Thursday, August 28, 2008

சர்வ மதமும் சம்மதம் ( மரத்தடி நினைவுகள்)

எங்க பக்கத்து வீட்டுலெ ஒரு அக்கா இருந்தாங்க. அவுங்க பேரு ஆரோக்கிய மேரி. அவுங்க வீட்டுலே ஒரு பெரிய கூண்டுலே இரண்டு ஆடுங்க இருக்கும்! ஆடுங்களுக்கு எதுக்கு கம்பி போட்ட கூண்டுன்னுதானே நினைக்கறீங்க? அதுங்க ரெண்டும் 'ஸ்பெஷல்' ஆடுங்க! அதுங்க ரெண்டும் 'கேளை ஆடு'ங்களாம்! கூண்டுன்னா சின்னது இல்லே. அதுங்க காலாற நடக்கறதுக்கும், துள்ளிக்
குதிக்கறதுக்கும் இடம் நிறைய இருந்துச்சு. அதுங்களுக்குத் தீனிக்காக ஏதோ ஒருவித தழைங்களைக் கொண்டுவந்து போட்டுருப்பாங்க. நான் அங்கே போறப்பெல்லாம், அந்தத் தழைங்களை எடுத்து, கம்பிக்கு நடுவாலே நீட்டுவேன்,. அதுங்க ரெண்டும் என்னப் பாத்தாப் போதும், 'மே மே"ன்னு கத்தும்!

அவுங்க வீட்டுலே கோழிங்ககூட நிறைய இருந்துச்சு. அதுங்க குஞ்சுங்களோட மேயறதைப் பாக்கறதுக்கு ஜோரா இருக்கும்.அந்த அக்கா ஒரு கிளிகூட வளத்தாங்க!

அந்த அக்காவோட வூட்டுக்காரரு, வேற எங்கோ மலைமேல வேலையாம். எப்பவாவது வருவார். அந்த ஆடுங்ககூட அவரு மலையிலே இருந்து கொண்டு வந்ததுதானாம்!

நம்ம அண்ணன் இருக்காரு பாருங்க, அவரு ரொம்ப நல்லா படம் வரைவாரு! அப்பல்லாம் நம்ம 'சந்திரா டாக்கீஸ்'லே புதுப்படம் வரும்போது, காலையிலே ஒரு மாட்டு வண்டிலே டும் டும்னு கொட்டு அடிச்சுகிட்டு
தெருவுலெ எல்லாருக்கும் சினிமா நோட்டீஸ் கொடுத்துகிட்டுப் போவாங்க. அங்கே வேலை செய்யற ஆளு நம்ம அண்ணனோட 'ஃப்ரெண்ட்' ஆயிட்டாரு. அந்த வண்டி நம்ம வீட்டுகிட்டே வர்றப்ப நானும் சத்தம் கேட்டுட்டு நோட்டீஸ் வாங்க ஓடுவேன். அப்போ அந்த '·ப்ரெண்ட்' கீழே இறங்கி எனக்கு நோட்டீஸ்
கொடுத்துட்டு, கூடவே பெரீய்ய்ய சினிமா போஸ்டர் ஒண்ணும் தருவாரு. அது அண்ணனுக்கு!

அண்ணன் அந்த போஸ்டர்லே இருக்கற படங்களைப் பாத்து, அப்படியே வரைஞ்சிருவாரு! நம்ம வீட்டுலெ அண்ணன் வரைஞ்ச படங்கள் ஏராளமா இருந்துச்சு.

படம் மாத்திரமில்லை, நல்லா பொம்மையும் செய்வாரு. புள்ளையார் சதுர்த்தி வரும்போது, ஆளுங்க புதுக்களிமண்ணாலெ புள்ளையார் சிலை செஞ்சு விப்பாங்க. அந்த ஈர மண்ணெ ஒரு அச்சு மாதிரி இருக்கற பலகையிலே அடைச்சு ஒரு தட்டு தட்டினா புள்ளையார் அப்படியே 'டபக்'ன்னு வெளியே
வந்துருவாரு! கூடவே எருக்கம் மாலையும் விப்பாங்க! ஆனா, ஆத்துப்பக்கம் நிறைய எருக்கஞ்செடி இருக்குல்லே,நாங்க அங்கேபோய் பறிச்சுகிட்டு வந்து, ஊசிநூலுலெ கோத்துருவோம்!

நம்ம வீட்டுலே மட்டும் சிலையா வாங்காம, நாலணாக்கு வெறும் களிமண்ணை வாங்குவோம். வெறும் மண்ணுன்றதாலே நிறைய தருவாங்க!

அதை அண்ணன் புள்ளையார் சிலையாச் செஞ்சுருவாரு. மூஞ்சூறுகூட அற்புதமா இருக்கும். எனக்கும் கொஞ்சம் பச்சை மண்ணு கிடைக்கும், சின்ன சின்ன சொப்பு செய்யறதுக்கு. இந்த சிலை மட்டுமில்லே, நம்ம வீட்டுலே நோம்பு கும்புடுவாங்களே, அதுக்கும் கலசத்துலே முகம் வரைஞ்சு, கண்ணு, மூக்கு, காது
எல்லாம் அரைச்ச மஞ்சளாலே அருமையா செஞ்சுடுவாரு!

