Friday, September 05, 2008

நமது நிருபர்/ தகவல் ஒலிபரப்பு இலாகா( மரத்தடி நினைவுகள்)

மக்களே!

முன் குறிப்பு:

பழையபடி உங்களயெல்லாம் 'வத்தலகுண்டு'க்கு கூட்டிகிட்டுப் போறேன். அந்த ஊரு மனசுலே ஆழப் பதிஞ்சிடுச்சு.மலரும் நினைவுன்னாவே அங்கிருந்துதான் ஆரம்பிக்குது.
'அச்சானியமா' இதைப்பத்தியெல்லாம் சொல்றேனேன்னு நினைச்சுக்காம 'கருத்து' சொல்லுங்கோ!

==================================================================

எனக்கு எத்தனை வயசு? ம்ம்ம்ம்ம்ம் ஏழு முடிஞ்சு எட்டு. அது என்னமோ தெரியல்லே, 'சாவு'ன்னா எனக்கு பயமே கிடையாது. என்கூடப் படிக்கற பசங்கல்லாம், எல்லாம்னா ஒட்டு மொத்தமா எல்லாம் இல்ல, கொஞ்சம்பேருக்கு பயம்.எனக்கோ உடனே போய் பாக்கணும்! அதும் இங்கெல்லாம், சாவு வீடுன்னா, முதல்ல வாசல்லே ஒரு சின்னப் பந்தல் போட்டுருவாங்க. சங்கும், சேகண்டியும்
அடிச்சுகிட்டு ஒரு ஆள் இருப்பாரு. சின்ன ஊராச்சுங்களா, நமக்குத் தெரியாம ஒண்ணும் நடந்துராது!

(ஒரே சீரான இடைவெளியில் ஒலிக்கும் அந்த வெண்கலத்தட்டிலிருந்து வரும் நாதம் சோகத்தைச் சுமந்துக்கிட்டு வருதோன்னு இருக்கும். அந்த ஒலியின் தாலாட்டில் உறங்க ஆரம்பிக்கும் மனசைத் தட்டி எழுப்பும் விதமா அப்பப்ப 'பூம்' என்ற சங்கொலி. சங்கே முழங்குன்னு தலைப்பு வச்சுருக்கலாமோ?)


மொதல்ல உள்ளபோய் 'போனது' ஆம்புளையா இல்ல பொம்புளயான்னு பாப்பேன். செத்துக்கிடக்கறவங்களைவிட, நம்ம இண்டரெஸ்ட் அங்க ஒப்பாரி வச்சுகிட்டு இருக்கறவங்கதான். அப்புறம் ஆளுங்க ஒரொருத்தரா
வர்றப்ப, அடங்கியிருக்கற அழுகை ஒரு வேகத்தோட கிளம்பும். ஒரு அஞ்சு நிமிஷத்துலே கொஞ்சம் சமாதானமாயி, எப்படி, எப்போ செத்துட்டாங்கன்னு வந்தவுங்ககிட்ட சொல்வாங்க.

"நல்லாத்தான் இருந்தாரு. முந்தாநா கூட, மச்சான் வீட்டுக்குப் போகணும்னு சொல்லிகிட்டிருந்தாரு. நேத்துதான் ஒரு மாதிரி மயக்கமா வருதுன்னாரு. என்ன ஏதுன்னு பாக்கறதுக்குள்ள இப்டியாய்ப்போச்சு"

" ஒண்ணுமில்ல மதினி, வயக்காட்டுக்குப் போய்வந்து, காப்பித்தண்ணி கேட்டாரு. கொண்டுவரதுக்குள்ள சாஞ்சிட்டாரு"

" என்னத்தைன்னு சொல்றது, ஆறு மாசமா மருந்து, மாத்திரைன்னு செய்யாத செலவுமில்லை. பாக்காத வைத்தியமும் இல்லை.இப்ப மூணு நாளா சோறு தண்ணி இறங்கலை. டாக்டரம்மா வந்து பாத்துட்டு, சொந்த
பந்தத்துக்கு ஆள் விடுங்கன்னுட்டாக. பொழுதுவிடியறப்ப,உசிரு அடங்கிடுச்சு"

