Monday, May 31, 2010

நத்தை மனிதராகிறோம்!!!

அதே நாற்காலி, அதே சோஃபா, அதே எல்லாம்னு இப்ப ஆகிவருது, பார்த்தீங்களா? முந்தியெல்லாம் ஊர் மாற்றிப்போகும்போது சாக்கு மூட்டைகள் நிறைய பண்டபாத்திரங்களும், துணிமணிகள் அடைச்ச நாலைஞ்சு ட்ரங்கு பொட்டிகளும் சுருட்டுன மெத்தைகளுமா 'பஸ் டாப்'லே போட்டுக்கிட்டு போறதுதான். அதுவும் அநேகமா வருசாவருசம் இடமாற்றல் கிடைச்சுக்கிட்டு இருந்த காலம் அப்போ. போற இடங்களில் ஏற்கெனவே நமக்கு குவாட்டர்ஸ் இருக்கும். கொண்டு போன சாமான்களை வச்சுக்கிட்டும்,. அங்கே அப்போதைய தேவைக்குன்னு எதாவது ஏற்பாடு செஞ்சுக்கிட்டும் இருந்துருவோம். அரசாங்க சப்ளையான பூதம்பூதமா இருக்கும் மேசைகளும் நாற்காலிகளுமா ஒரு மாதிரி அலங்காரத்தோடு வீடு இருக்கும். அதைப்பற்றி அப்போ ஒரு கவலையும் கிடையாது. பட்டாம்பூச்சி போல கவலை(??) ஏதுமின்றி பறந்த நாட்கள்.

மூட்டையைப் பிரிச்சால் பாத்திரங்களில் சொட்டைகள் ஏராளமா வந்துருக்கும். எல்லா ஊர்களிலும் பாத்திரத்தின் நசுங்கலை எடுக்கவும், ஈயம் பூசவும் ஆட்கள் தெருவிலே கூவிக்கிட்டு வருவாங்க. அவுங்களை வேலைக்குக் கூப்பிட்டு நம்ம வீட்டு வாசலிலே உக்காரவச்சு தட்டிக்கொட்டி ரிப்பேர் செஞ்சு வாங்கிக்குவோம். சின்னதா அடுப்புக்கரி பத்தவச்ச குழிகளில் தோல்துருத்தி வச்சு புஸ் புஸ்ன்னு காத்தடிச்சு ஈயம் உருக்குவதையெல்லாம் கண்கொட்டாம இருந்து வேடிக்கை பார்ப்பேன். அப்படியே நம்மூட்டுப் பாத்திரங்களுக்கும் காவல்!

சில வருசங்களில் அம்மாவுக்கே போரடிச்சுப்போச்சு போல. இதுலே பலசமயம் அக்காக்களின் ஃபேவரிட் பாத்திரங்களும் அடிபட்டு நசுங்கிப் போயிருதுன்னு அவுங்க கூச்சல் ஒரு பக்கம். அம்மா, தச்சுவேலை செய்யறவரிடம், ஒரு பெரிய மரப்பெட்டி செய்யச் சொன்னாங்க. கட்டில் மாதிரி அதுமேலே ஒரு ஆள் (அது நான் தான்) கால்நீட்டிப் படுக்கலாம்.
யானைப்பெட்டின்னு அதுக்கு நான் பேர் வச்சேன்:-) அதுலேதான் முக்கிய பாத்திரங்கள் இடம்பிடிக்கும். சொட்டையாகும் பாத்திரங்கள் எண்ணிக்கை கொஞ்சம் குறைஞ்சது.

என்னுடைய குடித்தனம் ஆரம்பமான காலக்கட்டங்களில் எண்ணி ஒரு பத்துப் பாத்திரங்கள் இருந்தாலே அதிகம். ஆனாலும் குடும்பப் பெட்டிக் கலாச்சாரத்தை அப்படியே ஃபாலோ பண்ணிக்கிட்டு இருந்தேன். நோ யானைப்பெட்டி:( இது கோகோகோலா கான்ஸண்ட்ரேட் வரும் அட்டைப்பெட்டியா இருந்து, அப்புறம் ஒரு டீ செஸ்ட்க்கு மாத்திக்கிட்டேன். டீசெஸ்ட் செஞ்ச அதிர்ஷ்டம் பாருங்க.... அது பூனா வந்தபிறகு உள்ளூர்லேயே ஆறு மாசத்துக்கு ஒரு வீடுன்னு மாற்றல்தான் முதல் மூணு வருசங்கள். அந்த செஸ்ட்டும்,டைனிங் டேபிள், வரவேற்பறை மேசை, அடுப்பு மேடைன்னு எடுக்காத ரூபம் இல்லை நம்மூட்டுலே!

அயல்நாட்டுக்குக் கிளம்பி வந்தபோது.... ட்ரங்கு பொட்டிகள் போய் ஸூட்கேஸ் வந்துச்சு. அதே பத்துப் பாத்திரங்களை ஒரு பெரிய லெதர் கேரி பேக்லே போட்டுக்கிட்டுப் போனோம். அந்த நாட்டுலே இருந்து வேறு நாடு போகும் போதுதான் முதல்முறையா பேக்கிங் செய்யும் ஆட்கள் வந்தாங்க. அவுங்க வந்து எடுத்துவைக்குமுன்னேயே நம்மாளு பேக்டரியில் இருந்து பொட்டிகளைக் கொண்டுவந்து 99% சாமான்களை 'அடைச்சு' வச்சுட்டார். திகைச்சு நின்னவங்க, வந்துட்டோமேன்னு அவுங்க பங்குக்கு டிவியை மட்டும் பொதிஞ்சு எல்லாத்தையும் வாரிக்கிட்டுப்போய் அனுப்பி வச்சாங்க.

நியூஸி வந்து சேர்ந்த சாமான்களில் பலதெல்லாம் தூளாகிக் கிடந்தது, நம்ம கைங்கர்யத்தாலேன்னு புரிஞ்சதும் ஆள் கப்சுப்:-) இதுக்கு அப்புறம் இடமாற்றம் வருமுன்னு நான் கனவுகூடக் காணலை. (நான் மட்டும் வெறுங்கையுடன் தனியா ஒவ்வொரு இரவும் இந்தியா வந்து போய்க்கிட்டு இருந்தேன். இது கணக்கில் வராத பயணம்)

போனவருசம் வேலை காரணமா இந்தியா வரவேண்டியதாப் போயிருச்சு. இந்த முறை சாமான்கள் மேலே கையை வைக்கக்கூடாதுன்னு நம்மாளுக்குக் கண்டிஷன் போட்டேன். தொழில்முறையான
பேக்கர்ஸ் வந்து மூணு நாளில் சகலத்தையும் ஒழுங்கா பேக் பண்ணி முடிச்சாங்க. இந்தியா கொண்டுவரவேண்டியவை, அங்கேயே ஸ்டோரேஜ்லே போட்டு வச்சுட்டு வரவேண்டியவைன்னு ரெண்டு பிரிவு. அமர்க்களமா அருமையா வேலையைச் செஞ்சாங்க. நாம் எதையும் தொட்டுப் பார்க்கலை. எது எதுன்னு சொன்னதோடு சரி. நானும் இதையெல்லாம் சுத்திச்சுத்திப் படம் எடுத்துக்கிட்டுக் கிடந்தேன்.

வந்திறங்கி வீடு தேடி எல்லாம் ஒருமாதிரி அமைஞ்சதுக்குப் பிறகு சாமான்கள் வந்து சேரத் தாமதமா ஆகிருச்சு. தாற்காலிக ஏற்பாடா, ஒரு கட்டில், மைக்ரோவேவ், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷீன், கம்ப்யூட்டர் டேபிள், சில நாற்காலிகள் எல்லாம் வாடகைக்கு எடுத்துப்போட்டு புழங்கிக்கிட்டோம். இதெல்லாம் சென்னையிலே வாடகைக்குக் கிடைக்கும் என்பதே எனக்கு முதலில் தெரியாது. நம்ம கோபால்தான் 'வலைவீசி'த் தேடிக் கண்டுபிடிச்சார். 'ட்ரேடு ஏஜன்ஸீஸ்' ன்னு ஒன்னு, வள்ளுவர் கோட்டம் பக்கத்தில் இருக்கு. போய்ப் பார்த்து நம்ம தேவைகளைச் சொல்லி, சாமான்களைப் பார்வையிட்டு நமக்கு வேணுங்கறதைத் தெரிவு செஞ்சோம். இதன் உரிமையாளர் சம்பத் நல்ல நட்பானவர். 28 வருசமா இந்த பிஸினெஸ் செய்யறாராம். மனைவி மகன்னு குடும்பம் பூராவும் யாவாரத்தைப் பார்த்துக்கறாங்க. வேலை விஷயமா தாற்காலிக இடமாற்றமுன்னு வர்றவங்களும், அமெரிக்காவில் இருந்து முக்கியமா சங்கீத சீசனுக்கு வந்து ஒரு சில மாசங்கள் வீடோ, ஃப்ளாட்டோ வாடகைக்கு எடுத்துத் தங்குற மக்கள்தான் இவருடைய வாடிக்கையாளர்களாம். இப்போ நாமும் அந்த லிஸ்ட்டுலே இருக்கோம்.


சென்னைத் துறைமுகத்துக்கு நம்ம கண்டெயினர் வந்து சேர்ந்ததும் இங்கே சென்னையில் க்ளியரிங் ஏஜண்டு நம்மை துறைமுகத்துக்கு வரச்சொல்லி உள்ளே போக ஒரு நாள் அனுமதி பாஸ் வாங்கிக்கொடுத்தார். இது(வும்) ஒரு அனுபவமுன்னு கிளம்பிப்போனோம். கண்டிஷன் ஒன்னுதான் படா பேஜாராப்போச்சு. கேமெரா கொண்டுவந்துறாதீங்கன்னார். (அவருக்கு எப்படித்தெரியும் நம் புகைப்பட ஆர்வம்!!!!!)

