Thursday, March 10, 2005

பரம சிவன்!!!!!

'பார்வதியும் பரமேஸ்வரனும் ஒரு நாள் அப்படியே உலகத்தைச் சுத்திப்பாக்க ஆகாயத்துலே
போய்க்கிட்டு இருக்காங்க. அப்ப பூலோகத்துலே...'

ஒரு காலத்துலே இப்படிக் கதைங்கெல்லாம் கேக்காத புள்ளைங்களே இல்லை!

நேத்து இங்கே நம்ம ஃபிஜி இந்தியர்களின் 'சத்சங்க மண்டலி' நடத்துற மஹாசிவராத்திரி விழா
வுக்குக் கிளம்பிக்கிட்டு இருந்தேன். எங்க 'இவர்' கேக்கறார், சிவராத்திரின்னா என்னாதுன்னு!


எனக்கும் வருசாவருசம் இதே கதையைச் சொல்லி அலுத்துப் போனதாலே, 'எல்லாருக்கும் ஒவ்வொரு
ராத்திரி மாதிரி சிவனுக்கு ஒரு ராத்திரி'ன்னு சொன்னேன்.

'அதுக்கு ஒரு கதை இருக்கணுமே! அதைச் சொல்லு'ன்னார்.

' ஏன்? கதையில்லாம இருக்கக்கூடாதா? அப்படி ஒண்ணும் இல்லை!'ன்னேன்.

' அதெப்படிக் கதை இல்லாமப் போகும்? சொல்லு சொல்லு'ன்னு தொணப்பினதாலே சொல்ல ஆரம்பிச்சேன்.

"அமிர்தம் எடுக்கறதுக்காக பாற்கடலைக் கடைஞ்சாங்க. மந்தார மலையை மத்தாவும், வாசுகின்ற பாம்பைக் கயிறாவும்
போட்டுக் கடை கடையின்னு கடையுறாங்க. மத்து நிக்கறதுக்கு அடியிலே ஒரு தாங்கி இல்லாததாலே, அமிர்தம் வரவே இல்லை!
அப்ப நம்ம பெருமாள் ஆமையா ரூபம் எடுத்து மத்துக்கு அடியிலே போய் அதை முதுகிலே தாங்கிக்கிட்டாரு.

தேவர்கள் ஒரு பக்கமும், அசுரர்கள் ஒரு பக்கமும் 'நீயா, நானா'ன்னு வேகவேகமா பாம்பைப் புடிச்சு இழுத்து இழுத்துக்
கடைஞ்சாங்களா, அப்ப பாம்புக்கு வலி பொறுக்கமுடியாம விஷத்தைக் கக்குது! அப்படி வந்த ஆலகால விஷத்தை உடனே
சிவபெருமான் 'டபக்'ன்னு எடுத்து வாயிலே போட்டுக்கிட்டாரு!"

" ஏன் வாயிலே போட்டுக்கணும்?"

" பாற்கடலுலே விழுந்துடுச்சுன்னா எல்லாப் பாலுமே விஷமாயிடாதா?"

" எடுத்துத் தரையிலே வீசிப் போட்டிருக்கலாமுல்லே?"

" கடலுக்குள்ளெ நிக்கறவுங்க கரைக்கு வர நேரம் செல்லாதா?"

" சரி. அப்புறம்?"

" அந்த விஷம் தொண்டைக்குள்ளே இறங்கறதுக்கு முன்னாலே, பார்வதி அவர் கழுத்தைப் புடிச்சுட்டாங்க!
அதனாலே அந்த விஷம் அங்கேயே நின்னுடுச்சு. அதாலேதான் அவரை நீல கண்டன்ன்னு சொல்றது!"

" உன்னைமாதிரிக் கழுத்தைப் பிடிச்சுட்டாங்களா? விஷம் கொல்றதைவிட நாமே கொன்னுரலாம்னா?"

" இந்த மாதிரி ஊடாலே பேசுனா கதை சொல்ல மாட்டேன்"

" இல்லெ இல்லெ சொல்லு"

" விஷம் தின்னவுங்களை தூங்க விடமாட்டாங்கல்லெ. வுட்டுட்டா 'கோமா ஸ்டேஜ்'லே போயிட்டாங்கன்னா? அதாலே
அவரைத் தூங்க விடாம, தேவலோகத்துலே நாட்டியம், நாடகம்ன்னு போட்டுக்கிட்டு இருக்காங்க! அந்த நாளுதான்
இன்னைக்கு. அதான் சிவனுக்கு ஒரு ராத்திரி! சரி சரி. கிளம்புங்க நேரமாச்சு!"

" இந்தக் கதையை அங்கே சத் சங்கத்துலே சொல்றயா? எல்லோருக்கும் தெரியட்டும்!"

" சொன்னாப் போச்சு!"

ஃபிஜி இந்தியர்ங்க, மஹாசிவராத்திரி, ஸ்ரீராமநவமி, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி இந்த மூணு பண்டிகையையும் விடாமக்
கொண்டாடிக்கிட்டு வராங்க. தீபாவளி எல்லாம் கொண்டாட்டம், கலைவிழா இப்படிப் போகும். ஆனா மேலே
சொன்ன மூணுக்கும் பூஜை புனஸ்காரமுன்னு செய்வாங்க!

