மரத்தடி நினைவுகள்.
நண்பர் ஒருவருக்காக சில சுட்டிக்களைத் தரலாமுன்னு மரத்தடிக்குப் போனேன். நரியைக் கேட்டதும், 'This site may harm your computer'
அபாயச்சங்கு ஊதுச்சு. விட்டுற முடியுங்களா? வேற வழியில் நைஸாப் போய் நான் தேடும் பகுதியைப் பார்த்தால்....... பயங்கரக் காத்து வீசியிருக்கும்போல! ( புயல்நிவாரண நிதி வேண்டுகோள் அங்கே இருக்கு) அரையும் கொறையுமா, குற்றுயிரும் கொலையுயிருமாக் கிடக்கு நம்ம படைப்புகள்(-:
எங்கியாவது சேமிப்புன்னு மட்டுமில்லை.... புதிதாக வலையில் வலம்வரும் நட்புகளுக்கு எங்கே இவை கிடைக்காமல் போயிருமோ என்ற
'நல்' எண்ணத்துடன் இங்கே நம்ம தளத்தில் வாரம் ஒன்னு போட்டு வைக்கப்போறேன்.
ஏற்கெனவே நம் கைவண்ணம் கண்ட நண்பர்கள் கடந்து போயிறலாம். பிரச்சனை (இப்போதைக்கு) இல்லை:-)))))
*********************************************************************************
நாங்க சினிமாவுக்குப் போறோம்
மக்களே,
இப்படி தியேட்டரைப் பத்தி எழுதினத படிச்சு, எனக்கு மறந்திருந்தது எல்லாம் ஞாபகம் வந்திருச்சு.
' ஹா, நான் எங்கே இருக்கேன்? நீங்கெல்லாம் யாரு?'
நினைவுலே முதல்ல வருது, 'வத்தலகுண்டு'ல் இருந்த(?) சந்திரா டாக்கீஸ். ஓனர் இஸ்லாமியர். இராவுத்தர் குடும்பம். எங்களுக்கு நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.
சாயந்திரம் முதல்பாட்டு 'வாராய், நீ வாராய்' போட்டவுடனே சினிமாவுக்குப் போற திட்டம் இருக்கற நாளா இருந்தா, ஒரு வேகம் வரும் பாருங்க, என்னுடைய 'டீன் ஏஜ்'( கல்யாணத்துக்குப் பாத்துகிட்டிருந்தாங்க) அக்காங்களுக்கு !
சினிமாத் திட்டத்தை முதல் நாளே அம்மா சொல்லிடுவாங்க. அப்பத்தான், மறுநாள் பொழுது விடிஞ்சதிலிருந்து
என்ன உடுத்தறது,சுலபமான, ராத்திரி சமையல் (சினிமா விட்டுவந்து, நான் தூங்கிகிட்டே சாப்பிடுறதுக்கு)
எது தோதுப்படும் அப்படி, இப்படின்னு பல விதமான ஆலோசனைகள் நடக்கும்.
ஒரு மூணு, மூணரை மணி ஆச்சுன்னா, போச்சு. பூக்களை, வேகம் வேகமா பறிக்கறதும், கட்டறதும்,
சலவையிலிருந்து வந்திருக்கும் புடவைகளில், கஞ்சி போட்ட நல்ல மொற மொறப்பான சேலைகளையும்,
அதுக்கு 'மேச்சிங் ப்ளவுஸ்' தேடறதும் நடக்கும். அதுக்குள்ளே, நான் ஸ்கூல்ல இருந்து வந்துருவேன்.
முதலில், என்னை ரெடி பண்ணிடுவாங்க. நான் ரொம்ப தொல்லையாம். கவுனை அழுக்குப் பண்ணாம
இருக்கணும்னு உத்தரவு வேற. சரின்னு உக்காந்திருப்பேன். அப்பல்லாம் டி.வி.வரலை. நீங்கல்லாம் பிறந்துகூட இருக்கமாட்டீங்க.
ரெண்டு அக்காங்களும் ட்ரெஸ் மாத்தப் போவாங்க. அவ்வளவுதான்.டெய்லர், சரியான அளவுலே 'ப்ளவுஸ்'
தைக்காததும், புடவைக்குக் கஞ்சி சரியாகப் போடாததும், அப்படிப் போட்டிருந்தாலும், சரியாக 'இஸ்திரி'
போடாததும் கண்டுபிடிக்கப்படும். பீரோவுலே, இருக்கற அத்தனை புடவைகளும் வெளியே வந்துவிழும்.
