Sunday, August 17, 2008

சட்டாம்பிள்ளை (மரத்தடி நினைவுகள்)

வத்தலகுண்டு 'எலிமெண்டரி ஸ்கூல்'காம்பவுண்டு. பின்பக்கச் சுவர்லே ஒரு பெரிய ஓட்டை இருக்கும். அது வழியா பசங்க போலாம்,வரலாம். ஆனா போகக்கூடாதுன்றது டீச்சருங்க போட்ட கட்டளை. ஏன்னா அதும் பக்கத்துலெதான் பெண்பிள்ளைகளுக்கான 'கக்கூஸ்' இருக்கு. அந்த ஓட்டைக்கு வெளியே ஒரு சின்ன மண்தரை இருக்கும். அந்தத் தரையைத்
தாண்டினா ஒரு பாதை வரும் அதுக்கு நேர் எதிரே நம்ம வீட்டு வாசல்! ஒரே நிமிஷத்துலே வீட்டுக்குப் போயிரலாம்!

எனக்கு 'அது'வழியா 'ஸ்கூலு'க்குப் 'போறதுக்கு' மட்டும் முடியாது. செங்கல்லுலே உரசி சட்டையெல்லாம் அழுக்கு ஆயிடுமே!
ஆனா உண்மையான காரணம் வேற ஒண்ணு. ஸ்கூலுக்குத் தனியாப் போகப் பயம்! மொதநாளு என்கிட்ட அடிவாங்குன பசங்க திருப்பி அடிக்கக் காத்துகிட்டு இருப்பாங்கல்ல.

"இருடா இரு வீட்டுக்குப் போறப்ப பாத்துக்கறேன்"

" எங்க கை மட்டும் பூப்பறிக்குமா? இருடி இரு"

இந்த மாதிரி வீர வசனங்கள அப்பப்ப எடுத்துவிடுவோம்.

பெரிய காரணமெல்லாம் இருக்காது. சிலேட்டுக்குச்சி தரலே, சிலேட்டுலே எழுதுனதை அழிச்சிட்டான்(ள்)
கணக்குக்கு விடையைச் சொல்லலே, இப்படி ஏதாவது சில்லறைக் காரணம்தான். ஆனா அந்த வயசுக்கு அது ரொம்பப் பெருசுதானே!

சண்டை எதுக்கா இருந்தாலும், வகுப்பு நடக்கறப்ப சமத்தா இருந்துடுவோம். எதா இருந்தாலும் சாயந்திரம் ஸ்கூல் விடறதுக்குக் கொஞ்சம் முன்னலேதான் அதுக்கு மறு உயிர்!

சாயந்திரமா 'ஸ்கூல் விடறப்ப பின்னாலேயே போய், ஒரு அடி 'படார்'னு முதுகிலே அடிச்சுட்டு, சுவத்துலெ
இருக்கற ஓட்டைவழியா வீட்டுக்கு ஒரே ஓட்டம்தான். இது தெரியாம பசங்க 'ஸ்கூல் கேட்'லே காத்துக்கிட்டு
இருப்பாங்க சில சமயம்!

மறுநாளு, காலையிலே எந்திரிக்கும்போதே ஒரு பயம் வந்திரும். ஸ்கூல் நேரத்துக்கு முன்னாலேயே ஆஸ்பத்திரிக்குப்
போய், அங்கேயே சுத்திகிட்டு இருப்பேன். சிலநாளு அம்மா கூடவே,'ரவுண்ட்ஸ்'போவேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச
இடம் எதுன்னா, புதுப்பாப்பா வார்டு. ஜோரா இருக்கும்! கிராமத்துலே இருந்து வந்தவுங்க எல்லாம் கூட்டம் போட்டுகிட்டு
உக்காந்திருப்பாங்களா, அம்மா அங்கெ போறதுக்கு முன்னாடி, நர்ஸ்ஸம்மா போயி அவுங்களையெல்லாம் விரட்டுவாங்க!
அவுங்களும் வெளியே போறமாதிரி போயி, அம்மா தலை மறைஞ்சவுடனெ, திரும்பி வந்துருவாங்க!

அம்மா கேப்பாங்க "ஸ்கூல் டயமாச்சே, இன்னும் போகலையா?"