இப்படி ஏதாவது ஒரு தகவல் வரும். அதென்னமோ பலபேருகிட்ட சொல்லச் சொல்ல விவரம் கூடிகிட்டே போகும்.
யார்மேலேயும் தொட்டுக்காம ஒரு ஓரமா நின்னு, எல்லாத்தையும் கவனமாக் கேட்டுகுவேன். இன்னும் யாரு வரணும், எப்ப எடுப்பாங்க இப்படி பல தகவலையும் திரட்டிடுவேன். அப்புறம் ஒரே பாய்ச்சல். நேரா வீடுதான்.

வீட்டுக்குள்ள நுழையும் போதே, அக்காங்களுக்கு 'நியூஸ்' சொல்லிகிட்டேதான் வருவேன். பாவம் இந்த அக்காங்க! வெளியிலே எங்கேயும் போகாம வீட்டுலேயே இருக்காங்களா? சின்னக்காப் பள்ளிக்கூடம் போயிட்டு வருதுதான். ஆனா அது உலகமே தனி. சமுதாய அக்கறை கொஞ்சமும் கிடையாது. நாட்டுலே நடக்கறதை நாஞ்சொல்லாட்டா வேற யாரு சொல்லுவா?

" ஏண்டி, சாவு வீட்டுக்கா போயிட்டுவரே?"

" ஆமா, ஆனா நான் யாரையும் தொடலே, ஒரு ஓரமா தள்ளி நின்னு பாத்துட்டு வரேன்"

" எல்லாம் தெரியும், நீ மொதல்லே அந்த கவுனைக் கழட்டிட்டு, கைகாலு களுவிட்டு உள்ளே வா. வேற உடுப்பு போட்டுக்கோ"

இந்த மாதிரி சமயத்துல மட்டும் மறுபேச்சு பேசமாட்டேன்!

சாவுக்குன்னு சில சம்பிரதாயங்கள் இருக்குல்லெ. அந்தப்பக்கமெல்லாம் செத்துப்போனவங்களைக் குளிப்பாட்ட தண்ணிய ஆத்துலே இருந்து கொண்டாருவாங்க. நம்ம வத்தலகுண்டுலெ இருக்கற ஆத்துக்குப் பேரு என்ன
தெரியுமா? மஞ்சளாறு.

சங்கு ஊதிகிட்டே, கூட சேகண்டியும் அடிச்சுகிட்டே ஆளுங்க குடங்களை எடுத்துகிட்டு ஆத்துக்குப் போவாங்க.
திரும்பி வரப்போ, நாலுஆளுங்க ஒரு வெள்ளை வேஷ்டியை நனைச்சு, நாலு பக்கமும் நாலுமூலையை குடையாட்டம் பிடிச்சுகிட்டு வருவாங்க. அந்த நிழலுக்குள்ளே தண்ணிக் குடத்ததோட ஆளுங்க நடந்து வருவாங்க. இந்த சடங்குக்குப் பேரு 'நீர்மாலை'. தண்ணி கொண்டாந்துட்டா, குளிப்பாட்டிட்டு
எடுத்துருவாங்க. இதுக்குள்ளே வாசப்பக்கம் ஒரு ஓரமாப் பச்சை ஓலை முடைஞ்சுப் பாடையும் ரெடியாயிரும்.

அக்ரஹாரத்துக்கு இந்த சடங்கெல்லாம் இல்லை. அங்கே சங்கு ஊதறதும் கிடையாது. சத்தமில்லாம 'சைலண்டா' சாவு எடுத்துருவாங்க!

