Wednesday, March 30, 2016

கவிஞருக்குத் திருப்பதி திருமலை தேவஸ்தானம் வச்ச சிலை (இந்தியப் பயணத்தொடர். பகுதி 14)

இன்றைக்கே  மூணு கோவில்களிலும் தரிசனம் கிடைச்ச திருப்தியுடன் அறைக்குத் திரும்பி, உள்ளே போய் மலை மேலிருப்பவனுக்கு சேதி அனுப்பலாமுன்னு  ஜன்னல்கிட்டே போனால் 'எல்லாம் எனக்குத் தெரியுமெ'ன்றது போல தூரக்கே இருந்து விளக்கால் பதில் சொல்றான் பாருங்க!
ரூம்சர்வீஸில் சாப்பாடு எதாவது வாங்கிக்கலாமுன்னு மெனுவைப் பார்த்தால்.... எனக்கு வேண்டியது  இருக்கு.  ரெண்டு இட்லி, ஒரு லஸ்ஸின்னு  சொன்னால், நம்மவர் தனக்கும் அதேன்னார்.   சும்மாச் சொல்லக்கூடாது.... ரெண்டே இட்லின்னாலும் அதைக் கொண்டு வந்த விதம் அருமை! தனியா ஹாட்பேக்கில் போட்டுச் சுடச்சுட வந்தது!   த பெஸ்ட் சர்வீஸ் !
சாப்பாட்டை முடிச்சு, வலை மேய்ந்து, மெயில் செக் பண்ணி, வாட்ஸ் அப் சேதிகளை பார்த்து, படங்களை  அனுப்பின்னு  ஒரு ரெண்டு மணி நேரம் போச்சு.  இங்கே Wifi  நல்லா வேலை செஞ்சது. அன்றன்று எடுத்த படங்களை  தன்னுடைய லேப்டாப்பிலும், கூடவே கொண்டுபோயிருந்த எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவிலும் சேகரிச்சு வைப்பது, மொபைல் ஃபோன்களையும் கேமெரா பேட்டரிகளையும் சார்ஜ் செய்வது போன்ற தினசரி 'கடமை'களை  நம்மவர் பார்த்துக்கிட்டார்.

 நல்ல ஹொட்டேல்களா இருந்தாலும் கூட  ப்ளக் பாய்ண்ட்ஸ்  அங்கங்கே  ரெண்டுன்னு வெவ்வேற  சுவர்களில் இருப்பவை ரொம்பக் குனிஞ்சு பயன்படுத்த வேண்டி இருக்குன்னு இப்பெல்லாம் நாலு சாக்கெட்ஸ் இருக்கும் பவர் போர்டு ஒன்னு பயணத்தில் கொண்டு போறோம். நம்ம  நியூஸி சிஸ்டத்தில் கொஞ்சம் வேறமாதிரி டிசைன் இருப்பதால்  நாலைஞ்சு ட்ராவலர்ஸ் ப்ளக் கொண்டு போகும் வேலை வேற!   பவர் போர்டு இருந்தால் ஒரே ஒரு  அடாப்டர் இருந்தால் போதும்.  வசதியாத்தான் இருக்கு.

மறுநாள் காலையில் கொஞ்சம் நிதானமாகவே எழுந்து கடமைகளை முடிச்சுக்கிட்டு, கீழே ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போனோம். இன்றையத் திட்டத்தின்படி பயண நேரம்  அதிகமில்லை. கடப்பா என்ற ஊருக்குத்தான் போகணும்.   திருப்பதி - கடப்பா மொத்தமே சுமார் மூணு மணி நேரம். தூரம் 142 கிமீ.  இதுலே இடையில்  117 கிமீ தாண்டுனதும் ஒரு கோவில் விஸிட். அவ்ளோதான். அங்கே போய் நல்லா ஓய்வெடுத்துக்கிட்டு மறுநாள்  நூற்றியெட்டில் ஒன்றை தரிசிக்கணும். கஷ்டமான பயணம் என்பதால் இடையில் ஓய்வு முக்கியம். இவ்ளோ முன் ஜாக்கிரதையோடு திட்டம் போட்டுருக்கார் நம்மவர்.


கீழே ரெஸ்ட்டாரண்டின் பெயர் கஸானா!  ரொம்ப ஆடம்பரமில்லாத எளிய அலங்காரங்கள். பஃபே தான் இங்கேயும். நமக்கான இட்லி வடைகள் கிடைச்சது.  காஃபிதான்  சுமாரா இருந்துச்சு. ஒன்பதுக்குச் செக்கவுட் செஞ்சு கிளம்பி  கடப்பா ஹைவேயில் போறோம்.   ஒரு  ஒன்னரை மணி பயணத்துக்குப் பின் ரொம்ப தூரத்தில் ஒரு சிலை மாதிரி தெரிஞ்சது.  வளைஞ்சு செல்லும் சாலையில் அப்பப்ப ஒரு கோணத்தில் சிலையின் தலை  கண்ணாமூச்சி ஆட்டம்.

என்னவா இருக்குமுன்னு யோசிக்கும்போதே  முழு உருவமும் தெரிஞ்சது.  அங்கே போய் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினோம். ஒரு பார்க் செட்டிங்லே  அதோ ரொம்ப தூரத்துலே மேடைமேலொரு சிலை.
காசிப்பயணத்துலே  இப்படி  ஒரு தோட்டத்துக்குள்ளே பார்த்த புத்தர் நினைவுக்கு வந்தார். சாரநாத் புத்தர்தான் இந்தியாவிலேயே உயரமானவர். 80 அடி! 
சங்கு சக்கரம்  வச்சு டிஸைன் செஞ்ச இரும்புகேட்டைக் கடந்து உள்ளே போறோம். இப்பவும்  யாரோட சிலைன்னு தெரியலையேன்னு  சுத்துமுத்தும் கண்ணை ஓடவிட்டால்.....  ஆஹா... அன்னமைய்யா ! நல்லவேளையா  இங்லீஷ்லே ஒரு போர்டு இருந்துச்சு கழிவறை எங்கே இருக்கு என்ற தகவலோடு.
108 அடி உயரச் சிலை. திருப்பதி தேவஸ்தானம் செஞ்சு அங்கே நிறுவியிருக்கு. நவீன கல்வெட்டு எல்லாம் ஜிலேபி எழுத்துக்களால்  நிரம்பி இருக்கு.  படிக்கத் தெரியாத தன்னிரக்கத்தில் ஒரு விநாடி துக்கிச்சேன்.  ஏமிட்டிரா ஈ கொடவ? நாலுகு சைடு உந்தே....  தாண்ட்ல ஒகே ஒக  சைடுலோ இங்லீஷ்லோ ராசி பெட்டக்கூடதா?


எல்லா திசைகளிலும் இருந்தும் அன்னமைய்யாவை க்ளிக்கிட்டு, வெளிவரும் சமயம்   ஒரு மூலையில் செடிகளை வெட்டி சரிப்படுத்திக்கிட்டு இருந்த தோட்டக்காரர் கண்ணில் பட்டார். அவரிடம் கொஞ்சம் விசாரிப்பு.
நமக்கு இந்த 108 என்ற எண்ணிலொரு மோஹம் இருக்கத்தான்  செய்யுது.  ஹிந்துமத நம்பிக்கைகளில் நூத்தியெட்டு என்பது   ரொம்ப ஆன்மிக சம்பந்தம் உள்ளதுதான். ஜெபமாலை மணிகளில், திவ்ய தேசங்களில், சாமி சிலைகளில்  இப்படி..... இதுக்கு முந்தி நாங்க பார்த்த ஒரே ஒரு நூத்தியெட்டு அடி  உசரச்சிலை நம்ம ஆஞ்சியோடதுதான்.  அவர் ஷிம்லாவில் இருக்கார். அவரை தரிசிக்கணுமுன்னா   இங்கே எட்டிப் பாருங்க:-)


இந்த சிலை இருக்கும் தோட்டத்தையொட்டியே  ஒரு பாதை.  அதுக்கு அந்தாண்டை ஆந்திரப்ரதேஷ் டூரிஸம் ,ஒரு  ரெஸ்ட்டாரண்ட் & ஆஃபீஸ் வச்சுருக்காங்க.  ஹரிதான்னு பெயர்.  அங்கே  எதாவது தகவல் கிடைக்குமான்னு பார்க்கலாமே...  போனோம்.
போனதுக்கு  ஆளுக்கொரு காஃபின்னு  சொல்லிட்டு மற்ற வசதிகளெப்படி இருக்குன்னு  பார்த்தால்   கழிப்பறைக்குப் போய் வந்த சீனிவாசன், ரொம்ப சுத்தமா இருக்குன்னார்.  அப்படியா? ன்னு ஆச்சரியத்தோடு  போனால் பெண்கள்பகுதியை மூடிப் பூட்டு போட்டு வச்சுருக்காங்க.  பக்கத்தில் இருந்த பணியாளர் ஒருவர்  பையில் இருந்து சாவியை எடுத்துத் திறந்துவிட்டார்.   ரொம்ப சுத்தமான இடம்!   பின்பக்கமா தனிக் கட்டிடம் என்பதால்  பாதுகாப்புக்காக பூட்டு போட்டுருக்கோம் என்றார்.  இல்லைன்னா தெருவோடு போகும் சனம்  பக்கத்து  கேட் வழியா வந்து பயன்படுத்திட்டு அழுக்கா வச்சுட்டுப் போயிடறாங்களாம்.