"இன்னும் பெல் அடிக்கலே"

மணி 'அடிக்க'றதுக்கு முன்னாலெ போனா, பசங்க 'அடிக்க'க் காத்திருப்பாங்க! மணி அடிச்சபிறகு போனா, டீச்சரு திட்டுவாங்க! ஆனா திட்டு வாங்காம தப்ப ஒரு வழி இருக்கு. யாராவது பெரியவுங்க கொண்டாந்து விட்டாங்கன்னா
டீச்சரு ஒண்ணும் சொல்ல மாட்டாங்க! அதுக்காக, ஆஸ்பத்திரிலே இருக்கற 'கம்பவுண்டர், வார்டு பாய், குறைஞ்சபட்சம் அழுக்கெல்லாம் கூட்டற 'லச்சி' இவுங்கள்லே யாரையாவது கூட்டிட்டுப் போகணும்னு காத்துகிட்டிருப்பேன்!

'பாப்பாவை நான் கூட்டிட்டுபோறேன்'ன்னு சொல்றதுக்கு ஆள் 'ரெடி'யா இருக்கும்! இந்த சாக்குலே ஒரு அஞ்சு
நிமிசம் 'எஸ்கேப்' ஆகலாம்னுதான்!

ரொம்ப தூரமா என்ன? ஒரு பத்து எட்டுலெ இருக்கு பள்ளிக்கூடம்! முக்காவாசி நாளு இதே கதைன்றதால எல்லாருக்கும் பழகிப்போச்சு.


அந்த ஸ்கூல்லே ஒரு பழக்கம் இருந்துச்சு. அதாவது காலையிலே 'ஆஜர்' சொன்ன பிறகு, யார் யார் வரலேன்னு தெரிஞ்சுரும்லே. அப்ப டீச்சர் கேப்பாங்க, வராதவுங்கல்லாம் ஏன் வர்லேன்னு.

தெரிஞ்சா சொல்லுவோம், தெரியலேன்னா, தெரிலேன்னு கத்துவோம்.

உடம்பு சரியில்லேன்னா மட்டும் எனக்குக் கட்டாயம் தெரிஞ்சிரும். நம்ப அம்மாகிட்டதானே மருந்து வாங்க வருவாங்க!

தினமும் காலையிலே ஆஸ்பத்திரி முன்னாலே இருக்கற பெரீய்ய்ய்ய வெராண்டாவுலே ஒரு பெரீய்ய்ய மேஜை போட்டு வச்சிருப்பாங்க. அங்கெதான் 'அவுட் பேஷண்ட்'டைப் பாக்கறது. அம்மா 'சீட்டு' எழுதுனவுடனே,
அதைக் கொண்டுபோய்க் கம்பவுண்டர் கிட்டே கொடுத்தா, அவரு, ஏற்கெனெவே கலக்கி வச்சுருக்கற 'தண்ணீ' மருந்தைத் தருவாரு. அதை வாங்கறதுக்கு 'சீசா' கொண்டு போணும். இல்லாதவுங்க, நம்ம ஆஸ்பத்திரி காம்பவுண்டுக்கு
வெளியே, ஒரு ஆளு, சாக்கு விரிச்சு உக்காந்துகிட்டு, 'பாட்டிலு' விக்கறாரு இல்லே, அவருகிட்டப் போய் வாங்கணும்.


ஆனா, எல்லாருமெ ஒரு 'சீசா' வீட்டுலே இருந்துதான் கொண்டு வருவாங்க. பழைய மருந்து ஏதாவது பாக்கி இருந்தா அதை வெளீயே ஊத்திட்டு, அவசர அவசரமாக் களுவிட்டு வந்துருவாங்க சில பேரு. கம்பவுண்டர்க்கு எப்படியோ இது தெரிஞ்சிரும் போல. மோந்து பாத்துட்டு, வேற கொண்டான்னுட்டார்னா, வழியில்லாம அஞ்சு காசு,பத்து காசு கொடுத்து வாங்கிருவாங்க!

அதே ஆளுதான், ஸ்கூல்லே 'ரீஸஸ்' விடுறப்ப, ஸ்கூல் காம்பவுண்டுக்கு வெளியெ, அதே சாக்கை விரிச்சு, அதுலே அவிச்ச கள்ளே, நெல்லிக்காய், கொடுக்காப்புளி,கரும்புத்துண்டு இப்படி 'சீஸனு'க்கு ஏத்த மாதிரி விப்பாரு. இதுலெல்லாம் எனக்கு 'இன்ட்ரெஸ்ட்' இல்லே! ஆனா அவரு பக்கத்துலே ஒரு 'ஆயா' உக்காந்து விக்கும் பாருங்க 'சவ்வு முட்டாய்' அதுதான் என் 'கோல்' அதுலெ ரெண்டு விதம் இருக்கும். ஒண்ணு கலரு போடாதது, இன்னொண்ணு நல்லா சிவப்புக் கலருலே இருக்கும்! அதைத் தின்னா, அப்படியே வாயெல்லாம் சிவந்து, வெத்தலை போட்டமாதிரி இருக்கும். பசங்க எல்லாம் அதைத் தின்னுட்டு, நாக்கை நாக்கை நீட்டிப் பாத்துக்குவாங்க! பாக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கும்!

