Sunday, March 06, 2005

ரெடிமேட் !!!! பகுதி 6

"தீபாவளிக்குப் புடவை எடுத்தாச்சா?"

" இல்லையே மாமி"

" நல்ல நாளும் அதுவுமா புதுசு கட்டாயம் உடுத்திக்கணும். வா என் கூட.நான் எடுத்துத் தரேன்"

ரெண்டு வருஷமா புதுசா புடவை ஒண்ணுமே வாங்கிக்கலை! எல்லாம் 'டப்பு டைட்' ஆனதாலேதான்!
'பழக்கம்' விட்டுப் போனதாலே, இப்ப எடுத்துக்கணுமுன்னே தோணலை!( இந்த காலக் கட்டத்துலே
மொத்தம் மூணேமூணு ப்ளவுஸ் தான் தச்சுக்கிட்டேன். அது கணக்குலே வராதுல்லே?)இப்பல்லாம் கையிலே காசு ரொம்பவே புழங்க ஆரம்பிச்சாச்சு! அதைச் செலவு செய்யறதுக்குத் தோதா நேரமும் கிடைச்சிருக்கு!
காசு... சரி. நேரம்...எங்களுக்கு மட்டும் 48 மணி நேரமா ஒரு நாளைக்கு?

மூணு பஸ் மாறிப் போகணும்ன்னா, எப்படிப் பார்த்தாலும் ஒவ்வொரு பஸ்ஸுக்கும் காத்திருக்கறதையும்
சேர்த்தா போய்ச் சேரவே ஒண்ணரை மணி நேரம்! திரும்ப வர்றதுக்கு ஒண்ணரை மணி. ஒரு நாளைக்கு 3 மணியைத்
தொலைச்சவங்களுக்கு, இப்ப ரெண்டு மணி நேரம் லாபம்!

என்ன , கணக்குச் சரியா வருதா, இல்லையா?

சொன்னபடியே மாமா ஏற்பாடு செஞ்சுட்டார்! கோர்புரி(மராத்தியிலே கோர்புடி!)ன்ற இடத்துலே 'ஆர்மி க்வாட்டர்ஸ்' ஏராளமாக்
கட்டிவிட்டிருக்காங்க! அந்த இடம் முழுக்க முழுக்க ராணுவத்தைச் சேர்ந்தது!

பாதுகாப்பான இடம்! நமக்கென்னங்க, நேவியை விட்டா ஆர்மி! தேசப் பாதுகாப்பே நமக்கும் பாதுகாப்பு! என்ன, வீடுங்கல்லாம் ரொம்பச்
சாதாரணமா இருக்கும். அதான் அரண்மனை வாசம் ஒருக்கா அனுபவிச்சுப் பார்த்தாச்சே! எப்பவும் உச்சாணிக் கிளையிலேயே இருக்கணுமா?
யதார்த்தத்துக்கு இறங்கிவர வேணாமா?

சுபேதார், சுபேதார் மேஜர் இப்படிப்பட்ட ரேங்கிலே இருக்கறவங்களுக்கு இந்த வீடுங்க! ஏழெட்டு லைன்களா இருக்கும். நடுவிலே தெரு.
ரெண்டு பக்கமும் ஒரே மாதிரி வீடுங்க. இங்கே கலையழகான கட்டிடமெல்லாம் இல்லை! எல்லா வீடுகளுமே சதுரமா இருக்கும்!
கட்டம் கட்டி வச்சதுபோல 15 அடிக்குப் 15 அடி ரூமுங்க நாலு சேர்ந்தா ஒரு வீடு! முன்னாலே ஒரு வெராந்தா. உள்ளே வந்தா இந்த
15க்கு 15 ரூம்.அந்த ரூம்லே நின்னீங்கன்னா, உங்களுக்கு இடதுகைப் பக்கம் அதே மாதிரி இன்னோரு ரூம். இது வீட்டோட முன்பகுதி!
அதே செட்டப்புலே அந்த ரெண்டு ரூமுங்களை ஒட்டி பின்பக்கத்துலே அதே 15க்கு 15லே இன்னும் ரெண்டு ரூமுங்க.

