உஸ்.............அப்பாடா...... என்ன இப்படி ஒரு கடும் வெய்யில். வீட்டில் இருக்கும் நாலு ஏஸிக்களையும் போட்டுவிட்டாலும் கொதிப்பு அடங்கலையேன்னு ஏழெட்டாயிரம் கொடுத்து ஒரு ஏர்கூலர் வேறு வாங்கியாந்து முகத்துக்கு முன்னாலே வைக்கும்படி ஆனது. அப்ப வீட்டுக்காரம்மா சொன்னாங்க.... இங்கே வெயிலும் அதிகம், குளிரும் அதிகம்.
ஆமாம் போ(ங்க) நாம் பார்க்காத குளிரா? இதெல்லாம் ஜூஜுபி. என் மரமண்டைக்குச் சரியா யோசிக்கத் தெரியலை. குளிர் ஆரம்பிச்சது. 28 தான்னு மிதப்பாய் இருந்தப்ப, தலைக் குல்லாவோடு வந்த பணிப்பெண்ணைப் பார்த்து மனசில் ஒரு இளக்காரம். டிசம்பர் கடைசி வாரம் சென்னைக்குப் போய்வர வாய்ப்பு கிடைச்சதும்தான்.... பனிமூட்டத்தால் விமானங்கள் சரியான நேரத்துக்குப்போறதில்லை என்ற தகவலைக் கவனிக்க ஆரம்பிச்சேன்.
நல்ல வேளையாக கிளம்பிப்போன தினம் எல்லாம் சுகமே! மறு நாளில் இருந்து அடுத்துவந்த மூணு நாட்களிலும் ஃப்ளைட்டுகள் பலதும் கேன்சலாச்சுன்னு தெரிஞ்சதும் (அதான் தினமும் சண்டிகர் விஷயங்களை வலைமூலம் படிச்சுக்கிட்டு இருந்தோம் பாருங்க) நம்ம அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். நாம் கிளம்புன நாள் குழப்பம் இல்லாம இருந்துச்சுன்னு அல்ப மகிழ்ச்சி. சூலம் ஒன்னும் இல்லை போல:-)
புதுவருசம் முடிஞ்சு மறுநாள் இங்கே சண்டிகர் வந்து சேர்ந்தோம். விமானம் தரை தொட்டதும் குளிரின் தாக்குதல். ஏணியில் இறங்கித்தான் நடந்து கட்டிடத்துக்குள்ளே வரணும். பத்தே நாளில் ப்ளேட்டைத் திருப்பிப் போட்டுருக்கு காலம். வீட்டுக்குளே நுழைஞ்சதும் முதுகுத்தண்டில் ஒரு சிலிர்ப்பு..
நியூஸி போன முதல் வருசம் முதல் குளிரில் கார்பார்க்கிலே இருந்து மால் கட்டிடத்துக்குள் போய் புகுந்துக்கும் இடைவெளியில் அடிமைப்பெண் எம்ஜிஆர்' ஆக்ட் கொடுத்தது நினைவுக்கு வருது. காரில் இருக்கும் ஹீட்டரால் உடம்பைக் காப்பாத்தி வீட்டுக்குள் நுழைஞ்சதும் ஃபயர் ப்ளேஸ் மட்டுமே கதின்னு இருந்த காலம். பக்கத்துலே தொலைக்காட்சிப்பெட்டி. அதுக்குத் தொட்டுக்க நொறுக்குத்தீனின்னு குண்டடிச்சது அப்பதான். அது வாடகை வீடுதான்னாலும் சமையலறை, குளியலறை தவிர எல்லா இடங்களிலும் தரைவிரிப்பா கார்பெட் போட்டுருக்கும்.
சொந்தவீட்டுக்கு வந்ததும் மனம்போல் ஹீட்டர்ஸ்கள் எல்லா அறைகளிலும். விதவிதமாய். லிவிங் ஏரியாவில் கட்டைபோட்டு திகுதிகுன்னு எரியவிடும் ஃபயர் ப்ளேஸ். படுக்கை அறைகளுக்கு ஃபேன் ஹீட்டர்ஸ், ஆயில்காலம்(ன்) ஹீட்டர்ஸ், ஹீட்டிங் ராட். ஹால்வேக்களுக்கு ஸ்பேஸ் ஹீட்டர்ஸ் இப்படி ஜமாய்ச்சோம். நம்மவீட்டில் தலைவருக்கு போடத்தான் தெரியும் அணைக்கத்தெரியாது:( இதனாலேயே நாளொரு சண்டையும் பொழுதொரு விவாதமும் சூடாக இருக்கும். சொல்லிச்சொல்லி மாளலைன்னு வீட்டு வாசல் கதவில் " 'ஹீட்டரை அணைச்சாச்சா?' ன்னு பெரிய எழுத்து அறிவிப்பை ஒட்டி வச்சேன். எண்ணி மூணுநாள் (மட்டும்) அது ஒர்க்கவுட் ஆச்சு. அப்புறம்..... வீட்டில் இருக்கும் பல பொருட்களில் அதுவும் ஒன்னு! ஹூ கேர்ஸ்:(
புதுவீடு கட்டும்போது, அப்போ மார்கெட்டில் புதுசாக இருந்த பலவித ஹீட்டர்ஸ்களை ஆராய்ஞ்சு ஹீட் பம்ப் எனப்படும் சுவரில் மாட்டும் ஹீட்டர்களை எல்லா அறைகளுக்கும் பொருத்தினோம். இவைகள் குளிர்காலத்துக்கு சூடான காற்றையும் கோடையில் (!!) குளிர்காற்றையும் கொடுக்கும் வகை. அடுக்களை, குளியலறை போன்ற ஈரம் உள்ள இடங்களுக்காக அண்டர் ஃப்ளோர் ஹீட்டிங் அமைச்சோம். வீடுமுழுக்க நல்ல உயர்தரத்திலான கம்பளி விரிப்பு. கண்ணாடி ஜன்னல்கள் கதவுகள் எல்லாமே டபுள் க்ளேஸிங்க். குழாயைத் திறந்தா நமக்கு வேண்டிய சூட்டில் நிற்காமல் பொழியும் சுடுதண்ணி இப்படி........
