Wednesday, September 30, 2020

எங்கெங்கு காணினும் 'தண்ணீரடா' (ரோட்டோருஆ பயணம் . பகுதி 5 )

இங்கே வானவில்லாண்டையே இருந்தால் எப்படி ? டவுனுக்குள் போய் பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வேற இடங்கள் என்னென்ன  இருக்குன்னு பார்க்கலாமுன்னு  ரெயின்போ ஸ்ப்ரிங்ஸ் விட்டுக் கிளம்பினோம். ஒரு அஞ்சு கிமீதூரத்தில்  இருக்கும்  டவுனுக்குப் பத்து நிமிட்டில் போய்ச் சேர்ந்தோம். 
பயணிகளுக்குத் தேவையான இன்ஃபர்மேஷன் சென்டர் பெரூசா இருக்கு.  



உள்ளே நல்ல கூட்டம். போதாக்குறைக்கு  ஏரியா முழுசுக்கும் ஃப்ரீ வைஃபை !   கேக்கணுமா ? ஆனால் ஏராளமான பணியாளர்கள், உங்களுக்குத் தகவல்களை அள்ளித் தந்துக்கிட்டு இருக்காங்க. இந்த ஊருக்கு மட்டுமில்லாமல் நாடு முழுக்க எங்கெங்கே என்ன இருக்குன்றது ஏராளமான  தகவல்கள் அச்சிட்ட ப்ரோஷர்கள் கொட்டிக்கிடக்கு.   தேடிப்பார்க்கப் பொறுமை இல்லைன்னாலும்  கவலை வேணாம். நமக்குக் கைவசம் இருக்கும் நேரத்துக்கு என்ன பார்க்கலாமுன்னு கேட்டால் போதும்.  இதைப்பார், அதைப்பார்ன்னு ஒரு பத்துப்பதினைஞ்சைத் தேடி எடுத்து நம்ம கையில் கொடுத்துருவார்.  அதுலே நமக்கு வேணுங்கற  இடத்துக்குப் போகலாம். ஒவ்வொன்னிலும் இருக்கும் படங்கள் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகும். நமக்குத்தான் திண்டாட்டம்..... எதைப் பார்க்கன்னு.... 
லஞ்சுக்கு எங்கேன்னால்...   இதே வளாகத்துலே  அடுத்தாப்லெ திங்கறதுக்குன்னு ஒரு தெருவே இருக்கு !  Eat Streat  ...  ஹாஹா..... 





மேற்கூரை போட்டுருக்காங்க.   குளிர்காலத்துலே  அந்தத்  தெருவையே இதமான சூட்டில் வைக்கும் தரை அமைப்பாம். நாம் போனது சம்மர்  முடிஞ்ச ரெண்டாம் நாள் இல்லையோ.....  பளிச்ன்னு சுத்தமா, அலங்காரங்களுடன் ஏகப்பட்ட  ரெஸ்ட்டாரண்டுகள்.  இதுலே இந்திய உணவுக்கடை ரெண்டு.  கொஞ்சம் லைட்டா வேணும் என்பதால்  தாய் பார்த்துட்டு அங்கே போனோம்.  Wild Rice ன்னு பெயர். 


சாப்பாடானதும்,  டிஸ்ஸர்ட்டுக்கு  வேற கடை!  Lady Janes  Icecream parlour!  இங்கே ஐஸ்க்ரீம் சாப்பிடலைன்னா ரோட்டோருஆ வந்ததுக்கு  பொருளே இல்லையாம். சரின்னு அங்கேயும்  போனோம்.  ஆச்சு!
பொதுவா நியூஸிலாந்தில், இயற்கை அழகுதான் கொட்டிக்கிடக்கு. தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பில்லாத வகையில் நாடெங்கும் பல இடங்களில் ஏரிகள்!    சின்னதும் பெருசுமா 3,820   ஏரிகள் இருக்கறதாக் கணக்கு சொல்லுது அரசு. இதுலே  ஆகச் சின்னதுன்னு சொன்னா ரெண்டரை ஏக்கர் பரப்பளவு!  வடக்குத் தீவுக்கு  ஒன்னு, தெற்குத்தீவுக்கு ஒன்னுன்னு  ஒவ்வொரு மாவட்டத்தையே ஒதுக்கி இருக்காங்க. Lake District. 



