Thursday, August 14, 2008

கல்யாண வீட்டு விஷயங்கள்: ஏழாம் நாள்.

குளியலறை ட்ராஃபிக் வழக்கத்தைவிட படு பிஸியாக் கிடக்கு. பாதி பஸ் இங்கேயே தங்கிருச்சோ........ கோபால் வேற காலையில் எழுந்து படுக்கை அறைக் கதவைத் திறக்கறதும் மூடறதும் படுக்கையில் மறுபடி வந்து விழறதும். அஞ்சாறு நிமிசத்தில் திரும்ப எழுந்து போய்க் கதவைத் திறக்கறதும்னு ரகளையா இருக்கு. பாத்ரூம் காலியா இருக்கான்னு பார்க்கறாராம்.

என்னன்னு போய்ப் பார்த்தேன். குழந்தைகள் உட்பட எல்லாரும் குளிச்சு ரெடி ஆகிக்கிட்டு இருக்காங்க. லேடீஸ் எல்லாம் எங்கே? இப்பத்தான் சமையல் வேலைகளை முடிச்சுக்கிட்டு வந்தாங்களாம். ட்ரெஸ் சேஞ்ச் நடக்குதாம். ஆண்கள் இப்பப் பாத்ரூமைப் பிடிச்சுக்கிட்டாங்க. மாடியிலும் ரெண்டு குளியலறை இருக்கு. எல்லாமே ஃபுல்.

'ராத்திரி எத்தனை மணிக்கு கல்யாண மண்டபத்தில் இருந்து கிளம்புனீங்க?' பன்னெண்டு மணி ஆயிருச்சாம். பொண்ணும் வந்துருக்குமே. மாமியார் வீட்டுலே இருக்கா? இல்லை. இங்கேதான் மாடியில் இருக்கு. அலங்காரம் நடக்குது. பத்தரைக்குப் பூஜை இருக்கு.

தடாபுடான்னு குளிச்சு ரெடியானேன். இன்னிக்குத் திங்கக்கிழமை. வேலைநாள். உள்ளூர் ஆட்கள் மட்டும் அரைநாள் வேலைக்குப் போயிருக்காங்களாம். பிள்ளைங்க யாரும் பள்ளிக்கூடம் போகலை. கோபாலும் கைத் தொலைபேசியில் மெயில் பார்க்கறதும், டொக்டொக்குன்னு பதில் அனுப்பறதுமா இருக்கார். அதை முடிச்சுட்டு, சார்ஜர்லே போட்டா.....அது வேலை செய்யலை. ஒரு கோணத்துலே புடிச்சுக்கிட்டு இருந்தாப் பச்சை விளக்கு வருது. அப்படியே சூட்கேஸ் மேலே வச்சா விளக்கு போயிருது.

லீவு எடுத்துருக்கேன்னு சொல்லிக்கிட்டு இருக்காரே தவிர வேலை எல்லாம் நெட் மூலமா நடந்துக்கிட்டு இருக்கு. மடிக்கணினி வேற தகராறு. ஒயர்லெஸ் வேலையே செய்யலை.


இதுக்குள்ளே உடைமாத்திக்கிட்டு ஒவ்வொருத்தரா வந்து சேர்ந்துக்கிட்டாங்க. பொண்ணு நல்லா அழகா கைநிறைய வளையல்களும், மெஹந்தியுமா இருக்கு. மத்த லேடீஸ் முகம் கொஞ்சம் வாட்டம். உபவாசமாம். போதாதகுறைக்கு யாருமே தூங்கலையாம். ராத்திரி வந்து அலங்காரத்தையெல்லாம் கலைச்சப்பவே ரெண்டு மணியாம். மூணு மணிக்கு அடுத்த செஷனுக்கான சமையல் ஆரம்பிக்கணுமேன்னு ச்சும்மா கொஞ்சநேரம் பேசிக்கிட்டே ரெஸ்ட் எடுத்த்துதானாம். தூங்கலாமுன்னு படுத்தா ....அப்படியே கண் இழுத்துக்கிட்டுப் போயிருச்சுன்னா?

