Wednesday, April 30, 2014

அஸ்ஸியும் துள்ஸியும்...... அடுத்தடுத்து!

ஒரு கூட்டு, ஒரு கறி, சாம்பார், ரசம், மோர் என்று சிம்பிளான சாப்பாடு. ஆனால் சுவை அருமையோ அருமை!  (ரெண்டு நாளா  சோத்தைக் கண்ணால் பார்க்கலை என்றதும் ஒரு காரணம் கேட்டோ!)  முற்றம் கடந்த தாழ்வாரத்தின் மூலையிலொரு அடுக்களை!    அப்படியொன்னும் கண்ணைக் கவரும் டிசைன் இல்லை.  பழைய காலக் கூட்டுக் குடும்ப வீட்டின் அடுக்களைபோல களேபரம்:-)

 கிரைண்டர் ஒன்னு மாவு அரைச்சுக்கிட்டு இருக்கு. பக்கத்தில் ஒரு இட்டிலிக் குண்டான்!பார்த்துப் பலநாளாச்சு இதை! இப்பெல்லாம்  இட்லி ஸ்டேண்ட் தானே எல்லோர் வீட்டிலும், இல்லையோ?


பேசாம ராத்திரி டிஃபனுக்கு இங்கே வந்துருங்கன்னார்  தலைமை  சமையல்காரர் கோவிந்த்.  தினம், இட்டிலி, தோசை  உண்டு.  பொங்கலும் உப்புமாவும்  சிலநாட்களில்  இருக்கும் என்றார். யாத்திரை வருபவர்கள் இங்கேயே தங்கிக்கவும் செய்யலாம்.  குறைஞ்சபட்சம் நம்மூர் சாப்பாடு கிடைச்சுரும்.  மெஸ் மாதிரிதான் நடத்தறாங்க.  விலையும் அதிகமில்லை.  சரியாச் சொன்னால்  ரொம்பவே குறைவு!
(மேலே: அன்னதாதா கோவிந்த் ஜி)

வசதிகள்  எல்லாம் ஜஸ்ட் பேசிக்.  அட்ஜஸ்ட் பண்ணிக்க முடிஞ்சால்  செலவும் குறையும்.  வேற ஹொட்டேலில் தங்க விருப்பமுன்னா அதுக்கும் ஏற்பாடு செஞ்சு தர்றாங்க.  அக்கம்பக்கம்  சாரநாத், கயா,ப்ரயாக் எல்லாம் போய்வரவும் இவுங்களே ஏற்பாடு செஞ்சு தர்றதால்  நமக்குத் தலைவலி இல்லை, கேட்டோ!

நீங்க காசி போய் இறங்கினது முதல்   காசி, கயா, ப்ரயாகை த்ரிவேணி சங்கமம்  என்று மூன்று இடங்களிலும் வைதீகக் கர்மாக்கள் முடிச்சு, ஊரையும் சுத்திப் பார்த்து,  கங்கைக்கரைக் கோவில்களில் தரிசனம், படித்துறைகள் உலா என்று சகலமும் நடத்திக்கொடுத்து,   திரும்ப உங்களை  அங்கிருந்து வண்டியேத்தி  அனுப்புவது வரை  எல்லாத்தையுமே அவுங்க பொறுப்பில் விட்டுட்டு நாம் ஹாயா இருக்கலாம்.

(வலது பக்க  மூலையில் அடுக்களை)

சாப்பாடு நமக்கு இங்கேன்னு தெரிஞ்சதும் உடனே கைலாஷை, செல்லில் கூப்பிட்டு அவரைப்போய் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வரச் சொல்லிட்டோம். வீட்டுக்குப்போய் வருவாரோ என்னவோ?  வரட்டுமே நிதானமா.  நமக்கு இங்கே இன்றைய  பரிபாடிகள் எவ்ளோ நேரமாகுமுன்னு விவரம் இல்லை பாருங்க.

கொஞ்சநேரம் ஆஃபீஸில்(!) இருந்து  பொதுவாப் பேசிக்கிட்டு இருந்தோம்.  'ரொம்ப நல்லா  எங்க மனத்துக்கு ஏற்றபடி  செஞ்சீங்க'ன்னு நன்றி சொன்னேன்.  நடத்திக் கொடுத்த சேவைக்கு எவ்ளோ சார்ஜ்ன்னு கேட்டதும், உங்க  இஷ்டம் என்றார் சிவகுமார். பையில் இருந்து  ஏற்கெனவே தனியா எடுத்து வச்ச தொகையைக்  கொடுத்ததும் அப்படியே வாங்கி சட்டைப்பையில் வச்சவரிடம், எண்ணிப் பார்த்துக்குங்கோ என்றேன். அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா.  உங்க திருப்தியே எனக்கு மகிழ்ச்சின்னார். இப்படியும் சிலர் இருக்காங்க!!!!

மறுநாள் வேறெங்காவது போகணுமுன்னு இருந்தால்  ( கயா தான் வேறென்ன? ) சொல்லுங்கோ. ஏற்பாடு செஞ்சுதர்றேன்னார்.  252 கிலோமீட்டர்!  மூணரை /நாலு மணி நேரப்பயணம்.  போய்வரவே எட்டுமணி நேரமாகிரும். அப்புறம்  மற்ற காரியங்கள்.  என்னால்  அவ்ளோதூரம் பயணம் செய்ய  முடியாது என்பதால்.....   இன்னொருமுறை கிடைச்சால் பார்க்கலாம் என்று சொல்லிட்டோம். சந்துக்கு வெளியே  கார் நிற்கும் இடம்வரை  கொண்டு வந்து விட்டுட்டு கொஞ்சநேரம் பேசிட்டு இருந்தார்.

 அந்த சங்கரமடம் கோவில்வழியாத்தான் வந்தோம். வழியில் இஞ்சிச் சாய் கொதிக்கும் கடைகள்.  நல்ல மணம் கேட்டோ!  இன்னொரு பக்கம் கல்பாவிய சந்தில் இருக்கும் இடம் பெயர்ந்த கற்களை சரியா வச்சு  காங்க்ரீட் போட்டு சரி செஞ்சுக்கிட்டு இருக்கு நகராட்சி.   இவ்ளோதான் பராமரிப்பு செய்ய முடியும்.  ரெண்டு பக்கமும் துளி இடம் விடாமல்  கட்டி வச்சுருக்காங்களே வீடுகளை! இதுலே ஹெவிவெயிட் சாம்பியன்களா மாடுகள் இடைவிடாமல் நடந்தும்  இருந்தும்  சேவை சாதிப்பதால்  சட்னு கற்கள் பெயர்ந்துருது.  சந்தில்  பராமரிப்பு வேலை நடக்கும்போது  பேருக்கு ஒரு கயிறு ரெண்டு பக்கமும்!   அதையே லக்ஷ்மண ரேகையா  நினைச்சுக்குதுகள் இந்த மாடுகள். அப்பா.....  என்ன ஒரு அறிவு!!!!