சரியாச் சொல்றேனா? மொத்தத்துலே 30க்கு 30 சதுரத்தை நாலாப் பகுந்த மாதிரின்னு வச்சுக்குங்க! பின்பக்கம் இன்னோரு வெராந்தா, அதுலே
ஒரு பக்கம் கழிவறை! இன்னோரு பக்கம் குளியலறை! வீடுங்கெல்லாம், தெருவைவிட நல்ல உயரமா நாலைஞ்சு படிகளோட இருக்கும்!
பின்னாடி வெராந்தாவிலேயும் அதே மாதிரி நாலைஞ்சு படிங்க. அதுலே இறங்கிப் போனா மூணடி அகல நடைபாதை. நீளம் ஒரு பத்தடி
இருக்கும். அது முடியற இடத்துலே ஒரு அறை! அஞ்சடிக்குப் பத்தடி அளவுலே. இது எதுக்கா? சுபேதார் மேஜரோட சர்வண்ட் க்வாட்டர்!

எழுதப்படாத விதி என்னன்னா, எல்லா ஆஃபீஸருங்களும் மூணு ரூம் வச்சுக்கிட்டு, நாலாவது ரூமை வாடகைக்கு விட்டுரணும்! அப்ப அந்த
சர்வண்ட் க்வாட்டர்? அதையும் வாடகைக்குக் கொடுத்தாப் போச்சு!

வாடகையும் ஒரே மாதிரிதான்! சர்வண்ட் க்வாட்டர்க்கு மட்டும் சல்லிசு வாடகை! ரொம்பச் சின்ன இடமாச்சே, அதாலெ! அதுக்கும் வர்றதுக்கு
ஆளுங்க லைன்லே நிக்கறாங்கல்லே!

ஒரு 'சேட்டன்' வீட்டுலேதான் நமக்கு நாலாவது ரூம் கிடைச்சிருச்சு! அவுங்க ரெண்டே பேர்தான். சேட்டனும், சேச்சியும்! நாங்க 'மலையாளம்
சம்சாரிக்கான் கழிவுள்ளவராணுன்னு அறிஞப்போள் அவருக்கு ஞெங்களோடு பயங்கர இஷ்டம் தோணிப்போயி!'

சிறப்புச் சலுகையா, ஒரு கட்டிலும்( எல்லாம் ஆர்மிக்காரங்க சப்ளையான நாடாக் கட்டில்தான்!) ரெண்டு 'கசேர'யும்கூடக் கொடுத்தாங்க! எங்க
'ஃபர்னிச்சர் ப்ராப்ளம் சால்வ்டு!'

ஆமா, இவுங்களை வேற இடத்துக்கு மாத்திட்டாங்கன்னா?

கவலையே வேணாம்! அங்கேயே வேற வீட்டுக்கு நாம மாறிடலாம். ஒருத்தர் மாறி ஒருத்தர் வந்துக்கிட்டே இருப்பாங்கதானே! நம்மைப் போல
பல குடும்பங்கள் இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கேன்னு 'ஜம்ப்' செஞ்சுக்கிட்டே பத்துப் பதினைஞ்சு வருசமா இங்கேயே சுத்திக்கிட்டு
இருக்காங்களாமே! 'யஹாங்சே வஹாங், வஹாங்சே யஹாங்'ன்னு நாமளும் தாவுனாப் போச்சு!

நேவிக்குக் கொடுத்ததிலே மூணுலே ஒரு பங்குதான் ஆர்மியிலே! வாடகையிலே மட்டுமா மிச்சம்? பஸ் சார்ஜ்லேயும்தான்! அந்த இடத்திலிருந்து
வேலைக்குப் போக பஸ் வசதி கொஞ்சம் சரியில்லைதான்! ஆனா, குறுக்கு ரோடிலே போய், 'எம்பரெஸ் கார்டனை' கட் பண்ணி மெயின்
ரோடிலே போயிரலாம்! அதுவும் சைக்கிளிலே போனா ஒரு 20 நிமிஷம் போதும்!

