி வந்துருவேன்.
அதுவரைக்கும் விட்டாச்சு லீவு!!!!

எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க. உங்க ஊர்ங்களுக்கும் இப்படி ஒரு ச்சான்ஸ் வந்துரப்போகுது!

சிங்கையிலே இருக்கற இணைய நண்பர்களும், வேற ஏதாவது காரணத்தாலே இந்த சமயம், அங்கே வந்து இருக்கக்
கூடிய மற்ற இடங்களைச் சேர்ந்த இணையநண்பர்களும் (நேரம் அனுமதிச்சால்) இதையே அழைப்பிதழாக நினைச்சுக்கிட்டு
முடியுமானால் அவசியம் இந்த( கீழே விவரம் இருக்கு!) இடத்துக்குச் சிரமம் பாராம வரணுமுன்னு அன்போட கேட்டுக்கறேன்.

Date : 20 th March 2005

Venue : Function Hall of Lucky Tower

Time : 3:30PM

Address
-------------
Lucky Tower Function room(second level)
57, Grange Road,
Singapore 249569.

How to reach
--------------------
Buses that come to Lucky Tower are 75 (to Grange Road) and 65, 54, 14,
16 (stops at Irwell bank road/Paterson Road - about 3 minutes walk).
Nearest MRT Orchard (about 7 mins walk).





Tuesday, March 15, 2005

ரெடிமேட் !!!! பகுதி 7

ஆட்டோ மீட்டர் 60 காட்டும். நீங்க 90 கொடுத்தாப் போதும்! என்ன என்ன?
அப்பவே மீட்டருக்குமேலே போட்டுக் கொடுக்கறது வந்துருச்சா? அது என்ன பாதி
அளவு போட்டுக் கொடுக்கறது? இருங்க,விஷயத்தைச் சொல்லிடறேன்.

இது மாமியோட பொண்ணு எனக்குக் கொடுத்த இன்ஸ்ட்ரக்ஷன்! அப்பத்தான் ஆட்டோ
சார்ஜையெல்லாம் மாத்தியிருந்தாங்க. ஆரம்பத்துலே சார்ஜே வெறும் 60 பைசாதான் இருந்துச்சாம்.



அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஏறுனப்ப மீட்டரைப் புதுசா மாத்தியமைக்க முடியாத நிலமையாம்!
( இப்ப ஒரு இடைச் செருகல். ஆமா, நீங்க ஆட்டோவிலே போறப்ப எப்பவாவது மீட்டர் எங்கே
செஞ்சிருக்காங்கன்னு கவனிச்சிருக்கீங்களா? எங்கே? அதான் மீட்டர் கிடுகிடுன்னு ஏறுறதைப் பார்த்தே
மயக்கமாயிட்டேன்னு சொல்லாதீங்க! கொஞ்சம் யோசனை செஞ்சு வையுங்க! மீட்டர் விஷயம் அப்புறம்...)

இப்ப ஸ்டார்ட்டிங்கே 90 பைசா ஆக்குனதாலேதான் இந்த மாதிரியாம்! அது சரி, அப்புறம் மைலேஜுக்கு
எவ்வளவு கூடும்ன்னு கேக்கறீங்களா? யாருக்குத் தெரியும்? நம்ம வீட்டுலே இருந்து ராஸ்தாப்பெட் இந்த
90 பைசா தூரம்தான்!

எனக்கு அம்மாவீடு மாதிரி ஆகிப்போச்சு நம்ம மாமி வீடு! குறைஞ்சது வாரம் ஒரு நாள் கிளம்பிருவேன்.
காலையிலே இவர் வேலைக்குப் போனதும், என் கடமை(!)களை முடிச்சுட்டுப் பத்து, பத்தரைமணி வாக்குலே
பொடிநடையாக் கிளம்பினா, பன்னிரெண்டு மணிக்கு முன்னாலே அங்கெபோய்ச் சேர்ந்துடுவேன்.அப்பெல்லாம்
ச்சின்னவயசு. நடக்கத் தெம்பிருந்துச்சு! ஊருவெயிலே என் தலையிலேன்ற மாதிரி வெய்யிலைப் பத்தின
சுரணைகூட இல்லாத வயசு!

எங்க இவரு ஆட்டோலே போகச் சொல்லிட்டுத்தான் இருப்பாரு.ஆனா எனக்கு வேடிக்கைப் பாக்கற புத்தி! ச்சின்ன
வயசுலே இருந்தே இந்தப் பழக்கம். போற இடத்துக்கு 'டக்'குன்னு போயிற மாட்டேன்.அங்கங்கே நாட்டுநடப்பை
யெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேப் போனாத்தான் திருப்தி. மெட்ராஸுலே இருந்தப்பவும் இப்படித்தான். ஒவ்வொருநாளு
ஒவ்வொரு தெருவழியாத்தான் போவேன். ச்சும்மா, இந்தத்தெரு எங்கெ போகுதுன்னு பாக்கணும்!

மாமி வீட்டுக்குப் போற வழியிலே, கன்டோன்மெண்ட், கேம்ப் ஏரியா முடிஞ்சு, சிட்டி தொடங்குற இடத்துலே ஒரு
தள்ளுவண்டியிலே, அழகழகான கண்ணாடிப் பொருட்கள் வச்சு வித்துக்கிட்டு இருப்பாங்க.எதையெடுத்தாலும் ஒரு
ரூபாய்! அதுலே எனக்குப் பிடிச்சதா ரெண்டை வாங்கிக்கிட்டு, மாமி வீட்டுக்குப் போய்ச் சேர்வேன். எந்தநேரமானாலும்
அந்த 'வாடா' ஒரே கலகலப்பாத்தான் இருக்கும்! அங்கேயும் வேடிக்கைதான்! அந்த 'வாடா'விலே வீட்டுவேலை
செய்யற 'கோதா பாய்' போட்டுக்கிட்டு இருக்கற ப்ளவுஸைப் பாக்கணுமே! ஆளும் நெடு நெடுன்னு கொஞ்சம்
உயரமா இருந்துக்கிட்டு, ச்சிக்குன்னு இழுத்துப் பிடிக்கற மராட்டி ஸ்டைல் ரவிக்கையை முன்னாலே முடிஞ்சுக்கிட்டு,
புடவையையும் மராத்திக் கட்டுலே ( அதான் சினிமாவுலே பார்த்திருப்பீங்களே!)கட்டிக்கிட்டு, பாண்டியைத் தலையிலே
தூக்கிவச்சுக்கிட்டு போறது இருக்கே, அடாடாடாடா.....நம்ம ஊருலே கட்டிட வேலை செய்யற இடத்துலே பாத்திருக்கீங்களா?
சித்தாளுங்க சிமெண்டுக் கலவையை எடுத்துக்கிட்டுப் போக, ஒரு பிடியில்லாத கடாய் மாதிரி தகரத்துலே வச்சிருப்பாங்கல்லே,
அதுதான் பாண்டி! கொஞ்சம் பெரிய சைஸிலே இருக்கும்!அதை எடுத்துக்கிட்டுதான் வீட்டுவேலைக்கு வர்றது. தேய்க்கவேண்டிய சாமான்களை அதுலே
அடுக்கிக்கிட்டு, குழாயடிக்குப் போய் அதையெல்லாம் நல்லா மண்ணு போட்டு விளக்கிட்டு, திருப்பி நல்லா அதுலேயே
அடுக்கி வீட்டுக்குள்ளே கொண்டுவந்து இறக்கி வச்சிருவாங்க. அப்புறம் அடுத்த வீட்டுக்குப் போறது அங்கே வேலையை
முடிக்க! 'கரகர'ன்னு மண்ணாலே தேய்க்கறதைப் பார்த்தாலே எனக்கு உடம்பெல்லாம் 'நரநர'ன்னு இருக்கும்!
எனக்கு அடியோடு பிடிக்காத விஷயம் இந்த மண்ணாலே பாத்திரம் தேய்க்கறது!


சிலசமயம் நானும், மாமியுமாக் கிளம்பி'துள்சி பாக்'ன்ற இடத்துக்குப் போவோம்.அந்த இடம் ஒரு கோட்டை
மாதிரி சுத்துச்சுவரோடு இருக்கும். வாசலைத்தாண்டி உள்ளெ போனா, நம்ம மூர்மார்கெட்டு மாதிரி
கடைங்களா இருக்கும்.முக்காவாசி வீட்டுச் சாமானுங்கதான். கரி அடுப்பு, முறுக்கு அச்சு, சப்பாத்திக் குழவின்னு
சாமானுங்க இறைஞ்சு கிடக்கும்! ஒருகடை எங்கே முடியுது, அடுத்தகடை சாமான் எங்கிருந்து ஆரம்பிக்குதுன்னு
நமக்குப் புரியவே புரியாது! காசை நீட்டுறப்பதான்,இதுக்கு அங்கே கொடுங்க, இதுக்கு இங்கெயே கொடுங்கன்னு
சொல்லுவாங்க! எனக்குப் புதிரா இருக்கும். ஒரே மாதிரி இருக்கற ரெண்டு பூரிக்கட்டைங்களிலே எது
அவுங்களதுன்னு, துல்லியமா எப்படிக் கண்டுபிடிக்கறாங்க?