வத்தலகுண்டுலே நிறைய ராவுத்தருங்க இருக்காங்க. ஒரு தடவை ஒரு பெரியவரு நம்ம ஆஸ்பத்திரிலே கொஞ்சநாள் தங்கியிருந்தாரு. அவருக்கு நம்மோட, ரொம்ப பிரியம் ஏற்பட்டுப் போச்சு! உடம்பு சுகமாகி
வீட்டுக்குப் போனப்புறமும், தினம் ஒரு நடை நம்மையெல்லாம் வந்து பாத்துட்டுத்தான் போவாரு.
தினமும் கொஞ்சதூரம் நடக்கணும்னு அம்மா சொல்லியிருந்தாங்களாம். இங்கே ராவுத்தருங்கெல்லாம் தமிழ்தான் பேசுவாங்க.அவுங்க வீட்டுலேயும் தமிழ்தான்.

அவரு ரொம்ப பக்திமான். தினமும் சாயந்திரம் மசூதிக்குப் போயிட்டு அப்படியே ஒரு ஏழு மணிவாக்குலெ நம்ம வீட்டுக்கு வந்து, வெளியே இருக்கற பெரிய திண்ணையிலே உக்காருவாரு.

அநேகமா அம்மா அந்த நேரத்துலெ ஆஸ்பத்திரி ஜோலியெல்லாம் முடிச்சுட்டு வீட்டுலெதான் இருப்பாங்க. நம்ம பக்கத்துவீட்டு ஆரோக்கியம் அக்காவும் எப்பவுமெ நம்ம வீட்டுலெதான் இருப்பாங்க.

நான் தான் நம்ம ராவுத்தர் தாத்தாவுக்கு, 'சங்கத்தலைவர்'னு பேரு வச்சிருந்தேன்! ராவுத்தர் தாத்தா வந்தவுடனே எல்லாரும் திண்ணைக்கு வந்துருவாங்க. நல்லா இருக்கீங்களாம்மான்னு அன்பாக் கேப்பாரு.
சின்னப்புள்ளென்னு நினைக்காம எங்கிட்டேயும் 'இன்னிக்கு என்ன பாடம் படிச்செம்மா? வீட்டுப்பாடம் எழுதியாச்சா?'ன்னு கேப்பாரு. பெரியவங்க எல்லாம் ஏதாவது விஷயம் பேசிகிட்டு இருப்பாங்க. 8 மணி
சங்கு ஊதுனவுடனே,'நல்லதும்மா, போயிட்டு வாரேன்'ன்னு கிளம்பிடுவாரு.

பேச்சு எதுலெயோ ஆரம்பிச்சு எங்கெயொ போகும். ஒருநா, எங்க தாத்தா எப்படி செத்தாருன்னு அம்மா சொன்னாங்க. கேக்கறதுக்கு கதை மாதிரி இருந்துச்சு. அக்காங்க எல்லாம் உள்ளெ எதாவது படிச்சுகிட்டோ,
ரேடியோவிலே பாட்டு கேட்டுகிட்டோ இருப்பாங்க. அண்ணன் அவர் பாடத்தைப் படிச்சுகிட்டு இருப்பார்.
நாந்தான்ஆஆஆன்ன்னு பேசறவுங்க வாயைப் பாத்துகிட்டு அவுங்களோட உக்காந்திருப்பேன்.

ஆரோக்கியம் அக்கா, ஞாயித்துக்கிழமைங்களிலே சர்ச்சுக்குப் போவாங்க. அவுங்க போற சர்ச்சுக்கு ரொம்ப தூரம் நடக்கணும். மெயின் ரோடுலே நேராப் போகணும், ஹைஸ்கூல் தாண்டியும் போய்கிட்டேஏஏஏஏஏ இருக்கணும்.
அந்த சர்ச்சுக்குப் பக்கத்துலெயே ஒரு பள்ளிகூடமும் இருக்கு. அது 'போர்டிங் ஸ்கூல்' ஆனா அங்கெயே இருக்கற பசங்ககூட, உள்ளூரு பசங்களும் படிக்கறாங்க. அது ஒரு 'கிறீஸ்துவர் பள்ளிகூடம்'. நம்ம சின்ன அக்கா அங்கெதான்
படிக்குது. அந்தச் சர்ச்சுக்கு ஆரோக்கியம் அக்காகூட நானும் போவேன். அக்கா ஏதாவது நல்ல மிட்டாய் வாங்கித் தரும். நாங்க ரெண்டுபேரும் அதத் தின்னுகிட்டே, பேசிகிட்டே போவோம்.எல்லா ஞாயித்துக்கிழமையும் இதே கதைதான்!

அங்கே அக்காகூட சில சமயம் நானும் உள்ளெ போய் சாமி கும்புடுவேன். சில நாளு அவுங்க சொல்ற 'பிரசங்கம்'ரொம்ப நீளமா இருக்கும். அப்பமட்டும் நானு மெதுவா அக்காகிட்ட சொல்லிட்டு வெளிலே போயிருவேன். அங்கெ என்னெமாதிரிப் பசங்க எல்லாம் விளையாடிக்கிட்டிருப்பாங்களா, நானும் அவுங்களோட சேந்துக்குவேன்.