இப்ப எங்கேன்னு என்னை பார்த்தார் கோபால்.  வேறென்ன பெருமாள்தான், இல்லையோ?  அறைக்குப்போய் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு  சாயங்காலம் வரலாமான்னு அவருக்கு யோசனை.   வேணாம்... பகல் நேரத்தில் காசியைக் காணாமல்  இருட்டில் திரும்பி வந்து தடுமாறணுமா?

முப்பத்தியஞ்சு நிமிசப்பயணத்தில் அஸ்ஸி காட்  வந்துட்டோம்.  வரும் வழியில் பெரும்பாலும் 'அந்தக் கடைகள்'தான். அதுவும் ஹனுமன்காட்டில் அடுத்தடுத்து ஏகப்பட்டவை. இவ்ளோ டிமாண்ட்  இருக்கா!!!

கங்கைப்படித்துறைகளின்  ஒரு கடைசி இந்த அஸ்ஸி காட்   ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துச்சு!  மெயின் ரோடில் இறங்கி  கல்லி (சந்துகள் ) வழியா நடக்க வேண்டிய அவசியமே இல்லை.  ஜஸ்ட்  டைரக்ட்டா...  படித்துறையிலேயே  வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திக்கலாம்!   இங்கேதான் அஸ்ஸி நதி , ஓடிவந்து  கங்கையில் கலக்கும் இடம்.

மரத்தடியில்   நம்ம  நேயுடு. இப்பத்தான் குளிச்சு முடிச்சதுபோல பளிச் என்னும் சிந்தூரவண்ணத்தில்!

கண்ணெதிரே நீளமாகப்போகும் பாதையின் வலப்பக்கம் கங்கை!  பாதைக்கும் நதிக்கும் இடையில் இன்னும்  விரிந்து கிடக்கும் படித்துறைப்படிகள்.  ஆனால் படிக்கட்டுக்கும் கங்கைக்கும் இடையில் இருக்கும் மண்பரப்பு சேறாக   இருக்கு:(

நமக்கிடப் பக்கம்  மேலே போகும் படிகளில்  கட்டிடங்கள், அவைகளுக்குள் கோவில்கள் என்று இருக்கு. சென்னையில் நடைபாதைக் குடும்பம் போல் இங்கே படித்துறைக் குடும்பங்கள் அங்கங்கே:(

ஏராளமான பிள்ளைகள் ஓடியாடிக்கிட்டு இருக்காங்க. கங்கையின் மற்ற படித்துறைகளைவிட, இது  மேல்நாட்டோரைக் குறிவச்சுக் கட்டுனது போல இருக்குன்னு எனக்கு ஒரு தோணல்.  வெளிநாட்டு சிகெரெட்டுகள் அடுக்கி வச்ச ஒரு  படித்துறைக் கடை!  பயணத்துலே இருந்தாலும் ப்ராண்ட் மாத்திக்க வேணாமாம்!


ரெண்டு மூணு  வெள்ளைக்காரப் பெண்கள், அங்கிருக்கும் குழந்தைகளுக்கு  படங்கள் வரையவும் புத்தகங்கள் வாசிக்கவும் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. ஆறுமாசம் தங்கும் முடிவோடு வந்துருக்காங்களாம். அப்படியே கொஞ்சம் சமஸ்க்ரதம், யோகா, இண்டியன் கல்ச்சார்(!)  எல்லாம் கத்துக்கிட்டுப் போகும் ஐடியாவாம்.

மூங்கில் குடைகளின் கீழ் பண்டாக்கள் உக்கார்ந்து, மக்களுக்கான வைதீக சமாச்சாரங்களை நடத்திக் கொடுக்கறாங்க.  வேலைகள் முடிஞ்சதும்  குடைகளை அங்கங்கே நிரந்தரமா விட்டு வச்சுட்டுத்தான் போறாங்க.  ஒரு குடையின் கீழ் பண்டா ட்ரெய்னி கீழே:-))))

இங்கேயும்  கொஞ்சம் சின்ன அளவில் கங்கை ஆரத்தி நடக்குதாம். அதுக்கான   மரப்பெஞ்சு அஞ்சு போட்டு வச்சுருக்காங்க.  பார்க்க ஒரு  கட்டில் போலசூப்பர். பேசாம படுத்து ஒரு குட்டித்தூக்கம் போட்டால் கொள்ளாம்:-) இப்போ  மதியம் மணி ரெண்டரை.   இதமான சூரிய வெப்பம். உண்ட மயக்கம் . கண்ணைச் சொக்கிக்கிட்டுப் போகுது!




பசுக்களுக்கும் பைரவர்களுக்கும்  ஏராளமான இடம். சுற்றித் திரியுதுகள். வெறும் மண்ணில்  என்ன கிடைக்குமோ தின்ன?

எதோ ஒரு தீனி (பெயர் தெரியலை. என்னவோ சொன்னார் கடைக்காரர். சட்னு  நினைவிலிருந்து நழுவிருச்சு)  வியாபாரம் நடக்குது. பார்க்க ரொம்ப கலர்ஃபுல்!



அஸ்ஸிக்கு அடுத்து நம்ம காட்:-)  துள்சி காட்!  ராமபக்தர்  துள்சிதாஸ்  இங்கே இந்தக்கரையில் இருந்துதான் ' ,ராமசரிதமானஸ்' என்ற ராமகாதையை எழுதுனாராம்.  ஒரு சமயம் அவர் கையில் இருந்த சுவடி நழுவி கங்கையில் விழுந்துருச்சாம்.(ஐயோ!)  ஆனால்  அடிச்சுக்கிட்டுப் போகாமல். அங்கேயே  நின்னதாம் இவர் மீண்டும் எடுக்கும் வரை! (அப்பாடா.....)