நம்ம கண்முன்னால்தான் கண்டெயினர் பூட்டைத் திறந்தாங்க. அதிகாரி ஒருத்தர் வந்து பார்த்தார். லக்னோக்காரர். ஹிந்திமே பாத் ஹுவா. ஒரு கட்டணம் சொல்லி அதை ட்யூட்டியாக் கட்டிட்டு சாமான்களை எடுத்துக்கச் சொல்லிட்டார். நாலைஞ்சு கையெழுத்தும், சின்னக் கட்டணமுமா எல்லாம் அஃபீஸியலா முடிஞ்சது. கண்டெயினர் துறைமுகத்தைவிட்டுக் கிளம்புச்சு. ஆனால் நம்ம வீடு இருந்த பகுதியில் பகலில் கண்டெயினர் வர அனுமதி இல்லையாம். அதனால் ஏஜெண்டுகளின் கிடங்குக்கு(வண்டலூர்) கொண்டுபோய் அங்கிருந்து ரெண்டு ட்ரக்குகளில் நிரப்பி மறுநாள் காலை வீட்டுக்குக் கொண்டுவந்து எல்லாப் பொதிகளையும் பிரிச்சு, சாமான்களை நாம் சொல்லும் இடங்களில் அடுக்கி, அட்டைப்பொட்டிகள், காகிதம், பப்புள்ராப் எல்லாம் எடுத்துச் சுத்தம் செஞ்சுட்டுப்போச்சு ஒரு குழு. ஒரே ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவின் மூடி மட்டும் விரிசல் விட்டுருந்துச்சு, ஒரு கண்டெயினர் சாமான்களில். இதுலே சாமான்களைப் பிரிக்கும் சிலர், நாங்க இன்னும் இதைவிட அருமையா இங்கே பொதிஞ்சு அடுக்குவோம். எல்லா நாடுகளுக்கும் சாமான்களை அனுப்பி இருக்கோம் அது இதுன்னு சொல்லிக்கிட்டே வேலையைப் பார்த்தாங்க.

அங்கே வீட்டுக்குள்ளே இருந்த சாமான்களை அப்படியே இங்கே மாத்தினதால், புது இடம் என்ற 'திடுக்' எல்லாம் அவ்வளவா இல்லை. எங்கே திரும்புனாலும் பழக்கப்பட்ட சாமான்களும், செட்டிங்ஸ்மா இருந்துச்சு. நம்ம வழக்கமான வேலைகள் யதார்த்தமா நடந்துச்சுன்னு வையுங்க. இந்த வீட்டுலே அடுக்களை முக்கியமாச் சொன்னாப் பேண்ட்ரி நியூஸியில் நம்ம வீட்டுலே இருந்த அளவு இருந்ததால் விறுவிறுன்னு சாமான்களை அடுக்கி முடிக்க சவுகரியமாப் போச்சு. அசௌகரியமுன்னு சொன்னால்.....
சிங்காரச்சென்னையின் அருமையான பகுதின்னு எல்லோரும் சொன்னாலும் கூட ஒரே சத்தமும் தெருப்புழுதியுமாத்தான் நாட்கள் போச்சு. இத்தனைக்கும் நமக்கு எதிர்வீடு (கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கும்) சினிமா நடிகர் விக்ரமோடது. நம்ம வீட்டுக்கு முன்னால் எதிர்வரிசையில் ரெண்டு வருசமுன்னால் வீடு கட்ட ஆரம்பிச்சு இன்னும் வேலை நடந்துக்கிட்டே இருக்கு. இழைச்சு இழைச்சுக் கட்டறாங்கன்னு சொல்வதை தினமும் கவனிச்சுக்கிட்டே இருந்தேன். சரியா ராத்திரி 12 மணிக்கு அங்கே செங்கல் மற்ற சாமான்கள் லோடு இறக்கவரும் லாரிகளின் இரைச்சல் அடங்கவே ரெண்டு மணி ஆகிரும். இதுலே மரவேலை செய்யறவங்க ராத்திரி 11 வரை டொக் டொக்குன்னு சத்தத்தோட வேலை செய்வாங்க. அக்கம்பக்கம் ஆட்களைப் பத்தி யாருக்கும் கவலை இல்லை. நம்ம பக்கத்து பில்டிங்லே சரியா பகல் 2 மணிக்கு தச்சுவேலை சத்தம் ஆரம்பிக்கும். வுட் ஒர்க் நடக்குதாம். நம்ம வீட்டுக்குப் பின்னால் இருந்த காலி மனையில் கட்டிடம் முளைக்க ஆரம்பிச்சுருக்கு. காங்க்ரீட் தூண்கள் போட்டுக்கிட்டு இருக்காங்க. இப்படி சத்தமான சத்தம். இத்தனைக்கும் தெருவில் எங்கள் பகுதியில் பத்தே கட்டிடங்கள்தான்!!!!

தினமும் அதிகாலையில் கடற்கரைக்குப்போய் நடக்கணும். நியூஸி திரும்பும்போது இப்போ இருக்கும் உடம்பு பாதியாக் கரைஞ்சு(!!) போகணுமுன்னு என்னென்னவோ மனக்கோட்டை கட்டிக்கிட்டு வந்துருந்தேன். ஆனா......ப்ச் ............விடுங்க.

பதிவின் நீளம் கருதி மீதி நாளை.

Thursday, May 27, 2010

கட்டில் மெத்தை விவகாரத்தில் ஒத்துழைக்க மறுத்த வீட்டுக்காரர்

"வீடு பரவாயில்லை. நாங்க வாடகைக்கு எடுத்துக்கறோம். எல்லா லைட்டுகளும் ஏர்கண்டிஷனர்களும் வேலை செய்யுதான்னு பார்த்துச் சரி செஞ்சுருங்க. ஒரு அறையிலே ஃபேன் மட்டும்தான் இருக்கு. அங்கே ஒரு ஏஸி போட்டுருங்க."

"இவுங்க அடுத்த ரெண்டு வாரத்துலே காலி செஞ்சுட்டுப் போனதும் எல்லாத்தையும் ஒருக்கா சரிபார்த்து வச்சுடறேன்."

"சமையலறையைச் சுத்தம் செஞ்சு புது பெயிண்ட் அடிச்சுட்டால் நல்லது."

"கவலையே படாதீங்க. செஞ்சுறலாம். உங்களுக்காக ஒரு கட்டிலும் மெத்தையும் கூட இங்கேயே விட்டு வைச்சுடறேன்."

"வேணாங்க. எங்க கட்டிலையே கொண்டுவந்துருவோம்."

"ஏம்மா.... அவர்தான் விட்டுவைக்கிறேன்றார். இருந்துட்டுப் போகட்டுமே. விருந்தினர் வந்தா பயன்படுமில்லே?"

"எதுக்குங்க? அதான் நம்ம சிங்கிள் பெட்ஸ் ரெண்டு இருக்கே. இது ரொம்பப் பெருசா அறை பூராவும் அடைக்குதே......."

"அந்த ரெண்டையும் சென்னையில் ஹோமுக்குக் கொடுத்துடலாம். லக்கேஜுகளைக் குறைச்சுக்கிட்டே வந்தால் நாம் திரும்பிப்போறப்ப எளிதா இருக்கும்."

"நானும் அப்படித்தான் நினைச்சேன். எல்லா ஃபர்னிச்சரையும் ஹோமுக்கே கொடுத்துட்டுத் துணிமணிகளை மட்டும் எடுத்துக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்கணுமுன்னு."

"சரி. முதல்லே இவுங்க காலி செஞ்சுட்டுப் போகட்டும். நான் அடுத்த ட்ரிப் வரும்போது என்ன ஏதுன்னு பார்க்கிறென்."

அடுத்த சில வாரங்களில் வீட்டுக்காரர் கிட்டே இருந்து ரெண்டு மூணு ஃபோன் வந்துருச்சு, 'எப்ப வர்றீங்க எப்ப வர்றீங்க'ன்னு......

'கொஞ்சம் நிதானமாத்தான் வருவோம். வீட்டை நல்லாச் சுத்தம் செஞ்சு பெயிண்ட் அடிச்சு வச்சுருங்க'ன்னு சொல்லி இருக்கு.

அதான் வாடகை கொடுக்க ஆரம்பிச்சாச்சுல்லே. சாமான்செட்டுகளை மூட்டை கட்ட நேரம் வேணுமே! இதுக்கிடையில் இவர் ரெண்டு முறை இந்த ஊருக்கு வரவேண்டியதாப் போச்சு. அதுலே ஒரு முறை வீட்டைப் போய்ப் பார்த்துருக்கார், சுத்தம் செஞ்சு வச்சுருக்காங்களான்னு.......

"ஏம்மா.... அந்தக் கட்டிலில் மெத்தை இல்லையே......."

"நெசம்மாவாச் சொல்றீங்க? நான் வீடு பார்க்க வந்தப்பச் சரியாக் கவனிக்கலையோ? மெத்தை இருந்துச்சே! அப்புறம் இன்னொரு அறையிலும் இருந்துச்சே, ஒரு தனி மெத்தை அரை ஆள் உசரத்துலே?"

"ஐயோ.... அதையேன் கேக்கறே..... அந்த மெத்தையை அவர் உயிருக்கு உயிரா 'நேசிக்கிறார்'!!!! ரொம்ப அபூர்வமானதாம். ரொம்ப அதிக விலை கொடுத்து வாங்கிவந்துட்டாராம். பத்தாயிரம் ரூபாயாம். மிஸ்டர் பானர்ஜிக்கு அதுமேலே ரொம்ப விருப்பமாம். எப்பவும் அதுலேதான் படுத்துத் தூங்குவாராம்."

"அட! நெசமவாச் சொல்றீங்க? அந்த அறையில் ஏஸி கூட இல்லையே??? "

காலி செஞ்சுட்டுப் போன மிஸஸ் பானர்ஜி, இப்போ நம்ம தோழியர்களில் ஒருத்தரா ஆகிட்டாங்க. அவுங்களோடு மின்மடல் போக்குவரத்து நடந்துக்கிட்டு இருக்கு. விஷயத்தை அவுங்களுக்கு சொன்னா இடிச்சிரிப்பு சிரிச்சாங்க. அந்த மெத்தையை எடுத்து உங்க பகுதியிலே வச்சுக்குங்கன்னு வீட்டுக்காரரைக் கேட்டால்.... போட்டு வைக்க இடமில்லை. உங்களுக்குப் பயன்படுமுன்னு சொல்லி எங்க தலையிலே கட்டிட்டார்ன்னாங்க. 'கட்டில் வேற கொடுத்துருந்தாரே... அதுலே மெத்தை இல்லையாமே' ன்னா..... ' வெறுங்கட்டில்தான் இருந்துச்சு. நான் ஒரு மெத்தை வாங்கிப் போட்டுக்கிட்டேன். இப்போக் காலி செய்யும்போது அதை எடுத்துக்கிட்டுப் போயிட்டேன்' . அட!.... வெரி சிம்பிள்:-)

இப்போ.......... மெத்தையை எப்படியாவது ஒழிச்சுக்கட்டணும். மூளையில் முடிச்சுப்போட்டு வச்சேன். ஒரு அறையிலே மெத்தையில்லாக் கட்டில். இன்னொரு அறையிலே கட்டில் இல்லா மெத்தை! ரெண்டு அறைகள் இப்படிப் போயிருச்சுன்னா நமக்கு இடம்?