வத்தலகுண்டு சுடுகாட்டுக்கு, நம்ம ஆஸ்பத்திரியைக் கடந்துதான் போணும்! ஆஸ்பத்திரிக்குப் பக்கமா ஒரு சின்னப் பாதை பிரியும். பொம்பிளைங்கெல்லாம் இதுவரைக்கும் வரலாம். அங்கே பாதை பிரியுற இடத்துலெதான், பாடையைக்
கீழே இறக்கிவச்சிட்டு, ஒரு புதுப்பானையிலே தண்ணிஎடுத்து, தோள்மேலெ வச்சிகிட்டு ஒருத்தரு சுத்திவர, ஒரு ஆளு வெட்டுக் கத்தியாலே அந்தப் பானையிலே ஓட்டை போடுவாரு. அந்தத் தண்ணி அப்படியே வெளியே பீச்சிகிட்டு விழும். இப்படியே மூணு சுத்துக்கு, மூணு ஓட்டை போடுவாங்க.அப்புறம் அந்தப் பானையை அங்கெயெ கீழே போட்டு
ஒடைச்சுடுவாங்க! இதுக்கப்புறம் ஆம்பளையாளுங்கதான் பொணத்தோட போவாங்க. சின்னப்பசங்களையெல்லாம் விரட்டி விட்டுடுவாங்க!

வழக்கமாவே சாவு எடுக்கறப்ப சாயந்தரமாயிரும்.அதுக்குள்ளெ நம்ம பள்ளிகூடமெல்லாம் விட்டுருக்கும்லெ. வீட்டுவாசல்லேயே
காதை வச்சிக்கிட்டு இருப்பேன். சத்தம் கேட்டதும் ஒரே ஓட்டமாப் போயி கலந்துகிட்டு, சின்னப்புள்ளீங்களத் தொரத்தறது வரைக்கும் இருந்துட்டுத்தான் திரும்பி வருவேன். நல்லாப் பாக்கணும்ங்கறதுக்காக கூட்டத்துக்குள்ளே புகுந்து முன்னாலெ போய் நின்னுக்குவேன்.

வீட்டுக்கு வந்ததும் இன்னொருக்கா சட்டையெல்லாம் மாத்தணும்! அது பரவாயில்லே. ரொம்பக் கஷ்டமா என்ன?

பள்ளிக்கூடம் இருக்கற நாள்லெதான் 'நீர்மாலை'யெல்லாம் வேடிக்கைப் பார்க்க முடியாது. ஆனா சத்தம் கேக்குமே. அப்பத் தெரிஞ்சுரும் யாரோ போயிட்டாங்கன்னு!

கொஞ்சம் இருங்க, சங்கு சத்தம் கேக்குது! என்னன்னு போய்ப் பாத்துட்டு வந்து விவரம் சொல்றேன்!

44 comments:

said...

எப்பிடிங்க டீச்சர் இப்பிடில்லாம்... எனக்கு அந்த ஏரியா பக்கம் போனாலே ஏனோ தெரியல பிடிக்காது... உங்களுக்கு வித்தியாசமான ரசனை டீச்சர்..//சங்கு ஊதிகிட்டே, கூட சேகண்டியும் அடிச்சுகிட்டே ஆளுங்க குடங்களை எடுத்துகிட்டு ஆத்துக்குப் போவாங்க.
திரும்பி வரப்போ, நாலுஆளுங்க ஒரு வெள்ளை வேஷ்டியை நனைச்சு, நாலு பக்கமும் நாலுமூலையை குடையாட்டம் பிடிச்சுகிட்டு வருவாங்க. அந்த நிழலுக்குள்ளே தண்ணிக் குடத்ததோட ஆளுங்க நடந்து வருவாங்க. இந்த சடங்குக்குப் பேரு 'நீர்மாலை'. தண்ணி கொண்டாந்துட்டா, குளிப்பாட்டிட்டு
எடுத்துருவாங்க. இதுக்குள்ளே வாசப்பக்கம் ஒரு ஓரமாப் பச்சை ஓலை முடைஞ்சுப் பாடையும் ரெடியாயிரும்.
//
அப்படியே என்னை எங்க ஊர்ப்பக்கம் கூட்டிகிட்டுப் போயிட்டீங்க...(நான் உங்க பக்கத்து ஊருதான்..உசிலை மாநகர்...)

said...

//செத்துக்கிடக்கறவங்களைவிட, நம்ம இண்டரெஸ்ட் அங்க ஒப்பாரி வச்சுகிட்டு இருக்கறவங்கதான்//

!!!!!!!!!!!!!!!!!!!!!