அங்க ஜெபம் சொல்லி முடிக்கறப்ப, சர்ச்சு ஃபாதர், எல்லாரையும் வரிசையிலே வரவச்சு,என்னவோ சாப்புடறதுக்குத் தருவாரு.
அதுலேயும் சின்னப்பசங்களுக்குத் தரமாட்டாங்க! அக்காகிட்டே அது என்ன தின்னுச்சுன்னு கேட்டா, அது சொல்லுது அவுங்க சாமியோட சதையும் ரத்தமும்னு. நான் மொதத் தடவை அதைகேட்டப்ப, என்னாலே நிஜமாவே நம்பமுடியலே. நிஜமா, நிஜமான்னுக் கேட்டுத் துளைச்சிட்டேன். அக்கா அப்புறம் சிரிச்சுக்கிட்டே சொல்லுச்சு, அது ஒரு மாதிரி 'பிஸ்கட்'தானாம். அதைப் பல்லுலே படாம முழுங்கணுமாம். வாயிலெ போட்டதும் அப்படியெ கரைஞ்சு போயிடுமாம். ஒருவாய் குடிக்கறதுக்குத் தராங்களெ அது திராட்சை ரசமாம்.
நல்லா இருக்குமான்னு கேட்டா, அக்கா சிரிக்குது. அது சாமி பிரசாதம்னு சொல்லுது. எனக்குக்கூட ஆசையா இருக்கு அதைத் தின்னு
பாக்க. ஆனா தரமாட்டாங்களாம். கொஞ்சம் பெரிய பசங்களா ஆனபிறகு, அதுக்குன்னு புஸ்தகம் எல்லாம் படிச்சு, 'ஸ்பெஷல்' பூஜை
எல்லாம் நடத்துனபிறகுதான் அவுங்களுக்கும் அதைச் சாப்பிடத் தருவாங்களாம்.

அம்மாவுக்குத் தொண்டையிலே சின்னக் கட்டிபோல வந்தது. அவுங்களே ஏதோ மருந்து சாப்பிட்டாங்க. ஆனா அது போகறமாதிரி தெரியலெ!
நம்ம ராவுத்தர் தாத்தாதான் சொன்னாரு, 'வியாழக்கிழமை கொஞ்சம் சக்கரை கொண்டுபோய், மசூதிலெ கொடுத்தா பாத்தியா ஓதித் தருவாங்க.
அப்படியே ஒரு அச்சு வெல்லத்தை மசூதிலே இருக்கற குளத்துலெ போடுங்க'ன்னு.

நானும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு அச்சு வெல்லமும், ஒரு காகிதத்துலெ பொட்டலம் கட்டுன சக்கரையுமா மசூதிக்குப் போவேன்.
அச்சு வெல்லத்தைக் குளத்துலெ போடுவேன். அங்கெ நிறைய வயசான தாத்தாங்க உக்காந்திருப்பாங்க. அவுங்கள்ளே யாராவது அந்தச்
சக்கரைப் பொட்டலத்தை வாங்கி, ஏதோ மந்திரம் சொல்லி ஓதிட்டு, திரும்பத் தருவாங்க. அதை கொஞ்சம் கொஞ்சமாத் தின்னுகிட்டே
வீட்டுக்கு வந்துருவேன். பொட்டலத்துலே பாக்கி இருந்தா அக்காங்களுக்கு அதிர்ஷ்டம்னு நினைச்சுக்கணும்!

ரெண்டு மூணு மாசத்துலே அந்தக் 'கட்டி' காணாமப் போச்சுன்னு அம்மா சொல்லிகிட்டு இருந்தாங்க. ஆனாலும் சக்கரையை பாத்தியா
ஓதி வாங்கறது அந்த ஊர்லே நாங்க இருந்தவரைக்கும் தவறாம நடந்துச்சு.

வத்தலகுண்டுக்குப் பக்கத்துலே இன்னொரு கிராமம் இருக்கு. அதுதான் முதல்லே வத்தலகுண்டா இருந்துச்சாம். அப்புறம் ஊர் பெருசா
ஆகணும்னு இப்ப இருக்கற எடம் வத்தலகுண்டாயிடுச்சாம். அதனாலே அந்தக் கிராமம் பழைய வத்தலகுண்டாயிடுச்சாம்! அங்கே வீடுங்க
ரொம்ப இல்லே. ஆனா ஒரு பெரிய கோயில் இருக்கு, அது மாரியம்மன் கோயில். சித்திரை மாசம் திருவிழா வரும். அதுக்குன்னு ஏகப்பட்ட 'முஸ்தீபு' இருக்கு. இருங்க சொல்றேன்!