அப்போ... அவுங்க பயனுக்குத் தான் சாலை ஓரம் இருக்கே என்ற எண்ணமோ? தேவுடா..... :-(

ரெஸ்ட்டாரண்ட் ஹாலில் மாட்டி இருந்த படங்களைப் பார்த்துக்கிட்டு இருந்த நம்மவர் அட்டகாசமான இடங்கள்  இருக்கு. எதாவது ஒன்னு பார்க்கணுமுன்னு  ஒரு கோட்டையைக் காமிச்சார். கோட்டையான்னு ஒரு கொலைவெறி பார்வையை பரிசளித்தேன். அதென்ன எப்பப் பார்த்தாலும்... கோட்டை கோட்டைன்னுட்டு....

ஆனால் இன்னொரு இடம் எனக்குப் பிடிச்சமாதிரி இருந்தது. பார்க்கலாமுன்னு க்ளிக்கி வச்சுக்கிட்டேன்.
காஃபி முடிச்சுட்டு வெளியில் அந்தப் பாதைக்கு வந்தால்  தலப்பாக்கா 3 கிமீன்னு ஒரு போர்டு சொல்லுது.  அலங்காரவளைவு வச்சுருக்காங்க. வெறும் மூணுதானே...  போயிட்டு வந்துறலாமேன்னு கிளம்பினோம். இங்கே என்ன விசேஷமாம்?
 நம்ம அன்னமய்யா பிறந்த ஊர். அன்னமாச்சாரியாவைத்  தெரியாதுன்னு சொல்றவங்ககூட அவர் பாட்டை எப்பயாவது எங்கெயாவது கேட்டுத்தான் இருப்பாங்க. சுருக்கமாச் சொன்னா இவர் ஆந்திரநாட்டு தியாகைய்யர்தான்.
காலம் மட்டும் நம்ம தியாகைய்யருக்கு  முந்தியது. ஏறக்கொறைய பதினைஞ்சாம் நூற்றாண்டு முழுசும் வாழ்ந்தவர்! (பிறப்பு 1408 ஆம் ஆண்டு. மறைவு  1503)

ஒருவேளை இவர்தான் தமிழ்நாட்டில் தியாகைய்யரா மறுபிறவி எடுத்து,  விட்டுப்போன பாடல்களைப் புனைந்து பாடி வச்சாரோ?  தியாகைய்யரின் காலம்  May 4, 1767 முதல்   January 6, 1847 வரை.

பெருமாள் மேலே 32 ஆயிரம் பாடல்கள் புனைந்தவர்! அதுலே ஒரு பனிரெண்டாயிரம் சுவடிகள்தான் கிடைச்சிருக்குன்னு    ஓலைச்சுவடிகளில் இருந்த பாடல்களை அவருடைய மகன் பிற்காலத்தில் செப்புத்தகட்டில் பதிச்சு  வச்சதாகவும், பல ஆண்டுகளுக்குப்பின்  பூட்டிக்கிடந்த ஒரு அறையில்  அவை கண்டுபிடிக்கப்பட்டு  இப்போ அவைகளை ஒரு தனி அறையில் திருப்பதி வேங்கடவன் கோவிலில் வச்சுக் காப்பாத்திக்கிட்டு இருக்காங்கன்னும் ஒரு தகவல் உண்டு. நானும் அந்த அறையைப் பார்த்திருக்கேன். பெரிய உண்டியலுக்கு  எதிர்ப்பக்கம் இருக்கு. சந்தனம் அரைக்கும் பரிமளக்கல் பக்கத்தில் இருக்கும் அறை. அன்னமாச்சார்யா  சிலை ஒன்னு சின்னதா வச்சுருக்காங்க.

இவருடைய இளவயதில் ஒரு நாள் திம்மக்கா, அக்கலம்மா  என்ற தன் அத்தை பெண்களுடன் இவர் மலைப்பாதையில் போகும்போது எதிரில் வந்த ஒரு அழகான இளைஞர்,  'ஏன் வீணாக பெண்களுடன் பொழுது போக்குகிறாய்?' என்று கேட்டாராம். 'அழகிய கண்களையுடைய  இவர்களுடன் பொழுது போக்காமல் இருக்கமுடியுமா'ன்னு இவர் எதிர் கேள்வி கேட்க, 'இதைவிட அழகான கண்களை உனக்குக் காட்டட்டுமா'ன்னு  அவர் இவரை மலை மேல் கூப்பிட்டுப்போய்  வேங்கடவன்  சந்நிதிக்குள் நுழைஞ்சு,  ரொம்பவே  அழகான கண்களுடைய தன் உண்மை ரூபத்தைக் காட்டினாராம்.  அரவிந்த லோசனன்!  அதைக் கண்டு கிறுகிறுத்துப்போய்  தன் நினைவிழந்து கிடந்தவர் கொஞ்ச  நேரத்தில் கண் முழிச்சு, ஹரி ஹரி ஹரி ஹரி என்னும் பாடலைப் பாடியபடி மலையில் இருந்து இறங்குனதாகவும், அதுதான் அவர் பாடிய முதல்பாட்டுன்னும்கூட   ஒரு  கதை இருக்கு. அந்த முறைப் பெண்களில் ஒருவரான திம்மக்காவைத்தான் இவர் கல்யாணம்  பண்ணிக்கிட்டார்.  மனைவியும் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர். தெலுகு  மொழியில் முதல் பெண் கவிஞர்!  சுபத்ரா கல்யாணம் என்ற நூலை எழுதி இருக்காங்க. இவுங்க பிள்ளையான  திருமலாச்சார்யா, பேரன் சின்னய்யா  என்றவர்கள் கூட  தெலுகுமொழி கவிஞர்களா இருந்துருக்காங்க.  எல்லாம்  ஆன்மிக இலக்கியங்கள்தான்!  குடும்பமே... இப்படி  இருந்துருக்கு!   கொடுப்பினைதான்!
இப்பவும் இவுங்க பரம்பரைக்கு திருமலை வேங்கடவன் கோவிலின் பூஜை சமாச்சாரங்களிலும் கோவில் மரியாதைகளிலும் பாத்யதை இருக்கு!  ஹைய்யோ....  என்னவொரு கொடுப்பினை!
இதோ   ஊருக்குள்ளே வந்துட்டோம். போகும் வழியிலேயே  ரெண்டு யானைகள் நின்னு வரவேற்கும் கோவில் ஒன்னு இருக்கு.  சமீபத்தியக் கோவில். அப்புறம் பார்க்கலாமுன்னு  இன்னும்  பத்தடி போனால்  பழைய கோவில் ஒன்னு  இருக்கு.

 வாங்க கோவிலுக்குள் போகலாம்....

தொடரும்............:-)Monday, March 28, 2016

கறிவேப்பிலை இல்லைன்னா...... அது ஒரு குத்தமாய்யா? ? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 13)

தாயார் கோவிலாண்டை வண்டி நின்னதும் இறங்கி  டிக்கெட் கவுண்டரை நோக்கி ஓடறார் நம்மவர்.  நல்லவேளை திறந்துருக்கு. சீக்ர தரிசனத்துக்கு  ரெண்டு டிக்கெட்.  ஆளுக்கு அம்பதுன்னு நினைக்கிறேன். அவசரத்துலே எவ்ளவுன்னு கேக்கத்தோணலை.  இது தேவலைன்னு படுது. எது? அந்தப் பேருதான்.

ஸ்பெஷல் தரிசனமுன்னு  முந்தி சொல்வாங்க பாருங்க, அதுதான் சீக்ரன்னு ஆகி இருக்கு.  நாமென்ன அப்படி ஸ்பெஷலா, இப்படிச் சொல்லிக்கறதுக்கு? சீக்ர என்பதில் பொருளும் இருக்கே!  நேரக்குறைவானதால்  காசு கட்டி கடவுளை ஸேவித்தாறது.

டிக்கெட்டைக் கையில் ஏந்தி, மீண்டும் காக்கிச்சட்டைகளிடம்  உள்ளே போகும் வழி எதுன்னு விசாரிச்சதில்  கோவில் முன்வாசல் வழியா வாங்கன்னாங்க.  அங்கிருந்து  இடப்பக்கம் உள்ளே நுழைஞ்சதும் ஏற்கெனவே மக்கள்ஸ் தடுப்புக் கம்பி வரிசைகளின் வழியாக   உள்ளே வரும் கடைசி கட்டத்தில் நம்மை சேர்த்துவிட்டாங்க.