எல்லாம் 150 வருஷத்துக்கு முன்னாலே எப்படியெல்லாம் செஞ்சாங்களோ, அதுலே இருந்து கொஞ்சமும்
மாறாமே! ரொம்ப 'சிம்பிள்' பூஜை! எல்லாரும் பங்கேற்கலாம்! பாட்டும் ஒரே ராகத்துலேதான். பண்டிகைக்குத்
தகுந்தமாதிரி, சிவன், ராமன், கிருஷ்ணன்ன்னு சில வார்த்தைகள் மட்டும் மாறும்!

மொதல்லே எல்லாரையும் வரவேற்று பஜன் மண்டலியிலே ஒருத்தர் ஒரு 'ஸ்பீச்'. எதுக்காக அங்கே
கூடியிருக்கோம், இத்யாதி...

அப்புறம் 'பவித்ரம்' செய்யறது! ( புனிதப் படுத்தறது அந்த இடத்தை!)

அடுத்து கணேச வந்தனம்!

அப்புறம் சிவராத்திரி கதை! அதை ஏன் கொண்டாடணுமுன்னு ஒரு விளக்கம். அதான், புலிக்குப் பயந்து
வில்வமரத்துலெ ஏறின வேடன், தன்னையறியாம பிச்சுப் போட்ட வில்வ இலைங்க எப்படி, கீழே இருந்த
சிவலிங்கத்து மேலெ விழுந்து, 'போலேநாத்' எப்படி அவனுக்குத் தரிசனம் தந்து மோட்சத்துக்கு
அனுப்பினாருன்றது!'போலெநாத் உண்மையிலேயே ரொம்ப போலாதான்! ரொம்ப வெகுளி!!! இப்படிச்
ச்சும்மா இலையைக் கிள்ளிப் போட்டதுக்கே சொர்க்கத்தைக் கொடுத்துட்டாரே! ஆனா, அவர் சொன்ன கதை
வேற! சிவபெருமானோட அடி, முடியைத் தெரிஞ்சுக்க ப்ரம்மாவும், விஷ்ணுவும் போனதைச் சொன்னாரு!
இதெல்லாம் ஃபிஜியன் ஹிந்தியிலே!( போஜ்புரி ஹிந்தி)

அதுக்கப்புறம் இன்னொருத்தர், புள்ளைங்களுக்கும், ஹிந்தி தெரியாம யாராவது இருந்தாங்கன்னா அவுங்களுக்கும்
புரியணுமமேன்னு இங்கிலீஷிலே கதை சொன்னார். அவரு சொன்னது 'நம்ம பாற்கடல் விவகாரம்!'

அடுத்து, சிவலிங்கத்துக்கு, பால், தண்ணீ, பூ எல்லாம் கலந்த அபிஷேகம்! கூடவே ஆரத்தி. இதெல்லாம்
நடக்கறப்பவே 108 தடவை ஒரு மந்திரம் ஜபிக்கணும்! சிம்பிள் மந்திரம்! ' ஓம் நமசிவாயா'

எல்லோரும் அவுங்கவுங்க பக்தி சிரத்தையோடு வீட்டுலே இருந்து கொண்டு வந்த பிரசாதங்களை, சாமி முன்னாலே
வச்சுக் கும்பிட்டுட்டு, 'ஷாந்தி' சொல்லி முடிச்சாச்சு!

அதுக்கப்புறம் பிரசாத வினியோகம்! முடிஞ்சது பூஜை!!!!

சாஸ்த்திரம், சம்பிரதாயம் எல்லாம் இல்லை! ஆத்மார்த்தமான பூஜை! எளியமுறை! எல்லோரும் பங்கெடுக்கறது!

எந்த பூஜைன்னாலும் சரி, பிள்ளையார், சிவன், விஷ்ணு, லக்ஷ்மி, ஹனுமான் எல்லோருக்கும் 'ஜே' போட்டு
முடிக்கறாங்க!

நானும் 23 வருஷமா, இதுலே பங்கெடுத்துக்கிட்டுதான் இருக்கேன். எல்லாம் ஒரே மாதிரி!!!!!

" போலோ ஓம் நமஷிவாய"






4 comments:

said...

இந்த பாட்டை கேட்டு இருப்பிங்கன்னு நினைக்கிரேன். இருந்தாலும் பரவாயில்லை ஒரு முரை கேளுங்க ஐயா!
http://susheelaraman.com/music/saltrain/007.m3u

said...

ஐயா காஞ்சி ஃபிலிம்ஸ்,

ரொம்ப நன்றிங்க. இந்தப் பாட்டை இப்பத்தான் மொதமுறையாக் கேட்டேன். நல்லாதான்
இருக்குதுங்க. அப்புறம் நீங்க என்னை 'அம்மா'ன்னே சொல்லலாம்!

தங்கமகன்,
நன்றிங்க பின்னூட்டத்துக்கு. மெய்யாலுமா சொல்றீங்க இந்தக்
கதை தெரியாதுன்னு?

என்றும் அன்புடன்,
துளசி.

said...

Just blog hopped on yours..good info..i had also listed a couple of vignettes about indian diaspora in my blog..

said...

ஐய்யோ நீங்க ஐயா இல்லயா? அம்மாவா? சரிங்க! சாரிங்க!
இங்க மத்த பாட்டுகளையும் கேட்டு பாருங்க அம்மா
http://susheelaraman.com/saltrain.php
மத்தபடி என்னை நீங்க "அடேய் காஞ்சி"ன்னே அழைக்கலாம். நான் ரொம்ப சிரியவன்.