போன பகுதியைப் படிச்சுட்டு ,'நான் ஏன் நடுங்குனேன்?'னு என்னைக் கேட்கிறார். விடிஞ்சது போ(ங்க). பதிவுலே எழுதும்போது பார்த்துக்குங்கன்னு சொல்லிவச்சேன். காலையில் வேலைக்குப்போயிட்டு எட்டேமுக்கால் மணிக்கு வீட்டுக்குவந்து என்னையும் கூப்ட்டுக்கிட்டுப்போய் கோகியைக் கொண்டுவரணும். ஒரு வாரம் லீவு வேலைகள் எக்கச்சக்கமாக் குவிஞ்சு கிடக்குதாம். மறுநாள் இந்தியா போறாரே.
பேசாம ஏர்ப்போர்ட்டிலேயே இவரை விட்டுட்டு வந்துருக்கலாம். அனாவசியமா எதுக்கு ஒரு நாளுக்காக வீட்டுக்கு வரணும்?
"சுடுதண்ணி வரலை"
"அய்யோ...எவனாவது சிலிண்டரை அடிச்சுக்கிட்டுப் போயிட்டானோ?"
பழைய வீட்டுலே இப்படித்தான் இருந்த ரெண்டு சிலிண்டரில் ஒன்னை யாரோ திருடிக்கிட்டுப் போயிட்டாங்க. இங்கெல்லாம் கேஸ் சிலிண்டர்களை வீட்டுக்குள் வச்சுக்க முடியாது. வெளியே ஒரு இடத்தில் வச்சு, அங்கிருந்து பைப் லைன் வழியா வீட்டுக்குள்ளே அடுப்புக்கு வரணும். பாதுகாப்பு நடவடிக்கைகளில் இது ஒன்னு. எல்லாம் பெரிய அளவு உள்ளது. 45 கிலோ. ஆளுயரம் இருக்கும். அது காணாமப்போன மறுநாள் சிலிண்டர் வச்சு ஓட்டுன கார் ஒன்னு தீப்பிடிச்சு விபத்து ஆகிப்போச்சுன்னு டிவியிலே வேற சொன்னதும் .நம்மூட்டுலே வந்த திருடனோ'ன்னு பேஜாராப் போச்சு. அப்ப நாங்க இந்த வீட்டுக்கு மாறிவந்து ஒரு மாசம் ஆகி இருந்துச்சு. அந்த வீட்டை வாடகைக்குக் கொடுக்கலாமுன்னு நினைச்சுக்கிட்டு இருந்த நேரம்.
'நானும் அப்படித்தான் நினைச்சு வெளியே போய்ப் பார்த்துட்டு வந்தேன். ரெண்டும் இருக்கு'ன்னார். அதுக்கு ஒருமெயின் கண்ட்ரோல் ஸ்விட்ச் அடுக்களையில் இருக்கு. அது ஒருவேளை ஆஃப்லே இருக்கான்னு பார்த்தேன். எனக்கு நல்லா நினைவிருக்கு, ராத்திரி வந்தவுடன் அதை ஆன் செஞ்சது.
வெறும் 7 டிகிரியில் தண்ணி வருதுன்னு காட்டுது. எல்லாம் வாரண்டி முடிஞ்சதும்தான் தகராறு ஆரம்பிக்கும். இங்கே 'எல்லாத்துக்கும்' சுடுதண்ணியில்லேன்னா செத்தோம்....... மஞ்சள் புத்தகத்தைப் பார்த்து 24/7 சர்வீஸ் இருக்குன்னு சொன்ன நம்பருக்குத் தொலை பேசினால்..... நாளான்னிக்கு வர்றாங்களாம். இதுவா 24 மணிநேர சேவைன்னதுக்கு தொலைபேசிக்குத்தான் சேவையாம். (நல்லா இருக்கே கதை!)ஆள் வந்து பார்க்கணுமுன்னா நாள் செல்லுமாம். எங்கே பார்த்தாலும் கேஸ் குழப்பம் இருப்பதால் பிஸியா இருக்காங்களாம். ஹும்ம்ம்ம்....எல்லாருக்குமா வாயு(ய்வு)ப்பிடிப்பு!!!! போச்சுரா....