ஒருநா 'துள்சிபாக்'ன்னா, ஒருநா மண்டெ மார்க்கெட். இப்படியே பொழுது போய்க்கிட்டு இருந்தது! சாயந்திரம்
இவர் வேலை முடிஞ்சு நேரா, அங்கெ வந்துருவார். அதுக்குள்ளெ மாமியோட பொண்ணும், பையனும் ஆஃபீஸ்லே
இருந்து வந்துருவாங்க. இப்ப நாங்க இளைஞர்கள் மட்டும் கிளம்பி இன்னோரு ரவுண்ட், அங்கெ இங்கேன்னு.

ராத்திரி சாப்பாடும் அங்கேதான். நான் 'சமைச்சு வச்சுட்டு வந்திருக்கேன்'னு சொன்னாலும் மாமி விடறதில்லை!
அதையெல்லாம் யாராவது பிச்சைக்காரனுக்கு போட்டுருடின்னு சொல்வாங்க. 'அந்தப் பிச்சைக்காரங்களே நாங்க தான்
மாமி'ன்னு சொல்வேன்.

அப்புறம் அங்கிருந்து கிளம்பவே ராத்திரி பத்துமணியாகிடும். இப்ப என்ன பயம்? இருக்கவே இருக்கு நம்ம சைக்கிள்!
பத்தே நிமிஷத்துலே வீட்டுக்கு வந்துருவோம்!

காதல்கணவன் மொதமொதலா ஆசை(!)யுடன் எடுத்துத்தந்த புடவையைப்பத்தி மாமிகிட்டே சொல்லிப் புலம்புனேன்.
அவ்வளவுதான்! மாமிக்கு ஆவேசம் வந்துருச்சு! உடனே அந்தப் புடவைக்கடைக்கு படையெடுத்தாச்சு!

அங்கெல்லாம், தென்னிந்தியர்கள்ன்னு ( எல்லாருமே மதராஸிங்கதான்!)சொன்னாலே கடைக்காரங்க மத்தியிலே
ஏகப்பட்ட மரியாதை! 'வாங்கிக்குங்க, பணம் அப்புறமாத்தாங்க'ன்னு கடைக்காரங்க கெஞ்சுவாங்க. நம்ம ஆளுங்க
நம்பிக்கைத் துரோகம் பண்ணமாட்டாங்கன்னு ஏகப்பட்ட நம்பிக்கை நம்ம மேலே!!! கேக்கவே எவ்வளவு நல்லா
இருக்குல்லே! அதுலே எங்களுக்கு பெருமைவேற!

கடைக்காரர் 'ரூப்மல் சேட்' உயரம் குறைஞ்ச புடவை தந்ததுக்கு(?) மன்னிப்புக் கேக்கறார். நாம பாக்காம
வாங்குனது நம்ம தப்பில்லையான்னு மாமிகிட்டே கேக்கறேன்( தமிழுலேதான்) 'நீ சும்மா இரு, உனக்கு ஒண்ணும்
தெரியாது'மாமியோட பதில்!

'இன்னும் ரெண்டு புடவை உன் உசரத்துக்குத் தகுந்தாப்போலேப் பார்த்து எடுத்துக்கோ'ன்னு தடாலடியா
மாமியோட கமாண்ட்!

"ஐய்யய்யோ, இப்ப முடியாது மாமி. காசுவேற இல்லை"

" காசைப் பத்தி உனக்கென்ன கவலை. கொஞ்சம் கொஞ்சமாக் கொடுத்தாப் போதும்"

"அவர்கிட்டே கேக்கணும்"

" நான் சொல்லிக்கறேன். நீ பேசாமப் புடவையைமட்டும் செலக்ஷன் பண்ணு"

பயங்கரமாப் பேரம் செஞ்சு, ரெண்டு புடவை, அதுக்கேத்த ரவிக்கைத்துணி எல்லாம் வாங்கியாச்சு!

கடைக்காரர் நீட்டிய நோட்புக்கிலே "கோமளா'ன்னு கோணக்க மாணக்க ஒரு கையெழுத்தையும் தமிழிலே
போட்டாங்க நம்ம கும்பகோணம் கோமளா மாமி! அங்கேயே பக்கத்துத் தெருவிலிருந்த ஒரு வீட்டுக்குப் போய்,
ப்ளவுஸ் தைக்க அளவும் கொடுத்தாச்சு! அந்த வீட்டுலே ஒரு மராத்திக்காரப்பொண்ணு நல்லாத்தச்சுக் கொடுக்குதாம்!
அங்கேதான் மாமியோட பொண்ணுக்குத் தைக்கறதாம்!

கடன் வாங்குன பயத்துலே மனசுக்குள்ளே ஒரே நடுக்கமா மாமி வீட்டுலே உக்காந்திருக்கேன்.இவர் வந்து
என்ன சொல்லப் போறாரோ?

ஆட்டோ மீட்டர்( சூடு வைக்காதது!)விவரம்:

ஆட்டோ மீட்டர்ங்க செய்யற ஃபேக்டரியே பூனாவிலேதாங்க இருக்காம். அங்கிருந்துதான் எல்லா இடங்களுக்கும்
போகுதாம்! சென்னையிலே ஆட்டோவிலே போறப்ப கவனிச்சது!. இது சரியான்னு தெரிஞ்சவுங்க யாராவது
சொன்னாத் தேவலை!)

இன்னும் வரும்!!!




Monday, March 14, 2005

சி. செய்திகள்!!!

இப்பத்தான் தினமலருலே சி. செய்திகள்( சினிமா செய்திகள்தாங்க! எப்பப் பார்த்தாலும்
சினிமாவைப் பத்திப் பேச்சு, வாக்குவாதம், விமரிசனம் இப்படியே போய்க்கிட்டிருக்கு
பாருங்க நம்ம பத்திரிக்கை உலகமும், ஜனங்களுட மனசும்!) பார்த்தேன்.



'அறிவுமணி, ஜதி' போன்ற படங்களைச் சென்னையில் ரிலீஸ் செய்யறதுக்கு தியேட்டர்
கிடைக்கலையாம்! ஆனா இந்தப் படங்களெல்லாம் போன வாரமே நம்ம வீட்டுலே ரிலீஸ்
ஆயிருச்சு!( திருட்டு விசிடி இல்லைங்க!!!)

அதிலும் பாருங்க இந்த அறிவுமணி ( முரளிதான் வேற யாரு?) இருக்காரே, அநியாயத்துக்கு
நல்லவரா வராரு!

ஜனங்கள் பார்க்க ச்சான்ஸ் இல்லாத படத்தை விமரிசனம் செஞ்சா நல்லா இருக்காதேன்னு
இந்தப் பட விமரிசனங்களையெல்லாம் கொஞ்சநாள் கழிச்சு( அதுவரைக்கும் அந்தக் கதைங்க
ஞாபகம் இருந்தா!) எழுதலாமுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.

'உப்பு' பார்த்தேன். நல்ல படம்! நம்ம ரோஜா அருமையா நடிச்சிருக்காங்க! ஆனா ஓடுமான்னு
தெரியலை!

இப்படி உப்புச் சப்பு இல்லாம போட்ட பதிவைப் பார்த்துட்டு, யாரும் ஆட்டோ அனுப்பிடாதீங்க:-)



Friday, March 11, 2005

அயோத்தியா!!!!!!

இப்ப என்ன திடீர்னு அயோத்தியாவைப் பத்தி?

ம்ம்ம்ம்.... நீங்க சலிச்சுக்கறது கேக்குது!

இது ஒரு சினிமா விமரிசனம்!!!! படத்தோட பேருதாங்க இது!

அது என்ன? யாரும் கேள்விப்படாத படமா இருக்கேன்னு நினைக்கிறீங்கதானே?

எனக்குன்னு இப்படி எல்லாம் ஆப்டுதே!( அகப்படுகின்றதே!)



இதுலே பாருங்க, யாரும் பார்க்காத, அட்லீஸ்ட் கேள்விக்கூடப்பட்டிருக்காதப் படங்களையெல்லாம்
நம்ம 'சப்ளையர்' இங்கே தமிழ்ப்படமில்லாம 'காஞ்சு'கிட்டு இருக்கற கூட்டத்துக்காகவே அனுப்பி
வச்சுடறாரு! ஒருவேளை இந்தப் படங்களோட 'ரிலீஸ்'கூட நம்ம வீட்டுலேதானோன்னு ஒரு சந்தேகம்
ரொம்ப நாளா இருக்கு! ஆனா பாருங்க, சிலவேளைகளிலே நல்ல படமாக்கூட அமைஞ்சுடுது!!!