பங்குனி மாசம் தொடக்கத்துலே நல்லதா, மூணுகிளையா இருக்கற வேப்பக்கம்பை எடுத்து, அரைச்ச மஞ்சளைப் பூசி, குங்குமம் வச்சு
ஒரு மேடையிலெ நடுவிலெ நட்டு வச்சிருவாங்க. இது கோயிலுக்கு முன் வாசல்லே இருக்கும். தினமும், கோயிலுக்குப் பக்கத்துலெ
இருக்கற குளத்துலெ பொம்பிளங்க முங்கி எந்திருச்சு, கையோட கொண்டுவந்துருக்கற குடத்துலே தண்ணி மொண்டுகிட்டுப் போய்
அந்தக் கம்பத்துக்கு அபிஷேகம் செஞ்சுட்டு, சுத்திவந்து கும்பிட்டுகிட்டு, கோயிலுக்குள்ளெ போய் சாமி கும்பிடுவாங்க. இதுபோல ஒரு
மாசம், தினமும் நடக்கும்! ஆளுங்க, குடும்பக் கஷ்டங்களுக்காக, சாமிகிட்டே நேந்துகிட்டு, இப்படி ஒரு மாசம் பூரா தினமும் வந்து 'கொம்பு'க்கு தண்ணி ஊத்துவாங்க!

30 நாளு ஆனபிறகு, கோயில் திருவிழா நடக்கும். அது ஒரு வாரம். அதுலெ கடைசி மூணு நாளு, சாமி,, இப்ப இருக்கற வத்தலகுண்டுக்கு வந்துரும்! இங்கே மூணு நாளு திருவிழா அமர்க்களப்படும். தினமும் ராத்திரி ஒரோரு அலங்காரமா ஊர்கோலம் வரும். முத்துப் பல்லக்கு, பூப்பல்லக்குன்னு. ஜோடனை செய்யறதுக்கு ஆளுங்க வெளியூர்லெ இருந்து வருவாங்க! பாட்டுக் கச்சேரி,
பொய்க்காலு குதிரை, கரகாட்டம்னு நடக்கும். வளையல், பொம்மைங்க, விளையாட்டு சாமானுங்க, முட்டாய்ங்கன்னு எங்கெ பாத்தாலும்
கடைங்கதான்! குடை ராட்டினம், தொட்டி ராட்டினம்னு வேற சுத்திக்கிடே இருக்கும். இந்த சமயம், முழுப் பரீட்சையெல்லாம் முடிஞ்சு
பெரிய லீவு விட்டிருப்பாங்களா, எங்களுக்கெல்லாம் திருவிழா நடக்கற இடமே கதின்னு சுத்திக்கிட்டு இருப்போம்! நம்ம வத்தலகுண்டுலே
'ராஜாஜி மைதானம்'னு இருக்கு. அங்கெதான் இதுக்கு இடம்.

(அங்கே ஒரு சிங்கத்தின் வாயில் இருந்து நீர் விழும் தண்ணீர்த்தொட்டி இருக்கு. அதன் நினைவா இங்கே நம்ம வீட்டில் ஒன்னு வாங்கி வச்சுருக்கேன்)

ஒரு பெரிய சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் இருக்கே தவிர, மாரியம்மனுக்குன்னு கோயில் இல்லே. அதனாலே மைதானத்துலே
ஓரு ஓரமா ஓலைக்கொட்டாய் போட்டு அங்கெதான் சாமியை வச்சிருப்பாங்க! அந்த மூணு நாளும் 'ஜே ஜே'ன்னு எங்கெ பாத்தாலும்
ஜனங்க ! இங்கேயே ஒரு கோயில் கட்டணும்னு பேசிகிட்டு இருக்காங்களாம்.


அந்த ஊர்லே நமக்குத் தெரிஞ்சவுங்க ( நமக்குத்தான் எல்லாரையும் தெரியுமே!)குடும்பம் ஒண்ணு, சாமிக்கு நேர்த்திக்கடன்னு சொன்னாங்க!
அவுங்க வீட்டுலே பெரிய கூட்டுக் குடும்பம்.அவுங்களுக்குள்ளே என்ன சொந்தம்னு சொன்னாலும் புரியாது. அவுங்க வீட்டுக்குப் போனா,
நேரம் காலம் தெரியாம விளையாடலாம். அங்கே எல்லா வயசிலேயும் ஆளுங்க இருப்பங்க. ஒரு நாலஞ்சு இடத்துலெ சமையல் கட்டுங்களா
இருக்கும்! வேற வேற சமையல் செஞ்சுகிட்டு இருப்பாங்க! அந்த வீட்டுலெ ஒரு பெரியம்மா இருக்காங்க. அவுங்கதான் எல்லாருக்கும் 'க்ளாஸ் லீடர்'மாதிரி!

'எல்லாப் புள்ளைங்களையும் இழுத்துக்கிட்டு, காலேல 5 மணிக்கெல்லாம் புறப்பட்டுக் கோயிலுக்குப் போகணும்'னு அம்மாகிட்டே சொல்லிக்கிட்டு
இருந்ததை நான் கேட்டேன்! என் கண்ணுல இருந்த ஆசையைப் புரிஞ்சுகிட்டு, பெரியம்மா( எல்லாப் பசங்களும் அவுங்களை அப்படிக்
கூப்புடறதுனாலே நாங்களும் அப்படித்தான் கூப்பிடுவோம்!)சொன்னாங்க,

"பாப்பாவையும்( நாந்தான் அது)அனுப்பறேங்களா?"

" அவ்வளவு சீக்கிரம் எழுந்திரிக்க மாட்டாளே!"

" நான் எந்திருச்சுருவேன்" இது நானு.

