இன்றைய ஸ்பெஷல் கிரகசாந்தி பூஜையுடன் ஆரம்பம் நம்மூர் நவகிரக சாந்தி பூஜைதான்.
வீட்டு முன்னால் போட்டுருந்த பந்தலில் குண்டம் வைத்துத் தீவளர்த்து ஹோமம் நடந்தது,.மகளையும் நண்பரையும் இன்னிக்கு இங்கே கூட்டிவருவதான ஏற்பாட்டின்படிப் போய்வரவே பதினொன்னரை மணி ஆகிருச்சு. நல்லவேளையா ரொம்பவும் மிஸ் பண்ணிறலை. பூஜை நடந்துக்கிட்டு இருக்கு. அநேகமா முடியும் நேரம்.
அடுத்த நிகழ்ச்சியா முதல்நாள் அம்மா முந்தானையில் வாங்கி முடிஞ்சுவச்சத் தேங்காய் மூட்டையை ஒரு குச்சியில் மாட்டிக்கிட்டு மாப்பிள்ளை வெளியில் கிளம்புறார். அதுக்குள்ளே அவரோட 'அம்மா பக்கத்து நெருங்கிய உறவினர்கள்' கொண்டுவந்த சீர்களைத் தட்டில் ஏந்திக்கிட்டுப் பாட்டுப் பாடியவாறே வாசல் கேட்டில் இருந்து புறப்பட்டு உள்ளே வர்றாங்க. அப்ப இதுதான் காசி யாத்திரையா இருக்கும்.
மாப்பிள்ளையின் அம்மா & கோஷ்டி அவர்களை எதிர்கொண்டு அழைச்சு, எதிரும்புதிருமா நின்னு சரிக்குச்சரியாப் எதிர்ப்பாட்டுப் பாடினாங்க. அதன்பின் மாப்பிள்ளையை நாற்காலியில் உக்காரவச்சு கொண்டுவந்த சீர்செனத்திகளை ஒவ்வொருத்தரா எடுத்து அவர் கையில் தந்தாங்க. அவரது அக்காமார் பின்னால் ஒரு பெஞ்சில் உக்கார்ந்துக்கிட்டு அதையெல்லாம் வாங்கி அடுக்கிட்டு இருந்தாங்க. ரெண்டு பவுன் எடையில் சங்கிலிகள் ஏழெட்டு வந்துச்சு. மறுநாள் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை போடப்போகும் உடுப்பு, இன்னும் பலவிதமான பரிசுப்பொருட்கள்.
சொல்ல விட்டுப்போச்சே..... முந்தா நாள் இரவு எல்லாருக்கும் மெஹந்தி போட்டுவிடறதுக்கு ஒரு பெண்மணியை ஏற்பாடு பண்ணி இருந்தாங்க. முதலில் கறுப்பு நிறத்தில் டிஸைன் வரைஞ்சுவிட்டாங்க. அதுக்கப்புறம் ரெண்டு மணி நேரம் ஆனதும் டிஸைனுக்குள்ளே சிகப்பு வண்ணம் வரும்வகையில் இன்னொரு மெஹந்திக் குழாயில் இருந்து 'ஃபில்லிங்' வேலை. ராத்திரி பதினொண்ணுவரை ஒருத்தர் மாத்தி ஒருத்தருன்னு கையை நீட்டிக்கிட்டு உக்கார்ந்திருந்தாங்க. சின்னக்குழந்தைகள்தான் ரெண்டு கையிலேயும் போட்டுக்கிட்டுச் சாப்பிடமுடியாமல் தவிச்சதுங்க. நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம். இதுவேணுமா அது வேணுமான்னு கேட்டு ஊட்டிவிட்டோம். வழக்கமாத் தின்றதைவிட அதிகமாத் தின்னுதுங்களே அம்மாக்களுக்கு ஆச்சரியம்:-)