//"நல்லாத்தான் இருந்தாரு//

இந்த வசனத்தை எல்லோரும் சொல்லாம இருக்க மாட்டாங்க :-)

//சமுதாய அக்கறை கொஞ்சமும் கிடையாது. நாட்டுலே நடக்கறதை நாஞ்சொல்லாட்டா வேற யாரு சொல்லுவா?//

அது சரி

said...

வாங்க தமிழ்பறவை.

நீங்க நம்ம 'உசிலை' மாநகர் ஆண்குட்டனா? பேஷ் பேஷ்.

வித்தியாசமான ரசனையா?

'அதான் விளையும் பயிர் முளையிலேயே'ன்னு சான்றோர்கள் அறிவிச்சபடி:-))))

said...

வாங்க கிரி.

'பந்தலிலே பாவக்கா.....'

'போகையிலே பார்த்துக்கலாம்.....'
புரிஞ்சதா?:-))))

said...

வித்தியாசமான பதிவென்றாலும் படிக்கும்போது மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.

said...

டீச்சர்..

சாவை சின்னப் புள்ளையா இருந்து வேடிக்கை பார்க்கும்போது ரொம்ப, ரொம்ப வித்தியாசமாத்தான் இருக்கும்.. நானெல்லாம் எங்கூரு திண்டுக்கல்லு ஒய்.எம்.ஆர்.பட்டில பட்டைய கிளப்புற தப்பு சப்தத்துல கொண்டாடியிருக்கேன். அந்தத் தப்புச் சத்தத்தைக் கேட்டாலே ஒரு தனி சந்தோஷம்..

எட்ட நின்னு பார்க்கணும்.. யாரையும் தொடக்கூடாது என்று என் அம்மா படித்து படித்துச் சொல்லியனுப்புவார்.. ஆனாலும் நமக்கு பழக்க தோஷம்.. கூட்டத்துக்குள்ள போயி லேடீஸ் பக்கத்துல நின்னு எப்படி அழுகுறாங்கன்னு வேடிக்கை பார்க்கிறதுதான்..

எல்லாம் ஒரு காலம்.. அதே சாவு என் வீட்ல வந்து நானே அழுதப்புறம் அந்த வேடிக்கை மனசெல்லாம் எங்கயோ போயிருச்சு..

நினைவலைகளை உசுப்பி விட்டதுக்கு நன்றி..

said...

நல்லாயிருக்கு டீச்சர் எழுதுனது.

வயசான பாட்டிங்க எல்லாம் ஒண்ணா உக்காந்துட்டு, கண்ணுலயிருந்தும் மூக்குலயிருந்தும் தண்ணி வர, பாடுற ஒப்பாரி இருக்கு பாருங்க, எல்லாத்தையும் ஏங்கி ஏங்கி அழ வச்சிரும்.

எனக்கு லேசான்னாலே தாங்காது. என்னதான் கட்டுப்பாடா நின்னாலும் ஏங்கி ஏங்கி அழுகை வந்துரும். இதனாலயே ஊருல என்னைய அழுவுணி மாடன்னு சொல்லுவாவோ.

செத்த வீட்டு விசேசம் நடக்கிற 16 நாளும் தினமும் ராத்திரி 'தாயாரே..." அடிப்பாவோ. எல்லா பொம்பளைலுவோலும் நெஞ்சில அடிச்சுகிட்டு சுத்தி சுத்தி வருவாவோ.

இது முடிஞ்சு போகும் போது செத்த வீட்டுக்காரங்க, கொத்தமல்லி காபியும், மிக்சரும் கொடுத்தனுப்பணும். செத்த வீட்டுக்காரங்க அந்த 16 நாளும் உப்பில்லாத சாப்பாடைதான் சாப்பிடணும். இப்படிலாம் இருக்கு.

சாரி, பின்னுட்டம் கொஞ்சம் லென்த் ஆயிடுச்சு.

said...