ஆனா, எனக்குத்தான் அந்த பாக்கியம் இல்லை. வெளியிலே 'கண்டதையும்' வாங்கித் தின்னக் கூடாதுன்றது அம்மாக் கட்டளை! அரச கட்டளை மாதிரிதான் இது! தெரியாம வாங்கித் தின்னலாம்னா, அந்த சிவப்புக் கலரு இருக்கே அது, மத்தியானம் வரைக்கும் அப்படியே இருக்கும்.அப்படியேன்னா, அப்ப்ப்ப்படியே இல்லை. ஆனா லேசில போகாது! பகல் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போகணும்ல.
அப்ப மாட்டிக்க மாட்டேனா?

அந்த வயசுலெ ஆசையெ அடக்கறதுக்கு நான் என்ன புத்தரா? தின்னணும், ஆனா மாட்டிக்கக்கூடாது. எப்படி? ஒரேவழி. கலரு
போடாத முட்டாயத்தான் வாங்கித் தின்னணும்! (அந்த வயசிலேயே எவ்வளவு தில்லு முல்லு திருக்கோசு பாருங்க!)

முட்டாயுன்னதும் இன்னொண்ணு கூட ஞாபகம் வருது. ஒரு முட்டாய் விக்கறவரு,தடியா ஒரு கம்பைத் தோள்மேலே தூக்கிகிட்டு வருவாரு.
அந்தக் கம்புலே, மேல்பக்கத்துலே கலர்கலரா வானவில்லை அப்படியெ பந்தா சுருட்டின மாதிரி சவ்வு முட்டாய் சுத்தி இருக்கும். அந்தக் கம்பு உச்சியிலே ஒரு பொம்மை இருக்கும். அதுக்கு நல்லா 'கவுனு' இல்லாட்டா புடவைன்னு உடுத்தி விட்டுருப்பாங்க!அதுக்குச் சலங்கைகூட கட்டிவிட்டுருப்பாங்க! கம்பத் தூக்கிகிட்டு வரும்போதே'ஜல் ஜல்'ன்னு தாளத்தோட பொம்மை ஆடிகிட்டே இருக்கும்.

அவருகிட்டே முட்டாய் வாங்குனா, நமக்கு என்ன மாதிரி வேணும்னு கேட்டு, அதே மாதிரி செஞ்சு கொடுப்பாரு.( டிஸைனர் முட்டாய்!)
எல்லாப் பசங்களும் சொல்லிவச்ச மாதிரி கைக்கடியாரம்தான் கேப்பாங்களா, அவரும் கம்பு மேலெ இருக்கற பந்திலெருந்து, நீளமா
இழுத்து நீட்டி, அதைச் சுத்திச் சுத்தி நிமிசத்திலே கைக்கடியாரம் செஞ்சு, கேட்டவுங்க கையிலே கட்டியும் விட்டுருவாரு. கையிலே கட்டிட்டா
திங்கறது எப்படி? அதுக்காக, கம்புலேருந்து இன்னும் கொஞ்சம் இழுத்து நீட்டினதுலே, கொஞ்சம்போல எடுத்துத் தனியா கொடுத்துருவாரு!
பூனை, நாய், சைக்கிள்,தேளு இப்படி விதவிதமா அவரு விரலு விளையாடும்! அதப் பாக்கறதே ஒரு சொகம்! அதுக்கும் நமக்கு கொடுப்பனை
இல்லே. அந்த முட்டாய் சுத்த பத்தமா செஞ்சது இல்லையாம்! அந்த ஆளுங்க,'மூக்கைச் சீந்திட்டு' அப்படியே தொட்டுருவாங்களாம்!
அப்படி, இப்படின்னு சொல்லி வச்சுருவாங்களா, அதுக்குப் பயந்துகிட்டு அதையெல்லாம் பாக்கறதோட சரி.