பகல் உணவு வழக்கம்போல் ரொட்லி, ரெண்டுவிதமான காய்கறிகள், சாதம், பருப்பு, பாயசம். கூடவே செம்மீன்கள் கறி. ( இதென்னடா..... எப்பப் பார்த்தாலும் மீன்? நண்டு, இறால், அயிரை மீன் இப்படி ஒன்னுவிடாம தினம் வகைக்கு ஒன்னா ஆக்கிப்போட்டுக்கிட்டு இருக்காங்களே. ஒருவேளை பெங்காலிகளைப்போலக் கடல் உணவு, வெஜிடேரியன் வகையில் வந்துருச்சோ? )
ஒரு பக்கம் பூஜை புனஸ்காரமுன்னு இருக்கு, ஒரு பக்கம் விருந்துவகைகள் இப்படி? சாமியையும் சாப்பாட்டையும் போட்டுக் குழப்பிக்கறது இல்லை. இன்னொண்ணும் கவனிச்சேன். தாலி செண்டிமெண்ட் அறவே இல்லை. எப்போதும் ஆடைகளுக்கேற்ற ஆபரணங்கள். நம்ம பக்கம்தான் எது போட்டுக்கிட்டாலும் கழுத்துலே இருக்கும் தாலியை மட்டும் கழட்டவே கூடாதுன்னு நினைக்கிறோம். பல சந்தர்ப்பங்களில் கொஞ்சம் பொருந்தாமத்தான் ஆயிருது. மருத்துவமனைகளில் இருக்கும்போது மட்டும் போனாப்போகுதுன்னு ஒரு விதிவிலக்கு.
இன்னிக்கு மாலை மறுபடி பார்ட்டி. நல்லவேளையா மழை ஓய்ஞ்சது. கத்ரி ஹாலில் இவுங்க சமூகம் முழுசும் வந்து கூடுனாங்க. மறுநாள் கல்யாணத்துக்காக வந்து சேரவேண்டிய உறவினர் கூட்டமும் உள்நாட்டின் மத்த பகுதிகளில் இருந்து கடைகளைப் பூட்டிட்டு வந்துசேர்ந்துட்டாங்க. நானூறுபேருக்கு இருக்கும். இவுங்க கல்யாணங்கள் எல்லாம் எப்பவும் ஞாயிறுகளில் மட்டுமே வச்சுக்கறாங்க. அப்பத்தானே எல்லாரும் கலந்துக்க முடியும்.
பேய் மழையா இருந்ததால் கூட்டமே இருக்காதுன்னு (தப்பா) நினைச்சுட்டேன். கல்யாண மாப்பிள்ளை, சின்ன வயசுலே சமையலுக்கு ஊறவச்ச அரிசியை நிறையத் தின்னூட்டாரோ? அதான் கல்யாண சமயம் மழை வந்துருக்கு! நம்ம பக்கத்தில் இப்படி ஒரு சொலவடை இருக்குன்னு 'அண்ணியிடம்' சொன்னப்ப அவுங்களும் சிரிச்சுக்கிட்டே......' சமைக்கும் பாத்திரத்தில் இருந்து தட்டுலே எடுத்து வச்சுக்காமல் பசங்க அப்படியே ( 'ஹண்டி மேஸே காயேகேத்தோ') பாத்திரத்தில் கைவிட்டுத் தின்னால் இப்படிக் கல்யாணத்துக்கு மழை வருமுன்னு சொல்வாங்க'ன்னாங்க. பாருங்க இப்படி வெவ்வேற இடமுன்னாலும் சிலதெல்லாம் ஒன்னுபோலவே இருக்கு!!!!
அங்கே விருந்தில் சாமன்கோட் எனப்படும் மீன்கள்தான் பிரதானமா இருந்துச்சு. என்னைப்போல் இருந்த சில வெஜிடேரியன்களுக்கு மட்டும்
அருமையான ஸ்ரீகண்ட். பந்தி விசாரிச்சுக்கிட்டு வரும்போதே மீன் இல்லாத தட்டுக்கு (மட்டும்) இனிப்பு. எல்லாத்துலேயும் ஒரு கணக்குதான். 'குடி'களுக்கும் குறைவே இல்லை. அது பாட்டுக்கு அது இதுபாட்டுக்கு இது.
