Monday, April 30, 2012

காலி நாற்காலியின் 'கனம்' Christchurch Earthquake 10

வெறுமையா இருக்கும் காலி நாற்காலிகளைப் பார்க்கும்போது மனசு அப்படியே கனத்துப் போகுது. இந்தக் 'காலி நாற்காலி' 'யை ஆரம்பிச்சுவச்சவர் யாருன்னு கொஞ்சம் துருவனுமேன்னு பார்த்தால் நமக்குக் கூடுதல் வேலையே வைக்கலை, இந்தக் கலைஞர். சார்லஸ் டிக்கன்ஸ் மறைந்த சமயம், அவருடைய கதை ஒன்றுக்குப் படம் வரைஞ்சுக்கிட்டு இருந்த ஓவியக்கலைஞர் Samuel Luke Fildes டிக்கன்ஸ்ஸின் நாற்காலியையும் எழுதும் மேசையையும் எழுத்தாளர் இன்றி தனிச்சு இருக்குன்னு காட்டும் ஓவியம் ஒன்றை ஜூன் 1870 வரைஞ்சார்.
இதை மனசில்வச்ச Van Gogh 1888 ஆண்டு தனித்தனியா ரெண்டு காலி நாற்காலிகளை வரைஞ்சு, அது இப்போ நேஷனல் ம்யூஸியத்திலே காட்சிக்கு இருக்கு.

இருந்த ஆள்,  இல்லாமப் போகும்போது அவர் விட்டுப்போன இடம்,  இட்டு நிரப்பவே முடியாத நிலையில் காலியா நிக்கும்போது மனசு வலிக்கத்தான் செய்யுதில்லையா? போன வருசம் ரெட்டை கோபுரத்தாக்குதல் நடந்து பத்து வருசங்கள் ஆனதையும், அதுலே உயிரிழந்த 2753 மக்கள் நினைவாகவும் Bryant Park நியூயார்க்கில் காலி நாற்காலிகளை வச்சு அஞ்சலி செலுத்துனாங்க. எல்லாம் ஒன்னுபோல இருக்கும் நாற்காலிகளின் வரிசை!
போலந்து நாட்டில் நடந்த யூதர் இன அழிப்பை நினைவு கூறவும், அமெரிக்கா Oklahoma city குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கும் இதுபோல நினைவுச்சின்னங்கள் வச்சு அஞ்சலி செலுத்தினாங்க. சுற்றுலாப்பயணிகள் அங்கே போகும்போது தவறாமல் பார்க்கும் இடங்களில் இவைகளும் முக்கிய இடத்தைப்பிடிச்சதென்னவோ உண்மை.


 போன வாரம் ஏப்ரல் 25 எங்களுடைய 'கொடி நாள்' இந்தப் பக்கங்களில் இதை ஆன்ஸாக் டே ANZAC DAY ( Australian and New Zealand Army Corps.) என்று Gallipoli என்ற இடத்தில் எதிரிகளால் அழிக்கப்பட்ட வீரர்களுக்கு அஞ்சலி என்று சொல்லி ஆரம்பிச்சு, இப்போது உலகப்போர்களிலும், மற்ற போர்களிலும் போராடி உயிர்துறந்த வீரர்களை நினைவு கூறும்நாள். அரசுவிடுமுறை தினம்.
எங்க வார்மெமோரியல் இருக்குமிடம்(மேலே உள்ள படம்) சமீபத்திய நிலநடுக்க அழிவுகளில் சிக்கிக்கொண்டதால் தாற்காலிகமா வேறொரு இடத்தில் அஞ்சலிக்கு ஏற்பாடு செஞ்சாங்க. விடுமுறை தினமாச்சேன்னு நிதானமாக் கிளம்பிப்போனால்.... சர்வீஸ் நடந்த இடத்தைக் கழுவிக் காயவச்சதுபோல் எல்லாம் சுத்தம். நகரின் மையப்பகுதியிலும் சுற்றிவர அக்கம்பக்கங்களிலும் நிலநடுக்க அழிவுகளை அப்புறப்படுத்தி சீராக்கும் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. எப்பப்போனாலும் ( anyone given time) அழிவுகளைப் பார்க்க, கண்ணீர் வடிக்க, புனரமைப்பு வேலைகளை வேடிக்கை பார்க்கன்னு ஒரு கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கும். (நாலுபேருக்கு மேல் போனால் கூட்டம் என்று கொள்க) நாமும் அந்த ஜோதியில் கலந்தோம்.
 " ஒன்னும்தான் இல்லைன்னாலும் ஆட்கள் என்னத்துக்கு சிட்டிபக்கம் வர்றாங்க? " 

 "மனசு கேக்காமதான். இது நம்மூர் என்ற பாசமும், என்ன ஆச்சோன்ற பதைப்பும்தான். இப்ப நீ வரலையா?"

 போக்குவரத்துக்கு மூடிவச்சுருந்த மதராஸ் தெருவைத் திறந்துட்டாங்கன்னு உள்ளூர் தினசரியில் சேதி. அங்கே போய்வரலாமுன்னு போனால் கம்பீரமா நிற்கும் சர்ச்சைக் காணோம்! இடிஞ்சு போயிருச்சாம்!

நம்மூர்லே முக்குக்கு முக்கு இருக்கும் புள்ளையார் கோவில்களைப் போலத்தான் இந்த ஊரில் சர்ச்சுகள். நிலநடுக்கத்துலே எத்தனை இடிஞ்சுபோச்சுன்னு எண்ணுறதைவிட எத்தனை பொழைச்சுருக்குன்னு எண்ணுவது சுலபம். உருப்படியா நிற்பது ரெண்டோ மூணோதான். அதுவும் சமீபத்து மாடர்ன் கட்டிடங்கள். அங்கேயும் சின்ன விள்ளல் விரிசல்ன்னு ..... ஹூம்.... எதுவுமே தப்பிக்கலை:(

எண்ணி நாப்பதே விநாடிகளில் ஊரின் தலைவிதி மாறியே போச்சு என்பதுதான் நிஜம்.