அது சரியில்லே, இது சரியில்லே...அப்பாடா...ஒருவழியா புடவை மாத்தியாச்சுன்னா, அடுத்து இருக்கு
இன்னொரு கண்டம். பவுடர் பூசி, பொட்டு வைக்கிறது. பவுடர் O.K. பொட்டுதான் தகராறு. இப்ப மாதிரி
ஸ்டிக்கர் பொட்டு அப்ப கிடையாது. தரம் நல்லா இருக்காதுன்னு குப்பில வர்ற சாந்து வாங்கறது இல்ல.
வீட்டிலேயே கரும் சாந்து செய்து, ஒரு கிண்ணத்திலே இருக்கும். நல்லா காஞ்சு, கெட்டியா இருக்கும்.
அதுலே, இரண்டுதுளி தண்ணீர்விட்டு, குழைக்கணும்.( இப்ப அதுமாதிரி எங்கேயாவது செய்றாங்களான்னு
தெரியாது) நாசுக்காய் குழைக்க முடியாது. அதை ஒரு விளக்குமாத்துக்குச்சிலே எடுத்து, திலகமா வைச்சுக்
கணும். அண்ணைக்கின்னுப் பாத்து,கோண கோணயா வரும்.அதை அழிக்கறதுக்காக, இன்னொரு தடவை
முகம் கழுவி, பவுடர், பொட்டு இத்தியாதி. திரும்ப கோணப் பொட்டு, திரும்ப முகம் கழுவல்....
இப்படியே 3 அல்லது 4 தடவ ஆகும்.
இப்ப அம்மா ஹாஸ்பிடல் ரவுண்ட்ஸ் முடிச்சு வருவாங்க. நமக்கு எப்பவும் ஹாஸ்பிடல் காம்பெளண்ட்-லதான்
வீடு இருக்கும். எவ்வளவு நேரம்தான் நான் சும்மா உக்காந்திருக்க முடியும்? கொஞ்ச நேரம் விளையாடலாம்னு
தெருவுக்குப் போயிருப்பேன். அம்மாவப் பாத்தவுடன் ஓடி வருவேன். அம்மா உள்ளேபோய், அக்காங்களைக்
கேப்பாங்க," துளசிக்கு ஒரு நல்ல கவுனாப் போட்டு, தலைசீவி விடக்கூடாதா? " அவ்வளவுதான். எனக்கு மண்டகப்படி ஆரம்பிக்கும்.
இதுக்குள்ளே, நல்லா இருட்டிடும். 'வாராயோ வெண்ணிலாவே'ன்னு ஒரு பாட்டுக் கேக்கும். படம் போடப்
போறான். சீக்கிரம் நடங்கன்னு சொல்லி, எல்லோரும் ஓட்டமும், நடையுமா ( அப்ப ஏது ஆட்டோவும்
டாக்ஸியும் ? அதுவும் வத்தலகுண்டுலே ?)போய் சேரும்போது, வழக்கம்போல படம் ஆரம்பிச்சு, ஒரு
20 நிமிஷமாவது ஆகியிருக்கும்.வேர்வை வழிஞ்சு பொட்டெல்லாம் கரைய ஆரம்பிச்சிருக்கும்.
இதுலே எங்களுக்குன்னு தனியா பெஞ்சுங்களுக்குப் பின்னாலே 'சேர்'போட்டு வச்சிருப்பாங்க
தியேட்டருலே.
படம் முடியற வரைக்கும், அக்காங்களுக்கு, மனசு 'திக் திக்'னு இருக்கும். ஏன்னா, ஆசுபத்திரியிலே
அர்ஜெண்டா கேஸ், கத்திகுத்து, ஆக்ஸிடெண்ட்னு வந்திடுச்சுன்னு வச்சிக்குங்க. உடனே தியேட்டருக்கு
ஆளு வந்துரும் டாக்டரைத்தேடி. உடனே எல்லாரும் கிளம்பி வீட்டுக்கு வந்துடணும். கால்வாசி, அரைவாசின்னு
நிறைய படம் பாத்திருக்கோம். சொல்ல மறந்துட்டனே, இடைவேளையிலே, நான் போய் பாட்டுப் புஸ்தகம்
வேற வாங்கிட்டு வரணும்.10 காசுன்னு ஞாபகம்.
அப்பா, வேலைகாரணம் வேறு ஊரில் இருந்தார். தனியாக ஒரு பெண்பிள்ளை (அம்மாதான்) வளர்ப்பு
என்பதால், ஏதாவது பேச்சு வந்துவிடுமோன்னு,கவனமா இருப்பாங்க எப்போதும்.