நமக்குமுன் ஒரு ஒருபத்து இருபத்தியஞ்சு பேர் நிக்க, செக்யூரிட்டிச் செக்கிங் செஞ்சு  ஒவ்வொருத்தரையா உள்ளே அனுப்பும் இடத்தில் திடீர்னு ஒரு கசமுச.  ஒரு பெண் பேந்தப்பேந்த முழிச்சபடி நிக்க,  செக்யூரிட்டி ஆஃபீஸர் கையில் செல்ஃபோன். பெண்ணுக்கு அருகில் இருப்பவர் (வீட்டுக்காரரா இருக்கணும்) கை ஓங்கி அடிக்கறதுபோல நின்னுக்கிட்டு கத்தறார்.

"எத்தனைதடவை சொன்னேன், ஒன்னும் கையிலே கொண்டுவரக்கூடாதுன்னு...."

"நானும் எல்லாப் பையையும் வச்சுட்டுத்தான் வந்தேன். "

" அப்ப இது?"

"இதை மட்டும்தான் கொண்டாந்தேன். கையிலே வேறொன்னுமில்லை..... "

கையை விரிச்சுக்குக்  காமிக்குது அந்தம்மா.

பாருங்க இந்த செல்ஃபோன் எப்படி மக்களை அடிமையாக்கி வச்சுருக்குன்னு. எல்லாத்தையும் துறந்தாலும் இதைத் துறக்க முடியாதுன்னு இடுப்பில் செருகி வச்சுருந்துருக்கு அந்தம்மா....

உள்ளே அனுப்பமுடியாதுன்னு கண்டிப்பா செக்யூரிட்டி சொல்ல, கோவத்தோடு  'எல்லாரும் வாங்க. நாளைக்கு வரலாமு'ன்னு  அந்த மனுஷர் சொன்னதும்  மந்திரம் போட்டாப்போல நம்முன்னால் இருந்த அத்தனை பேரும் வெளியே போனாங்க. ஒரு பெரிய குடும்பமோ இல்லை ஒரே ஊரில் இருந்து குழுவா வந்தாங்களோ  தெரியலை... பாவம்.   எவ்ளோ நேரம் வரிசையில் நின்னு  காத்திருந்தாங்களோ...........

எங்கே இன்றைக்கு தரிசனம்  கிடைக்காதோன்னுதான்  இருந்தேன்.  ஏழரை முதல் ஒன்பதுவரைதான் இந்த ஸேவை.  மணி வேற எட்டரை. கூட்டமோ அதிகம்.  அப்படி முடியலைன்னா நாளைக்குக் காலை ஊரைவிட்டுக் கிளம்புமுன் வந்துட்டுப் போகலாமுன்னு மாற்றுத்திட்டம் கைவசம்
படங்கள்: நம்ம வீட்டில் சாமி அறையில்.
நம்மை உள்ளே அனுப்புனாங்க. போய் தாயாரைக் கண்டோம். ஆனாலும்  நடந்த சம்பவம் கொஞ்சம் மன உளைச்சலாத்தான் இருந்துச்சு. எவ்ளோ ஆசையோடு காத்திருந்தாங்களோ என்னமோ.... பேசாம அந்தம்மாவும், கணவரும் மட்டும் வெளியேறி இருக்கலாம். எதுக்கு  எல்லோரையும் வெளியே இழுத்துக்கிட்டுப் போனாரோ........


நூத்தியெட்டு வைணவ திவ்யதேசக் கோவில்களில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுமொன்னுன்னு தனியாச் சொல்ல வேண்டியதில்லை. பனிரெண்டு  ஆழ்வார்களில் மதுரகவி, தொண்டரடிப்பொடி தவிர மற்ற  பத்துப்பேரும்  போற்றிப் பாடிய தலம் இது!

திருப்பதின்னு சொன்னால் இது ஒரு கோவில் மட்டுமில்லை. மொத்தம் நாலு கோவில்களையும் தரிசிச்சால்தான் திருப்பதி போய்வந்த பலன் கிடைக்குமாம்.  முதலில் கீழ்த்திருப்பதி அண்ணன் கோவிந்தராஜரையும்,  அடுத்து  மலைமேலுள்ள புஷ்கரணி அருகில் இருக்கும் ஆதிவராஹரையும், அதன்பின்  ஆனந்தவிமானத்தின் கீழ் எழுந்தருளி இருக்கும்  வேங்கடாசலபதியையும்,  அப்புறம் மலை இறங்கி வந்து திருச்சானூர் பத்மாவதித் தாயாரையும் ஸேவிக்கணும் என்பதே சம்ப்ரதாயம்.

நான்  ஒரு  இடும்பி என்பதால் இந்த வரிசையை அப்பப்ப மாற்றி வச்சுக்குவேன். நானும் இதுவரை புஷ்கரணி வராஹரை தரிசிக்கவே இல்லை  :-(  ட்ராவல்ஸ் வண்டிகூட  திருப்பதின்னதும் நேரா மலைக்குக் கொண்டுபோய் விட்டுடறாங்க பாருங்க. திரும்பி வரும்போது தாயார் தரிசனம் உண்டுன்னாலும் பல சமயங்களில் அண்ணனை விட்டுட்டுப் போகும்படியாக ஆகிருது.

நான்  ஸ்ரீநியோடு டெர்ம்ஸ் சரி இல்லைன்னு  அவனை விட்டுட்டு அண்ணனையும்  தாயாரையும் ஸேவிச்சுக்கிட்டேன்.

ரொம்ப வருஷத்துக்கு முன்னே ஒரு சமயம்  தோமால ஸேவைக்கு  இடம் கிடைச்சு திருப்பதிக்குப் போனபோது, ராத்திரி ஒன்னரைக்குக் கோவிலில் இருக்கணும் என்பதால்   சாயங்காலமா திருப்பதி போய் இறங்குனோம். மலைக்குப் போறதுக்கு முன்னாடி தாயாரை கும்பிட்டுக்கலாமுன்னு போறோம். 

கோவிலுக்குள் நுழைஞ்சப்ப தாயார் ஊஞ்சல் சேவை. மெல்லிய வெளிச்சத்துலே தகதகன்னு மின்னும் கொட்டைப்பாக்கு சைஸ் வைரமாப் போட்டுண்டு ஊஞ்சலில் இருந்து லேசா ஆடி ஆடி சேவை சாதிக்கிறாள். அந்த ஜொலிப்பு அப்படியே அள்ளிக்கிட்டுப் போனதென்னவோ நிஜம். இன்னும் உத்துப் பார்த்துருந்தால் பார்வை போகும் அபாயம் இருக்கு:-))))) தாயாரைக் கண்டதை   ஒருவேளை மறந்தாலும்  கொட்டைப்பாக்கை மட்டும் மறக்கவே முடியலைன்றது கொசுறுத்தகவல்:-)

தாயாரை வணங்கியபின் மற்ற சந்நிதிகளுக்குப் போனோம். பலராமர்,கிருஷ்ணன் சந்நிதியில் ஒரு கும்பிடு. கிருஷ்ணாவதாரக்  காலத்தில் ஒரு சமயம் பலராமர் தவம் செய்ய இடம் தேடுனபோது, இந்த இடத்தைக் காமிச்சு,  இது புண்ணியபூமின்னு காமிச்சுக்கொடுத்தாராம் கிருஷ்ணர். (அப்போ இங்கே தாயாருக்குக் கோவில் இல்லை. வேங்கடவனே  இங்கே  இல்லையே!)

இன்னொரு சந்நிதியில்  ஸ்ரீதேவி, பூதேவியுடன் சௌந்திரராஜர்!
அழகர் சந்நிதியில் நம்ம ஸ்ரீநிவாஸன். மலைமேலிருக்கும் அதே கோலம்! அச்சு அசலா இருக்கு!  நிம்மதியா நம்மிஷ்டம்போல் நின்னு  கும்பிடலாம்.  இங்கே நம்ம பெயருக்கு அர்ச்சனை கூட செஞ்சுக்கலாம். போனமுறை நமக்கு லபிச்சது.  இந்தமுறை கொஞ்சம் கூட்டம் இருந்துச்சு. மேலும் கோவில் மூடற நேரமாகிருச்சுன்னு கொஞ்சம்  அவசரத்தில் எல்லோரும்!

இப்பவும் தினம் இரவில்  பத்மாவதியை சந்திக்க , வேங்கடத்தான் வந்து போவதாக ஒரு ஐதீகம் உண்டு. ஆமாம்.... எதுக்காகக் கட்டுனவளை வேற இடத்தில் தங்க வைக்கணும்? தினமும் வந்து போகணும்?

வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணனும்  மஹாலக்ஷ்மியும் தனிமையில் இருக்கும் நேரம் அங்கே வர்றார் ப்ருகு மகரிஷி. சாந்தமான சாமி யார்னு தெரிஞ்சுக்க வந்தாராம். இதுவும் நாரதரின் சிண்டுமுடியும் வேலைகளில் ஒன்னுதான்.  வந்த முனிவரைப் பெருமாள்  கண்டுக்கலை.  கோபத்தில் பெருமாளின் மார்பில் எட்டி உதைச்சார் முனிவர்.  அப்போ 'ஐயோ    எட்டி உதைச்சதில் உம்  பாதத்துக்கு வலிச்சுருக்குமே'ன்னு  மகரிஷி பாதம் பற்றிக் கவலைப்பட்டாராம் விஷ்ணு. இவர்தான் ரொம்ப சாந்தமான சாமின்னு  சர்ட்டிஃபிகேட் கொடுத்துட்டு  மகரிஷி கிளம்பிப் போயிட்டார்.

அவர் அந்தாண்டை போனதும் இங்கெ குடும்பச் சண்டை ஆரம்பிச்சது. 'நீர் ஆனானப்பட்ட   பெரிய ஆள்னு நினைச்சேன். ஆனால் உம்மை ஒருவர் எட்டி உதைக்க இடம் கொடுத்துட்டீரே. அதுவும் நான் எப்போதும் உறைந்திருக்கும் திரு மார்பில்! என்னையே நேரடியா உதைச்சவரை தண்டிக்காம சும்மா விட்டுருக்கலாமா? இது எனக்கு ஏற்பட்ட பெரிய அவமானம். இதைத் தாங்கிக்கிட்டு என்னால் உம்மோடு குடித்தனம் நடத்தமுடியாது'ன்னு விடுவிடுன்னு கிளம்பிப்போய்   பூலோகத்துக்கு வந்துட்டாங்க.

பலகாலம் தவம் செஞ்சு கோபம் ஒருமாதிரி தணிஞ்சதும் தன்னுடைய அம்சமா ஒரு குழந்தை ரூபமெடுத்து இந்தப் பகுதியை அரசாண்டுக்கிட்டு இருந்த  ஆகாச ராஜன் கண்ணுலே ஆப்ட்டாங்க. தாமரை மலர் மேல் கிடந்துருக்குக் குழந்தை. பதுமத்தின் மேல் இருந்த குழந்தைக்குப் பத்மாவதின்னு பெயர் வச்சு வளர்த்து ஆளாக்கி இப்போக் கல்யாண வயசில் பொண்ணு நிக்குது.

இங்கே மஹாலக்ஷ்மியை விட்டுப்பிரிந்த நாராயணன் மனம் வெம்பி, அவளைத் தேடிக்கிட்டு  ஸ்ரீ விட்டுப்போன சீனிவாசன் என்ற பெயரில் பூலோகத்துக்கு வந்து சேர்ந்தான். காட்டுலே அப்போ ஒரு அம்மா இவனைப் பார்த்ததும்  அப்படியே பாசமழை பொழிஞ்சுக்கிட்டு ஓடிவந்து  தன் மகனா ஏத்துக்கிட்டாங்க. இவுங்க பெயர் வகுளா தேவி.  போன யுகத்துலே கிருஷ்ணாவதார காலத்துலே இவுங்கதான் யசோதா. அந்தப் பூர்வஜென்ம வாசனை  இன்னும் இருக்கு!

ஒரு நாள்  யானை வேட்டையாடப்போன சமயம் தப்பி  ஓடும் யானையைத் துரத்திக்கிட்டுப் போனப்ப பத்மாவதியைப் பார்க்கிறான். அவளும் இவனைப் பார்க்கறாள். அம்புட்டுதான்  தீ பத்திக்கிச்சு.

என்ன இருந்தாலும்  அரசகுமாரி இல்லையா....    'அரண்மனைக்கு வந்து பொண்ணு கேளு'ன்னுட்டு  கண்ணால் சேதி அனுப்பிட்டுப் போயிட்டாள். இவளுக்கும் ஒரு பூர்வஜென்ம கதை இருக்கு.  ராமாவதார காலத்தில்  ராமனைக் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்டவள்  இந்த வேதவதி.  அவனுக்கும் ஆசைதான் போல!

நான் இப்போ ஏகபத்னி விரதன். அதனால்  வேறொரு யுகத்தில் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு வாக்குக் கொடுத்துட்டான். அவள்தான்  இப்போ பத்மாவதியா அரண்மனையில் இருக்காள்.

இந்தப் புராணங்களில் வரும் கதைகளில் எப்பவும் எனக்கொரு வியப்பு என்னன்னா.... எல்லாத்துக்கும் ஒரு பூர்வ ஜென்ம தொடர்பு இருக்கும். எப்படியெப்படியோ யுகங்களைக் கடந்தெல்லாம்  கொண்டு போய் கடைசியில்  ஒன்னுக்கொன்னு சம்பந்தம் இருப்பதா கோர்த்துவிட்டுருப்பாங்க.

அம்மாவிடம் சொல்லி  அரண்மனைக்குப் போய் பொண்ணு கேக்கச் சொன்னான் சீனிவாசன். அம்மாவுக்கு விவரம் ஜாஸ்தி. சட்னு ஒரு மலைக்குறத்தி வேஷம் கட்டுச்சு. குறி சொல்லும் தொழிலுன்னு சொல்லிக்கிட்டு அங்கே போச்சு.  அப்பெல்லாம் கடவுள் அருளால் குறி சொல்றவங்க  சொல்றது எல்லாமே பலிச்சுக்கிட்டு இருந்த காலம்.  ஆளுங்க மனசிலும் நேர்மை இருந்த நாட்கள் பாருங்க.

ராஜா வூட்டுலே போய் குறி சொல்லவான்னு கேட்டப்ப, வா, உள்ளேன்னு கூப்ட்டுப்போய் மகள் முன்னே நிறுத்தி  இவளுடைய வருங்காலம் எப்படி இருக்குன்னு பார்த்துச் சொல்லுன்னு சொன்னார் அரசர்.  அரசரா இருந்தாலும் வயசுப்பொண் கல்யாணத்துக்கு நிக்கும்போது  மகளுடைய எதிர்காலம் பற்றிக் கவலை வர்றது சகஜம்தானே?

பொண்ணைப் பார்த்ததும் ரொம்பப் பிடிச்சுப்போச்சு வகுளாதேவிக்கு. கல்யாணத்துக்கான நேரம் நெருங்கி வந்தாச்சு. இவளைக்  கட்டப்போறவன் இப்படி இருப்பான், அப்படி இருப்பான்னு மகனுடைய அழகை  வர்ணிச்சுட்டு,  அப்பேர்க்கொத்த  அழகனான என் மகனுக்குத்தான் இவள் வாழ்க்கைப்படணுமுன்னு  விதி இருக்குன்னு சொல்றாள்.  ராஜாவும்  பொண்ணாண்டை, என்னம்மா சொல்றே....  சம்மதமான்னு கேட்க, பொண்ணும் சரின்னு  சொல்லிருச்சு.

'மகளுக்கு ஓக்கேன்னா எங்களுக்கும் ஓக்கே. என்ன ஒன்னு... எங்க அந்தஸ்த்துக்குத் தகுந்தாப்லெ கல்யாணம் செஞ்சு கூட்டிப்போங்க'ன்னுட்டார். பழம் நழுவி பாலில் விழுந்துச்சு!

அப்பெல்லாம் கல்யாண செலவு பூராவும் மாப்பிள்ளை வீட்டார்தான் செய்யணும்.  ஆனால்... இது எப்போ உள்ட்டா ஆச்சுன்னுதான் தெரியலை.

போனகாரியம் வெற்றின்னு வந்து சொன்னதும் இப்போ தரித்திர நாராயணனா இருக்கும் சீனிவாசனுக்கு  காசுக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. செல்வத்துக்கு அதிபதியான குபேரன்கிட்டே போய்  காசுகொடுன்னு கேக்க, 'அவன் இப்படி  இலவசமா எல்லாத்தையும் தூக்கிக் கொடுக்க இதென்ன ஊரான் சொத்தா?  கடனா வேணுமுன்னா தர்றேன். ஆனால் வட்டிக்குத்தான் தரமுடியும்.   எப்படி வட்டி கட்டப்போறே'ன்னு கேக்கறார். (அதானே... குபேரன் என்ன இந்திய வங்கிகளுக்கு  எல்லாம் உரிமையாளனா ...   மல்யாவுக்கு தானம் செஞ்சாப்லெ ஒன்பதாயிரம் கோடியைத் தூக்கிக்கொடுக்க?)

"நீங்க சொன்ன அதே ஊரான் சொத்தை வச்சுதான்.  கல்யாணம் முடிச்சு  ஒரு கோவிலில் சாமியா நின்னுருவேன். கேட்டதைத் தருவேன்னு  என் பேர் பிரபலம் ஆனதும் சனங்க  தங்கள் கோரிக்கை நிறைவேறணுமுன்னு  எனக்குக் காணிக்கை தருவாங்க. அதையெல்லாம் கலியுகம் முடியும்வரை உமக்கு வட்டியாகவே தந்துருவேன்"
இந்தப் படத்தைத் தொடர்ந்து கீழே இருக்கும் மற்ற படங்களும் நாம் தங்கி இருக்கும் ஹொட்டேல் ப்ளிஸ்ஸில் இருக்கும் ஆர்ட் கேலரியில் இருந்தவை.