சிறிய விளம்பர இடைவெளி! ( வீடு வா வாங்குது என்ற தொடரில் விஸ்தாரமா எல்லாத்தையும் எழுதி இருக்கேன். )
குளிர் விட்டுப்போச்சு எனக்கு. 'நியூஸிக் குளிரே, ஹௌ ஆர் யூ?'ன்னு மிதப்பாக் கேட்காத குறை:-)))
சண்டிகர் வீட்டுக்காரமா சொன்னதன் பொருள் இப்பத்தான் உரைக்குது. எக்ஸ்ட்ரீம் கோல்ட். அதுசரி. ஏன் இங்கே வீடுகளில் உஷ்ணம் கூட்ட வசதி ஏதுமில்லை?
'மழை பெய்கிறது ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள் எருமைகளைப்போல் எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள். ஈரத்திலேயே உட்காருகிறார்கள். ஈரத்திலேயே நடக்கிறார்கள். ஈரத்திலேயே படுக்கிறார்கள். ஈரத்திலேயே சமையல். ஈரத்திலேயே உணவு உலர்ந்த தமிழன் மருந்துக்கும் கூட அகப்படமாட்டான்." இப்படித் தமிழனைத் திட்டுவது நம்ம பாரதியார்தான்.
தமிழனுக்கு மழைன்னா வடக்கனுக்குக் குளிர்!
எதுவும் பழகிப்போனால் இப்படித்தான் போல. சட்டை செய்யமாட்டோம்:(
ஒரு அரை நூற்றாண்டுக்கு முன் மின் இணைப்பு வராத புது வீட்டில் சிலமாதங்கள் வசித்தோம். எல்லா அறைகளிலும் சிம்னி விளக்கு. அண்ணன் அறைக்கு மட்டும் ஹரிகேன் லேம்பு. படிக்கிற புள்ளையில்லெ! வீட்டின் கடைக்குட்டி என்பதால் எனக்கு அதிலும் முன்னுரிமை. அண்னனிடம் இருந்து பறித்த லாந்தரைக் கையில் பிடிச்சுக்கிட்டே அலைவேன் . இப்போ அதைப்போலத்தான் சின்ன ஹீட்டர் ஒன்னு வாங்கிவச்சுக்கிட்டு இங்கே அறைஅறையாத் தூக்கிட்டு நடக்கேன்:(
கோவிலுக்குப் போனாலும் கடவுளர்கள் அனைவரும் குளிரில் நடுக்கத்துடன். போனவாரம் வெண்ணைக்காப்பு அனுமனைக் காப்பாத்த வெந்நீர் அபிஷேகம் நடத்தவேண்டியதாப் போச்சு. குளிர் காலத்துலே மக்கள் வருவதில்லையாம். சாமிகள் அப்படியெல்லாம் விட்டுட்டுப்போக முடியுமா? போக்கிடம் ஏது? குருக்களும் கம்பளி உடுப்பில் கண்ணைமட்டும் காட்டிக்கிட்டு இருக்கார். தீபம் காட்டிய தட்டை நீட்டினால் நாமே விபூதி குங்குமத்தைத் தொட்டு எடுத்துக்கணும். பளிங்குத்தரையில் கால்பதிச்சு வலம் வரும்போது ..........
போனவாரம் விமானநிலையத்தை இழுத்துச் சாத்திப் பூட்டே போட்டாச்சு. ரயிலு இருக்கேன்னா.... அதுவும் அஞ்சு அடிக்கு முன்னால் இருக்கும் பாதையைக் காமிக்கலை. அவ்வளவு பனிமூட்டம். 'நடந்துபோகும் 'வேகத்தில்' ஓட்டி தில்லி போக நாலுநாள்:(
இங்கே எல்லாமே வெய்யில் காலத்திற்காகக் கட்டப்பட்ட வீடுகள். மார்பிள் தரைகள். வெய்யிலின் உக்கிரத்தில் மொட்டைமாடியில் பிரதிபலிக்கும் வெய்யிலின் கடுமை பயணப்பட்டு வீட்டுக்குள்ளும் வந்துருது. எதுக்கு அநாவசியமா மார்பிள் தரை? தாஜ்மஹலா பாழாப்போறது?
குளிர் காலம் இங்கே இந்த வருசம்தான் முதல்முறையா? வருசாவருசம் திருவிழாபோல் அதுவும் ஆரம்பத்துலே இருந்தே இருக்கே. பின்னே ஏன் அதுக்கான பாதுகாப்புடன் வீடுகளைக் கட்டுவதில்லை? குறைஞ்சபட்சம் ஒரு கணப்படுப்பு வைக்கக்கூடாதா?பயங்கர ஃபேஷன், தமிழ்சினிமாவுக்கு நாயகிகளை அள்ளி அள்ளி சப்ளை பண்ணும் மாநிலம் இப்படி எல்லாமே அப் டு டேட்டா இருக்கும் இடத்தில் ஏன் யாருக்குமே குளிர்கால ஏற்பாடுகளைச் செஞ்சுக்கணுமுன்னு தோணலை????? போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு சொல்லாமக்கொள்ளாம அப்பப்ப கரண்டு போயிருது.
வீட்டு வேலைக்கு வரும் உதவியாளர்கள் பாடு இன்னும் மோசம். அடுக்களையில் இருக்கும் கீஸரை எப்பவும் போட்டு வச்சுருக்கேன். தினம்தினம் தரையைத் துடைக்கவேணாமுன்னும் சொல்லியிருக்கேன். மார்பிள் தரையின் கெட்ட சுபாவம், துடைச்சுத் துடைச்சு வச்சாலும் ஏகப்பட்ட அழுக்கு. நம்ம சரோஜோ நல்ல நாளிலேயே நாழிப் பால்.!
இது புலம்பல்ஸ் காலம். இன்னும் ரெண்டு மாசத்துக்கு நம் வாழ்க்கை இந்த மார்ச்சுவரியில்தான்:(
சமர்ப்பணம்: தில்லி வாழ் பதிவுலக நட்புகளுக்கு.
Monday, January 10, 2011
ஜனவரிக்கும் ஃபிப்ரவரிக்கும் முன்பே மார்ச்சுவரி வந்துருது!
Posted by
துளசி கோபால்
at
1/10/2011 07:43:00 PM
23
comments
Labels: அனுபவம் Chandigarh
Thursday, June 24, 2010
ஏழாம்படைவீட்டில் ஏழு வயசு பாலகனுக்கு................பூ நூல் போட்டாச்சு
பாரத பூமியில், முருகனின் ஏழாம்படை வீடாக இருக்குதாம், 'சண்டிகர் முருகன் கோவில்'. முந்தின ஆறைத் தமிழ்நாட்டில் பார்க்கலாம். ஆறிடம் ஓட நேரமில்லைன்னா சிங்காரச்சென்னை, பெஸண்ட் நகரில் ஒரு அறுபடைவீடு கோவில் இருக்கு.