படத்துக்குப் போய்வந்த மறுநாள்தான் அக்காங்களுக்கு நிறைய வேலை இருக்கும். வெளியே வாரிப்
போட்ட துணிங்களையெல்லாம், மடிச்சு, பீரோவுலே அடுக்கவேண்டாமா?
நன்றி: மரத்தடி. 24 ஜூன் 2004
Monday, August 04, 2008
" நாங்க சினிமாவுக்குப் போறோம்." (மரத்தடி நினைவுகள்.)
Posted by துளசி கோபால் at 8/04/2008 03:05:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
56 comments:
டீச்சர், நம்ம வத்தலக்குண்டா, இம்புட்டு நாள் தெரியாம போச்சே.......
:-))))
வாங்க தமிழ் பிரியன்.
அப்ப மறுக்காப் போட்டதுக்குப் பயன் இருக்கு:-)))
இன்னொரு வத்தலகுண்டுப் பதிவரும் இங்கே இருக்கார்.
வாங்க விஜய் ஆனந்த்.
சிரிப்புக்கு நன்றி:-)
நல்ல எண்ணம் தான் திரும்ப படிச்சு ரிவைஸ் பண்ணிக்கலாம்.. :) இந்த கலர் கலர் சாந்து பொட்டை இப்படித்தான் நான் டிசைன் அட்டை பார்த்து வச்சிப்பேன்.. சரியா வரலன்னா அத தொடச்சி மேக்கப் திரும்ப போட்டு பொட்டிடறது நினைவுக்கு வருது..
///துளசி கோபால் said...
வாங்க தமிழ் பிரியன்.
அப்ப மறுக்காப் போட்டதுக்குப் பயன் இருக்கு:-)))
இன்னொரு வத்தலகுண்டுப் பதிவரும் இங்கே இருக்கார்.///
ஆமாம் டீச்சர்... காந்தி நகரில் தான் வீடு... மனைவி, மகன் எல்லாம் அங்கே.. நாம இங்கே....:)
நாங்க கன்னாபட்டி. (அதுதான் செக்காபட்டி பக்கத்தில இருக்கிற குன்னுவாரங்கோட்டை.) என்னோட ஃபேவரைட் தியேட்டர் வத்தலக்குண்டு கோவிந்தசாமி தியேட்டர். வத்தலக்குண்டுல ஒரே நாள் கௌரவம், (மு.க.முத்து நடிச்ச) பூக்காரி ரெண்டு படமும் பார்த்த ஞாபகம் இருக்கு.
இன்னிக்கும் தியேட்டருக்கு சினிமா பாக்கப்போறது எனக்கு அருமையான அனுபவந்தான். என்னதான் டீ வில பாத்தாலும் தியேட்டருக்கு சினிமா பாக்கன்னு போய் ஒரு பொழுது நண்பர்களோட செலவழிச்சா அதோ மதிப்பே தனி
டீச்சர்...ஒரு சினிமா பார்க்க இவ்வளவு களேபரமா?
சின்ன வயசுல ரொம்ப வாலுப்பொண்ணா இருந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்..
நல்லா எழுதியிருக்கீங்க டீச்சர்
வாங்க கயலு.
பொட்டு இப்பச் சரியாச்சா? :-))))
தமிழ் பிரியன்,
என் காலத்துலே அங்கே ஒரு நகரும் இல்லை.
ராஜாஜி மைதானத்தைத் தேடி அலைஞ்சேன் ரெண்டு வருசம் முந்தி(-:
நம்ம பதிவர் ஒருத்தர் வந்தலகுண்டுக்காரர். அவரோட அப்பாகிட்டேக் கேட்டுத் தகவல் கொடுத்தார்.
இன்னும் சில பதிவுகள் இந்த ஊரைச்சுற்றியே வரப்போகுதுன்னு எச்சரிக்கை தரவா? :-))))
வாங்க ரமேஷ் வைத்யா.
முதல்முறையா வந்துருக்கீங்க போல?
வணக்கம். நலமா?
சொந்த ஊர் இல்லாத எனக்கு நினைவில் உள்ள ஊர் வத்தலகுண்டுதாங்க:-)
அப்பெல்லாம் அங்கே ஒரே ஒரு தியேட்டர்தான்.
சந்திரா டாக்கீஸ்.
வாங்க சின்ன அம்மிணி.
பெரிய திரை நல்ல மஜாதான். ஆனா எங்களுக்குக் கொடுப்பினை இல்லை.
18 x 2 டாலர் கொடுத்து ஆங்கிலப்படம் போகணுமான்னு இருக்கு.