"சனம் நம்புமா?"

"அதெல்லாம் நம்பவச்சுருவொம்லெ!"

"அப்ப அசல்?"

'அது ஒன்னும் பிரச்சனை இல்லை. கல்யாணம் கட்டுறது  மஹாலட்சுமியைத்தான்.  அவுங்ககிட்டே கேட்டால்  புருசன் கடனை  அடைச்சுட மாட்டாங்களா என்ன'ன்னார்.
கடன் வாங்கி கல்யாணத்தை ஜாம்ஜாமுன்னு நடத்தினார் சீனிவாசன்.  அதுக்குப்பிறகுதான்   அந்த ஆறுமாசத் தேன்நிலவு எல்லாம்.

இப்படியெல்லாம் காதலிச்ச பொண்ணைக் கட்டுனவர்  ஆறு மாசங்கழிச்சு  மலையேறி தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிப்போறார். இவுங்க கிளம்புன சமாச்சாரம் தெரிஞ்ச  ஆகாசராஜன்,  தன் பொண்ணுக்கு சீர்வரிசையா, நகை நட்டு பண்டம் பாத்திரமுன்னு  ஆயிரக்கணக்கான வகைகளை  அரண்மனையில் இருந்து அனுப்பி வைக்கிறார்.

எல்லாத்தையும் நோட்டம் விட்ட வகுளாதேவி,  கல்யாணச்சீர் வரிசையில் கருவேப்பிலை இல்லையேன்னு குத்தமாச் சொன்னாங்க.  இப்ப மாமியார் ஸ்தானம் இல்லையோ?  அதுவும் அவுங்கதானே இன்னைக்கும்  திருமலைக்கோவிலில் மடப்பள்ளி இன்சார்ஜ்! சமையல்காரருக்குக் கருவேப்பிலைமேல் கண் சகஜம்தான் .

'அச்சச்சோ.... எப்படி விட்டுப்போச்சுன்னு தெரியலை. நான் போய் எடுத்தாறேன்'னு  விறுவிறுன்னு மலை இறங்கி வந்தவங்கதான் பத்மாவதி.  'இருட்டறதுக்குள்ளே வந்துரு. இல்லாட்டி அங்கேயே தங்கிரு'ன்னாராம் காதல் கணவர். அப்பெல்லாம் ஒரே காடா இருந்த இடம்தானே இந்த ஏழுமலை. எதாவது காட்டு மிருகம் வந்து அடிச்சுப்போட்டுடப் போவுதுன்னுதான் அப்படிச் சொல்லி இருப்பாருன்னு நம்பலாம், இல்லே?
இருட்டிப்போச்சுன்னு திரும்ப மலைக்குப் போகாம இங்கேயே தங்கிட்டாங்க. தனிக்கோவில், மாலை மரியாதை, உற்சவம் எல்லாம்  இங்கேயே அட்டகாசமா நடந்துக்கிட்டு இருக்கு! ஐயாதான் தினமும் வந்து போறார் இப்போ :-)
நம்ம திருப்பதி திருமலை தரிசனம் இப்படித்தான் இந்தமுறை நடந்துச்சு.
அலர்மேல் மங்கை என்ற பெயர்  சூப்பரா இருக்குல்லே! எனக்கு ரொம்பப் பிடிக்கும். மகளுக்கும் ஜாதகப் பெயர்  இதுதான். 

தொடரும்..........:-)


Friday, March 25, 2016

மச்சம் வச்சுக்கிட்டா அண்ணன். மச்சத்தை எடுத்துட்டா... தம்பியா? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 12)

சரியா மாலை மணி ஆறு.  அலர்மேல் மங்காபுரம் வந்து சேர்ந்தாச்சு. ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் இருந்து அதே பதினைஞ்சு கிமீதான். திருச்சானூர் என்ற பெயர்தான் எல்லோருக்கும் சட்னு தெரிஞ்சமாதிரி இருக்கும். பத்மாவதி தாயார் குடிகொண்டுள்ள ஊர்.  இவளோ அலர்மேல்மங்கை. தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பெண்தான் பத்மாவதி. பதுமம் என்றாலும் தாமரைதான் கேட்டோ!  இந்த அலர்மேல் என்பதுதான் அலமேலுன்னு மருவி இருக்கு.
கலகலப்பான கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்ததும்,  ஏழெட்டுப்படிகள் ஏறி  கோவில் வளாகத்துக்குள் நுழையறோம்.  கம்பித்தடுப்பு வரிசைகளுக்குள் கூட்டம் அலைமோதுது. தரிசனத்துக்கு நிற்கும் வரிசை. அம்பது ரூ கட்டினால்   வரிசையில் காத்துக்கிடக்காமல்  கொஞ்சம் சீக்கிரமா  கோவிலுக்குள்ளே போகலாம்.  காசு கொடுத்து சாமி தரிசனம் கூடாதுன்னாலும்....   நமக்கு நேரக்குறைவு என்பதால் போகட்டும் போன்னு சமாதானம் செஞ்சுக்க வேண்டித்தான் இருக்கு.  டிக்கெட் கவுண்ட்டர் மூடி இருக்கேன்னு  வரிசையை ஒழுங்குபடுத்தும் காக்கிச்சட்டைகளிடம் கேட்டால்,  ஏழரைக்குத்தான் டிக்கெட் தருவாங்களாம்.இன்னும் ஒன்னரை மணி நேரம் இருக்கே. பேசாம கோவிந்தராஜரைத் தரிசனம் செஞ்சுக்கிட்டு வந்துரலாமேன்னு நம்மவர் சொன்னதால்   வாசலில்  மணிமாலைகள் வித்துக்கிட்டு இருந்த ஒரு முதியபெண்மணியிடம் ஒரு முத்துமாலை மட்டும் நம்ம ஜன்னுவுக்கும் பக்கத்தில் ரங்கோலி போடும் கோல  அச்சு மூணு,  வீட்டுக்கும் வாங்கிக்கிட்டு கோவில் வளாகத்தை விட்டு வெளியே இறங்கினால் பத்மாவதி தாயார் நமக்காக யானையை அனுப்பி இருக்காங்க.
நேரா கீழ்த்திருப்பதி போயிடலாமுன்னு  சீனிவாசனிடம் சொன்னதும்,  பார்க்கிங் கிடைப்பது கஷ்டம் என்றவர்,  பீமா ஹோட்டலில் பார்க்கிங் இருக்கு. ஆனால்.... அங்கே எதாவது  சாப்பிட்டால்தான் கார் நிறுத்திக்கலாம் என்றதும், அது ஒன்னும் பிரச்சனையே இல்லை.  எதாவது  டிஃபன் காபி சாப்பிட்டால் ஆச்சுன்னோம். மாயா ரெஸ்ட்டாரண்ட். ஸ்நாக்ஸ் வகையில்  பஜ்ஜி வடை போண்டா  இருக்கான்னால் இப்ப மணி ஆறரை ஆகிருச்சு. டிஃபன் ஐட்டங்கள்  டைம் முடிஞ்சுருச்சுன்னு  சொன்ன பணியாளர் கொண்டுவந்து கொடுத்த மெனு லிஸ்ட்டில் சீன & வட இந்திய வகைகள் தான் இருக்கே  தவிர நமக்கு ஒன்னும் ஆப்டலை. வெறும் காஃபி  குடிச்சுட்டு, கெமெரா செல்ஃபோன் எல்லாத்தையும்  வண்டியில் வைக்கச் சொல்லிட்டு  நாங்கள்  கோவிலுக்குப் போயிட்டோம்.
இந்த ஊர் முழுக்க முழுக்கப் பெருமாளையே நம்பி இருக்கு! பக்தர்களும்  கணக்கிலடங்காம தினம் தினம் வந்துக்கிட்டே இருக்காங்க. ஊரை அழகு படுத்தும் சமாச்சாரங்களும் சிலைகளும் அங்கங்கே கண்கொள்ளாக் காட்சிதான்!