 இந்த இடத்தில் இருந்த பாப்டிஸ்ட் சர்ச் இந்த நகரத்தைவிட 13 வயசு சின்னது. 1863 ஆம் ஆண்டு வழிபாட்டுக்கான சபை ஒன்னு வேணுமுன்னு தீர்மானிச்சு அதுக்கடுத்த ஆண்டு நகரின் வேறொரு பகுதியில் மரக்கட்டைகளைக் கொண்டு கட்டப்பட்டது. 1870 வது ஆண்டு சின்னதா வேறொன்னு கட்டிக்கிட்டாங்க. வழிபாட்டுக்கு வரும் மக்கள்தொகை பெருக்கத்தை அனுசரிச்சு 1881 வது ஆண்டு லண்டனில் இருக்கும் பாப்டிஸ்ட் சர்ச் டிஸைனையொட்டி, இங்கே முகப்பில் பிரமாண்டமான தூண்களோடு கட்டி முடிச்சு நகரத்துக்கே ஒரு அலங்காரமா விளங்குச்சு. மகளின் பள்ளிக்கூட வாழ்வில் பாட்டுப்பயிற்சி, பாட்டுப்போட்டின்னு பலமுறை இங்கே கூட்டிவந்துருக்கோம்.

 அக்கம்பக்கம் இருக்கும் பல நல்லவிஷயங்களை அவைகள் இருக்கும்போதே பாராட்டி அனுபவிக்க மனசுக்குத் தெரியலை பாருங்க. எல்லாத்தையும் taken for granted கதைதான்:( 

போனவருசத்துக்கு முந்தின (செப் 4, 2010) நிலநடுக்கத்தில் இந்த சர்ச் கொஞ்சம் பாதிக்கப்பட்டுச்சுன்னாலும் ஆறு மாசம் கழிச்சு ஏற்பட்ட (ஃபிப்ரவரி 22 2011) நிலநடுக்கத்தில் உள்ளே அப்படியே இடிஞ்சு விழுந்துருச்சு. அடுத்தவருசம் 150 வது வருசக்கொண்டாட்டம் நடத்தணுமுன்னு தீர்மானிச்ச சமயம் இப்படி ஒரு இடி! இந்த நிலையிலும் இங்கே இருந்த சர்ச்சுக்கு என்ன ஆச்சோன்னு தவிக்கும் மக்களுக்காக படங்களுடன் ஒரு தகவல் பலகையை சர்ச்சு நிர்வாகம் வச்சுருப்பதைப் பாராட்டத்தான் வேணும்.
 உள்ளூர் கலைஞர் Pete Majendie இந்த சர்ச் இருந்த(!!!) இடத்துலேயே ஒரு நினைவுச்சின்னம் வைக்க அனுமதி வாங்கினார். 185 உயிர்களின் இழப்புக்கு முன்னால் மற்ற எதுக்குமே முக்கியம் இல்லைன்னு ஆகிப்போச்சு. 120 இருக்கைகளை ட்ரேட் மீ என்ற ஆன்லைன் சந்தையில் வாங்கினார். . உள்ளூர் மக்களும் இங்கே உள்ள ஒரு இருக்கைகள் மட்டுமே விற்கும் கடையும் சிலபல இருக்கைகளைத் தானமாக் கொடுத்தாங்க. ஒருத்தர் தன்னுடைய சக்கரநாற்காலியைக்கூடக் கொடுத்தார்.
 நாலைஞ்சு தன்னார்வலர்களின் துணையுடன் இருக்கைகளை வரிசையில் ஒழுங்குபடுத்தி வெள்ளை நிறப் பெயிண்ட் அடிச்சுருக்கார். வெள்ளை என்பதே பரிசுத்தத்தின் அடையாளம் அல்லவா!!!!
மணிகூண்டு இருக்கைகளைப் பார்த்தபடி மௌனசாட்சியா எதிர்சாரியில் நிற்கும் இடிஞ்சுபோன மணிக்கூண்டு. சம்பவம் நடந்த நேரத்தை 12.51 என்று துல்லியமாக் காட்டியபடி நிக்குது. சின்னதா ஒரு அமைப்பில் பிரார்த்தனை ஒன்னு ஒட்டி வச்சுருக்காங்க. கூடவே இந்த நினைவு அஞ்சலிக்கான விளக்கமும். ஒரு மேசையில் பின்னூட்டமிட நோட்டுப்புத்தகமும் பேனாவும் வச்சுருந்தாங்க. நாலுவரி எழுதிட்டுத்தான் வந்தேன். எந்த இருக்கையில் வேண்டுமானாலும் உக்காரலாம் என்ற அறிவிப்பு வேற! அநியாயமாப்போன உயிர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்திக்கலாம். பிரார்த்திச்சேன்.
 உயிரிழந்த அப்பாவிகள் வாழ்க்கையின் பல பருவங்களில்/நிலைகளில் இருந்தவர்கள். வேலையில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் முதல் அஞ்சு வாரக் குழந்தைவரை. பலநாடுகள் பல வயதுகள்...... எத்தனை வகை இருக்கைகள்!!! லெதர் சோஃபா, Bean Bag, கம்ப்யூட்டர் சேர்ஸ், பியானோ ஸ்டூல், மூங்கில் ஆசனங்கள், மர நாற்காலிகள் இப்படி எத்தனையெத்தனை வகை!!! கைக்குழந்தையைக் கொண்டுபோகும் பேபி ஸீட் கண்ணில் பட்டதும், மனம் கதறியழுதது:(

Friday, April 27, 2012

ஹரே க்ருஸ்னா.... ஹரே க்ருஸ்னா

நியூஸியை விட்டுப்போய்க் கிட்டத்தட்ட ஒரு வருசம் ஆனநிலையில் வீடு திரும்புனமாதிரி ஒரு ஆசுவாசம் கிடைக்குமுன்னு எதிர்பார்க்கவே இல்லை. இந்தியாவாச்சே. உச்சரிப்பு திருத்தமா இருக்குமுன்னு நினைச்சதுகூட பொய்த்துப் போயிருச்சு. அதே வழவழா குரலில்,

 "ஜயா ஜய கௌராசந்தா.....ஆரட்டிக்கி ஷோபா.....
ஜா...........னா விடாடாவானே...ஜகமன லோபா....."
 jaya jaya gorâcânder âratiko s'obhâ 
jâhnavî-tatha-vane jaga-mano-lobhâ 

வெள்ளைக்காரர் யாரோ சொல்லிக் கொடுத்துருக்காங்க போல! எத்தனை எத்தனை வங்காளிகள் இதுலே இருக்காங்க. யாராவது சரியாச் சொல்லிக் கொடுத்துருக்கப்டாதோ? இந்தப்பாட்டே பெங்காலியில்தானே இருக்கு! இந்தக்கோவில் முழுக்க காவியுடன் சுற்றிவரும் சந்நியாசிகள் இந்தியர்களாத்தானே இருக்காங்க!

