Friday, July 31, 2009

மகம் பிறந்த மங்கை!

கேக் வெட்டிக் கொண்டாடலாமா? கோயிலுக்குப் போய் வரலாமான்னு பலவிதமாச் சிந்திச்சுப் பார்த்துட்டு, 'பர்த்டே கேர்ள்' கிட்டேயே என்ன செய்யலாமுன்னு விசாரிச்சாப் பதில் வருது ஆயிரம் வேணுமாம். கொடுத்தால் ஆச்சு. ஆமாம்....எந்த ஆயிரம்? நாதமுனிகள் ரேஞ்சுலே கேட்டாங்க.

வீரநாராயணபுரத்திலிருந்து நான்குபேரை வரவழைக்க ஏற்பாடானது.

எந்த வீரநாராயணபுரம்? அதான் பொன்னியின் செல்வனில், முதல் அத்தியாயத்தில் வந்தியத்தேவன் குதிரை மீதமர்ந்து வரும் அதே வீரநாராயணபுரம்தானாம்! இப்போ அதன் பெயர் காட்டு மன்னார் கோவில். மன்னார் சரியான காட்டாளா இருப்பாரோ? ச்சேச்சே..... காட்டும் மன்னார் கோவில் என்பதுதான் காட்டுன்னு ஆகிப்போச்சு.

எதைக் காட்டுனாராம்? (நம்ம புத்தி குறுக்காத்தானே வேலை செய்யும்?)

பிரபந்தங்களைத்தான். வேறென்ன?

சரி... கதையைப் பார்ப்போம்.

இந்த வீரநாராயணபுரம்தான் ஸ்ரீ நாதமுனி ஸ்வாமிகள் அவதரித்தத் திருத்தலம். இவருடைய தந்தை ஈஸ்வரபட்டர், இவருக்கு வச்ச பெயர் ரங்கநாதன். கோவிலில் சாமி கைங்கர்யம். வாழ்க்கை இப்படிக் கடவுளோடு போய்க்கொண்டிருந்த சமயம், வேற ஊரில் இருந்து வந்த ஒரு பக்தர்கள் கூட்டம், திருவாய்மொழியில் பத்துப் பாடல்களை, 'ஆராவமுதே, அடியேன் உடலம் நின்பால் அன்பாயேன்னு தொடங்கி, குருகூர்ச்சடகோபன் குழலின்மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலைத் தீரவல்லார் காமர்மானேயநோக்கியர்க்கே'ன்னு பாடறதைக் கேட்டார். ஓராயிரத்துள் இப்பத்து என்ற வார்த்தை , 'சட்'ன்னு மனசுக்குள் போய் பத்த வச்சுருச்சு.

இப்பப் பாடுன பாட்டில் உள்ள ஓராயிரத்துள் பத்து இதுன்னா பாக்கி தொளாயிரத்துத் தொன்னூறு எங்கே? தெரிஞ்சா அதையும் பாடுங்கன்னார்.

நாங்க, எங்க ஊர் வழக்கபடி அந்தக் காலத்துலே இருந்து வழிவழியாப் பாடிக்கிட்டு இருக்கும் இந்தப் பத்துப் பாட்டுதான் தெரியும். இந்த ஓராயிரத்துள் இருக்கும் பாக்கியைப் பத்தித் தெரியாது. குருகூர் சடகோபன்னு இதுலே வர்றது பாருங்க. அந்தக் குருகூர்லே போய்க் கேட்டால் ஒருவேளை தெரியும்னு சொல்லிட்டாங்க.

திருக்குருகூர்ன்னு ஒரு ஊர் இருக்குன்ற விவரம் கிடைச்சு அங்கே போனார். அங்கே இங்கேன்னு விசாரிச்சார். விவரம் சரியாக் கிடைக்கலை. அப்போ மதுரகவி ஆழ்வாரின் சிஷ்யர் ஒருவரைச் சந்திக்கிறார். 'ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் எல்லாம் எக்கச்சக்கமா இருக்குன்னாலும், எங்கே யார்கிட்டே இருக்குன்னு ஒரு பிடியும் கிடைக்கலை. ஆனா என் குருநாதர் பாடுன பதினோரு பாடல்கள் இருக்கும் ஓலைச்சுவடி என்னாண்டை இருக்கு. அதுலே பெருமாளைப் பற்றி ஒன்னுமே இல்லை. எல்லாமே அவரோட குருவான நம்மாழ்வார் மேல் பாடுன பாட்டுக்கள்தான்'னார்.

'கண்ணிநுண்சிறுத்தாம்பு'ன்ற தொகுப்பில் பாடல்கள். இதைமட்டும் பனிரெண்டாயிரம் முறை மனமுருகப்பாடினால் சாக்ஷாத் நம்மாழ்வாரே தரிசனம் தருவார்ன்னு நம்பிக்கை. நீ வேணுமுன்னால் முயற்சி செஞ்சு பாரேன்னார். (நம்ம நவதிருப்பதி தரிசனத்தில் ஆழ்வார் திருநகரியில் உறங்காப்புளின்னு திருப்புளி ஆழ்வார்ன்னு ஒரு புளியமரம் பற்றி எழுதுனது நினைவில்லாதவங்க கை தூக்குங்க)

கோயில் தலவிருட்சமான இந்த மரத்தடியில்தான் நம்மாழ்வார் அவர்கள் தவம் செஞ்சாராம். அப்போதான் மதுரகவி ஆழ்வார் அவரைத் தேடிவந்து குருவாக ஏற்றுக்கொண்டார். குருவின்மேல் வச்ச அதீத பக்தியால் பாடுனதுதான் மேலே குறிப்பிட்டக் 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' ........