அவர் இங்கேயே கடைசிகாலம் வரை வாழ்ந்து மறைஞ்சார். அவருடைய சமாதியுடன் ஒரு கோவில் இருக்குன்னு சொல்றாங்க. ஆனாலும் இன்னொரு வெர்ஷனும் இருக்கு. தன் அந்திம காலத்தில், ஸ்ரீ ராமர் சரயூவில் இறங்கி தன் வாழ்க்கையை முடிச்சுக்கிட்டது போல், இவர் கங்கையில் இறங்கி அப்படியே 'போயிட்டார்'ன்னும் சொல்றாங்க. இவருடைய காலம் கிபி 1532 முதல் 1623 வரை.


 ராமாயணம் தவிர நிறைய பஜனைப் பாடல்களும் எழுதி இருக்கார். 'ஸ்ரீ ராமசந்த்ர க்ருபாளு  பஜமன  ஹரண பவ பய தாருணம்'  வடக்கே ரொம்பவே புகழ்பெற்றது.  கேட்கும்போதே மனசு சாந்தமாப்போயிரும்!    விருப்பமுள்ளவர்கள்  இங்கே யூட்யூப் லே கேட்டுப்பாருங்க. பாடியவர் அனுராதா பொடுவால் என்று சொல்கிறார்கள்.





இதே பாடல்  நம்ம  லதா மங்கேஷ்கர் குரலில் .   பாடல் வரிகளும்,  அதற்கான ஆங்கில மொழி விளக்கமும் உண்டு.

ஃபிஜித்தீவில், இந்துக்களுக்கிடையில்  ஏராளமான  ராமாயண் மண்டலிகள் இருக்கு. அவுங்க வால்மீகியை வச்சுருந்தாலும், துளசிதாசரையும்   கூடவே வச்சுருக்காங்க.  எந்த உற்சவமானாலும் முக்கியமா ஸ்ரீராமநவ்மி கொண்டாட்டத்தில்  (இது 10 நாள் உற்சவம்!)  ரெண்டு ராமாயணங்களையும் வாசிப்பாங்க.

அஸ்ஸி  படித்துறையும் துள்சி படித்துறையும் சேர்ந்தே அடுத்தடுத்து இருக்கு.  வயசில் அஸ்ஸி தான் மூத்தது:-) 1941 இல்  துள்ஸி படித்துறையை   சீர்படுத்தி, காங்க்ரீட் படிகள் அமைச்சு புனரமைச்சாங்க.  செலவு செஞ்சவர்   தொழிலதிபர், தனிகர்   பல்தேவ்தாஸ் பிர்லா.


இங்கிருந்தும் படகு சவாரி போகலாம்.  விதவிதமான படகுகள் பயணிகளுக்குக் காத்து நிற்கின்றன. சில படகுகளில்  எதோ  பம்ப்எஞ்சின்களை வச்சு கங்கைத் தண்ணீரை எடுக்கறாங்கன்னு  தோணுது, நீண்டு கிடக்கும்  குழாய்களைப் பார்த்தால். (இல்லைன்னா அழுக்குத்தண்ணியை கங்கைக்குள் பம்ப் செய்யறாங்களோ?)



துள்ஸியைக் கடந்தால் ஜானகி, அப்புறம் Bachhraj Ghat , Jain Ghat  இப்படிப் போய்க்கிட்டே இருக்கு. முடிவடையும் இடம் வருணா காட்.  பல படித்துறைகளின்  ஆதி காலத்துப்பெயர்கள் மாறி புதுப்பெயர்களோடு இருப்பதும் சகஜம்.  நம்ம துள்ஸி காட் கூட ஒரு காலத்தில் Lolark Ghat என்ற பெயரில்தான் இருந்துருக்கு.  லோலார்க் தீர்த்த காட் என்று  பெயர். புனிதமான  படித்துறைகளில் ஒன்று. இப்பவும் புனிதத்துக்குக் குறைவில்லை. துள்ஸி இல்லையோ!!!!

வந்த வேலையை  இன்னும்  முடிக்கலையே......  எங்கே என் பெருமாள்?

தொடரும்.........:-)





Monday, April 28, 2014

பணமும் பிணமும்

முஸ்கி:  , மனதை திடப்படுத்திக் கொண்டு உள்ளே வாங்க.

மகா மசானம் இது.  எதுக்கு  காசிக்கும் சாவுக்கும்  இத்தனை பெருமை?

இங்கே வந்து செத்துப்போனா மோட்சம் உறுதி. அதுவும் சாகக்கிடக்குறவங்களைத் தன் மடியில் வச்சுக்கிட்டு அந்த பராசக்தியே தன் சேலை முந்தானையால் விசிறி விடுவாளாம்.  பரமசிவன்,  அவுங்க காதில் ராம நாமத்தைச் சொல்லி டைரக்ட்டா மோட்சத்துக்கு அனுப்பிருவாராம். புனரபி ஜனனம், புனரபி மரணம் என்ற  பிறப்பு இறப்புன்னு  தொடரும் சங்கிலியிலிருந்து விடுபட்டுடலாம்.

அதுக்காக  சாகக்கிடக்கையில் பயணம் பண்ணி வரமுடியுதா? நோ ஒர்ரீஸ். செத்த பிறகு இங்கே கொண்டுவந்து எரிக்கப்பட்டாலும் இதே பலன் உண்டு. அக்கம்பக்கத்துப் பதினெட்டு பட்டிகளில் இருந்தும் பிணங்களை இங்கே கொண்டு வந்து எரிப்பது தினசரி நிகழ்வுகளில் ஒன்னுதான்.   ஏதோ சரக்கு கொண்டு வர்றது போல   நீள மூட்டையாக் கட்டி, அதை சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, இல்லை வெறும் சைக்கிள் இப்படி எதுலேவேணா வச்சுக்கொண்டு வந்துடறாங்க.  உள்ளூர் மக்கள்ஸ்க்கு ... ? அதான் எல்லாம் ரெடிமேடா  கிடைக்குதே!  பொண்ணுன்னா  ஆரஞ்சு, ரோஸ், சிகப்பு நிறங்களில் சரிகை வச்சுத் தச்சது. ஆம்பளைன்னா......  வெறும் வெள்ளை வேட்டி.