இந்த ரோட்டோருஆவில் நல்ல பெருசாவே  20 ஏரிகள் இருக்கு!  இப்ப நாம் சாப்பிட தெருவே கூட ஏரியாண்டைதான்.   இவ்ளோ தண்ணீர் இருப்பதால்  நீர்விளையாட்டு அதிகம். ஏரியின் அளவைப் பொருத்து  விளையாட்டுகளும்,  அதற்கேற்ற அமைப்புகளுமா இது ஒரு பெரிய பிஸினஸ் இங்கே!  இளவயதினருக்கும்,  ஆர்வம் உடைய   மற்றவர்களுக்கும் இங்கெல்லாம் போனால் நேரம் போவதே தெரியாது. முதியவர்களுக்கும் சிலபல நீர்விளையாட்டுகள் இருக்குன்னாலும், நான் அதுக்கெல்லாம் லாயக்கே இல்லை என்பதால் ஏரிகளைப்போய் வேடிக்கை பார்ப்பதோடு முடிச்சுக்குவேன்.
டௌன் சென்டரில் இருந்து ஒரு பதினாலரை கிமீ தூரத்தில் இருக்கும்  Lake Okareka போய்ச் சேர்ந்தோம். நாம் உண்மையில் போக வேண்டியது வேற இடம். வழியில் இருக்கேன்னு இங்கே ஒரு ஸ்டாப்.  ஒகரேகா.... ஏதோ தெலுகு பெயர் மாதிரி இருக்குல்லே ?  இது ஒரு மவொரி பெயர்.  இதுக்கு The lake of sweet foodனு பொருள்.  எல்லாம் நல்லதண்ணி ஏரி பாருங்க....     அதனால் இதன் கரையோரப்பகுதிகளில் மவொரிகள் அந்தக் காலத்துலே சக்கரைவள்ளிக் கிழங்கு பயிர் செஞ்சுருக்காங்க.  இந்தச் சக்கரைவள்ளிக்கு லோகல் பெயர் என்ன தெரியுமோ ? கூமரா....  Kumara  !    அட!  என்ன பொருத்தம் பாருங்க !  நம்ம வள்ளியின் கணவன் குமரன் இல்லையோ ! 
டொய்டொய்னு ஒரு வகை மீன்கள்  அந்தக் காலத்துலே இருந்துருக்கு. மவொரிகளின் முக்கிய உணவு.  வெள்ளைக்காரன் வந்தாட்டு, வெவ்வேற வகை மீன்களை இங்கே வளரவிட்டுட்டதால்...   இப்ப ட்ரௌட்  & சால்மன்  மீன்கள்தான் நாடு முழுக்க !

இப்படி ஒரு ஏரி இருக்கறதை 1849 லே  இந்த வழியாப்போன ப்ரிட்டிஷ்காரர்  Sir George Grey  பார்த்துட்டு இதைப்பத்தித் தன் பயணக்குறிப்புலே எழுதி வச்சுருக்கார். அடுத்த ரெண்டாம் வருஷம், இதைப் புத்தகமா அச்சிட்டு, கூடவே  மவொரி மொழியிலும் மொழிபெயர்த்துருக்காங்க !   அவ்ளோதான்.... இதன் புகழ் பரவக்கேக்கணுமா? 

அப்ப இப்படிக் கடல்பயணம், தரைப்பயணம் போனவங்கெல்லாம்  குறிப்புகள் எழுதி வச்சதும், இடங்களை வரைஞ்சு வச்சதும் எவ்ளோ நல்ல விஷயம் இல்லே ?  இந்த வகையில் பார்த்தால்  இப்ப நான் மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதிக்கிட்டு இருக்கேனே...   அதுக்கெல்லாம் இவுங்கதானே முன்னோடிகள் ! இல்லையோ !   ப்ரிட்டிஷ்காரன் இங்கே  வந்து, நாட்டைப்புடிச்சது எல்லாம் பழங்கதை. அது 1840 லே !  
இங்கத்துக்கணக்கில்   இது அதிகமில்லையாம்...   சின்ன ஏரியாம்.  மூணரை சதுர கிலோ மீட்டர் பரப்பு !  ஜஸ்ட் 865 ஏக்கர்தானாம் ! 