ரசனையோ ரசனை. நல்ல ரசனைதான்.:0
எதையாவது வேண்டாம்னா உடனே ஓடிப் பார்க்கும் வழக்கம் நமக்கு உண்டானதுதானே!!
எங்க ஊரு ஏதோ ஊர்னு வச்சுக்குங்க.சரோஜா சவுண்டு சர்வீஸ் ஒண்ணே ஒண்ணு. ரெண்டு நிகழ்வு வந்துட்டால் திண்டாடிவிடுவாங்க.:)ஒண்ணு மணமகளே மருமகளே, வாராய் என் தோழி டைப்.
இன்னோண்ணு 'வீடு வரை உறவு ' டைப்:)இன்னோண்ணு மஞ்சள் நீராட்டு!!,காதணி வைபவம்.
நீங்க சோன அத்தனையும் இப்ப அப்படியே ''ஊர்வலமா''ப் போகுது:)

said...

சொன்னன்னு எடுத்துக்கவும். சோனவாப் போயிடுச்சி பின்னூட்டம்.

said...

அந்த துளசி சிறுமியின் க்யூரியாசிட்டி,பயமின்மை ரசிக்கத்தக்க உள்ளதுங்க!

நான் பார்த்தவரையில் பொதுவாக எல்லோருக்கும் வயதாக ஆகத்தான் சாவைப்ற்றி பயம் வருது

said...

"போனால் போகட்டும் போடா !
இந்தப்பூவியில் நிலையாய் வாழ்ந்ததும் யாரடா ?"

வத்தல் குண்டாவதும்,
குண்டன் வத்தலாவதும் மனித உடல் இயல்பு .
பிறந்தவன் இறப்பதும்
இறந்தவன் பிறப்பதும் மானுட அறிவு.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com

said...

ஒரு மரண சடங்குகளைக் கூட அழகா ஞாபகமா வச்சு இருக்கீங்க... இப்ப ஆற்றில் சாக்கடை தான் டீச்சர் ஓடுது...:)

said...

அப்படியே படம் பிடிச்சி காட்டியிருக்கீங்க..வித்தியாசமான ரசனை என்றhல[ம், உண்மை. ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை இந்த நேரத்தில் விமர்சனம் எழுதப்படும். பல்வேறு கருத்துக்கள் இறந்தவர்களின் வீட்டில் உலாவும். நீங்கள் குறிப்பிட்ட மாதிரி இறந்தவரின் வீட்டுக்கு சென்று திரும்பினால், துணியை நனைக்க வேண்டியது உண்மை தான். இந்த வழக்கம் இன்னும் மாறவில்லை. அது ஏன் என்று நீங்கள் விளக்கினால் நன்றhக இருக்கும்.

said...

எங்க ஊர்ல வயசானவங்க செத்துட்டா,ஆண்களுக்கு கொண்டாட்டம் தான். இலவசமா சரக்கு,சீட்டு வெளயாட்டுன்னு துக்கம் கழிப்பு நடக்கும்

said...

வாங்க வெண்பூ.

நல்லதும் கெட்டதும் கலந்ததுதானே வாழ்க்கை.

அனுபவங்கள் பலமாதிரி இருக்கேங்க.
எதையும் விடணுமுன்னு தோணலையே!!!

said...

வாங்க உண்மைத் தமிழன்.

இந்தத் தாரை தப்பட்டை எல்லாம் எப்ப இருந்து சாவுகளில் வர ஆரம்பிச்சது?

என்னுடைய ஆரம்பகால நினைவுகளில் இது இல்லவே இல்லை. ஒருவேளை அப்ப மதுவிலக்கு அமுலில் இருந்ததால் இருக்கலாம்.

said...

வாங்க ஆடுமாடு.

செத்தவீட்டுக்காரங்க 16 நாள் உப்பில்லாத சாப்பாடா?

அட! ஆச்சரியமா இருக்கே. எங்க அம்மா இறந்தப்ப இதெல்லாம் இல்லையே.....

அந்த 16 நாளும் இரவில் பலகாரம்தான். ஒரு பொழுதுதான் சாப்பாடு.
அது நினைவு இருக்கு.

ஒவ்வொரு சமூகத்தில் ஒவ்வொருவிதம் துக்கம் அனுஷ்டிக்கும் வழக்கம் இல்லை?

said...

வாங்க வல்லி.

வீட்டுலே எது கூடாதுன்னு சொல்றாங்களோ அங்கேதான் ஓடறதுக்கு எனக்குக் கால் பரபரன்னு இருக்கும்.