 செக்டர் 36 லே கோவில் அமைஞ்சுருக்கு. பெரிய வளாகமாத்தான் தோணுது. கேட்டில் நுழைஞ்சால் வலது பக்கம் காலணிகளைக் காப்பாற்றிவைக்க ஒரு இடம். யாருமே இதைச் சட்டை செய்யாம கோவில் நுழைவு வாசலில் கடாசிட்டுப்போயிருக்காங்க. கண்ணனைக் காணும் துடிப்பில் மெய்மறந்த அவசரக்கோலம்!
முன் ஹால் கொஞ்சம் சின்னது. ஒரு பக்கம் சாமி சம்பந்தமுள்ள சாமான்கள் விற்பனை. அதுக்கு எதிர்ப்பக்கம் ஒரு கவுண்ட்டர் மாதிரி சமாச்சாரம். கோவில் ஹாலுக்குள் காலடி வைக்கும் கதவின் நிலையில் 901கண்ணாடியில் வரைந்த யானைகள்! பிரமாண்டமான ஹால். கண்ணுக்கு நேரா ஹாலின் அகலத்தையொட்டியே வரிசையான சந்நிதிகள். இடப்பக்கக் கோடியில் சைதன்யா மகாப்பிரபு தன்னை மறந்த நிலையில் பஜனையில் ஈடுபட்டு ஆடறார். வலது பக்கக்கோடியில் நரசிம்ஹம், மடியில் ஹிரண்யன். எதிரில் ஒரு பக்கம் கைவணங்கி நிற்கும் ப்ரஹ்லாதன்.

நடுச்சந்நிதியில் கண்ணா கருமை நிறக் கண்ணான்னு ஒரு காலை முன்வைத்து ஒய்யாரமாச் சாய்ந்த ஒரு நிலையில் குழலூதும் கண்ணனும், நீ வாசி நான் கேக்கறேன்னு நிற்கும் ராதையும்.. கீழே உள்ள படிபோன்ற அமைப்பில் 'குருமார்'களின் சின்னச்சிலைகள். அட்டகாசமா உயிரோட்டத்தோடு இருக்கு. (எங்கூர்லே படங்கள்தான் வச்சுருப்பாங்க.)
உலோகத்தால் ஆன கண்ணனும் ராதையுமா பக்கத்துலே பசுமாடு நிக்க உற்சவமூர்த்திகளைப்போல சிலைகள் கொஞ்சம் பெரிய சைஸில் இருக்கு இங்கே நமக்கிடது பக்கம் தனியா ஒரு மண்டபத்தில் மௌனசாட்சியாக உக்காந்து கவனிக்கும் பிரபுபாதர். அவருக்கு நேரெதிரா இந்தப் பக்கம் துள்ஸி மஹாராணி, அவளுக்கான சின்ன தோட்டத்தின் செட்டப்பில். சந்நிதிகளைச்சுற்றி வந்து வணங்க வழி அமைச்சு வச்சுருக்காங்க. எண்ணிக்கைகளை மனசில் வச்சுச் சுத்திவரும் மக்களைப்பார்க்க முடிஞ்சது.
ஹாலின் கடைசியில் சந்நிதியைப் பார்க்கும் வண்ணம் ஒரு வரிசை இருக்கைகள். முழங்கால் நோவும் மக்கள் மனமார வாழ்த்துவாங்க. வாழ்த்தினேன். ஒரு பக்கம் ஏழெட்டுப் பெண்கள்  'ஹரே க்ருஸ்னா மந்த்ரம் ' சொல்லிக்கிட்டே பூரி திரட்டுறாங்கன்னு, கிட்டே போய்ப் பார்த்தால் சந்தனம் இழைச்சுக்கிட்டு இருக்காங்க. சில குட்டிப்பசங்களும் சேவையில் கலந்தாச்சு.
கோவிலுக்குப் பின்புறம் சமையலறை, ஸ்டோர் அறைகள், கழுவித்தேய்ச்ச பாத்திரபண்டங்கள் எல்லாம் பாதுகாப்பா இருக்கு. நாங்க போனது ஒரு சனிக்கிழமை. ஏழுமணிக்கு ஆரத்தி ஆரம்பிச்சது. அதுவரை கூட்டமில்லாமல் இருந்த ஹாலில் சரசரன்னு மக்கள் வந்து சேர்ந்துக்கிட்டே இருந்தாங்க. பூஜைகள் முடிஞ்சதும் வெளியே வந்தப்பக் கவுண்ட்டரில் நறுக்கிய பழத்துண்டுகளைப் பிரசாதமா கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. நல்ல ஏற்பாடு.

இன்னொருமுறை நாங்கள் போனது ஒரு ஞாயிறு. ஏழுமணிக்கு ஆரத்தின்னு ஒரு ஆறரைக்குப்போய்ச் சேர்ந்தால் கோவிலின் சின்ன ஹால் ஒன்றில் பெண்கள் மட்டுமே இருந்து பஜனை பாடிக்கிட்டு இருந்தாங்க. பெரிய ஹாலில் துள்சி மஹாராணிக்குப் பூஜை நடந்துக்கிட்டே இருக்கு. அது முடிஞ்சதும் மூலவருக்கு ஆரத்தி எடுத்தாங்க. அதே வழவழாப்பாட்டு.

 துளசி வச்சுருந்த ஒரு செயற்கைத் தோட்டத்தில் சின்னதா ஒரு மேடைபோன்ற அமைப்பில் பட்டுத்துணி போட்டு அலங்கரிச்ச பீடத்தில் உற்சவமூர்த்திகளைச் சுமந்து கொண்டு வந்து வச்சுட்டு அங்கேயும் ஆரத்தி எடுத்தாங்க. எல்லாம் ஒரே சமயத்தில் களேபரமா நடக்குது. நல்ல கூட்டம். ஆடறவங்க ஆடிக்கிட்டே இருந்தாங்க. பாடறவங்களும் பாடிக்கிட்டே................
விக்கிரஹங்களுக்கு ஆடை ஆபரணங்கள் எல்லாம் அருமையாப் போட்டு அலங்கரிச்சு இருந்தாங்க.