அடப்பாவிகளா ?  இதையா சின்னதுன்றீங்க ?  இதுவே சின்னதுன்னா பெருசு எப்படி இருக்கும் ? 


சுத்திவர மலைத்தொடர்களும் காடுகளுமா இருக்கு !   கரைப்பக்கம் அலையில்லாத குளம். அதுலே நீந்தி விளையாடும் வாத்துக்கூட்டம் ! 'இங்கெ என்னடா பண்ணறீங்க?' ன்னு கேட்கும் ஸீகல்ஸ்....


சுட்டி வேலை செய்யுதான்னு தெரியலை.....   புதுசா எல்லாத்தையும் மாத்திவச்சுட்டு....    ப்ச்.... எந்தொரு சல்யம்  :-(  

 இதமான காற்று & சூழ்நிலை.... கிளம்பவே மனசு வரலை..... ஆனால் நாம் பார்க்க வந்தது இந்த இடமில்லையே....   இது இடையில் அகப்பட்ட போனஸ் ஆச்சே !

சரி வாங்க....    நாம் போக நினைச்ச இடத்துக்குப் போகலாம்.....


தொடரும்....  :-)


Monday, September 28, 2020

வானவில்மீனும், காடும், பின்னே நீரூற்றும்! (ரோட்டோருஆ பயணம் . பகுதி 4)

புது இடமோ என்னவோ காலையில் சீக்கிரமே முழிப்பு வந்ததும், ஏரிக்கரையாண்டை போனேன்.  'உனக்குத்தான் இடம் புதுசு. நாங்க எப்பவும்  இங்கேதான் இருக்கோமு'ன்னு கூட்டமா உக்கார்ந்துருந்த கடல்புறாக்களின் கூவல் நல்லாவே புரிஞ்சது.  இவுங்க சத்தத்தைத் தவிர வேற அனக்கமே இல்லாம அமைதி.  மனுஷ்யர் யாரும்  இன்னும் எழுந்திரிக்கலை போல...

கடமைகளை முடிச்சுட்டு எட்டேமுக்காலுக்குக் கிளம்பிட்டோம். ஸ்கைலைன் போக 'நம்மவருக்கு' ஆசை. எப்பப் பார்த்தாலும் கருடபார்வை எதுக்கு.... இங்கே இருக்கும் ஒரு மலை உச்சிக்குப்போக  (Mount Ngongotaha ) 487 மீட்டர் உசரத்துக்கு நம்மை நோகாமல் கொண்டுபோக  கோண்டோலா என்னும் கேபிள் கார்  போட்டு வச்சுருக்காங்க.  இதை ஆரம்பிச்சே 15  வருஷங்களாச்சு.  
சுற்றுலாப்பயணிகள் வரும் முக்கியமான ஊர்களில் இந்த மாதிரி கேபிள்கார் மூலம் மேலே கொண்டுபோறதுதான். எங்க தெற்குத்தீவில் 1967 லேயே ஆரம்பிச்சுட்டாங்க. அதே கம்பெனிதான் இப்ப எல்லா இடங்களிலும் வெற்றிகரமா நடத்திக்கிட்டு இருக்காங்க. நாமும் ஏற்கெனவே நம்மூரிலும், க்வீன்ஸ்டௌனிலும்  சிலமுறைகள்  போய் வந்துருக்கோம்தானே.....   அதனால்  இதை விட்டுட்டுத் தொட்டடுத்தாப்லே இருக்கும்  ரெயின்போ ஸ்ப்ரிங்ஸ் போகலாமா ?