மூணுமணிக்கு எல்லாரும் குளிச்சுட்டு, மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிருக்காங்க. எதிர் தெருதான். ரெண்டு நிமிச நடையிலே போயிறலாம். ஆனாலும் கார்லேதான் போக்குவரத்து. இன்னிக்கு மா(த்)தா பூஜை. அதுக்காக ரொம்ப விசேஷமான சமையல். போளி செஞ்சுருக்காங்க. ஒம்போது வகையான கறிகள். நம்முர் ஆப்பம் போல ஒன்னு. போண்டா, சக்கரைப்பொங்கல் மாதிரி ஒன்னு, அப்புறம் வழக்கமான ரொட்லி, தால், பப்படம் இப்படி. இன்னும்கூட என்னவோ இருந்துச்சு. இப்ப நினைவுக்கு வரலை(-:

பத்தரைக்கு அங்கே ஆஜரானோம். நம்ம பக்கத்துலே தலைவலிக்குப் பத்துப் போட்டுக்குவாங்க பாருங்க அப்படி அந்த வேசத்தில் நெத்தியில் சிகப்பாக் குங்குமத்துலே பத்துப் போட்டுக்கிட்டு சில பெண்கள் உக்காந்துருந்தாங்க. உபவாசமிருக்கும் 'ஒன்பது' பேருக்கும் இப்படிப் 'பத்து.'

பூஜை செய்யும் இடத்தில் சுவத்துலே ஒரு வெள்ளைப் பலகை (ஒயிட் போர்டு) வச்சு அதுலே நாலு மூலையிலும் ரெண்டு ஜோடி குங்குமத்தில், ரெண்டு ஜோடி மஞ்சளில் தோய்ச்செடுத்த உள்ளங்கைகள் பதிஞ்சு இருக்கு. நடுவில் கோலம் வரைஞ்சு அதில் ஒரு கார்ட்டூன் சித்திரம் கைகோர்த்துக்கிட்டு இருப்பதுபோல். கீழே தரையில் நாலுநாள் முன்னே வரைஞ்சு வச்ச எட்டுப் பானைகள். ரெவ்வெண்டா நாலு வரிசை. ரெண்டு பக்கத்திலும் மும்மூணா இன்னொரு செட் பானைகள், பிரிமணை மேலே உக்கார்ந்துருக்கு. தலையில் ஒவ்வொன்னுக்கும் குடுமியோடு ஒரு தேங்காய்.(நியூஸியில் மொட்டைத் தேங்காய்தான் கிடைக்கும்)

அதுக்கு முன்னால் மணை போட்டு நடுவில் புள்ளையார், விளக்கு தேங்காய், பழம், பூக்கள். என்னைக் கவர்ந்தது என்னவோ அதுக்கும் கீழே ஒரு பலகையில் இருந்த ரெண்டு கருப்பு உருவங்களும், ரெண்டு கூடைகளில் விதைச்சு, முளைச்சிருந்த தானியங்களும்.


சரிதான். இது நம்ம பக்கத்து முளைப்பாரி! அப்ப அந்த உருவம்? கூர்ந்து பார்த்தால் எதோ மிருகத்தின்மேல் சவாரி செய்யும் தொப்பி வச்ச மனிதன். 'வழக்கம்போல்' நான் கேட்ட கேள்விக்கு 'வழக்கத்துக்கு மாறா'ப் பதில் வந்தது. 'குதிரையும் அதன்மேல் சவாரி செய்யும் மா(த்)தாவும். குதிரையின் ரெண்டு பக்கமும் கடிவாளம், மா(த்)தாவின் கையில் இணைந்திருக்கு, நல்லாப் பார்'

ஓஹோ..... குதிரை வாகனமா?