" நாங்க எல்லாரும் கிளம்பி இங்க வர்றதுக்கு ஒரு அஞ்சரை ஆயிரும். எப்படியும் இந்தப் பக்கம்தான், உங்க வீட்டைத் தாண்டிப் போகணும்.
நாங்க வந்து கூப்புட்டுக்கிட்டுப் போறோம்"

" அவ்வளவு தூரம் நடப்பாளான்னு தெரியலையே"

"நடப்பேன் நடப்பேன்" இது நானு.

" திரும்பி வந்து ஸ்கூலுக்குப் போகணுமே"

" இந்தப் பசங்கெல்லாம்கூட ஸ்கூலுக்குப் போகணும்தான். இன்னும் லீவு வுடலையே"

" எத்தனை மணிக்குத் திரும்புவீங்க?"

" என்ன, ஒரு எட்டுக்கு முன்னாலெ வந்துருவொம்"

அம்மா ஒருவழியா சம்மதிச்சுட்டாங்க! மறுநாள் காலையிலே யாரோ என்னப்போட்டு உலுக்கு உலுக்குன்னு உலுக்குறாங்க!

கண்ணைத் திறந்தா, சின்னக்கா கையிலே ஒரு தண்ணிக் குடத்தோட நிக்குது! 'சீக்கிரம் கிளம்புடீ, எவ்ளோ நேரமா எழுப்புறது?
அவுங்கெல்லாம் வந்து வாசல்லே நிக்கறாங்க.எந்திரிச்சி ஓடு'ங்குது!

அப்பத்தான் ஞாபகம் வருது, நான் கம்பத்துக்கு தண்ணி ஊத்தப்போணும்ங்கறது! அரக்கப் பரக்க எந்திரிச்சு, அசட்டுச் சிரிப்போட
வெளியே போனேன்.'கொஞ்சம் இருங்க. பல்லு விளக்கிட்டு வந்துருவா'ன்னு அக்கா சொல்லுது.

'அதெல்லாம் போற வழிலே பாத்துக்கலாம். இதுங்கெல்லாம் கூட அப்படியேதான் வருதுங்க'ன்னு பெரியம்மா சொன்னாங்க.

நானு தண்ணிக்குடத்தை எடுத்துகிட்டு, (குடம் என்ன குடம், அது குடம் மாதிரி இருக்கற சொம்புதான்!)கிளம்பிட்டேன்.

போற வழிலே, புளியங்கா நிறைய இருக்கு. எடுக்கலாம்னு பாத்தா, 'இப்ப வேணாம். இன்னும் நீங்க யாரும் பல்லு விளக்கல்லே.
வரும்போது எடுக்கலாம்'னு பெரியம்மா சொல்லிட்டாங்க!

ரோட்டுலே நடமாட்டம் அவ்வளவா இல்லே. இவ்வளவு காலேலெ அப்படித்தான் இருக்கும்னு பெரியம்மா சொன்னாங்க. ரோடெல்லாம் ஆடிகிட்டே போனோம். ரொம்ப நேரம் போனமா, அப்ப தூரத்துலே மாரியம்மன் கோயில் கோபுரம் தெரிஞ்சது!

மெயின் ரோட்டுலே இருந்து பிரியுற செம்மண் பாதையிலே இறங்கி ஓடுனோம். குளம் வந்துருச்சு. குளத்துக்குப் பக்கம் இருக்கற வேப்ப மரத்துக்கிளையை உடைச்சு,சின்னக் குச்சிங்களா எடுத்து எங்களுக்குத் தந்தாங்க பெரியம்மா. எதுக்குத் தெரியுமா?

பல்லு விளக்க! அதைக் கடிச்சு,அப்படியே மெல்லணும்.கசப்பா இருக்குன்னு மென்னு மென்னு துப்பிகிட்டு இருந்தோம். அது அப்படியே
ப்ரஷ் ஆயிருச்சு. அதைவச்சு பல்லை விளக்கிட்டு, குளத்துலே முங்கி எந்திரிச்சு,'குடத்துலே'தண்ணி ரொப்பிகிட்டு, கோயிலுக்கு
முன்னாலெ நட்டு வச்சிருக்கற கம்பத்துக்குத் தண்ணி ஊத்திட்டு, உள்ளெ போய் சாமியைக் கும்பிட்டோம். ஈரப்பாவாடை, கவுனு அப்படியே உடம்புலே ஒட்டிகிச்சு. நடக்கவே முடியலே! எங்களை மாதிரி நிறையப் பேரு ஈரமா வந்து சாமி கும்புடறாங்க.கோயிலு தரையெல்லாம் 'நச நச'ன்னு ஈரமா இருக்கு. எங்கே வழுக்கிறுமோன்னு, பயந்து பயந்து காலை தூக்கி வச்சு நடக்கறோம்.
சாமியைக் கும்புட்டு, துண்ணூரு வாங்கிக்கிட்டு வந்தவேலை முடிஞ்சு போச்சுன்னு கிளம்பிட்டோம்.

