Showing posts with label Buddha Temple. Show all posts
Showing posts with label Buddha Temple. Show all posts

Monday, July 13, 2015

அட்டகாஸமான சாப்பாடும், அமைதியான புத்தரும்....... (தலைநகரத்தில் ! பகுதி 11)

நண்பர் ராம்ஸ் வீட்டுக்கு  ஒருமணிக்கு முன்னே வந்துருவோமுன்னு சொல்லி விலாசம் வாங்கிக்கிட்டோம்.  நாம் தங்கியிருக்கும் ட்ராவல் லாட்ஜில் இருந்து ஒரு 20கிமீ தூரம்தான்.  21 நிமிட்லே போயிறலாமுன்னு கூகுள்காரர் சொல்றார்.  கொஞ்ச நேரம் சிட்டிக்குள்ளே சுத்திட்டு  அப்புறம் அங்கே போகலாம்.  அவுங்களுக்கும் ஆக்கிஅரிக்க நேரம் கொடுக்கணுமுல்லே!


ஹார்பராண்டை வரும்போது  குக் ஸ்ட்ரெய்ட் ஃபெர்ரி வர்றது தெரிஞ்சது.  இது இப்போ பிக்டன் என்ற ஊரில் இருந்து வந்துக்கிட்டு இருக்கு.



நாம் வசிப்பது க்றைஸ்ட்சர்ச்  என்னும் நகரம். இது தெற்குத்தீவின்  நடுப்பக்கம் கிழக்குக்கரையாண்டை.  பிக்டன் என்ற ஊர் இருப்பது தெற்குத்தீவின் தலைப்பக்கம்.  வெலிங்டன் நகரம்  இருப்பது வடக்குத்தீவின் கீழ்க்கோடியிலே.  ரெண்டு தீவுகளுக்கும் இடையில் இருப்பதுதான் இந்த குக் ஜலசந்தி Cook Strait)  ஒரு 63.5 மைல் வரும். கடலுக்கடியில் இருக்கும் பாறைகளைச் சுத்திக்கிட்டுப் போகணும்.  விமானத்துலே கடந்தால்  40 மைல்.  இது இந்தப் பிக்டன் என்ற ஊரிலிருந்து  வெலிங்டன்  ஹார்பர் வரை.


நம்மூரில் இருந்து பிக்டன் போகணுமுன்னா காரில் அஞ்சு மணி நேரப்பயணம்.  அப்புறம் இங்கிருந்து ஃபெர்ரி எடுத்தால் அது ஒரு  மூணரை மணி நேரப்பயணம்.  என்ன ஒன்னு அதிகமான சாமான்கள், கூடவே கார் எடுத்துக்கிட்டுப் போகணுமுன்னால்  ஃபெர்ரிதான்.

நாங்க ஒரே ஒருமுறை  இந்த  கப்பலில் பயணம் செஞ்சுருக்கோம். அதுகூட அப்ப நம்ம  ரங்கா மாமா ரொம்ப உடல்நிலை மோசமாகி  ஆஸ்பத்திரியில் இருந்த  நேரம். நாள் குறிச்சிட்டாங்க.  எங்கே பார்க்கமுடியாமப் போகுமோ என்ற பதைப்பில்  கார்ப்பயணமா பிக்டன் வரை போய் அங்கே வண்டியைப் பார்க்கிங்கில் விட்டுட்டு கப்பலில் பயணம்.  வெலிங்டன் ஆஸ்பத்ரிக்குப்போய்   அவரைப் பார்த்துட்டு, அக்கா வீட்டில் இரவு தங்கி, மறுநாள் அதிகாலைக் கப்பலைப் பிடிச்சு  பிக்டன்வந்து சேர்ந்து, காரை ஓட்டிக்கிட்டு ஊர் வந்து சேர்ந்தோம்.