இப்படிப் பதிவராக மாறுவேன்னு தெரிஞ்சுருந்தா...இன்னும் நல்லாக் கவனிச்சுப் பார்த்திருப்பேன்:-))))

said...

வாங்க வருண்.

இப்பவும் (அதான் வயசாயிருச்சே) சாவு பயம் இல்லை. ஆனால்..... எப்படிச் சாகப்போறேன்னு பலசமயம் நினைப்பு வரும்.

யாருக்கும் கஷ்டம் இல்லாம, 'பட்'னு போகணும், எங்க அப்பாவைப்போல்!

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

எல்லாமே சக்கரச் சுழற்சிதான்!!!!

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் மண்ணில் இடமேது?

said...

வாங்க தமிழ் பிரியன்.

மஞ்சளாற்றில் சாக்கடையா? அடடா.....

ஆத்தோரம் இருக்கும் ஒரு வீட்டு அக்கா எனக்கு அப்ப தோஸ்து. அவுங்ககிட்டே பித்தளையில் செஞ்ச பட்டை ஒன்னு இருக்கும். அதைவச்சு ஊத்துத் தோண்டி தண்ணீர் எடுப்பாங்க. மாஞ்சுமாஞ்சுக் குழி தோண்டுவதெல்லாம் நாந்தான்.
வீட்டுலே ஒரு துரும்பு எடுத்துப்போட மாட்டேன்.

எத்தனைநாள் நேரம்காலம் இல்லாம, குளிச்சுக் குதி ஆட்டம் போட்டு ஆத்துலே அட்டகாசம் பண்ணிட்டு, வீட்டுலே வந்து செமெயா வாங்கி இருக்கேன்:-)

said...

வாங்க கடையம் ஆனந்த்.

கிருமி ஒட்டுதல் இருக்கலாமுன்னு குளிச்சுத் துணியை நனைக்கச் சொல்வாங்கன்னு நினைக்கிறேன்.

இங்கே ஃப்யூனரல் பார்லர்கள் அருமையா படு சுத்தமா இருக்கு. சவ அடக்கத்துக்குப் போறவங்களும் ரொம்ப நீட்டா உடைகளை அணிந்து போறோம்.

இதுதான் இறந்தவர்களுக்குக் கொடுக்கும் மரியாதையாம்.

ஆனாலும் நம்ம பழக்க தோஷத்தின்படி, துணிகளை நனைக்கதான் வேண்டி இருக்கு.
பழக்கத்தில் இருந்து விடுபடுவது கடினம்தான்.

said...

வாங்க குடுகுடுப்பை.

வயசானவுங்க போயிட்டா.... அது கல்யாணச் சாவுன்னு சொல்வாங்க. அழுது ஆர்ப்பாட்டம் செய்யாம இருக்கணுமுன்னு எங்க பாட்டி சொல்வாங்க.

said...

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
-மயக்கமா கலக்கமா பி.பி.எஸ் பாடல்

அன்பு துளசி மேடம், விளையும் பயிர் முளையிலேன்னு ரொம்ப சரியாதான் சொல்லியிருக்காங்க. நீங்க இவ்வளவு விஷயத்தையும் ஒண்ணு விடாமே ஞாபகம் வெச்சுருக்கீங்கன்னா, ஜீனியஸ் தான்!

said...

நம் ஊரைப்பற்றி படிக்கும் போது ஒரு சந்தோஷம். அது சுடுகாடாக இருந்தாலும்

said...

வயசானவுங்க போயிட்டா.... அது கல்யாணச் சாவுன்னு சொல்வாங்க. அழுது ஆர்ப்பாட்டம் செய்யாம இருக்கணுமுன்னு எங்க பாட்டி சொல்வாங்க.//
அதென்னவோ உண்மை.
//அட! ஆச்சரியமா இருக்கே. எங்க அம்மா இறந்தப்ப இதெல்லாம் இல்லையே//
துளசி.....எதை லைட்டா எடுத்துக்கறதுன்னு இல்லையா. வருத்தப் படாதீங்க.

said...