திருப்புளி ஆழ்வார் முன் அமர்ந்து இடைவிடாது மூணு பகலும் மூணு இரவும் சேர்ந்தாப்புலே இந்தப் பாடல்களை பனிரெண்டாயிரம் முறை பாடினார் நம்ம ரங்கநாதன் என்ற நாதமுனி ஸ்வாமிகள். பக்தியைப் புரிஞ்சுக்கிட்ட ஸ்ரீ நம்மாழ்வார் அவர் முன் தோன்றி,' என்ன வேணுமு'ன்னு கேட்க, அதுக்கு இவர்,
'நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் முழுசும் வேணும். அதுக்குப் பொருளும் சொல்லணுமு'ன்னு விண்ணப்பித்தார். அப்படியே ஆச்சு. அதுக்குப்பிறகு வீரநாராயணபுரம் திரும்பிவந்த நாதமுனி ஸ்வாமிகள், மக்களுக்கு எல்லாம் திவ்யப்பிரபந்தத்தைச் சொல்லி, ராகத்தோடு பாட்டாகப்பாடி இறைவனை ஆடல்பாடலோடு வணங்கும் வழக்கத்தை உண்டாக்குனார், இதுதான் அரையர் சேவையா ஆகி இருக்காம்.

நாலாயிரம் பாடல்களில் நம்மாழ்வார் ஒரு ஆயிரம் பாடல்களும், (அதுக்கு மேலேயேன்னு கூகுளாண்டவர் சொல்றார்) திருமங்கை ஆழ்வார் ரெண்டாயிரம் பாடல்களும் மற்ற ஆழ்வார்கள் பத்துப்பேரும் சேர்ந்து ஒரு ஆயிரமும் பாடி இருக்காங்களாம். இந்தக் கதையும் விவரங்கள் எல்லாம் நம்ம' பர்த்டே கேர்ள்' கிட்டேக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டது தான்.

இந்த வீரநாராயணபுரத்து ஏரிக்கரையில்தான் நம்ம பொன்னியின் செல்வரின் வந்தியத்தேவன் நமக்கு அறிமுகம் ஆறார். உங்களுக்கெல்லாம்கூட இந்த ஏரியைத் தெரிஞ்சிருக்கும். செய்திகளிலாவது படிச்சு இருப்பீங்க. இதுதாங்க வீராணம் ஏரி.

ஆடி மாசம் மகம் நட்சத்திரத்தில் பிறந்த இவுங்களோட சொந்த ஊர் இதே காட்டுமன்னார்குடிதான். இந்த ஊரைக் காட்டுமன்னார்கோவில் என்றும் சொல்றாங்க. அங்கே இருக்கும் பெருமாள் கோவிலில் திருவாய்மொழியில் 'ஆராவமுதே' தொடங்கிப் பத்துப் பாடல்களைச் சலவைக்கல்லில் பொறிச்சுச் சுவர்களில் பதிச்சக் கைங்கர்யத்தைச் செஞ்சவர் இவரோட அப்பா. அவருடைய சதாபிஷேகத்துக்குக் கலசம் வைக்க வாங்குன குடம், இன்னிக்குப் பூஜையில் வச்சுருந்தாங்க.
கலசம்

அந்த நாலு பேர்
நாலு பேர் வந்து இறங்கினாங்க. குழுவுக்குத் தலைவர் பெயரைக்கேட்டதும் ஆடிப்போயிட்டேன்! திருமங்கை ஆழ்வார் !!! . கலசம் அலங்கரிச்சுப் பூஜையில் வச்சு முதலாயிரம் படிக்க ஆரம்பிச்சது மகம் நாளில். அன்றைக்கு எட்டு நூறு முடிஞ்சது. மறுநாள் ஆடிப்பூரம். அன்னிக்கு பாக்கி 200 படிச்சு, ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் விசேஷ பூஜை செஞ்சு ஆண்டாளுக்குச் சீர்வரிசையெல்லாம் தலையில் சுமந்துவந்து கொடுத்து, அமுதூட்டி, தீபாராதனை, துளசிப் பூஜை எல்லாம் நடந்து முடிஞ்சது.ஆண்டாள் சீர்
துளசி பூஜை

நாலு மகன்கள், மருமகள்கள், பேரன் பேத்திகள், கொள்ளுப் பேரக்குழந்தைகள், ரெண்டு மகள்கள், மருமகன்கள், அவுங்க குழந்தைகள், மூணாவது மகளா நானும், மருமகனாக் கோபாலும் கலந்துக்கிட்டோம். வீடே கலகலன்னு இருந்துச்சு.

பூஜை முடிஞ்சு ஆசீர்வாதங்கள் ஆச்சு. அப்புறம் பிரசாதவகைகள், விருந்து சாப்பாடுன்னு அட்டகாசம் போங்க.
பரிவட்டம்?