வாங்க ரிஷான்.
வாலுன்னா அறுந்த வாலுதான்.
மரமெல்லாம் ஏறுவேன் அப்ப:-))))
// படம் போடப்
போறான். சீக்கிரம் நடங்கன்னு சொல்லி, எல்லோரும் ஓட்டமும், நடையுமா//
இது கிளைமாக்ஸ்:)))
தியேட்டருக்கு சினிமா பாக்கப் போவது
என்பது அந்நாளில் பெரிய ப்ராஜெக்ட்தான்.
மேம்பாலம் கட்டாத அறுபதுகளில்
அண்ணன் சினிமாவுக்கு அழைத்துப்போவது..ஒரே கலட்டாவா இருக்கும். நீங்க சொன்ன புடவை,சாந்து(நான் வீட்டிலேயே பேரனுக்காக செய்தேன்), மற்ற துரகபதாதிகள் அனைத்தும் முடிந்து காரில் ஏறினால்
ஒரே பிரார்த்தனைதான். 'கடவுளே! ரயில்வே கேட் மூடியிருக்கக்கூடாதே...
படம் டைட்டிலேயிருந்து பாக்கவேண்டுமே...!' கடவுளும் மற்ற வேலைகளையெல்லாம் ஓரம் தள்ளிவிட்டு
எங்கள் பிரார்த்தனைகளை நிறைவேத்திவைப்பார். சில சமயம் வேலைப் பளு ஜாஸ்தியானால் கண்டுக்காமலும் விட்டுவிடுவார். ஹூம்...அது பொற்காலம்!!துள்சி!!!
நன்றிம்மா துளசி.
சாந்துப் போட்டு சந்தனப்பொட்டுனு பாட வச்சதுக்கு.
சிகப்புப் பொட்டு எப்ப வந்ததுன்னு நினைவு இல்ல.
ஆனா அம்மாதான் வைக்கணும்.
அதுவும் திலகம் தான்.
வட்டமா வைக்காதே மூக்கு மொண்ணையாத் தெரியும்னு உத்தரவு.
அரிசி முறுக்கு கலர் ஜோடா சாப்பிட்ட அனுபவம் உண்டா.:)
//நம்ம தளத்தில் வாரம் ஒன்னு போட்டு வைக்கப்போறேன்.
//
கட்டாயம் போடுங்க. சுவாரசியமா இருக்கு..
//நல்லா காஞ்சு, கெட்டியா இருக்கும்.
அதுலே, இரண்டுதுளி தண்ணீர்விட்டு, குழைக்கணும்.//
குழந்தைகளுக்குதான் இப்படி பொட்டு வச்சி பாத்திருக்கேன்..
டீச்சர் மேடம், மரத்தடி நினைவுகளை மீள்பதிவு செய்ய ஆரம்பித்ததுக்கு நன்றிகள்.
நான் கூட உங்க பழைய பதிவுகளை படிக்கலாம்னு மரத்தடிக்குள்ளே நுழைஞ்சேன். உடனே தப தபன்னு எறும்புகள்(வைரஸ்!) கணினிக்குள்ளே நிரம்பிட்டுது. முடிஞ்சா அவங்க கிட்டே சொல்லி மருந்து போட சொல்லுங்க. :)
///சொந்த ஊர் இல்லாத எனக்கு நினைவில் உள்ள ஊர் வத்தலகுண்டுதாங்க:-///
ரொம்ப சரியா சொன்னீங்க.. பிபிஸ்ரீனிவாஸ் பாடுற மாதிரி.. (எந்த ஊர் என்றவனே..) வாழ்ந்த ஊர் தான் சொந்த ஊர்.
இன்னிக்கும் எனக்கு சின்ன வயசில் தஞ்சாவூரிலே சினிமா பாக்க போன ரிச்சுவல் நினைவுகள் இருக்கு.. அதிலும் 'பீகாரில் வறட்சி, ஒரிசாவில் வெள்ளம்னு நியூஸ்லேந்து பாத்தாத்தான் திருப்தி! :-)))
அட ரொம்ப நாளாச்சுங்க படிச்சு :).திரும்பவும் படிச்சாலும் புதுசு மாதிரிதான் இருக்கு(மாறந்துட்டோம்ல)
நான் இப்போது தான் முதன் முறை படிக்கிறேன். எந்த நிகழ்ச்சியைப்பற்றி எழுதினாலும், உதாரணத்துக்கு பழையகால சினிமாவைப்பற்றி எழுதும்போது அந்தந்த காலக்கட்டத்துக்கே அழைத்து செல்கிறீர்கள். நல்ல பதிவு. :)
//முதலில், என்னை ரெடி பண்ணிடுவாங்க. நான் ரொம்ப தொல்லையாம். கவுனை அழுக்குப் பண்ணாம
இருக்கணும்னு உத்தரவு வேற. சரின்னு உக்காந்திருப்பேன்//
So cute!!! :)
//அம்மாவப் பாத்தவுடன் ஓடி வருவேன். அம்மா உள்ளேபோய், அக்காங்களைக்
கேப்பாங்க," துளசிக்கு ஒரு நல்ல கவுனாப் போட்டு, தலைசீவி விடக்கூடாதா? " அவ்வளவுதான். //
இதுவும் ரொம்ப க்யூட். :)
வாங்க ராஜ நடராஜன்.