இன்னிக்குக் குலதெய்வத்தைப் பூஜிக்கும் நாளாம். குலம் விளங்கணுமுல்லே?
ஒன்பது தாம்பாளத்தில், போளி & இன்னபிற நைவேத்தியங்களைப் படைச்சாங்க. நடுவில் ஒரு அகலில் நெய்விளக்கு. பொண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து சாமி கும்பிட்டாங்க. ஒரு ரிப்பன் வச்சு ரெண்டுபேருக்கும் கனெக்ஷன் கொடுத்துருந்துச்சு:-)

அந்த ஒன்பது தேவியருக்கும் கழுத்தில் பூமாலை போட்டு உக்கார்த்தி வச்சாங்க. அவுங்களையும் விழுந்து கும்பிட்டுட்டு, மனி மாமி தலைமையில் எல்லோருமாச் சேர்ந்து பாட்டுப்பாடி ஆரத்தி எடுத்து முடிச்சதும், அந்த ஒன்பது பேருக்கும் ஆளுக்கொரு தட்டா வச்சுச் சாப்பாடு பரிமாறினாங்க. நவதேவியர் வந்து சாப்பிட்டுப் போனதா ஐதீகமாம்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு குலதெய்வம், பூஜை முறைகள் எல்லாம் வெவ்வேறாம். நம்ம கல்யாண வீட்டுக்காரர்களுடைய குல தெய்வம் சாமுண்டீஸ்வரி. எந்த சாமுண்டி? சாக்ஷாத் நம்ம மைசூர் சாமுண்டி ஹில்ஸ் சாமிதாங்க. அட!!!!எப்படி இப்படின்னு கொஞ்சம் ஆராய்ஞ்சதுலே(?????எல்லாம் இவுங்க சர் நேமை வச்சுத்தான்) இவுங்க க்ஷத்ரியர்களில் அக்னிவம்சப் பிரிவு (Clan agnuvanshi) பத்து முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த சாளுக்கிய மன்னர்கள் வழிவந்த வம்சமாம். (அடக் கடவுளே! அப்ப இது ராசா வூட்டுக் கலியாணமா?) இவுங்களோட தேசம்தான் இப்பக் கர்நாடகா மாநிலம். இதெல்லாம் இவுங்களுக்கே தெரியுமான்னு தெரியலை:-))))

மெல்லமெல்லத் தென்னாட்டுக்காரரா ஆகி இருக்காங்களோ? இருக்கட்டும். நமக்கும் நல்லாத்தானே இருக்கு:-)

சாப்பாடு ஆனதும் அரைமணி கூட ஓய்வெடுக்காமல் மாலையில் நடக்கப்போகும் ரிஸெப்ஷனுக்கு ஒரு புதுவிதமான பூரி செய்ய ஆரம்பிச்சாங்க. ஈஸ்ட், சீரகம், எண்ணெய் எல்லாம் போட்டுப் பிசைஞ்ச மாவில் பூரி. ஆனா மெயின் அயிட்டம் சமைக்கப்போவது ஆண்கள்தானாம்.ஆத்துலே போட்டாலும் இப்படித்தான் அளந்து போடணும்:-))))

Goat Meat கறிக் குழம்பு. பதினோரு ஆடுகளைப் பொலி போட்டு எல்லாம் தயாரா வச்சுருக்காங்களாம். ஆஹா.... 44 கால்கள். அப்ப இதுதானா விஷயம், ஒரு நாள் வீட்டுவிருந்தில் பாயா செஞ்சு விளம்பியதுக்கு!! இன்னிக்கு 600 பேருக்கான சமையல். கத்ரி ஹாலில் வச்சே சமைச்சுருவாங்களாம். ரெண்டு மணிக்கு ஆரம்பம் ஆண்கள் ஒன்லி சமையல். 'இன்றைக்குச் சமையல் செய்யப்போவதால் அரைநாள் விடுப்பு தரும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்' :-) அரைநாள் மட்டும் வேலைக்குப்போய் வரும் காரணம் இதுதானா? இன்னிக்கு அவுங்க சமூகம் மட்டுமில்லாமல், உள்ளூரில் இந்தக் கல்யாணத்துக்கு அழைப்புவச்சுக் கூப்புட்டவங்க எல்லாரும் வரப்போறாங்க. பொண்ணு வீட்டு சைடுலே இருந்தும் நெருங்கிய சொந்தம் வருவாங்களாம்.