இந்திய அரசின் விமானப்படையினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு சின்னக் கோவிலாக ஆரம்பிச்சதாம். அப்போ ஒரு வேல் மட்டும் மூலவராக வச்சு சின்னதா ஒரு சந்நிதி. சுற்றிவரத் தகரத்தால் மேல் கூரையிட்ட வெராந்தா. படிப்படியாக வளர்ந்த விதம் பற்றி இன்னொரு நாள் பார்க்கலாம் (இன்னும் முழுவிவரமும் கிடைக்கலை).ஸ்ரீ லக்ஷ்மிநாராயண் மந்திர்
யாகமண்டபம் நல்லா இருக்குல்லே?
இப்போது இருக்கும் கோவில் கொஞ்சம் பெருசாகத்தான் இருக்கு. நம்ம அடையார் அனந்த பத்மநாபன் கோவிலில் பாதி அளவு இருக்கும். ஸ்ரீ கார்த்திகேய ஸ்வாமி கோவில். செக்டர் 31D. Airforce Temple Complex. இந்த வளாகத்துக்குள்ளே முருகனைக் கடந்து போனால்.....பஜனை, சத்சங்கம் நடத்திக்க ஒரு சின்ன ஹாலும், அதை அடுத்து ஒரு லக்ஷ்மிநாராயணன் கோவிலும் (வட இந்திய முறைப்படிப் பளிங்குச்சிலைகள்) யாகம் செய்வதற்கான மண்டபம் ஒன்னும் இருக்கு. தமிழர்கள் கோரிக்கைகளை ஏற்று சின்னதா இடம் கொடுத்தாங்களாம். நமக்கு அப்போ.தெருவில் இருந்து வளாகத்துக்குள்ளே நுழைஞ்சால் வாசலில் 'நான்'! நமக்கு இடப்புறம் அழகான சின்ன விமானத்தோடு கூடிய கோவில். கண்ணுக்கு முன்னால் கருவறை. படிகூட ஏறாமல் வாசலில் இருந்தேகூட வள்ளி தேவசேனாவுடன் இருக்கும் கார்த்திகேயனை தரிசிக்கலாம். நல்ல நீளமான படிகள். அர்த்தமண்டபத்தின் படியேறுமுன் முகப்பின் இரு பக்கமும் உசரத்தில் பரிச்சயமான முகங்கள். ஓருத்தர் நம்ம அவ்வை. அப்ப இன்னொருத்தர்? ஜடாமுடிக்கொண்டையைப் பார்த்து அவர் திருவள்ளுவர்ன்னு சாதிச்சேன். ஆனால்.... அவர் அருணகிரிநாதரா இருந்தார்!!!!!
உள்ளே போனால் நமக்கிடப்புறம் செல்லம்போல நிற்கும் சின்ன ஆஞ்சநேயர். இவரை மார்போடு அணைச்சுப்பிடிச்சுத் தூக்கி வந்தாராம் கோவில் காரியதரிசியாகப் பொறுப்பேத்து நடத்தும் நண்பர் ராஜசேகர்.
இங்கே வீடுமாற்றி வந்த பிறகு வந்த முதல் சனிக்கிழமை. பெருமாள் கோவிலைத் தேடிப்பிடிச்சுப் போனோம். அங்கே சந்திச்ச ஒரு தமிழ்ஜோடி சொன்ன தகவல்கள்தான் சண்டிகர் முருகனும் தமிழ்ச்சங்கமும். அடுத்துவந்த ஒரு ஞாயிறில் முருகனைத்தேடிக் கண்டடைந்தோம். கோவிலுக்குக் கிளம்புமுன்னே தமிழ்ச்சங்க விவரம் கிடைக்குமான்னு நமக்குக் கிடைச்ச தகவலைப் பயன்படுத்தினால்..... குறிப்பிட்ட நபர் ஒரு மீட்டிங்கில் இருப்பதாகவும் கொஞ்ச நேரத்தில் அது முடியுமுன்னும் சேதி.
கருவறை விமானம்
முருகனை வலம்வந்து வணங்கியபின், கோவிலில் விவரம் கேட்டால் இதே எண்ணைத் தந்தாங்க. சண்டிகர் முழுசும் வாழ்க்கை எண்களால் மட்டுமேன்றதால் மறுபடி அவரைக் கூப்பிட்டோம். எங்கே இருக்கீங்கன்னார். பக்கத்துலே இன்னொரு செக்டர் எண்ணுக்கு வழி சொல்லி அங்கே வந்துருங்கன்னார். அங்கே அவர் சொன்ன இடத்துக்குப் போனால் அவர் குடும்பமே காத்துருக்கு. தற்சமயம் இவர்தான் இங்கே எல்லாமே!!!! நிறையப் பேசினோம். மேட்டர் ஏராளமாக் கிடைச்சது:-)கோவில் தூண்கள் ஒவ்வொன்னும் லட்சம் பெறும் ! மொத்தம் 33 லட்சம் ஸ்ரீராமஜெயம் எழுதப்பட்டு ஒவ்வொன்னுக்கும் அடியில் ஒரு லட்சம் வச்சு பலமான அஸ்திவாரம் போட்டுருக்காங்க.
நம்ம கோபால் வேற ச்சும்மா இருக்காம, 'இவுங்க எழுதுவாங்க'ன்னார். 'கோவில் விஸிட் ஸ்பெஷலிஸ்ட்'னு மகுடம் வேற ( காசா பணமா.... ஆத்துலே போறதை அள்ளிக்கோ....)
