Monday, April 23, 2012

அமாவாசையா, இல்லே பவுர்ணமியா?

ஒரு மனுசிக்கு இப்படியெல்லாம் சந்தேகம் வந்துருச்சே:( பவுர்ணமிக்குப் பிறந்தார். பவுர்ணமிக்கு ஞானம் பெற்றார், பவுர்ணமிக்கு நிர்வாணம் அடைஞ்சார். பவுர்ணமிக்கு உடலைத் துறந்தார் என்றெல்லாம் பள்ளிக்கூட நாட்களில் படிச்ச ஞாபகம் இருக்கு. மேலும் வைகாசி விசாகம் (பொதுவா இந்த நட்சத்திரத்துலேதான் வைகாசி மாசப் பவுர்ணமி இருக்கும்! ஐயம் உள்ளவர்கள் தமிழக முதலமைச்சரின் சமீபத்திய விளக்கம் பார்க்கவும்) நாளன்றுதான் புத்த பூர்ணிமான்னு கொண்டாடுவாங்க.

இங்கே என்னன்னா...... சித்திரை அமாவாசையில் பொறந்தநாள் கொண்டாட்டம்!!!! எங்கூர்லே International Buddhist Association ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்னால் புத்தர் கோவில் ஒன்னு கட்டுனாங்க. நாம் பொதுவாப் பார்க்கும் பகோடா (தின்னும் பொருள் இல்லை கேட்டோ!)கோபுரம் எல்லாம் இல்லை. ரொம்ப நவநாகரிகமான மாடர்ன் பில்டிங். அப்பதான் க்ரீன் கான்ஸப்ட் Eco ஒன்னு பரவலா அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சமயம் உள்ளூர் கட்டிடவடிவமைப்புக் கம்பெனி இதுலே ஆர்வம் காமிச்சு டிஸைன் போட்டுக்கொடுத்தாங்க. சூரிய சக்தி மின்சாரத்தால், கோவிலுக்குள்ளே சீரான வெப்பநிலை, செடிகொடிகள், இயற்கையான வெளிச்சம், ஜன்னல்கள்ன்னு இல்லாமலேயே வெளிப்புறக்காட்சிகள் தெரியும்விதமா வெளிக்கட்டிட அமைப்புன்னு புதுமாதிரியா இருந்துச்சு. 

படம்: சாமிக்கு எதிரில் தெரியும் மலை வ்யூ

 'கதவைத் திற.......... மலைகள் தெரியும் ' 'என்று ஒரு சீனப்பழஞ்சொல் இருக்காமே! அதையொட்டிய மாதிரி புத்தர் கண்ணைத் திறந்தால் மலையைப் பார்க்கும்விதமா மாடியில் கோவில், கீழ்தளத்தில் வெஜிடேரியன் உணவுக்கடை, அவர்கள் மத சம்பந்தமான படிப்பு, தியானம் எல்லாம் சொல்லிக்கொடுக்கும் வகுப்பு நடத்த இடம், சின்னதா ஒரு ஆர்ட் கேலரி, சாமி சமச்சாரம் விற்கும் கடைன்னு.... நடுவில் ஒரு சின்னப்புல்வெளின்னு இருந்துச்சு. நம்மூர்க்கோவில், நாம் போகலைன்னா எப்படின்னு திறப்பு விழா சமயம் போய் சேவிச்சுட்டு வந்தோம். மேடையில் பிரமாண்டமா(!!) ஒரு புத்தர் சிலை மட்டுமே இருந்துச்சு. போர்ஸலீன் சிலையோன்னு தோணும்படி இருக்கேன்னு விசாரிச்சதில் வெண் பளிங்குன்னு சொன்னாங்க. தரையில் உக்கார்ன்து பிரார்த்தனை செய்ய வரிசையா மணைக்கட்டைகள், புத்தகம் வச்சுக்க மடக்குப் பலகைன்னு ஹாலில் சிம்பிளா வரிசைகள். அதுக்குப்பிறகு வாரம் நாலுமுறையாவது கோவிலைத்தாண்டி போறோம்வாரோமே தவிர உள்ளே போய்க் கும்பிட வேளை வரலை. நமக்குதான் ஹரே க்ருஷ்ணா இருந்துச்சே! ஒரு நாள் போகணுமுன்னு நினைச்சுக்கிட்டே அஞ்சு வருசத்தை ஓட்டிட்டேன். 