போனமுறை (2011) வந்தப்பக்கூட  இங்கே புண்டரீகவல்லித் தாயாரை தரிசிக்கலை. கையில் பத்து ரூ மட்டும் எடுத்துக்கிட்டுக் கோவிலுக்குள் நுழைஞ்ச தைரியம்!  தரிசன டிக்கெட் 20 என்றதால் திரும்பி வந்துட்டேன்.  இந்தமுறை கையில் (கோபால் பையில்)  கொஞ்சம் காசு அதிகமாகவே இருக்கு. ஆனால்...  'உன் காசு வேணாம், போ'ன்னு தாயார் இலவச சேவை சாதிச்சாங்க. மஹாலக்ஷ்மி!
அடுத்தபக்கம் மூலவரை தரிசிக்கப்போனால்... என்னவோ புதுமாதிரி ஏற்பாடு. இலவச தரிசன வரிசையில் நின்னு கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து போறோம். வலப்பக்கத் தூண்களில் இருக்கும்  சிற்பங்களையும், சிலவற்றின் சம்பவக் கதைகளையும் நம்மவருக்குச் சொல்லிக்கிட்டே போனதில்  அலுப்பு தெரியலை. அடடான்னு  எதையாவது சுட்டிக் காட்டினோமுன்னா...  அதுக்கான கதையைச் சொல்லணும். ஏற்கெனவே நூறு முறை சொன்ன கதைகளாத்தான் இருக்கும். ஆனால்  இந்தக் காதில்கேட்டு நேரா அந்தக் காதுவழியா வெளியே போயிரும்போல.
ஒரு சந்நிதியை மட்டும் பார்த்துட்டு வெளிவரமுடியாதபடி கயிறு கட்டி ஒரு அரேஞ்ச்மெண்ட். எக்ஸிபிஷனில் ஒவ்வொரு ஸ்டாலாக வரிசையாப் பார்த்துக்கிட்டு வர்றதைப்போல  நாலு சந்நிதிகளைப் பார்த்துட்டுத்தான் வெளியே  வரமுடியும்.
கோவிந்தராஜர், கிடந்த கோலம். பாம்புப் படுக்கை!  காலடியில் அரக்கர்கள் மதுவும் கைடபரும்.(மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே....  நினைவிருக்கோ?)
அவரைக் கும்பிட்டபிறகு அடுத்த ஸ்டால்களில்  நம்ம பார்த்தஸாரதியும் அவர் கூட இருக்கும் ருக்மிணி சத்யபாமா!  (வேறெங்கேயும்  இப்படி பார்த்த நினைவில்லை எனக்கு!) கல்யாணவெங்கடேஸ்வர் ஒரு சந்நிதியில் இருக்கார். ஆண்டாள் சந்நிதியில் பிரஸாதமா அக்ஷதை கிடைச்சது.  அப்புறம் நம்ம ஆஞ்சி, பெரியதிருவடின்னு சகலரையும் சேவிச்சுக்கிட்டே கயித்தை விட்டு வெளியே வர்றோம்.

சந்நிதிகளில் பொதுவான விஷயமுன்னா  ஒன்னே ஒன்னுதான்..... 'தக்ஷிணை போடு. தக்ஷிணை போடு'ன்னு எல்லா மொழிகளிலும் சொல்லிக்கிட்டே இருக்காங்க. என்ன ஆஸ்வாசமுன்னா... எவ்வளவுன்றதையும் அவுங்களே சொல்லிடறதால் நமக்குப் பிரச்சனை இல்லை. பத்து ரூபா, பதி ரூபாய்லு, ஹத்து ருப்யா, தஸ் ருப்யா....

திருமலை கோவில் வருமுன்னேயே இங்கே கீழ்த்திருப்பதியில்  சின்ன அளவில் கோவிந்தராஜர் கோவில் வந்துருக்கு. 1500 வருசங்களுக்கு  முன்னே! அதனால் இவர் ஸ்ரீநிவாஸனுக்கு அண்ணன்! இவரைக் கும்பிட்டு, இவர் அனுமதி வாங்கிக்கிட்டுத்தான் மலையேறணுமுன்னு ஒரு சம்ப்ரதாயம் இருக்கு.
அண்ணன் என்ற ஹோதாவில் இருப்பதால், மேலே மலையில்  தம்பிக்குக் கிடைக்கும் எல்லா காணிக்கைகளையும் தினசரி  மாலை கீழே கொண்டுவந்து  இவரிடம் கணக்கு காமிச்சுட்டுத்தான் கஜானாவுக்கு அனுப்பணும் என்பது வாடிக்கை. இவர்  அந்தக் கால கணக்குப்பிள்ளை.. கணக்கு சரியா இல்லைன்னா அம்புட்டுதான்.

காலப்போக்கில் இந்த  சம்ப்ரதாயமும் மாறிப்போச்சு. வாடிக்கை மறந்ததும் ஏனோ? அப்போ அவ்வளவாக் கூட்டம் இல்லை.  இப்ப மக்கள் வெள்ளம் பெருகிப்போய்  தினசரி வசூலே கோடிகளைத் தாண்டும்போது  அவ்ளோ காசையும் மூட்டைக் கட்டிக்கொண்டுவர்றது  கஷ்டமில்லையோ.... அதனாலே.... அங்கேயே எண்ணி முடிச்சுக் கணக்குகளை மட்டும்  இங்கே தினசரி கொண்டு வந்து காட்டிடறாங்க. (காசைக் கண்ணுலேயே காமிக்கறதில்லைபா. அதான் போல அது எப்படி இருக்குமுன்னு தெரிஞ்சுக்கப் பலமொழிகளில் நமக்கு ஓதறாங்க பட்டர்ஸ்!)

'இவரும் அவரும் பெருமாள்தானே, அதெப்படி அண்ணன் தம்பியா இருக்காங்க?'ன்னார் நம்மவர். 'மச்சம் வச்சுக்கறதைப் போலவா'ன்னதும்  அப்படிக்கூட  வச்சுக்கலாம்.  இடி வாங்குனது தம்பி. தப்பிச்சுக்கிட்டவர் அண்ணன்.  அதென்ன இடி? மோவாயில் இடிவாங்கித்தானே  பச்சைக்கற்பூரமும் துளசிச்சாறுமா தினம் சாத்தியாறது இல்லையோ? தயாசிந்து பற்றி விளையாட்டாத் தெரிஞ்சுக்கணுமா...  இங்கே பாருங்களேன். நம்ம 'சிஷ்யகேடி'யின் பதிவுதான்:-)


கிருமிசோழன்  சிதம்பரம் கோவிந்தராஜரைக் கடலில் போட்ட  சமாச்சாரத்தை உலகத்தார் அனைவரும் அறியும் வண்ணம்  'இறை நம்பிக்கை இல்லாதவர்'  சினிமா எடுத்துக்  காமிச்சது லேசில் மறக்கக்கூடியதா?  பெருமாளும் தானும் ஒன்னு என்றதைப்போல அதுலே பத்து அவதாரங்கள் வேற! போகட்டும்........  சாமி இல்லைன்னு சொல்றவங்களுக்குத்தான் எப்பவும் சாமி நினைப்பு! மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே :-)
இப்ப எதுக்கு இந்தக் கதைன்னா..........   சம்பவம் நடந்ததும், பெருமாள் பக்தர்கள் சிலர்  சிதம்பரத்தில் இருக்கும் உற்சவரைக் கடத்திக்கொண்டு வந்து  இங்கே திருப்பதியில் வச்சு  ரகசியமா கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க. சேதி  நம்ம ராமானுஜர் செவிக்குப் போயிருக்கு.

அவருடைய சிஷ்யரும், திருமலைப் பகுதியை அப்போ அரசாண்டுக்கிட்டு இருந்தவருமான யாதவராஜாவிடம் வந்து  சமாச்சாரத்தைச் சொல்லி, இந்தத் தில்லைப்பெருமாளுக்கு அதே போல ஒரு கோவில் கட்டி இங்கே வழிபடணுமுன்னு சொன்னதும் அதே போல ஆச்சு. புதுசா மூலமூர்த்தியை நிர்மாணிச்சு, ஏற்கெனவே இங்கே வந்துட்ட உற்சவர்களுடன் சேர்த்தி பிரதிஷ்டை செஞ்சு, வழிபாட்டு முறைகளையும் சொல்லிக்கொடுத்தார் ஆச்சாரியார்.

கோவிலின் அபிவிருத்திக்காக  மஹாலக்ஷ்மி அவதாரமா இங்கே ஒரு ஆண்டாளையும் பிரதிஷ்டை செஞ்சவர்,  மேலே மலையில் நடக்கும் அத்தனை உற்சவங்களும் இங்கேயும் நடத்தணுமுன்னு  ஏற்பாடும் செஞ்சுடார். அதன்படியே இப்பவும்  அங்கே எப்படியோ அப்படியே இங்கேயும் நடக்குது.
 இதையெல்லாம் தேவஸ்தானம் பொன்(போன்ற ) தகட்டில் பொறிச்சு வச்சுருக்கு, பாருங்க. (படங்கள்: போன பயணத்தில் எடுத்தது. பகல் நேரத்தில் போயிருந்தோம்)

மேற்படி சந்நிதிகள் தவிர  சக்கரத்தாழ்வார்,  ஸ்ரீ ராமானுஜர், திருமலை நம்பி, அனந்தாழ்வார் சந்நிதிகளும், ஸ்ரீகோதண்டராமர், நரசிம்ஹர் சந்நிதிகளும் இருக்கு. நல்லாவே இருட்டிப்போச்சு. நமக்கோ அங்கே தாயாரோடு ஏழரைக்கு அப்பாய்ன்ட்மெண்ட் இருக்கேன்னு மணியைப் பார்த்தால் எட்டாகப்போறது.