அடுப்பாவது எரியுதான்னு பார்த்தால் நல்லவேளை எரியுது. அதுலே ஒரு பாத்திரத்தில் தண்ணி சூடாக்கிப் பல்தேய்க்கக் கொடுத்தேன். இன்னும் நாலைஞ்சு இடங்களுக்குத் தொலை பேசினோம். ஒன்னும் சரியாகலை. என்ன கேஸ் கம்பெனிகளோ? தனியாள் சேவைன்னு ஒன்னு இருந்துச்சு. அங்கே கூப்புட்டால் அவர் 10 மணிக்கு வந்து பார்க்கிறேன்னு சொன்னார்.
பெரும்பாலும் வீடுகளில் மின்சார அடுப்புதான். எதாவது நடந்து பவர் போயிருச்சுன்னா, அன்னிக்குப் பட்டினிதான் கிடக்கணும். எப்படியும் பலர் வீடுகளில் பார்பிக்யூ செஞ்சுக்க அடுப்புக்கரி/ கேஸ்ன்னு வச்சுருப்பாங்க. சமாளிச்சுக்கலாம். நம்மூர் போல நேரங்காலம் இல்லாம பவர்கட்..... ஐயோ நினைச்சுப் பார்க்கவே முடியாது.
'கோகியைக் கொஞ்சம் லேட்டாத்தான் கூப்புட்டு வரணும். அங்கே ஃபோன் செஞ்சு லேட்டாகுமுன்னு சொல்லு'ன்னுட்டு இவர் வேலைக்கு ஓடிட்டார். எனக்கோ வேற கவலை. நாம்தான் ஒன்பதுக்கே வரேன்னு சொல்லிவச்சுருந்ததால் ஒருவேளை அவனுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் கொடுக்காம இருந்துட்டாங்கன்னா? அங்கே போனைப் போட்டா ஆன்ஸரிங் மெஷீன்கிட்டேதான் பேசணும். அவுங்க 12 மணிக்கு அப்புறம் கூப்புட்டு நம்பர் விட்டவங்களிடம் சேதி என்னன்னு கேப்பாங்க.
குழப்பத்தில் இருக்கும்போதே கேஸ் ரிப்பேர் செய்பவர் வந்துட்டார். புண்ணியவான். எட்டரைதான் ஆயிருந்துச்சு. எல்லாத்தையும் கழட்டி, ட்ராயிங்ஸ் எல்லாம் சரிபார்த்து என்ன தகராறுன்னு கண்டுபிடிச்சார். சுடுதண்ணிக்கு ஸ்விட்ச் போட்டா ஃபையராகும் இடத்தில் காத்துக்குமிழ் போல ஒரு அடைப்பு இருந்துச்சாம். சரி செஞ்சுட்டு, சரியா வேலை செய்யலேன்னா கூப்புடுங்கன்னு சொல்லிட்டுப் போனார். இப்படியெல்லாம் ஆகவே கூடாதாம். ஆனா......
கோபாலுக்கு ஏற்கெனவே இங்கே வேலை நடக்குது, கிளம்பி வாங்கன்னேன். வழக்கம்போல் அந்த நபர் போன அஞ்சாவது நிமிஷம் வந்தார், 'ரிப்பேர் செஞ்சாச்சா? சுடுதண்ணி வருதா?'ன்னு கேட்டுக்கிட்டே:-) கேட்டரி ஒரு 12 நிமிஷ ட்ரைவ் தூரம். கண்ட்ரி சைடுதான். 100 கிமீ வேகத்தில் போகும் ரோடு. நாங்கள் 11.11க்குப் போய்ச் சேர்ந்தோம். "ஏன் லேட்டு?"ன்னுக் கோபமாக் கூண்டில் உக்கார்ந்திருந்தான்.