இப்ப சைக்கிளுக்கு எங்கே போறது? நம்ம 'வீடு' இருக்கறதுக்குப் ரொம்பப் பக்கத்துலே ஒரு ரெண்டுநிமிஷ நடையிலே ஒரு கடைவீதி
இருக்கு! அதுலே சைக்கிள் விற்பனை & ரிப்பேர் கடை வச்சிருக்கறவர் ஒரு திருச்சிக்காரர்.( கடைவீதி உலாப் போனப்ப கண்டு பேசினோம்)
அவர்கிட்டே ஒரு 'செகண்ட் ஹேண்ட் சைக்கிள்' வாங்கலாமான்னு ஒரு யோசனை! அதுக்காக அவரைப் பார்க்கப் போனோம். அந்தக்
கடைவீதியிலே கடை வச்சிருக்கறவங்களுக்கு வீடுங்க அந்தந்த கடைகளுக்குப் பின்புறமே!

அவருக்கு நம்மைப் பார்த்ததுமே ரொம்பப் பிடிச்சிருச்சு. வீட்டுக்குள்ளே கூட்டிட்டுப்போய் மனைவி, மற்ற குடும்பத்தினரையெல்லாம் அறிமுகப்
படுத்தி வச்சுட்டார். நிறைய புள்ளைகுட்டிங்களோட இருக்கற கூட்டுக் குடும்பம்! அவரும் அவர் மனைவியும் மட்டுமே தமிழ் பேசத்தெரிஞ்சவுங்க!
அவரோட முழுப்பேரு யாருக்குமே தெரியாது! எல்லோரும் கூப்புடற மாதிரியே நாங்களும் 'பாஷா பாய்'ன்னு கூப்பிட்டோம்!

அவர்தான் சொன்னாரு, 'எதுக்காக சைக்கிளை வாங்கறிங்க? நம்ம கடையிலேயே மாச வாடகைக்கு ஒரு வண்டி எடுத்துக்குங்க! வாடகை
25 ரூபா. ஆனா நீங்க 20 கொடுத்தாப் போதும். சைக்கிள் மெயிண்டனன்ஸ் எல்லாம் நானே பாத்துக்குவேன்.'

நல்லதாப் போச்சு! ஒரு நல்ல புது சைக்கிளாப் பாத்துக் கொடுத்துட்டார். அதுலே இருந்து இன்னும் வசதியாப் போயிருச்சு. தினமும் வெளியே
போய் சுத்திட்டு வர வழக்கம் வந்துருச்சு! அங்கே அநேகமா வீட்டு வீட்டுக்கு சைக்கிளுங்க இருக்கு.'டபுள்ஸ்' போறதும் குற்றம் கிடையாது!
ஏராளமான பொம்பளைங்களும் சைக்கிள் சவாரிதான்! நம்ம வீட்டுலே இருந்து 'மஹாத்மா காந்தி ரோடு'( எல்லா ஊர்லெயும் ஷாப்பிங்
செய்யறதுக்குன்னே இருக்கற ரோடுக்கு இதே பெயர்தான் இல்லே! இதுலேதான் நாம் தேசீய அளவுலே ஒத்துமையா இருக்கோம்!) ஒரு
மூணு கிலோ மீட்டர் தூரம்தான்! அங்கே போயிட்டுச் சுத்தியடிச்சுட்டு, திரும்பறப்ப ஒரு குறிப்பிட்ட ரோடுவழியா வருவோம்.
கொஞ்சம் சரிவான ரோடா இருக்கறதாலே, பெடலை மிதிக்காமலேயே அப்படியே மிதந்துக்கிட்டே வந்துரலாம்! அந்த ரோடுக்கு நான் வச்ச
பேர்'ஸ்கூட்டர் ரோடு'!

அது இருக்கட்டும். இப்ப எங்கெ இருக்கோம்? ஆங்... தீபாவளிக்குத் துணிகள் வாங்கப் போய்க்கிட்டு இருக்கோம். ரெண்டு வருஷத்துக்கு
அப்புறம் புதுப் புடவை! ஒரே த்ரில்லா இருக்கு!