சத்தியமா( வுட்டேன்!) இது தமிழ்ப் படம்தான்! நடிப்பு எல்லாமே 'புது முகங்கள்!!!'

டைட்டிலே ஏதேதோ பேருங்க ஓடுச்சுதான். ஆனா, யாரு யாருன்னு தெரியாத நிலைமையிலே இருந்ததாலே
தெரிஞ்சுக்க அவ்வளவா மெனக்கெடலை!!!

இப்ப 'மரத்தடி'லே வேற ஒரு 'இழை' ஓடறது அநேகமாக் கவனிச்சிருப்பீங்க!!!( இது என்னவா?)

கதைக்கு வரேன்.

ரெண்டு நண்பர்கள்.ஒரு இந்துவும், ஒரு முஸ்லீமும்! வசதியை முன்னிட்டு இ & மு ன்னு வச்சுக்கலாம்!

இ & மு சேர்ந்து ஒரு தொழிற்சாலையை ஆரம்பிச்சு நடத்துறாங்க. இவோட கல்யாணம் நடக்குது. அப்புறம்
அவரோட மனைவி, முவுக்கு பொண்ணு பார்க்கப் போறாங்க. பார்த்த பொண்ணைப் பிடிச்சுப்போய், அவுங்களையே
கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. ரெண்டு பேரும் நல்ல நட்பா இருக்காங்க.

கொஞ்ச நாள் கழிச்சு ரெண்டு பேரும் கர்ப்பிணி. முவோட மனைவிக்கு ஏதோ(!) பிரச்சனையாலே இனிமே
குழந்தை பிறக்கறதுக்கு வாய்ப்பு இல்லே டாக்டருங்க சொல்லிட்டாங்களாம். அதாலே இப்ப வயித்துலே இருக்கறது
நல்லபடியாப் பிறக்கணுமேன்னு ஒரே கவலை. தோழிகிட்டே புலம்பிக்கிட்டு இருக்காங்க.

இதுக்குள்ளே வில்லன்( நமக்குத் தெரிஞ்ச ஒரே ஆளு! மணிவண்ணன்!!!)சும்மா இருப்பாரா? சும்மா இருந்தா
வில்லனிலே சேர்த்தியா? குட்டையைக் குழப்பி ஃபேக்டரியிலே இருக்கறவங்களைக் கையிலே போட்டுக்கிட்டு
ரெண்டு முதலாளிங்களுக்கும் ஆகாமப் பண்ணிடறாரு! இவும் முவும் இப்ப 'கா'

மனைவிகள் ரெண்டு பேரும் ஒரே நேரத்துலே( சரியா ஊகிச்சு இருப்பீங்களே!)பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியிலே
அட்மிட்! முவோட குழந்தை பிறந்ததும்,அது உயிர் பிழைக்காதுன்னு டாக்டரம்மா சொல்லிப்புட்டாங்க. (சரி சரி,
நீங்க நினைக்கறது சரிதான்) இ யோட மனைவி தன் குழந்தையை அங்கே கொடுத்துட்டு, அந்தக் குழந்தையை
எடுத்துக்கிட்டாங்க.அப்படிக் கொடுக்கரப்ப சொல்றாங்க, எனக்கு பிரச்சனையில்லாததாலே வேற புள்ளையை
பெத்துக்க முடியும்..... இப்படி !

ஆனா, உயிர்பிழைக்காதுன்னு சொன்ன புள்ள பொழைச்சுக்கிச்சு! இப்ப இ வூட்டுலே மு வோட புள்ளை,
மூ வூட்டுலே இ யோட புள்ள. நல்லா வளர்ந்து வாலிபப் பசங்களா ஆயிட்டாங்க.

கொஞ்சம் இருங்க மூச்சு வுட்டுக்கறேன்! ஹப்பாடா!!!!!

ரெண்டு அம்மாங்களும் ரகசியமா அப்பப்ப சந்திச்சுப் பேசிக்கிடுறாங்க!!!

இப்பதான் ஹீரோயினுங்க என்ட்ரன்ஸ்!!

இயோட மச்சினன் பொண்ணு முவோட வீட்டுலே வளர்ற இ யோட புள்ளையைக் காதலிக்குது. இ வீட்டுலே
இ யாக இருக்கற மு வோட புள்ள, ஒரு 'மதரஸா'வை நடத்துறவருடைய பொண்ணை 'லவ்' செய்யுது!

( இங்கெதான் கவனிக்கணும், டைரக்டர் எவ்வளவு கவனமா மதக் கலப்பு இல்லாமப் பாத்துக்கிட்டாருன்னு!)

ஆங்.. சொல்ல மறந்துட்டேனே, அந்த மதரஸா இருக்கற இடம் கோவிலுக்கு சொந்தமான நிலத்துலே!

வில்லன் 'சாஸ்த்திரப்படி' ரெண்டு பேருக்கும் ஆகாமப் பண்ணறதுலேயே கவனமா இருக்காரு!!!

இப்ப இந்த வாலிபப் பசங்க, நம்ம காதல் ஜெயிக்கணுமுன்னா நாம ஒண்ணா சேர்ந்து போராடணுமுன்னு
முடிவு செஞ்சு 'தோஸ்த்'தாப் போயிடறாங்க! அப்பத்தானே 'புர்க்கா' போட்டுக்கிட்டு காதலி வீடுங்களுக்கு
போய் வர்ற சாத்தியதையை உண்டுபண்ணிக்கலாம்!

அப்புறம் அம்மா செண்டிமெண்ட், புள்ளைப்பாசம் இப்படியெல்லாம் ஒண்ணுவிடாம இருக்கு! இயோட மனைவியை
கலாட்டா செய்யற பொறுக்கிங்ககிட்டே இருந்து, காப்பத்தச் சொல்லி முவோட மனைவி அந்தப் புள்ளை(!)கிட்டே
சொன்னதும், அந்தப் பையன் தன்னோட சொந்த அம்மான்னே தெரியாம, அவுங்களைக் காப்பாத்தறான்!

அவனுக்கு இப்ப 'ஜாதகப்படி' நேரம் சரியில்லையின்னு, இ யோட மனைவி ஒரு மோதிரத்தை, மு வோட மனைவிகிட்டே
கொடுத்து, அவனைப் போட்டுக்கச் சொல்றது இத்யாதிகள்.....( தலை சுத்துதா?)

ஐய்யய்யோ, இப்பத்தான் சில நடிக, நடிகையரோட பேரும் ஞாபகம் வருது! மு வா வர்றது லிவிங்ஸ்டன்.
அவரோட மனைவி சரண்யா. இ யோட மனைவி சீதா.

மணிவண்ணனோட 'கைங்கரியத்தாலே' மதரஸாவைக் காலிபண்ணச் சொல்லி 'தம்கி' கொடுக்கறாங்க இந்த இ யோட
ஜனங்க. அதுக்குள்ளெ இந்த ரெண்டு ஜோடியும் போய் அங்கே ஒளிஞ்சுக்கிடறாங்க.

ஊரே திரண்டு வருது, கட்டிடத்தை இடிக்கறதுக்கும் தீவைக்கறதும் ( இதுலேதான் ஒத்துமையாக் கூடுவாங்க போல!)
மு வா வளர்ற இ யோட புள்ளைகிட்டே கடைசியிலே ஞாயம் கேக்கறாங்க ஊர்ச்சனங்க. அவர் சொல்லிட்டார்,
நான் முவா வளர்ந்தேன், அப்படியேதான் இருப்பேன்னு!!!!

மு வோட ஒரிஜனல் புள்ளை ( இ வூட்டுலே வளந்தது)க்கிட்டே யாரும் ஒண்ணும் கேக்கலை!!! இவ்வளவு
என்னத்துக்கு? அவருக்கு 'டூயட்'கூட உள்ளூர்லேதான்!

மத்தவருக்குத்தான் ,'வெளிநாட்டுலே டூயட்'!!! அநேகமா அவரோட சொந்தக் காசுலேதான் இந்தப் படத்துக்கு
ஃபைனான்ஸ் இருக்கணும்!!!!

எப்படியோ, கடைசியிலே எல்லாம் 'சுபம்'!!!!!!

'மதக் கலவரம் வராம ரெண்டு மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையா இருக்கணும்' என்ற கருத்தைச் சொல்லுற
படம்!!!!!( அப்படின்னு நினைக்கறேன். சரியா?)



Thursday, March 10, 2005

பரம சிவன்!!!!!

'பார்வதியும் பரமேஸ்வரனும் ஒரு நாள் அப்படியே உலகத்தைச் சுத்திப்பாக்க ஆகாயத்துலே
போய்க்கிட்டு இருக்காங்க. அப்ப பூலோகத்துலே...'