நம்மாளு இதுக்குள்ளே ஐடியாக் கண்டுபிடிச்சுச் சொல்லிட்டார் கட்டிலையும் மெத்தையையும் ஒன்னாப் போட்டுருங்கன்னு. ஒரு அறை கிடைச்சுருமே!
சென்னையைவிட்டுக் கிளம்பி ஒருவழியா இங்கே வந்து சேர்ந்து வீட்டுச்சாவியை வாங்கிக்க வந்தால்..... கட்டிலும் மெத்தையும் ஒன்னுமேலே ஒன்னு. ஆனா பக்கத்துலே ஏணி வைக்க மறந்துட்டாங்க.! ஸ்டூல் போட்டு ஏறிப் படுக்கலாமுன்னு வையுங்க. ஆனா.... மெத்தை, கட்டிலைவிடப் பெருசா ஒரு பக்கம் நீட்டிக்கிட்டு வேற இருக்கு. 'இதை எடுத்துருங்க'ன்னு வீட்டுக்காரருக்கு அப்பீல் விட்டேன்.

" இது கேனடாக்கார மேடம் ஸ்பெஷலா வேணுமுன்னு சொன்னதாலே வாங்குனேன்"

" நான் நியூஸிலாந்து மேடம். எனக்கு இது வேணாமுன்னு சொல்றேன்"

" உங்களுக்குத் தெரியாது....வீட்டுக்குக் குடித்தனம் வர்றவங்க கட்டில் மெத்தை வேணும் வேணுமுன்னு கேக்கறாங்க."

" அப்படியா? இப்பக் குடித்தனம் வந்த நான் வேணாம் வேணாமுன்னு சொல்றேன்"

" எடுத்தா..எங்கே போடணுமுன்னு தெரியலை. எங்க வீட்டுலே இடம் இல்லை......"

"அதுக்கு? எங்களுக்கான செர்வெண்ட்ஸ் ரூம் ஒன்னு இருக்கே அதுலே போட்டு வச்சுகுங்க."

" அதுலே ஏற்கெனவே எங்க வேலைக்காரரை இருக்கச் சொல்லிட்டேன்."

" அப்பக் கட்டிலையும் அவருக்கே கொடுத்துருங்களேன்."

வீட்டுக்காரர் முகத்தில் ஈயாடலை. ' மனைவி ஊருக்குப் போயிருக்காங்க. வந்ததும் அவுங்ககிட்டே பேசறேன். அவுங்களுக்குத்தான் தெரியும் இந்த கட்டில் மெத்தை விவரம் எல்லாம்'ன்னார்.

அவர் முகம்போன போக்கைப் பார்த்ததும் நம்ம ரங்க்ஸ்க்கு ஒரே ஃபீலிங்காப் போயிருச்சு. "அதுவேணா இருந்துட்டுப் போகட்டுமேம்மா. மெத்தையை எடுத்துச் சுவரில் சாய்ச்சு வச்சுறலாம்."

"அப்ப கட்டில்?"

" அதுக்கு வேணுமுன்னா பொருத்தமா ஒரு மேட்ரஸ் வாங்கிப் போட்டுக்கலாம்."

" த்தோ...டா...................... ஊருராப்போய் வாங்கிட்டு அங்கேயே போட்டுட்டுப் போறதுக்கா? முந்தி இருந்தவங்க வாங்குன மெத்தை இப்ப முழிக்குது. நாம் வேற ஒன்னு வாங்கணுமா? ஒன்னு வேணாச் செய்யலாம்...."

" கட்டிலைப் பிரிச்சு ஓரமா வச்சுரலாமா?"

" இப்படி எல்லாத்தையும் ஓரமா வச்சா அறையிலே இடம் ஏது? பேசாம நம்ம ட்ரெட்மில்லைக் கட்டிலில் தூக்கி வச்சு அதுலே ஓடலாம்:-) "

ரங்க்ஸ் அப்படியே நடுங்கிப்போயிட்டார். 'ராட்சஸி...செஞ்சாலும் செய்வே'!!!!!

நாலைஞ்சு நாளில் வீட்டுக்காரம்மா ஊருலே இருந்து வந்துட்டாங்க. 'யதேச்சையா' அவுங்களைச் சந்திச்சோம் முதல்முறையா.

" ஹை.... நான் துளசி"

" ஹை.....நான் *****. என்னோட நிக் நேம் ***** நீங்க இப்படியே கூப்பிடலாம். மிஸஸ் பானர்ஜிக்கூட இந்தபேரில்தான் கூப்புடுவாங்க."

எனக்கு வந்த சிரிப்பை அடக்க நான் பட்டபாடு இருக்கே!!!!!! அப்பப்பா..........எப்படிங்க 'அப்படி'க்கூப்பிட முடியும்?????

' அவசரமா நாளைக்கு டெல்லி போகணும். நாலைஞ்சு நாளில் வந்துருவேன். வந்ததும் அந்த கட்டில் மெத்தையைக் கவனிக்கிறேன்'னாங்க. சரின்னு தலை ஆட்டி வச்சோம்.

ஒன்னு சொல்ல விட்டுப்போச்சே..... இந்த நாலைஞ்சு நாளில் மிஸஸ். பானர்ஜி என்ற பெயர் நம்ம ஹௌஸோல்ட்லே அதிகமாப் புழங்கும் பெயராகி இருந்துச்சு.

வீட்டுக்காரரிடம், வேலைக்கு உதவி செய்யும் பெண்ணுக்குச் (இந்தப் பொண்ணு நாம் வீடு பார்க்க வந்தப்ப மிஸஸ். பானர்ஜி வீட்டிலே வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. நாம்தான் வரப்போறோமுன்னதும் உங்களுக்கு நானே வந்து வேலைகளைச் செஞ்சு கொடுக்கறேன். வந்தவுடன் கீழ்வீட்டுக்காரரிடம் ஒரு வார்த்தை சொல்லுங்க'ன்னாங்க.) சொல்லி அனுப்பணுமுன்னு கேட்டுக்கிட்டேன். இந்த நிமிசம் இங்கே நம்ம வீட்டுலேதான் வேலை செஞ்சுக்கிட்டு இருக்காள். முடிஞ்சதும் மேலே அனுப்பறேன்னு சொல்லிட்டு, 'வீட்டுலே எல்லாம் செட்டில் பண்ணிட்டீங்களா'ன்னு கேட்டார். 'கிச்சன் கொஞ்சம் ஆச்சு. பூஜை ரூம் அடுக்கிக்கிட்டு இருக்கேன். '

"மிஸஸ். பானர்ஜி ரொம்ப பக்திமான். நல்லா பூஜை செய்வாங்க. தினம் ரெண்டு மணி நேரம்.(??!!) அவுங்க சாமி வச்ச இடத்துலேதானே நீங்களும் வச்சுருக்கீங்க?"

"இல்லையே!!!! வேற அறையில் வச்சுருக்கேன். இது கொஞ்சம் பெருசா இருக்கு"

"ஓ..... வேலைக்காரி வேலை செய்யும்போது கொஞ்சம் பின்னாலே போய் நாம் பார்த்துக்கணும். நாம் கவனிக்கலைன்னா.... கொஞ்சம் ஏமாத்திருவாங்க.; மிஸஸ். பானர்ஜி, ரெண்டு பேரை வேலைக்கு வச்சுருந்தாங்க. ஒருத்தர் வீடுபெருக்கித் துடைச்சு, பாத்திரம் கழுவ. இன்னொருத்தர் ஜன்னல் கதவு எல்லாம் துடைச்சுட்டு, காய்கறி வெட்டிக் கொடுக்க."

'மிஸஸ். பானர்ஜிக்கு மடல் அனுப்புனப்ப, 'வீட்டுக்காரர் உங்க பேர் இங்கே சொல்லாத நாளில்லை. மிஸஸ் பானர்ஜி திஸ், மிஸஸ் பானர்ஜி தட்னு ஒரேதா உங்க புராணம்தான்'. மறுபடி ஒரு இடிச்சிரிப்பு:-))))

வீட்டுக்காரம்மா ஒரு நாள் மாடிக்கு வந்து, ' அம்ரித்ஸார் கோவிலுக்குக் கிளம்பறேன். ஊரில் இருந்து அப்பா வந்துருக்கார். நாளை இரவு திரும்பிருவோம். வந்து கட்டிலைக் கவனிக்கிறேன். மன்னிக்கணும்' னு சொன்னாங்க. 'கோவிலுக்கா? ரொம்ப நல்லது. நானும் போகலாமுன்னு இருக்கேன். எத்தனை மணி நேரப் பயணமு'ன்னு கேட்டேன். அப்பப்ப ஸ்மால் tடாக் வேண்டித்தானே இருக்கு? அஞ்சரை மணி நேரமாம். ஓக்கே.

இன்னும் ஒரு வாரம் போச்சு. வீக் எண்ட். சனிக்கிழமை இவர்கிட்டே, 'எப்பதான் எடுக்கப் போறாங்க?' ன்னா 'எடுப்பாங்க எடுப்பாங்க' ன்றார். 'வீக் எண்ட்லே எடுப்பாங்க. வீக் எண்டா? அது பாதி போயிருச்சே..... 'ஞாயிறு காலை ஒரு பத்துமணிக்கு அவுங்களுக்கு ஃபோன் போட்டால். போனை எடுத்த வீட்டுக்காரம்மா, 'இன்னிக்கு ஆளுக்கு ஏற்பாடு செஞ்சுருவேன். எடுத்தறலாம்' ன்னாங்க. பொணமா என்ன? ஆளாளுக்கு எடுக்கலாம் எடுக்கலாமுன்னு........