ஒரு நாளும் சினிமாவை டைட்டிலோடப் பார்க்கலை அவுங்க. இப்ப வீட்டுக்குள்ளேயே நம்ம தியேட்டர். படத்தைவிடவும் டைட்டிலில் யார்யாருன்னு பார்க்கும் பழக்கம் வந்துருக்கு.
காலம்......
வாங்க நானானி.
ஒரு வருசம் சினிமாத் தியேட்டர் இல்லாத ஒரு ஊரில் இருந்தோம். அப்ப அண்ணன் மட்டும் வாடகை சைக்கிளில் சித்தயங்கோட்டைக்குப்போய்ப் படம் பார்த்துவந்து எங்களுக்கு ஃப்ரேம் பை ஃப்ரேம் கதை சொல்வார்.
அது இன்னும் மஜாவா இருந்துச்சு.
வாங்க வல்லி.
//அதுவும் திலகம் தான்.
வட்டமா வைக்காதே மூக்கு மொண்ணையாத் தெரியும்னு உத்தரவு.
அரிசி முறுக்கு கலர் ஜோடா சாப்பிட்ட அனுபவம் உண்டா.:)//
ஆமாமாம். வெளக்குமாத்துக் குச்சியைக் கைப்பிடிபக்கம் ஒடைச்சு எடுத்துக்கணும் திலகம் வைக்க:-))))
தீனி ஒன்னும் திங்கவிடமாட்டாங்கப்பா இந்த அம்மா(-:
தியேட்டர்க்காரர் கலரை ஒடைச்சு எடுத்துவந்து அம்மா கையில் பவ்யமாக் கொடுப்பார். அதுக்கும் கோச்சுக்குவாங்க. திருப்பி அனுப்புவாங்க. சிலசமயம் அது எனக்குக் கிடைக்கும்!
வாங்க புபட்டியன்.
அப்ப இந்த சாந்துக்குப்பி எல்லாம் கிடையாதுங்க.
நானும் அதைப்போல ஒன்னு செய்யணுமுன்னு முயற்சித்தேன்.
சரியா வரலை(-:
அரிசியை கருப்பா வறுத்துட்டு அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவச்சுக் கடைஞ்சு கொட்டாங்குச்சியில் ஊத்திவைப்பாங்க.
அப்படி ஊத்தும்போது ரெண்டு மூணு துளி அத்தர் சேர்த்துட்டா வாசனை தூக்கும்.
வாங்க தமாம் பாலா.
பயந்துக்கிட்டேதான் பதிவு செஞ்சேன்,
கீறல் விழுந்த ரெக்கார்ட் ஆகிறப்போகுதுன்னு.
நல்லவேளை. என் சேமிப்பில் இருந்துச்சு,ஆனால் திஸ்கியில்.
மறுவாழ்வு கொடுக்கணும்தானே? :-))))
பொங்குதமிழ் தான் கை கொடுக்குது.
மரத்தடி இப்ப கைமாறி இருக்குன்னு ஒரு தோணல்.
வாங்க இளா.
ஆறுமாசப் பழசான குமுதம் விகடனைக்கூடத் தொட்டுக்கிட்டேச் சாப்பிடும் வழக்கம் எனக்கு.
நாமெல்லாம் அப்படியேதான் இருக்கோம்போல:-))))
வாங்க க.ஜூ.
கொசுவத்தி ஏத்துனதும் 'பேக் டு த ஃப்யூச்சர் 'சினிமாதான்:-))))
டைம் மெஷீன்லே உக்கார்ந்துருக்கேன்.
:))
போச்சிரா,, கொசுவத்திய ஏத்தியாச்சா? ம்ம்ம்.....