ஆஹா.... உங்களை அந்த முருகனே இங்கே வரவழைச்சுட்டான். நீங்க நம்ம கோவில் தலபுராணம் எழுதித்தாங்கன்னார். திருதிருன்னு முழிச்சதைப்பார்த்து இங்கே ஏராளமாத் தமிழ்க்காரர்கள் இருக்காங்க. ஒரு பத்தாயிரம் குடும்பமாவது இருக்கும். அவுங்க இங்கே வந்தது, வாழ்க்கை முறைகள் எல்லாம் எழுதித்தாங்கன்னார். வரலாறுன்னதும் ஒரு பிடிப்பு வந்துச்சு. சரின்னுட்டேன். இப்ப அதிகாரப் பூர்வமா ஒவ்வொன்னையும் 'ஆராய்ஞ்சு எழுதும் பொறுப்பு கிடைச்சுருச்சு பாருங்களேன்.'என்ன சாப்பிடறீங்க? தோசை, வடை'ன்னு அடுக்கிக்கிட்டே போறார். நாங்க உக்காந்து பேசுன இடம் கார்த்திக் ரெஸ்டாரண்ட்:-) ஓனர் 'குணா' வை அறிமுகப்படுத்தி வச்சார். அப்படியே அங்கே வந்த இன்னும் சில தமிழர்களையும். ரெண்டு இளைஞர்கள் வேற வந்தாங்க. 'மென்பொருள்' மக்கள், கோவிலுக்கு ஒரு வெப் சைட் தயாரிச்சுக்கிட்டு இருக்காங்க. பலே பேஷ் பேஷ். இங்கே பாருங்களேன், 'கார்த்திகேயனின் பக்கம்'.
(கடவுளர்களின் படங்கள் இங்கே கோவிலின் வெப்சைட்டில் இருக்கு )
முன்கதை போதும், வாங்க கோவிலுக்குள்ளே போகலாம்.
மூணே படி ஏறி உள்ளே நின்னால் நமக்கு இடப்பக்கம் செல்லம் போல ஒரு நேயுடு இருக்கார்னு சொன்னேனில்லை? ரெண்டரை அடி உசரம் இருப்பார். தலையில் கிரீடம் சார்த்தி அவரை மூணடி ஆக்கலாம்:-)))
அஞ்சடிக்கு அஞ்சடின்னு சின்னதா ஒரு சந்நிதி. அவருக்கு நேரெதிரா ராமரோன்னு கண்ணை விரிச்சுப் பார்த்தால் அங்கே நவகிரகங்கள்.
நேயுடுவின் சந்நிதியின் மேல் முகப்பில் நம்ம ராமர் & கம்பேனியாக நால்வர். (கோவிலின் சுற்றுச்சுவரில் மதிலின் மேல் நேயுடு சந்நிதிப்பக்கம் யோக ஆஞ்சநேயர் சுதைச்சிற்பம் ரெண்டு.
கருவறையில், கையில் செவ்வேல் பிடித்த சேவல்கொடியோனின் இரு பக்கங்களிலும் வள்ளியும் தேவசேனா/தெய்வானை. நல்ல அழகான முகவிலாசம். அர்த்தமண்டபத்தில் உற்சவர் ஜொலிக்கிறார்.கருவறைக்கு இருபுறமும் அழகான முகப்போடு ரெண்டு சந்நிதிகள். முருகனுக்கு வலப்பக்கம் பிள்ளையார். அவர் முன் பார்க்கிங் செஞ்ச வாகனம். அதையொட்டி சின்னதா ஒரு தொட்டிக்குள் பாறாங்கல் ஒன்னு சிதறு தேங்காய் உடைக்க. எனக்கு ரொம்பப் பிடிச்ச ஸ்டைல் இது. முதல்முதலா 'சிங்கை சீனு'வின் கோவிலில் பிள்ளையார் சந்நிதிக்குமுன் பார்த்தது. என்ன ஒரு அட்டகாசமான ஐடியா. தேங்காய் ஓடுகள் சிதறி வளாகம் முழுசும் பரவாமல்......... அதன் பிறகு வேறொரு பயணத்தில் பிள்ளையார்ப்பட்டி, செட்டிநாடுப் பகுதிகளில் கவனித்திருந்தேன். இங்கே இந்த ஐடியாவைக் கொண்டு வந்தவர் கட்டாயம் செட்டிநாட்டுப் பகுதிக்காரராகத்தான் இருக்கணும். அதே அதே!! நண்பர் ராஜசேகர் காரைக்குடிக்காரர்.
தும்பிக்கையானை நம்பிக்கையோடு வலம்வந்து அடுத்தபக்கம் போனால் இதே முறையில் அழகான சந்நிதிக்குள் கிருஷ்ண மாரியம்மா. சிங்கத்தை வெளியே நிறுத்திவச்சுட்டு உள்ளே இருக்காங்க. அழகான சின்ன பலிபீடம் வேற! கருவறையின் வெளிப்புறச்சுவர்களில் இடது பக்கம் ரெண்டு தனித்தனி மாடங்களில் நர்த்தனகணபதி ( ஆனால் உட்கார்ந்திருக்கும் பிள்ளையார்தான்.) தக்ஷிணாமூர்த்தி ஆகியோர், முருகனுக்கு நேர் பின்னால் மாமன் மகாவிஷ்ணு, வலதுபுறச் சுவர்களில் ப்ரம்மா, துர்கா. இந்தப் பிரகாரத்தில் கருவறைச்சுவரை ஒட்டியபடி சண்டிகேஸ்வரர் நம் 'ஆஜர்' பட்டியலைக் கவனிச்சுக்கிட்டு இருக்கார்.
கோவிலின் பிரகாரத்தில் வருசந்தோறும் இங்கே கொண்டாடப்படும் பண்டிகைகள் விழாக்களின் விவரங்கள், அந்தந்த கடவுளர்களுக்கான ஸ்லோகங்கள் எல்லாம் பளிச் ன்னு எழுதி வச்சுருக்காங்க. ரெண்டு வார்த்தை சொல்லி சாமி கும்பிட எளிதா அமைச்சது எவ்வளோ நல்லது பாருங்களேன்.
ஒரு வருசத்தில் கொண்டாடும் நிகழ்ச்சி விவரங்கள்
நவகிரக மண்டபத்தையொட்டி கோவிலின் வலது ஓரமா சின்னதா ஒரு மேடை. கலைநிகழ்ச்சிகள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் எல்லாம் நடத்திக்கலாம். மேடைக்கு முன் சுமார் நூறு பேர்கள் வரை உட்காரலாம் என்ற அளவில் ஹாலில் இடம் இருக்கு. ஹாலின் கடைசியில் மாடிக்குப் போகும் வழி. அங்கேதான் கோவிலுக்கான டைனிங் ஹால். அன்னதானக் கூடம். அம்பதுபேர்கள் வரை தாராளமாக அமர்ந்து சாப்பிடலாம்.
இந்தக் கூடத்தைத் தன்னுடைய தகப்பனாரின் 59 வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக முழுக்க முழுக்கத் தன் செலவில் கட்டிக்கொடுத்துருக்கார் நண்பர் ராஜசேகர்.பிரகாஷ் கோவில் குருக்கள்.