கோபாலையும் சமைக்க அனுப்பலாமுன்னா........ கம்பெனிக்குப்போய் நெட் கனெக்ஷன் எடுத்து சிலவேலைகளை முடிக்கணுமாம். எனக்கும்தான் கொஞ்சம் தபால் பார்க்கணும். போற வழியில் வீடியோக் கடைக்குப்போய் பழைய படங்களாப் பார்த்து கொஞ்சம் வாங்கிக்கிட்டோம். அஞ்சு டிவிடி வாங்குனா ஒன்னு இலவசமாம். 15 வாங்குனதுக்கு 3. இன்னொண்ணும் தாங்க. உங்களுக்கு இலவச விளம்பரம் நியூஸியில் போட்டுக்கலாம். இவருக்கு துணிகளைப் பொட்டிப்போடும்போது 'பார்க்க' பாட்டுகள் வேணும்தானே?
ராஜேஷ் கன்னாவின் பல படங்கள். மெட்ராஸில் இந்தி சினிமாவுக்கு மக்களைப் பழக்குனதில் ஆராதனாவுக்கு ஒரு பெரிய பங்கு இருக்கே!!! நூதன் & அமிதாபின் ,
'சௌதாகர்' கூட வாங்குனோம்.


சாயங்கால வரவேற்பு, ' இண்டோ இங்லீஷ் ஸ்டைல்'. ஹால் வாசலில் மாப்பிள்ளையின் பெற்றோர் புது மணத் தம்பதியருடன் நின்னு வர்றவங்களை வரவேற்றுக்கிட்டு இருக்காங்க. அப்பவே அறிமுகமும் ஆயிருது. உள்ளே லைவ் ம்யூஸிக். பிஜியன்கள் ரெண்டு பேர், கீ போர்டும், ப்ளூட்டும் வாசிக்க, எலக்ட்ரானிக் ட்ரம்ஸ் சகிதம் ஒரு ஜோடி, ஹிந்திப் பாட்டுக்களைப் பொளந்து கட்டுராங்க.மாப்பிள்ளையின் அப்பா, இங்கே இறக்குமதி செஞ்சு வித்துக்கிட்டு இருக்கும் மின்விளக்கு அலங்காரங்கள் காம்பவுண்டுச் சுவரில் ஆரம்பிச்சு உள்ளே எங்கே பார்த்தாலும் ஜொலிக்குது. இது ஒரு விளம்பரமாவும் ஆகி இருக்கு. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்:-)))) என்ன ஒன்னு..... எல்லாம் கிறிஸ்மஸ் அலங்காரங்கள். வியாபாரம் பெருகினால் தீபாவளிக்குன்னே அலங்காரங்களை ஆர்டர் செஞ்சு விக்கலாம். இங்கே தீபாவளி சமயம் அநேகமாக எல்லா வீடுகளிலும் (இதில் மத வித்தியாசம் எல்லாம் பார்ப்பதில்லை) மின்விளக்கு ஜோடனைகள் இருக்கும்.

நாங்கள் உக்கார்ந்திருந்த முன்பகுதிக்கு மெதுவா ஆடி அசைந்து நடந்துவந்த ஃபிஜியன் பெண்ணின் கையில் ஏதோ தீனி உள்ள தட்டு. அட! பஜ்ஜி. முதல் ரெண்டு வரிசைக்கு மட்டுமே கிடைச்சது. (நாங்க ஏழாவது வரிசைப்பா) திரும்பிப்போய் இன்னொரு முறை அதே மாதிரி ஆட்டி அசைஞ்சு கொண்டுவந்ததும் முன்னிரு வரிசைகளே வழிமறிச்சுக் கொள்ளையடிச்சுட்டாங்க. இதேபோல நாலைஞ்சுமுறை வழிப்பறி:-)
மூணாம்வரிசையில் ஆரம்பிச்சு எல்லாரும் முழிச்சுப் பார்த்துக்கிட்டே இருக்கோம்.