என் பங்குக்கு.. ம்ம்ம்.... நம்ம தியெட்டர்ல...(நம்பன்னா....நம்ம வீட்டுக்கிட்ட இருக்கன்னு அர்த்தம்... உங்க தியெட்டரான்னு எல்லாம் கேக்கப்படாது..ஆமா.. செரியா..) பெஞ்சி எல்லாம் காஸ்ட்லி டிக்கட்டுங்க... சோ... ஆல்வேஸ்... தரை டிக்கட் தான்...மண்ண குமிச்சி (கொஞ்சம் ஜாக்கிறதையா செய்யணும்.....துண்டு பீடி....வேர்கடல தோலுக்கு நடுவுல... சமயத்துல யாரும் எச்சி துப்பி வச்சி இருந்தா அது வேற கைய நனைக்கிற அபாயம் இருக்கு...) அது மேல உக்காந்துகிட்டு படம் பாக்கணும்.( நம்ம உயரத்துக்கு எல்லாம் படம் எப்படி தெரியும் பின்ன). அப்பிடியும் கொஞ்ச நேரத்துல படம் தெரியாது.எல்லாம் பின்னால இருக்க மகானுபாவர் நம்ம பீடத்த சொரண்டி (மணலுதானே!!!) அவரு பீடம் கட்டி இருப்பாரு....
எப்பவும் பாதி படம் தான்..அப்புறம் அவுட் பாஸ் வாங்கிக்கிட்டு மறுநாள் தான் மீதி படம்..ஏன்? அப்போதானே வீட்டுக்கு புரியாது எங்க போய்ட்டு வரோம்ன்னு....வுடுங்க... வுடுங்க... அது ஜெயிண்ட் சைஸ் கொசுவத்தி...ம்ம்ம்....
இப்போ தெரியுது நாங்க எவ்வளவு கொடுத்து வச்சவங்க என்று. இணையத்திலேயே திரைப்படம் பார்த்துவிடலாமே இப்போது!
//அப்பல்லாம் டி.வி.வரலை. நீங்கல்லாம் பிறந்துகூட இருக்கமாட்டீங்க.
//
:)))
பழைய நினைவுகள் எப்பவுமே சுகமானது தான். இல்லையா டீச்சர்? நீங்க பெரிய டாம்கேளா இருந்ருப்பீங்க போலிருக்கே! :p
//எம்.ரிஷான் ஷெரீப் said...
டீச்சர்...ஒரு சினிமா பார்க்க இவ்வளவு களேபரமா?
சின்ன வயசுல ரொம்ப வாலுப்பொண்ணா இருந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்..//
அதுல எனக்கு சந்தேகமே இல்ல :-))))
உள்ளேன் ரீச்சர்.
வாங்க இனியவள் புனிதா.
இணையத்துலே டவுன்லோடு பண்ணிப் பார்க்கும் அளவுப் பொறுமை இல்லீங்க.
அதுவும் நான் ஒருக்காப் பார்த்துட்டு, கோபாலும் பார்க்கணுமுன்னா டபுள் வேலை.
நம்ம வீட்டில் ஒரு வீடியோ லைப்ரரி நடத்திக்கிட்டு இருக்கேன். எல்லாப் படங்களும் வாங்கறோம், ஐங்கரன் நியூஸியில் இருந்து. ஆனாலும் எல்லாம் உங்க நாட்டில் இருந்துதான் வருது:-)))))
எங்க பாட்டி இதைப் பற்றி என்ன நினைக்கிறாங்களோன்னு இருக்கும். 'அங்கே போனதும்' மறக்காமக் கேட்டுறணும். வேணுமுன்னா இதைப் பத்தியும் ஒரு பதிவு எழுதலாம்;-)
வாங்க விஜய்.
ரெண்டு நாளாக் கொஞ்சம் பிஸியாப் போயிட்டேன். வெய்யிலு வந்துருக்கு. விடமுடியாதே!!!
நீங்க சொன்ன சம்பவம் சிரிப்பா இருக்கு.
ஆனாலும் ஆத்து மணலில் உக்கார்ந்து படம் பார்த்தால் குஷியாத்தான் இருக்கும்.
நமக்குத் தெரிஞ்ச ஒரு பையன், எப்பவும் பாதிப்படம்தான் பார்ப்பது வழக்கம். அதுவும் பின்பாதி மட்டும்.
இண்டர்வெல் ஆனதும் கேட்டில் நிக்கும் ஆளிடம் பத்து இல்லை இருபது பைசா( கையில் அவ்வளோதான் இருக்கும்) கொடுத்துட்டுட்டு, பார்த்துட்டு வருவான்.