நம்ம கையிலே காசு வந்தவுடனே அது, நம்ம தெருவிலே இருக்கற பெட்டிக் கடைக்கு போயிரும்.ஆரஞ்சு முட்டாய் இல்லேன்னா கோழிமுட்டை
முட்டாய். இதுலே உள்ளுக்குள்ளே ஒரு பாதாம் பருப்பு இருக்கும். இதை வாயிலெ போட்டுட்டா அவ்ளதான். ரொம்ப நேரத்துக்கு பேச முடியாது.
வெளியவும் எடுக்க முடியாது. எச்சி இல்லே! முட்டாய்ங்களைப் பத்தி இன்னைக்கில்லாம் சொல்லிகிட்டே இருக்கலாம்தான்.

ஆனாப் பாருங்க, வாழ்க்கையிலே நிறைவேறாமப் போன ஆசைகளிலே இந்த ஜவ்வு முட்டாயும் இருக்கு. இப்பல்லாம் இது கிடைக்குதான்னு கூடத் தெரியலே.

ஆங்.... எங்கெ விட்டேன்? ம்ம்ம்ம்ம்ம்ம்ம், ஸ்கூலு...ஆஜர் எடுக்கறது.

டீச்சரு கேட்டப்ப, வராதவுங்க ஏன் வரலைன்றதுக்குக் காரணம் தெரியலேன்னா, அதைத் தெரிஞ்சிக்கறதுக்கு வேற வழி இருக்குல்ல!

" கமலா/செல்வி/வசந்தா/குமார் ஏன் வரலென்னு யாருக்காவது தெரியுமா?"

"தெரியாது டீச்சர்"

"இவுங்க வீடு யாருக்குத் தெரியும்?"

" எனக்குத் தெரியும் டீச்சர்!"


இந்தக் கேள்வியை மத்தவங்ககிட்ட கேக்க வேண்டிய அவசியமே இல்லை. அதான் நான் இருக்கேனே. எல்லார் வீடும் அனேகமா எனக்குத்
தெரிஞ்சிருக்கும்! அது எப்படி? அதானே எனக்கும் தெரிலெ!

நான் எப்பவும் ஊரைச் சுத்திக்கிட்டு இருந்ததாலா? ச்சீச்சீ, இருக்காது. எல்லாருக்கும் எல்லார் வீடும் தெரிஞ்சிருக்கும்னுதான் நினைக்கிறேன்.
அப்ப 'இந்தக்காலத்தில' இருக்கறதைப்போல தப்புத் தண்டாவெல்லாம் நாங்க கேள்விப்பட்டதேயில்லை! பயமில்லாமத் திரிஞ்சிகிட்டு இருந்தோம்!

உடனே என்னையும், கூட இன்னோரு பொண்ணையும்( இது எப்பவுமெ என் 'பெஸ்ட் ·ப்ரண்டு' பிச்சம்மாவாத்தான் இருக்கும்) அனுப்புவாங்க!

"ஓடிப்போய் என்னன்னு கேட்டுட்டு வரணும். அங்கே, இங்கேன்னு பராக்குப் பாத்துகிட்டு நிக்கக்கூடாது"

நாங்க ரெண்டுபேரும் கிளம்பிடுவோம். டீச்சர் சொல்படி ஓடிப்போக மாட்டோம். ஏன் தெரியுமா? பிச்சம்மாவுக்கு, 'போலியோ' வந்து, ஒரு காலு
வளஞ்சு போயிருக்கும்.அந்தக் காலை உதறி உதறி விந்தி விந்திதான் நடப்பா. மத்தபசங்கெல்லாம் அவளை, நொண்டிப்பிச்சம்மா'ன்னு கூப்பிடறப்போ, எனக்குக் கோவம் கோவமாவரும்.

என் கிட்ட ஒரு பழக்கம் இருக்கு(இருந்தது?) என்கூட இருக்கறவங்க எப்படிப் பேசுறாங்களோ, நடக்கறாங்களோ, அதேமாதிரி என்னை அறியாமலேயே
செஞ்சுருவேன். பிச்சம்மாகூட போறப்ப நானும் அவளைப் போலவே நடப்பேன்.பாக்குறவங்களுக்கு, ரெண்டு சின்ன பொண்கள் கால் சரியில்லாம
இருக்கறாங்கன்னு நினைச்சுப்பாங்க! ( இதை ஒருதடவை எங்க அம்மா பாத்துட்டு கேட்டப்பத்தான் எனக்கே தெரியும், நான் பிச்சம்மா மாதிரி நடக்கறேன்னு!)

இந்த நகர் வலத்தை முடிச்சிட்டு திரும்பி வர்றதுக்கே காலையிலே விடற 'ரீஸஸ் டைம்' ஆயிரும்! அப்புறம் ரெண்டு பீரியட்தான்.சாப்பாட்டு
இடைவேளை வந்துரும்!