 எனக்கு கடல்பயணம் ஆகாது. வெலிங்டனில்  கப்பலேறி  ஒரு  காமணி நேரத்துக்குள்ளே வயித்தைப் பிரட்டிக்கிட்டு  வழியெல்லாம் ஒரே டேஷ் தான். வாஷ் பேஸின் கிட்டே நின்னே  முழுப்பயணமும் போச்சு. பிக்டன் வந்த பின்தான்  மூச்சே ஒழுங்க வந்துச்சு.   இந்தக் கடல்பயணத்தில் உண்மையா அனுபவிக்க வேண்டியது  டால்ஃபின்களை. நமக்கு  அதிர்ஷ்டம் இருந்தால் கூட்டங்கூட்டமா கப்பலைத் தொடர்ந்து  வரும்.  மகளும் கோபாலும்  ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு சொன்னாங்க.

நம்ம ஊருக்கு  அஞ்சு மணி நேர ட்ரைவ். நல்ல  குளிர்காலம்.  வழியெல்லாம் பனி மூடிக்கிடக்கும் சாலைன்னு  ரொம்பவே ஆபத்தான பயணமா இருந்துச்சு. விமானத்தில் போனால் முக்காமணி நேரப்பயணம்தான்.  ஆனால் அப்ப  செலவு ரொம்ப அதிகம். நாங்க மூணு பேர் போய் வர ஆயிரம் டாலர்.  கொள்ளை அடிச்சுக்கிட்டு இருந்துச்சு ஏர் நியூஸிலேண்ட்.  இப்பப் பாருங்க நாம் வந்துருக்கோம், ஸ்பெஷல் ஃபேர்ன்னு  49 டாலர் ஒன்வே!

(அப்புறம் ஒரு வாரத்தில் மாமா, சாமிக்கிட்டே போயிட்டார். நான் மட்டும் காலை நேர விமானத்தில்  போய்  இறுதிச்சடங்கில் கலந்துக்கிட்டு  மாலை விமானத்தில் ஊர் திரும்பிட்டேன். ஆச்சு 20 வருசம்!)

இப்ப ஃபெர்ரி வருதுன்னதும்  போர்ட்டுக்குள்ளே போய்வண்டியை நிறுத்திட்டு வேடிக்கை பார்த்தோம்.அப்படியே திரும்பி ரிவர்ஸ் எடுத்து ஜெட்டியில் போய் நின்னது. பிக்டனில் காலை எட்டுக்குக் கிளம்பி, இங்கே சரியா  பதினொன்னரைக்கு  வந்துருச்சு. கப்பல் பயணம் இனிதே, இந்த டேஷ் தொல்லை மட்டும்  இல்லையெனில்!

 இந்தக் கப்பல் தவிர  Interislander என்னும்  இன்னொரு கப்பல் சர்வீஸ் 1962 இல் ஆரம்பிச்சதும்  இருக்கு.  இதை நடத்தறது  Kiwi Rail. ரயில் கப்பல் ரயிலுன்னு மாத்தி மாத்திப் பயணம் செஞ்சு   நாட்டின் வடகோடியிலிருந்து தென் கோடிவரை போகலாம்.   கார்கள் பெருகிப்போனதால் ரயிலுக்குப் போக ஆட்கள் இல்லைன்னு  ஆகிப்போச்சு . இப்போ வெறும் சரக்கு ரயில்கள்தான் போய் வருது.

நகரின் முக்கிய சாலைகளை ஒருமுறை வலம் வந்தபின்,  லோயர் ஹட் போகும்  வழியில் போறோம்.  இதைத்தாண்டித்தான்  நண்பரின் பேட்டை வருது. கடலையொட்டியே போகும் சாலை.  மழை வேற ஆரம்பிச்சது. சிறு தூறல். சொன்ன நேரத்துக்குப் போய்ச்  சேர்ந்தோம்.  நண்பர் ராம்ஸ்   நம்ம குறிஞ்சி முருகன் கோவில் பூசகர்களில் ஒருவர். இதெல்லாம் வாலண்டியர்  வேலைதான். அவரவர்  ஆஃபீஸ் போய் வந்துட்டு  கோவில் வேலைகளில் பங்கெடுத்துக்கறாங்க.  நண்பரின் மகன் எங்க ஊர் யூனியில் படிக்கிறார்.