சாமி கும்பிடும் விஷயத்தை ரொம்ப எளிய முறையில் ஆக்குனதுக்கே இந்த ஹரே க்ருஷ்ணா இயக்கத்தைப் பாராட்டலாம். நாலே வரிகள் யாருவேணுமுன்னாலும் எப்ப வேணுமுன்னாலும் சொல்லலாம். அவ்ளோதான். இதுவே கூட்டத்தை ஈர்க்குதோ என்னவோ?

பெங்களூரு ஹரே கிருஷ்ணா கோவிலை, பிரமாண்டமாக் கட்டி அதை பக்கா வியாபார ஸ்தலம் ஆக்குனது போல இங்கே இதுவரை ஒன்னும் செய்யலை. நாங்களும் வேற கோவில்கள் இல்லாததால் கடந்த 22 வருசமா எங்கூரு ஹரே கிருஷ்ணா கோவிலுக்கே போய் பழக்கப்பட்டுட்டதால் இங்கே பூஜை முறைகள் எல்லாம் புதுசா இல்லாம 'பேக் ஹோம்' போனமாதிரி ஒரு திருப்தியாக்கூட இருந்ததென்னவோ உண்மை.

 நம்ம சனிக்கிழமை கோவில் வழக்கத்தை விடவேணாமேன்னு மூணாவது முறையாப் போனபோது, ஆரத்தி எடுக்கும் சமயத்துக்கு முன்னே வந்தவங்க எல்லோரும் அங்கங்கே குழுவா இருந்தாங்க. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா வந்து சேர ஆரம்பிச்சு அம்மாம் பெரிய ஹாலில் ஜனத்திரள்! திரைவிலகும் சமயம் ஒரு நாட்டாமை வந்து 'எங்களிடம்' ஆண்கள் எல்லோரும் இந்தப்பக்கம் பெண்கள் அந்தப்பக்கமுன்னு சொன்னதும் எனக்குக் கொஞ்சம் கடுப்பானதென்னவோ நிஜம். போய் கண்ணனையும் ராதையையும் பிரிச்சுவச்சுட்டு அப்புறம் எங்களிடம் வந்து சொல்லுன்னு ....... கூவ ஆசை இருந்துச்சு. ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு விதிகள். இது இந்தியா ஆச்சே! நியூஸியா எல்லோரும் அடங்கி இருக்க? இவ்வளோ கூட்டமான இடத்தில் தலை திருகிப்போன ஆள் எவராவது வந்து சில்மிஷம் பண்ணால்...... வேணாம் வம்பு. ஆனால் மனசில் மட்டும் 'கண்ணனையும் ராதையையும்' ' பிரிக்க இடம் கொடுக்கக்கூடாதுன்னு தோணிப்போச்சு.


 இனிமே இங்கே வரவே கூடாதுன்னு எரிச்சல். கோபம் அடங்கி நிதானமா யோசிச்சால்.... எதுக்கோ பயந்து எதையோ செய்யாமப் போனமாதிரின்னு ஒரு பழமொழி வரும்பாருங்க..... ச்சீச்சீ வேணாம். கோவிலில் உக்கார்ந்துக்கிட்டுச் சொல்றதா இது....யக்:(  மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துனது போல ன்னு வச்சுக்கலாமா?

பிரச்சனைன்னு வந்துட்டா எப்படி அதுக்குத் தீர்வுன்னு யோசிக்கணுமா இல்லையா? யோசிச்சேன். சனியையும் விடமுடியாது, பிரிந்தும் உக்காரமுடியாது.....

ஏழு மணி ஆரத்திக்கு ஒரு அரைமணி, முக்கால்மணி முன் போகணும். அப்போ சந்நிதி திறந்துதான் இருக்கும் சேர்ந்து இருந்து சாமி கும்பிடலாம். . ஏழுமணிக்கு ஒரு பத்து நிமிசம் இருக்கும்போது மறுபடி திரை போட்டுட்டு சங்கு ஊதி ஆரத்திக்காக திரை திறக்கும்போது கிளம்பி வந்துடலாம். இது எப்படி இருக்கு? கண்ணனையும் ராதையையும் பிரிச்ச பாவத்துக்கு அவுங்களை ஏன் ஆளாக்கணும்?

ஒன்னுரெண்டு சனிகள் இப்படிச் செஞ்சேன். எல்லோரும் பக்திப்பரவசத்தில் ஆடும்போது ' விருட்' ன்னு கிளம்பறதும் கொஞ்சம் என்னமோ போல இருக்கேன்னு ..... சனிகளில் நம்ம பஞ்ச்குலா பாலாஜியிடமே சரணடைஞ்சேன். அநேகமாக ஏகாந்த ஸேவையே கிடைச்சுரும். சில நாட்களில் சண்டிகர் முருகன் கோவிலில் இருக்கும் பெருமாள் முன்னே சனிக்கிழமைகளில் நடக்கும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்தில் கலந்துக்கறதும் உண்டு.

 ஊர்திரும்பினபிறகு பார்த்தால் நிலநடுக்கத்தில் உள்ளுர் இஸ்கான் கோவிலே இடிஞ்சு விழுந்துட்டதால்..... சனிக்கிழமைகள் இனி வீட்டோடுன்னு ஆன சமயம் ஸ்வாமி நாராயண் வந்து அபயம் கொடுத்துருக்கார். ஆனாலும் அந்த இயக்கத்தில் ந்ருஸிம்ஹ ஜயந்தி எல்லாம் கொண்டாடுவதில்லை:(
சென்னைக்கோவில் கட்டும் சமயம்
இன்னிக்கு தினமலரில் சென்னை இஸ்கான் கோவில் குடமுழுக்கு செய்து திறந்துட்டாங்கன்னு பார்த்தேன். நல்ல அழகா பெருசாத்தான் கட்டிக்கிட்டு இருந்தாங்க. சென்னை வாழ்க்கையில் ஒரு முறை போய் வந்தோம். பக்கத்துலே பழைய கட்டிடத்தில் கோவில் நடக்குது. வழக்கம்போல் ஸ்ரீபிரபுபாதா அவர்களின் உருவச்சிலை இருந்தாலும் மெயின் சந்நிதியில் மூணு மாடங்களில் நடுவில் கௌராநித்தாய் (டபுள் சிலைகள்) வலதுபக்கம் பூரி ஜகன்நாத், பல்தேவ் & சுபத்ரான்னு அண்ணன்தங்கச்சி, இடதுபக்கம் ருக்மிணி சத்யபாமா சமேதராய் கிருஷ்ணன்! இதுவரை ருக்மிணியையும் சத்யபாமாவையும் ஒருசேர எங்கேயும் பார்க்கலையே  ' நான்' னு யோசனைதான்.
சென்னையில்
நம்ம க்ருஷ், ருக்மிணி சத்யபாமாவுடன்
ஸ்ரீ கௌராநித்தாய்
அண்ணன்களும் தங்கையும்