இப்போதையக் காலக்கட்டத்துலே, இப்படி நல்ல நாட்கள் வரும்போது பெரிய குடும்பமா எல்லோரும் சேர்ந்து அரட்டையும் கலாட்டாவுமா மகிழ்ச்சியா இருப்பது மனசுக்கு நிறைவா இருந்துச்சு. நம்ம பர்த் டே கேர்ள்க்கும் கண்ணுலே தண்ணி நிறைஞ்சுபோச்சு. பொன்னியின் செல்வனையும் நந்தினியையும், குந்தவைப்பிராட்டியையும், வந்தியத்தேவனையும் யாருமே மறக்கலை. பேச்சு பூராவும் இவுங்கதான். ஆழ்வார்க்கடியானையும் விடலை:-)
ஓடி ஆடிக் களைச்சுப்போனக் குட்டீஸ்களுக்குக் கதை சொல்லி......

'குடும்பத்தைக் கட்டிக் காத்து எவ்வளோ நல்லது செஞ்சுருக்கீங்க. உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோமு'ன்னு, மாமியாரைப் பாராட்டி அண்ணன் சொன்னதும், நாங்கள் எல்லாம் சேர்ந்து 'ஹேப்பி பர்த் டே டு யூ' பாடுனோம்:-))))
வாழ்த்த வயதில்லை....


அண்ணன் பதிவர் இல்லை...ஆனாலும் எப்படி நம்ம டயலாக் எல்லாம் தெரிஞ்சதுன்னு........... சென்னையில் ஒரு டிஜிட்டல் பேனரை விடறதில்லை போல:-))))
மகம் பிறந்த மங்கையுடன் கட்டுரை ஆசிரியை:-)


மகம் பிறந்த மங்கைக்கு வயசு அதிகம் ஒன்னும் இல்லை. ஜஸ்ட் 80தான்.

வணங்கி ஆசிகள் பெற்றோம்.

பி.கு: இவுங்ககிட்டே நிறையக் கதைகள் இருக்கு. பேசாம நம்ம 'அப்புறம் கதைகள் ஆயிரதைஞ்ஞூற'லே சேர்த்துக்கலாமா?

Thursday, July 30, 2009

நம்ம சிஜி தாத்தா ஆகிட்டாரு!!!!


நம்ம பதிவர் சிவஞானம் அவர்கள் நேற்றுமுதல் பதவி உயர்வு பெற்றுத் தாத்தா ஆகி இருக்கார்.

அவரது மகளுக்குப் பெண்குழந்தை பிறந்துள்ளது.

தாயும் சேயும் நல(மா)ம்.

நம் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கின்றோம்.

அனைத்துப் பதிவர்கள் சார்பில் இனிய வாழ்த்து(க்)கள் சிஜி அவர்களே.

Wednesday, July 29, 2009

எது நடந்ததோ, அது நல்லாவே நடந்துச்சு.

கண்ணாடி வளையல்கள் கொத்து ஒன்னை நீட்டினாங்க ஒரு பெண். நமக்கில்லைப்பா..... கோவில் பட்டர் கிட்டே. அவரும் அதை வாங்கி ஓரமா இருந்த கூடையில் வச்சார். அதுலே முக்கால்வாசி வளைகளா ரொம்பிக்கிடக்கு. இது நேத்து, வெள்ளிக்கிழமைக் கோயிலில் பார்த்த விஷயம். ஏன்? எதுக்கு? ன்னு மனசுக் குடைச்சல்,எனக்கு. நின்னு நிதானிக்க நேரம் இல்லை. நாளைக்கு வரத்தானே போறோம். விசாரிச்சுட்டால் ஆச்சு

பத்து நிமிசம் முன்னாலே வந்துட்டுப் பதுமனைச் சேவிச்சு ஒரு சுத்து சுத்திவரும்போது அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கைக்கு வளையல்கள் மாலை போட்டுருக்காங்க. இன்னிக்கு ஆடிப்பூரம். ஒருவேளை.............இதுதான் ஸ்பெஷலோ? கோவில்படி கடக்கும்போது இன்னொரு பெண் உதவியாளர் கையைப் பிடிச்சுக்கிட்டேத் தள்ளாடிய நடையில் வரும் திருமதி ஒய்ஜிபி அவர்களைப் பார்த்தேன். ரொம்பத்தான் வயசாயிருச்சு(-:

"நீ நினைக்கிறவங்களா இல்லாட்டி என்ன பண்ணுவே?"

"ஒன்னும் பண்ணமாட்டேன். உக்கார்ந்து பார்த்துட்டுப் பதிவு எழுதுவேன். ஒரே பேர்லே ஆளுங்க இருக்கமாட்டாங்களா என்ன?"

கால்வாசி நிரம்பி இருந்த ஹாலுக்குள் பிரவேசித்தோம். இதென்ன முன்னாலே எல்லா இடங்களும் , என் இடம் உள்படக் காலியா இருக்கே...... வீரநடை போட்டுப்போய் உக்கார்ந்த நிமிஷம், முதல் மூணு வரிசை இன்னிக்கு ரிசர்வுடுன்னு செக்யூரிட்டி வந்து சொல்றார். ரிசர்வுடுன்னா ஒரு அறிவிப்பு வச்சுருக்கக் கூடாதா?