கணக்குன்னதும் இன்னொண்ணும் சொல்லணும். சமையலிலும் நம்மைப்போல் கண்ணளவு, கை அளவு என்ற பிஸினெஸெல்லாம் இல்லையாக்கும். சமையலை ஆரம்பிக்கணுமா? எடு அந்த கிச்சன் ஸ்கேலை......ஆத்துலே போட்டாலும் அளந்துதான் போடுவாங்க. ஆஹா.... அதுதானா ஒவ்வொரு முறையும் அதே ருசியில் அமையும் ரகசியம்!!!
கல்யாண வீடுகளிலாகட்டும், இன்னும் வேற விசேஷமா நிகழ்வுகள் ஏதும் இருக்கும் வீடாகட்டும் எல்லாரையும் விரட்டி வேலை வாங்கும் ஒருத்தர் கட்டாயம் இருப்பாங்க இல்லையா? கண்ணுக்குப் புலப்படாத வகையில் கையில் சாட்டை வச்சுக்கிட்டு:-))))
இங்கே கமாண்டர் இன் சீஃப் நம்ம மனி மாமிதான். இவுங்களைப் பத்திச் சொல்லலைன்னா அது நியாயம் ஆகாது. இவுங்களை நான் இந்த நாட்டுக்கு முதல்முதலா (அது ஆச்சு 26 வருசம்) வந்து இறங்கிய முதல் நாளின் முதல் மணியிலேயே சந்திச்சேன். அன்னிக்கு அவுங்க வீட்டுலே கல்யாணம். 'ரத்தன்ஜி' குடும்பம். அண்ணனும் தம்பியுமானக் கூட்டுக்குடும்பத்தில் தம்பி மகளுக்குக் கல்யாணம். அழையாத விருந்தாளி? ஊஹூம். இல்லவே இல்லை. எங்க கம்பெனி பங்குதாரர்களுக்கு அழைப்பு இருக்கே. நாங்களும் இப்பக் கம்பெனி ஆட்கள் இல்லையோ? இன்னும் சொல்லப்போனால் இவர்கள் உறவினர்கள் வேற. ஊர் நிலவரப்படி எல்லாருக்கும் சாப்பாடு அங்கேதான். அதனால் மொத்த ஊரையும் வந்த அன்னிக்கே சந்திக்கும் வாய்ப்பு.
மனி மாமியின் மைத்துனரின் இன்னொரு மகள் அட்டகாசமா பரத நாட்டியம் குச்சிப்புடி நடனம் ஆடுவாள். வயசு ஒரு ஏழு இல்லை எட்டு இருக்கும். ஒலிநாடாவில் வரும் பாட்டுகள். இங்கே எந்த விழா நடந்தாலும் (கோயில், Bula Festival, பள்ளிக்கூட விழாக்கள் இப்படி ) இந்தக் குட்டிப்பெண்ணின் நடனம் கண்டிப்பாக இருக்கும். எங்கே, யார்கிட்டே கத்துக்கிட்டதுன்னு விவரம் கேட்டப்ப ஆச்சரியமா ஆகிப்போச்சு. இவள் ஒரு ஏகலைவி:-) துரோணர் யாராம்? வீடியோக்கள்தானாம். அந்தப்பொண்ணு அமெரிக்கா, இங்கிலாந்துன்னு பல இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கு.