பிணத்தை இம்மாந்தூரம் கொண்டு வர வழி இல்லைன்னாலும்..... கவலை வேணாம்.  அந்தந்த ஊரில் எரிச்ச  அஸ்தியைக்கூட இங்கே கொண்டு வந்து கங்கையில் கரைச்சாலும்  மோட்சம்தான்.  அதுவும் முடியலைன்னா?   எதுக்குப்பா கவலை? இங்கே வந்து பித்ரு கர்மம் செஞ்சாலும்  போதும்.  ஆகக்கூடி காசியை நினைச்சாலே மோட்சம்தான்.  இல்லாமலா மோட்சபுரின்னு பெயர் கிடைச்சுருக்கு!

மரணத்தைக் கொண்டாடணும் என்பதே  உண்மை.  இதையெல்லாம் தெரிஞ்சோ தெரியாமையோ நம்ம பக்கங்களில் கொண்டாடிக்கிட்டுத்தான் இருக்கோம்.  சென்னையில் சவ ஊர்வலங்களைப் பார்த்துருக்கீங்கதானே?  என்னமா ஒரு  கூட்டம்  போடும் ஆட்டம்!  அந்த பறையொலி நம்மைக்கூட நாலு ஸ்டெப் போடவச்சுருமுல்லே!

மேலே: சென்னை வாசத்தில் ஒரு  ஊர்வலம். நம் வீட்டு மாடியில் இருந்து எடுத்தது.

மரணபயம் துளியும் இல்லை. இன்னிக்குச் செத்தா இன்னிக்கே பால்!  காசி எப்பேர்ப்பட்டவரையும்  ஞானியாக்கித் தத்துவம் பேச வச்சுரும் போல.

பாருங்களேன்.... நான் எப்படி பேசிக்கிட்டு இருக்கேங்கறதை!!

எனக்கு என்னவோ சின்ன வயசுலே இருந்து  மரணம் என்ற சமாச்சாரம் ரொம்பவே  சுவாரசியமாகிப் போச்சு.  அதைப்பற்றி நம்ம துளசிதளத்தில்   பதிவு ஒன்னு கூட எழுதிட்டேன். ஒரே ஒப்பாரின்னு நினைக்காம க்ளிக்கிருங்க:-)


பொதுவா மயானங்களுக்குப் பெண்கள் வர்றதில்லை (அதாவது உயிரோடு!)  என்றதால் எங்கே பார்த்தாலும் ஆண்களே இங்கு!  டூரிஸ்ட் கூட்டம்தான் (பெண்கள் உட்பட)  இங்கே என்ன நடக்குதுன்ற  ஆர்வத்தோடும் பயத்தோடும்  வந்து பார்த்துக்கிட்டு இருக்காங்க. தரையில் நின்னு பார்க்கும் அதே அளவுக் கூட்டம் படகிலும் வந்து அந்தாண்டை தண்ணீரில்  'நின்னு' பார்க்குது!  படித்துறையில்  ஒரு  இடுப்புயரக் கம்பித்தடுப்பு அருகில் நின்னுக்கிட்டு இருந்தோம் நாங்க.  கீழே ஒரு  அஞ்சாறடியில் நடப்பது எல்லாம் துல்லியம்.

இதுலே ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி  என்னாண்டை கோவிச்சுக்கிட்டாங்க.  'அதெப்படி உனக்கு மட்டும் போட்டோ எடுக்க பர்மிஷன் கொடுத்தாங்க'ன்னு?

சரியாப்போச்சு.  என்ன இருந்தாலும் நான் இந்தியள் இல்லையோன்னு சொல்ல வாய் வந்தாலும்...... ஒன்னும் சொல்லாம இருந்துட்டேன். இதுலே நம்ம கையிலே தாம்பாளம் பார்த்துட்டு ....  சாவுச்சடங்கு செய்யும் குடும்பத்து ஆட்கள்ன்னு  நினைச்சுக்கிட்டாங்களோ என்னவோ!

ஆனாலும் கடுகடுன்னு மூஞ்சை வச்சுக்கிட்டு இருந்தாங்க  அந்தம்மா. கூட வந்த ஒரு பெண்ணும்,  இன்னொரு ஆளும் வச்ச கண் வாங்காம அங்கே நடப்பதைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. டூர் ஆப்பரேட்டர் ஒருவேளை சொல்லி இருப்பார் போல,  மயானத்துலே படமெடுக்கக்கூடாதுன்னு.

வெளிநாடுகளில் க்ரெமெடோரியம் இருக்குன்னாலும்.....  சவப்பொட்டியோடு  அது கன்வேயர் பெல்ட் மூலம் உள்ளே போயிரும்.  நாம்தான் மூத்த பிள்ளை இல்லை கடைசிப்பிள்ளை கொள்ளி வைக்கணும் என்ற  சாஸ்த்திரவிதிப்படி,  அவுங்க சொல்லும் ஸ்விட்சை அமர்த்திட்டு  வருவோம். ஆனால்  உடனே  எரிக்க மாட்டாங்களாம்.  பின்னிரவில் தான் எரியூட்டல். அப்பதான் காற்றில் அவ்வளவா பொல்யூஷன் கலக்காது. இது தெரியாமல் முதலில் எல்லாம் இங்கே சாவுக்குப்போய் சர்வீஸ் முடிஞ்சு   வெளியே வந்தவுடன், சிம்னியில் புகை வருதான்னு அண்ணாந்து பார்ப்பேன்! ஒன்னும் வரலையேன்னு ஏமாற்றமா இருக்கும்.  புகைகூட வராம எரிக்கறாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.  அப்பதான் ஒரு நாள் நம்ம ரமண்பையா விஷயத்தைச் சொன்னார். இப்ப அவரும் உலகில் இல்லை:(

 இந்தப் படித்துறைகள்   ஹரிஷ்சந்த்ராவுக்கும், மணிகர்ணிகாவுக்கும் ஒருநாளைக்கு சுமார் நூறு பிணங்கள் வருதாம்.  நல்லா எரிஞ்சு முடிக்க  நாலுமணி நேரம் எடுக்குது. இந்தப் படித்துறை மேடையிலே ரெண்டு தகனமேடை காங்க்ரீட்லே  கட்டி இருக்கு.  அதுலேதான் எரிக்கணுமுன்னு  காத்துக்கிட்டு இருந்தால்  வேலை முடியாது பாருங்க. அதனால் படிகள் விட்டிறங்கி கங்கைத் தண்ணீருக்குப் போகும் வழியில்  ஒருபத்து மீட்டர் அகலத்தரையில் அங்கங்கே சிதைகளை மூட்டிடறாங்க.  நாளின்  இருபத்தினாலு மணி நேரமும் எதாவது ஒரு சிதை எரிஞ்சுக்கிட்டேதான் இருக்கு இங்கே. அணையா நெருப்பு.