ஏற்றவும் கடைசி வரிசையில் கோபிகா ஒற்றை ஆளா உக்கார்ந்திருக்காங்க. என்னை கண்டதும் 'பரிச்சயக்காரியைக் கண்டச் சிரி'.

"வரூ. ஈசைடு மும்போட்டு போயிருக்கூ"

"இன்னு புள்ளி ஆரா? "

ரெஜினிகாந்திண்டே மோளு"

"மெயில் அயிச்சிச்சுண்டு, கண்டோ?"

" இத்ரி தெரக்கா. சமயமில்லா. நாளை காணாம்"

'இத்ரியோ........... ஒத்ரியல்லோ'ன்னு நினைச்சுக்கிட்டேன்.

நியாயம்தான். விழா நடத்தி முடிப்பதுவரை எவ்வளோ தலைவலின்னு நமக்குத் தெரியாதா? இன்னிக்குத்தான் கடைசி நாள். வசதியான இடமாப் பார்த்து(என்ன பெரிய வசதி? தலை மறைக்கக்கூடாது அம்புட்டுத்தான்)எக்ஸ்ட்ரா சேர் இழுத்துப்போட்டு உக்கார்ந்தோம். இசைக்குழு வந்து ஸ்ருதி சேர்த்து ரெடியா இருக்காங்க. பாடகி அதே நந்தினி ஆனந்த்தான். நமக்கு அதிர்ஷ்டமுன்னு நினைச்சேன். என்ன அருமையான குரல்வளம். ரொம்பத் தெளிவா, ஸ்பஷ்ட்டமாப் பாடுறாங்க. வழக்கம்போல் புடவைதான் கட்டி இருக்காங்கன்னாலும் மலையாளச் சாயலில் உள்ள ஹாஃப் ஒயிட் கசவு ஸாரி. நட்டுவாங்கமும் இதேபோல ஒரு புடவை. கூடுதல் விளக்குகளும், ஸ்பீக்கர்ஸுமா கொஞ்சம் பந்தாவாத்தான்................
திமுதிமுன்னு ஒரு கூட்டம் வந்து முன்வரிசையைப் பிடிச்சது. போட்டோ க்ராஃபர்கள் எல்லாம் மொய்ச்சுக்கிட்டுப் படம் எடுத்துத் தள்ளறாங்க. தனுஷ் இந்தப் பக்கம் திரும்பி எல்லாருக்கும் பொதுவா கைகூப்பி ஒரு வணக்கம் சொல்லிட்டு உக்கார்ந்தார். அவர் என்னவோ சாதாரணமாத்தான் இருக்கார். அடிபொடிகள்தான் பாதுகாப்பு வளையம் மாதிரித் தெரிஞ்சது.

அடுத்த சலசலப்பு.............. லதா ரஜினிகாந்த். மருமகன் இருக்கும் பக்கம் இல்லாம அடுத்த பக்கம் வந்து உக்கார்ந்தாங்க. ஆஸ்ரம் ஸ்கூல் பழைய மாணவ மாணவிகள் சிலர் காலைத் தொட்டுக் கும்பிட்டு வணக்கம் சொல்லிக்கிட்டாங்க. இவுங்களோட தண்ணிபாட்டிலைக் கையில் வச்சுக்கிட்டு ஏவலுக்குக் காத்து நின்ன உதவியாளர் எஜமானி அம்மாவின் கட்டளையை எதிர்பார்த்துக் கதவோரம் காத்திருந்தார். ஒரு கையசைவு போதுமாயிருந்தது.
சின்னதா பார்டர் போட்டக் கேரளக் கசவு ஸாரி அணிஞ்ச ஐஸ்வர்யா ஆட ஆரம்பிச்சாங்க. ஏனோ தானோன்னு இல்லாம ரொம்ப பவ்யமா, சின்ஸியரான ஆட்டம். முகபாவனைகள் அபிநயம் எல்லாமே சூப்பர். ஒல்லியான சின்ன உருவம். நட்டுவாங்கம் செஞ்சவங்கதான் குருவாம். கடைசிவரை விறுவிறுப்புக்குக் குறைவில்லை.'அம்மம்மா' கையால் கடைசியில் பரிசு. பொன்னாடை. நட்டுவாங்கம் செஞ்சவங்களையும் மற்ற இசைக் குழுவினரையும் பாராட்டிப் பேசுனாங்க திருமதி ஒய் ஜி பி. அடுத்த நிகழ்ச்சிக்குத் தயாரா இருந்த கீதா மாஹாலிக்
அவர்களுக்கும் அம்மா கையால் பரிசு கொடுத்துக் கவுரவப்படுத்தணுமுன்னு கோபிகா கேட்டுக்கிட்டதால் அப்படியே செஞ்சாங்க. கம்பீரமான குரல் மட்டும் அப்படியே இருக்கு. உடல்தான் ரொம்பவே தளர்ந்து போச்சு.