வர்ற வழியெல்லாம் ஒரே ஓட்டம்தான். வெய்யிலு வர ஆரம்பிச்சிருச்சு. பாவாடை சட்டையெல்லாம் அப்படியே காஞ்சுபோச்சு.
மரம் மரமாப் போயி புளியங்கா பொறுக்கிக்கிட்டே வீடு வந்துட்டோம். மறுநாளு, என்னைத் தயாரா இருக்கச் சொல்லிட்டு பெரியம்மாவும், மத்த பசங்களும் போயிட்டாங்க.

அக்காகிட்டே வழக்கம்போல, இதுவரைக்கும் நடந்ததெல்லாம் சொன்னேன். அக்கா சிரிச்சுகிட்டே எல்லாத்தையும் கேட்டுட்டு,
'போய் நல்லா பல்லு விளக்கி குளிச்சிட்டு வந்து சாப்புடு.ஸ்கூலுக்கு நேரமாயிருச்சு'ன்னு சொன்னாங்க.

எங்கிட்டே ஒரு பழக்கம் என்னனா, பள்ளிக்கூடத்துலே இருந்து வந்தாலும் சரி,வேற எங்கேயும் போயிட்டுவந்தாலும் சரி,
வீட்டுக்குள்ளே நுழைஞ்சவுடனே, நடந்தது எல்லாத்தையும் ஒப்பிச்சாகணும். அவசரமா பாத்ரூம் போகணும்னு இருந்தாலும்,
கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டு, விஷயத்தைச் சொல்லிட்டுதான் பாத்ரூமுக்கு ஓடுவேன்.பெரியக்கா சொல்லும்,'கிருஷ்ணர் வேஷம்
போடாதே! பாத்ரூமுக்கு போயிட்டு வந்து சொல்லு'ன்னு. ம்ம்ம்ஹூம். நான் அதையெல்லாம் கேக்கற ஆளா?

மறுநாளு, அம்மாவே காலெல எழுப்பி என்னை 'ரெடி'பண்ணிட்டாங்க. அன்னைக்குத் திரும்பிவரப்போ, சும்மாப் போன மாட்டுவண்டிலெ எங்களை ஏத்திக்கிட்டாங்க! ஜாலியா இருந்துச்சு. அப்புறம், நாங்களாவே மாட்டுவண்டி 'லி·ப்ட்' கிடைக்குமான்னு பாத்துகிட்டே இருப்போம். சிலநாள் கிடைக்கும். சிலநாளு ஒண்ணுமே அந்த நேரத்துலே வராது!

இப்படியே ஒரு மாசமும் போயிருச்சு.நடுவுலே பெரிய பரிட்சை முடிஞ்சு லீவும் வுட்டுட்டாங்களா, ஒரே ஆட்டம்தான்!

அப்புறம் திருவிழா ஆரம்பிச்சு, சாமி இங்கே வந்துச்சு. தினம் நல்லா சுத்திகிட்டு இருந்தோம். கைலேயும் காசு நடமாட்டம் நிறைய இருந்துச்சு. திருவிழாக் கடையிலே ஒரு பச்சைக்கல் வச்ச அழகான லோலாக்கு ரெண்டணாவுக்கு கிடைச்சது. அக்காவுக்கு 'சர்ப்ரைஸ்' தரலாம்னு, அதைவாங்கி, வீட்டுக்கு வெளியே இருக்கற திண்ணையிலே உக்காந்து, நான் ஏற்கனவே போட்டுருந்தத்
தங்க லோலாக்கை அவுத்துட்டு,பச்சைக்கல் லோலாக்கைப் போட்டுகிட்டு வீட்டுக்குள்ளெ போய் அக்காவுக்குக் காமிச்சேன்.

அக்கா, ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிட்டு, 'நீ போட்டுருந்த தங்கலோலாக்கு எங்கே?'ன்னு கேட்டுச்சா, அப்பத்தான்
ஞாபகம் வருது, நான் அதை அங்கே திண்ணையிலேயே வச்சுட்டு வந்துட்டேன்னு. ஓடிப் போய் பாக்கறேன், எனக்கே
'சர்ப்ரைஸ்!' அது அங்கே இல்லை! 'திருவிழாக்கூட்டம்தான் ஊரெல்லாம் மேயுதே, யாரு கையிலே கிடைச்சதோ'ன்னு அப்புறம் எல்லாரும் வீட்டுலே கத்திக்கிட்டே இருந்தாங்க! எனக்கு நல்லா 'டோஸ்'கிடைச்சது!


நன்றி: மரத்தடி 2004

20 comments:

said...

மலரும் நினவுகளை அசைபோட்டு எழுதுவதே தனி சுகம் தான்.

ஒரு பதிவு போடுவதற்கே 3 / 4 மணி நேரம் ஆகும் அல்லவா

வத்தலக்குண்டு கிராமத்தினையே கலக்கி இருக்கீங்க போல

வேப்பங்குச்சி, புளியங்கா, தோட்டத் தொலக்கிறது, சங்கத்தலைவர், பெரியம்மா, நானு நானு, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நல்லா இருக்கு

said...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.இப்படியெல்லாம் இருந்தோமா:)
துளசி ஆனாலும் இத்தனை அநியாயத்துக்கு அழகா எழுதக் கூடாது.
காதோரம் லோலாக்குப் போட்டாத பொண்ணோ,கம்மலைத் தொலைக்காத பொண்ணோ இருக்கவே முடியாதோ. அந்த ராவுத்தரைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு.