  குறிஞ்சிக்  குமரனைப் பார்க்காமல் விட்டவர்கள் இங்கே பார்க்கலாம்.


பேச்சு,  அட்டகாசமான  சாப்பாடு எல்லாம் நல்லபடியாப் போய்க்கிட்டு இருக்கும்போது  'இங்கே பக்கத்தில் ஒரு புத்தர் கோவில் இருக்கு போகலாமா'ன்னு கேட்டாங்க தோழி.  கரும்பு தின்னக்கூலியா?  ஆனாலும்  மாலை ஃப்ளைட் பிடிக்கணும். இன்னொரு இடமும்  போற வழியில் பார்த்துக்கணுமுன்னு இருக்கேன். இப்ப.... ...

இதைத்தவிர டிஸ்ஸர்ட்டுக்கு பாதாம்கீர்.


பக்கத்துலேதான்.  ஒரு , ஒரு மணி நேரம் ஒதுக்கினால் போதும்.  நல்லபேரமைதி அங்கேன்னதும் கிளம்பிட்டோம்.  ஸ்டோக்ஸ் வேலி (  Stokes Valley  ) என்ற இடத்தில்  புத்தமடம் ஒன்னு கட்டி இருக்காங்க.  போதிஞானராமா மடம்  என்று பெயர். ( Bodhinyanarama  monastic sanctuary )


தாய்லாந்து பிக்ஷூ  Ajahn Chah  என்பவர்  மேற்குலக மக்களை  புத்தமதத்துக்கு தன்  நகைச்சுவைப் பேச்சால் கவர்ந்துருக்கார்.  நிறைய நாடுகளில் (Australia, Switzerland, Italy, Canada, United States, France and Malaysia)  போதிஞானராமா மடங்கள்   ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு வந்தார்.   1982 ஆண்டு  Ajahn Chah  நியூஸிக்கு வந்துருந்தார்.  இங்கேயும்  நிறைய ஆதரவாளர்கள்  இருப்பதால்  ஒரு மடம் தொடங்கலாமுன்னு  திட்டம் போட்டு,  காடாக இருந்த இந்த ஸ்டோக்ஸ் வேலி என்னுமிடத்தில் 126  ஏக்கர்   நிலம் வாங்கி  1985 இல் மடத்தைக் கட்டி எழுப்பிட்டாங்க.   ரெண்டு புத்த பிக்ஷுக்களை  இங்கிலாந்து மடத்தில் இருந்து இங்கே கூட்டிவந்து நித்தியப்படி அனுஷ்டானங்களை ஆரம்பிச்சாங்க.


ராம்ஸ் வீட்டில் இருந்து  பத்து கிமீக்கும்  குறைவுதான். காமணியில் போய்ச் சேர்ந்தோம். ரொம்ப  தொலைவில் இருந்தே  குன்றின் மேலொரு கோபுரம்  தெரிஞ்சது. அதன் அடிவாரத்தில்தான் மடம். நாங்க  குன்றின் மேல் ஏறிப்போகலை.  கீழே இருக்கும் மடத்துக்குள் போய்  புத்தரை தரிசித்தோம்.


கேட்டைக் கடந்து போனதுமே  திறந்த வெளியில்  ஒரு புத்தர் நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார்.  அவருக்கு முன்னால்  சின்ன மண்டபத்தில் ஒரு பெரிய மணி!





மேலே 2 படங்கள், உபயம்:  ராம்ஸ்.