கொஞ்ச நேரத்துலேயே திமுதிமுன்னு நாலு ஆளுங்களோடு வீட்டுக்காரம்மா ஆஜர். அக்கம்பக்கத்து வீட்டு வேலையாட்களாம். "மெத்தையை எடுத்துறலாம். இங்கே முந்தி குடி இருந்த அமெரிக்கர் பெரிய பில்ட்ட்ட்ட்ட்டு. இம்மாம் பெரிய மெத்தை வேணுமுன்னு ஸ்பெஷலா ஆர்டர் கொடுத்து இருபதாயிரம் ரூபாய்க்கு வாங்கினார். எதுக்குத்தான் அவ்ளோ செலவு செஞ்சாரோ? கடைசியில் அவசரமாப் போனதுலே விட்டுட்டுப் போயிட்டார்."

வீட்டுக்காரம்மா சொல்லச்சொல்ல விழிச்சேன். அட ராமா!!!! அப்போ கெனேடியன் லேடி???

" கட்டிலை எடுப்பதுதான் கஷ்டம். அதுக்குன்னு ஸ்பெஷலா கருவிகள் வேணும். ஆளுக்குச் சொல்லி அனுப்பறேன்."

" என்ன கருவி வேணும்? சொல்லுங்க. ஈஸியா பிரிச்சுறலாம்.ஸ்பானர் இருந்தாப் போதும். எங்கிட்டேயே இருக்கு" ன்னார் நம்ம வீட்டு 'டிம் த டூல் மேன் டேலர்' :-))))) அதான் பெரிய டூல் பாக்ஸ் ஒன்னு கூடவே பயணப்பட்டு வந்துருக்கே நியூஸியில் இருந்து!

'இங்கே பிரி, அங்கே பிரி'ன்னு இவர் சொல்லிக் கொடுக்க ரெண்டாய் பிரிஞ்சது கட்டில். ஒருவழியா 'தூக்கிட்டு'ப் போனாங்க. இப்ப அந்த இடம் காலி. நம்ம சாமான்களை தாராளமா வச்சுக்கலாம். தலை முழுகித் தொலைக்க மூணு வாரம் ஆகி இருக்கு.
மறுநாள் அந்த அறைக்குப் போனப்ப என்னமோ வெறிச்:( . பேசாம அந்த மெத்தையை மட்டும் வச்சுருந்துருக்கலாம்..................


PIN குறிப்பு: மேற்படி சம்பவத்தை எழுத்துலகத் தோழி ஒருவரிடம் 'சாட்'டிக்கொண்டிருந்தபோது, அவர்கள் சொன்ன தலைப்பு. நன்றி என் இனிய தோழியே!


காலநிலை: கொடூரம். நம்ம எஸ்.ரா.வின் எழுத்துக்களில் எறும்பு போல ஊர்ந்து வரும் வெக்கையும் வெயிலும் சண்டிகர்வரை ஊர்ந்ததோடு சரி. இங்கிருந்து நகராதாம் இன்னும் இரு மாதங்களுக்கு :( 47 C.


Tuesday, May 25, 2010

கோவிந்தா............. கோவிந்தா......

சனிக்கிழமைன்னா எனக்கு ஒரு கோவிலுக்குப் போகணும். விஷ்ணு கிடைச்சால் சிரேஷ்டம். இல்லைன்னா வேறு எந்தக் கோவிலானாலும் சரி. சி.செயில் இருந்தவரை அடையார் அனந்தபதுமனைக் குத்தகைக்கு எடுத்துருந்தேன். இங்கே ஒரு பாலாஜி கோவில் இருக்கு பக்கத்துலே பஞ்ச்குலாவில்னு கண்டுபிடிச்சுச் சொல்லியிருந்தார் கோபால்.

செக்டர் 12A.. மாலை அஞ்சரைக்குக் கோவில் திறக்கறாங்க. இந்தப் பக்கமெல்லாம் சம்மர் டைம் விண்ட்டர் டைம் இப்படி வெவ்வேற நேரங்களில் கோவில் டைம்ஸ் உண்டு. சரியான நேரத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். போகும் வழியில் இன்னொரு கோவிலும் அதன் தலையில் ஒரு ப்ரமாண்டமான சிவலிங்கமும் கண்ணில் பட்டது. வரும்போது கவனிச்சுக்கறேன்னு சொல்லிவச்சேன். ரெண்டுக்கும் இடையில் கூப்பிடு தூரம்தான்.
இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி டெம்பிள் அது ஸ்ரீ ஹரிஹர் மந்திர்.

தென்னிந்தியக் கோவில்கள் வரிசையில் இங்கே ரெண்டே கோவில்கள்தான். ஒன்னு இந்த பெருமாள் கோவிலும் இன்னொன்னு ஸ்ரீ கார்த்திக்ஸ்வாமி கோவிலும்.(இதைப்பற்றி அப்புறம்....)

பெருமாள் கோவில் கோபுரம் நம்ம பக்கம் இருக்கும் வகையில் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு. ஒரு மிடில் சைஸ் வளாகத்தில் (ஒரு மூணு க்ரவுண்ட் இடம் இருக்கலாம்) நடுவில் ஒரு ஹால் போன்ற அமைப்பு. ஹாலின் ஒரு கோடியில் மூன்று சந்நிதிகள்.
நடுவில் ஸ்ரீ ஸ்ரீனிவாஸப்பெருமாள். அவருக்கு வலது கைப்பக்கம் சந்நிதி ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு. இடது புறம் சந்நிதி ஸ்ரீ தர்த்தி மாதா. அட...நம்ம பூதேவிதாங்க. கண்ணுக்கு வெள்ளித் தகடு பொருத்தி வச்சுக் கொஞ்சம் முழிச்சுப் பார்க்கறாய்ங்க இவுங்க ரெண்டு பேரும். ஸ்ரீநிவாஸருக்கு வச்சுருக்கும் ப்ரபையில் தசாவதார உருவங்கள் இருக்கு. ஒரு நாலடி உயரச் சிலைதான். திருப்பதியில் இருந்தே கொண்டு வந்ததாம். ப்ரமாண்டமான பதுமனைப் பார்த்தக் கண்களுக்கு இது 'ச்விக்'ன்னு சின்னதாத் தெரியுது. ஒன்னரை அடி உசரத்துலே உற்சவமூர்த்திகள் பஞ்சலோகச் சிலைகளா அவருக்கு முன் இருக்காங்க. ரொம்ப சிம்பிள் அலங்காரம்தான்.
பட்டர் ரொம்பச் சின்னதா பூஜையை முடிச்சார். 16 உபசாரங்களில் 13 மிஸ்ஸிங்! ஆரத்தி காமிச்ச கையோடு தீர்த்தம் சடாரி கொண்டு வந்து ஹாலில் இருக்கும் மேசையில் வச்சு பக்தர்களுக்கு .வழங்கினார். ஒரு பெரிய பாத்திரம் நிறைய புளியோதரை இருக்கு. அதில் இருந்து ப்ரசாதம் கிடைச்சது.
ரொம்ப ட்ரையா இருக்கே பார்க்கன்னு நினைச்சேன். எம்டிஆர் புளியோதரை மிக்ஸ்ன்னு வாயில் போட்டதும் உணர்ந்தேன்!!!! நம்ம வீட்டில் அங்கே (? ! நியூஸியில்) இதே மிக்ஸ்தான். ஆனால் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா முந்திரி, நிலக் கடலை, கருவேப்பிலை எல்லாம் பொரிச்சுப் போட்டு பார்க்க அம்சமா பண்ணிருவேன். இங்கே புளியோதரைப் பாக்கெட்டில் இருக்கும் செய்முறையை அடிபிறளாமல் பின்பற்றி இருக்காங்க. (கிடைச்சதா...தின்னோமான்னு இல்லாம இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா?)
பெருமாளைப் பார்த்த மாதிரி பெரிய திருவடி. மரத்தில் செய்யப்பட்டவர். வித்தியாசமான கோணத்தில், கருடவாகனத்தில் இருக்கறாப்புலெ. அவருக்குப் பக்கமா அதே மேடையில் ஒரு வலம்புரிப் புள்ளையாரும்( இவர் மண்ணால் ஆனவர்) ஒரு சிவனின் படமும்.

கோவில் வளாகத்தில் காம்பவுண்டுச் சுவரை ஒட்டி பூச்செடிகள். அரளி, நந்தியாவெட்டை, எலுமிச்சம் மரம், தங்கரளி, வாழைமரங்கள் இப்படி. ரெண்டு மூணு சின்னத் தொட்டிகளில் துளசி. வாழைமரங்களுக்கு நடுவில் ஒரு எண்ணெய்தீபத்தை வச்சு ஒருத்தர் கும்பிட்டார். இவர்தான் கோவிலுக்கு இப்போதைய ட்ரஸ்ட் மெம்பரில் ஒருத்தர். அவர் போன பிறகு அங்கே என்ன இருக்குன்னு எட்டிப் பார்த்தேன். சின்னதா கைப்பிடி அளவுள்ள புள்ளையார், சிம்மவாஹினி இப்படிச் சின்னச்சின்ன மண் பொம்மைகள், கொலுவில் வைப்போமே அதைப்போல! வீட்டில் இருந்து கொண்டு வந்து வச்சுருக்காரோ என்னவோ! இவர்தான் குட்டிக்குட்டி மண் அகல்களில் எண்ணெய் ஊத்தித் திரி போட்டு அங்கங்கே வச்சுக்கிட்டு இருந்தார். 'பெருமாள் கோவிலாச்சே.... சிறிய திருவடி இல்லையா?' ன்னு கேட்டேன். கூப்பிடு தூரத்தில் நிற்கும் கோவிலைக் காட்டி அங்கேன்னார். ஓக்கே....அங்கே போய்த்தான் ஆகணும் போல. கோவிலைப் படம் எடுக்கலாமான்னு கேட்டதுக்கு பட்டரைக் கேக்கணுமுன்னார்.

பட்டரைக் கேட்டதுக்கு சரின்னு தலை ஆட்டினார். நம்ம கெமெரா அப்பப் பார்த்துச் சதி செஞ்சுருச்சு. மூலவரை க்ளிக்குனதும் ஃப்ளாஷ் அடிச்சுருச்சு:( பட்டருக்கு அப்பத்தான் நான் கேட்டது புரிஞ்சுருக்கணும். வேணாம் என்பது போல இன்னொரு தலையாட்டல்.