சினிமாக்காரர்கள் போனதும் மொத்தக்கூட்டமும் (சிலரைத் தவிர்த்து) அம்பேல். காயப் ஹோ கயா. நிம்மதியா 'என் இடம்' போய் அமர்ந்தேன்.

ஒடிஸ்ஸி நடனம் ஆரம்பமாச்சு. ரொம்ப எளிமையான அலங்காரங்கள். தலை அலங்காரம் மட்டும் பிரமாதமா இருக்கு. ரொம்ப நிதானமான நடன வகை. அபிநயம், பாவங்கள் எல்லாத்துலேயும் நம்ம பரதத்தோட சாயல் அதிகம். சுத்திச் சுத்தி ஆடறாங்க. அந்த புடவைக் கட்டுலேச் சுத்தி ஆடும்போது எனக்கென்னமோ மராத்தியர்களின் நடனம் நினைவுக்கு வந்துக்கிட்டே இருந்துச்சு.கீதா, ஒடிஸி நாட்டியத்துலே ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. வைணவ பக்தியும் ஒடிஸ்ஸி நடனமும் எப்படி ஒன்னுக்கொன்னு இணைஞ்சு இழையுது, அதோட தாக்கம் எப்படின்னு ஆராயறாங்களாம். பஜன் வகைப் பாட்டுகளும் நடனமும் அருமை. பாவயாமி ரகுராமம் வட இந்திய ஸ்டைலில் பாடினார் பாடகர். ஒரிஸ்ஸாவில் பிறந்து வளர்ந்து இப்போ டெல்லியில் இருக்காங்க. கலாச்சாரக் கழகத்து ஃபெல்லோஷிப் அவார்ட் கிடைச்சுருக்கு. பல வருட பயிற்சியும் அனுபவமும் சேர்ந்து ரொம்ப க்ரேஸ்ஃபுல்லான நிகழ்ச்சியா இது அமைஞ்சுபோச்சு.
இவுங்ககூடவே இசைக்குழுவில் ஒரு மிருதங்கம், ஒரு சிதார், ஒரு பாடகர். இவரே ஹார்மோனியமும் வாசிச்சுக்கிட்டே பாடினார். ஒரு பெண் தாளம் போட்டாங்க. மிருதங்கம் வாசிச்சவரே நட்டுவாங்கமும் செஞ்சார். மொத்தக் குழுவையும் மேடையில் கூப்பிட்டு அறிமுகப் படுத்திப் பாராட்டி நன்றி சொன்னாங்க கீதா. இது ரொம்பவும் பாராட்டப்படவேண்டிய அம்சம். இசைக்குழு சரியில்லைன்னா என்னதான் ஆடினாலும் அது எடுபடாது பாருங்க. குழுவா சேர்ந்து ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா நிகழ்ச்சியைக் கொண்டு போகணும். புகழைப் பங்குபோட்டுக்கத் தெரியணும். தனி மரம் தோப்பாகாது. நிகழ்ச்சிக்கு நம்ம பத்மா சுப்ரமணியம் வந்துருந்தாங்க.

இப்படியாக மகாராஜா ஸ்வாதித் திருநாளின் பிறந்த தினத்தையொட்டி நடந்த 'ஸ்வாதி ந்ருத்தோல்ஸவம் 'அழகா இனிமையா முடிஞ்சது. கலா ரசிகர்களுக்காக இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செஞ்சு அனைவரும் ஆர்வம் காட்டும் வகையில் இலவச நிகழ்ச்சியாக இதை அளித்த தாஸ்யம் நடனப் பள்ளி கோபிகா வர்மாவுக்குப் பதிவுலக சார்பில் நம் நன்றி.

Monday, July 27, 2009

ஒருநாளைப்போல ஒரு நாள் இருக்கறதில்லைப்பா.....

அதே மாதிரித்தான் பொழுது விடியுது, சூரியன் கிளம்பும்போதே நெருப்புத் தழலாத் தகிச்சுக்கிட்டு வரான். சூடான காற்று அலைஅலையா அடிக்கிறதைப் பார்த்தால் சஹாராவில் இருக்கோமோன்னு தோணுது. போகட்டும், மாலையிலாவது தென்றல் வருதான்னா.....

இந்த ஒரு வாரம் மட்டும் மாலைத் தென்றலுக்கு கேரண்டியாம். தாஸ்யம் புண்ணியம் கட்டிக்கிட்டாங்க. மனசைக் குளிர்விக்கும் பாடல்களும், ஆடல்களுமாப் போய்க்கிட்டு இருக்கு. இன்னும் ரெண்டே நாட்கள்தான். (நடுவிலே புதன் & வியாழனை விட்டுட்டோம் ரெண்டு செட் மோகினியாட்டம் மிஸ் ஆகிப்போச்சு)