அடுத்த பகுதியில்  மூணுபக்கமும் பெரிய தாழ்வாரங்களோடும்  நாலாவது  பக்கம் பெரிய ஹாலோடும்  ஒரு அமைப்பு  இருக்கு. நடுவில் ஒரு திறந்தவெளி முற்றம்.  இங்கேயும்  ஒரு நின்ற கோலம்.


 ஹாலுக்குள்ளே   அமர்ந்த கோலத்தில் புத்தரின் சிலை.  அங்கே உக்கார்ந்து தியானம் செஞ்சுக்கலாம்.  சுற்றிவர அடர்த்தியான  மரங்கள்.  ஈ பறந்தால் கூட சத்தமாக் கேட்கும் அளவுக்கு பேரமைதி. நம்மை அறியாமலேயே நாமும் ரகசியக்குரலில்  பேசறோம்.



மேலே படம், உபயம்:  ராம்ஸ்.

மேலே படம், உபயம்:  ராம்ஸ்.








ஹாலையொட்டி இருந்த ஒரு சின்ன இடத்தில் நிறைய புத்தமத சம்பந்தமுள்ள புத்தகங்களை வச்சுருக்காங்க.  இலவசம். எடுத்துக்கலாம். ரொம்ப உயர்தரமான தாளில் அச்சடிச்சு வேறேதோ நாட்டில் இருந்து வந்தவை. பக்கத்தில் ஒரு  உண்டியல்.  விருப்பம் உள்ளவர்கள் எதாவது தானம் செய்யலாம்.  கோபாலும் ராம்ஸ்ம் சில புத்தகங்களை எடுத்துக்கிட்டு  உண்டியலில் ஒரு தொகையைப் போட்டாங்க.


இடமெல்லாமே அப்பழுக்கு இல்லாமல் படு சுத்தமாவும் நேர்த்தியாவும் இருக்கு!


கொஞ்சம் படங்கள் க்ளிக்கினேன்.  ராம்ஸ் எடுத்த படங்களை எனக்கு அனுப்பினார்.



அங்கிருந்து கிளம்பி,  ராம்ஸ் தம்பதியினரின் பேட்டை வந்ததும்  டாட்டா சொல்லிட்டு அவுங்க அந்தப்பக்கமும், நாங்க வெலிங்டன் சிட்டி பக்கமுமா பிரிஞ்சுட்டோம்.  வீட்டில் இருந்து கிளம்பும்போதே  அவுங்க பூஜை அறையில் போய்  கும்பிட்டுட்டு, வச்சுக் கொடுத்ததை எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டேன்:-)  மூணு வீடு மூணு வசூல்!


சொன்னாப்போல  மடத்துக்குக் கிளம்பிப் போய், தரிசனம் முடிச்சு   ஒரு மணி நேரத்துலே  வெலிங்டன் நகருக்குள் நுழைஞ்சாச்சு. லீவுநாள் (ஈஸ்ட்டர் மண்டே) என்றதால் அவ்வளவாப் போக்குவரத்து இல்லை. ஏற்கெனவே போகலாமுன்னு பார்த்து வச்ச இடத்துக்குப் போய்ச்சேர்ந்தோம். அஞ்சு மணிக்கு மூடிருவாங்க.  இப்போ  மணி,   மாலை  4.

தொடரும்........:-)




Monday, April 23, 2012

அமாவாசையா, இல்லே பவுர்ணமியா?

ஒரு மனுசிக்கு இப்படியெல்லாம் சந்தேகம் வந்துருச்சே:( பவுர்ணமிக்குப் பிறந்தார். பவுர்ணமிக்கு ஞானம் பெற்றார், பவுர்ணமிக்கு நிர்வாணம் அடைஞ்சார். பவுர்ணமிக்கு உடலைத் துறந்தார் என்றெல்லாம் பள்ளிக்கூட நாட்களில் படிச்ச ஞாபகம் இருக்கு. மேலும் வைகாசி விசாகம் (பொதுவா இந்த நட்சத்திரத்துலேதான் வைகாசி மாசப் பவுர்ணமி இருக்கும்! ஐயம் உள்ளவர்கள் தமிழக முதலமைச்சரின் சமீபத்திய விளக்கம் பார்க்கவும்) நாளன்றுதான் புத்த பூர்ணிமான்னு கொண்டாடுவாங்க.