ஒரு காலத்துலே இப்படிக் கதைங்கெல்லாம் கேக்காத புள்ளைங்களே இல்லை!

நேத்து இங்கே நம்ம ஃபிஜி இந்தியர்களின் 'சத்சங்க மண்டலி' நடத்துற மஹாசிவராத்திரி விழா
வுக்குக் கிளம்பிக்கிட்டு இருந்தேன். எங்க 'இவர்' கேக்கறார், சிவராத்திரின்னா என்னாதுன்னு!


எனக்கும் வருசாவருசம் இதே கதையைச் சொல்லி அலுத்துப் போனதாலே, 'எல்லாருக்கும் ஒவ்வொரு
ராத்திரி மாதிரி சிவனுக்கு ஒரு ராத்திரி'ன்னு சொன்னேன்.

'அதுக்கு ஒரு கதை இருக்கணுமே! அதைச் சொல்லு'ன்னார்.

' ஏன்? கதையில்லாம இருக்கக்கூடாதா? அப்படி ஒண்ணும் இல்லை!'ன்னேன்.

' அதெப்படிக் கதை இல்லாமப் போகும்? சொல்லு சொல்லு'ன்னு தொணப்பினதாலே சொல்ல ஆரம்பிச்சேன்.

"அமிர்தம் எடுக்கறதுக்காக பாற்கடலைக் கடைஞ்சாங்க. மந்தார மலையை மத்தாவும், வாசுகின்ற பாம்பைக் கயிறாவும்
போட்டுக் கடை கடையின்னு கடையுறாங்க. மத்து நிக்கறதுக்கு அடியிலே ஒரு தாங்கி இல்லாததாலே, அமிர்தம் வரவே இல்லை!
அப்ப நம்ம பெருமாள் ஆமையா ரூபம் எடுத்து மத்துக்கு அடியிலே போய் அதை முதுகிலே தாங்கிக்கிட்டாரு.

தேவர்கள் ஒரு பக்கமும், அசுரர்கள் ஒரு பக்கமும் 'நீயா, நானா'ன்னு வேகவேகமா பாம்பைப் புடிச்சு இழுத்து இழுத்துக்
கடைஞ்சாங்களா, அப்ப பாம்புக்கு வலி பொறுக்கமுடியாம விஷத்தைக் கக்குது! அப்படி வந்த ஆலகால விஷத்தை உடனே
சிவபெருமான் 'டபக்'ன்னு எடுத்து வாயிலே போட்டுக்கிட்டாரு!"

" ஏன் வாயிலே போட்டுக்கணும்?"

" பாற்கடலுலே விழுந்துடுச்சுன்னா எல்லாப் பாலுமே விஷமாயிடாதா?"

" எடுத்துத் தரையிலே வீசிப் போட்டிருக்கலாமுல்லே?"

" கடலுக்குள்ளெ நிக்கறவுங்க கரைக்கு வர நேரம் செல்லாதா?"

" சரி. அப்புறம்?"

" அந்த விஷம் தொண்டைக்குள்ளே இறங்கறதுக்கு முன்னாலே, பார்வதி அவர் கழுத்தைப் புடிச்சுட்டாங்க!
அதனாலே அந்த விஷம் அங்கேயே நின்னுடுச்சு. அதாலேதான் அவரை நீல கண்டன்ன்னு சொல்றது!"

" உன்னைமாதிரிக் கழுத்தைப் பிடிச்சுட்டாங்களா? விஷம் கொல்றதைவிட நாமே கொன்னுரலாம்னா?"

" இந்த மாதிரி ஊடாலே பேசுனா கதை சொல்ல மாட்டேன்"

" இல்லெ இல்லெ சொல்லு"

" விஷம் தின்னவுங்களை தூங்க விடமாட்டாங்கல்லெ. வுட்டுட்டா 'கோமா ஸ்டேஜ்'லே போயிட்டாங்கன்னா? அதாலே
அவரைத் தூங்க விடாம, தேவலோகத்துலே நாட்டியம், நாடகம்ன்னு போட்டுக்கிட்டு இருக்காங்க! அந்த நாளுதான்
இன்னைக்கு. அதான் சிவனுக்கு ஒரு ராத்திரி! சரி சரி. கிளம்புங்க நேரமாச்சு!"

" இந்தக் கதையை அங்கே சத் சங்கத்துலே சொல்றயா? எல்லோருக்கும் தெரியட்டும்!"

" சொன்னாப் போச்சு!"

ஃபிஜி இந்தியர்ங்க, மஹாசிவராத்திரி, ஸ்ரீராமநவமி, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி இந்த மூணு பண்டிகையையும் விடாமக்
கொண்டாடிக்கிட்டு வராங்க. தீபாவளி எல்லாம் கொண்டாட்டம், கலைவிழா இப்படிப் போகும். ஆனா மேலே
சொன்ன மூணுக்கும் பூஜை புனஸ்காரமுன்னு செய்வாங்க!

எல்லாம் 150 வருஷத்துக்கு முன்னாலே எப்படியெல்லாம் செஞ்சாங்களோ, அதுலே இருந்து கொஞ்சமும்
மாறாமே! ரொம்ப 'சிம்பிள்' பூஜை! எல்லாரும் பங்கேற்கலாம்! பாட்டும் ஒரே ராகத்துலேதான். பண்டிகைக்குத்
தகுந்தமாதிரி, சிவன், ராமன், கிருஷ்ணன்ன்னு சில வார்த்தைகள் மட்டும் மாறும்!

மொதல்லே எல்லாரையும் வரவேற்று பஜன் மண்டலியிலே ஒருத்தர் ஒரு 'ஸ்பீச்'. எதுக்காக அங்கே
கூடியிருக்கோம், இத்யாதி...

அப்புறம் 'பவித்ரம்' செய்யறது! ( புனிதப் படுத்தறது அந்த இடத்தை!)

அடுத்து கணேச வந்தனம்!

அப்புறம் சிவராத்திரி கதை! அதை ஏன் கொண்டாடணுமுன்னு ஒரு விளக்கம். அதான், புலிக்குப் பயந்து
வில்வமரத்துலெ ஏறின வேடன், தன்னையறியாம பிச்சுப் போட்ட வில்வ இலைங்க எப்படி, கீழே இருந்த
சிவலிங்கத்து மேலெ விழுந்து, 'போலேநாத்' எப்படி அவனுக்குத் தரிசனம் தந்து மோட்சத்துக்கு
அனுப்பினாருன்றது!'போலெநாத் உண்மையிலேயே ரொம்ப போலாதான்! ரொம்ப வெகுளி!!! இப்படிச்
ச்சும்மா இலையைக் கிள்ளிப் போட்டதுக்கே சொர்க்கத்தைக் கொடுத்துட்டாரே! ஆனா, அவர் சொன்ன கதை
வேற! சிவபெருமானோட அடி, முடியைத் தெரிஞ்சுக்க ப்ரம்மாவும், விஷ்ணுவும் போனதைச் சொன்னாரு!
இதெல்லாம் ஃபிஜியன் ஹிந்தியிலே!( போஜ்புரி ஹிந்தி)

அதுக்கப்புறம் இன்னொருத்தர், புள்ளைங்களுக்கும், ஹிந்தி தெரியாம யாராவது இருந்தாங்கன்னா அவுங்களுக்கும்
புரியணுமமேன்னு இங்கிலீஷிலே கதை சொன்னார். அவரு சொன்னது 'நம்ம பாற்கடல் விவகாரம்!'

அடுத்து, சிவலிங்கத்துக்கு, பால், தண்ணீ, பூ எல்லாம் கலந்த அபிஷேகம்! கூடவே ஆரத்தி. இதெல்லாம்
நடக்கறப்பவே 108 தடவை ஒரு மந்திரம் ஜபிக்கணும்! சிம்பிள் மந்திரம்! ' ஓம் நமசிவாயா'

எல்லோரும் அவுங்கவுங்க பக்தி சிரத்தையோடு வீட்டுலே இருந்து கொண்டு வந்த பிரசாதங்களை, சாமி முன்னாலே
வச்சுக் கும்பிட்டுட்டு, 'ஷாந்தி' சொல்லி முடிச்சாச்சு!

அதுக்கப்புறம் பிரசாத வினியோகம்! முடிஞ்சது பூஜை!!!!

சாஸ்த்திரம், சம்பிரதாயம் எல்லாம் இல்லை! ஆத்மார்த்தமான பூஜை! எளியமுறை! எல்லோரும் பங்கெடுக்கறது!

எந்த பூஜைன்னாலும் சரி, பிள்ளையார், சிவன், விஷ்ணு, லக்ஷ்மி, ஹனுமான் எல்லோருக்கும் 'ஜே' போட்டு
முடிக்கறாங்க!