கோபால் எழுந்துபோய் எதாவது 'ஜூஸ்' கொண்டுவரேன்னு சொல்லிட்டுப்போனவர், உடனே திரும்பிவந்து என்னையும் கூடவேக் கூட்டிட்டுப்போனார். மண்டபத்தின் முன் பகுதியிலேயே 'பார் பார் ன்னு பார்'ட். இன்னும் நான் சந்திக்க வேண்டிய நண்பர்கள் கூட்டம்
பாரில் மொய்ச்சுக்கிட்டு இருக்காம். அங்கே தட்டுத்தட்டாய் மிளகாய், வெங்காயம் , உருளைன்னு விதவிதமாய்ப் பஜ்ஜிகளும், வாளு என்று சொல்லும் மீன் வறுவலும் ஏந்திய ஸுலுசாம்பா( தேசிய உடை) அணிந்த ஃபிஜிமங்கையர் விறுவிறுப்பாகக் கூட்டத்தின் இடையில் புகுந்து வர்றாங்க. 'குடி'மக்களின் தேவைகளைப் 'பார்'த்துப் 'பார்'த்துக் கவனிப்பு நடக்குது. பாவம் உள்ளே உக்கார்ந்திருக்கும் மக்கள். செவிக்கு மட்டுமே உணவு. ( நான் திரும்ப உள்ளே போகவில்லை)


ஸ்நாக்ஸ்க்கு மட்டும் தனியாக ஒருத்தருக்கு கேட்டரிங் செய்ய விட்டுருக்காங்க. அந்தக் கம்பெனி, வெளி வெராந்தாவில் ரெண்டு கேஸ் அடுப்பு வச்சு ஒரு கடாயில் பஜ்ஜியும், இன்னொன்னில் மீன் வறுவலும் செஞ்சு அனுப்பிக்கிட்டு இருக்காங்க. ஏழுமணிக்கு ஆரம்பிச்சதுக்கு, ஊஹூம்....வேகம் பத்தாது.

எட்டுமணியானதும் மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பம். மெயின் ஆக்டர்ஸ் வந்து மேடையை அலங்கரிச்சதும், வரவேற்பு உரை, வாழ்த்துரை ஆச்சு. புதியவர்களுக்காக..... மணமகனின் வாழ்க்கைச் சரித்திரம் !!இது ஒரு (வகையான) காதல் திருமண(மா)ம். ரெண்டரை வருசத்துக்கு முன்னே இப்படி ஒரு கல்யாண விழாவில் சந்திச்சு, இமெயிலில் வளர்ந்து இப்போ அறுவடை! கையைத் தட்டோதட்டுன்னு தட்டுனோம். சத்தம் சரியாவரலை....எண்ணெய்ப்பிசுக்கு:-) போகட்டும், ஒரே சமூகமா இருந்ததால் பிரச்சனை இல்லாம எல்லாமே நல்லபடி முடிஞ்சது.

கேக் வெட்டினாங்க. புதுமணத்தம்பதிகளுக்காக ஆர்க்கெஸ்ட்ரா பாடுன பாட்டுக்கு ஒரு சின்ன நடனம்.(கபி கபி மேரே தில் மே கயாலு ஆதா ஹை!!!

ஆஹா.... அன்று வந்ததும் இதே நிலா.....ச்சச்சச்சா.....
கீழ்தளத்தில் சாப்பாடு ஆரம்பிச்சது. ஊரே கூடிக் கொண்டாடியாச்சு.

மணமக்கள் நல்லா இருக்கணும். மனமார்ந்த ஆசிகள்.

இன்னியோடு கல்யாணக் கொண்டாட்டங்கள் நெசமாவே முடிஞ்சது.

(அப்டீன்னா நினைக்கிறீங்க?)

36 comments:

said...

முதல் போணி!
பதிவ படிச்சுட்டு மீதம்

said...

ஒரு திருமணத்தில் கலந்துகொண்ட அனுபவம்........
நன்றி துளசி!

said...