வெள்ளி மாலை வழக்கம்போல் கிளம்பிப்போய், முதலில் பதுமநாபனைத் தரிசனம் செஞ்சுட்டு, 'கோச்சுக்காதேடா........... இதோ அம்மா டான்ஸ் பார்த்துட்டு வந்துடறேன்'னு சமாதானம் சொல்லிட்டு ஹாலில் புகுந்தேன். ராதிகா வைரவேலவன். அந்தக் கால வைஜயந்தி மாலாவை நினைவுபடுத்தும் முகம். முகம் மட்டுமா அவுங்க போட்டுருந்த உடை கூட அந்தக் கால ஸ்டைலில் நல்லா இறுக்கமில்லாம லூசா இருந்துச்சு. பழைய காலங்களில் பரதநாட்டியத்துக்குன்னு தனியா உடை தைக்க மாட்டாங்களாம். புடவையையே அப்படி அழகாக் கட்டி விடுவாங்களாம். இப்பப் பாருங்க எங்கே பார்த்தாலும் ரெடிமேடு, இதுலேயும் வந்துருச்சு. பாண்டி பஸார்லே நம்ம (??) தையல்கடைக்கு அடுத்த கடையில் பரதநாட்டிய உடைகளைத் தைச்சுக்கிட்டு இருப்பாங்க. நான் போகும்போதெல்லாம் கண் நிறையப் பார்த்துட்டுத்தான் வருவேன். வாசலில் ஒரு பொம்மைக்கும் இந்த உடை போட்டு வச்சுருப்பாங்களா...... பேசாம நம்ம 'ஜில்ஜில் ரமாமணி'யாட்டம் ஒன்னு வாங்கிக்கலாமான்னுகூடத் தோணியிருக்கு:-))

ராதிகா வைரவேலவன்
கொஞ்சம் லேட்டாப் போனதால் 'என் சீட்டு' பறிபோயிருந்துச்சு. இசைக்குழுவில் ஒரு பெண்மணி, தப்லா வாசிச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆட்டமும் பாட்டமும் அருமை. ராதிகாவுக்குப் பரிசளிக்க வந்தவர் யாருன்னு எனக்குத் தெரியலை. நாட்டியத்தைப் பாராட்டி, உண்மைக்குமே அருமைன்னு புகழந்தார். அக்கம்பக்கத்துலே அவர் யாருன்னு கேட்டால்........ எல்லாம் சுத்தம். உள்ளூர் மக்கள்ஸ் ஒன்னையும் கண்டுக்கறதில்லையா ? பார்க்கறதுக்கு பெரியமனுஷத்தனமாக் கலா ரசிகர்களா என் கண்களுக்குத் தெரிஞ்ச இன்னும் ரெண்டுபேரைக் கேட்டேன். ஊஹூம்..... அந்தப் பக்கம் வந்துக்கிட்டு இருந்த கோபிகா வர்மாவையேக் கேட்டால் ஆச்சு. ஃப்ரொஃபஸர் ரகுராமன் அவர்களாம். கலாக்ஷேத்ரா இயக்குனர்.. நம்மைப் பத்திச் சின்ன அறிமுகம் ஒன்னும் செஞ்சுக்கிட்டேன். இந்த நாடகவிழா இடுகைகளோட சுட்டி அனுப்புங்களேன்னாங்க. ஆஹா.... அனுப்பிடலாம். நோ ப்ராப்ஸ்:-) நடனக் கலைஞர் ராதிகாவும் கலாக்ஷேத்ரா மாணவிதான், இப்போ அவுங்க அங்கேயே நாட்டியம் சொல்லித் தர்றாங்கன்ற விவரமும் கிடைச்சது. யாருக்காவது நடனம் கத்துக்கணுமுன்னாச் சொல்லுங்க, மயிலையில் தனியா வகுப்புகள் நடத்துறாங்களாம். ( எல்லாம் ஒரு விளம்பரம்தான், நம்ம சேவைக்கு)
அடுத்த நிகழ்ச்சி குச்சுப்புடி நடனம். 'குச்சிவச்சுக்கிட்டா ஆடுவாங்க?'ன்னு தன்னுடைய ஞானத்தை (என்னிடம்) காமிச்சுக்கிட்டார் நம்ம கோபால். ஆந்திர மாநிலத்தில் குச்சுப்பிடி என்ற ஊரில் இந்த பத்ததியில் ஆடிப் பிரபலமான நடனமுன்னு கோடி காமிச்சேன்.

சித்தேந்த்ர யோகி என்பவர்தான் இந்த வகை நாட்டியத்தை ஆரம்பிச்சுவச்சார்ன்னு சொல்றாங்க. பரதமுனி ஆரம்பிச்சது பரதநாட்டியமுன்னு இருக்குல்லே அந்த மாதிரி! அவர் ஒரு அநாதையாம். அந்த கிராமத்து மக்கள் எல்லாம் சேர்ந்து அவரை வளர்த்துருக்காங்க. இவருக்குத் திருமணம் செஞ்சு வைக்கலாமுன்னு அவுங்க எல்லோரும் முடிவு செஞ்சு பொண்ணு வீட்டுக்கு நதியைக் கடந்து போக ஒரு படகில் ஏறுனாங்க. பாதி வழியில் படகு கவுந்துருச்சு. கொஞ்ச தூரம்வரை நீந்திப்போன இவருக்கு அதுக்குமேலே நீந்தமுடியாமப் போச்சு. கடவுளை தியானிச்சு உனக்கே என் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறேன்னு வேண்டிக்கிட்டார். கரையும் சேர்ந்தார். அதுக்குப்பிறகு கடவுள் மேல் பாட்டுக்கள் எல்லாம் பாடி இறைவன் சேவையா நாட்டிய நாடகம் ஒன்னு எழுதுனார். அதுலே நடிக்க அந்த அக்கிரஹாரத்துப் பசங்களைப் பயிற்றுவிச்சாராம். அந்தக் காலத்துலே ஆம்பிளைங்க மட்டுமே இந்த நாட்டியத்தை ஆடி இந்தக் கலையை வளர்த்துருக்காங்க. நம்ம தமிழ்நாட்டுலேகூட மெலட்டூர் என்ற ஊரில் நடக்கும் 'பாகவத மேளா' ரொம்பப் பிரபலமாச்சே.