புத்தருக்கு பர்த்டே கொண்டாட்டமுன்னு உள்ளூர் (இலவச)பத்திரிகை சேதி. மகளுடைய லேப்டாப் மண்டையைப் போட்டதால் புதுசு ஒன்னு வாங்க வேண்டிய நெருக்கடி. மாலுக்குப்போய் மூணு கடைகளிலும் மாறிமாறிப் படையெடுத்துக் கடைசியில் ஸோனி ஒன்னு 25 சதம் கழிவில் கிடைச்சது. மகளை வீட்டில் கொண்டுபோய் விட்டுட்டு நாங்க கோவிலுக்குள் நுழையும்போது கொண்டாட்டம் முடிஞ்சு கூடாரங்களைக் கழற்றி எடுத்துக்கிட்டு இருந்தாங்க. போயிட்டுப்போகுது..... பர்த்டே பாய் இருப்பாரேன்னு உட்புற முற்றத்தைக் கடந்தால்.... அங்கே நின்ற திருக்கோலத்தில் புதுசா ஒரு புத்தர் சிலையும் ரெண்டு பக்கமும் சுத்தம் வலியுறுத்தும் சேவை செய்யும் குட்டிகளின் சிற்பங்களும். ஒன்னு துடைப்பம் வச்சுப் பெருக்குது. இன்னொன்னு கிணற்றில் தண்ணீர் இறைக்குது. மனம் நிறைஞ்ச அமைதியுடன் முகங்கள் கொள்ளை அழகு!
வெளிமுற்றம்


கட்டிடத்துக்குள்ளே நுழைஞ்சதும் (நாம் கார்ப்பார்க்கில் இருந்து புழக்கடை வழியில் உள்ளே போய்க்கிட்டு இருக்கோம்) இடப்பக்கம் ஒரு வெஜிடேரியன் உணவிவிடுதி. வலதுபக்கம் நினைவுப்பொருட்களும் சாமிப்பொருட்களும் விற்கும் கடை.
கடை
மாடிப்படியேறி கோவில் கருவறைக்குள் போறோம். சிரித்த முகத்துடன் வரவேற்று கையில் ஊதுவத்திக் குச்சியைக் கொடுத்தார் கோவில் தன்னார்வலர்களில் ஒருவர். நமக்கு இங்கே ஏகாந்த ஸேவைக்கு விதிச்சிருக்கு! ஆஹா...... எரியும் விளக்கில் ஊதுபத்தியைக் கொளுத்தி அங்கே அதுக்குன்னு வச்சுருக்கும் உருளியில் குத்தி வைக்கணும். வச்சோம். கருவறை அலங்காரங்கள் எல்லாம் சமீபத்துலே மாற்றி அமைச்சுருக்காங்க. முந்தி பெரூசா இருந்த புத்தர் இப்போ மீடியம் சைஸுலே இருக்கார். அதே சிலையா இல்லை புதுசான்னா..... அதே தானாம். எப்படி இளைச்சாராம்? நான் ஊதியதால் என் கண்ணுக்கு அவர் இளைச்சுட்டார்ன்னு கோபால் சொல்றார்!!!

சந்நிதி
முந்தி வெறும் சிலை மட்டும்தான். இப்போதான் பரிவாரதேவதைகளும் எக்ஸ்ட்ரா அலங்காரங்களுமா நிறைஞ்சு இருக்குன்றார்.

சந்நிதிக்கு இரண்டு புறமும் ஒரு உருளி போன்ற பாத்திரத்தில் குழந்தை புத்தர் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற ஸ்டைலில் வலக்கையை உயர்த்தி ஆள்காட்டிவிரல் காமிக்கிறார். இவருக்கு நாமே அபிஷேகம் செய்யலாம். என்ன முறை என்பதை விளக்கமா எழுதி வச்சுருக்காங்க. முதலில் சாஷ்டாங்கமா விழுந்து வணங்கிட்டு சிலைக்கு எதிரில் இருக்கும் சின்ன இருக்கையில் முழந்தாளிட்டு, உருளியில் இருக்கும் புனித நீரை அதுலேயே இருக்கும் குட்டி அகப்பையால் கோரி புத்தரின் இடது தோளில் வார்க்கணும். முதல்லே இடது பக்கம். அப்புறம்தான் வலது பக்கம். தலையில் தண்ணீர் ஊத்தக்கூடாது. கைக்கூப்பி கும்பிட்டு உங்கள் வேண்டுதலை மனசில் சொல்லிக்கணும். ( இதைத்தான் மறந்துட்டேன்) அப்புறம் எழுந்து நின்னு, இடுப்புவரை குனிஞ்சு ஒரு கும்பிடு.
புத்தர் க்ளோஸ் அப்