கோவிலில் விதிப்படி பூஜைகளை நடத்த ஒரு குருக்கள் இருக்கார். இளைஞர். வயசு வெறும் இருபத்தியஞ்சுதான் வந்து ஒன்பது மாசமாச்சாம். சிங்காரச்சென்னை வாசி. மேற்கு மாம்பலத்துக்காரர். பாலக்காட்டில் குருகுலவாசத்தில் ஒன்பது ஆண்டுகள் வேதம் படிச்சுருக்கார். அதுக்குப்பிறகு தென்தமிழ்நாட்டில் சில கோவில்களில் வேலை. பழகப்பழக அப்படியே கடவுளர்களுக்குச் செய்யும் சாற்றுமுறை விதிகள் எல்லாம் கைவர ஆரம்பிச்சுருக்கு. சரியாச் சொன்னால் இவர் சாஸ்திரங்கள் எல்லாம் வைதீக முறைப்படி செஞ்சு வைக்கும் பண்டிட்தானாம். கூடப் படித்த நண்பர் தில்லியில் கோவில் வேலை கிடைத்து வந்தபிறகு தன் தோழனுக்கும் பரிந்துரைச்சதில் இங்கே வேலை ஆகி இருக்கு.
பதிவின் நீளம் கருதி மீதி நாளை:-)
டிஸ்கி: இது ஒரு 'ஆன்மீகப் பதிவு' கண்டதைத்தான் எழுதி இருக்கேன். அப்புறம் கண்டதை ஏன் எழுதினேன்னு கோச்சுக்கக்கூடாது ப்ளீஸ்.காலநிலை: இந்த வாரம் பூராவும் 45+ தானாம்:( ஆனால் செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மூனு மணிக்கு பெரிய பெரிய ஐஸ்கட்டிகளாக் கல்மழை பெய்ஞ்சுச்சு. நம்ம வீட்டு கேட்டுக்கதவுக்கிட்டே பொருத்தி இருந்த கண்ணாடி உருண்டைகள் மண்டையைப் போடவேண்டியதாப் போச்சு. அடிஅடின்னு ஒரு அரைமணி நேரம்தான்!
Posted by
துளசி கோபால்
at
6/24/2010 04:29:00 AM
25
comments
Labels: அனுபவம் Chandigarh
Tuesday, May 25, 2010
கோவிந்தா............. கோவிந்தா......
சனிக்கிழமைன்னா எனக்கு ஒரு கோவிலுக்குப் போகணும். விஷ்ணு கிடைச்சால் சிரேஷ்டம். இல்லைன்னா வேறு எந்தக் கோவிலானாலும் சரி. சி.செயில் இருந்தவரை அடையார் அனந்தபதுமனைக் குத்தகைக்கு எடுத்துருந்தேன். இங்கே ஒரு பாலாஜி கோவில் இருக்கு பக்கத்துலே பஞ்ச்குலாவில்னு கண்டுபிடிச்சுச் சொல்லியிருந்தார் கோபால்.
செக்டர் 12A.. மாலை அஞ்சரைக்குக் கோவில் திறக்கறாங்க. இந்தப் பக்கமெல்லாம் சம்மர் டைம் விண்ட்டர் டைம் இப்படி வெவ்வேற நேரங்களில் கோவில் டைம்ஸ் உண்டு. சரியான நேரத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். போகும் வழியில் இன்னொரு கோவிலும் அதன் தலையில் ஒரு ப்ரமாண்டமான சிவலிங்கமும் கண்ணில் பட்டது. வரும்போது கவனிச்சுக்கறேன்னு சொல்லிவச்சேன். ரெண்டுக்கும் இடையில் கூப்பிடு தூரம்தான்.இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி டெம்பிள் அது ஸ்ரீ ஹரிஹர் மந்திர்.
தென்னிந்தியக் கோவில்கள் வரிசையில் இங்கே ரெண்டே கோவில்கள்தான். ஒன்னு இந்த பெருமாள் கோவிலும் இன்னொன்னு ஸ்ரீ கார்த்திக்ஸ்வாமி கோவிலும்.(இதைப்பற்றி அப்புறம்....)
பெருமாள் கோவில் கோபுரம் நம்ம பக்கம் இருக்கும் வகையில் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு. ஒரு மிடில் சைஸ் வளாகத்தில் (ஒரு மூணு க்ரவுண்ட் இடம் இருக்கலாம்) நடுவில் ஒரு ஹால் போன்ற அமைப்பு. ஹாலின் ஒரு கோடியில் மூன்று சந்நிதிகள்.நடுவில் ஸ்ரீ ஸ்ரீனிவாஸப்பெருமாள். அவருக்கு வலது கைப்பக்கம் சந்நிதி ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு. இடது புறம் சந்நிதி ஸ்ரீ தர்த்தி மாதா. அட...நம்ம பூதேவிதாங்க. கண்ணுக்கு வெள்ளித் தகடு பொருத்தி வச்சுக் கொஞ்சம் முழிச்சுப் பார்க்கறாய்ங்க இவுங்க ரெண்டு பேரும். ஸ்ரீநிவாஸருக்கு வச்சுருக்கும் ப்ரபையில் தசாவதார உருவங்கள் இருக்கு. ஒரு நாலடி உயரச் சிலைதான். திருப்பதியில் இருந்தே கொண்டு வந்ததாம். ப்ரமாண்டமான பதுமனைப் பார்த்தக் கண்களுக்கு இது 'ச்விக்'ன்னு சின்னதாத் தெரியுது. ஒன்னரை அடி உசரத்துலே உற்சவமூர்த்திகள் பஞ்சலோகச் சிலைகளா அவருக்கு முன் இருக்காங்க. ரொம்ப சிம்பிள் அலங்காரம்தான்.
பட்டர் ரொம்பச் சின்னதா பூஜையை முடிச்சார். 16 உபசாரங்களில் 13 மிஸ்ஸிங்! ஆரத்தி காமிச்ச கையோடு தீர்த்தம் சடாரி கொண்டு வந்து ஹாலில் இருக்கும் மேசையில் வச்சு பக்தர்களுக்கு .வழங்கினார். ஒரு பெரிய பாத்திரம் நிறைய புளியோதரை இருக்கு. அதில் இருந்து ப்ரசாதம் கிடைச்சது.