அப்புறம், டீச்சரு எங்கெயாவது போனாங்கன்னா, சட்டாம் பிள்ளைதான் டீச்சர் வர்ற வரைக்கும் மொத்த வகுப்பையும் பாத்துக்கணும். சத்தம் கித்தம்
போடாம, வீட்டுப் பாடம் எதாவது எழுதிக்கிட்டு இருக்கணும்.

எங்க 'ஸ்கூல்'லெ வகுப்புத் தலைவர்(சட்டாம்பிள்ளை) ஆவணும்னா வகுப்புலெ மொத'ரேங்' எடுக்கற ஆளா இருக்கணும். எல்லா மாசமும்
'டெஸ்ட்' வைப்பாங்கல்ல. அதுலே யாரு நிறைய 'மார்க்'கோ, அவுங்கதான் அடுத்த 'டெஸ்ட்' வரவரைக்கும் 'க்ளாஸ் லீடர்'

இதுலே எனக்கும், எங்க வகுப்புலே இருந்த 'வைத்தி' ன்னு நாங்க கூப்புடற வைத்தியநாதனுக்கும்தான் போட்டி.

வைத்தியப்பத்திச் சொல்லியே ஆகணும். அக்ரஹாரத்துப் பையன். ஆசாரமான குடும்பமாச்சா, அதுனால 'குடுமி'வச்சிருப்பான். முன்னந்தலை
அரைவட்டமா மழிச்சு இருக்கும். ஆனா, மழ மழன்னு இருக்காது. குட்டி குட்டியா சின்னச் சின்ன முடி இருக்கும். தலையைத் தடவுனா,
'ப்ரஷ்'மாதிரி குறு குறுன்னு இருக்கும். நல்லாப் படிப்பான். நல்ல நிறமா இருப்பான். அவனோட தங்கச்சிப் பாப்பாவுக்கு எப்பவும் வயித்துக்கோளாறுன்னு
ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வருவாங்க அவுங்க அம்மா. கூடவே இவனும் வருவான்.அப்ப அவனை எங்க வீட்டுக்குள்ளேயெல்லாம்
கூட்டிட்டுப்போய் எங்க அக்காங்களுக்கெல்லாம் காமிச்சிருக்கேன். நாங்க ரெண்டுபேரும் ஃப்ரெண்ட்ஸ்தான்.ஆனா அப்பப்ப சண்டையும்
வந்துரும்!

ஒருநாளு டீச்சரு இல்லாதப்ப அவந்தான் எங்களையெல்லாம் மேய்ச்சுகிட்டு இருந்தான்.நாங்கெல்லாம் எப்பவும்போல பேசிகிட்டு இருந்தோம்.
சத்தம் ஜாஸ்தியாச்சுன்னா, ஒரு 'சத்தம்' போடுவான்.

"உஷ்ஷ்ஷ்ஷ்.... பேசாதீங்க! டீச்சரு சொல்லிட்டுப் போயிருக்காங்க, பேசறவங்க பேரை 'போர்டு'லே எழுதணும்னு. இப்ப எழுதிருவேன். அப்புறம் டீச்சரு வந்தா மாட்டிக்குவீங்க"

நான் அப்படியெல்லாம் அடங்கற ஆளா? ரெண்டு நிமிஷம் சத்தம் இருக்காது.அப்புறம் மெதுவா, கிசு கிசுப்பா தொடங்கும். போகப்போக
சத்தம் உசந்துகிட்டே போயிரும்.

வைத்தி, என் பேரை கோணக்கா மாணக்கான்னு 'போர்டு'லே எழுதிட்டான்!

இவ்வளவு தூரத்துக்கு இதுவரைக்கும் வந்ததில்லே. இன்னைக்கு ஏன் டீச்சரு இவ்வளொ நேரமா திரும்பி வரலே?

"டேய் வைத்தி, டேய் அழிச்சுடுடா, இனி பேசமாட்டெண்டா, டேய் டேய்"

"ஐயோ, டீச்சரு வந்துகிட்டு இருக்காங்கடா, டேய் வைத்தி, அழிடா அழிடா"

டீச்சரு காலை உள்ளே வெக்கறதுக்கும், வைத்தி 'போர்டை' அழிக்கறதுக்கும் சரியா இருந்துச்சு.

அப்பாடா, தப்பிச்சுட்டேன்! ஆனாலும் எவ்வளொ கெஞ்ச வச்சிட்டான். இருக்கட்டும். அவனை வீட்டுக்கு விடறப்பக் 'கவனிக்கலாம்'!