பெர்ஸிமோம் பழ டிஸைனில் வரிசையா விளக்குகள் எரியுது. பூக்களும் பழங்களுமா அலங்காரம். பத்மாஸனத்தில் அமர்ந்து கண்களைப் பாதித் திறந்த நிலையில் அருள் பொங்க நம்மைப் பார்க்கும் திருமுகம். பளபளன்னு ஒரு ஜொலிப்பு. அவருக்கு வலது பக்கம் இருக்கும் பரிவார தேவதை யாருன்னு தெரியலை:( கோவில் ஆளிடம் கேட்டதுக்கு அவர் இப்பதான் வகுப்புகளுக்குப்போய் படிச்சுக்கிட்டு இருக்காராம். எங்க டீச்சரைக்கேளுங்கன்னு டீச்சரை முன்னால் கொண்டுவந்து நிறுத்தினார். அவருக்கும் தெரியாது போல! அந்த மாதிரி முழிச்சுக்கிட்டே காவலாளின்னார். நல்லவேளை கூர்க்கான்னு சொல்லலை!


 'ஆக்லாந்து நகரில் இதே கோவில் ஒன்னு இருக்கு. நான் அங்கேதான் கோவிலில் சேவை செஞ்சுக்கிட்டு இருக்கேன். அங்கே பெரிய சிலை. இந்தப் பொறந்தநாள் கொண்டாட்டத்துக்குக்காக இன்னிக்கு இங்கே வந்தேன்' ன்னு சொன்னார். நீங்க எந்த நாடுன்னார்? ஆஹா..... ' 'ஐ ஆம் ஃப்ரம் தெ லேண்ட் ஆஃப் புத்தா 'ன்னேன். கிடைச்ச கேப்பில் கெடா வெட்டிட்டம்லெ:-))))) 


எங்கூர் புத்தரை இப்படி நீங்க எல்லோரும் கொண்டாடுவது மகிழ்ச்சியா இருக்குன்னுட்டு, ஆமாம்..... புத்தர் பவுர்ணமிக்காரராச்சே.... எப்படி இன்னிக்கு சித்திரை மாச அமாவாசைக்குப் பொறந்தநாள் கொண்டாடுறீங்கன்னேன். (சித்திரா பவுர்ணமின்னாக்கூட மனசு கொஞ்சம் சமாதானமாகி இருக்கும் இல்லே?) ஆக்ச்சுவல்லி அடுத்த சனிதான் புத்தர் பொறந்தார். (ஙே!) அடுத்தவாரம் ஆக்லாந்து கோவிலில் கொண்டாட்டம் வச்சுருக்கோம். எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் மாலை 7 முதல் 8.30வரை  'தர்மா' ' என்னும் விசேஷ பூஜை நடக்கும்.. வாங்கன்னார். தைய்வான் மக்கள் நடத்தும் புத்தர் கோவில் இது. அப்ப இங்கே தாய்லாந்து மக்கள் நடத்தும் புத்தர் கோவிலில் என்னைக்கு விசேஷமாம்? அப்படி ஒரு கோவில் இருக்கா? தெரியவே தெர்யாதுன்னார்!!!!! ஆமாம். பதிவுலகத்துக்குக்கூடத் தெரியாது. இன்னும் எழுதலை:(

மாடியில் ஜாடிகள் எல்லாம் வச்சு அழகுபடுத்தி இருக்காங்க. போனவாரம் வந்துருந்தால் கோடுபோட்ட ரோடுக்கு அருமையான படம் கிடைச்சிருக்கும்.
களிமண் பழங்கள்

களிமண் பூச்சாடி

இந்த ZEN வாழ்வின் எல்லாத்தருணத்திலும் கலைகளிலும் இருக்குன்னு சொல்றதைப்போல களிமண் வச்சுக் கலைப்பொருட்கள் செய்யும் ஆர்ட் ஸ்டூடியோ நடத்தும் சீனர் Yi Ming ( எலக்ட்ரானிக் எஞ்சிநீயர்) கொஞ்சம் பழங்களையும் பூக்களையும் டிஸ்ப்ளே செஞ்சுருக்கார். பூச்சாடி அலங்காரம் எட்டு நூறாம்!!!! மண்ணைப் பொன்னாக்கும் வித்தை தெரிஞ்சவர்!!!!
 அமைதியா இரு  என்றார் புத்த சந்நியாசி