இங்கே என்னன்னா...... சித்திரை அமாவாசையில் பொறந்தநாள் கொண்டாட்டம்!!!! எங்கூர்லே International Buddhist Association ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்னால் புத்தர் கோவில் ஒன்னு கட்டுனாங்க. நாம் பொதுவாப் பார்க்கும் பகோடா (தின்னும் பொருள் இல்லை கேட்டோ!)கோபுரம் எல்லாம் இல்லை. ரொம்ப நவநாகரிகமான மாடர்ன் பில்டிங். அப்பதான் க்ரீன் கான்ஸப்ட் Eco ஒன்னு பரவலா அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சமயம் உள்ளூர் கட்டிடவடிவமைப்புக் கம்பெனி இதுலே ஆர்வம் காமிச்சு டிஸைன் போட்டுக்கொடுத்தாங்க. சூரிய சக்தி மின்சாரத்தால், கோவிலுக்குள்ளே சீரான வெப்பநிலை, செடிகொடிகள், இயற்கையான வெளிச்சம், ஜன்னல்கள்ன்னு இல்லாமலேயே வெளிப்புறக்காட்சிகள் தெரியும்விதமா வெளிக்கட்டிட அமைப்புன்னு புதுமாதிரியா இருந்துச்சு. 

படம்: சாமிக்கு எதிரில் தெரியும் மலை வ்யூ

 'கதவைத் திற.......... மலைகள் தெரியும் ' 'என்று ஒரு சீனப்பழஞ்சொல் இருக்காமே! அதையொட்டிய மாதிரி புத்தர் கண்ணைத் திறந்தால் மலையைப் பார்க்கும்விதமா மாடியில் கோவில், கீழ்தளத்தில் வெஜிடேரியன் உணவுக்கடை, அவர்கள் மத சம்பந்தமான படிப்பு, தியானம் எல்லாம் சொல்லிக்கொடுக்கும் வகுப்பு நடத்த இடம், சின்னதா ஒரு ஆர்ட் கேலரி, சாமி சமச்சாரம் விற்கும் கடைன்னு.... நடுவில் ஒரு சின்னப்புல்வெளின்னு இருந்துச்சு. நம்மூர்க்கோவில், நாம் போகலைன்னா எப்படின்னு திறப்பு விழா சமயம் போய் சேவிச்சுட்டு வந்தோம். மேடையில் பிரமாண்டமா(!!) ஒரு புத்தர் சிலை மட்டுமே இருந்துச்சு. போர்ஸலீன் சிலையோன்னு தோணும்படி இருக்கேன்னு விசாரிச்சதில் வெண் பளிங்குன்னு சொன்னாங்க. தரையில் உக்கார்ன்து பிரார்த்தனை செய்ய வரிசையா மணைக்கட்டைகள், புத்தகம் வச்சுக்க மடக்குப் பலகைன்னு ஹாலில் சிம்பிளா வரிசைகள். அதுக்குப்பிறகு வாரம் நாலுமுறையாவது கோவிலைத்தாண்டி போறோம்வாரோமே தவிர உள்ளே போய்க் கும்பிட வேளை வரலை. நமக்குதான் ஹரே க்ருஷ்ணா இருந்துச்சே! ஒரு நாள் போகணுமுன்னு நினைச்சுக்கிட்டே அஞ்சு வருசத்தை ஓட்டிட்டேன். 