நானும் 23 வருஷமா, இதுலே பங்கெடுத்துக்கிட்டுதான் இருக்கேன். எல்லாம் ஒரே மாதிரி!!!!!

" போலோ ஓம் நமஷிவாய"






Tuesday, March 08, 2005

மகளிர்தின நினைவலைகள்!!!!

என்னடா, மகளிர் தினம்ன்னு சொல்லிக் கொண்டாடுறதெல்லாம் இப்ப சமீபத்துலே ஆரம்பிச்சதாச்சே,
இவளுக்கு மட்டும் அப்படி, எப்படி எல்லாத்துலேயும் நினைவலை வந்துருதுன்னு நினைக்கிறீங்களா?

நினைவலைன்னா ரொம்பப் பழசாத்தான் இருக்கணுமா? நேத்து நடந்தது நினைவலையாவாதா? என்னாப்பா
ஒரே குழப்பமா இருக்கு!



ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே, இதேநாளிலே சென்னையிலே இருந்தோம். மொதநா ராத்திரி பதினோரு மணிக்குத்தான்
அங்கே போய்ச் சேர்ந்தோம். இந்த 'தோம், தோம்' யாருன்னா நானும், என்னுடைய 'பிஸினஸ் பார்ட்னரும்'தான்!

இங்கே (நம்முடைய இனப்)பெண்களுக்காக ஒரு ஆடை ஆபரணக் கடையை நடத்தலாமுன்னு முடிவு செஞ்சிருந்தோம்!
அதுக்காக 'பர்ச்சேஸ்' செய்யப் போனோம்.

பொழுது விடிஞ்சதும், ஆரம்பிச்ச வேலை நல்லபடியா முடியணுமேன்னு ஆண்டவனை, நேரில்(!)போய் வேண்டிக்கிட்டு
வந்தேன்.ரொம்பப் பக்கத்துலேதான், திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த பெருமாள் கோயில் இருக்குது!

நாளைத் துவக்கறதுக்கு எஞ்ஜினுக்கு 'பெட்ரோல்' போட தி.நகர் கீதா கஃபேக்குப் போய்ச் சேர்ந்தோம். இந்த இடம்தான்
எனக்கு ஆகிவந்த இடம்!

எங்க மேஜைக்கு எதிர்லே இருந்த காலி இடத்தில் ஒரு இளைஞனும், ஒரு அம்மாவும் வந்து உக்கார்ந்தாங்க! அந்த அம்மாவுக்கு
மட்டும் சில உணவுவகையை ஆர்டர் செஞ்சுட்டு, அந்தப் பையன் ச்சும்மா அந்தம்மாகிட்டே பேசிகிட்டே இருந்தாரு.

நாங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். எனக்கு வாய் சும்மா இருக்குமா? நான் அவரைப் பார்த்து, 'ஏங்க நீங்க ஒண்ணும்
சாப்பிடலையா?'ன்னு கேட்டேன். அதுக்கு அந்தம்மா சொன்னாங்க, 'அவன் வீட்டுலேயே சாப்பிட்டுட்டாங்க. எனக்கு
மட்டும் டிஃபன் வாங்கித்தர்றதுக்கு கூட்டிட்டு வந்தான்!'

நானும் விடாம, 'ஏங்க இன்னைக்கு உங்களுக்குப் பிறந்த நாளா இல்லை வேற ஏதாவது விசேஷமா'ன்னு கேட்டேன்.
( விடமாட்டாளே...)

'இன்னைக்கு மகளிர் தினமாச்சுங்களே! அதான் அம்மாவுக்கு டிஃபன் வாங்கித்தரலாமுன்னு நினைச்சேன்' சொன்னது அந்தப் பையன்!
'அம்மா டீச்சரா வேலை செய்யறாங்க. அவுங்களை ஸ்கூலிலே விட்டுட்டு நான் வேலைக்குப் போகணும்.'

ஆஹா.. இந்தியாவுலே இப்படியெல்லாம் கொண்டாட்டங்கள் நடக்கறது இப்பத்தான் தெரியுது! அதுமட்டுமில்லை அன்னைக்கு 'மகளிர் தினம்'
என்ற விஷயம்கூட எங்களுக்கு இப்பத்தான் தெரியுது!!!

எங்க முகத்துலே ஒரு பெருமிதம்!! நல்ல நாளுலேதான் நம்ம வியாபாரத்தை ஆரம்பிக்குறோம்! நம்ம கடை ஆஹா ஓஹோன்னு நடக்கப்போகுது!

பத்துமணிக்கு ஆரம்பிச்சு கடை கடையா சுத்திக் களைச்சுப்போச்சு! பகல் சாப்பாட்டுக்காக அதே தி.நகர் சரவண பவனுக்குப் போய் சாப்பாட்டை
முடிச்சுக்கிட்டு வெளியே வர்றோம். காலையிலே பார்த்த அதே அம்மா( டீச்சர்) இன்னும் சில பெண்களோடு, உள்ளே நுழையறாங்க!
அதான் ஏற்கனவே அறிமுகம் ஆயிருச்சே!

"என்னங்க, இன்னும் மகளிர் தினக் கொண்டாட்டம் தானா?"

" ஆமாங்க. இவுங்கெல்லாம் கூட வேலை செய்யற டீச்சருங்க. மகளிர் தினத்துக்காக வெளியே ஒண்ணாச் சேர்ந்துபோய் சாப்பிடலாமுன்னு
வந்தோம்"

' நாங்களும் இதே தினத்தைக் கொண்டாடத்தான் இங்கே வந்தோங்க'ன்னு சொல்லிட்டு ஒரு 'டாட்டா' காமிச்சுட்டு வந்தோம்!

அதுக்கப்புறம் அங்கே இருந்த ரெண்டு வாரத்துலே அவுங்களை எங்கேயும் பார்க்கலை!


மகளிர் தின வாழ்த்துக்கள்!!!!

பி.கு: கடை எப்படிப் போச்சுன்னு என்னைக் கேட்டுறாதீங்க (-:



Sunday, March 06, 2005

ரெடிமேட் !!!! பகுதி 6

"தீபாவளிக்குப் புடவை எடுத்தாச்சா?"

" இல்லையே மாமி"

" நல்ல நாளும் அதுவுமா புதுசு கட்டாயம் உடுத்திக்கணும். வா என் கூட.நான் எடுத்துத் தரேன்"

ரெண்டு வருஷமா புதுசா புடவை ஒண்ணுமே வாங்கிக்கலை! எல்லாம் 'டப்பு டைட்' ஆனதாலேதான்!
'பழக்கம்' விட்டுப் போனதாலே, இப்ப எடுத்துக்கணுமுன்னே தோணலை!( இந்த காலக் கட்டத்துலே
மொத்தம் மூணேமூணு ப்ளவுஸ் தான் தச்சுக்கிட்டேன். அது கணக்குலே வராதுல்லே?)



இப்பல்லாம் கையிலே காசு ரொம்பவே புழங்க ஆரம்பிச்சாச்சு! அதைச் செலவு செய்யறதுக்குத் தோதா நேரமும் கிடைச்சிருக்கு!
காசு... சரி. நேரம்...எங்களுக்கு மட்டும் 48 மணி நேரமா ஒரு நாளைக்கு?

மூணு பஸ் மாறிப் போகணும்ன்னா, எப்படிப் பார்த்தாலும் ஒவ்வொரு பஸ்ஸுக்கும் காத்திருக்கறதையும்
சேர்த்தா போய்ச் சேரவே ஒண்ணரை மணி நேரம்! திரும்ப வர்றதுக்கு ஒண்ணரை மணி. ஒரு நாளைக்கு 3 மணியைத்
தொலைச்சவங்களுக்கு, இப்ப ரெண்டு மணி நேரம் லாபம்!

என்ன , கணக்குச் சரியா வருதா, இல்லையா?

சொன்னபடியே மாமா ஏற்பாடு செஞ்சுட்டார்! கோர்புரி(மராத்தியிலே கோர்புடி!)ன்ற இடத்துலே 'ஆர்மி க்வாட்டர்ஸ்' ஏராளமாக்
கட்டிவிட்டிருக்காங்க! அந்த இடம் முழுக்க முழுக்க ராணுவத்தைச் சேர்ந்தது!

பாதுகாப்பான இடம்! நமக்கென்னங்க, நேவியை விட்டா ஆர்மி! தேசப் பாதுகாப்பே நமக்கும் பாதுகாப்பு! என்ன, வீடுங்கல்லாம் ரொம்பச்
சாதாரணமா இருக்கும். அதான் அரண்மனை வாசம் ஒருக்கா அனுபவிச்சுப் பார்த்தாச்சே! எப்பவும் உச்சாணிக் கிளையிலேயே இருக்கணுமா?
யதார்த்தத்துக்கு இறங்கிவர வேணாமா?