ரொம்ப ட்ரையா இருக்கே பார்க்கன்னு நினைச்சேன். எம்டிஆர் புளியோதரை மிக்ஸ்ன்னு வாயில் போட்டதும் உணர்ந்தேன்!!!! நம்ம வீட்டில் அங்கே (? ! நியூஸியில்) இதே மிக்ஸ்தான். ஆனால் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா முந்திரி, நிலக் கடலை, கருவேப்பிலை எல்லாம் பொரிச்சுப் போட்டு பார்க்க அம்சமா பண்ணிருவேன். இங்கே புளியோதரைப் பாக்கெட்டில் இருக்கும் செய்முறையை அடிபிறளாமல் பின்பற்றி இருக்காங்க. (கிடைச்சதா...தின்னோமான்னு இல்லாம இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா?)
பெருமாளைப் பார்த்த மாதிரி பெரிய திருவடி. மரத்தில் செய்யப்பட்டவர். வித்தியாசமான கோணத்தில், கருடவாகனத்தில் இருக்கறாப்புலெ. அவருக்குப் பக்கமா அதே மேடையில் ஒரு வலம்புரிப் புள்ளையாரும்( இவர் மண்ணால் ஆனவர்) ஒரு சிவனின் படமும்.
கோவில் வளாகத்தில் காம்பவுண்டுச் சுவரை ஒட்டி பூச்செடிகள். அரளி, நந்தியாவெட்டை, எலுமிச்சம் மரம், தங்கரளி, வாழைமரங்கள் இப்படி. ரெண்டு மூணு சின்னத் தொட்டிகளில் துளசி. வாழைமரங்களுக்கு நடுவில் ஒரு எண்ணெய்தீபத்தை வச்சு ஒருத்தர் கும்பிட்டார். இவர்தான் கோவிலுக்கு இப்போதைய ட்ரஸ்ட் மெம்பரில் ஒருத்தர். அவர் போன பிறகு அங்கே என்ன இருக்குன்னு எட்டிப் பார்த்தேன். சின்னதா கைப்பிடி அளவுள்ள புள்ளையார், சிம்மவாஹினி இப்படிச் சின்னச்சின்ன மண் பொம்மைகள், கொலுவில் வைப்போமே அதைப்போல! வீட்டில் இருந்து கொண்டு வந்து வச்சுருக்காரோ என்னவோ! இவர்தான் குட்டிக்குட்டி மண் அகல்களில் எண்ணெய் ஊத்தித் திரி போட்டு அங்கங்கே வச்சுக்கிட்டு இருந்தார். 'பெருமாள் கோவிலாச்சே.... சிறிய திருவடி இல்லையா?' ன்னு கேட்டேன். கூப்பிடு தூரத்தில் நிற்கும் கோவிலைக் காட்டி அங்கேன்னார். ஓக்கே....அங்கே போய்த்தான் ஆகணும் போல. கோவிலைப் படம் எடுக்கலாமான்னு கேட்டதுக்கு பட்டரைக் கேக்கணுமுன்னார்.
பட்டரைக் கேட்டதுக்கு சரின்னு தலை ஆட்டினார். நம்ம கெமெரா அப்பப் பார்த்துச் சதி செஞ்சுருச்சு. மூலவரை க்ளிக்குனதும் ஃப்ளாஷ் அடிச்சுருச்சு:( பட்டருக்கு அப்பத்தான் நான் கேட்டது புரிஞ்சுருக்கணும். வேணாம் என்பது போல இன்னொரு தலையாட்டல்.
இந்தக் கோவிலைக் கட்ட ஸ்ரீ பூரண்சந்த் அரோரா அறக்கட்டளை (டில்லி-குருக்ஷேத்ரா) அஞ்சு லட்சம் ரூபாய் நன்கொடை தந்துருக்காங்க.
தென்னிந்தியர்களுக்கு இந்தக் கோவில் ஒரு மீட்டிங் ப்ளேஸ். கோவையைச் சேர்ந்த ஜோடியைச் சந்திச்சோம். இந்த ஊர் வந்து ஒன்னரை வருசமாச்சாம். முதல்முறையா இந்தக்கோவிலுக்கு வந்துருக்காங்க. பாலாஜியைத் தேடித்தேடி இப்போதான் கிடைச்சாராம்!!!! இங்கே தமிழ்ச்சங்கம் ஒன்னு இருக்குன்னு இவுங்க மூலமாத் தெரியவந்துச்சு. விலாசம், தொலைபேசி எண் எல்லாம் வாங்கிக்கிட்டோம். நல்ல நட்புணர்வு உள்ள இளம் தம்பதிகள். யானை பார்டர் போட்ட புடவையால் அறிமுகம் ஆச்சு:-))))))ஹரிஹர் மந்திருக்குப் போனோம். குருத்வாரா ஸ்டைல் முகப்பு. அதன் தலைமேல் ஒரு பக்கத்தில் சிவலிங்கம். அதன் தலையில் ஒரு நாகம். 733
படிகளேறிப்போனோம். ரெண்டு புறம் இருக்கும் படிகளுக்கு நடுவில் நந்தி! அசப்பில் பார்க்க எமவாகனம் போல இருக்கு!!!! . கொம்பு மட்டும்தான் வித்தியாசம். நமக்கிடது பக்கம் தனி அறையில் சிவன் சந்நிதி. வட இந்திய வழக்கப்படி பக்தர்களே அபிஷேகமோ, பூஜையோ செஞ்சுக்கலாம்.
மெயின் கோவிலுக்குள் போனோம். இங்கேயும் பெரிய ஹால். ஒரு கோடியில் நல்ல அகலமான மூணு சந்நிதிகள். நடுவில் லக்ஷ்மிநாராயணன், அவருக்கு வலப்பக்கம் ஸ்ரீ ராமர்& கோ. இடப்பக்கம் சந்நிதி ராதா & க்ருஷ்ணா. எல்லாமே ஆளுயரப் பளிங்குச்சிலைகள். கண்ணாடிகள் எல்லாம் பதிச்சு ஒரே கலர்ஃபுல்லா அலங்கரிச்சு ஜொலிக்குது. இங்கிருந்த பட்டர்(?) படம் எடுக்க அனுமதி கேட்டதுக்கு, ஆஹா........கொஞ்சம் இருங்க, லைட் போடறேன்னு சந்நிதிகளில் விளக்குகளைப் போட்டுவிட்டார். லக்ஷ்மி நாராயணருக்கு ரெண்டு பக்கமும் கஜேந்திர மோட்சமும்., திருப்பாற்கடல் ஸீனுமா பளிங்கு & கண்ணாடிச் சித்திரங்கள்.