அடுத்த ரெண்டு நாளிலேயே சந்தர்ப்பம் கிடைச்சிடுச்சு. நான் தான் 'லீடர்'

டீச்சரு வகுப்பிலே இல்லே. பேச்சு சத்தம் கொஞ்சம் கொஞ்சமா உச்ச ஸ்தாயிலே போயிகிட்டு இருக்கு. எனக்கு
செஞ்ச உபகாரத்தை நினைச்சுகிட்டு, வைத்தி சத்தமா பேசிகிட்டு இருக்கான், பக்கத்துலே உக்காந்து இருக்கற பையனோட!

நானு, சத்தம் போடாதீங்க, சத்தம் போடாதீங்கன்னு ஒப்புக்கு ரெண்டுதடவை கத்திட்டு, வைத்தி பேரை 'போர்டு'லே எழுதிட்டேன்! அவன் அதை சட்டையே பண்ணாம இன்னும் பேசிகிட்டு இருக்கான்!

ஆஹா.... டீச்சரு வந்துட்டாங்க! வைத்திக்கு அவன் கண்ணையே நம்ப முடியலே! அவன் பேரு இன்னும் இருக்கு.
நான் அதை அழிக்கறதுக்கு ஒரு முயற்சியும் எடுக்கலே!

வைத்திக்கு 'நல்லதா' ரெண்டு அடி உள்ளங்கையிலே கிடைச்சது! அவன் கண்ணுலே தண்ணி முட்டிகிட்டு நிக்குது!

டீச்சரு என்னெ எதுக்கு கை நீட்டச் சொல்றாங்க! ஐயோ...ஆஆஆஆ வலிக்குதே! எனக்கு எதுக்கு ரெண்டு அடி?

நானே நீலி! 'நீலிக்கு கண்ணீரு நெத்தியிலே'ன்ற மாதிரி, கண்ணீரு ஆறாப் பெருகுது!

வகுப்பே முழிக்குது!

அழுதுகிட்டே கேக்கறேன், "என்னை ஏன் அடிக்கறீங்க? நானா பேசுனேன்?"

டீச்சரு, 'போர்டை'க்காட்டுனாங்க. இப்பத்தான் எனக்கு உறைக்குது!

நாந்தான் எழுதியிருக்கேன்!

'அப்பளாக்குடுமி வைத்தி பேசினான்'

நன்றி: மரத்தடி 2004

36 comments:

said...

வந்துவிட்டோமே நாங்கள் வந்துவிட்டோமே:)

இப்படியா ஒரு ஞாபக சக்தி!!ரகளைதான்.
ஐஸ் ஃப்ரூட் சாப்பிட்டதில்லையா துளசி?

உங்க பள்ளியும் மூங்கில் பிளாச்சு போட்டுக் கட்டின வகுப்பு அறையா. இல்லைன்னா கட்டடமா.

இந்த முதுகில அடிக்கற பழக்கம் நீங்க ஆரம்பிச்சதுதானா:)
என் முதுகில வாங்கின வலி இப்ப ஞாபகம் வருது:)
எல்லாம் சட்டாம்பிள்ளைத்தனம் செய்ததால் வந்த வினை.

said...

ரசித்து படித்தேன். ஒவ்வொரு வரிக்கும் ஒரு ஞாபகங்களாக என்னோட ஸ்கூல் நாட்கள் வந்து எட்டி பார்த்தது.
//கோழிமுட்டை முட்டாய். இதுலே உள்ளுக்குள்ளே ஒரு பாதாம் பருப்பு இருக்கும்//
ம்ம்ம்...என்னோட பேவரிட் கமர்கட் மிட்டாய் மற்றும் குச்சி ஐஸ் - எல்லா கலரிலும் :)

said...

தில்லானா மோகனாம்பாள்ல இருந்து வத்தல்குண்டு பள்ளிக்கூடம் வரை இந்த வைத்தி பண்ணீருக்க அட்டூழியம் பாருங்க

said...

டீச்சர், எல்லாம் கொஞ்சம் 15 வருடம் வரை மாறாமல் இருந்த காட்சிகள்... அப்படியே தான் இருந்தது தொடக்கப்பள்ளிகள்... :) இப்போது நிறைய மாற்றங்கள்.. சுமைகள்.

said...

///டீச்சரு, 'போர்டை'க்காட்டுனாங்க. இப்பத்தான் எனக்கு உறைக்குது!
நாந்தான் எழுதியிருக்கேன்!
'அப்பளாக்குடுமி வைத்தி பேசினான்'///
அப்பமேவா?......அவ்வ்வ்வ்வ்

said...