புத்தருக்கு பர்த்டே கொண்டாட்டமுன்னு உள்ளூர் (இலவச)பத்திரிகை சேதி. மகளுடைய லேப்டாப் மண்டையைப் போட்டதால் புதுசு ஒன்னு வாங்க வேண்டிய நெருக்கடி. மாலுக்குப்போய் மூணு கடைகளிலும் மாறிமாறிப் படையெடுத்துக் கடைசியில் ஸோனி ஒன்னு 25 சதம் கழிவில் கிடைச்சது. மகளை வீட்டில் கொண்டுபோய் விட்டுட்டு நாங்க கோவிலுக்குள் நுழையும்போது கொண்டாட்டம் முடிஞ்சு கூடாரங்களைக் கழற்றி எடுத்துக்கிட்டு இருந்தாங்க. போயிட்டுப்போகுது..... பர்த்டே பாய் இருப்பாரேன்னு உட்புற முற்றத்தைக் கடந்தால்.... அங்கே நின்ற திருக்கோலத்தில் புதுசா ஒரு புத்தர் சிலையும் ரெண்டு பக்கமும் சுத்தம் வலியுறுத்தும் சேவை செய்யும் குட்டிகளின் சிற்பங்களும். ஒன்னு துடைப்பம் வச்சுப் பெருக்குது. இன்னொன்னு கிணற்றில் தண்ணீர் இறைக்குது. மனம் நிறைஞ்ச அமைதியுடன் முகங்கள் கொள்ளை அழகு!
வெளிமுற்றம்


கட்டிடத்துக்குள்ளே நுழைஞ்சதும் (நாம் கார்ப்பார்க்கில் இருந்து புழக்கடை வழியில் உள்ளே போய்க்கிட்டு இருக்கோம்) இடப்பக்கம் ஒரு வெஜிடேரியன் உணவிவிடுதி. வலதுபக்கம் நினைவுப்பொருட்களும் சாமிப்பொருட்களும் விற்கும் கடை.
கடை
மாடிப்படியேறி கோவில் கருவறைக்குள் போறோம். சிரித்த முகத்துடன் வரவேற்று கையில் ஊதுவத்திக் குச்சியைக் கொடுத்தார் கோவில் தன்னார்வலர்களில் ஒருவர். நமக்கு இங்கே ஏகாந்த ஸேவைக்கு விதிச்சிருக்கு! ஆஹா...... எரியும் விளக்கில் ஊதுபத்தியைக் கொளுத்தி அங்கே அதுக்குன்னு வச்சுருக்கும் உருளியில் குத்தி வைக்கணும். வச்சோம். கருவறை அலங்காரங்கள் எல்லாம் சமீபத்துலே மாற்றி அமைச்சுருக்காங்க. முந்தி பெரூசா இருந்த புத்தர் இப்போ மீடியம் சைஸுலே இருக்கார். அதே சிலையா இல்லை புதுசான்னா..... அதே தானாம். எப்படி இளைச்சாராம்? நான் ஊதியதால் என் கண்ணுக்கு அவர் இளைச்சுட்டார்ன்னு கோபால் சொல்றார்!!!

சந்நிதி
முந்தி வெறும் சிலை மட்டும்தான். இப்போதான் பரிவாரதேவதைகளும் எக்ஸ்ட்ரா அலங்காரங்களுமா நிறைஞ்சு இருக்குன்றார்.

சந்நிதிக்கு இரண்டு புறமும் ஒரு உருளி போன்ற பாத்திரத்தில் குழந்தை புத்தர் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற ஸ்டைலில் வலக்கையை உயர்த்தி ஆள்காட்டிவிரல் காமிக்கிறார். இவருக்கு நாமே அபிஷேகம் செய்யலாம். என்ன முறை என்பதை விளக்கமா எழுதி வச்சுருக்காங்க. முதலில் சாஷ்டாங்கமா விழுந்து வணங்கிட்டு சிலைக்கு எதிரில் இருக்கும் சின்ன இருக்கையில் முழந்தாளிட்டு, உருளியில் இருக்கும் புனித நீரை அதுலேயே இருக்கும் குட்டி அகப்பையால் கோரி புத்தரின் இடது தோளில் வார்க்கணும். முதல்லே இடது பக்கம். அப்புறம்தான் வலது பக்கம். தலையில் தண்ணீர் ஊத்தக்கூடாது. கைக்கூப்பி கும்பிட்டு உங்கள் வேண்டுதலை மனசில் சொல்லிக்கணும். ( இதைத்தான் மறந்துட்டேன்) அப்புறம் எழுந்து நின்னு, இடுப்புவரை குனிஞ்சு ஒரு கும்பிடு.
புத்தர் க்ளோஸ் அப்