ஆர்ட்
கீழ்தளத்தில் ஆர்ட் கேலரியில் பெயிண்டிங் எக்ஸிபிஷன் நடக்குது. ஸென் பெய்ண்டிங்! நாம் ZEN ஸென் ஸென் என்று சொல்றோமே அந்தச் சொல் சீன மொழியில் ச்சன் CHAN என்று உச்சரிப்பாம்.ஸென் கதைகள் கொஞ்சம் அங்கே இங்கேன்னு வாசிச்சு இருக்கேனே தவிர சித்திரங்கள் பார்த்ததில்லை. கதைகளைப்போலவே ரொம்ப சிம்பிளா இருக்குன்னாலும் சொல்லும் விஷயங்களில் ஆழம் அதிகம் இருக்கும் போல! ஆர்ட்டிஸ்ட் , ஒரு சித்திரத்தைக் காட்டி அஞ்சு நிமிசம் விடாம விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தார் இன்னொரு சீனப்பெண்மணிக்கு!!!! என்னைப்போல இருக்கும் ஞானசூனியங்களுக்காக சித்திரத்தின் அருகில் ஒரு ஆங்கிலத் தலைப்பு! இந்தப் பெயிண்டிங் 'டிவோட்டட் ஃபாலோவர்ஸ்'



சித்திரக்காரர் பெயர் ( Kim Hoa Tram) கிம் ஹோ ட்ராம். அண்டை நாடான அஸ்ட்ராலியா, மெல்பெர்ண் நகரத்தில் இருந்து வந்துருக்கார். எழுதப் போறேன்னதும் (!!!!) படம் எடுத்துக்க அனுமதி கொடுத்ததோடு, அவரைப்பற்றிய சுருக்கமான விவரத்தையும் தந்தார். எனக்கும் அந்தக் கட்டுரையை அனுப்பமுடியுமான்னார். நோ ஒர்ரீஸ். எழுத்தெல்லாம் எங்க மொழியில் இருக்கும். அதில் உங்க படங்களை நீங்க பார்த்துக்கலாம். மெயில் ஐடி கொடுங்கன்னு வாங்கி வச்சுக்கிட்டேன்.
கிம்
மறக்காம அவருக்கு லிங்கு அனுப்பிவிடணும்:-))))
படம் 1





படம் 2



படம் 3


சமீபகாலமா ஸென் புத்தமதம் உலகிலே ரொம்பவே பரவிவருதுபோல! அதைப்பற்றித் தெரிஞ்சுக்கிட்டு ஆழ்ந்த தியான நிலைக்குப்போய் ஆன்மீகவாதியா மாற நமக்கு வேளை வரலை!!!!

ஒரு படத்துலே நம்ம கப்பு மரத்துமேலே உக்கார்ந்துருக்கு!!!!! 

 ரி. எல்லாம் இருக்கட்டும். புத்தர் எப்பத்தாம்ப்பா பொறந்தார்?????

20 comments:

said...

/ மனம் நிறைஞ்ச அமைதியுடன்/

எல்லா புத்தர் கோவில்களிலும் இப்படியே.

// 'ஐ ஆம் ஃப்ரம் தெ லேண்ட் ஆஃப் புத்தா '//

இல்லையா பின்னே:)!

/கோடுபோட்ட ரோடு/

ரொம்ப அழகான படம்.

/எப்பத்தாம்ப்பா பொறந்தார்/

புத்த பூர்ணிமான்னுதான் கேள்விப் பட்டிருக்கேன்.

said...

புத்த பூர்ணிமா அன்னிக்குத்தானே பொறந்தார்?..

அதென்ன?.. இந்த மாசப்போட்டிக்கு உங்க டெம்ப்ளேட்டையே அனுப்பலாம் போலிருக்கே.. கோடுகள்.. கோடுகள். எங்கெங்கும் கோடுகளா இருக்கு :-)))

said...

அமைதி தரும் புத்தர் படங்கள்...கலக்கல்

said...

இங்கு இதை வெசாக் எனக் கொண்டாடுவார்கள். பந்தல்கள் அமைத்து,வெசாக்கூடுகள் கட்டி தடபுடலாக இருக்கும். மே 5th full moon poya வருகின்றது.

said...

நல்ல விவரங்கள். ரசித்தேன்.

said...

எங்க ஊருக்காரர்ன்னு பெருமையா சொல்லிக்கிட்டீங்களா.:)
டிவோட்டட் ஃபாலோவர்ஸ் ஓவியம் ரொம்ப அழகா இருக்கு..

said...