தொடர்ந்து வரும் புகையினால், அக்கம்பக்கத்து மரங்கள், கட்டிடங்கள்  கூட புகைபடிஞ்சுதான் கிடக்கு.


நாராயண தீக்‌ஷிதர் என்ற மகான் தான்  1740 ஆம் ஆண்டில் இந்த  படித்துறைகளைச் சீரமைச்சுக் கொடுத்தாராம். அப்போ ஜனத்தொகை ரொம்பக் குறைவோ என்னவோ  ரெண்டே ரெண்டு மேடை! இன்னொரு மயானப் படித்துறையான மணிகர்ணிகாவில் எத்தனை மேடை இருந்ததோ?  கிட்டப்போய் பார்க்க முடியலை. படகில் போகும்போது  மட்டுமே  ஒரு பார்வை:(

நாங்க நின்னு பார்த்துக்கிட்டு இருந்தபோதே  பிணங்கள் வந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஒரு பக்கம் நாலு பேர் எரிஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  படிகட்டுகளில்   இப்ப வர்றது ஒரு பெண். மஞ்சள் நிறப்புடைவையில்  இருக்காங்க.  தூக்கிட்டு வந்தவங்க நேராப்போய்   கரையோரத்தண்ணியில்  பாடையை அப்படியே  பிடிச்சு  ஒரு முக்கு முக்கி எடுத்தாங்க.

 திரும்ப இந்தப்பக்கம்  கொண்டு வருவாங்கன்னு  பார்த்தால்......   அங்கேயே  கரையின் ஓரத்தில் அப்படியே தண்ணீரில் போட்டுவச்சுட்டு ஒரு நாலைஞ்சு ஆட்கள் கூட்டத்தில் என்னமோ பேசிக்கிட்டு இருக்காங்க. பாவம்....அந்தம்மா  தண்ணிக்குள்ளேயே கிடக்கு.  அந்த இடத்தில் மண்ணும் சாம்பலும் கலந்து சகதி போல  இருக்கு:(  எரிப்பவர்களோடு பேரம் படியலை போல!

இங்கே வரும்போது  பிணத்துடன் பணமும் கொண்டாரணும்.  நகரசபை நிர்ணயித்த  தொகைன்னு ஒன்னு இருந்தாலுமே......   இங்கே வெட்டியான்களோடு  ஒரு பேரம் பேசிக்கணும்தான்.  எல்லாம் அன்ஃபீஸியல். வேற வழி?  தொகை படியலைன்னு  திரும்பி வீட்டுக்கா கொண்டு போக ?

அவுங்களையும் சொல்லி என்ன பயன்?  இங்கே நெருப்பு எரிஞ்சால்தான் அங்கே வீட்டுலே அடுப்பெரியும்:(

வசதி இல்லைன்னா  கஷ்டம்தானே?  நகரசபை இங்கே மின்சார மயானம் ஒன்னு அமைச்சுக் கொடுத்துருக்கு.  கட்டணம் ஐநூறு மட்டுமே! ஆனாலும் மக்கள் அங்கே போக அவ்வளவா விரும்பலை? மரபு  முக்கியம்.  இங்கே கங்கைக்கரையில் கட்டையில் வெந்தால்தான்  சொர்கம் என்ற நினைப்பு.

எரிக்கும்  இடத்தில் ஆடும் மாடும் நாய்களுமா இடையில் உலாத்திக்கிட்டே இருக்குதுகள். ஆட்டுக்கும் மாட்டுக்கும்   மெரிகோல்ட் பூக்களின் மேல்தான் கண்.  ஆனால்... நாய்கள்?  பார்பெக்யூ வாசனை இழுக்குது போல!  காலபைரவர் கோவில் கொண்டுள்ள காசி மாநகரத்தில் பைரவர்களுக்கு  நல்ல மரியாதை. யாரும் அவைகளை விரட்டுவதில்லை. அதுகளும்  குறுக்கே போகும் மக்களைக் கடிப்பதுமில்லை. குரைப்பதுமில்லை.

 இதுக்குள்ளே இன்னொரு பெரிய சாவு வருது.  பின்னால் வந்த  ஜனத்திரள் சைஸ் வச்சுப் பார்த்தால், கொஞ்சம்  பெரிய குடும்பம் போல.    வயசான பெரியவர். அவரைச் சுமந்து வந்தவர்கள்  நேரா கங்கைக்குப்போய் முக்கி எடுத்து கையோடு  மேலே கொண்டு போயிட்டாங்க.  தகன மேடை கிடைச்சிருக்கு. ஒரு  பதின்ம வயசுப்பையன்  (பேரன் போல! ) உடைக்கு மேலொரு வெள்ளைத் துணியைப் போர்த்திக்கிட்டு  கொள்ளி வைக்கப் போறார்.   அதுக்கு முன்னால் எதோ சாஸ்த்திரம்..... குச்சி ஒன்னுஎடுத்துக்கிட்டு  கங்கையில்  முக்கி எடுத்தாந்தார்.

படித்துறைக்கோவிலில்  பலநூற்றாண்டுகளாக அணையாமல் எரியும் தீயில் இருந்து  குச்சியைப் பத்த வச்சுக்கணும்.  நம்ம பக்கங்களில்  தீச்சட்டி வீட்டில் இருந்தே கொண்டு போவாங்க இல்லையா? இங்கே அப்படி இல்லை!

தனியா பண்டிட் வந்து  மந்திரங்கள் ஓதி  சம்ப்ரதாய முறைகளைச் செஞ்சதும்  கொள்ளி போட்டார்.  நிறைய நெய்யை ஊத்துனாங்க.  பெரியவரைச் சுத்தி நல்ல கூட்டம்.