வணக்கம், டீச்சர்!
///ஒரு கோணத்துலே புடிச்சுக்கிட்டு இருந்தாப் பச்சை விளக்கு வருது. அப்படியே சூட்கேஸ் மேலே வச்சா விளக்கு போயிருது.///
///மடிக்கணினி வேற தகராறு. ஒயர்லெஸ் வேலையே செய்யலை.///

சூப்பர். கோபால் சார், கடமையே கண்ணாயினார் போல இருக்கு :)) எல்க்ட்ரானிக் டிவைஸ் என்னிக்கு தேவைப்படும் போது வேலை செஞ்சுருக்கு? (-:

///'ஒன்பது' பேருக்கும் இப்படிப் 'பத்து.'///
//பொண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து சாமி கும்பிட்டாங்க. ஒரு ரிப்பன் வச்சு ரெண்டுபேருக்கும் கனெக்ஷன் கொடுத்துருந்துச்சு:-)///

ஆகா..எதுவும் உங்க கண்ணுலேந்து தப்பிக்க முடியாது போலே இருக்கே?

said...

அவர் அவர் வேலையை ஒழுங்கா செஞ்சாரோ இல்லையோ, நீங்க நுணுக்கமா பாத்து எழுதியிருக்கீங்க. சூப்பர்.

ஒரு புத்தகம் போடுமளவுக்கு நிறைய தகவல்கள் இருக்கு ரீச்சர். சீக்கிரமா அச்சு வடிவுல (இன்னமும் நிறையப் படங்களோட) பாக்க ஆசை. வாழ்த்துகள்.

said...

வாங்க சிஜி.

திருமணங்களே உறவும் நட்பும் கூடிக் களிக்கும் விழாக்கள்தானே!!!!

நீங்களும் கல்யாணத்துக்கு வந்ததில் ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க.

said...

வாங்க தமாம் பாலா.

'பதிவர்கள் கண்ணையும் காதையும் திறந்து வச்சுக்கிட்டு இருக்கணுமு'ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் என்னாலே கண்ணை எப்படிப்பா மூடிக்கிட்டு இருக்க முடியுது?

said...

வாங்க ஸ்ரீதர்.

இன்னும் 'வரிவரி'யா நிறைய எழுதியிருக்கலாமேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்:-)

முதலில் யார்யாருக்குப் புத்தகவடிவில் அச்சில் வேணுமுன்னு ஆர்டர் எடுத்துக்கிட்டு, அப்புறமாப் புத்தகம் வெளியிடவா? :-))))

said...

//(அப்டீன்னா நினைக்கிறீங்க?)//

இல்லையே!!

said...

அருமை டீச்சர்.

மருதாணியைப்பார்த்தால் ஏக்கமா இருக்கு. இங்கே ஆபீஸில் போட்டால் ப்ரொபெஷனலாக இருக்காது, அதனால் போட முடிவதில்லை :(

பத்து போட்டிருப்பதை பார்க்க பயமா இருக்கு.

நான் ஒரு கல்யாணத்துக்கு போனால் இவ்வளவு கவனித்திருக்க மாட்டேன், ரொம்ப விளக்கமா எழுதி இருக்கீங்க. மிக்க நன்றி. அடுத்ததா ஒரு தமிழ் நாட்டு கல்யாணக்கதை எழுதுவீங்க என்று எதிர்பார்க்கிறேன்

said...

//கீழ்தளத்தில் சாப்பாடு ஆரம்பிச்சது. ஊரே கூடிக் கொண்டாடியாச்சு.//

இன்னாது வாசனை அப்படி ஒரு கம கமான்னு
வருதேன்னு எழுந்திருக்கும்போதே நினைச்சேன்.

கல்யாண சாப்பாடு ஆரம்பமாயிடுச்சா !

ஒரு வெட்டு வெட்டுங்க !!

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

said...

//இன்னியோடு கல்யாணக் கொண்டாட்டங்கள் நெசமாவே முடிஞ்சது.

(அப்டீன்னா நினைக்கிறீங்க?)//

அட இன்னமும் இருக்கா? இப்பவே கண்ணைக் கட்டுதே... ;-) ஆனாலும் நீங்க சுவாராஸ்யமாய் எழுதுவது நன்று

said...