பலநூற்றாண்டுகள் ஆனபிறகு, கோல்கொண்டா அரசர் அப்துல் ஹாஸன் தனேஹா என்றவர் இந்த நாட்டியத்தை வெகுவா ரசிச்சு, இதை இன்னும் நல்லபடியா அபிவிருத்தி செஞ்சுக்குங்கோன்னு 600 ஏக்கரா உள்ள ஒரு கிராமத்தையே கொடுத்தார். (அந்த கிராமம்தான் குச்சுபிடின்னு நினைக்கறேன்.) நாட்டியம், நிருத்தம், நிருத்யான்னு மூணுவிதம் முக்கியமானவை இந்த வகை நடனங்களில். நாட்டிய நாடகம் என்றதால் எக்கச்சக்கமான நபர்கள் சேர்ந்து ஆடுவாங்களாம். மகாபாரதக் கதைகள், ராமாயணக்கதைகள்ன்னு ஆடும்போது கேரக்ட்டருகளுக்குக் கம்மியா என்ன? (யார் வந்தாலும் சேர்த்துக்கலாம். ராமாயணமுன்னா வானரக்கூட்டம். பாரதமுன்னா, குருக்ஷேத்ரப் போர்க்கள வீரர்கள்)

காலப்போக்கில் இந்த வகை நடனத்திலும் புதுமைகளைப் புகுத்திப் பெண்களும் இந்த நடனத்தில் பங்கெடுக்க ஆரம்பிச்சு இப்பப் புகழ்பெற்ற இந்திய நடனவகைகள் எட்டில் இதுவும் ஒன்னாக இருக்கு. குழு நடனமா இருந்து இப்ப தனி ஆளா ஆடும்வரை வந்தாச்சு. தாம்பாளத்துலே நின்னு ஆடிக்கிட்டே தாம்பாளத்தின் விளிம்பைக் கால்விரல்களால் பிடிச்சு தட்டை நகர்த்திக்கிட்டே ஆடுவதும்., தலையில் ஒரு செம்பு வச்சுக்கிட்டு அது விழாமல் ஆடுவதுமாப் பார்க்கப் புதுமையான நடனம் இது. சொம்புலே தண்ணி கூட இருக்கும்!

இன்னிக்கு ஆடவந்தவங்க ஜயப்ரியா விக்ரமன். செழிப்பா இருந்தாங்க. முகத்தில் நல்ல களை. நகை நட்டெல்லாம் பயங்கரமா ஜொலிச்சது. அதிலும் திருமண் டிசைன் பதக்கம் .........ஹைய்யோ.... என்ன சொல்வேன்!!! (பழைய காலத்துலே மரத்தால் ஆன ஆபரணங்களை அணிஞ்சு ஆடுவாங்களாம். ஆம்பிளைங்க ஆட்டத்துக்கு அது போதுமுன்னு நினைச்சுருக்கலாம்) அருமையான நடனம். அற்புதமான முக பாவம். முதல் மூணு நடனம் முடிஞ்சதும் தட்டு வரப்போகுதுன்னு நான் நினைக்கும்போது திடீர்னு ஆட்டத்தை முடிச்சுக்கிட்டாங்க. என்ன காரணமோ? உடல்நலக்குறைவாக இருக்கலாம். அரைமணி நேரம் கூடுதலா சாமிகும்பிட நேரம் உண்டாக்கிக் கொடுத்துட்டாங்க. அப்புறம் அவுங்களும் கோயிலுக்குள்ளே வந்து சாமி கும்பிட்டாங்கன்னு வையுங்க.
ம்ம்ம் சொல்ல மறந்துட்டேனே ...இவுங்க வேம்பட்டி சின்ன சத்யம் அவர்களின் மாணவி. கூடுதல் விவரம் வேணுமுன்னா இதோ.. திரைப்பட இயக்குனர் விக்ரமனின் மனைவி. அழகான நீலக் கலர் உடை பிரமாதம் போங்க. பரதநாட்டியத்துக்கும் இந்த நடனத்துக்கும் நிறைய ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் உண்டாம். உடையில்கூட விசிறியா வரும் முன்பாகம் பரதநாட்டியத்துக்கு மூணு அடுக்குன்னா இதுலே ஒரே ஒரு அடுக்கு.