ஙே....    அங்கே என்ன இருக்கு ? இது ஒரு விதமான Zoo.  இயற்கையை அப்படியே ஒரு வளாகத்துக்குள்ளே கொண்டு வந்தாப்லெ:-) 91 வருஷங்களுக்கு முன்னே  பராமரிப்பு இல்லாமக்கிடந்த   (ஆட்டுப்பண்ணை இருந்த இடம்)ஒரு இடத்தை வாங்குன நபர், இதை ஒரு கேம்பிங் க்ரௌண்டா மாத்தலாமேன்னு  நினைச்சு, ஏகப்பட்ட மரக்கன்றுகள், செடிகள் எல்லாத்தையும் அக்கம்பக்கத்தில் வாங்கி குதிரை வண்டியிலே வச்சுக் கொண்டு வந்து இங்கே நட்டு வச்சுருக்கார்.  எல்லாம் மூணு வருஷ  உழைப்பு.  நேத்துப் பார்த்தோம் பாருங்க..... மரநடையில் கலிஃபோர்னியா ரெட்வுட் மரங்கள்.... அந்த வகையில் ஒரு டஜன் மரக்கன்றுகளும்.  (இப்ப எல்லாமே ஓங்குதாங்கா வளர்ந்து நிக்குது ! )


ஒரு எட்டு வருஷம், பிஸினஸ் நல்லாவே போய்க்கிட்டு இருந்துச்சு. ஏற்கெனவே இந்த இடத்தில் இருந்த  நீரூற்று ஒன்னு பரிசுத்தமான நல்லதண்ணீரை தடங்கல் இல்லாம அள்ளித்தந்துக்கிட்டு இருக்கு!

இடத்தை வாங்குன  அடுத்த ஆட்கள், அவுங்க விருப்பப்படிக் கொஞ்சம் மாத்தி அமைச்சுக்கிட்டாங்க.  பல கைகள் மாறியபின் இப்போ  Ngai Tahu, என்னும் மவொரி குழுவினர் வசம் வந்துருக்கு.  பொதுவாகவே இந்த ரோட்டோருஆ பகுதிகளில் ஏகப்பட்ட நிறுவனங்கள், நிலங்கள் , கட்டடங்கள் எல்லாம் மவொரிகள் வசம்தான். முந்தைய காலத்தைப்போல் இல்லாமல் இவுங்களும் நல்ல முறையில்  உயர்கல்வி எல்லாம்  படிச்சுட்டு நல்ல நிர்வாகிகளாகவும்,  பல்வேறு துறைகளில் ஈடுபட்டும்  வர்றாங்க. சுற்றுலாத்துறை சம்பந்தமுள்ள பலதும் இவர்கள் வசமே! 
உள்ளே போய் சுத்திப் பார்க்க ஒரு கட்டணம் இருக்கு. நாங்க சீனியர்ஸ் என்பதால்  கட்டணம் குறைவுதான்.
உள்ளே போனதும் முதல் தரிசனம் டுஆடாரா ! பெரிய  பல்லி  போல இருந்தாலும் இது வேற இனம் ! லிவிங் ஃபாஸில் என்ற வகையில் தீர்க்காயுசு போட்டுருக்குகள். 180 மில்லியன் வருஷங்களாக  இருக்காமே!   நியூஸி நாட்டுக்கே உரியவை!  Tuatara  என்ற பெயர் கூட மவொரிப் பெயர்தான். இதுக்கு மூணு கண்கள் இருக்கு !   இதை யாரும் வீட்டுலே வச்சு வளர்க்க அனுமதி இல்லை. சட்ட விரோதம் !   ஒரு டுஆடாரா, நாப்பதாயிரம் டாலர் மதிப்பு உள்ளது. (கிட்டத்தட்ட நம்மூர் 20 லக்ஷம் ரூ !! ஆரஞ்சு, பச்சை, க்ரே, கருப்புன்னு சிலபல வகைகள் இதுலே இருக்கு. நாம் முதலில் பார்த்ததுக்கு கருநீல நாக்கு ! நாக்கைக் கால்விநாடி காமிச்சுட்டு சட்னு உள்ளே இழுத்துக்கிச்சு :-)

நியூஸியின்   Trout மீன்களை  வளர்க்கப்போறோமுன்னு  இடுப்பளவு தொட்டியில் ஆரம்பிச்சு, இப்போ  ரெண்டு மீட்டர் கண்ணாடித் தொட்டியில் இந்த மீன்கள் இருக்கு.  இந்த வகை மீன்கள் நல்ல தண்ணீரில் வளரும் வகை என்றாலும் கடலில் விட்டாலும் பொழைச்சுக்குமாம்!  இந்தக் கண்ணாடித்தொட்டியில்  வாத்துகளும் அப்பப்ப வந்து நீந்திட்டுப் போகுதுகள் ! இந்த மீன்களில் பலவகைகள் இருந்தாலும்  வானவில் வண்ணம் கொண்ட ரெயின்போ ட்ரௌட் மீன்களே இந்த இடத்துக்கும் பெயர் கொடுத்துருக்கு. ரெயின்போ ஸ்ப்ரிங்ஸ் !