சுபேதார், சுபேதார் மேஜர் இப்படிப்பட்ட ரேங்கிலே இருக்கறவங்களுக்கு இந்த வீடுங்க! ஏழெட்டு லைன்களா இருக்கும். நடுவிலே தெரு.
ரெண்டு பக்கமும் ஒரே மாதிரி வீடுங்க. இங்கே கலையழகான கட்டிடமெல்லாம் இல்லை! எல்லா வீடுகளுமே சதுரமா இருக்கும்!
கட்டம் கட்டி வச்சதுபோல 15 அடிக்குப் 15 அடி ரூமுங்க நாலு சேர்ந்தா ஒரு வீடு! முன்னாலே ஒரு வெராந்தா. உள்ளே வந்தா இந்த
15க்கு 15 ரூம்.அந்த ரூம்லே நின்னீங்கன்னா, உங்களுக்கு இடதுகைப் பக்கம் அதே மாதிரி இன்னோரு ரூம். இது வீட்டோட முன்பகுதி!
அதே செட்டப்புலே அந்த ரெண்டு ரூமுங்களை ஒட்டி பின்பக்கத்துலே அதே 15க்கு 15லே இன்னும் ரெண்டு ரூமுங்க.

சரியாச் சொல்றேனா? மொத்தத்துலே 30க்கு 30 சதுரத்தை நாலாப் பகுந்த மாதிரின்னு வச்சுக்குங்க! பின்பக்கம் இன்னோரு வெராந்தா, அதுலே
ஒரு பக்கம் கழிவறை! இன்னோரு பக்கம் குளியலறை! வீடுங்கெல்லாம், தெருவைவிட நல்ல உயரமா நாலைஞ்சு படிகளோட இருக்கும்!
பின்னாடி வெராந்தாவிலேயும் அதே மாதிரி நாலைஞ்சு படிங்க. அதுலே இறங்கிப் போனா மூணடி அகல நடைபாதை. நீளம் ஒரு பத்தடி
இருக்கும். அது முடியற இடத்துலே ஒரு அறை! அஞ்சடிக்குப் பத்தடி அளவுலே. இது எதுக்கா? சுபேதார் மேஜரோட சர்வண்ட் க்வாட்டர்!

எழுதப்படாத விதி என்னன்னா, எல்லா ஆஃபீஸருங்களும் மூணு ரூம் வச்சுக்கிட்டு, நாலாவது ரூமை வாடகைக்கு விட்டுரணும்! அப்ப அந்த
சர்வண்ட் க்வாட்டர்? அதையும் வாடகைக்குக் கொடுத்தாப் போச்சு!

வாடகையும் ஒரே மாதிரிதான்! சர்வண்ட் க்வாட்டர்க்கு மட்டும் சல்லிசு வாடகை! ரொம்பச் சின்ன இடமாச்சே, அதாலெ! அதுக்கும் வர்றதுக்கு
ஆளுங்க லைன்லே நிக்கறாங்கல்லே!

ஒரு 'சேட்டன்' வீட்டுலேதான் நமக்கு நாலாவது ரூம் கிடைச்சிருச்சு! அவுங்க ரெண்டே பேர்தான். சேட்டனும், சேச்சியும்! நாங்க 'மலையாளம்
சம்சாரிக்கான் கழிவுள்ளவராணுன்னு அறிஞப்போள் அவருக்கு ஞெங்களோடு பயங்கர இஷ்டம் தோணிப்போயி!'

சிறப்புச் சலுகையா, ஒரு கட்டிலும்( எல்லாம் ஆர்மிக்காரங்க சப்ளையான நாடாக் கட்டில்தான்!) ரெண்டு 'கசேர'யும்கூடக் கொடுத்தாங்க! எங்க
'ஃபர்னிச்சர் ப்ராப்ளம் சால்வ்டு!'

ஆமா, இவுங்களை வேற இடத்துக்கு மாத்திட்டாங்கன்னா?

கவலையே வேணாம்! அங்கேயே வேற வீட்டுக்கு நாம மாறிடலாம். ஒருத்தர் மாறி ஒருத்தர் வந்துக்கிட்டே இருப்பாங்கதானே! நம்மைப் போல
பல குடும்பங்கள் இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கேன்னு 'ஜம்ப்' செஞ்சுக்கிட்டே பத்துப் பதினைஞ்சு வருசமா இங்கேயே சுத்திக்கிட்டு
இருக்காங்களாமே! 'யஹாங்சே வஹாங், வஹாங்சே யஹாங்'ன்னு நாமளும் தாவுனாப் போச்சு!

நேவிக்குக் கொடுத்ததிலே மூணுலே ஒரு பங்குதான் ஆர்மியிலே! வாடகையிலே மட்டுமா மிச்சம்? பஸ் சார்ஜ்லேயும்தான்! அந்த இடத்திலிருந்து
வேலைக்குப் போக பஸ் வசதி கொஞ்சம் சரியில்லைதான்! ஆனா, குறுக்கு ரோடிலே போய், 'எம்பரெஸ் கார்டனை' கட் பண்ணி மெயின்
ரோடிலே போயிரலாம்! அதுவும் சைக்கிளிலே போனா ஒரு 20 நிமிஷம் போதும்!

இப்ப சைக்கிளுக்கு எங்கே போறது? நம்ம 'வீடு' இருக்கறதுக்குப் ரொம்பப் பக்கத்துலே ஒரு ரெண்டுநிமிஷ நடையிலே ஒரு கடைவீதி
இருக்கு! அதுலே சைக்கிள் விற்பனை & ரிப்பேர் கடை வச்சிருக்கறவர் ஒரு திருச்சிக்காரர்.( கடைவீதி உலாப் போனப்ப கண்டு பேசினோம்)
அவர்கிட்டே ஒரு 'செகண்ட் ஹேண்ட் சைக்கிள்' வாங்கலாமான்னு ஒரு யோசனை! அதுக்காக அவரைப் பார்க்கப் போனோம். அந்தக்
கடைவீதியிலே கடை வச்சிருக்கறவங்களுக்கு வீடுங்க அந்தந்த கடைகளுக்குப் பின்புறமே!

அவருக்கு நம்மைப் பார்த்ததுமே ரொம்பப் பிடிச்சிருச்சு. வீட்டுக்குள்ளே கூட்டிட்டுப்போய் மனைவி, மற்ற குடும்பத்தினரையெல்லாம் அறிமுகப்
படுத்தி வச்சுட்டார். நிறைய புள்ளைகுட்டிங்களோட இருக்கற கூட்டுக் குடும்பம்! அவரும் அவர் மனைவியும் மட்டுமே தமிழ் பேசத்தெரிஞ்சவுங்க!
அவரோட முழுப்பேரு யாருக்குமே தெரியாது! எல்லோரும் கூப்புடற மாதிரியே நாங்களும் 'பாஷா பாய்'ன்னு கூப்பிட்டோம்!

அவர்தான் சொன்னாரு, 'எதுக்காக சைக்கிளை வாங்கறிங்க? நம்ம கடையிலேயே மாச வாடகைக்கு ஒரு வண்டி எடுத்துக்குங்க! வாடகை
25 ரூபா. ஆனா நீங்க 20 கொடுத்தாப் போதும். சைக்கிள் மெயிண்டனன்ஸ் எல்லாம் நானே பாத்துக்குவேன்.'

நல்லதாப் போச்சு! ஒரு நல்ல புது சைக்கிளாப் பாத்துக் கொடுத்துட்டார். அதுலே இருந்து இன்னும் வசதியாப் போயிருச்சு. தினமும் வெளியே
போய் சுத்திட்டு வர வழக்கம் வந்துருச்சு! அங்கே அநேகமா வீட்டு வீட்டுக்கு சைக்கிளுங்க இருக்கு.'டபுள்ஸ்' போறதும் குற்றம் கிடையாது!
ஏராளமான பொம்பளைங்களும் சைக்கிள் சவாரிதான்! நம்ம வீட்டுலே இருந்து 'மஹாத்மா காந்தி ரோடு'( எல்லா ஊர்லெயும் ஷாப்பிங்
செய்யறதுக்குன்னே இருக்கற ரோடுக்கு இதே பெயர்தான் இல்லே! இதுலேதான் நாம் தேசீய அளவுலே ஒத்துமையா இருக்கோம்!) ஒரு
மூணு கிலோ மீட்டர் தூரம்தான்! அங்கே போயிட்டுச் சுத்தியடிச்சுட்டு, திரும்பறப்ப ஒரு குறிப்பிட்ட ரோடுவழியா வருவோம்.
கொஞ்சம் சரிவான ரோடா இருக்கறதாலே, பெடலை மிதிக்காமலேயே அப்படியே மிதந்துக்கிட்டே வந்துரலாம்! அந்த ரோடுக்கு நான் வச்ச
பேர்'ஸ்கூட்டர் ரோடு'!