கல்யாணம் நல்லபடியா முடிந்ததா? அனைவருக்கும் வாழ்த்துக்களும், ஆசிகளும்... :)

said...

நமக்குச் சொந்தமில்லாத ஓர் கல்யாண வீட்டில் சாவகாசமாக சுத்தி வந்து....
சும்....மா விலாவாரியாக பிரிச்சு மேஞ்சிட்டீங்க துள்சி!!உங்கக் கிட்ட பஜ்ஜி தட்டு வந்ததும் அப்டியே லாவிட்டீங்களாமே? அப்படியா? நாங்களும் கல்யாணத்தில் கலந்து கொண்டாற்போல் ஓர் உணர்வு!!!
சரி..கல்யாணம் முடிஞ்சுது. அப்புரம்?
டோலி..? ஹும்! டோலிக்கே பிச்சே க்யா ஹை?

said...

துளசி, இத்தனை விரிவா ஒரு கல்யாணத்தைப் பத்தி யாரும் எழுதின மாதிரித் தெரியலை.

அருமையா இருந்துச்சுப்பா. அந்த மிளகாய்ப் பஜ்ஜி படம் போடுங்கப்பா.
அப்பத்தான் நிறைவா இருக்கும்.
கல்யாணம் முடிஞ்ச ஃபீலிங் வரலியே. ஒரு வேளை,,, தாலி கட்டாததாலோ:0)

said...

வழிபறி விசயம் நல்ல காமெடி.. ம்..அதுக்குள்ள எப்படி முடியும்? அப்படியே முடிஞ்சாலும் விடற ஆளா என்ன துளசி? எப்படியும் இன்னும் நாலு போஸ்ட் போடுவீங்கன்னு நினைக்கிறேன்.. :)

said...

படங்களும் விவரங்களும் அருமை.

//மணமக்கள் நல்லா இருக்கணும். மனமார்ந்த ஆசிகள்.//

உங்கள் கூடவே கல்யாணத்தில் கலந்து கொண்ட மாதிரி உங்கள் கூடச் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம்.

//(அப்டீன்னா நினைக்கிறீங்க?)//
இல்லவே இல்ல:)!

said...

அம்மா!

எல்லாம் சரி, இவ்வளவு பெரிய பதிவை எழுத எவ்வளவு நேரம் ஆனது? இதனால் உங்களுக்கோ உங்கள் வீட்டில் உள்ளவர்களுகோ ஏதேனும் பயன் உண்டா? இரவில் எழுதினீர்கள் என்றால் இரவு என்பது உங்கள் குடும்பத்திற்கு உரிய நேரம் அல்லவா? பக்கத்தில் உள்ள குரோசரி கடைக்குப் போனாலே அதைப் பற்றி பதிவாகப் போட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றுகின்றதா?

இப்படியெல்லாம் யாராவது உங்களுக்கு பகிரங்கக் கடிதம் போட்டுற போறாங்க!
:)))

said...

வாங்க கொத்ஸ்.

யூகம் சரி x தவறு:-)

said...

வாங்க க.ஜூ.

தமிழ்நாட்டுக் கல்யாணங்கள்தான் நம்ம எல்லோருக்கும் நல்லாவேத் தெரியுமே.

அதுவுமில்லாமல் இப்பெல்லாம் யாருப்பாக் கல்யாண வீட்டுலே சமைக்கிறாங்க? எதுக்கெடுத்தாலும் கேட்டரிங்தானே?

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

என்னத்தை வெட்டுறது? கலியாணத்தன்னிக்கு சாப்பாடு ரொம்ப சுமார்தான். அதையெல்லாம்தான் பார்ட்டியில் ஈடு கட்டிட்டோம்:-))))

said...

வாங்க இனியவள் புனிதா.

'எல்லாம் நான் பெற்ற இன்பம்.......'

said...

வாங்க தமிழ் பிரியன்.

ஆசிகளுக்கு நன்றி. 'அங்கே' அனுப்பிட்டேன்:-)

said...