"சேச்சி, இன்னெல 10 பைசையிலே அகத்துக்கேறிப் படம் கண்டு"
முன்பாதிக் கதை நான் சொல்லுவேன்:-)
வாங்க அம்பி.
கடைக்குட்டி நான் என்றதால் நிறைய சலுகைகள் கிடைச்சது. அம்மாவை என்னோட 11 வயசுலே இழந்ததும் சலுகைகள் எல்லாம் சட் னு நின்னு போனதுலே நான் ரிபெல்லியள் (!!)ஆகினது வேறொரு தனிக்கதை:-)
வாங்க கிரி.
பொறவி குணம் மாறுனதாச் 'சரித்திரம்' உண்டா? :-))))
குரங்கு வந்து பொறந்துருக்குன்னு ......
சரி. விடுங்க:-)))
வாங்க சாமான்யன்.
சாமான்யத்துலே உங்க வாயிலே இருந்து வேற ஒன்னும் வந்துறாதே.....
இந்த 'உள்ளேன் ' தவிர:-))))
//ஆனாலும் எல்லாம் உங்க நாட்டில் இருந்துதான் வருது:-)))))//
Malaysia?
ஆமாங்க புனிதா.
தமிழ்சினிமாவை வச்சே ஏகப்பட்ட வியாபாரம் நடக்குதேப்பா:-))))
ஒன்னுத்துக்கும் இல்லாத பல சினிமாவைக்கூட விசிடியாப் போட்டு, எங்கமாதிரி காஞ்சுபோய் இருக்கும் ஊருக்கு அனுப்பிக் காசு பார்த்துடறாங்க.
இதுவரை திரையிடப்படாத எத்தனை சினிமாவுக்கு நான் விமரிசனம் எழுதி இருக்கேன் தெரியுமா? :-))))
//கடைக்குட்டி நான் என்றதால் நிறைய சலுகைகள் கிடைச்சது. அம்மாவை என்னோட 11 வயசுலே இழந்ததும் சலுகைகள் எல்லாம் சட் னு நின்னு போனதுலே நான் ரிபெல்லியள் (!!)ஆகினது வேறொரு தனிக்கதை:-)
//
11 வயதில் அம்மாவின் இழப்பா?? :(:(
ரொம்ப சாரி துளசி டீச்சர் :(
உங்க ரிபெல் ஸ்டேஜ் பற்றி கொஞ்சம் முடிந்தால் எழுதுங்கள் டீச்சர்.
க.ஜூ.
எழுதுனா ஆச்சு. பிரமாதமா என்ன?
//11வயசு.....//
நானே பரவாயில்லை. அதிர்ஷ்டம் கெட்டதுங்க உலகில் இன்னும் நிறைய இருக்கு(-:
என்னது பரவாயில்லையா? 11 வயது என்பது சிறுமியும் இல்லாமல். விடலையும் இல்லாமல் ஒரு குழப்பமான க்ரிட்டிகல் ஸ்டேஜ். அந்த வயதில் அம்மாவை இழப்பது மிகப்பெரிய இழப்பு. உங்களின் தைரியம் வியக்க வைக்கிறது(பெண்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் தைரியமானவர்கள் என்பது என் கருத்து)
நானானி சொன்னாற் போல நல்ல கொசுவத்தி. கருப்பட்டிச் சாந்து அம்மாவும் செய்வார்கள். பள்ளியில் ட்ரில் பீரியட் என்றால் வியர்த்து வழிந்து விடும். என் தங்கை சின்னதில் மொறுமொறு என பிய்த்தால் வட்டமாய் வந்து விடும் அப்பொட்டை உரித்து வாயில் போட்டுக் கொள்வாளாம்:))!
சின்னக் குழந்தைகளுக்கு வெளியில் செல்ல முதலில் ட்ரஸ் பண்ணிட்டு அப்பாட என நாம் ட்ரஸ் மாற்றி வரும்முன்.....அந்த களேபரம் எல்லா வீடுகளிலும் இன்றளவிலும் நடக்கிறது. அதுவும் லைட் கலர் ட்ரஸ் மாட்டி விட்டிருந்தால்...அவ்ளோதான்:))!
உங்களுக்கு 11 வயதில் அம்மாவின் இழப்பா:(? எனக்கு 9 வயதில் அப்பாவின் இழப்பு. அதுவரை குடும்பமாய் படம் போய் வந்தோம். அப்புறம் பெரியப்பா குடும்பம் போகும் போது டர்ன் போட்டு யாராவது ஒருத்தர் (நாங்க அஞ்சு பேர்) அனுப்பப் படுவோம். பார்க்கணும்னு நினைக்கற படத்தப்போ நம்ம டர்ன் வராது சில சமயம். ஆனா அதெல்லாம் பெரிய வருத்தமா இருந்ததில்லை.