இப்படித் தன்குடும்பத்துலேயும் கலை வளர்த்ததில் மாமியின் பங்கு அதிகம். இவுங்க சமூகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் ஆர்வமாப் பங்கெடுத்துக்குவாங்க. எதையும் விட்டுக்கொடுக்கறதில்லை. வீட்டுலே விசேஷமா? கூப்புடு மனி பெ(ஹ)ன்னை:-) போனவருசம் மும்பைக்குப்போய் ரெண்டு முழங்கால் முட்டிகளிலும் அறுவை சிகிச்சை செஞ்சுக்கிட்டாங்களாம். ஆனாலும் இந்தக் கல்யாணத்துலேயும் கர்பா, தாண்டியான்னு அசராம ஆடியும் பாடியும் ஜமாய்ச்சது இவுங்கதான். மாமியின் கணவர் இறந்து இப்ப ஒரு 18 வருசமாச்சு.
இன்னொன்னு பாருங்க. இங்கே இவர்கள் சமூகத்தில் விதவைகளை நல்லமுறையில் நடத்தறாங்க. கணவனுக்கு விதி முடிஞ்சு அவர் போயிட்டார். அதுக்காக மனைவியை ஓரங்கட்டணுமா? நியூஸியில் எனக்குத் தெரிஞ்சத் தமிழ் பெண்மணி ஒருத்தர், கணவனை இழந்தவர். அவர் மூத்த மகனுக்குக் கல்யாணம் ஆனபோது அதைப் பார்க்கக்கூட அனுமதி இல்லைன்னு சொல்லி அழுதார். இப்ப இளைய மகனுக்கும் பெண்பார்த்துக்கிட்டு இருக்கோம். என் நிலை இப்படி ஆச்சேன்னு மனப் பிரயாசம்.
அப்ப நான் சொன்னது என்னன்னா...... ' உங்களுக்குத்தான் உண்மையில் மகன் கல்யாணம் பார்க்க உரிமை இருக்கு. மகன் நல்லா இருக்கணுமுன்னு மனப்பூர்வமா நினைக்கறது அவருடைய தாய் தகப்பந்தானே. ச்சும்மா வந்து கூட்டத்தில் சாப்புட்டுட்டுக் கொண்டாடிட்டு போறவங்களை விட உங்க ஆசீர்வாதம்தான் அவருக்கு முக்கியம்.'
(நீலப் புடவையில் மனி மாமி.)
நானும் மனி மாமிக்கு நீங்கதான் இங்கே கமாண்டர் இன் சீஃப்னு பட்டம் கொடுத்துப் பாராட்டுனேன். "ஆப் நைத்தோ இதர் இத்னா மஜா ஆயேகா நஹி. சப் ஸே ஆகே ஆப். பஹூத் அச்சா லகா."
தொடரும்.........:-))
பின்குறிப்பு:
நம்ம சிவிஆர் சொற்படிப் படங்களைப் பெருசாக்கலாமுன்னு நெருப்புநரி மூலம் போட்டுப் பார்த்ததில் சரியாத்தான் வந்துச்சு. ஆனால் அதுகளை நமக்கு வேண்டிய இடத்துக்கு இழுத்துக்கிட்டு வர முடியலை.
பரிசோதனைக்காகப் பப்ளிஷ் செஞ்சு பார்த்துட்டு டிலீட் செஞ்சேன். ஆனா.... கூகுள் ரீடரில் உக்கார்ந்துக்கிட்டு போகமாட்டேன்னு ஒரே அடம். அது அன் எடிட்டட் வர்ஷன் வேற.
இப்ப எக்ஸ்ப்ளோரரில் போய் இழுத்துவந்து வச்சுருக்கேன். சோதனையாப் போயிருக்கு இந்தப் பதிவு(-:
23 comments:
ரீச்சர், நான் நெருப்பு நரியில்தான் படம் காட்டறது. சாரி போடறது. ஆனா நீங்க சொல்லும் பிரச்சனை எல்லாம் இல்லையே. ஊருக்குப் போன பின் ஒரு மின்னரட்டையில் என்ன செய்யறீங்கன்னு சொல்லுங்க. எங்க தப்புன்னு பார்க்கலாம்.
வாங்க கொத்ஸ்.
எதோடு வெளயாடினாலும் நரியோடு ஆகாதுன்னு இருக்கேன்(-:
எப்படியோ சிறுபடம் வழக்கம்போல இருக்கு!