மேரியக்காவுக்குக் கலயாணமாகி அவங்க பிள்ளைங்க எல்லாம் நல்லா சர்ச்சுக்கூப் போயிட்டு இருப்பாங்க.

எனக்குக் கப்பலூர் பெருமாள் கோவிலுக்கு நடந்தது ஞாபகம் வருகிறது.:)

said...

அந்த லோலாக்கை இப்போ உங்க அவரை வாங்கித் தர வெச்சு இருப்பீங்களே. அந்தக் கதை எப்போ வருது? :)

said...

இன்னைக்கு டீச்சர் எழுதுவதை நாங்களெல்லாம் வாயை ஆஆஆஆஆஆன்னு பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கிறோம். திண்டுக்கல் ரோட்டில் இன்னும் அந்த சர்ச், பள்ளிக் கூடம் (பெண்களுக்கு உயர்நிலைப் பள்ளி வரை, ஆண்களுக்கு 5 வரை), அப்புறம் காட்டாஸ்பத்திரி எனப்படும் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனை இருக்கு... :)

said...

டீச்சர், அப்ப ராஜாஜி மைதானம் என்பது பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்த்தாற் போல் இருக்கும் ரோட்டில் அக்ரஹாரத்துக்கு போகும் வழியில்(?) உள்ள மைதானம் தான்... ஊருக்கு போகும் போது பெருசுகளிடம் விசாரிக்கிறேன்..அப்படியே டீச்சரோட டாக்டர் அம்மாவைப் பற்றியும்.. :)

said...

வாங்க சீனா.

பழசு மனசுலே வந்துட்டா...... அவ்ளோதான் எங்கெங்கியோ போயிட்டு வந்துருவேன். நிகழ்காலத்துக்கு வந்தவுடன்......
காலெல்லாம் ஒரே வலி:-))))

said...

வாங்க வல்லி.

சரியாச் சொன்னீங்க. தொலைஞ்ச லோலாக்கு, கம்மல் எல்லாம் கணக்குலே எக்கச்சக்கமா இருக்குமில்லே?

எங்கம்மாவோட கம்மலை எனக்குக் கொடுத்தாங்க. அதையும் தொலைச்சுட்டேன். ஹாஸ்டலில் யாரோ எடுத்துட்டாங்கப்பா......


ஆரோக்கியம் அக்காவுக்குப் புள்ளைங்க அப்ப இல்லே. அதான் எப்பவும் நம்மூட்டுலே இருக்கும். அக்காகிட்டே ஒரு பழக்கம் விசித்திரமா இருக்கும். ஒரு மணிக்கொருதடவை கொஞ்சமா ரெண்டு உருண்டை சோறு சாப்புட்டுக்குவாங்க. நம்மூட்டுக்கு வந்தாலும் குழந்தைக்குக் கொடுக்குறமாதிரி சின்னக் கிண்ணத்துலே பெரியக்கா சோறுபோட்டு ஒரு கரண்டி குழம்பு ஊத்திக் கொடுக்கும். இந்தப் பழக்கம் எங்க அக்காவுக்குப் பின்னாளில் ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சு. அதை அக்காவின் நினைவுகளில் பார்க்கலாம்:-)

said...

வாங்க கொத்ஸ்.

இந்த வயசுலே காதோரம் லோலாக்கு கதை சொல்லுதாமா?

மகளுக்குன்னு ஏராளமா வாங்குனேன். இப்பெல்லாம் அதுக்குப் பெயர் 'ட்ராப்ஸ்'(ஞாபகம் வச்சுக்குங்க, பொண் குழந்தை இருக்கே)

என் பொண்ணு குழந்தையா இருக்கும்போது அதுக்கு 'ஆட்டுக்கம்மல்'னு சொல்வா:-))))

said...

வாங்க தமிழ் பிரியன்.

நானும் ரெண்டுவருசம் முன்னே வத்தலகுண்டு போனப்ப இந்த சர்ச்சுக்கு முன்னாலே ரோட்டுலே ஒரு நினைவுச்சின்னம் (குட்டியா ஃபென்ஸ் போட்டு தூணாட்டம் நிக்குது)பார்த்தேன்.

ராஜாஜி மைதானம் கண்டுபிடிக்க முடியலை.

அப்புறம் நம்ம பதிவர் முரளிகண்ணந்தான்,
அவுங்க அப்பாகிட்டே கேட்டு விவரம் சொன்னார். இப்ப அதுக்குப் பெயர் பேரூராட்சித் திடல்!!!!

said...

வத்தி வத்தியா ஏத்தி அந்தப் புகையில எங்களை புத்தி மயங்க வச்சுடுறீங்க. தெருவில சினிமா கொட்டு வருகையிலே நோட்டிஸுக்கு ஓடியிருக்கோம். களிமண்ணுல பிள்ளையார் பிள்ளையாரா செஞ்சு தட்டட்டியில் காய வச்சிருக்கோம். நர்சரியில வீட்டிலிருந்து வந்த லன்சை ஆடு கூட ஷேர் பண்ணியிருக்கேன்:)! அப்போ தங்கக் கடுக்கனை சாண்ட் பிட் மாதிரியான ஒரு இடத்தில் கழட்டி விளையாடி தொலைத்திருக்கிறேன்....:))!
நல்ல நினைவுகள் வெல்ல நினைவுகள்.