பெர்ஸிமோம் பழ டிஸைனில் வரிசையா விளக்குகள் எரியுது. பூக்களும் பழங்களுமா அலங்காரம். பத்மாஸனத்தில் அமர்ந்து கண்களைப் பாதித் திறந்த நிலையில் அருள் பொங்க நம்மைப் பார்க்கும் திருமுகம். பளபளன்னு ஒரு ஜொலிப்பு. அவருக்கு வலது பக்கம் இருக்கும் பரிவார தேவதை யாருன்னு தெரியலை:( கோவில் ஆளிடம் கேட்டதுக்கு அவர் இப்பதான் வகுப்புகளுக்குப்போய் படிச்சுக்கிட்டு இருக்காராம். எங்க டீச்சரைக்கேளுங்கன்னு டீச்சரை முன்னால் கொண்டுவந்து நிறுத்தினார். அவருக்கும் தெரியாது போல! அந்த மாதிரி முழிச்சுக்கிட்டே காவலாளின்னார். நல்லவேளை கூர்க்கான்னு சொல்லலை!


 'ஆக்லாந்து நகரில் இதே கோவில் ஒன்னு இருக்கு. நான் அங்கேதான் கோவிலில் சேவை செஞ்சுக்கிட்டு இருக்கேன். அங்கே பெரிய சிலை. இந்தப் பொறந்தநாள் கொண்டாட்டத்துக்குக்காக இன்னிக்கு இங்கே வந்தேன்' ன்னு சொன்னார். நீங்க எந்த நாடுன்னார்? ஆஹா..... ' 'ஐ ஆம் ஃப்ரம் தெ லேண்ட் ஆஃப் புத்தா 'ன்னேன். கிடைச்ச கேப்பில் கெடா வெட்டிட்டம்லெ:-))))) 


எங்கூர் புத்தரை இப்படி நீங்க எல்லோரும் கொண்டாடுவது மகிழ்ச்சியா இருக்குன்னுட்டு, ஆமாம்..... புத்தர் பவுர்ணமிக்காரராச்சே.... எப்படி இன்னிக்கு சித்திரை மாச அமாவாசைக்குப் பொறந்தநாள் கொண்டாடுறீங்கன்னேன். (சித்திரா பவுர்ணமின்னாக்கூட மனசு கொஞ்சம் சமாதானமாகி இருக்கும் இல்லே?) ஆக்ச்சுவல்லி அடுத்த சனிதான் புத்தர் பொறந்தார். (ஙே!) அடுத்தவாரம் ஆக்லாந்து கோவிலில் கொண்டாட்டம் வச்சுருக்கோம். எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் மாலை 7 முதல் 8.30வரை  'தர்மா' ' என்னும் விசேஷ பூஜை நடக்கும்.. வாங்கன்னார். தைய்வான் மக்கள் நடத்தும் புத்தர் கோவில் இது. அப்ப இங்கே தாய்லாந்து மக்கள் நடத்தும் புத்தர் கோவிலில் என்னைக்கு விசேஷமாம்? அப்படி ஒரு கோவில் இருக்கா? தெரியவே தெர்யாதுன்னார்!!!!! ஆமாம். பதிவுலகத்துக்குக்கூடத் தெரியாது. இன்னும் எழுதலை:(