இந்தக் கோவிலைக் கட்ட ஸ்ரீ பூரண்சந்த் அரோரா அறக்கட்டளை (டில்லி-குருக்ஷேத்ரா) அஞ்சு லட்சம் ரூபாய் நன்கொடை தந்துருக்காங்க.

தென்னிந்தியர்களுக்கு இந்தக் கோவில் ஒரு மீட்டிங் ப்ளேஸ். கோவையைச் சேர்ந்த ஜோடியைச் சந்திச்சோம். இந்த ஊர் வந்து ஒன்னரை வருசமாச்சாம். முதல்முறையா இந்தக்கோவிலுக்கு வந்துருக்காங்க. பாலாஜியைத் தேடித்தேடி இப்போதான் கிடைச்சாராம்!!!! இங்கே தமிழ்ச்சங்கம் ஒன்னு இருக்குன்னு இவுங்க மூலமாத் தெரியவந்துச்சு. விலாசம், தொலைபேசி எண் எல்லாம் வாங்கிக்கிட்டோம். நல்ல நட்புணர்வு உள்ள இளம் தம்பதிகள். யானை பார்டர் போட்ட புடவையால் அறிமுகம் ஆச்சு:-))))))
ஹரிஹர் மந்திருக்குப் போனோம். குருத்வாரா ஸ்டைல் முகப்பு. அதன் தலைமேல் ஒரு பக்கத்தில் சிவலிங்கம். அதன் தலையில் ஒரு நாகம். 733
படிகளேறிப்போனோம். ரெண்டு புறம் இருக்கும் படிகளுக்கு நடுவில் நந்தி! அசப்பில் பார்க்க எமவாகனம் போல இருக்கு!!!! . கொம்பு மட்டும்தான் வித்தியாசம். நமக்கிடது பக்கம் தனி அறையில் சிவன் சந்நிதி. வட இந்திய வழக்கப்படி பக்தர்களே அபிஷேகமோ, பூஜையோ செஞ்சுக்கலாம்.
மெயின் கோவிலுக்குள் போனோம். இங்கேயும் பெரிய ஹால். ஒரு கோடியில் நல்ல அகலமான மூணு சந்நிதிகள். நடுவில் லக்ஷ்மிநாராயணன், அவருக்கு வலப்பக்கம் ஸ்ரீ ராமர்& கோ. இடப்பக்கம் சந்நிதி ராதா & க்ருஷ்ணா. எல்லாமே ஆளுயரப் பளிங்குச்சிலைகள். கண்ணாடிகள் எல்லாம் பதிச்சு ஒரே கலர்ஃபுல்லா அலங்கரிச்சு ஜொலிக்குது. இங்கிருந்த பட்டர்(?) படம் எடுக்க அனுமதி கேட்டதுக்கு, ஆஹா........கொஞ்சம் இருங்க, லைட் போடறேன்னு சந்நிதிகளில் விளக்குகளைப் போட்டுவிட்டார். லக்ஷ்மி நாராயணருக்கு ரெண்டு பக்கமும் கஜேந்திர மோட்சமும்., திருப்பாற்கடல் ஸீனுமா பளிங்கு & கண்ணாடிச் சித்திரங்கள்.


லக்ஷ்மிநாராயன்

ராதா & க்ருஷ்ணா

ராம் & கோ

சந்நிதி முன் பக்தர்கள் உட்கார்ந்து வழிபடக் கம்பளங்கள் தரை முழுக்க விரிச்சு வச்சுருக்காங்க. வலப்புறம் விஷ்ணுதுர்கை, சரஸ்வதி, ஆஞ்சநேயர், சிவன் பார்வதித் தம்பதிகள் நடுவிலே மூத்த மகனுடன் தனித்தனிச் சந்நிதிகள் வரிசை. கடைசியில் ஒரு மூலையில் சிந்தூரப்பூச்சில் ஹனுமன்.
ஹரிஹர் கோவில் இருந்து கூப்பிடுதூரம் பெருமாள் கோவில்.


ரெண்டு கோவில்களுமே அமைதியாவும் சுத்தமாவும் இருக்கு. தென்னிந்தியக் கோவில்கள் பழக்கப்பட்ட மனசுக்கு முதலில் கொஞ்சம் லயிப்பு இல்லாமப்போனாலும்.... கடைசியில் இதுவாச்சும் இருக்கேன்னு ஒரு நிலை வருது பாருங்க. அப்ப எல்லாக் கோவிலுமே ஒன்னுதான்னு ஞானோதயம் பொறந்துரும். அந்த நிலையில் இப்போ நாங்க இருப்பதால் பிரச்சனை ஒன்னும் இதுவரை இல்லை.

ரெண்டாம் தடவை போனப்ப, புதுப் பட்டர் வந்துருக்கார். இளைஞர். சந்தோஷ் குமார். ஹிந்தி சுத்தமாத் தெரியாதாம். ஒரிஜனல் பட்டர் லீவு எடுத்து ஊருக்குப் போயிருக்கார். இவர் அவருக்கு பர்த்தி. ஆந்திராக்காரர். நம்ம தெலுங்கைக் கூர் தீட்ட வேண்டியதாப் போச்சு:-)))))

நேத்து பாருங்க..... சாயங்காலம் சின்னதா ஒரு வாக் போகலாமுன்னு கிளம்புனப்ப ஒரு குருத்வாரா கண்ணில் பட்டுச்சு. நம்மூர் புள்ளையார் கோவில்கள் போல முக்குக்கு முக்கு ஏகப்பட்ட குருத்வாராக்கள். முதல்முறையா இந்திய குருத்வாராக்கள் ஒன்னுலே நுழைஞ்சோம். குருக்ரந்த் ஸாஹிப் ஜிகினாத்துணியால் போர்த்தி வச்சுருந்தாங்க. பூஜை நேரம் இல்லை போல. தப்லாவும் ஹார்மோனியமும் வச்சு ரெண்டு பேர் மெல்லிசான சவுண்டில் வாசிச்சுக்கிட்டு இருந்தாங்க. சேவிச்சுக்கிட்டுப் பிரசாதம் கொடுத்ததை வாங்கிக்கிட்டோம். கோதுமைமாவுலே கேசரி மாதிரி ஒன்னு கிளறி வச்சுருக்காங்க. எங்க கிறைஸ்ட்சர்ச் குருத்வாராவில் இப்படித்தான். இது ஒரு ஸ்டேண்டர்ட் ப்ரசாதம் போல!

வெளியே வந்து என்ன குருத்வாரான்னு பெயரைப் பார்த்தால் நிஹங்காரி தர்பார், ராவல்பிண்டின்னு இருக்கு. அச்சச்சோ..... இது பாகிஸ்தானா!!!!

காலநிலை: வெய்யில் 38 C. கொஞ்சம் காற்று வீசுவதால் பரவாயில்லை. ஆனால் உச்சிப்போதுக்கு 43 C ஆக உயருமாம்.

Monday, May 24, 2010

அதுலே, அறுபத்தியஞ்சு வகை இருக்காமே......

நெசமாவா சொல்றாய்ங்க? ரொம்பப் பெருசாம். ஒரு ரவுண்டுலே உடம்பு மூச்சு வாங்கிறப்போகுது! கைடு(புத்தகம்) சொல்வதை நம்பலாமா வேணாமா? அனுபவிச்சுப் பார்த்துடலாம். கிளம்பு......


செக்டர் 3. போகெய்ன்விலா தோட்டம். கார் பார்க்கிங் இடத்தைப் பார்த்ததும் 'சட்'னு எங்க நியூஸி நினைவு வந்துச்சு.(ஏன்?!!!!) சுழல்கேட் வழியா நுழையணும். 34 வயசாகுது. மொத்தம் 20 ஏக்கர். மெது ஓட்டத்துக்குத் தனிப்பாதை ,வளைஞ்சும் நெளிஞ்சும். நம்மைப்போல உள்ளவர்களுக்கு 'எம்மாந்தூரம் வந்துட்டோமோ'ன்னு பதைபதைக்காமல் இருக்க அங்கங்கே மைல்க்கல். 20 கிராம் இளைப்பது உறுதி! ஆரம்பத்துலேயே வெள்ளையும், ஆரஞ்சும், மஜெந்தாவுமா சில கண்ணில் பட்டன. பாதையோடு போனால்.....ஒரு காங்க்ரீட் அமைப்பு. என்னதான் எழுதி வச்சுருக்கு பார்க்கலாமே..... மனசு அப்படியே கல்லை முழுங்குனாப்போல ஆயிருச்சு.

நம்ம அப்துல்கலாம் ஐயா, தலைவரா இருந்தப்ப வந்து திறந்து வச்சுருக்கார், போர் (கால) நினைவகம். நாட்டின் சுதந்திரத்துக்குப்பிறகு வந்த போர்களில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் ப்ரதேஷ் அண்ட் சண்டிகர் மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான நினைவகம்.
ஏப்ரல் 28. 2004 வது வருடம் அடிக்கல் நாட்டி, ஜூன் 11, 2005 நினைவுக் கட்டிடம் எழுப்ப ஆரம்பிச்சு, ஆகஸ்ட் 17, 2006 வது வருடம் கலாம் ஐயா திறந்து வச்சுருக்கார். J & K operations 1947-48 தொடங்கி வீரர்களின் பெயர்கள் அகரவரிசையா சலவைக்கல்லில் பொறிக்கப்ப்ட்டு இருக்கு. இந்தியா-சீனா போர் 1962, இந்தியா-பாக் போர் 1965, ஆப்பரேஷன் பவன் 1987-89, ஆப்பரேஷன் விஜய் 1999, எல்லையில் நடந்த சண்டைகள், உள்நாட்டுப் பாதுகாப்புக்காக நடந்த சண்டைகள், ஐக்கியநாடுகளுக்காப்போய் பங்கேற்ற வகைகள், ஆப்பரேஷன் கோவா 1961, இந்தியா-பாக் சண்டையில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் INS KHUKRI யில் இருந்த கப்பல்படை வீரர்கள் இப்படி வரிசைவாரியாப் பார்த்தப்ப....... இத்தனை உயிர்கள், இத்தனை குடும்பங்கள், குழந்தைகுட்டிகள்.......