ஒரு வாரம் தமிழ் மணம் பக்கம் வரலை. இப்ப இங்கிருந்து ஸ்டார்ட் பண்ணுறேன் உங்க வலைப் பூவில்:)!
க.ஜூ,
//பெண்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் தைரியமானவர்கள் என்பது என் கருத்து)//
இதுலே என்ன சந்தேகம்?
துணையை இழந்தவர்களில், மிச்சம் இருக்கும் வாழ்க்கையில் ஆண்கள்தான் சீக்கிரம் போயிடறாங்களாம். பெண்கள் தாக்குப்பிடிச்சு நிறைய நாள் இருக்காங்களாம்.
மனோ தைரியம் இல்லாட்டா இது முடியுமா?
இன்னும் நிறைய எடுத்துக்காட்டு இருக்கு. அதை வேறொரு பதிவில் பேசலாம்:-)
வாங்க ராமலக்ஷ்மி.
என்ன திடீர்ன்னு லீவு? ஆணி கூடிப்போச்சா?
பாட்டி வீட்டில் வளர ஆரம்பிச்ச பிறகு,
சினிமா பார்க்கணுமுன்னா பக்த குசேலா, கிருஷ்ணாவதாரமுன்னு படங்கள் வரணும். இல்லேன்னா ..... பாட்டி (டீச்சர் வேலை) ஸ்கூலில் சக டீச்சர்கள் எல்லாம் அருமையான படமுன்னு சர்ட்டிஃபிகேட் கொடுத்துருக்கணும். அதுக்கும் வீட்டில் இருந்து தியேட்டர் வரை போகும்போதும் வரும்போதும் ராணுவ ஒழுங்குமுறை கடைப்பிடிக்கணும்.
முக்கியமா..... சினிமாவில் நகைச்சுவை காட்சி வந்தால் சத்தம் போட்டுச் சிரிக்கக்கூடாது. இவ்வளவுக்குப் பிறகு சினிமாவுக்குப் போகணுமுன்னு தோணுமா?
ஆணி வேலையெல்லாம் எனக்குக் கிடையாது:)! அக்கடான்னு ஹோம் மேக்கிங்தான். வீட்ல 10 நாள் குடுப்பத்தினர் வருகை, கலகலன்னு போச்சு!
ராமலக்ஷ்மி,
வீட்டுலேதாங்க ஆணிகள் வகை பலதரத்தில் இருக்கு. அதுவும் சம்பளமில்லாமல் வாலண்டியர் வேலை.
எல்லாம் அந்தந்த சூழலுக்கேத்த ஆணிகள்.
ஹோம் மேக்கிங் இஸ் நாட் ஈஸி!!!
ரொம்ப சரி, அக்கடா என பலரும் நினைப்பாங்க. ஆனா "அக்கு அக்கா" தான் பிடுங்குறோம் ஆணியை..சரிதானே. உங்கள் புரிதல் சந்தோஷமா இருக்கு:)!
Teacher,
Hope you remember me and this my second comment. How are you doing and your husband. Hope you are getting used to chennai summer climate. Take care.
I read this again and Akka Vs Anna. I am really surprised and wonder how good you narrate each and everything in a interesting way. No words from me to express. Nice to know about your book (Chellangal). Now a days you are writing mainly about your travel. It is boring teacher.( only to me) In Between you please write something related to appuram kathaigal ayirathu nooru( you said you are having plans to write after your akka ) Please start teacher.
Then I just want to have mail communication alone teacher( this is only again my wish). I reside in Hyd and I have one lovely kid(Boy)
Again your write ups are simply superb.
Thanks,
Rubi.
நல்லாயிருக்கு டீச்சர், நான் கோவில் பதிவுகளை மட்டும் படித்ததால் இது மிஸ் ஆகிவிட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
டீச்சர் வத்தலகுண்டா? நான் ரெண்டு தரம் கொடைக்கானலுக்குப் போற வழியில் இறங்கியுள்ளேன். பஸ் ஸ்டாண்டுக்கிட்ட இருக்க ஆவின் பூத்துல பால் சாப்பிட்டுவிட்டு கொடைக்குப் போவது வழக்கம். அப்படியே திண்டுக்கல்,ஒட்டன்சத்திரம் வழியா வந்திங்கன்னா எங்க ஊரு தாராபுரம் வந்துரும்.
Post a Comment