வீடு போல சோஃபா எல்லாம் போட்டு, ஹீட்டர் கனகனன்னு எரிஞ்சுக்கிட்டு இருக்கு. டிவி அதுபாட்டுக்கு ஓடிக்கிட்டு இருக்கு. பசங்க நியூஸ் எல்லாம் கவனிச்சுப் பார்க்கறானுங்க:-) எல்லாருக்கும் அவுங்கவுங்க அறைச் சுவரில் அவுங்க இனத்தின் படங்கள். சாப்பாடு, மருந்துன்னு கொடுக்கவேண்டியவைகளின் விவரங்கள் அடங்குன அட்டை கதவில் மாட்டி இருக்கு. ரொம்பவே ஹோம்லி:-)
கம்பிவலை அடிச்ச வெளிப்புற ஷெட்டில் நிறைய செடிகள் வச்சுருக்கு. ஒரு மணி நேரம் ஒருத்தருக்குன்னு டர்ன் போட்டுப் போய்வரலாம். பண்ணை இடங்கள். ஆடுகளும் அங்கங்கே இளைப்பாறிக்கிட்டு இருக்கு. எனக்கே ஒரு கேட்டரி நடத்தலாமான்னு ஒரு ஆசை இருக்குதான். வேலை கொன்னுரும்.
ஆனா பண்ணை வாழ்க்கை வாழ்ந்து பார்க்கலாம். நாலு ஆட்டை வாங்கிவிட்டா புல்வெளியைக் கவனிச்சுக்காது?
ஜேனுக்கு வாங்கியச் சின்னப் பரிசுப்பொருளைக் கொடுத்துட்டு, கேட்டரியையும் படம் எடுத்துக்கிட்டு வீடுவந்தோம். நல்ல அன்பான லேடி. நைஸா.... டிசம்பர்லே எதாவது இடம் கிடைக்குமான்னு........
ரெண்டு கட்டிடம் இருக்கு. மொத்தம் 34 அறைகள்.
'எல்லாம் ஃபுல்லி புக்டு. ஒரு வருசத்துக்கு முன்னாலேயே ரிஸர்வேஷன் முடிஞ்சுருதாம். ஜனவரி மூணாவது வாரம் ஒரு இடம் காலி ஆகுதாம்.'
எதுக்கும் இருக்கட்டுமுன்னு அந்த இடத்தைப் புக் செஞ்சுட்டு வந்துருக்கோம். வெளியே வரும்போது நியூஸியின் ஒரே பாம்பு கல்லில் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தது:-)
மறுநாள் இவர் கிளம்பிப் போனதும், நாங்கள் எல்லாம் நார்மலுக்கு வந்தோம். ரெண்டு நாளில் 157$க்கு பில் வந்துச்சு. போயிட்டுப்போகுது. உடனே வந்தாரே. இல்லேன்னா நாறிப்போயிருப்போம்லெ!!!!
நல்லா ஊர்சுத்தி அனுபவிச்ச திருஷ்டி கழிஞ்சதுன்னு வச்சுக்கலாம்.
பி.கு: புதுமணத்தம்பதிகள் தேனிலவுக்கு வந்தப்ப வீட்டுக்கு வந்துட்டுப் போனாங்க. நல்லவேளையா அன்னிக்குத்தான் இவரும் ஊரில் இருந்து திரும்பியிருந்தார். கோமளவிலாஸ் ஜாங்கிரியில் புதுமணத்தம்பதிகள் பெயர் எழுதி இருந்துச்சு. தெரிஞ்சவரை, மசாலா தோசை, மோர்க்குழம்பு வடை, சட்னி, சிக்கன் கறின்னு சமைச்சு விருந்து வச்சாச்சு.இப்பெல்லாம் ரொம்பவும் மெனெக்கெடாம 'தடாலடித் தோசை'ன்னு ஒன்னு செஞ்சுக்கிட்டு இருக்கேன். அரைக்க வேணாம். கடுமையான பலவித பரிசோதனைகளில் வெற்றி பெற்ற ரெஸிபி. ஒரு மணிநேரத்தில் மாவு ரெடி:-) தென்னிந்திய நாக்குகள் வராதவரை, ஸப் சலேகா அவுர் சல் ஜாயேகா:-)
அந்தப்பொண்ணுக்கு (அக்கவுண்டன்ஸி படிப்பு) அஸைன்மெண்ட் அனுப்பணுமாம். சாப்பாட்டுக்குப்பிறகு நம்ம வீட்டுக் கணினியில் எழுதி அனுப்புச்சு. கோபால்தான் ட்யூஷன் மாஸ்டர். இவருக்கு, மகளுக்குப் படிப்புச் சொல்லிக்கொடுக்கணுமுன்னு ஒரே ஆசை. அப்பாகிட்டே அவள் படிச்சுட்டாலும்...... போகட்டும், ஆசை இப்படியாவது நிறைவேறுச்சே!