தலைப்பு கூட சூப்பர். எனது அடுத்த பிட் பதிவுக்கு ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனக் கொடுக்கணும்னு இருந்தேன். இப்போ "எம்மதமும் சம்மதம்"தான்! தேங்க்யூ மேடம்:)!

said...

//'சர்ப்ரைஸ்!' அது அங்கே இல்லை! //
உங்க பதிவில இப்படி ஒரு பன்ச் இல்லாமப் போனாதான் சர்ப்ரைஸ். அது இருக்கணும்:)!

said...

டீச்சர்னா டீச்சர்தான். பழைய நினைவுகளை அழகாக அசைபோட்டிருக்கீங்க. அந்தக்காலத்துல ஆரோக்கியமேரி, ராவுத்தர், நீங்கன்னு எவ்வளவு ஒத்துமையா இருந்திருக்கீங்க..கேட்கவே ஆசையாயிருக்கு டீச்சர்.

said...

அப்புறம் டீச்சர்..ஒரு சின்ன சந்தேகம்..
அந்த சிங்க முக நீர் வடியுற இடத்துல எதுக்கு ஒரு சீடி வச்சிருக்கீங்க ?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

இனித் தலைப்புகளைப் பதிவு செஞ்சு ஒரு காப்புரிமை எடுத்துக்கணும்.

வேணுமுன்னா சொல்லுங்க. கொசுவத்திகள், தலைப்புகள் எல்லாம் நம்மகிட்டே சகாயவிலையில் கிடைக்கும்:-)

பதிவுகளைவிடத் தலைப்புகள்தான் நல்லா வருதுன்னு கோபால் சொல்லிக்கிட்டு இருக்கார்:-))))

said...

வாங்க ரிஷான்.

அந்தக் காலம் என்ன? இப்பவும்தான் நம்ம பதிவுலகத்தில் பாருங்க எல்லாம் தாயா புள்ளையாத்தானே இருக்கோம்?

சிடி?

சிங்கத்துக்கு மட்டும் போரடிக்காதா? அப்பப்பப் பாட்டு கேட்டுக்கும்.

இல்லேன்னா அந்த சிடியில் கர்ஜனையைப் பதிவு செஞ்சு கொடுத்துருக்கேன். யாராவது அந்தப் பக்கம் வந்தால் மிரட்டலா குரல் கொடுக்கட்டுமேன்னு.

ச்சும்மா.....:-)

வேலை செய்யாத சி.டி. அங்கே வரும் வெய்யில் அதன் மறுபக்கம் படும்போது வானவில் ஒளி. அதுக்காகத்தான்.

said...

உங்களுக்கு ஒரு தலைப்பு குடுத்திருக்கோம்.

படிச்சுப்புட்டு எழுதுங்கம்மா!

http://surekaa.blogspot.com/2008/08/blog-post_29.html

நீங்க எழுதினா கலக்கலா இருக்கும்கிறதால அப்படி!

said...

அமர்-அக்பர்-ஆண்டனி போல
டீச்சர் அம்மா-ராவுத்தர்-மேரி
ஒரு சூப்பர் காம்பினேஷன்னு
நினைக்கிறேன் டீச்சர்,எங்கள்

வீட்டிலே கூட ஒரு கண்ணாடி
கல்லு தோடு கொடுத்து,அசல்
தங்க நகை தொலைஞ்ச கதை
உண்டு,நகை,குடை,மொபைல்

இதெல்லாம் தொலைக்காதவங்க
மனுஷ பிறவியே இல்லைன்னு
நினைக்கிறேன் நான். ரொம்பவே
மெடிகுலஸ்-ஆ எழுதி,வத்தி

பேனிஷ்,ஓடோமாஸ் எல்லாம்
வெச்சு ப்ராக்டிகலா சொல்லி
குடுக்கறீங்க,வலைபதிவுகள்
எழுதுவது எப்படின்னு தான் :))

said...

///எம்.ரிஷான் ஷெரீப் said...
அப்புறம் டீச்சர்..ஒரு சின்ன சந்தேகம்..
அந்த சிங்க முக நீர் வடியுற இடத்துல எதுக்கு ஒரு சீடி வச்சிருக்கீங்க ?////

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
மயிலுக்கு போர்வை தந்தான் பேகன்
சிங்கத்துக்கு சீடி கொடுத்தார் துள..சி
என்று நாளை வரலாறு கூற வேண்டாமா நண்பரே?! :-))

said...

வாங்க சுரேகா.

எழுதுனால் ஆச்சு. கொஞ்சம் டயம் வேணும். அம்புட்டுதான்:-)

said...

வாங்க தமாம் பாலா.

பதிவர்களுக்கு ஹோல்ஸேல் விலையில் கிடைப்பது துளசி மார்க் கொசுவத்திகள். வாங்கத் தவறாதீர்கள்:-)

//சிங்கத்துக்கு சீடி கொடுத்தார் துள..சி//

இது நல்லா இருக்கு. நாளை சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொ(ரி)றிச்சுருவாங்கதானே? :-)