ஜயப்ரியா
சின்ன வயசு ஜெயசித்ராவின் சாயல்னு கோபால் சொல்லிக்கிட்டு இருந்தார். எப்பவும் யாரைப் பார்த்தாலும் ஏற்கெனவே பரிச்சயமாயிருந்த முகங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது இயற்கையா வந்துருது. மன அடுக்குகளில் பதிஞ்சு கிடக்கும் பலவிஷயங்களில் இதுவும் ஒன்னு:-)

Friday, July 24, 2009

பையன் ஆடுனாப் பாக்கமாட்டீங்களா?

என் பக்கத்துலே ரெண்டு இடம் காலியா இருந்துச்சு. ரெண்டு குட்டீஸ் வந்தாங்க. "ஆண்ட்டீ இங்கே யாராவது வர்றாங்களா?"

'ஆமாம். நீங்கதான் வர்றீங்க'ன்னேன். குஷியா உக்கார்ந்துச்சு ரெண்டும். அதிதி, ரக்ஷான்னு பெயராம்.

"டான்ஸ் கத்துக்கறீங்களா?"

"ஆமாம் ஆண்ட்டீ."

"எதுவரை வந்துருக்கீங்க?"
முழியே சரியில்லை.

"தட்டிக்கும்பிடக் கத்துண்டாச்சா? "

"ஹிஹி ஆமாம் ஆண்ட்டீ. எந்தப் பொண்ணு ஆடப்போறாங்க ஆண்ட்டீ."

"பொண்ணு இல்லை. பாய் ஆடப்போறார்."

தூக்கிவாரிப்போட்டுச்சு ரெண்டு பேருக்கும். லேசா ஒரு சிரிப்பு. முளைச்சு மூணு இலைவிடலை அதுக்குள்ளே பாய் கேர்ள் எல்லாம் தெரியுது:-)பாரேன் நமுட்டுச் சிரிப்பை!
பெங்களூர்லே இருந்து வந்துருக்கார். என்னை நம்பலைன்னு எனக்கு ஒரு தோணல். ப்ரவீண் குமார் ஃப்ரம் பேங்களூரு. முந்தின நிகழ்ச்சி நடக்கும்போது பாதியில்தான் போய்ச் சேர்ந்தேன். பரதநாட்டியம் ஆடுனது ப்ரீத்தி ராம்ப்ரஸாத் ஃப்ரம் அமேரிக்கா. இந்த நிகழ்ச்சிக்காகவே யுஎஸ்ஸில் இருந்து வந்துருக்கும் கலைஞர். ஆடி முடிச்சதும் தன்னைப் பத்திச் சுருக்கமாச் சொல்லி, தன்னுடைய இசைக்குழுவையும் அறிமுகப்படுத்தி நன்றி சொன்னவிதம் அழகோ அழகு. அமேரிக்கன் ஆக்ஸெண்டைப் பொருட்படுத்தாதீங்கன்னுச்சு. நாங்களும் படுத்தலை. பாடகி நந்தினி அருமையாப் பாடுனாங்க. நல்ல குரல்வளம். நேத்துக்கூட இவுங்க பாட்டுதான் சுமித்ரா சுப்ரமணியத்துக்கு.
ப்ரீத்தி ராமப்ரஸாத்

சுமித்ரா சுப்ரமணியன்ராஜஸ்ரீ வாரியார்


இசைக்குழு இடத்தைக் காலி செஞ்சதும் மைக்குகள் மட்டும் தேமேன்னு இருந்துச்சு. ப்ரவீணுக்கு சிடிதானாம். அவருடைய நண்பர் வந்துருந்தார். நறுக்ன்னு நாப்பத்தைஞ்சே நிமிஷம், எண்ணி நாலே பாட்டு. ஜமாய்ச்சுட்டார்.
குமாரநல்லூர் கோவிலைப்பற்றிச் சொல்லி பகவதியின் பெருமைகளைப் போற்றும் க்ருதிக்கு ஆடினார். அதுலேயும் கஜேந்திர மோட்சமும், வாமன அவதாரமும் அட்டகாசம். இன்னிக்குத் தெரிஞ்சுக்கிட்ட புதுச் செய்தி என்னன்னா........ மகாராஜா ஸ்வாதித் திருநாள் சிவனைக் குறிச்சும் பாடல் இயற்றி இருக்கார் என்றதுதான். நிகழ்ச்சியின் முடிவில் சென்னை ரசிகர்களைப் புகழ்ந்துபேசுனார். நியாயம்தான். நாம் என்ன ...என்னை அங்கே ஆடவிட்டாத்தான், நீ இங்கே ஆடமுடியுமுன்னு சொன்னோமா என்ன?


ப்ரவீண் குமார்
பதினாலில் ஒரே ஒரு ஆண் என்ற பெருமைக்குத் தகுதியானவர்தான். முதலில் இவரைப் பஞ்சாபின்னு நினைச்சுருந்தேன். கடைசியில் பார்த்தால் கருநாடகா!
டி.வி. கோபாலகிருஷ்ணன்

மூத்த கலைஞர்களையும் அவ்வப்போது (மேடையில்) காணும் வாய்ப்பும் கிடைக்குது.


சுதாராணி ரகுபதி


நடனவிழா ஏற்பாடு செய்த கோபிகா வர்மா

இன்னிக்கு ஆணி கூடுதல்/ நாளை குச்சிப்புடி. முடிஞ்சாப் போய்வந்து சொல்றேன். சரியா?