அரக்கப்பரக்க அலர்மேல் மங்கையைப் பார்க்க ஓடறோம்....

தொடரும்........:-)Wednesday, March 23, 2016

எனக்கும் ஸ்ரீநிவாஸனுக்கும் இப்போ ஒரு அஞ்சு வருசமா டெர்ம்ஸ் சரி இல்லை. ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 11)

பேச்சு வார்த்தை அவ்வளவாக் கிடையாது.  வழக்கம்போல் அவன் வாயத்திறக்க மாட்டான்.  கல்லுளிமங்கன்!  நான்? சும்மா அப்படி லேசில் விடமுடியுமா? அப்பப்ப அவனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனைதான்...
விவரம் இங்கே மூணு பதிவுகள். முதல்பதிவின் சுட்டி இது. நூல்பிடிச்சுப்போய்ப் பாருங்களேன், நேரம் இருந்தால்!  (முக்கிய சமாச்சாரம் அங்கே இருக்கு!)அண்ணன் வீட்டுலே பலகாரங்களை உள்ளே தள்ளிக்கிட்டே பயணத்திட்டம் பற்றிப் பேசிக்கிட்டு இருந்தப்ப, மேற்படி சமாச்சாரத்தை நினைவில் வச்சு  (ஹூம்... மறந்தால்தானே  நினைவில் கொண்டுபோய் வைக்க!) இன்னும் கொஞ்சம் அர்ச்சனை செஞ்சுக்கிட்டு இருந்தப்ப, பொறுக்கமுடியாத அண்ணி, 'பேசாம சீனிவாச மங்காபுரம் போயிட்டு வாங்க'ன்னாங்க.

அட! இது என்ன புதுசான்னு  கண்கள் விரியக் கேட்டேன்.  இதுவரைக்கும் போகலையான்னு அண்ணனுக்கு வியப்பு. எப்பவும்  அலமேலுமங்காபுரம் போறது தான் வழக்கம் எனக்கு.  அதுவும் சம்ப்ரதாயப்படி முதலில் தாயாரைப் பார்க்காம  அப்பனை நோக்கியே ஓடுவேன். அதுக்குத்தான் நல்லாக் கொடுக்கறானே நாலு போடு மண்டையில் போட்டு:-(
அதனால்தான் 'பட்டது போதுமுன்னு பொங்கி எழுந்தாச்'. இனி உனக்கும் எனக்கும் சங்காத்தம் இல்லை போ.........

இடவிவரம் கேட்டு வச்சுக்கிட்டேன். காளஹஸ்தியில் இருந்து கிளம்பி  திருப்பதிக்குப் போய்க்கிட்டு இருக்கோம். தூரம் என்னவோ ஒரு  37 KM தான்.  போறவழியில்  புள்ளையார் ஒருவர் லிஃப்ட் கேட்டு ரோடோரம் உக்கார்ந்துருக்கார். பாவமாத்தான் இருக்கு.  நம்ம வண்டியில் இடமில்லை. பத்துநாள் தலையில் தூக்கி வச்சு ஆடவும் வேணாம். அப்புறம் இப்படி ரோடில் கடாசிட்டுப்போகவும் வேணாம் :-( ப்ச்.......
இன்னும் கொஞ்சதூரத்தில் மெயின் ரோடுலே இருந்து பிரியும் கிளைச்சாலையில் ஒரு  ஸ்தூபியும், அலங்கார தோரணவாயிலுமா இருக்கு. என்ன ஏதுன்னு நிதானிக்கறதுக்குள்ளே  நம்மவண்டி நேஷனல் ஹைவேயில் விர்ரிட்டுக்கிட்டுப் போயிருச்சு.  அந்த அவசரத்திலும்  க்ளிக்கி வச்சது இது.
அப்புறம் வேறொரு வரலாற்றுப் பதிவு வாசிக்கும்போது  விவரம் கிடைச்சது.  அடடா... தவறவிட்டுட்டோமேன்னு  மனம் புலம்பியது உண்மை.
தொண்டமநாடு என்ற இடத்துக்கான நுழைவு வாசல் அது.  அதுலே பயணம் செஞ்சு உள்ளே போனால்  சோழமன்னனின் பள்ளிப்படையும், கோதண்டராமேச்வரம் என்ற கோவிலும் இருக்காம்.  சோழமன்னன் ஆதித்யசோழனுக்கும் பல்லவனுக்கும் போர் நடந்த இடமாம்! கூடுதல் விவரங்களுக்கு இங்கே ஒரு சுட்டி.

இன்னும் கொஞ்சதூரத்தில் சின்னதா ஒரு கூட்டம். நாலைஞ்சு காக்கிச்சட்டைகள் வேற! காய்கறி வண்டி ஒன்னு  குடைசாய்ஞ்சு கிடந்தது. சின்ன க்ரேன் வச்சு தூக்கும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு. பாவம்............

கூகுளார் சொன்ன ஒரு மணி நேரத்தில்  திருப்பதிக்கு  வந்துருந்தோம்!  புது ஃபோன் வாங்கினோமுன்னு சொன்னேன் பாருங்க.... அது ரொம்ப வசதியா இருக்கு.  நம்மவரின் நியூஸி ஃபோனிலும் ஜிபிஎஸ் இருக்குன்னாலும் அது ரோமிங் என்பதால்  செலவு அதிகம். இப்போ உள்ளூர் தொடர்பு என்பதால்  நல்லதாப்போச்சு. இதுக்குத்தான் .... பழைய பட்டன் ஃபோனை  விட்டுட்டு ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்கிக்கலாமுன்னு  படுத்தி எடுத்தது.

இந்தப் பயணத்திலும் எங்கேயுமே  முன்கூட்டியே தங்குமிடங்களை புக் செஞ்சுக்கலை. அங்கங்கே பார்த்துக்கலாமுன்னு   ஊருக்குள் போகுமுன்னே  வலையில் இடம் தேடுவதுதான். நம்மவர் ஒரு ஹாலிடே இன் பார்த்து வச்சுருக்கார். தேடிக்கிட்டே போனதும், ஊருக்கு வெளியே ரொம்பத்தள்ளி இருக்கேன்னு எனக்குப் பிடிக்கலை. எதுக்கும் ஊருக்குள்ளே போய்ப் பார்த்துட்டு ஒன்னும் சரிப்படலைன்னா இங்கே வரலாமுன்னு  சொல்லி வச்சேன்.

நம்ம சீனிவாசன் (ட்ரைவர்) இன்னொரு நல்ல இடம் இருக்கு. பாருங்கன்னு  கொண்டுபோய் விட்டது ஹொட்டேல் ப்ளிஸ். உள்ளே போய்  விசாரிச்சதில் ரூம்  கிடைச்சது.
நம்ம பைகளைச் சுமந்து அறைக்குக் கொண்டுபோனவர் அசப்பில் நடிகர் வெங்கடேஷ் மாதிரி இருக்கார். எதோ ஒரு படத்தில் ஹொட்டேல் ரூம்பாயா நடிகரைப் பார்த்த நினைவோ என்னவோ.... நடையும் அதே போல:-)  அவரைத் தொடர்ந்து கூடவே வந்த  இன்னொருவர்  'திருமலை தரிசனத்துக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சு தரேன்.  இன்றைக்கு  மாலையா இல்லே நாளை காலையா?'ன்னார்.

ஒன்னும் வேணாம். மலைக்குப்போற ப்ளான் கிடையாதுன்னதும்  'இதுங்க எதுக்காக திருப்பதிக்கு வந்துருக்கு'ன்ற பார்வை.
ஜன்னல் திரைச்சீலையை விலக்கினால்....   மலை இருக்கே தவிர  பனி மூட்டமா ஒரே மசமச.....  பெருமாளுக்கு மானசீகமா சேதி ஒன்னு அனுப்பினேன்.... 'நான்  வர்றதா இல்லை'ன்னு:-)

அரைமணி போல  ஓய்வு. அதில் சின்னக்குளியல்னு முடிச்சுட்டு கிளம்பி  சீனிவாசமங்காபுரம் போறோம்.  நாம் தங்கி இருக்கும்  ஹொட்டேல் ப்ளிஸ்லே இருந்து ஒரு 15 கிமீ தூரம்.   திருப்பதி- அனந்தபூர் ஹைவே.
ஒரு இடத்துலே  சாலை மேலேறிப்போகுது. தார் ரோடு  மாறி இப்ப மண்சாலை! ஆனால் நமக்குப்பின்னால் வர்றவங்க  லெஃப்ட் சைட் ஓவர் டேக் பண்ணி கீழிறங்கும் பகுதியில் போறாங்க. குழப்பமா இருக்கேன்னு வண்டியை நிறுத்திட்டு மண்சாலையில்  மேலேறிப்போய் பார்த்துட்டு வந்த சீனிவாசன் மேம்பாலம் போடறாங்க. மேட்டுக்கு அப்புறம் ஒன்னுமே இல்லைன்னார்.
ஆமாம்... அங்கே  தடைகளோ, எச்சரிக்கையோ வைக்க வேணாமா?