வாங்க நானானி.

ஒன்னேமுக்கால் மணிநேரம் கார்லே வந்தால். இதுக்கு டோலி தூக்க முடியுமா? பராத் போன பஸ்தான் பொண்ணையும் கூட்டிக்கிட்டு வந்துச்சு.

நமக்குன்னு ஒரு துரும்பு தூக்கிப்போடும் வேலைகூட இல்லாம வேளாவேளைக்கு விருந்துன்னு மொக்கிட்டுவந்ததுக்கு,விலாவரியா இதுகூட எழுதச் சோம்பல் பட்டா எப்படி?:-))))

said...

வாங்க வல்லி.

மேளச் சத்தம் இல்லைப்பா. அதான் ஃபீலிங்ஸ் வரலை உங்களுக்கு.

பஜ்ஜி போடறவரை எடுத்தேன் ஆனா பஜ்ஜியை எடுக்கலையே.......(-:

said...

வாங்க கயலு.

இன்னும் ஒரு பத்துக்குள்ளே முடிக்கவா? :-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

ஆசிகளுக்கு நன்றி.

நீதி: முயற்சி திருவினை ஆக்கும்.

said...

வாங்க புதுகை அப்துல்லா.

'தலை' சரியாச்சா?

பகிரங்கக் கடிதம் வந்துருமோன்னு இருந்த பயம் தீர்ந்தது:-)))))

அம்பதுக்கு அப்புறம் வாழும் ஒவ்வொரு நாளும் போனஸ். அப்ப, சூப்பர் மார்கெட் போறது ஒரு ஈவண்ட் இல்லையோ?

குடும்பத்துக்காகத்தான் பதிவே எழுதறேன்னு சொன்னா நம்புங்க:-))))

ஆமாம்....நாமெல்லாம் ஒரே குடும்பம்தானே?

said...

அன்பு அம்மா!

'தல' சரியாடுச்சு.அப்ப நீங்க படித்து சிரித்ததாய் சொன்னதைப் படித்த போது நானும் கூட நினைத்து நினைத்து சிரித்தேன். :))

//ஆமாம்....நாமெல்லாம் ஒரே குடும்பம்தானே?//

சில பேருகிட்ட இதை நல்லா உரைக்கிர மாதிரி சொல்லுங்க

said...

//பகிரங்கக் கடிதம் வந்துருமோன்னு இருந்த பயம் தீர்ந்தது:-)))))/

அடுத்து ஒரு பகிரங்கக்கடிதம் உங்களுக்கு எழுதலாமா என்று நினைக்கிறேன் :)

said...

அழகான, பொருத்தமான ஜோடிகள்.

எல்லாவளமும் பெற்று நீடுழிகாலம் நல்லா இருக்கணும்..!

said...

வாங்க க.ஜூ.

ஆமாம்.... பகிரங்கக் கடிதம் வந்தால் அதுக்கு பதில் எழுதணுமா?

said...

வாங்க ரிஷான்.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. அங்கே அனுப்பிட்டேன்.

said...

நாங்களே ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வந்த மாதிரி இருந்தது..எல்லா நுட்பமான விஷயத்தையும் ஹாஸ்யத்தோட சொல்லிருக்கீங்க டீச்சர் நன்றி

said...

கல்யாண வீட்டு விசயங்கள் - மூன்றரை மணி நேரம் ஓடுற இந்திப் படம் பாத்த மாதிரி இருக்கு டீச்சர்!

said...

வாங்க ரம்யா.

நமக்கு அவ்வளவாப் நெருக்கம் இல்லாத ஒரு சமூகத்தின் பழக்கவழக்கங்களைத் தெரிஞ்சுக்கலாமேன்னுதான் அதைக் கொஞ்சம்(??) விவரமா எழுதுனேன்.

வருகைக்கு நன்றி ரம்யா.

said...

வாங்க வெயிலான்.

சினிமா மட்டுமா? பிஹைண்ட் த ஸீனும் பார்த்தீங்கதானே? :-))))