ஒரு  எரிப்புக்கு குறைஞ்சபட்சமா அஞ்சாயிரம்.அதிகபட்சமா  நாப்பதாயிரம் செலவாகுதாம், இங்கே எரிப்பதற்கு மட்டும்.  எல்லாம்  எரிக்க உதவும் மரக்கட்டைகளின் அளவைப் பொறுத்தும்  செலவுக் கணக்காம்.  மலை போல குவிச்சு வச்சுருக்கும்  மரத்துண்டுகளைத் தோளில்  சுமந்து போய்   சிதை அடுக்க, குறுக்கும் நெடுக்குமாய் ஆட்கள் போய்வந்துக்கிட்டு இருக்காங்க.  எரிப்பவர்கள்  ஆறடி மூங்கில் கழிகளைக் கையில் வச்சுருக்காங்க.   அப்பப்போ அதால்   எரியும் கட்டைகளைக் குத்தித் திருப்பி தீயைத் தூண்டிவிடறாங்க.

சரியா  தீப்பிடிக்கலையா? நோ ஒர்ரீஸ்.....இன்னொரு   நெய் பேக்கட்டைப் பிரிச்சு  ஊத்துனால் ஆச்சு!  நம்ம பக்கங்களில் விறகு அடுக்கி எரிப்பதைப்போல இல்லாமல் முழு மரத்தின் தண்டுகளை அப்படியே அடுக்கி எரிப்பதால் சட்னு தீ பத்தறது கஷ்டம். ஆனால்..... பத்திக்கிச்சோ.....  ஆளுயர தீவட்டிதான்!


பிணங்களைப் போர்த்திக் கொண்டுவரும் சரிகைத்துணிகளை  நைஸா எடுத்துக்கிட்டுப்போய்  திரும்ப சாவுசாமான் விற்கும் கடைகளில் வித்துருவாங்கன்னு ஒரு சேதி  முந்தி எங்கியோ வாசிச்ச நினைவில், அப்படி எடுக்கறாங்களான்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.  அப்படி ஒன்னும் கண்ணில் படலை. அங்கங்கே  அழுக்கிலும் சேற்றிலும்  அவைகளில்  சில கிடந்தன.  ஒரு வேளை அதி அலங்காரமா வேலைப்பாடுகள் நிறைஞ்ச துணிகளை எடுத்துக்குவாங்க போல.   எல்லாத்திலும்  காசுக்கேத்த பணியாரம் இருக்கத்தானே செய்யும்!

பாடைகளின் மூங்கில்களை மட்டும் தனியா எடுத்து ஒரு பக்கத்தில் வச்சுருக்காங்க. ரீஸைக்ளிங் இருக்கு போல.   அதுக்கான டிமாண்ட் இருக்கும் போது தேவையில்லாமல் அதை எதுக்கு எரிக்கணும், இல்லே இன்னொண்ணு  அது ஆறடி நீள மூங்கில். அடுக்கும் சிதையோ  நாலரை அடி, இல்லே அஞ்சடி  நீளம்தான். தலையோ, காலோ கொஞ்சம் வெளியே நீட்டிக்கிட்டுதான் இருக்கு படுக்க வைக்கும்போது.  அங்கே கும்மாச்சியாக் கொஞ்சம் கட்டைகளை வச்சு மறைச்சுடறாங்க.

என்ன   நடக்குமோன்னு  பார்த்துக்கிட்டு இருக்கும்போது, ஒரு பத்தே நிமிசத்தில்  நாம் இருக்குமிடம் மசானம்,  சாவு, பிணமென்ற பதற்றம், பயம்  இல்லாமப் போயிருது.  பார்ட் ஆஃப் த  லைஃப்  என்ற உணர்வு வந்துருது.   மயான வைராக்கியம்.....    உலகே மாயம், வாழ்வே மாயம்.... காசி என்பது  வெறும் க்ஷேத்ரம்  இல்லை, மஹாமயான க்ஷேத்ரம் என்பதே உண்மை.

வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தாலும்  என் கண்கள் அடிக்கடி போனது அந்தம்மாவிடமே.  இன்னுமங்கேதான் சேற்றில் கிடக்குறாங்க:(   சீக்கிரம்  ப்ரச்சனையை முடிங்கப்பா....பிறப்பு, வாழ்வு, இறப்புன்றது  எல்லாருக்கும்  உண்டு!  மயானம் , சமரசம் உலாவும் இடம்தான்!  ஆனால் காசு இருந்தால்தான் காசி!

ப்ச்........   நேரம் ஓடுதேன்னு  பண்டிட் வீட்டுக்குத் திரும்பினோம். கைகால் அலம்பிக்கிட்டு  மேலே மாடிக்குப்போய் உடையை மாற்றிக்கிட்டு கீழே வந்தோம்.  இலை போட்டாச்சு, சாப்பாடு தயாரா இருக்குன்னாங்க. முற்றத்தையொட்டிய தாழ்வாரத்தில் சிலர் உக்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு  இருந்தாங்க.  நமக்கு ஒரு பெஞ்சில் இலைகள் போட்டு வச்சுருக்காங்க.





தொடரும்.............:-)


PINகுறிப்பு:  உனக்கு வெல்லம் தின்னாப்போல இருக்கும், இந்தப்பதிவு என்றார் கோபால்.





Friday, April 25, 2014

ஒலியின்றி ஒரு லொள் லொள் ம்யாவ் ம்யாவ்

ஒரு சின்னத் தாம்பாளத்தில் சப்பாத்தி மாவு உருண்டை.  லாட்னாவைக் காணோமேன்னு  பார்த்தேன். அதுக்குள்ளேஅங்கே வந்த நம்ம சிவகுமார்  தட்டை என்னிடம் நீட்டி, சின்னச் சின்ன உருண்டைகளா உருட்டி வைக்கச் சொன்னார். எத்தனை சப்பாத்திக்குன்னு தெரியலையே?   ஙே....   மாவைக் கிள்ளி எடுத்து  அரிநெல்லிக்காய் சைஸில் உருட்டிக் காமிச்சார் அவரே!

அங்கிருந்த ஒரு பெஞ்சில் உக்கார்ந்து உருட்ட ஆரம்பிச்சேன். இந்த வீடும் முற்றம் உள்ளதே. ஆனால்  முற்றத்தின் அளவு சின்னூண்டு. கூடத்தில் இப்போ நாம் இருக்கோம். இன்னொரு தாம்பாளத்தில் பூ, வெற்றிலைபாக்கு, மஞ்சள், ஊதுபத்தி,தர்ப்பை,பால், கங்கை  இத்யாதிகளுடன்  திரும்பி வந்தவர்  தரையில் அமர்ந்ததும், கோபாலும் அவருக்கு எதிரில்  உட்கார்ந்தார்.  மசாலா டப்பாவில் மங்கலப்பொருட்கள்.