மாமியைப் பார்த்ததும் கடைக்காரருக்கு ஒரே சந்தோஷம்! மாமியும் 'மராத்தி கலந்த ஹிந்தியிலே' எங்களையெல்லாம் அறிமுகப்படுத்தியாச்சு!
ரெண்டு மூணு புடவைகளை( அதெல்லாம்தாம் அப்போது லேட்டஸ்ட் ஃபேஷனாம்!) எடுத்துப் போடறார். உடனே எங்க 'இவர்' சொல்றார்.
'எல்லாத்தையும் எடுத்துப் போட்டுக் கஷ்டப்படவேணாம்!' அப்புறம் என்பக்கம் திரும்பிச் சொல்றார்' இங்கிருந்தே என்ன கலர் வேணும்ன்னு
சொல்லு. அதை மட்டும் எடுக்கச் சொல்லலாம்'

முன்னே பின்னே புடவைக் கடைக்குக் கூட்டிட்டுப் போய் எதாவது வாங்கியிருந்தால்தானே? ஒருவேளை இப்போத்தான் புடவைக் கடையையே
கண்ணாலே பாக்கறார் போல! மொதப் புடவை வாங்கித்தர்ற லட்சணத்தைப் பாத்தீங்களா?

மனசில்லா மனசோட தலையை ஆட்டிக்கிட்டே ( அப்ப இவ்வளோ வாய் இல்லை!) ஒரு இளமஞ்சக் கலருலே, ச்சின்னச்சின்ன பிரவுண் பூப்
போட்ட புடவையையும் அதுக்கு மேட்சா ப்ளவுஸ் துணியும் வாங்கிக்கிட்டேன். முந்தி மாதிரி, வீட்டுக்கு வந்தவுடனே கட்டிப் பாக்கற கொதிப்பெல்லாம்
அடங்கிருச்சு. தீபாவளிக்கே கட்டலாம்ன்னு இருந்தேன். நம்ம வீட்டுக்கிட்டே இருந்த கடைத்தெருவிலேயே ( இதும் பேரு கோர்புரி பஸார்)
ஒரு டெயிலர் கடையிலே, ப்ளவுஸைத் தைக்கவும் கொடுத்தேன்.

தீபாவளியும் வந்துச்சு! காலையிலே குளிச்சு முழுகி, புதுசைக் கட்டிக்கலாம்ன்னு புடவையைப் பிரிச்சா என்னவோ வித்தியாசமா இருக்கறதுபோல ஒரு
தோணல். என்னடான்னு பார்த்தா, புடவையோட அகலம் ரொம்பவே குறைச்சல்! கொசுவத்தைக் கொஞ்சமா சொருகினாலும், ஏதோ கழனிக்காட்டுலே
வேலைக்குப் போற பொம்பிளைங்க கட்டற மாதிரி பாதிக் கணுக்கால் தெரியுது!

இன்னும் வரும்!3 comments:

said...

துளசியக்கா,
ரெடிமேட் கதை நல்லா போகுது.
ஒரு சின்ன யோசனை இன்னும் கொஞ்சம் எழுதுனீங்கன்னா புத்தகமாகவே நீங்க போடலாம் :-).

said...

அன்புத்தம்பி முத்து,

புத்தகமாப் போட்டு நானே வாங்கி
நானே படிச்சா நல்லா இருக்குமா?

என்றும் அன்புடன்,
துளசியக்கா

said...

துளசியக்கா,

படிக்கறதுக்கு என்னை மாதிரி நெறைய பேரு இருக்கோம். தைரியமா புத்தகமா வெளியிடுங்க (இல்லைன்னாலும் எனக்கு பிடிச்ச வலைப்பதிவுகளெல்லாம் அப்படியே PDF ஆக மாத்தி வச்சிக்றது என் பழக்கம் - இது எனக்கும் என் குடும்பத்துக்கு மட்டுமேயான தனிப்பதிப்புன்றதுனால தகவல் திருட்டு கணக்குல வராதுங்க. அதனால கேஸ் போட்டா ஜெயிக்காது)

ப்ரியமுடன்,

கோபி