அது இருக்கட்டும். இப்ப எங்கெ இருக்கோம்? ஆங்... தீபாவளிக்குத் துணிகள் வாங்கப் போய்க்கிட்டு இருக்கோம். ரெண்டு வருஷத்துக்கு
அப்புறம் புதுப் புடவை! ஒரே த்ரில்லா இருக்கு!

மாமியைப் பார்த்ததும் கடைக்காரருக்கு ஒரே சந்தோஷம்! மாமியும் 'மராத்தி கலந்த ஹிந்தியிலே' எங்களையெல்லாம் அறிமுகப்படுத்தியாச்சு!
ரெண்டு மூணு புடவைகளை( அதெல்லாம்தாம் அப்போது லேட்டஸ்ட் ஃபேஷனாம்!) எடுத்துப் போடறார். உடனே எங்க 'இவர்' சொல்றார்.
'எல்லாத்தையும் எடுத்துப் போட்டுக் கஷ்டப்படவேணாம்!' அப்புறம் என்பக்கம் திரும்பிச் சொல்றார்' இங்கிருந்தே என்ன கலர் வேணும்ன்னு
சொல்லு. அதை மட்டும் எடுக்கச் சொல்லலாம்'

முன்னே பின்னே புடவைக் கடைக்குக் கூட்டிட்டுப் போய் எதாவது வாங்கியிருந்தால்தானே? ஒருவேளை இப்போத்தான் புடவைக் கடையையே
கண்ணாலே பாக்கறார் போல! மொதப் புடவை வாங்கித்தர்ற லட்சணத்தைப் பாத்தீங்களா?

மனசில்லா மனசோட தலையை ஆட்டிக்கிட்டே ( அப்ப இவ்வளோ வாய் இல்லை!) ஒரு இளமஞ்சக் கலருலே, ச்சின்னச்சின்ன பிரவுண் பூப்
போட்ட புடவையையும் அதுக்கு மேட்சா ப்ளவுஸ் துணியும் வாங்கிக்கிட்டேன். முந்தி மாதிரி, வீட்டுக்கு வந்தவுடனே கட்டிப் பாக்கற கொதிப்பெல்லாம்
அடங்கிருச்சு. தீபாவளிக்கே கட்டலாம்ன்னு இருந்தேன். நம்ம வீட்டுக்கிட்டே இருந்த கடைத்தெருவிலேயே ( இதும் பேரு கோர்புரி பஸார்)
ஒரு டெயிலர் கடையிலே, ப்ளவுஸைத் தைக்கவும் கொடுத்தேன்.

தீபாவளியும் வந்துச்சு! காலையிலே குளிச்சு முழுகி, புதுசைக் கட்டிக்கலாம்ன்னு புடவையைப் பிரிச்சா என்னவோ வித்தியாசமா இருக்கறதுபோல ஒரு
தோணல். என்னடான்னு பார்த்தா, புடவையோட அகலம் ரொம்பவே குறைச்சல்! கொசுவத்தைக் கொஞ்சமா சொருகினாலும், ஏதோ கழனிக்காட்டுலே
வேலைக்குப் போற பொம்பிளைங்க கட்டற மாதிரி பாதிக் கணுக்கால் தெரியுது!

இன்னும் வரும்!



Wednesday, March 02, 2005

ரெடிமேட் பகுதி 5

ராஸ்தா பேட் . பேட் என்ன பேட் எல்லாம் நம்ம 'பேட்டை'தான். ஹிந்தியிலே சுருங்கிருச்சு!

அங்கெதான் தமிழ்ப் பத்திரிக்கைங்க கிடைக்கும். அதுக்காகவே வாரம் ரெண்டுதடவை ஓடுவொம். விக்கறவர்
மராத்திக்காரர்தான். அந்த ஏரியாவே நம்ம மாம்பலம் மாதிரி இருக்கும்.எல்லாம் நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்த
தமிழர்கள்தான். ரொம்ப காலத்துக்கு முன்னெயே இங்கே வேலைக்கு வந்துவிட்ட குடும்பங்கள்!


அவுங்க புள்ளைங்கெல்லாம் இங்கெயெ பிறந்து வளர்ந்த காரணத்தாலே மராத்தியிலே வெளுத்துக் கட்டிக்கிட்டு இருக்கும்!
கூடவே தமிழும் பேசுதுங்க! பொட்டைப் பசங்கெல்லாம் பேண்ட் ஷர்ட் போட்டுக்கிட்டு இருக்கும்! இதுலே என்னா
இருக்கு புதுசான்னு நினைக்கிறீங்கதானே? இது 27 வருசத்துக்கு முந்தி! அப்ப மெட்ராஸுலே என்ன ஸ்டைல்?
யாருக்காவது ஞாபகம் இருக்கா?

ராமர் கோயில், ஹனுமார் கோயில் இப்படி நமக்குத் தேவையான கோயிலுங்க வேற இருக்கற இடம்! ஹனுமார்
கோயில் இங்கே 'மாருதி மந்திர்'! நாமே சாமியைத் தொட்டுப் பூஜை செஞ்சுக்கலாம்! செம்மண் கலருலெ ஒரு
ஆரஞ்சுச் சாயம் பூசுன ஹனுமார். மூக்கு முழி ஒண்ணும் தெரியாம பூசிமெழுகின உருவம்!( ஐய்யய்யோ! சாமியை
அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுல்லே? தப்பு தப்பு! கன்னத்துலே போட்டுக்கறேன்!)

சாயந்திரம் அஞ்சுமணியானா அந்த ரோடுக்கே ஒரு களை வந்துரும்! நடைபாதை(!) எல்லாம் கடைங்க! காய்கறி
வியாபாரம்தான்! நேரம் ஆக ஆக நம்ம 'ரங்கனாதன் தெரு'வேதான்!

வீடுங்கெல்லாம் அரதப் பழசா இருக்கும். 'வாடா'ன்னு சொல்ற இடத்துலே போனா, அசந்துருவீங்க! உள்ளெ போற
வாசல் சாதாரணமான ஒரு கதவுதான்! அதுக்குள்ளே போயிட்டா, ஒரு பெரிய்ய்ய்ய முற்றம். அதைச் சுத்தி நிறைய வீடுங்க!
அந்த முன்வாசக் கதவை சாத்தவே மாட்டாங்க. அதான் எப்பவும் குடித்தனக்காரங்க வரவும் போறதுமா இருக்காங்களே!

வீடுன்னா ரெண்டு ரூம் இருந்தாலே மாளிகை ரேஞ்சு! ரெண்டு ரூமுன்னா ரெண்டு பெட்ரூமில்லை! ஜஸ்ட் ரெண்டு ரூம்.
அவ்வளவுதான்! அதுலே ஒண்ணு சமையல், ஸ்டோர்ரூம் இப்படி எல்லாமே. இன்னொண்ணுலே ஒரு கட்டில் இருக்கும்.
அதுதான் விருந்தினர் வந்தா உட்கார சோபா, நாற்காலி இன்ன பிற! அநேகமா எல்லா வீட்டுலெயும் இதே கதைதான்.
ராத்திரி இந்த ரெண்டு ரூமுமே பெட் ரூமா மாறிடும்! ச்சின்ன சின்ன பொந்தா இருக்கறதும் இருக்கு! அங்கே, மேலே சொன்ன
எல்லாமெ அந்த ஒரே ரூமிலே!

ஆங்... சொல்ல மறந்துட்டேனே, அந்தச் சமையலறையிலேயே ஒரு சின்னப் பகுதியைத் தடுத்து அங்கே குளிச்சுக்கணும்! மத்த
நித்தியப்படி வேலைகளுக்கு, ரெண்டு கழிவறை எல்லாக் குடித்தனக்காரர்களுக்கும் பொது! காலையிலே அங்கே எப்படி இருந்திருக்கும்
என்றதை உங்க கற்பனைக்கே விட்டுடறேன். அதான் ஹிந்திப் படங்களிலே ( 1970, 1980 களில்)அடிக்கடி இந்த மாதிரி ஸீன்கள் வருமே!
அப்பெல்லாம் இந்த ஃப்ளாட் கலாச்சாரம் பாம்பேலெதான் அதிகமா இருந்தது! அதிசயமா சிலவீடுகளிலே சமையலறைக்குப் பக்கத்துலே
குட்டியூண்டு பால்கனி இருக்கறதும் உண்டு.அப்ப அதுலே ஒரு தடுப்பு மறைவை வச்சுட்டா, 'கொல்லைப்புற செபரேட் பாத்ரூம்' ஆயிரும்!

ஊரு முழுக்க இந்த மாதிரி 'வாடாங்க' இருக்கு! சொந்தக்காரரோட பேருலே அதுக்கு அட்ரஸ் இருக்கும். கோர்புடே வாடா, குல்கர்ணி வாடான்னு!