பதினொன்னரைக்கு  Bird Show  இருக்குன்னு அந்த இடத்துக்குப் போனோம்.  புத்திசாலிப் பறவைகள்.  சொன்ன பேச்சைக் கேக்குதுகள் !  கலர்கள் கூடச் சொன்னால் புரியுது!  தலையைச் சாய்ச்சு, என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டுச் சரியான கலர் மூடிகளை எடுத்து டப்பாவில் போடுதுகள் !  இப்படிப் பறவைகளைப் பழக்க,  அதோட நம்பிக்கை முதலில் கிடைக்கணும்.  ஒருநாளில் நடக்காத காரியம்.... நல்ல பயிற்சியாளர்கள் கிடைக்கணுமே!  பொறுமை முக்கியம்.  அரை மணி நேர ஷோதான். ஆனாலும் ரொம்பவே ரசிக்கும்படி இருந்துச்சு !

இங்கே ஒரு பெரிய கிவி ஹௌஸ் வச்சுருக்காங்க. கிவிப் பறவையால் பறக்க முடியாது. இரவு நேரத்தில் மட்டுமே வெளியே நடமாடும். அடர்த்தியான காடுகளில்  புதர்களில் வசிக்கும்.  இது நியூஸியின் தேசியப்பறவை.  சட்னு பார்க்க கோழி போல இருந்தாலும்  மூக்கு மட்டும் நீளம் அதிகம். பறக்க முடியாததால்  எதிரிகள் கிட்டே சட்னு மாட்டிக்கும்.  இவைகளின் முட்டைகளைத் தீர்த்துக்கட்டவே ரெடியா இருக்கும் stoats, ferrets, weasels, rats, possums, Wild cats and dogs களிடம் இருந்து தப்பிச்சு உயிர்வாழ்வதே ரொம்பக் கஷ்டம். பாவம்.... சிரமான வாழ்க்கை. ப்ச்....
இங்கே  இருப்பது Largest Kiwi hatchery in the world. கிவிக்களின் முட்டைகளைச் சேகரிச்சுக் குஞ்சு பொரிச்சதும், அவைகளை வளர்த்துக் காட்டில் கொண்டு போய் விட்டுருவாங்க.  நல்ல வேளை... தேசியப்பறவைன்ற அந்தஸ்து கிடைச்சதோ.....வம்சம் அழியாமல் இருக்குதோ !



பகலில் இதுகள் வெளியே வராது  என்பதால்  இந்தக் கிவிக்கள்  இருக்கும் கட்டடத்துக்குள்ளே  முக்காலிருட்டாத்தான் வச்சுருப்பாங்க.  இருக்கும் கொஞ்சூண்டு வெளிச்சத்துக்கு நம்ம கண்களை ரெண்டு நிமிஷம் பழக்கிக்கிட்டால்  இதுகள் நடமாட்டத்தைக் கண்ணாடிக்குப்பின்னே பார்க்கலாம். 



இந்த கிவி ஹௌஸ்தான் உலகில் பெரியதுன்னு ஒரு தகவல்.  இது வரை எத்தனை  கிவிக்களை வளர்த்துக் காட்டில் கொண்டுபோய் விட்டுருக்காங்க, இந்த சீஸனில் எத்தனை முட்டைகள் பொரிஞ்சுருக்குன்னு பார்க்கும்போது  வியப்புதான் ! 

கிளிகளும் மற்ற பறவைகளுமா இன்னொரு பகுதியில் !  எனக்கு ரொம்பவே பிடிச்ச Tui  பறவைகள், கழுத்துலே பஞ்சுருண்டையை வச்சுக்கிட்டு இருக்கும் !   ஹைய்யோ !  இது ஒரு தேன் குடிக்கும் பறவை!  நியூஸி ஸ்பெஷல் !  