PIN குறிப்பு: ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி மகோத்ஸவம் மும்பையில் நடக்குதாம். சென்னை இஸ்கான் குடமுழுக்கு இப்படி வாசிச்சதும் முக்கால்வாசி எழுதி ட்ராஃப்டில் போட்டுவச்சுருந்ததை இன்னிக்கு முடிச்சு வெளியிடுகிறேன். இன்னிக்கு உடையவர் ஜயந்தியும் சேர்ந்துருக்கு, கேட்டோ!!!!!

Wednesday, April 25, 2012

இல்லாதவர்களின் மாங்காய்(????) பச்சடி!

உள்ளூர்த்தோழி சும்மா ஒரு விஸிட்ன்னு வந்துருந்தாங்க. காலை ஒரு 11 மணி இருக்கும். பகல் சமையலுக்கு என்ன செய்யலாமுன்னு மண்டையை உடைச்சுக்கிட்டு இருந்த நேரம். காஃபி ஒன்னு குடிச்சுட்டு ரெண்டு பேருமாக் கொஞ்சநேரம் அரட்டைஅரங்கில் இருந்தோம். அப்பதான் தோணுச்சு பரிசோதனைக்குப் புது ஆள் இருக்கும்போது...... விடமுடியுமா? மிக்ஸட் வெஜிடபிள், தாமரைத்தண்டு துண்டுகள் சிலன்னு போட்டு ஒரு ஃப்ரைடு ரைஸ் செஞ்சேன். அதுலே துள்ஸி ஸ்டைலில் கொஞ்சம் முந்திரிப்பருப்பு , திராக்ஷை நெய்யில் வறுத்துக் கலக்கியாச்சு. ஒரு மணி போல கோபாலும் லஞ்சுக்கு வந்துட்டார். சாப்பாடு பரிமாறினப்ப, தொட்டுக்க பச்சடி எடுத்து விளம்பினேன். தின்னு பார்த்த தோழியின் முகம் மலர்ந்தது. அட! மாங்காய்ப்பச்சடியா!!!! அம்மச்சி எப்பவும் செய்வாங்கன்னார். தோழி மலேசிய இந்தியர். சாப்பிட்டு முடிக்குமுன் இன்னும் கொஞ்சம் எடுத்துத் தட்டுலே போட்டுக்கிட்டு, 'எவ்வளோ நாளாச்சு மாங்காய் தின்னு...... ரொம்ப நல்லா இருக்கு....'
சக்ஸஸ்!!! மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டேன். நேத்து கோபாலுக்கு லஞ்சுக்கு பச்சடியும் பெங்களூர் கத்தரிக்காய் கறியும் சப்பாத்தியுமா சிம்பிளா செஞ்சு கொடுத்தேன். அப்பவும் பச்சடியைத் தின்னு பார்த்துட்டு,   'மாங்காய் ஏதும்மா?? 'ன்னு கேட்டதோடு சரி. சக்ஸஸ் சக்ஸஸ்.
இரவு டின்னருக்கு மகள் வந்துருந்தாள். பரிசோதனை எலி எண் 3. பச்சடியைத் தின்னதும் நல்லா இருக்கான்னு கேட்டேன்.   'நிறையதடவை செஞ்சுருக்கீங்களே. இப்ப என்ன கேள்வி. மேங்கோ இஸ் நைஸ் அண்ட் டேஸ்ட்டி '. சக்ஸஸ் சக்ஸஸ் சக்ஸஸ். வருசப்பிறப்பன்னிக்கு நம்ம ரோஷ்ணியம்மா மாங்காய்பச்சடி செஞ்சேன்னு சொல்லி பதிவில் எழுதி இருந்தாங்க. அன்னிக்கு வல்லியம்மாவிடம் பேசுனபோது இதேதான். அவுங்க மரத்துலே ஏகத்துக்கும் காய்ச்சுக்கிடக்கு. ஊறுகாய் எல்லாம் போடணுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஹூம்..... கூந்தல் இருக்கறவங்க...... அள்ளி முடிஞ்சுக்கறாங்க. நாமோ......
புழக்கடையில், துவைச்ச துணிகளைக் காயப்போட்டுட்டுப் பார்வையை அகஸ்மாத்தா அந்தப்பக்கம் திருப்பினால்..... அட! எப்படி இதை மறந்தேன்? ஏகத்துக்கும் காய்ச்சு, பறிக்க ஆளில்லாமல் கீழே விழுந்து கிடக்கு.
ரோஷ்ணியம்மாவுக்கு எசைப்பாட்டு பாடியே ஆகணும். மரத்துலே இருந்து ரெண்டு பறிச்சுக்கிட்டு வந்தேன். நம்மாத்து க்ரானி ஸ்மித். அஸ்ட்ராலியாக் கண்டுபிடிப்பு. முதல்முதலா 1868 லே 'மரியா ஆன் ஸ்மித்' என்ற பெண்மணி ஓட்டுச்செடி மூலம் விளைவிச்சதாம் இது. அதான் அந்தம்மா பெயரையே வச்சுட்டாங்க. கண்டுபிடிப்பை ஆண்டுஅனுபவிக்காம அடுத்த ரெண்டாம் வருசம் அந்தம்மா சாமிகிட்டே போயிட்டாங்க. அப்போ வயசு 71.
ஒரு நாலு வருசம் முன்பு, இந்த ஆப்பிளை ஒருமாதிரி ஊறுகாய் போட்டுப் பதிவெல்லாம் போட்டாச்சு கேட்டோ:-) பார்க்கலையா? அடடா....நோ ஒர்ரீஸ். இப்பவும் க்ளிக்கிப் பார்க்கலாம். 