லக்ஷ்மிநாராயன்
ராதா & க்ருஷ்ணாராம் & கோ
சந்நிதி முன் பக்தர்கள் உட்கார்ந்து வழிபடக் கம்பளங்கள் தரை முழுக்க விரிச்சு வச்சுருக்காங்க. வலப்புறம் விஷ்ணுதுர்கை, சரஸ்வதி, ஆஞ்சநேயர், சிவன் பார்வதித் தம்பதிகள் நடுவிலே மூத்த மகனுடன் தனித்தனிச் சந்நிதிகள் வரிசை. கடைசியில் ஒரு மூலையில் சிந்தூரப்பூச்சில் ஹனுமன்.ஹரிஹர் கோவில் இருந்து கூப்பிடுதூரம் பெருமாள் கோவில்.
ரெண்டு கோவில்களுமே அமைதியாவும் சுத்தமாவும் இருக்கு. தென்னிந்தியக் கோவில்கள் பழக்கப்பட்ட மனசுக்கு முதலில் கொஞ்சம் லயிப்பு இல்லாமப்போனாலும்.... கடைசியில் இதுவாச்சும் இருக்கேன்னு ஒரு நிலை வருது பாருங்க. அப்ப எல்லாக் கோவிலுமே ஒன்னுதான்னு ஞானோதயம் பொறந்துரும். அந்த நிலையில் இப்போ நாங்க இருப்பதால் பிரச்சனை ஒன்னும் இதுவரை இல்லை.
ரெண்டாம் தடவை போனப்ப, புதுப் பட்டர் வந்துருக்கார். இளைஞர். சந்தோஷ் குமார். ஹிந்தி சுத்தமாத் தெரியாதாம். ஒரிஜனல் பட்டர் லீவு எடுத்து ஊருக்குப் போயிருக்கார். இவர் அவருக்கு பர்த்தி. ஆந்திராக்காரர். நம்ம தெலுங்கைக் கூர் தீட்ட வேண்டியதாப் போச்சு:-)))))
நேத்து பாருங்க..... சாயங்காலம் சின்னதா ஒரு வாக் போகலாமுன்னு கிளம்புனப்ப ஒரு குருத்வாரா கண்ணில் பட்டுச்சு. நம்மூர் புள்ளையார் கோவில்கள் போல முக்குக்கு முக்கு ஏகப்பட்ட குருத்வாராக்கள். முதல்முறையா இந்திய குருத்வாராக்கள் ஒன்னுலே நுழைஞ்சோம். குருக்ரந்த் ஸாஹிப் ஜிகினாத்துணியால் போர்த்தி வச்சுருந்தாங்க. பூஜை நேரம் இல்லை போல. தப்லாவும் ஹார்மோனியமும் வச்சு ரெண்டு பேர் மெல்லிசான சவுண்டில் வாசிச்சுக்கிட்டு இருந்தாங்க. சேவிச்சுக்கிட்டுப் பிரசாதம் கொடுத்ததை வாங்கிக்கிட்டோம். கோதுமைமாவுலே கேசரி மாதிரி ஒன்னு கிளறி வச்சுருக்காங்க. எங்க கிறைஸ்ட்சர்ச் குருத்வாராவில் இப்படித்தான். இது ஒரு ஸ்டேண்டர்ட் ப்ரசாதம் போல!
வெளியே வந்து என்ன குருத்வாரான்னு பெயரைப் பார்த்தால் நிஹங்காரி தர்பார், ராவல்பிண்டின்னு இருக்கு. அச்சச்சோ..... இது பாகிஸ்தானா!!!!
காலநிலை: வெய்யில் 38 C. கொஞ்சம் காற்று வீசுவதால் பரவாயில்லை. ஆனால் உச்சிப்போதுக்கு 43 C ஆக உயருமாம்.
Posted by
துளசி கோபால்
at
5/25/2010 06:12:00 PM
22
comments
Labels: Balaji temple, அனுபவம் Chandigarh
Friday, May 21, 2010
வேடிக்கை VS வாழ்க்கை
ஒரு ஊரையோ நாட்டையோச் சும்மாச் சுத்திப் பார்ப்பதைவிட அங்கேயே போய் குடும்பம் நடத்திக் குப்பை கொட்டுவது கொஞ்சம் சவாலான விஷயம்தான், இல்லையா? நிறைய நாட்களுக்குப் பிறகு சரியாச் சொன்னால் 35 வருசத்துக்குப்பிறகு சென்னையில் 'குப்பை கொட்ட' வந்தேன். கல்ச்சுரல் ஷாக்ன்னு சொல்வோம் பாருங்க. அதுதான் உண்மையில் ஏற்பட்டுச்சு. நகரம் வளர்ந்துருக்கு. கூடவே கூட்டமும் குப்பையும்.
அங்கங்கே தெரு முனைகளில் சின்னதா ஒரு குப்பை சேகரிப்புக்கான செவ்வகத் தொட்டி. உண்மையைச் சொன்னால் இந்த அளவுள்ள குப்பைத் தொட்டி ஒரு நாலு வீடுகளுக்கு மட்டுமே போதுமானது. அப்போ மீதி இருக்கும் வீடுகளுக்கு? பிரச்சனையே இதுதான். செய்வாங்க.ஆனா போதுமான அளவான்னு பார்த்துச் செய்ய மாட்டாங்க...... அதில் எப்போதும் நிறைந்து வெளியே வழிந்து தெருமுழுக்கப் பறக்கும் குப்பைகூளங்கள். தெருநாய்களும், குப்பையில் இருந்து காசு பண்ணக்கூடியப் பொருட்களைப் பிரித்தெடுக்கும் மனிதர்களும் சேர்த்து மிச்சம் மீதி உள்ளே இருக்கும் குப்பைகளையும் வெளியே இழுத்துப்போட்டுவிட்டுப் போய்விடுவதையும் பார்க்கிறேன். நாய்கள்....பாவம் நாய்கள். வெளியே இழுத்துப் போட்டவைகளை மீண்டும் அள்ளிப்போடத் தெரியாத ஜென்மம். ஆனால்....மனுஷன்? அப்படியே விட்டுவிட்டுப்போய் விடும் வெறும் ஜென்மம். (செனடாப் ரோடு மட்டும் விதிவிலக்கு. நோ குப்பை. எல்லாம் பளிச்!!!)