தேன் நிலவுக்கு வில்லனா வந்த அஸைன்மெண்ட்டைச் சபித்தபடி புது மாப்பிள்ளை உக்கார்ந்துருந்தது ஒரு வேடிக்கை.
இந்தக் காலத்துப் பொண்ணுங்க எல்லாம் படு ஸ்மார்ட். எல்லாம் தெளிவா இருக்காங்க. அதுவே பெரிய மகிழ்ச்சியும் சமுதாய மாற்றமும் கொண்டு வரும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்து முடிந்தது:-)
பயணம் செல்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது
ஆதலினால்....பயணம் செல்வீர்.
நன்றி. வணக்கம்.
Monday, September 01, 2008
Aftermath (ஃபிஜிப் பயணம் பகுதி 9)
Posted by துளசி கோபால் at 9/01/2008 09:51:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
மைக் டெஸ்டிங்....
1
2
3
டெஸ்டிங்.......... பாஸ்!
இன்னைக்கு வர வேண்டியவங்க யாரும் வரலை போல இருக்கு! ஆனா வர வேண்டியவங்க வந்து, தேனிலவைக் கொண்டாடிட்டு, சாப்பிட்டு விட்டு போனதுக்கு மகிழ்ச்சி!
என்னது சிலிண்டரையே தூக்கிட்டுப் போய்ட்டாங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அப்ப டிசம்பரில் அடுத்த டூர் போல இருக்கு...ம்ம்ம் நடக்கட்டும்.. பாவம் கோகி!
ஒரு மணி நேரத்தில் தோசை மாவு ரெடியா?... புளிக்க வேண்டாமா? தோசை எப்படி முறுகலா வரும்?... ஓஓஓஒ...இது உத்தர்வாலோங்கேலியே தானே! நல்லவேளை...:)
(அம்புட்டு தான் கும்மி)
ஜேனுடைய கேட்டரி நல்லா இருக்கே.. பூனைங்களுக்கு வீட்டு மனுசங்களோட இருக்கற உணர்வே தராங்க போல.. அங்கிருந்து டிவி வெளியே வேடிக்கை.. மேலே கீழே ஏற இறங்கன்னு .. சொகுசு வாழ்க்கை தான்.. ஆமா டிசம்பரில் எங்க ப்ளான்?
வாங்க தமிழ் பிரியன்.
இன்னிக்கு அமெரிக்காவுலே லாங் வீக் எண்ட். அதான் எல்லாம் வீட்டுலே இருக்காங்க:-)
தனியாக் கும்மி கொட்டவேண்டி ஆயிருச்சா? :-)))))
உத்தரோங்கேலியே..... பார்க்க ஷேப் இருந்தா ஆகாதா?
டில்லியில் சரவணபவன் வந்ததுலே இருந்துதான் அவுங்களுக்கு 'அஸ்லி தோசா' எப்படி இருக்குன்னு தெரிஞ்சிருக்கு:-)))
வாங்க கயலு.
முந்தி நம்ம கப்புவுக்கு வேற கேட்டரியிலே இடம் போடறதுண்டு. அங்கே இன்னும் நல்லா இருக்கும். தனித்தனி ரூம் ஹீட்டர்ஸ், ஒவ்வொரு ரூமுக்கும் அட்டாச்சுடு ரன் ன்னு இன்னும் சுதந்திரம் கூடுதல். ஹாலில் ஒரு ஃபோர் போஸ்டர் பெட் போட்டுவச்சுருப்பங்க.