செய்முறை விளக்கம் பார்க்கலாம் வாங்க.

 தேவையான பொருட்கள்:


 பச்சை ஆப்பிள் 2
 உப்பு ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் 5
 மஞ்சத்தூள் கால்தேக்கரண்டி
 அரிசி மாவு ஒரு தேக்கரண்டி
நாட்டுச்சக்கரை அரைக் கப்

தாளிக்க: 

எண்ணெய் ரெண்டு தேக்கரண்டி
கடுகு முக்கால் தேக்கரண்டி
 கருவேப்பிலை ஒரு இணுக்கு.

செய்முறை: 

ஆப்பிளைக் கழுவி ரெண்டா வெட்டி நடுவில் இருக்கும் விதையுள்ள கெட்டிப்பகுதியை(Core) வெட்டி எடுத்துட்டுக் கடாசிட்டு பெரிய துண்டமாப் போட்டுக்குங்க. பச்சை மிளகாயைத் துண்டுகளா வெட்டிக்கணும்.
ஒரு பாத்திரத்தில் அரைக்கப் தண்ணீர் ஊற்றி அதுலே இன்த வெட்டிய ஆப்பிள் துண்டுகள், மஞ்சள் தூள், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து அடுப்பில் வச்சு வேகவிடுங்க.( அடுப்பைப் பத்தவைக்க மறக்கவேண்டாம்) அஞ்சே நிமிசத்தில் வெந்துரும். இப்போ சக்கரையைச் சேர்க்கணும். வெல்லம் கிடைச்சால் இன்னும் நல்லது. நான் சாஃப்ட் ரவுண் சுகர் என்று இங்கே கிடைப்பதைப் பயன்படுத்துகிறேன். சக்கரை உருகிக் கலந்ததும் ஒரு கிளறு கிளறிட்டு அரிசிமாவைக் கொஞ்சம் தண்ணீரில் கரைச்சு ஊத்துங்க. எல்லாம் சேர்ந்து ரெண்டு கொதிவந்ததும், தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊத்திச் சூடானதும் கடுகு போட்டு வெடிக்கவிட்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி அதை எடுத்துப் பச்சடியின் தலையில் கொட்டணும்.
டடா....... மாங்காய்ப் பச்சடி ரெடி:-))))) ரொம்ப சுலபம். பத்துப்பதினைஞ்சு நிமிசத்துலே தயார். இனி பரிசோதனை எலியின் வருகைக்குக் காத்திருந்து பரிமாறவும். அம்புட்டுதான், கேட்டோ:-)))

Monday, April 23, 2012

அமாவாசையா, இல்லே பவுர்ணமியா?

ஒரு மனுசிக்கு இப்படியெல்லாம் சந்தேகம் வந்துருச்சே:( பவுர்ணமிக்குப் பிறந்தார். பவுர்ணமிக்கு ஞானம் பெற்றார், பவுர்ணமிக்கு நிர்வாணம் அடைஞ்சார். பவுர்ணமிக்கு உடலைத் துறந்தார் என்றெல்லாம் பள்ளிக்கூட நாட்களில் படிச்ச ஞாபகம் இருக்கு. மேலும் வைகாசி விசாகம் (பொதுவா இந்த நட்சத்திரத்துலேதான் வைகாசி மாசப் பவுர்ணமி இருக்கும்! ஐயம் உள்ளவர்கள் தமிழக முதலமைச்சரின் சமீபத்திய விளக்கம் பார்க்கவும்) நாளன்றுதான் புத்த பூர்ணிமான்னு கொண்டாடுவாங்க.

இங்கே என்னன்னா...... சித்திரை அமாவாசையில் பொறந்தநாள் கொண்டாட்டம்!!!! எங்கூர்லே International Buddhist Association ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்னால் புத்தர் கோவில் ஒன்னு கட்டுனாங்க. நாம் பொதுவாப் பார்க்கும் பகோடா (தின்னும் பொருள் இல்லை கேட்டோ!)கோபுரம் எல்லாம் இல்லை. ரொம்ப நவநாகரிகமான மாடர்ன் பில்டிங். அப்பதான் க்ரீன் கான்ஸப்ட் Eco ஒன்னு பரவலா அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சமயம் உள்ளூர் கட்டிடவடிவமைப்புக் கம்பெனி இதுலே ஆர்வம் காமிச்சு டிஸைன் போட்டுக்கொடுத்தாங்க. சூரிய சக்தி மின்சாரத்தால், கோவிலுக்குள்ளே சீரான வெப்பநிலை, செடிகொடிகள், இயற்கையான வெளிச்சம், ஜன்னல்கள்ன்னு இல்லாமலேயே வெளிப்புறக்காட்சிகள் தெரியும்விதமா வெளிக்கட்டிட அமைப்புன்னு புதுமாதிரியா இருந்துச்சு. 

படம்: சாமிக்கு எதிரில் தெரியும் மலை வ்யூ

 'கதவைத் திற.......... மலைகள் தெரியும் ' 'என்று ஒரு சீனப்பழஞ்சொல் இருக்காமே! அதையொட்டிய மாதிரி புத்தர் கண்ணைத் திறந்தால் மலையைப் பார்க்கும்விதமா மாடியில் கோவில், கீழ்தளத்தில் வெஜிடேரியன் உணவுக்கடை, அவர்கள் மத சம்பந்தமான படிப்பு, தியானம் எல்லாம் சொல்லிக்கொடுக்கும் வகுப்பு நடத்த இடம், சின்னதா ஒரு ஆர்ட் கேலரி, சாமி சமச்சாரம் விற்கும் கடைன்னு.... நடுவில் ஒரு சின்னப்புல்வெளின்னு இருந்துச்சு. நம்மூர்க்கோவில், நாம் போகலைன்னா எப்படின்னு திறப்பு விழா சமயம் போய் சேவிச்சுட்டு வந்தோம். மேடையில் பிரமாண்டமா(!!) ஒரு புத்தர் சிலை மட்டுமே இருந்துச்சு. போர்ஸலீன் சிலையோன்னு தோணும்படி இருக்கேன்னு விசாரிச்சதில் வெண் பளிங்குன்னு சொன்னாங்க. தரையில் உக்கார்ன்து பிரார்த்தனை செய்ய வரிசையா மணைக்கட்டைகள், புத்தகம் வச்சுக்க மடக்குப் பலகைன்னு ஹாலில் சிம்பிளா வரிசைகள். அதுக்குப்பிறகு வாரம் நாலுமுறையாவது கோவிலைத்தாண்டி போறோம்வாரோமே தவிர உள்ளே போய்க் கும்பிட வேளை வரலை. நமக்குதான் ஹரே க்ருஷ்ணா இருந்துச்சே! ஒரு நாள் போகணுமுன்னு நினைச்சுக்கிட்டே அஞ்சு வருசத்தை ஓட்டிட்டேன். 