மாடியில் ஜாடிகள் எல்லாம் வச்சு அழகுபடுத்தி இருக்காங்க. போனவாரம் வந்துருந்தால் கோடுபோட்ட ரோடுக்கு அருமையான படம் கிடைச்சிருக்கும்.
களிமண் பழங்கள்

களிமண் பூச்சாடி

இந்த ZEN வாழ்வின் எல்லாத்தருணத்திலும் கலைகளிலும் இருக்குன்னு சொல்றதைப்போல களிமண் வச்சுக் கலைப்பொருட்கள் செய்யும் ஆர்ட் ஸ்டூடியோ நடத்தும் சீனர் Yi Ming ( எலக்ட்ரானிக் எஞ்சிநீயர்) கொஞ்சம் பழங்களையும் பூக்களையும் டிஸ்ப்ளே செஞ்சுருக்கார். பூச்சாடி அலங்காரம் எட்டு நூறாம்!!!! மண்ணைப் பொன்னாக்கும் வித்தை தெரிஞ்சவர்!!!!
 அமைதியா இரு  என்றார் புத்த சந்நியாசி








ஆர்ட்
கீழ்தளத்தில் ஆர்ட் கேலரியில் பெயிண்டிங் எக்ஸிபிஷன் நடக்குது. ஸென் பெய்ண்டிங்! நாம் ZEN ஸென் ஸென் என்று சொல்றோமே அந்தச் சொல் சீன மொழியில் ச்சன் CHAN என்று உச்சரிப்பாம்.ஸென் கதைகள் கொஞ்சம் அங்கே இங்கேன்னு வாசிச்சு இருக்கேனே தவிர சித்திரங்கள் பார்த்ததில்லை. கதைகளைப்போலவே ரொம்ப சிம்பிளா இருக்குன்னாலும் சொல்லும் விஷயங்களில் ஆழம் அதிகம் இருக்கும் போல! ஆர்ட்டிஸ்ட் , ஒரு சித்திரத்தைக் காட்டி அஞ்சு நிமிசம் விடாம விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தார் இன்னொரு சீனப்பெண்மணிக்கு!!!! என்னைப்போல இருக்கும் ஞானசூனியங்களுக்காக சித்திரத்தின் அருகில் ஒரு ஆங்கிலத் தலைப்பு! இந்தப் பெயிண்டிங் 'டிவோட்டட் ஃபாலோவர்ஸ்'



சித்திரக்காரர் பெயர் ( Kim Hoa Tram) கிம் ஹோ ட்ராம். அண்டை நாடான அஸ்ட்ராலியா, மெல்பெர்ண் நகரத்தில் இருந்து வந்துருக்கார். எழுதப் போறேன்னதும் (!!!!) படம் எடுத்துக்க அனுமதி கொடுத்ததோடு, அவரைப்பற்றிய சுருக்கமான விவரத்தையும் தந்தார். எனக்கும் அந்தக் கட்டுரையை அனுப்பமுடியுமான்னார். நோ ஒர்ரீஸ். எழுத்தெல்லாம் எங்க மொழியில் இருக்கும். அதில் உங்க படங்களை நீங்க பார்த்துக்கலாம். மெயில் ஐடி கொடுங்கன்னு வாங்கி வச்சுக்கிட்டேன்.
கிம்
மறக்காம அவருக்கு லிங்கு அனுப்பிவிடணும்:-))))
படம் 1





படம் 2



படம் 3


சமீபகாலமா ஸென் புத்தமதம் உலகிலே ரொம்பவே பரவிவருதுபோல! அதைப்பற்றித் தெரிஞ்சுக்கிட்டு ஆழ்ந்த தியான நிலைக்குப்போய் ஆன்மீகவாதியா மாற நமக்கு வேளை வரலை!!!!

ஒரு படத்துலே நம்ம கப்பு மரத்துமேலே உக்கார்ந்துருக்கு!!!!! 

 ரி. எல்லாம் இருக்கட்டும். புத்தர் எப்பத்தாம்ப்பா பொறந்தார்?????