நாம் இப்படிச் சொல்றோமே.... எதிரி நாட்டுலேயும் எத்தனை மனிதர்கள் அழிவுகளைச் சந்திச்சு வீரமரணம் அடைஞ்சுருப்பாங்கன்ற எண்ணமும் வந்துச்சு. எதுக்குப் போர் வந்து உயிர்களை காவு வாங்குதுன்னு.... கலக்கம்தான்.

இதோடு நின்னுடாது.... இன்னமும் போர்கள் வரத்தான் போகுது, வீரர்கள் மரிக்கத்தான் போறாங்கன்றதுபோல வரிசை நீண்டு நீண்டு போய் இன்னும் புதிசா சலவைக்கல் வைக்க ஏதுவான அமைப்பு.....வளைஞ்சு வளைஞ்சு போகும் வெற்றிடங்கள்.

தோட்டத்துக்குப் போன உற்சாக மூடு அப்படியே கழண்டுக்கிச்சு. ச்சும்மா ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம் . 20 கிராம் இளைக்கலைன்னா பீடை போச்சு போங்க. அங்கங்கே நீர் ஓடை போல ஒன்னு வெட்டி வச்சுருக்காங்க. தண்ணீர்தான் இல்லை. அது பக்கத்துலே மூங்கில் புதர்கள். காகிதப்பூக்கள் செடிகள் மட்டுமில்லாமல் அங்கங்கே சில பூக்கும் மரங்கள் இப்படி இருந்த ஒரு இடத்தில் பெரிய ஞானி ஒருத்தர் கம்பீரமா தலை உயர்த்தி, தன் அன்புக் கரங்களை நீட்டி அழைப்பது போல ( அச்சச்சோ...எனக்கு என்னமோ ஆகிருச்சு!) ஒரு பெரிய மாமரம். பிஞ்சுகளா நிறையத் தொங்குது. தொரட்டி ஒன்னைக் கட்டி யாரோ வேலையைக் காமிச்சுருக்காங்க போல. நிறைய இலைகள் கொத்துக்கொத்தா தரையில். கூடவே உடைஞ்சுபோன மூங்கில் தொரட்டி:(

வட்டமான சுற்றுச்சுவர் கட்டி உள்ளே இருக்கைகள் போட்டுருக்க, குடை பிடிச்சதுபோல வட்டத்தைக் கவிழ்ந்து பார்க்கும் போகன்வில்லாச் செடிகள். சூப்பரா இருக்கு. உள்ளே கொஞ்சம் இருளோன்னு இருப்பதுதான் யோசனை.
வரிசைகட்டி நிற்கும் அசோகமரங்கள். பெரிய பெரிய புல்வெளிகள். காலார நடக்கவரும் மூதாட்டிகள் (80+) டர்பன் தலைகளோடு பேசிக்கிட்டே நடக்கும் ஆண்கள் யாரைப்பார்த்தாலும் கோபாலுக்கு ரிட்டயர் மிலிட்டரிக்காரர்கள்தான்:-))) இவ்வளவு குள்ளமா இருக்காங்களே ஆர்மிக்காரர்களா எப்படி இருக்க முடியும்? அளக்கும்போது அரையடி டர்பனையும் கணக்குலே சேர்த்துக்குவாங்களோ ? 'ஙே' ன்னு முழிச்சவர்.
'அப்டீங்கறே? சரி. ரிட்டயர்டு சிவில் சர்வீஸ் மக்கள்னு மாத்திக்கோ'ன்னார்.
'ஆங்.... அது!' இருக்கும், இருக்கும். நம்மூர் மெரினாவில் இப்படி ஒரு க்ரூப் தினமும் வந்து சந்திக்குமாம். ஒரு நாளொருத்தர் வரலைன்னா..... மத்தவங்களுக்கு அடி வயித்துலே திக்!..... எங்கே போனாலும் லீவு சொல்லிட்டுப் போகணும்.

ஆமாம். நம்ம பதிவர் உலகில் எப்படி? லீவு சொல்லாம, வலையிலும் காணலைன்னா தேடுவீங்களா?

சில பேர் சீரியஸ் வாக்கர்ஸ். பச்சை சுடிதார் ஒன்னு நான் (பெஞ்சுலே உக்கார்ந்து) பார்க்கும்போதே பத்து தரம் குறுக்காலே வந்து போச்சு.
'நல்ல' போட்டோக்ராஃபர் ஒருத்தர் கஷ்டப்பட்டு மண்டி போட்டுப் படங்கள் எடுத்துக்கிட்டு இருந்தார். வணங்காமுடியாட்டம் நான் ஒரு பக்கம் ஜஸ்ட் எய்ம் & ஷூட்.
தோட்டத்தின் ஆரம்பத்திலும், கடைசியிலுமா ரெண்டு கழிப்பறைகள். அங்கங்கே குடிநீர் குழாய்கள் எல்லாம் போட்டு வச்சுருக்காங்க. தோட்டத்துக்கு எதிர்ப்பக்கம் ஹரியானா மாநில எம் எல் ஏ ஹாஸ்டல் இருக்கு. ஆளுயர டிஃபன் கேரியரை 'ஏகே 47' வச்சவரின் காவலோடு ஒருத்தர் தூக்க முடியாமத் தூக்கிட்டுப்போனார். இதுலே மட்டும் மாநிலங்களுக்குள் பேதமே இல்லை:-)

அங்கிருந்த நேரத்தில் ,கணிசமான அளவில் மக்கள் வந்து போவதைப் பார்த்தேன். எல்லோருக்கும் பயனா ஓரிடம் இருக்கு. மக்களும் கண்டதைப் போட்டு அசிங்கமாக்காமல் சுத்தமாக வச்சுருக்காங்க.

தோட்டங்கள் நிறைய இருக்கும் மாநிலமாம் இந்த சண்டிகர். நானோ நியூஸியின் தோட்டநகரமான 'கிறைஸ்ட்சர்ச்'சில் இருந்து வந்துருக்கேன். நேச நாடுகளின் தோட்டத்துக்கு நேசம் காமிக்காமப் போகலாமா? (இந்த ஊரில் கிறைஸ்ட்சர்ச் என்ற பெயரில் ஒரு சர்ச் இருக்காம்!) நேரம் கிடைக்கும்போது ஒவ்வொரு தோட்டமாகப் போய்ப்பார்த்து எழுதும் உத்தேசம் உண்டு. இதைப்போலவே இங்குள்ள கோவில்களையும்.

காலநிலை: பயங்கர வெய்யில். 47 டிகிரி செல்ஷியஸ். ஈரப்பதம் 17% அதனால் வேர்ப்பது இல்லை.(சென்னையில் 53%) உடலெங்கும் எரிச்சல் உணர்வு.

Friday, May 21, 2010

வேடிக்கை VS வாழ்க்கை

ஒரு ஊரையோ நாட்டையோச் சும்மாச் சுத்திப் பார்ப்பதைவிட அங்கேயே போய் குடும்பம் நடத்திக் குப்பை கொட்டுவது கொஞ்சம் சவாலான விஷயம்தான், இல்லையா? நிறைய நாட்களுக்குப் பிறகு சரியாச் சொன்னால் 35 வருசத்துக்குப்பிறகு சென்னையில் 'குப்பை கொட்ட' வந்தேன். கல்ச்சுரல் ஷாக்ன்னு சொல்வோம் பாருங்க. அதுதான் உண்மையில் ஏற்பட்டுச்சு. நகரம் வளர்ந்துருக்கு. கூடவே கூட்டமும் குப்பையும்.

அங்கங்கே தெரு முனைகளில் சின்னதா ஒரு குப்பை சேகரிப்புக்கான செவ்வகத் தொட்டி. உண்மையைச் சொன்னால் இந்த அளவுள்ள குப்பைத் தொட்டி ஒரு நாலு வீடுகளுக்கு மட்டுமே போதுமானது. அப்போ மீதி இருக்கும் வீடுகளுக்கு? பிரச்சனையே இதுதான். செய்வாங்க.ஆனா போதுமான அளவான்னு பார்த்துச் செய்ய மாட்டாங்க...... அதில் எப்போதும் நிறைந்து வெளியே வழிந்து தெருமுழுக்கப் பறக்கும் குப்பைகூளங்கள். தெருநாய்களும், குப்பையில் இருந்து காசு பண்ணக்கூடியப் பொருட்களைப் பிரித்தெடுக்கும் மனிதர்களும் சேர்த்து மிச்சம் மீதி உள்ளே இருக்கும் குப்பைகளையும் வெளியே இழுத்துப்போட்டுவிட்டுப் போய்விடுவதையும் பார்க்கிறேன். நாய்கள்....பாவம் நாய்கள். வெளியே இழுத்துப் போட்டவைகளை மீண்டும் அள்ளிப்போடத் தெரியாத ஜென்மம். ஆனால்....மனுஷன்? அப்படியே விட்டுவிட்டுப்போய் விடும் வெறும் ஜென்மம். (செனடாப் ரோடு மட்டும் விதிவிலக்கு. நோ குப்பை. எல்லாம் பளிச்!!!)

தெருவோரங்களை கக்கூஸாக மாற்றி வரும் ஆண்கள் (ஒரே சமத்துவம்தான். கோட்டு சூட் போட்டுக்கிட்டவங்களுக்கும் போற போக்கில் அடக்கமுடியாம அசுத்தம் செஞ்சுட்டுப் போறாய்ங்க) தாறுமாறாய் தெருவெங்கும் ஓடும் ஏகப்பட்ட வண்டிகள். சாலைகளில் நடக்கவே முடியாத நிலை. இருக்கும் கொஞ்சநஞ்ச இடங்களையும் அபகரிக்கும் ப்ளாட்பாரக் கடைகள் ...அடப் போங்கப்பா....எதைச் சொல்ல எதைவிட?


'இங்கெல்லாம் இப்படித்தான் இருக்கும். கொஞ்சநாளைக்கு வந்து இருந்துட்டுப்போற நீ இப்படியெல்லாம் அலட்டிக்கக்கூடாது' ' அண்ணியின் அருள் வாக்கு.