இந்த வீடுங்களுக்கு வாடகை எவ்வளவுன்னு நினைக்கறீங்க? சொன்னா நம்பமாட்டீங்க. அஞ்சு ருபா, பத்து ரூபாதாங்க! பெரிய அஞ்சு பத்து
இல்லீங்க. வெறும் அஞ்சு, வெறும் பத்தேதான்! அந்தக் காலத்துலே இந்த மாதிரி குறைஞ்ச வாடகைக்கு இடம் கிடைச்சதாம். அப்ப ரூபாயோட
மதிப்பு நல்லா இருந்த காலம். தங்கம்கூட பவுனு 10 ரூபான்னு இருந்ததாமே! அப்ப இடம் பிடிச்சவுங்க, தலைமுறை தலைமுறையா இதே
வீடுகளிலே, அதே வாடகையை மட்டும் கொடுத்துக்கிட்டு இருந்துக்கிட்டு வராங்க! வீட்டு சொந்தக்காரர்களுக்கு வசதியான சட்டம் ஒண்ணும்
இல்லாததாலே, அவுங்களுக்கு ஒண்ணுமே செய்யமுடியலையாம்! வாடகையையும் ஏத்தமுடியாதாம்! இது எப்படி இருக்கு!

நிறைய இடங்களிலே வீட்டுக்குச் சொந்தக்காரங்களே, அவுங்களோட குடித்தனக்காரங்களுக்கு நிறையப் பணம் கொடுத்து, அவுங்களைக் காலி
(வீட்டைதாங்க) பண்ண வச்சுக்கிட்டு இருந்தாங்க!

ஆமாம். இதெல்லாம் இவ்வளவு விலாவரியா எனக்கு எப்படித் தெரிஞ்சது? அதுக்கும் ஒரு கதை இருக்கு!

வாங்க, நம்ம 'அரண்மனை' வாசத்துக்கே திரும்பப் போலாம்!

நாங்க அரண்மனையிலே தங்க ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகப் போகுது! எவ்வளவு வாடகை(!) தரணுமுன்னு அவுங்க சொல்லலே.
நாங்களும் கேட்கலே! எப்படி கேட்க முடியும்? என்னன்னு மதிப்புப் போடறது?

அங்கே தங்க ஆரம்பிச்சது முதல் நானும், எங்க இவரும் பேசும்போதெல்லாம் எவ்வளவு வாடகை கொடுக்கலாம் என்றதைப் பத்தியே
பேசிக்கிட்டு இருப்போம். எவ்வளவு கொடுத்தாலும் தகும்தான். ஆனா நமக்கு வர்ற கொஞ்சமே கொஞ்ச சம்பளத்துலே எவ்வளவுன்னு
தர்றது? அவ்வளோ பெரிய மனுசங்க கிட்டே எப்படிப் போய்க் கேட்கமுடியும்? ஒரே குழப்பம்.மாசம் முடியட்டும், மாசம் முடியட்டும்
பார்க்கலாம்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கறப்பவே மாசம் முடியற நாள் வந்துடுச்சு!

நம்ம வீட்டுக்கு பிரதம ஆலோசகர் நாந்தானே! 'அந்த ஹோட்டலிலேயே தங்கி இருந்தா எவ்வளவு வாடகையோ அதுலே பாதி கொடுக்கலாம்.
அது ஜாஸ்தின்னு அவுங்க நினைச்சா, அவுங்களே பாக்கியைத் திருப்பிக் கொடுக்கட்டும்'! எப்படி என் யோசனை?

மறுநாள் சாயங்காலம், நாங்க முடிவு செஞ்சமாதிரி, பணத்தை அவுங்க கையிலே கொடுத்தோம். என்னன்னு கேட்டாங்க. 'தப்பா நினைச்சுக்காதீங்க.
ச்சும்மாத் தங்கியிருக்க என்னவோ மாதிரி இருக்கு, அதுக்குத்தான்.....'ன்னு இழுத்தோம்.

சரி. உங்க இஷ்டம்ன்னு சொல்லிட்டு, அதை எடுத்துவச்சிக்கிட்டாங்க. இப்படியே மூணு மாசம் போயிருச்சு! அப்போ 'நவராத்திரி விழா' வந்துச்சு.
அந்த ஊர்லே இருக்கற ஒரு தமிழ்க்காரங்க வீட்டுக்கு, கொலு பார்க்க போகணும், நீங்களும் வாங்கன்னு எங்களையும்கூட்டிக்கிட்டுப் போனாங்க.

அங்கே போனப்ப,அந்த வீட்டுக்கு இன்னோரு குடும்பமும் வந்திருந்தாங்க. கொஞ்சம் வயசான தம்பதிங்க.ஏறக்குறைய எங்க வயசிலே இருந்த மகளும்,
மகனும் அவுங்ககூட!

அந்த 'மாமி'யைப் பார்த்தவுடனே எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு! சிலபேரைப் பார்த்தவுடன் மனசு ஒட்டிக்குது பாருங்க! அந்த மாமியும்
என்னோட ரொம்ப வாஞ்சையா, பிரியமாப் பேசுனாங்க! எங்களோட 'சரித்திரம்' சொன்னோம். அவுங்கைைளப் பத்திக் கேட்டப்ப, அவுங்க
வீடு 'ராஸ்தாபெட்'ன்னு சொன்னதும்,

" அங்கெ எங்கே?"

" அந்த ஏரியாவுக்கு வந்துருக்கீங்களா?"

" தமிழ்ப் பத்திரிக்கை வாங்கவும், காஃபி பவுடர் வாங்கவும் அங்கேதான் வர்றோம்"

" பரசுராம்லேயா காஃபி வாங்கறீங்க?"

" ஆமாம் மாமி."

" அந்தக் கடைக்குப் பின்னம்பக்கம்தான் நம்ம வீடு! கட்டாயமா வாங்க"

மறுநாளே காஃபிப் பொடி தீர்ந்து போச்சு! அந்தப் பரசுராம் பாலக்காட்டைச் சேர்ந்தவர். தமிழ்க்காரங்க இருக்கற பகுதின்னு அங்கெ
ஒரு நாள் ச்சும்மா சுத்தப் போனப்ப இந்தக் காஃபிப்பொடி அரைக்கற வாசம் 'கம்முன்னு' வந்தது. அதை வாசம்புடிச்சுக்கிட்டேப் போய்ச்
சேர்ந்த இடம் இந்தக் கடை. அப்ப இருந்து அங்கே காஃபிப் பொடி சுடச்சுட அரைச்சு வாங்கிக்கிட்டு வர்றது ஒரு வழக்கமாப் போச்சு!

மாமி சொன்ன வழியை ஞாபகம் வச்சுக்கிட்டே அவுங்க வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். மாமி வீடு ரெண்டு ரூம்! பின்னாலே ஒரு ச்சின்ன பால்கனி!
மாமாவும் இருந்தார். அவருக்கு 'சதர்ன் கமாண்ட்ஸ்'லே வேலை. காலையிலே 7 முதல் பகல் 2 வரைதான் வேலை நேரம்!
மேல்வருமானத்துக்காக சாயந்திரம் 6 முதல் 9 வரை ஒரு கடையிலே கணக்கு எழுதுவாராம். நாங்க போனதாலே அன்னைக்கு கடைக்குப்
போகாம லீவு!

மாமியும் நானும் சமையலுள்ளிலே பேசிக்கிட்டு இருந்தோம்.பேச்சுவாக்குலே நாங்க ஏதாவது வாடகை கொடுக்கறோமான்னு மாமி கேட்டதுக்கு
நாங்க கொடுக்கற தொகையைச் சொன்னேன்.

"ஐயய்யோ! ஏன்னா, இந்த அநியாயத்தைக் கேட்டேளா? ச்சும்மாக் கிடக்கிற பங்களாவுக்கு இவ்வளோ காசா?"

மாமிக்கு கணிரென்ற குரல். சாதாரணமாப் பேசினாலே எட்டு வீட்டுக்குக் கேட்கும். இப்ப அதிர்ச்சி வேற!

'நிஜமாவா இவ்வளோ கொடுக்கறிங்க?' இது மாமா!

"மூணு பஸ் பிடிச்சு வேலைக்குப் போறிங்களே. சிரமமா இல்லையா?"

" கஷ்டம்தான் மாமா. என்ன செய்யறது? வீடு கிடைக்கலையே!"

" நான் ஏதாவது ஏற்பாடு செய்யட்டுமா? நாைைளக்குச் சாயந்திரமா வாங்களேன்"

அதுக்குள்ளே, குமுட்டி அடுப்பிலே, வெங்கலப் பானையிலே சுடச்சுட அரிசி உப்புமா தயார்! கூடவே அருமையான காஃபி!

உப்புமாக்குத் தொட்டுக்க மாங்கா இனிப்பு ஊறுகாய்!

இன்னும் வரும்!