வாங்க தமாம் பாலா.

இவ்ளோ ஞாபகசக்தி படிக்கும் பாடத்தில் இருந்துருக்கலாம். ஹூம்.......:-)

said...

வாங்க முரளிகண்ணன்.

ஊர் கதைகள் இன்னும் கொஞ்சம் ஸ்டாக்கிலே இருக்கு:-)

said...

வாங்க வல்லி.

மாற்றங்கள் எப்படி வருதுன்றதையேக் கண்டுபிடிக்க முடியலைப்பா. மெள்ளமெள்ள மாறிருது!!!!

said...

ஐயா

வணக்கம்! மூத்த பதிவர்னா அது நீங்கதான். இன்னைக்குத்தான் உங்க வலைப்பூக்கு வந்தேன். நீயூசிலாந்து போய்ட்டு வந்தா மாதிரியாவே இருக்கு. அருமை! அருமை!!

said...

இந்த விஷயத்தில் ரசிக்கக்கூடியவைகள் இருந்தாலும் எழுதத் தயங்குவார்கள். தைரியமாக எழுதியிருக்கிறீர்கள்.

//எல்லாம் ஒரு காலம்.. அதே சாவு என் வீட்ல வந்து நானே அழுதப்புறம் அந்த வேடிக்கை மனசெல்லாம் எங்கயோ போயிருச்சு..
//

ப்ளஸ் டூவில் படித்த ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஓர் ஆண்டியை நினைவுக்கு கொண்டுவந்தீர்கள்!
http://www.tamilnation.org/literature/modernwriters/jeyakantan/13.htm

said...

வாங்க பழமைபேசி.

முதல்முறையா நம்மூட்டுப்பக்கம் வந்துருக்கீங்க போல!
நல்லா இருக்கீங்களா?

நியூஸி பத்தி அப்பப்ப எழுதறதுதான். வசிக்கும் ஊரை/நாட்டைப் புரிஞ்சுக்கணும் இல்லையா?

ஐயா வேணாமே. அம்மா, இல்லே அக்கா நல்லா இருக்காது? சரிப்படலைன்னா..... இருக்கவே இருக்கு 'டீச்சர்'.

வசதி எப்படி? :-)))))

said...

வாங்க நாகு.

ரொம்ப நாளா ஆளைக் காணோமே! நலமா?

உங்க சுட்டியை இனிமேத்தான் படிக்கணும். அப்புறமா வரேன்.

என்னன்னு சரியாச் சொல்லணுமுல்லே!!!!

said...

அக்ரஹாரத்துக்கு இந்த சடங்கெல்லாம் இல்லை. அங்கே சங்கு ஊதறதும் கிடையாது. சத்தமில்லாம 'சைலண்டா' சாவு எடுத்துருவாங்க!//

அது மட்டுமா இறந்துட்டார்னு தெரிஞ்சதுமே உடலை முற்றத்தில் வெறும் தரையில் கிடத்திவிடுவதையும் பார்த்திருக்கிறேன். மனிதன் இறந்தாலும் மனிதந்தான் என்பதை மறந்துபோகும் செயல் இது இல்லையா? கிறிஸ்துவத்தில் உடலை குளிப்பாட்டி அவருக்கு எந்த ஆடை மிகவும் பிடிக்குமோ அதை உடுத்தி பெட்டியில் அழகாக கிடத்தி வைத்து அடக்கத்திற்கு கொண்டு செல்லும் வரை இரவெல்லாம் விழித்திருந்து இறைவனிடம் அவருக்காக மன்றாடி...

இதுதான் இறந்த ஆத்மாவிற்கு நம்மால் செய்யக்கூடியது என்பது கிறிஸ்துவ மதத்தின் நம்பிக்கை..

said...

சவம் எடுக்கறவரைக்கும் ஓடியாடி வெளயாட விடமாட்டாங்க..கீழ விழுந்தா அப்படியே துணைக்குக்கூட்டிட்டுப் போய்டும்னு பயம்:-(

said...

அடடே.... பிழைச்சுப் போச்சுங்க.... நான் பொழச்சிப் போறேன்.....