நாங்களும்  இடதுபக்கம் எல்லோரும் போன கீழே போகும் பாதையில் போனால்  பாலம் வரும் இடம்  பாதி முடிஞ்ச நிலையில் அம்போன்னு நிக்குது. எதிரில் இடம் வலமாப்போகும்  சாலையில் போய் சேர்ந்துக்கிட்டோம்.

அப்புறம்  சாலையில் நின்னுக்கிட்டு இருந்த சிலரிடம் வழி கேட்டு கோவிலுக்குப்போய்ச் சேர்ந்தோம். நம்ம சீனிவாசன் இங்கே வந்ததே இல்லையாமே!  இத்தனைக்கும் ட்ராவல்ஸ் வண்டி ஓட்டியா பொழுதன்னிக்கும் திருப்பதி ட்ரிப் அடிக்கிறவர் இவர்!

உள்ளே நுழையும்போதே படு சுத்தமான குளம் பளிச்ன்னு கண்ணைப் பறிக்குது! வெள்ளை நிறத்தில் அஞ்சடுக்கு  ராஜகோபுரம் கம்பீரமா  நிக்குது! ஏதோ உற்சவம் நடந்து முடிஞ்சுருக்கு போல. பந்தல்கள் எல்லாம் பிரிச்செடுத்து சவுக்குக் கட்டைகளும் கயிறுமா  போட்டு வச்சுருக்காங்க.

வளாகம் முழுசும் இப்படி சுத்தமா இருக்கேன்னு பார்த்தால்.... கோவில் இருப்பது தொல்லியல் துறையின் கவனிப்பில்! பூஜை புனஸ்கார சமாச்சாரங்களை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் ஏற்று நடத்துது. இதுகூட 1967 இல் இருந்துதானாம்.
வாசலில் உள்ளே இருக்கும் சந்நிதிகளைப் பற்றி விளக்கமான ரெண்டு தகவல் பலகைகளை வச்சுருக்கு தொல்லியல்துறை!
காலையில் 5மணி முதல் இரவு 8வரை கோவில் திறந்தே இருக்கு.  இப்படி எல்லாக் கோவில்களும் இருந்தால்  கோவில் யாத்திரை போகும் பக்தர்களுக்கு  சுலபமா இருக்கும்.  பகல் நேரத்தில்  கோவிலை மூடி வைப்பதால் மக்களுக்கு அலைச்சல்தான்  அதிகம்.

உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லைன்னு  போர்டு. வாசலில்  காவல்துறை மக்கள் சிலர் ஒரு ஓரமா நாற்காலி போட்டு உக்கார்ந்துருக்காங்க.  தேவையில்லாத அதிகார கெடுபிடி ஒன்னுமில்லை. அவுங்க பாட்டுக்கு அவுங்க, சனம் பாட்டுக்கு சனம்னு  மக்கள் போய் வந்துக்கிட்டு இருக்காங்க.

ஜொலிக்கும் கொடிமரத்தைப் பார்த்தபடி கோபுரவாசலுக்குள் நுழையறோம். இங்கேயும்  பிரிச்சுப்போட்ட பந்தல் கட்டைகள். மூலவரை தரிசிக்க உள்ளே போறோம்.  கூட்டம் இருந்தாலும் அவ்வளவா கூட்டம் இல்லைன்னுதான் சொல்லணும். நிம்மதியா மூச்சு விட்டு நடக்க இடம் இருக்கு!
திருப்பதி மலை மீது இருக்கும் கோவிலைவிட  வயசில் மூத்தது இந்தக் கோவில். ஆதிகோவில் ரெண்டாயிரம் வருசங்களா இருக்குன்னு சொல்றாங்க. ஸ்ரீநிவாசனுக்கும் பத்மாவதிக்கும் கல்யாணம் நடந்து முடிஞ்சு திருமலைக்கு (வேங்கிடமலை) கிளம்பி வர்றாங்க. புருஷன் வீடு அங்கேதானே!  வர்றவழியில்  அகத்தியரின் ஆஸ்ரமம்.  புதுமணமக்களுக்கு அங்கே விருந்து.  போய் அகத்தியரை வணங்கி, விருந்து சாப்பிட்டு முடிச்சு திரும்பவும் வேங்கிடம் நோக்கிக் கிளம்பும் சமயம்,  புதுமணமக்கள்  கல்யாணம் ஆனவுடன் முதல் ஆறு மாசத்துக்கு மலைஏறக்கூடாதுன்னு ஒரு சம்ப்ரதாயம் இருப்பதாக அகத்தியர் சொல்ல, அதன்படியே அங்கேயே பக்கத்தில் ஒரு  குடில் அமைச்சு அதுலே தங்கிடறாங்க ஸ்ரீநிவாசனும் பத்மாவதியும்.

இந்த ஆறுமாசம் நீண்ட தேன்நிலவு கொண்டாடிய இடத்தில் பிற்காலத்தில் கோவில் அமைஞ்சதாம். (அப்புறமும் பத்மாவதி ஏன் மலை ஏறிப்போய் பெருமாளுடன் இருக்காமல் கீழேயே  இன்னொரு இடத்தில் தனிக்கோவிலில் இருக்காங்கன்னு தெரியலையே?  ஆறுமாசமே பிடுங்கல் போதும் போதுமுன்னு ஆகி இருக்குமோ?)

நல்ல உயரமா நெடுநெடுன்னு இருக்கார் மூலவர். திருமலை  ஸ்ரீநிவாசனைப்போல் கிட்டத்தட்ட ரெண்டு மடங்கு  உசரம். கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் என்றாலும் ஸ்ரீநிவாஸன்னு நாமம்.

இந்தப்பக்கம் லக்ஷ்மிநாராயணரும், அந்தப்பக்கம்  பள்ளிகொண்டவனுமா நின்ற, அமர்ந்த கிடந்தன்னு மூணு கோலங்களிலும் சேவை சாதிக்கிறார்.  முன்மண்டபத்தில் இருந்து மூலவரை தரிசிக்க  ஒரு இருபதுபேர்வரை  ஒரு சமயத்தில் அனுமதிக்கறாங்க. அவுங்க வெளிவரும்வரையில் நாம் காத்திருக்கும்போதும்  கண்நிறைய தரிசனம் செஞ்சுக்கிட்டே நிக்கலாம் . அதான் ஓங்கி உசரமா இருக்காரே!

ரொம்ப அருமையான அலங்காரம்!  கண்ணும் மனமும் நிறைய தரிசிச்சேன்.  கூடவே டெலிபதியில் மேலே இருக்கும் ஆளோடு  ஒரு பேச்சு நடந்துக்கிட்டே இருந்துச்சு.

"பார்த்தியா... ஒரு அலட்டல், அட்டகாசம், கையை இழுத்து வெளியே கடாசுதல் எல்லாம் இல்லாமல் நிம்மதியா சேவிக்கிறோம்.  மனசு முழுசும் அன்பு பெருகி வருது இங்கே!  ஆனால் அங்கே?  போதுண்டா சாமி.  காசு காசுன்னு அலையும் பேய்களிடம் மாட்டிக்கிட்டு நீ சுகமா அங்கேயே இரு. நாங்க நிம்மதியா இனி இங்கேயே வந்து கும்பிட்டுக்கிட்டுப் போறோம்.  இங்கேயும் காலப்போக்கில்  பணப்பேய் பிசாசுகளை அனுப்பி வச்சுடாதே! "
மனம் நிறைஞ்ச தரிசனம் கிடைச்சதில் வேறெதையுமே கவனிக்காமல்  அப்படியே நடந்து கோவிலுக்கு வெளியே வந்திருந்தோம். ராஜகோபுரத்தில் நம்மாட்கள் இங்கிட்டும் அங்கிட்டுமா தாவிக்கிட்டு இருந்தாங்க.

தேர் நிறுத்தும் ஷெட்கூட நீட்டா இருக்கு. எல்லாம் மனநிறைவே!  இதே மகிழ்ச்சியோடு   அலமேலுமங்காபுரம் போகலாமா? சலோ.....
நம் உள்ள நிறைவு சூரியனுக்கும்:-)

தொடரும்.....:-)

PIN குறிப்பு: நம்ம கெமெராவுக்கும்  மகிழ்ச்சியில் தலைகால் புரியலைபோல ஒவ்வொரு க்ளிக்கையும்  அஞ்சஞ்சா எடுத்துத் தள்ளிருச்சு. நம்ம சீனிவாசனிடம் கொடுத்து நம்மைக் க்ளிக் செய்யச்சொன்னபோது  குமிழில் கைபட்டு  மாறி இருக்கணும்:-)