மனசுக்கு ஆசுவாசமா இருந்தது நண்பர்களின் அருகாமை மட்டுமே. இது இப்படி இருக்க, இடப்பெயர்ச்சி மறுபடியும் வந்துச்சு. பத்தே மாசத்தில் ரெண்டாவது முறையாக மூட்டை கட்டினோம். முற்றிலும் புது இடமாச்சேன்னு ஊருளவாரம் பார்க்க ஒரு ரெண்டு மாசம் முன்னால் வந்துட்டுப் போனேன். வீடு கிடைச்சது. ச்சும்மா வேடிக்கை பார்க்க வந்தப்ப ரொம்பவே நல்லா இருந்த இடத்துக்கு இப்போ 'குப்பை கொட்ட' வந்தபின் இண்டு இடுக்குகளில் ஒளிஞ்சுருந்த எல்லாம் கண்ணுலே பட ஆரம்பிச்சுருக்கு. நம் எண்ணங்கள் நேர்மறையா இருக்கணும். அதுதான் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லதுன்ற கொள்கையைக் கடைப்பிடிக்கலைன்னா.... .... மனசை ஒருமுகப்படுத்திக்கிட்டு இருக்கேன்.

முதல்லே குப்பையையே எடுத்துக்கலாம். இந்த நகரில் இதுவரை தெருமூலைக் குப்பைத் தொட்டிகளைக் காணோம். வீட்டுக்குக் குடிவந்த நாள், வீட்டு ஓனர் சொல்லியபடி ஒரு குப்பைத்தொட்டி (20 லிட்டர் கொள்ளும் மூடியோடுள்ள ப்ளாஸ்டிக் வாளி) வாங்கி நம்வீட்டு கேட்டுக்கு உட்புறம் ஒரு மூலையில் வச்சாச்சு. தினமும் காலை எட்டரைமணி அளவில் ஒரு நபர் கேட்டைத் திறந்து உள்ளே வந்து அதை எடுத்துக் காலி செஞ்சு, குப்பையை அவர் கொண்டுவரும் வண்டியில் போட்டுக்கறார். திரும்ப நம் வாளியைக் கொண்டுவந்து உரிய இடத்தில் வச்சுட்டுக் கேட்டைச் சாத்திக்கிட்டு போறார். எல்லார் வீட்டுக்கும் காம்பவுண்ட் சுவர் இருக்கு. மாசம் 25 ரூபாய் சிட்டிக் கவுன்ஸிலுக்கு நாம் கொடுக்கணும். ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை 50 அடைச்சால் போதும். வீட்டுக்கு ஆள் வந்து காசையும் கலெக்ட் செய்யறார்.
ஒவ்வொரு வகைப் பொருட்களுக்கும் ஒவ்வொரு செக்டரில் விசேஷக் கடைகள் இருக்குன்னு முந்தி சொல்லி இருந்தேன் பாருங்க. அது உதவியாவும் அதேசமயம் உபத்திரவமாவும் இருக்கு. வீட்டுலே ஒரு ஆணி அடிக்கணும். ஆணி வாங்க இந்த எண் உள்ள செக்டர் போகணும். காய் வாங்க இந்த எண், பூ வாங்க இந்த எண், உப்புப்புளி மொளகாய் வாங்க இந்த எண் இப்படி வெறும் எண்களையே மனப்பாடம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். இன்னும் ஊர் சரியாப் பிடிபடலை. ஊர் முழுக்கக் கோவில்கள் இருக்கு. அதுக்கும் செக்டர் எண்களை நினைவில் வச்சுக்கணும். 'எண்ணும் எண்ணும் கண்ணெனத் தகும்' நம்பர் மறந்தால் போச்சு:(
வீடுன்னா ரெண்டு செடிகள் இருக்கணுமேன்னு நாலு செடிகளை வாங்கிவந்து மொட்டைமாடியில் வச்சுருக்கேன். அடுக்கு மல்லி ச்சும்மா ஜமாய்க்குது வாசம். மற்றவை செத்திப்பூ, அப்புறம் பெயர் தெரியாத ஒன்னு ஆரஞ்சுப்பூ பூக்குது. எவர்க்ரீனா ஒன்னு இருக்கட்டுமுன்னு கள்ளிவகையில் சக்கூலண்ட் வாங்கி வந்துருக்கேன். செடி வாங்க ஒரு செக்டர், அதுக்குண்டான தொட்டி வாங்க இன்னொரு செக்டர்:-)))))
ஊரெங்கும் பசுமையான மாந்தோப்புகள் & மஞ்சள் மரங்கள். இப்போ சரக்கொன்றை பூக்கும் காலம்.
அநேகமா இங்கே இந்த ஊரில் ஒரு பத்து மாசம் இருக்கவேண்டி இருக்கலாம். சண்டி(ந)கரில் காலூன்றிய ஒரு புதிய சண்டியின் கண்ணோட்டத்தில்......அப்பப்பக் 'கண்டதை' இங்கே போட்டுவைக்க உத்தேசம்.
காலநிலை: வெய்யில் சக்கைப்போடு போடுது. 44 டிகிரி செல்ஷியஸ். வீட்டுக்குள்ளே 36

Wednesday, May 19, 2010

ஏன்றி, ஸொல்ப மூடுபிட்றி

கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு வர்றியான்னு, ' யாரோ..... யாரையோ' கேக்குறமாதிரி இருக்குல்லே?

புலம்பல்ஸ் டே ஆகிப்போச்சே.... சாப்பிட ஏதுவான ஒரு இடமும் பெல்தங்காடியில் கண்ணில் படலை. இன்னும் கொஞ்சம் போய்ப் பார்க்கலாமுன்னு இவ்வளவு தூரம் வந்துருந்தோம். ஒரு காண்டினெண்டல் ரெஸ்டாரண்டு பெயரைப் பார்த்து அங்கே போனால்.... ஏர் கண்டிஷன் அறையிலே நம்மளை இருத்தி, ஏஸி போட்டுவிட்டுட்டு ஆர்டர் எடுத்துக்கிட்டுப் போனாங்க. ரெண்டு பரோட்டா, ஒரு வெஜிடபிள் கறி. 'நான் வெஜ்' வேணாமா வேணாமான்னு பத்து முறை கேட்டுட்டுப்போன சப்ளையர் நம்மைச் சுத்தமா மறந்துட்டார். ஒரு இருவது நிமிஷம் போயிருக்கும். என்னதான் ஆச்சுன்னு கேட்டுட்டுவரப்போன கோபால், 'இப்போ கொண்டு வர்றாராமு'ன்னு சொல்லி இன்னும் அஞ்சு நிமிசம் ஆச்சு. ஊஹூம்...... நோ ஸைன்!

இனி காத்திருக்க முடியாது போய் ஆர்டரைக் கேன்ஸல் செஞ்சுட்டுக் கிளம்பலாமுன்னு ரெண்டு பேருமா கல்லா இருக்கும் அடுத்த வாசலுக்குப் போனால்....அடுத்திருந்த ஹாலில் நிறைய ஆட்கள் இருந்து சிக்கனும் மட்டனும் மீனுமா வெட்டி விழுங்கிக்கிட்டு இருக்காங்க. சுடச்சுடப் பரோட்டா அடுக்கைக் கொண்டுவந்து அங்கே விளம்பறார் ஒரு பணியாளர்.

நாம் வெஜ் என்றபடியால் மெனெக்கெடலை போல இருக்கு. கல்லாவில் இருந்தவரிடம் ஆர்டரைக் கேன்ஸல் செஞ்சுருங்க. நேரமில்லை காத்திருக்கன்னா...அவர் அதெல்லாம் முடியாது. இதோ வந்துருதுன்றார். சரி. இதுக்குண்டான காசையாவது வாங்கிக்குங்க. எங்களுக்கு ஒன்னும் வேணாமுன்னா முடியாதாம். காசை வாங்கிக்க மாட்டாராம். பரோட்டாவை நம் வாயில் திணிச்சுட்டுத்தான் காசு வாங்கிப்பாராம். அந்த ஆள் பணியாளரை நோக்கிக் கத்துனதும்தான் தெரிஞ்சது ஆயாள் ஒரு சேட்டனாணு. சரியான இடத்துலே நான் தலையிட்டேன். 'தீரே சமயமில்லா. இனியும் ஒருபாடு தூரம் யாத்ரை பாக்கி உண்டு. நேரத்தே போயில்லெங்கில் ப்ளேன் போய்க்கழியும்.'

தயை உள்ள பார்வையை நம் பக்கமும், அக்னிப்பார்வையைப் பணியாளரிடம் ஒரே சமயத்தில் வீசினார் சேட்டன். தடதடன்னு ஆடும் கையால் ரெண்டு தட்டுகளில் வெறும் பரோட்டா வருது. 'பார்ஸல் ஆய்க்கோட்டே'ன்னு நாங்க சொன்னதும் திரும்ப உள்ளெ எடுத்துக்கிட்டு ஓடப்பாக்கிறார். சேட்டன் இன்னொரு முறைப்பை அனுப்புனதும் ஒரு ப்ரவுன் கவரில் போட்டுக் கொடுத்தார். 24 ரூபாயைக் கொடுத்துட்டு அதை எடுத்துக்கிட்டு 'கறி கறி' ன்னு பின்னால் இருந்து வந்த கூச்சலைக் கண்டுக்காம hurry hurry ஓடுனோம்.

தர்மஸ்தலாவில் இருந்து 53 கி.மீ. தூரத்தில் இருக்கும் மூடபிட்றிக்கு வந்து சேர்ந்தாச்சு. வண்டியில் வரும்போதே பசிப்பிணியைத் தீர்க்க ஒவ்வொரு பரோட்டாவை சின்ன ரோலாச் சுருட்டி வக் வக்ன்னு தண்ணீரைக் குடிச்சுக்கிட்டே தின்னோம். வாயே சரி இல்லை. மொழுக்ன்னு இருக்கு. ஸ்ரீராமர் கோவில் புள்ளையார் கொடுத்த லட்டு கைவசம் இருக்கேன்னு நினைவு வந்துச்சு. அதை மூணாப் பகிர்ந்துக்கிட்டோம். ப்ரசாதமாச்சே.... தனியாத் திங்கலாமா?