அய்யோ துளசி

இவ்ளோ பெர்ய பதிவா - கொசு வத்தி மெகா கொசுவத்தியா ? - ஒவ்வொரு வரியும் படிச்சு ரசிச்சு என்னோட வழக்கமான பாணியிலே மறு மொழி போடனூம் - அப்பதான் மனசு நெரெயும்

அப்புறமா வரேன் - என்னோட கொசு வத்தி புகையுது

said...

படிச்ச பதிவாவே இருக்கேன்னு நினைச்சா அது மரத்தடியில் படிச்சதா... ரிவிஷன் க்ளாஸ் போல. நடக்கட்டும். நடக்கட்டும்.

said...

மேடம் உண்மை தமிழனுக்கு போட்டியா எழுதி இருக்கீங்க :-))

//வாழ்க்கையிலே நிறைவேறாமப் போன ஆசைகளிலே இந்த ஜவ்வு முட்டாயும் இருக்கு. இப்பல்லாம் இது கிடைக்குதான்னு கூடத் தெரியலே.//

ஹி ஹி கிடைக்குதுங்க..எங்க கிராமத்தில்

//இதை ஒருதடவை எங்க அம்மா பாத்துட்டு கேட்டப்பத்தான் எனக்கே தெரியும், நான் பிச்சம்மா மாதிரி நடக்கறேன்னு!)//

அய்யயோ...பேசுவாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்..நடக்கறாங்கன்னு இப்ப தான் தெரியும்

//டீச்சரு காலை உள்ளே வெக்கறதுக்கும், வைத்தி 'போர்டை' அழிக்கறதுக்கும் சரியா இருந்துச்சு.//

ஒரு த்ரில் படமே ஓடி இருக்கும் போல ;-)

said...

அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். துவக்கப்பள்ளி ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. பாராட்டுக்கள்.

said...

வாங்க வல்லி.

ஓடு வேய்ஞ்ச கட்டிடம்தான். கவுத்துப்போட்ட 'ட' வடிவில் இருந்துச்சு அப்ப.

ஐஸ்கூட...வெறும் பால் ஐஸ்தான்ப்பா.
அதுதானே 'காட்டிக்குடுக்காது':-))))

said...

வாங்க சுந்தர்.

பெரிய ஊராவும் இல்லாம, ரொம்பச் சின்ன ஊராவும் இல்லாம இருக்குமிடங்களில் அநேகமா அப்ப எல்லாருக்கும் இதே அனுபவம்தான் இருந்துருக்கும்.

நாட்டின் மக்கள் தொகையும் இப்போ இருப்பதில் மூணில் ஒரு பங்குதானே அப்போ!!!!

said...

வாங்க சின்ன அம்மணி.

இப்ப வைத்தி ஒருவேளை 'நாஸா'வில் இருக்கா(னோ)ரோ என்னவோ!!!!

said...

வாங்க தமிழ் பிரியன்.

நீங்கதான் சொல்லணும், இப்பவும் பள்ளிக்கூடம் அதே இடத்தில்தான் இருக்கான்னு.

இதைவிட்டால் வேறொன்னு மட்டுமே இருந்துச்சு. அது கிறிஸ்தவர்கள் நடத்துன பள்ளிக்கூடம்.

said...

வாங்க சீனா.

எப்போ முடியுதோ அப்போ:-))))

said...

வாங்க கொத்ஸ்.

மரத்(தடியில்)தில் செல்லரிக்க ஆரம்பிச்சுருச்சு. அதான் இடம் பெயரல்.

இதைப் பற்றி ஏற்கெனவே ஒரு (வெள்ளை) அறிக்கை விட்டுருக்கேன்:-)))

said...

வாங்க கிரி.

உண்மைத் தமிழனுக்கு நாந்தான் முன்மாதிரி:-))))

இதை எழுதுனது 2004 வது வருசம்.

said...

வாங்க வெண்பூ.

மனதில் அழியாத கோலங்கள்தான் இவை. எல்லாருக்கும் இப்படி ஒன்னு இருந்தே தீரும்.

said...

அட... இந்த மேட்டர் நல்லா இருக்கே... இப்பொதான் நானும் இதே போல ஒரு பதிவு எழுத ஆரம்பிச்சுருக்கேன்.....

said...

said...

துளசி மேடம்,

அருமையான பதிவு, நீங்கள் சொல்லும் மிட்டாய்களை எல்லாம் பார்த்ததில்லை, ஆனால் நீங்கள் விவரித்த விதத்தில் சாப்பிடவேண்டும் போலவே இருந்தது :)

சின்ன வயசில நீங்களும் என்னை மாதிரியே ரவுடியா இருந்திருக்கீங்க. :)

said...