படங்களும் விஷயங்களும் அருமை.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பாங்காக், கம்போடியான்னு சில புத்தர் கோவில்களில் மட்டுமே சுற்றுலாப்பயணிகள் கூட்டத்தால் அமைதி கொஞ்சம் குறையுதே தவிர, நீங்க சொல்வதுபோல் எல்லா புத்தர் கோவில்களும் அமைதியேதான்.

புத்த பூர்ணிமாவை இங்கே புத்தஅமாவாசை ஆக்கிட்டாங்களேப்பா!!!!

சாமிக்கு எல்லாமே ஒன்னுதான் என்று வச்சுக்கலாமோ!!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

ப்ளாக்கர் நியூ லுக் தர்றோமுன்னு ஆரம்பிச்சு நேத்து படம் சேர்க்கறதுக்கு என்னைத் தலையாலே தண்ணீர் குடிக்க வச்சுருச்சேப்பா.

படங்கள் லோட் ஆனபிறகு ஸேவ் செய்ய முடியலை. எல்லாம் போயே போச்:(

அந்த விசனக் கோடுகள் பதிவுலே வந்துருச்சு போல:-)))))

said...

வாங்க பாசமலர்.

முன்பு போல தரையில் உட்காரக்கூட வேண்டாம். நாற்காலிகள் போட்டு வச்சுருக்காங்க. மூட்டுவலி இல்லாம இருக்கு. வலி இல்லேன்னா...அதுவே ஒரு மன அமைதி தருது:-))))

செருப்பைக்கூட கழட்ட வேணாமுன்னுதான் சொல்றாங்க. நமக்குதான் செருப்புக்காலோடு சந்நிதிக்குப்போக மனசு வரலை:(

said...

வாங்க மாதேவி.

வைகாசி மாசம் பவுர்ணமிக்குதானே அந்த வைசாக் தினம் வருது. இன்னும் சித்திரையே முடியலை. அதுவும் அமாவாசை. எப்படியோ கொண்டாடுனாச் சரி....

என்னமோ போங்கன்னு விடணும்!!!!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

said...

வாங்க கயலு.
கொஞ்சம் தூரப்பார்வையில் பறவைக்கூட்டம் பறப்பது போலும், கிட்டே பார்த்தால் எல்லோரும் குனிஞ்சு முதுகு வானம் பார்க்கக் கும்பிடுவது போலும் இருக்கு.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கு நன்றி.

said...

புத்த பூர்ணிமான்னு தான் கேள்விப்பட்டு இருக்கேன். அந்த சின்ன உருவம் பெருக்குவது போல வைத்திருக்கிற படம் வெகு அழகு. கோடு போட்ட பாதை சூப்பர்.
படங்களுக்குக் கீழ என்ன எழுதி இருக்குன்னே தெரியலைப்பா.
இங்க இருந்த புத்தரை ஆக்லாண்டிற்குக் கொண்டு போயிட்டாங்களோ என்னவோ

said...

அதே சிலையா இல்லை புதுசான்னா..... அதே தானாம். எப்படி இளைச்சாராம்? நான் ஊதியதால் என் கண்ணுக்கு அவர் இளைச்சுட்டார்ன்னு கோபால் சொல்றார்!!!

எப்படிங்க .......

said...

புத்த பூர்ணிமா தான். இங்க கூட விடுமுறையாச்சே...:

பெருக்கற பொம்மை அழகா இருக்கு. சாந்தமான முகம்.

ஓவியங்கள் எல்லாமே அருமை.

said...

வாங்க வல்லி.

என் கடன் பெருக்கிக் கொண்டு இருப்பதே!!!!!

இன்னொருநாள் அந்தக் கோவிலுக்குப்போய் கோவில் இன்சார்ஜ் நபர்டம் சிலையைப்பற்றி விசாரிக்கணும்.உள்ளூர்த்தோழி வீட்டுக்கு வந்தப்ப சிலையைப்பற்றிக் கேட்டேன். பெரிய சிலையா இருக்குமேன்னுதான் சொன்னாங்க.

கூகுள் ப்ளாக்குக்கு நியூலுக் கொடுக்கறேன்னு சொல்லி எழுத்தைச் சுருக்கிருச்சேப்பா:(

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

நான் பெருசா ஆனதும் எதிரில் இருப்பதெல்லாம் சிறுசாப் போயிருமுன்னு ஒரு தியரி:-)))

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

நிம்மதியான பெருக்கல். கடமையைச் செய் பலனை எதிர்பாராதேன்னு சொல்லுது:-))))

இன்னிக்கு உங்களை நினைச்சுக்கிட்டே ஒரு பதிவு போட்டுருக்கேன்.