புத்தருக்கு பர்த்டே கொண்டாட்டமுன்னு உள்ளூர் (இலவச)பத்திரிகை சேதி. மகளுடைய லேப்டாப் மண்டையைப் போட்டதால் புதுசு ஒன்னு வாங்க வேண்டிய நெருக்கடி. மாலுக்குப்போய் மூணு கடைகளிலும் மாறிமாறிப் படையெடுத்துக் கடைசியில் ஸோனி ஒன்னு 25 சதம் கழிவில் கிடைச்சது. மகளை வீட்டில் கொண்டுபோய் விட்டுட்டு நாங்க கோவிலுக்குள் நுழையும்போது கொண்டாட்டம் முடிஞ்சு கூடாரங்களைக் கழற்றி எடுத்துக்கிட்டு இருந்தாங்க. போயிட்டுப்போகுது..... பர்த்டே பாய் இருப்பாரேன்னு உட்புற முற்றத்தைக் கடந்தால்.... அங்கே நின்ற திருக்கோலத்தில் புதுசா ஒரு புத்தர் சிலையும் ரெண்டு பக்கமும் சுத்தம் வலியுறுத்தும் சேவை செய்யும் குட்டிகளின் சிற்பங்களும். ஒன்னு துடைப்பம் வச்சுப் பெருக்குது. இன்னொன்னு கிணற்றில் தண்ணீர் இறைக்குது. மனம் நிறைஞ்ச அமைதியுடன் முகங்கள் கொள்ளை அழகு!
வெளிமுற்றம்


கட்டிடத்துக்குள்ளே நுழைஞ்சதும் (நாம் கார்ப்பார்க்கில் இருந்து புழக்கடை வழியில் உள்ளே போய்க்கிட்டு இருக்கோம்) இடப்பக்கம் ஒரு வெஜிடேரியன் உணவிவிடுதி. வலதுபக்கம் நினைவுப்பொருட்களும் சாமிப்பொருட்களும் விற்கும் கடை.
கடை
மாடிப்படியேறி கோவில் கருவறைக்குள் போறோம். சிரித்த முகத்துடன் வரவேற்று கையில் ஊதுவத்திக் குச்சியைக் கொடுத்தார் கோவில் தன்னார்வலர்களில் ஒருவர். நமக்கு இங்கே ஏகாந்த ஸேவைக்கு விதிச்சிருக்கு! ஆஹா...... எரியும் விளக்கில் ஊதுபத்தியைக் கொளுத்தி அங்கே அதுக்குன்னு வச்சுருக்கும் உருளியில் குத்தி வைக்கணும். வச்சோம். கருவறை அலங்காரங்கள் எல்லாம் சமீபத்துலே மாற்றி அமைச்சுருக்காங்க. முந்தி பெரூசா இருந்த புத்தர் இப்போ மீடியம் சைஸுலே இருக்கார். அதே சிலையா இல்லை புதுசான்னா..... அதே தானாம். எப்படி இளைச்சாராம்? நான் ஊதியதால் என் கண்ணுக்கு அவர் இளைச்சுட்டார்ன்னு கோபால் சொல்றார்!!!

சந்நிதி
முந்தி வெறும் சிலை மட்டும்தான். இப்போதான் பரிவாரதேவதைகளும் எக்ஸ்ட்ரா அலங்காரங்களுமா நிறைஞ்சு இருக்குன்றார்.

சந்நிதிக்கு இரண்டு புறமும் ஒரு உருளி போன்ற பாத்திரத்தில் குழந்தை புத்தர் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற ஸ்டைலில் வலக்கையை உயர்த்தி ஆள்காட்டிவிரல் காமிக்கிறார். இவருக்கு நாமே அபிஷேகம் செய்யலாம். என்ன முறை என்பதை விளக்கமா எழுதி வச்சுருக்காங்க. முதலில் சாஷ்டாங்கமா விழுந்து வணங்கிட்டு சிலைக்கு எதிரில் இருக்கும் சின்ன இருக்கையில் முழந்தாளிட்டு, உருளியில் இருக்கும் புனித நீரை அதுலேயே இருக்கும் குட்டி அகப்பையால் கோரி புத்தரின் இடது தோளில் வார்க்கணும். முதல்லே இடது பக்கம். அப்புறம்தான் வலது பக்கம். தலையில் தண்ணீர் ஊத்தக்கூடாது. கைக்கூப்பி கும்பிட்டு உங்கள் வேண்டுதலை மனசில் சொல்லிக்கணும். ( இதைத்தான் மறந்துட்டேன்) அப்புறம் எழுந்து நின்னு, இடுப்புவரை குனிஞ்சு ஒரு கும்பிடு.
புத்தர் க்ளோஸ் அப்

பெர்ஸிமோம் பழ டிஸைனில் வரிசையா விளக்குகள் எரியுது. பூக்களும் பழங்களுமா அலங்காரம். பத்மாஸனத்தில் அமர்ந்து கண்களைப் பாதித் திறந்த நிலையில் அருள் பொங்க நம்மைப் பார்க்கும் திருமுகம். பளபளன்னு ஒரு ஜொலிப்பு. அவருக்கு வலது பக்கம் இருக்கும் பரிவார தேவதை யாருன்னு தெரியலை:( கோவில் ஆளிடம் கேட்டதுக்கு அவர் இப்பதான் வகுப்புகளுக்குப்போய் படிச்சுக்கிட்டு இருக்காராம். எங்க டீச்சரைக்கேளுங்கன்னு டீச்சரை முன்னால் கொண்டுவந்து நிறுத்தினார். அவருக்கும் தெரியாது போல! அந்த மாதிரி முழிச்சுக்கிட்டே காவலாளின்னார். நல்லவேளை கூர்க்கான்னு சொல்லலை!