நான் இன்னும் நிறைய, உங்க பக்கத்துல படிக்க வேண்டி இருக்கு..... நல்ல பல தகவல்கள்!

said...

துளசி மேடம்,

ஒப்பாரி என்கின்ற ஒப்பற்ற விஷயத்தை என்ன தான் கேலிக்கு இடமாக்கிக் கொண்டாலும் அதன் உண்மையான நோக்கம் பலருக்கும் தெரியாது என்றே நினைக்கிறேன். எல்லா சாவுவீடுகளிலும் ஓரிருவர் நிஜமான துக்கத்தோடு இருப்பார்கள். சூழல் கருதியோ கூச்சத்தினாலோ அழுகையை வெளிப்படுத்த முடியாதபடி இருப்பார்கள். அது அவர்களின் உடல்நலத்தைப் பாதிக்க வாய்ப்பு இருக்க்றது. அந்த அடைப்பினை உடைத்து அழ வைத்து மனதை லேசாக்கத் தக்க அற்புதமான மருந்து தான் ஒப்பாரி. ஒப்பாரி பாடும் பெண்கள் தாமறியாமல் செய்யும் மிகப்பெரிய சேவை அது.

வித்தியாசமான பதிவு.

said...

டீச்சர்,

நலமா? :))

இது ஒரு 'வந்துட்டேன் ஊர்லேர்ந்து' பின்னூட்டம்...:D :D

said...

'நேத்து தந்தியில நேரு மக செத்தயின்னு ஊஹ§ம் உஹ§ம்.....' - இது நாஞ் சின்னப்புள்ளயா இருக்கறப்ப, இந்திரகாந்தி செத்ததுக்கு படிப்பறிவில்லா எங்கூரு கௌவி பாடுன ஒப்பாரி பாட்டு. இப்பவும் நெஞ்சுல நிக்குது. எதுகை எப்படி வந்து விளுதுனு பாத்திகளா..அதுதான் கலை...கலை...மண்ணின் கலை.

said...

வாங்க டிபிஆர்.

இப்ப எல்லாம் கொஞ்சம் மாற்றங்கள் வந்துருக்கு. முக்கால்வாசி வீடுகளில் வெளியூரில் இருக்கும் நெருங்கிய உறவுக்காகக் காத்திருக்கவேண்டி இருக்கு பார்த்தீங்களா?

நம்மூரிலும் குளிர்ப்பெட்டியின் பார்வைக்கு வைக்குறதைப் பார்க்கலையா?

ஃப்யூனரல் டைரக்டர்ஸ் இப்பப் பரவலா ஒரு தொழில் ஆரம்பிக்கலாம். பலருக்குப் பயனாக இருக்கும்.

பழைய முறைகள் மாறிக்கிட்டே இருக்குன்னு நினைக்கிறேன்.

said...

வாங்க தங்ஸ்.

இது 'சனிக்கிழமைச் சாவுக்குத்தான்' இல்லையா?

துணை கேட்டுருமுன்னு ஒரு கோழியை அடிச்சுக் கூடவே கொண்டு போவாங்க.

said...

வாங்க ரத்னேஷ் சீனியர்.

பொம்பளைங்க துக்கம் வந்தாக் கண்ணீர்விட்டு அழுதுருவோம். ஆனால் கண்ணீர் விடக்கூடாது, ஆம்பளை அழுதா அசிங்கமுன்னு சொல்லி வளர்க்கப்பட்ட ஆம்பளை ஜென்மங்களுக்குத்தான் மன அழுத்தம் கூடிப்போக வாய்ப்பிருக்கு இல்லீங்களா?

ஒப்பாரி கேட்டுட்டு மனசுக்குள்ளேயாவது அழுவட்டுமுன்னுதான் பொம்பிளைங்க இதை ஒரு சேவையா செய்யறோமுன்னு வச்சுக்கலாமா?

said...

வாங்க புதுவண்டு.

போன காரியம் வெற்றிதானே?

said...

வாங்க பொய்யன்.

எதுகை மோனைக்கு நம்ம மொழியிலே கொறைவிருக்கா என்ன?

பழமொழிகளைப் பார்த்தீங்கன்னாவே போதுமே:-)