பறவைகள் இருக்கும் கம்பிவலை போட்ட  பெரிய அமைப்புகளில் தனக்கும் இடம் இருக்கான்னு தேடிப்பார்க்கும் வாத்துகளும் அழகே!  அதுலேயும் எப்படியோ உள்ளே நுழைஞ்சு பார்க்குதுகள்  சில  :-)

குழந்தைகளுக்கான விளையாடும் இடத்தில் வேட்டா ஒன்னு !  WETA .   இங்கே கிட்டத்தட்ட எழுபது வகை பூச்சிபொட்டு இருக்கு. அதுகள் எல்லாத்துக்குமே ஒரு  பொதுப்பெயர்தான் இது. இது கொஞ்சம் பெரிய சைஸ் கூட ! சுமார் நாலு இஞ்சு ! 
ஆனாலும் வேட்டான்னதும் சனம்  சினிமாவைத்தான்  நினைக்கும் :-) நியூஸிலாந்து சினிமான்னதும் லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஹாப்பிட் எல்லாம் நினைவுக்கு வருதில்லையா.... இதோட ஸ்பெஷல் எஃபெக்ட் எல்லாம் செஞ்சது  வேட்டா ஒர்க்‌ஷாப் என்ற பெயரில் இயங்கும் கம்பெனிதான் !  ரொம்பவே புகழ்பெற்ற  இயக்குநர் ஸர்.பீட்டர் ஜாக்ஸனின்   Wingnut Entertainment Technical Allusions , WETA.   இவுங்க பக்கம்  போய்ப் பார்த்தால் அசந்துதான் போயிருவோம்!    (பாருங்க.... சினிமான்னதும் எப்படி எங்கே இருந்து எங்கே போயிட்டேன்....  ஹாஹா..... தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது, இல்லை ?  )
இங்கே நியூஸியில் ஜேடு போல ஒரு பச்சைக்கல் கிடைக்குது.  மவொரிகளுக்கு இது ரொம்பவே புனிதமானது. அவுங்க மொழியில் இதுக்கு Pounamu ன்னு பெயர்.  இதை வச்சு நகைநட்டெல்லாம்  செய்வாங்க.  ( New Zealand  greenstone / Pounamu  )ஒரு பென்டன்ட்( அதுவும் கருப்புக் கயித்துலே கோத்து மாட்டிப்பாங்க ) இருபத்தியஞ்சு டாலர் முதல் மூவாயிரம் டாலர்வரை !  இங்கே  பெரிய பாறை ஒன்னு பார்வைக்கு இருந்துச்சு !  
இன்னும் கொஞ்சம்  உள்ளே நடந்துபோனால்.... கண்ணுக்குக் குளிர்ச்சியாக் காடும் அருவியுமா .... ஆஹா....  

ரெயின்போ ஸ்ப்ரிங்ஸ் கொஞ்சம் பெரிய இடம்தான்.  முழுநாளும் நின்னு நிதானமாச் சுத்திவரலாம். இயற்கையை ரசிச்சுக்கிட்டே,  பறவைகள், மீன்கள் போன்ற உயிரினங்களைப் பற்றி அங்கங்கே  வச்சுருக்கும் தகவல் பலகைகள் மூலம்  நாமும்  கொஞ்சம்  தெரிஞ்சுக்கலாம் !  டைனோக்கள் இருக்கும் காட்டுக்குள்ளே படகில் போய்ப் பார்க்கலாம். Big Splash Ride இருக்கு! கைடட் டூர்னு  வழிகாட்டியுடன் போய் பார்க்கும் வசதிகளும் இருக்கு!  பள்ளிக்கூட விடுமுறை சமயம்....  பிள்ளைகள் எல்லாம் இங்கேதானாம் !

அப்பப்பா..... இந்த உலகில்தான்  எத்தனை வகை அனுபவங்கள் நமக்காகக் கொட்டிக்கிடக்கு, பாருங்க ! 
நியூஸிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் இங்கே வந்துட்டுத்தான் போறாங்க.  வேறெங்கும் இவ்ளோ பெரிய கிவிப் பண்ணையைப் பார்க்கவே முடியாது, கேட்டோ ! 

தொடரும்.......... :-)