நான் சின்னதா இருக்கும்போது கோவில்பட்டியில் ஒருமுறை வாட்ச் மிட்டாய் கையில் கட்டிக்கிட்டேன் மிட்டாய்க்காரரிடம்..இப்பவும் கிடைகுமா இருக்கும் ஒரு முறை கிராமத்துக்கு விசிட் அடிங்க..

said...

//ஒவ்வொரு வரிக்கும் ஒரு ஞாபகங்களாக என்னோட ஸ்கூல் நாட்கள் வந்து எட்டி பார்த்தது.//ன்னு சுந்தர் சொன்னாப்ல எனக்கு எட்டி மட்டும் இல்ல கூட்டிகிட்டே போயிட்டுது.

//கொசு வத்தி மெகா கொசுவத்தியா ?// ன்னு சீனா சார் கேட்டதில வியப்பேயில்லை.

//அழியாத கோலங்கள்//ன்னு நீங்க சொல்வதை அப்படியே வழி மொழிகிறேன் மேடம்.

said...

என்னன்னு சொல்றது ? சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப் போச்சு..அதுவும் கடைசி வரி..சும்மா நச்சுன்னு..

கலக்குறீங்க டீச்சர்..

said...

//"இருடா இரு வீட்டுக்குப் போறப்ப பாத்துக்கறேன்"

" எங்க கை மட்டும் பூப்பறிக்குமா? இருடி இரு" //

'பிதாமகன்' லைலா போல இருந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன் டீச்சர் :D

said...

வாங்க மகேஷ்.

சீக்கிரமா எழுதி வெளியிடுங்க.
இப்போ சீசன் இதுக்குத்தான்:-))))

said...

வாங்க டாக்டர்.
//உ//

இது பிள்ளையார் சுழியா? :-))))

said...

வாங்க க.ஜூ.

அநேகமா எல்லோரும் இப்படி ரவுடிஸம் செஞ்சுருப்போம்:-)))

said...

வாங்க கயலு.

இந்த வயசில், இப்பப்போய் முட்டாய் வாட்ச் கட்டுனா நல்லாவா இருக்கும்?

பூனை, யானை செஞ்சுகொடுக்கச் சொல்லி வாங்கிக் காயவச்சு கலர்லெஸ் நெயில் பாலீஷ் அடிச்சு ஷோ கேஸில் வச்சுக்கலாம்:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அவுங்ககதையை எடுத்துவிடலாம்தானே? பேசாம தொடர் விளையாட்டில் சேர்த்துருவோம்:-)

said...

வாங்க ரிஷான்.

லைலா?


ஹூம்....அவ்வளோ அழகெல்லாம் இல்லைப்பா நான்(-:

ரொம்ப சுமார்:-)

said...

எங்க பள்ளிகூடத்திலே மாநிட்டோருக்கு தலையில் குட்ட அதிகாரமுண்டு.....என்னோட எதிரி ஒரு தடவை என்னை குட்டினான் பாருங்க இன்னும் அதை நினைச்சால் கண்ணீர் வருது..

said...

http://www.google.com/transliterate/indic/Tamil# உபயோகித்துப் பாருங்க ...வேகமா தமிழில் டைப் பண்ண முடிகிறது..

said...

வாங்க ராம்.

தலையில் குட்டு வாங்கிட்டீங்களா?

அச்சச்சோ.....

உங்க சுட்டியைப் பார்த்தேன்.

அதுலே மலையாளம் ஹிந்தி எல்லாம்கூட இருக்கே.

வளரெ நன்னாயி, கேட்டோ.
நன்னி.

said...

//அவுங்ககதையை எடுத்துவிடலாம்தானே? //

ம்ம்ம். செய்திடலாமா முயற்சிக்கிறேன்:))!

அதற்கு முன்னர் எனது "காணாமல் போன..." பதிவுக்கு வந்து ஒரு நடை பாருங்களேன்:))!

'அப்பளாக்குடுமி வைத்தி பேசினான்'
போன்ற ஒரு கரும்பலகை விளையாட்டைக் காண...

said...

வாங்க ராமலக்ஷ்மி.

உங்க வீட்டாண்டை வந்துட்டுப்போனேனுங்க.
அப்ப என் கால் கொலுசு ஒன்னு தொலைஞ்சு போச்சு(-:

said...

மலரும் நினைவுகள்! ரசித்தேன் அம்மா!