இந்தப் பக்கங்களில் கோதுமை மாவு உருண்டைகளில்தான் பிண்டம் வைக்கிறாங்க..  ஆனால் நம்மூரில்  சோற்றால் ஆன பிண்டங்கள் இல்லையோ?

குருக்ஷேத்ராவில் ப்ரம்மகுண்டத்தின் கரையில் இப்படி சப்பாத்தி மாவு உருண்டைகளுடன்  காத்திருந்த பண்டாக்களின் நினைவு வந்தது.  நம்ம பக்கம் சோற்றுருண்டை. வடகத்திக்காரங்களுக்கு சப்பாத்தி மாவு உருண்டை! அவுங்கவுங்க சாப்பாடு அவுங்கவுங்களுக்கு. மேலே போனாலும்கூட உணவுப் பழக்கம் மட்டும் மாறாது போல!





தரையில் தர்ப்பையை  நீளவாக்கில் அடுக்கி  கீழே இருந்து ஆரம்பிச்சு குட்டி உருண்டைகளை வைக்கணும்.  பண்டிட் விசாரிக்க விசாரிக்க தன் தலைமுறைகளின் பெயர்களைச் சொல்லிக்கிட்டே போறார் நம்ம கோபால்.  எள்ளுத் தாத்தா பாட்டி, அதுக்கும் மேலே எள்ளுத்தாத்தாவின் அம்மா அப்பா, தாத்தாவின்  தாத்தா பாட்டின்னு  ஆறு தலைமுறைப்பெயர்கள் அஸால்டா வாயில் இருந்து வருது!   அட! இத்தனை தலைமுறைகள் பெயரும் இவருக்கு தெரியுமான்னு  என் கண்கள் விரிஞ்சது உண்மை. அடுத்து  கோபாலின் மாமனார் மாமியாரில் தொடங்கறாங்க. என்னைத் திரும்பிப் பார்த்தார்.  எனக்கு அப்பாம்மா, தாத்தா பாட்டி, கொள்ளு வரிசையில் ஒரு  தாத்தா பாட்டி  (அதுவும்  எங்க அம்மா சைடில் மட்டுமே !) தெரியும். அப்ப   மூதாதையர்  நினைவில் கோபாலில் பாதி(தான் ) நான்!

அப்புறம் நம்ம அண்ணன் தம்பி அக்கா தங்கை  என்ற  உறவினர் வரிசையில் என் சார்பா  என் இன்னுயிர்த்தோழியின்   கணவரையும் , அவருடைய பெற்றோரையும் , தம்பியையும்,  மாமனார் மாமியாரையும் சேர்த்துச் சொன்னேன்.  அப்புறம் மற்ற  ஆத்மாக்கள். சிண்டு என்றதும் நிமிர்ந்து பார்த்த சிவகுமாரின்  கேள்வி  நிறைஞ்ச  முகத்துக்கு, அது நம்ம செல்லம், நாய் என்றார் கோபால். சின்ன உருண்டை ஒன்னு!

கப்பு என்ற கற்பகம், கோகி என்ற கோபாலகிருஷ்ணன், ஷிவா, வரதன்,வெள்ளச்சு,  இப்படி வரிசையாச் சொல்லிக்கிட்டுப்போறேன். கப்பு என்று ஆரம்பிச்சதுமே ,  என்னைப் பார்த்து 'லொள்?'  என்று ஓசையில்லாமல்  வாயசைத்த  சாஸ்த்ரிகளுக்கு, இல்லைன்னு தலை அசைச்சு, ம்யாவ் என்று ஓசையில்லாமல் நானும் பதில் சொன்னேன். அப்புறம் ஒவ்வொரு பெயரைச் சொன்னதும்  அதே ம்யாவ், லொள்,  ம்யாவ்தான்.  லிப் ரீடிங்க்  இப்ப அவருக்குப் பழகிப்போச்சு. நல்ல புரிதல்.  சரசரன்னு உருண்டைகளைக் கிள்ளிக்கிள்ளி ( சின்ன ஜீவன்களுக்கு  சின்ன உருண்டை இல்லையோ?  தட்டிலிருந்த  மாவு உருண்டைகள்  முக்கால்வாசி மனிதர்களுக்கே தீர்ந்து போயிந்தே!  அப்ப  உருண்டை அளவைக் குறைச்சால்தானே என் படைகளுக்கு வரும்?) கோபாலுக்குக் கொடுக்க இவர் வாங்கி வரிசையா அடுக்கறார். ஒரு கட்டத்தில் தர்ப்பை நுனி வரை வந்து இடம் போதாமல் ஆச்சு!

கொஞ்சம் தயக்கத்தோட  நமக்கும் கூட வச்சுக்கலாமுன்னு (காசி போய்வந்த தோழி சொல்லி இருந்தாங்க) கேட்டேன்.  செத்தபின்   இதுக்குன்னு வரமுடியாதில்லையா? இல்லைம்மா..... நான்  அப்படிச் செய்யறதில்லை. கயாவில் அப்படி செய்வாங்க. இங்கே நான் 'வாழும் மக்களுக்கு'ச் செய்யமாட்டேன் என்றவர்,   உங்க  மகன்கள் (?)   உங்களுக்காக  அதைச் செய்வாங்களேன்னார்.  ஓ...... மகள் செய்வாளான்னு தெரியலையே:(  போகட்டும்...



மஞ்சள், குங்குமம், மலர்கள்  இட்டு  ஊதுபத்தி கொளுத்தி வணங்கிய பின்னே மந்திரங்கள் சொல்லி பூஜை நடந்தது.  கடைசியில்  தரையில் இருக்கும்  எல்லாவற்றையும்  சேகரித்துத் தாம்பாளத்தில் இட்டதும், போய் கங்கையில்  கரைத்துவிட்டு வரச்சொன்னார் சாஸ்த்ரி சிவகுமார். மாவு உருண்டைகள் மீனுக்கு இரை!