 'ஆக்லாந்து நகரில் இதே கோவில் ஒன்னு இருக்கு. நான் அங்கேதான் கோவிலில் சேவை செஞ்சுக்கிட்டு இருக்கேன். அங்கே பெரிய சிலை. இந்தப் பொறந்தநாள் கொண்டாட்டத்துக்குக்காக இன்னிக்கு இங்கே வந்தேன்' ன்னு சொன்னார். நீங்க எந்த நாடுன்னார்? ஆஹா..... ' 'ஐ ஆம் ஃப்ரம் தெ லேண்ட் ஆஃப் புத்தா 'ன்னேன். கிடைச்ச கேப்பில் கெடா வெட்டிட்டம்லெ:-))))) 


எங்கூர் புத்தரை இப்படி நீங்க எல்லோரும் கொண்டாடுவது மகிழ்ச்சியா இருக்குன்னுட்டு, ஆமாம்..... புத்தர் பவுர்ணமிக்காரராச்சே.... எப்படி இன்னிக்கு சித்திரை மாச அமாவாசைக்குப் பொறந்தநாள் கொண்டாடுறீங்கன்னேன். (சித்திரா பவுர்ணமின்னாக்கூட மனசு கொஞ்சம் சமாதானமாகி இருக்கும் இல்லே?) ஆக்ச்சுவல்லி அடுத்த சனிதான் புத்தர் பொறந்தார். (ஙே!) அடுத்தவாரம் ஆக்லாந்து கோவிலில் கொண்டாட்டம் வச்சுருக்கோம். எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் மாலை 7 முதல் 8.30வரை  'தர்மா' ' என்னும் விசேஷ பூஜை நடக்கும்.. வாங்கன்னார். தைய்வான் மக்கள் நடத்தும் புத்தர் கோவில் இது. அப்ப இங்கே தாய்லாந்து மக்கள் நடத்தும் புத்தர் கோவிலில் என்னைக்கு விசேஷமாம்? அப்படி ஒரு கோவில் இருக்கா? தெரியவே தெர்யாதுன்னார்!!!!! ஆமாம். பதிவுலகத்துக்குக்கூடத் தெரியாது. இன்னும் எழுதலை:(

மாடியில் ஜாடிகள் எல்லாம் வச்சு அழகுபடுத்தி இருக்காங்க. போனவாரம் வந்துருந்தால் கோடுபோட்ட ரோடுக்கு அருமையான படம் கிடைச்சிருக்கும்.
களிமண் பழங்கள்

களிமண் பூச்சாடி

இந்த ZEN வாழ்வின் எல்லாத்தருணத்திலும் கலைகளிலும் இருக்குன்னு சொல்றதைப்போல களிமண் வச்சுக் கலைப்பொருட்கள் செய்யும் ஆர்ட் ஸ்டூடியோ நடத்தும் சீனர் Yi Ming ( எலக்ட்ரானிக் எஞ்சிநீயர்) கொஞ்சம் பழங்களையும் பூக்களையும் டிஸ்ப்ளே செஞ்சுருக்கார். பூச்சாடி அலங்காரம் எட்டு நூறாம்!!!! மண்ணைப் பொன்னாக்கும் வித்தை தெரிஞ்சவர்!!!!
 அமைதியா இரு  என்றார் புத்த சந்நியாசி
ஆர்ட்
கீழ்தளத்தில் ஆர்ட் கேலரியில் பெயிண்டிங் எக்ஸிபிஷன் நடக்குது. ஸென் பெய்ண்டிங்! நாம் ZEN ஸென் ஸென் என்று சொல்றோமே அந்தச் சொல் சீன மொழியில் ச்சன் CHAN என்று உச்சரிப்பாம்.ஸென் கதைகள் கொஞ்சம் அங்கே இங்கேன்னு வாசிச்சு இருக்கேனே தவிர சித்திரங்கள் பார்த்ததில்லை. கதைகளைப்போலவே ரொம்ப சிம்பிளா இருக்குன்னாலும் சொல்லும் விஷயங்களில் ஆழம் அதிகம் இருக்கும் போல! ஆர்ட்டிஸ்ட் , ஒரு சித்திரத்தைக் காட்டி அஞ்சு நிமிசம் விடாம விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தார் இன்னொரு சீனப்பெண்மணிக்கு!!!! என்னைப்போல இருக்கும் ஞானசூனியங்களுக்காக சித்திரத்தின் அருகில் ஒரு ஆங்கிலத் தலைப்பு! இந்தப் பெயிண்டிங் 'டிவோட்டட் ஃபாலோவர்ஸ்'சித்திரக்காரர் பெயர் ( Kim Hoa Tram) கிம் ஹோ ட்ராம். அண்டை நாடான அஸ்ட்ராலியா, மெல்பெர்ண் நகரத்தில் இருந்து வந்துருக்கார். எழுதப் போறேன்னதும் (!!!!) படம் எடுத்துக்க அனுமதி கொடுத்ததோடு, அவரைப்பற்றிய சுருக்கமான விவரத்தையும் தந்தார். எனக்கும் அந்தக் கட்டுரையை அனுப்பமுடியுமான்னார். நோ ஒர்ரீஸ். எழுத்தெல்லாம் எங்க மொழியில் இருக்கும். அதில் உங்க படங்களை நீங்க பார்த்துக்கலாம். மெயில் ஐடி கொடுங்கன்னு வாங்கி வச்சுக்கிட்டேன்.
கிம்
மறக்காம அவருக்கு லிங்கு அனுப்பிவிடணும்:-))))
படம் 1

படம் 2படம் 3


சமீபகாலமா ஸென் புத்தமதம் உலகிலே ரொம்பவே பரவிவருதுபோல! அதைப்பற்றித் தெரிஞ்சுக்கிட்டு ஆழ்ந்த தியான நிலைக்குப்போய் ஆன்மீகவாதியா மாற நமக்கு வேளை வரலை!!!!

ஒரு படத்துலே நம்ம கப்பு மரத்துமேலே உக்கார்ந்துருக்கு!!!!! 

 ரி. எல்லாம் இருக்கட்டும். புத்தர் எப்பத்தாம்ப்பா பொறந்தார்?????