இங்கே கோகி போகும் இடத்தில் உடல்நிலை சரியில்லாம இருப்பவர்களுக்கு வேளாவேளைக்கு மருந்துகொடுத்துப் பார்த்துக்குவாங்க. ஜீரியாட்ரிக் வார்டு போல:-)
இவன் சக்கரை ஆளாச்சே. அதான் ஜேன் கிட்டே விட்டுட்டுப்போறோம்.
டிசம்பர் இல்லைப்பா. ஜனவரி மூணாம் வாரம். அப்ப இருக்கும் நிலையில் எங்கே போக முடியுமோ அங்கேன்னு .....
வாழ்ந்தாலும் துளசி டீச்சர் வீட்டு பூனையா வாழணும்.
பின்னூட்டப்பெட்டி தெறக்க ரொம்ப நேரமாகுது. எல்லாருக்கும் அப்படியா இல்ல எனக்கு மட்டுமா????
துளசி பாம்பு படம் பார்த்ததும் ,எனக்கே நடுக்குமாகிடுசு,. உங்க வீட்டுக்கு வந்துடிச்சோன்னு:)
ஜிகே முகத்திலதான் எத்தனை எக்ஸ்ப்ரஷன்;)
அது என்ன மாவு சொல்லலியே.
வாழ்க ஜேன். நல்லா இருக்கட்டும். வாயில்லா ஜீவன்களை,நோயில்லாமப் பார்த்துக்கறாங்களே. கோடி புண்ணியம்.
//'தடாலடித் தோசை'ன்னு ஒன்னு செஞ்சுக்கிட்டு இருக்கேன். அரைக்க வேணாம். கடுமையான பலவித பரிசோதனைகளில் வெற்றி பெற்ற ரெஸிபி. ஒரு மணிநேரத்தில் மாவு ரெடி//
தெய்வமே! அடுத்த பதிவா அத போடுங்க. உங்களுக்கு புண்யமா போகும். :)))
பதிவை அழகா மங்களம் போட்டு முடிச்ருக்கீண்க்க. சூப்பர். :)
//'தடாலடித் தோசை'ன்னு ஒன்னு செஞ்சுக்கிட்டு இருக்கேன். அரைக்க வேணாம். கடுமையான பலவித பரிசோதனைகளில் வெற்றி பெற்ற ரெஸிபி. ஒரு மணிநேரத்தில் மாவு ரெடி//
தெய்வமே! அடுத்த பதிவா அத போடுங்க. உங்களுக்கு புண்யமா போகும். :)))
I am also waiting for that secret!
//மறுநாள் இவர் கிளம்பிப் போனதும், நாங்கள் எல்லாம் நார்மலுக்கு வந்தோம்.//
:))
வாங்க அம்பி & கவிதா,
ரெண்டு மூணு நாளில் போடறேன்.
மை.கொ. செஞ்சு ரொம்ப களைப்பா இருக்கு:-)
வாங்க கொத்ஸ்.
அப்பப்ப உண்மையை(யும்) சொல்லணுமுல்லெ? :-)))
வாங்க சின்ன அம்மிணி.
பூனையாப் பொறக்கணுமா?
உங்களுக்கும் ஒரு கூண்டு வாங்கிவச்சுடவா? :-)))))
வாங்க வல்லி.
இதுதாம்ப்பா நியூஸியில் உள்ள ஒரே பாம்பு. கட்டுவிரியந்தானே? சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதாம்ட்
எப்பவும் அந்தக் கல்லில்தான் குந்திக்கிட்டு இருக்கும். இறங்கவே இறங்காதாம்.
மழை வெய்யில் பனி ன்னு எதுவுமே அதுக்குப் பிரச்சனை இல்லை.
என்ன.... எப்பவாவது உடம்பு வெளுத்துப்போனால் அந்த இடத்துக்கு மட்டும் கருப்படிக்கணும்:-)
//157$க்கு பில் வந்துச்சு//
இது இந்தியால எவ்ளோ கொடுக்கறதுக்கு சமம்? அப்படியே மாத்தி பாத்தா சரி வராது இல்ல?
வாங்க திவா.
அதான் நீங்களே சொல்லிட்டீங்களே....
அந்தந்த ஊருக்கு அந்தந்தக் காசு:-))))
Post a Comment