தெருவோரங்களை கக்கூஸாக மாற்றி வரும் ஆண்கள் (ஒரே சமத்துவம்தான். கோட்டு சூட் போட்டுக்கிட்டவங்களுக்கும் போற போக்கில் அடக்கமுடியாம அசுத்தம் செஞ்சுட்டுப் போறாய்ங்க) தாறுமாறாய் தெருவெங்கும் ஓடும் ஏகப்பட்ட வண்டிகள். சாலைகளில் நடக்கவே முடியாத நிலை. இருக்கும் கொஞ்சநஞ்ச இடங்களையும் அபகரிக்கும் ப்ளாட்பாரக் கடைகள் ...அடப் போங்கப்பா....எதைச் சொல்ல எதைவிட?
'இங்கெல்லாம் இப்படித்தான் இருக்கும். கொஞ்சநாளைக்கு வந்து இருந்துட்டுப்போற நீ இப்படியெல்லாம் அலட்டிக்கக்கூடாது' ' அண்ணியின் அருள் வாக்கு.
மனசுக்கு ஆசுவாசமா இருந்தது நண்பர்களின் அருகாமை மட்டுமே. இது இப்படி இருக்க, இடப்பெயர்ச்சி மறுபடியும் வந்துச்சு. பத்தே மாசத்தில் ரெண்டாவது முறையாக மூட்டை கட்டினோம். முற்றிலும் புது இடமாச்சேன்னு ஊருளவாரம் பார்க்க ஒரு ரெண்டு மாசம் முன்னால் வந்துட்டுப் போனேன். வீடு கிடைச்சது. ச்சும்மா வேடிக்கை பார்க்க வந்தப்ப ரொம்பவே நல்லா இருந்த இடத்துக்கு இப்போ 'குப்பை கொட்ட' வந்தபின் இண்டு இடுக்குகளில் ஒளிஞ்சுருந்த எல்லாம் கண்ணுலே பட ஆரம்பிச்சுருக்கு. நம் எண்ணங்கள் நேர்மறையா இருக்கணும். அதுதான் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லதுன்ற கொள்கையைக் கடைப்பிடிக்கலைன்னா.... .... மனசை ஒருமுகப்படுத்திக்கிட்டு இருக்கேன்.
முதல்லே குப்பையையே எடுத்துக்கலாம். இந்த நகரில் இதுவரை தெருமூலைக் குப்பைத் தொட்டிகளைக் காணோம். வீட்டுக்குக் குடிவந்த நாள், வீட்டு ஓனர் சொல்லியபடி ஒரு குப்பைத்தொட்டி (20 லிட்டர் கொள்ளும் மூடியோடுள்ள ப்ளாஸ்டிக் வாளி) வாங்கி நம்வீட்டு கேட்டுக்கு உட்புறம் ஒரு மூலையில் வச்சாச்சு. தினமும் காலை எட்டரைமணி அளவில் ஒரு நபர் கேட்டைத் திறந்து உள்ளே வந்து அதை எடுத்துக் காலி செஞ்சு, குப்பையை அவர் கொண்டுவரும் வண்டியில் போட்டுக்கறார். திரும்ப நம் வாளியைக் கொண்டுவந்து உரிய இடத்தில் வச்சுட்டுக் கேட்டைச் சாத்திக்கிட்டு போறார். எல்லார் வீட்டுக்கும் காம்பவுண்ட் சுவர் இருக்கு. மாசம் 25 ரூபாய் சிட்டிக் கவுன்ஸிலுக்கு நாம் கொடுக்கணும். ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை 50 அடைச்சால் போதும். வீட்டுக்கு ஆள் வந்து காசையும் கலெக்ட் செய்யறார்.ஒவ்வொரு வகைப் பொருட்களுக்கும் ஒவ்வொரு செக்டரில் விசேஷக் கடைகள் இருக்குன்னு முந்தி சொல்லி இருந்தேன் பாருங்க. அது உதவியாவும் அதேசமயம் உபத்திரவமாவும் இருக்கு. வீட்டுலே ஒரு ஆணி அடிக்கணும். ஆணி வாங்க இந்த எண் உள்ள செக்டர் போகணும். காய் வாங்க இந்த எண், பூ வாங்க இந்த எண், உப்புப்புளி மொளகாய் வாங்க இந்த எண் இப்படி வெறும் எண்களையே மனப்பாடம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். இன்னும் ஊர் சரியாப் பிடிபடலை. ஊர் முழுக்கக் கோவில்கள் இருக்கு. அதுக்கும் செக்டர் எண்களை நினைவில் வச்சுக்கணும். 'எண்ணும் எண்ணும் கண்ணெனத் தகும்' நம்பர் மறந்தால் போச்சு:(
வீடுன்னா ரெண்டு செடிகள் இருக்கணுமேன்னு நாலு செடிகளை வாங்கிவந்து மொட்டைமாடியில் வச்சுருக்கேன். அடுக்கு மல்லி ச்சும்மா ஜமாய்க்குது வாசம். மற்றவை செத்திப்பூ, அப்புறம் பெயர் தெரியாத ஒன்னு ஆரஞ்சுப்பூ பூக்குது.
எவர்க்ரீனா ஒன்னு இருக்கட்டுமுன்னு கள்ளிவகையில் சக்கூலண்ட் வாங்கி வந்துருக்கேன். செடி வாங்க ஒரு செக்டர், அதுக்குண்டான தொட்டி வாங்க இன்னொரு செக்டர்:-)))))
ஊரெங்கும் பசுமையான மாந்தோப்புகள் & மஞ்சள் மரங்கள். இப்போ சரக்கொன்றை பூக்கும் காலம்.
அநேகமா இங்கே இந்த ஊரில் ஒரு பத்து மாசம் இருக்கவேண்டி இருக்கலாம். சண்டி(ந)கரில் காலூன்றிய ஒரு புதிய சண்டியின் கண்ணோட்டத்தில்......அப்பப்பக் 'கண்டதை' இங்கே போட்டுவைக்க உத்தேசம்.
காலநிலை: வெய்யில் சக்கைப்போடு போடுது. 44 டிகிரி செல்ஷியஸ். வீட்டுக்குள்ளே 36
Posted by
துளசி கோபால்
at
5/21/2010 05:57:00 PM
41
comments
Labels: அனுபவம் Chandigarh