எனக்கும் கோபாலுக்கும்  இந்த  பிண்டப்ரதானம் அனுபவம் இதுதான் முதல்முறை. கோபாலின் பெற்றோர் மறைஞ்சு இப்போதான் முதல்முறையா  இவர் செய்யறார்.  அவுங்க போய் ரெண்டு வருசம் ஆகி இருந்தாலும், ஊரில் மற்ற தம்பிகள்தான் வைதீகக் காரியங்களையெல்லாம் தவறாமல் செஞ்சுக்கிட்டு வர்றாங்க. இளைய பண்டிட் ஒருத்தர் குடும்பத்தில் (ஓர்ப்படி. மச்சினர் மனைவி) இருக்கார்! அப்ப மூத்த பண்டிட்? அதான் நானிருக்கேனே:-)

பேச்சுவாக்கில் குலதெய்வம் எதுன்னு கேட்டவருக்கு, பெருமாள் என்று  சொல்லவந்த வாய்,  அநந்தபத்மநாபன் என்றது!  அட! இங்கே  அஸ்ஸி காட்டில்  அநந்தபத்மநாபன் கோவில் இருக்கு. ஆனால் ரொம்பப்பேருக்குத் தெரியாதுன்னு  தகவல் கிடைச்சது.  சேதி சொல்லி அனுப்பிட்டான் நம்ம  பெரும் ஆள்! ஆஹா....ஆஹா...

மீண்டும் கங்கைக்குப்  போனோம்.  நான் உசரப்படிகளில்  மெள்ள இறங்கிக்கிட்டு இருக்கேன்.  கோபால் விடுவிடுன்னு  பாய்ஞ்சு போய்  கங்கையில் தட்டைக் கவிழ்த்துட்டு,  மேலேறி வந்தவர் பாதி வழியில் என்னை சந்தித்தார்.  எல்லாம் அவசரடி. ஏன்....  நான் வரும்வரை கொஞ்சம் பொறுத்து இருக்கக்கூடாதா?  ரெண்டு க்ளிக்கி இருப்பேனே!



 நதியில்  மக்களுக்காகக் காத்திருக்கும் படகுகளின் வரிசை!   உச்சிவெயிலின் சுகத்தை அனுபவித்தபடி  கிடக்கும் பைரவர்கள். விளையாட்டில் கவனமா இருக்கும்  குழந்தைகள்.


படிக்கட்டில் கொஞ்சம் உட்கார்ந்து அக்கம்பக்கம் பார்த்துக்கிட்டு இருக்கோம்.   ரெண்டு  படித்துறைகள் தள்ளி ஒரே புகையும் கூட்டமும்.  அட! இங்கெதானா இருக்கு?  தாம்பாளத் தட்டைத் தூக்கிட்டு(!!!) அங்கே  போனோம்.




ஒரு உயரமான பீடத்தில்  சிவன். மேலேறிப்போக படிகள் இருக்கு.  அடிவாரத்தில் படுத்திருக்கும்  குழந்தையின்  மேல்  குழந்தையுடன்(??) அமர்ந்துள்ள காளி!  கோவில்! ஐயோ...  ஏன் குழந்தை மேல் உக்கார்ந்துருக்கான்னு  உத்துப் பார்த்தால்  கீழே உள்ள குழந்தைக்கு வால் இருக்கு!  ஓ....  சிம்மவாஹினியா!  ஆனால்  சிங்கம், புலி போல  இருக்கே!

 

அடுத்து ஒரு கட்டிடம். மண்டபத்தில் ஒரு நாகா சாது இருக்கார். அங்கேயே சமையல் போல! கல்லடுப்பு ஒன்னு ஓரமா இருக்கு.  சாது சேவைக்கு இன்னும் சிலர் இருக்காங்க. எக்ஸ்ட்ரா படுக்கை இருக்கே!

மண்டபத்தின்   ஒரு ஒரத்தில்  சின்னதா ஒரு சந்நிதி. கம்பிக்கதவின் உள்ளே  எட்டிப்பார்க்கலாம். மஹாராஜா  ஹரீஷ்சந்த்,  மனைவி தாராமதி, மகன் ரோஹித்தாஸ். (எல்லாம் நம்ம அரிச்சந்திரன், சந்திரமதி,லோகிதாசன் தான்) ஜஸ்ட் ஒரே ஒரு பொய்யைச் சொல்லி இருந்தால்  நிம்மதியாக குடும்பத்துடன் இருந்துருக்கலாம். ஆனானப்பட்ட தருமனே  அசுவத்தாமா இறந்தான்னு சொல்லலையா?



ஹரீஷ் முகம் தெரியாமல்  ஒரு  கம்பி குறுக்கே:(  கேட்டிருந்தால்  கதவைத் திறந்து விட்டுருப்பாங்க,இல்லே:(

நம்ம தாடிகூட என்ன சொல்லி இருக்கார்.... எதாவது நன்மை
இருக்குமுன்னால் ஒரு பொய்யைச் சொன்னாலும் குற்றமில்லைன்னுதானே?

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.

நம்ம அரசியல்வியாதிகளைப் பாருங்க.....   நன்மை பயக்காதுன்னாலும் கூட  அயோக்கியத்தனமா பொய்களை வாரி இறைக்கலையா?

நான்கூடத் தீமையில்லாத பொய்களைச் சொல்வேன்.  ஒருநாளைக்கு பசியே இல்லை, சாப்பிட வேணாமுன்னு தோணுச்சுன்னா.....   கோபாலுக்கு மட்டும் சோறு  போட்டுட்டு நான் சும்மா இருந்தால்... நீயும் சாப்பிடுன்னு வற்புறுத்துவாரா....  "பசியா இருந்துச்சுன்னு   இப்பதான் சாப்பிட்டு முடிச்சேன். நீங்க வந்துட்டீங்க"  ஆனா இது லஞ்சு டைமுக்குத்தான் பொருந்தும் கேட்டோ!

ஆனா ஹரீஷ்?  மஹாராஜாவா இருந்து மனைவி மகனைப் பிரிஞ்சு, கடைசியில்  சுடுகாடு காக்கும் வெட்டியான் வேலைக்கு வந்துட்டானே:( ஐய... இவன் பொல்லாத அரிச்சந்திரன் பாருங்க....

இவன் வெட்டியானா வேலை செஞ்சது இங்கே இந்தப் படித்துறையில்தான் போல!  அதான் காலங்காலமா பிணங்களை எரிக்கும் இந்த  இடத்துக்கே  பேரு வச்சுட்டாங்க, ஹரீஷ்சந்த்ர  காட்!

வாங்க, படி இறங்கிப் போய் பார்க்கலாம்!



தொடரும்..............:-)