சின்னத்தெருக்களில் நுழைஞ்சு ஆயிரம் தூண் பஸாடிக்குப் போறோம். இந்த மூடபிட்றிதான் சமண மதத்தினரின் காசி. நம்ம அதிர்ஷ்டம் பாருங்க...... 'உத்திர காசி'க்குப் போகணுமுன்னு ஆசைப்பட்டதுக்கு 'தக்ஷிண் காசின்னு கோகர்ணாவையும் ஜைன காசி'ன்னு இங்கேயும் வந்துக்கிட்டு இருக்கேன். வரும்வழியில் சமண மடங்கள் சில இருக்கு. சமண மத சம்பந்தமான ஸ்ரீமதி ராமராணி ஆராய்ச்சி மையம் இங்கே இருக்கு. கையால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளின் பெரிய தொகுப்பு இங்கே இருக்காம். உலகம் முழுவதிலும் இருந்து ஜைனமத ஆராய்ச்சியாளர்கள் வந்து போகும் இடமாம். காசி என்ற பெயரும் இருப்பதால் சமணர்கள் வருசம் முழுசும் யாத்ரீகர்களா வந்துக்கிட்டே இருப்பாங்களாம். இங்கே அப்படி வரும் மக்களுக்குத் தங்கும் வசதிகள் செஞ்சு வச்சுருக்காங்க.
கோவில் இருக்கும் தெருவுக்குள் திரும்பினால் கண் எதிரே சுமாரான அளவில் முகப்போடு 'த்ரிபுவன திலக சூடாமணி' பஸாடி. அஞ்சாம் நூற்றாண்டு சமாச்சாரம். தெருவின் இரண்டு பக்கங்களிலும் திண்ணைவச்ச அழகான சின்ன அளவிலான வீடுகள். பளபளன்னு மின்னும் கதவுகள் வா வான்னு கூப்புடுது. கோவிலுக்குள்ளே நுழைஞ்சால் தேருக்கு நடுவில் என்னமோ மரக்கம்பம் வச்சுக்கிட்டு இருக்காங்க. திருவிழா வரப்போகுது போல!
சமணமதம் இந்தப் பக்கங்களில் தழைத்திருந்த காலக்கட்டங்களில் இங்கே கட்டப்பட்ட 18 பஸாடிகளுக்கும் தலைமையா இருந்தது இதுதான். அலங்காரமும் அளவும் இங்கேதான் பிரமாதம். விதவிதமான சிற்ப வேலைப்பாடுகள் உள்ள தூண்கள் ஏராளம். எண்ண முடியலைன்னோ என்னவோ இதுக்கு ஆயிரம் தூண்கள் பஸாடின்னு பெயர் வச்சுட்டாங்க.
வழக்கம்போல் ரெண்டு பக்கமும் யானைகள் நிற்கும் படிகள். மகாஸ்தம்பம், கொடிமரம் கடந்து, கோவிலைப் பார்த்துக்கும் ட்யூட்டியில் இருந்தவரிடம் ஒரு தொகையை கோவிலுக்கு நன்கொடையாகக் கொடுத்து ரசீது வாங்கிக்கிட்டோம். படம் எடுத்துக்க அனுமதி கிடைச்சதோடு அவரே வந்து ஒவ்வொன்னையும் உடைஞ்ச தமிழில் விளக்கிச் சொன்னார். நம்ம சென்னை 'பாம்க்ரோ ஹொட்டேலில்'' அஞ்சு வருசம் வேலை செஞ்சுருக்காராம்!

முகப்பு வாசக் கதவில் இருந்தே அற்புதமான சிற்ப வேலைகள் ஆரம்பிச்சுருது. முன்மண்டபத்துலே ஒவ்வொரு தூணும் 'ஆ'ன்னு வாயைப்பிளக்க வைக்குது. ராமாயணக் காட்சிகள் அற்புதம். சேது கட்டுவதற்கு சுக்ரீவனோட சேனைகள் கல்லைச் சுமந்து கொண்டு போய்க் கடலில் போடும் சிற்பம் சூப்பர்.

பாம்க்ரோவ்காரர் இல்லைன்னா இதைக் கவனிச்சுப் பார்த்திருக்க முடியாது. இங்கேயும் மண்டபத்தில் சிலர் கடலை வறுத்துக்கிட்டு இருந்தாங்க. கல்லைக் கடைஞ்செடுத்த தூண்களும் சிற்பங்களும். நம் கை நுழையும் விதத்தில் பெரிய தூண்களில் சுத்திவரச் சின்னதாக் குட்டிக் கணுக்களாத் தூண்கள். வெறும் தூண்களுக்கே தனியா ஒரு ஆல்பம் போடத்தான் வேணும். நேரம் கிடைக்கட்டும்

தூரத்தே இருக்கும் கருவறையில் மூலவர் ஜொலிக்கிறார்.

தவழும் கண்ணன் வெண்ணை சுவைக்கிறான். நாட்டிய மங்கைகளும் யானைகளும் அலங்காரக் கதவுகளும் அழகழகான சிற்பங்கள் உள்ள தூண்களுமா எதைச்சொல்ல எதை விட? இண்டு இடுக்கு விடாமல் எப்படித்தான் செதுக்குனாங்களோ!!!!
மண்டபத்தின் உள்ளே இருந்து அண்ணாந்து பார்த்தால்.... வெறுங்கல்லால் எப்படியெல்லாம் உள்கூரை அமைச்சுருக்காங்க!!! எப்படி எதுக்கும் அசையாமல் 1500 வருசங்களா நிக்குது!!!!
வெளிப்புறம் ப்ரகாரம் சுற்றிவரத் திண்ணைமேடை இருக்கு. அங்கேயும் மூணு வரிசைகளில் தூண்களோ தூண்கள். நமக்கு ஆறு பக்கமும் கற்களைத்தவிர வேறொன்னுமே இல்லை. கேரளபாணியில் மேல்மாடம் உள்ள கூரை. அங்கேயும் சிற்பவேலைப்பாடுகள். திருவிழாவுக்குக் கொளுத்தும் தீவட்டின்னு ஏகப்பட்டவை.
கோவில் இருக்கும் அடி பீடத்தையும் விட்டுவைக்கலை. அங்கே ஒரு தீ உமிழும் சீன ட்ராகனைப் பார்த்து அசந்து போயிட்டேன்.
யானைக்கும் குதிரைக்கும் குரங்குக்கும் சிம்மத்துக்கும் அளவே இல்லாம எல்லா இடங்களிலும் நீக்கமற!!!!

தலவிருட்சம் இருக்கும் மேடை வெளிப்பிரகாரத்துலே. கோவில் படு சுத்தம். மாடி ஏறிப்போய்ப் பார்க்க அனுமதி கிடைக்கலை. சந்நியாசிகள் சிலர் தங்கி இருக்காங்களாம்.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அருமையான கோவிலைப் பார்த்த மனத்திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பி பாஜ்பே விமான நிலையம் வந்து சேர்ந்தோம். இருபத்திமூணே கிமீதான். அரைமணியில் கொண்டுவந்து தள்ளிட்டார் ப்ரஷாந்த். இது அவரோட ஏரியாவாச்சே! சிட்டிக்குள்ளே போகாததால் 20 கிமீ தூரம் மிச்சமாச்சு.

கிங் ஃபிஷர் பணியாளர்கள் ஓடோடிவந்து விசாரிச்சுச் சாமான்களை ட்ராலியில் ஏற்றி 'செக் இன்' செய்யும் கவுண்டருக்கு அழைச்சுக்கிட்டுப்போய் போர்டிங் பாஸ் வாங்கும்வரை எல்லா சேவைகளையும் இனிய முகத்தோடு செஞ்சாங்க. சிகப்புக் கம்பளமும், வெத்திலை பாக்கும்தான் பாக்கி. இதென்னடா நாம் எந்த லோகத்தில் இருக்கோம்னு நினைச்சேன். இதுவும் பார்ட் ஆஃப் இண்டியாதானே!!!!!!

ப்ரஷாந்துக்கு நன்றி சொல்லிட்டு அப்படியே நம்மாலான உபதேசம் ஒன்னும் செஞ்சேன். சின்ன வயசுக்குள்ள வேகம் இருக்கும். ஆனால் மலைவளைவுப் பாதைகளில் வேகமாப் போகாமல் கவனமாக வண்டி ஓட்டணும். வாழ்க்கை இன்னும் ரொம்ப இருக்கு உமக்கு. இருந்து எல்லாத்தையும் வாழ்ந்து பார்க்கவேணாமா?
சரின்னு தலை ஆட்டுனவரின் கண்களில் என்னமோ இருந்தமாதிரி (எனக்கு) தோணுச்சு. விடுங்க......... ப்ரமை .....
'தீர்த்தயாத்திரை' முடிச்சவளுக்குப் போனஸா போனால் போகட்டுமுன்னு சாமி பிஸினெஸ் க்ளாஸ்லே ஸீட் போட்டுருந்தார். ஏற்கெனவே நெட் மூலம் ஸீட் தெரிவு செஞ்சுருந்தோம். வழக்கமான விமானம் இல்லாமல் ஸ்ரீலங்கா போகும் விமானம் வந்துருக்காம். சென்னையில் நம்மை இறக்கிட்டு இலங்கை போகுதாம். எப்படியோ நல்ல இருக்கை கிடைச்சது. பெண்களூர் வந்து ஒரு மணி நேரம் கழிச்சுக் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தோம்.
'சரியாக் கணக்குப்போட்டுச் சொன்னால்' மங்களூர் வந்து இறங்கியதில் இருந்து திரும்ப மங்களூர் விமானநிலையம் வரை 'ஏறக்குறைய' 100 மணி நேரம் ஊர்சுற்றிப் பார்த்ததில் நான் அனுபவித்த எல்லாக் காட்சிகளையும் ப்ளஸ் & மைனஸ் உட்பட 32 பதிவுகளா எழுதி இருக்கேன். ஆரம்பம் முதல் கூடவே வந்தவர்களுக்கும் இடையில் வந்து கலந்துக்கிட்டவர்களுக்கும், பின்னூட்டம் இட்டும் இடாமலும் ஆதரவு தந்த அனைத்து வாசக நண்பர்களுக்கும், நம் சரித்திர வகுப்புக் கண்மணிகளுக்கும் என் இனிய வணக்கங்களும் நன்றிகளும்.

மீண்டும் சந்திக்கும் வரை,
என்றும் அன்புடன்,
உங்கள் துளசி டீச்சர்.