எப்ப ஊருக்கு வரப்போறீங்க?
அப்ப ஆறாவது நாள் தான் கல்யாணமா? அப்ப நாளைக்கும் வந்து பாத்துக்கிறோம்... :)
அந்த வீடியோ மாப்பிள்ளை கோவித்துக் கொண்டு போகும் காசி யாத்திரை மாதிரி தான் இருக்கு... ;))
வீடியோ எல்லாம் போட்டு பக்கா வர்ணனை.பதிவு சூப்பர்.
உங்கள் எழுத்தினால் எங்களையும் விழா நடக்கும் இடத்திற்கு கூட்டி சென்று விட்டீர்கள் !
கழுத்துலே இருக்கும் தாலியை மட்டும் கழட்டவே கூடாதுன்னு நினைக்கிறோம்
இங்கே சில வேலைகளில் தாலி இருக்கக்கூடாது என்று வேலைக்கு எடுக்கும் போதே சொல்லிடராங்களாம்.
\\நியூஸியில் எனக்குத் தெரிஞ்சத் தமிழ் பெண்மணி ஒருத்தர், கணவனை இழந்தவர். அவர் மூத்த மகனுக்குக் கல்யாணம் ஆனபோது அதைப் பார்க்கக்கூட அனுமதி இல்லைன்னு சொல்லி அழுதார். இப்ப இளைய மகனுக்கும் பெண்பார்த்துக்கிட்டு இருக்கோம். என் நிலை இப்படி ஆச்சேன்னு மனப் பிரயாசம்.\\ இன்னுமா இப்படி இருக்காங்க. மாறவே மாட்டங்களோ??
எனக்கும் இந்த வடநாட்டுக்காரங்களோட தாலிபத்திய விசயம் ஆச்சரியமா இருந்தாலும் .. நல்ல ப்ழக்கம்ன்னு தோணிச்சு.. பொட்டுக்கூட சிலர் வச்சிக்கறதில்ல.. மேலே வகிட்டில லேசா தீத்திட்டா ஆச்சு...
நம்மாளுங்க தான் இன்னமும் தாலி செயினுன்னு தூக்கி செமந்துட்டு பைக் காரனுக்கு வேலை வச்சிட்டு இருக்காங்க.. அவனும் பாத்து வச்சிக்கிறான் ,சவுத் இண்டியனா கயிறா இருந்தாலும் இழுத்துவை.. உள்ள குண்டுமணி இருக்குமுன்னு..
// இதுவேணுமா அது வேணுமான்னு கேட்டு ஊட்டிவிட்டோம். வழக்கமாத் தின்றதைவிட அதிகமாத் தின்னுதுங்களே அம்மாக்களுக்கு ஆச்சரியம்:-)//
வணக்கம் மேடம்.ஊட்டிவிடும் அம்மாக்களும்,நிலாச்சோறு சாப்பிடும் குழந்தைகளும்,கூடவே குட்டிக்கதைகளும் விஞ்ஞான பூர்வமாக ஆராயவேண்டிய விசயங்கள்.
//தோடு வெளயாடினாலும் நரியோடு ஆகாதுன்னு இருக்கேன்(-://
எனக்கு இப்ப நரிதான் தோழன்.எக்ஸ்புளோரருக்கு ஒரு நிமிசம் காத்திருக்கவேண்டியதுன்னா நரி இருபது வினாடியில வேகமா ஓடிவந்து செய்தி சொல்லுது:)
இன்னோண்ணுதுளசி,
தாலில இருக்கிற இத்தியாதி விஷயங்களூம் மெட்டல் டெஸ்டரில் சத்தம் போடுது. அப்பக் கழட்டி வச்சிட வேண்டி இருக்கு. மறுபடி ஃப்ளைட்டை விட்டு இறங்கும் போது அந்த ஊரில் செக் செய்தாட்டு மீண்டும் எடுத்துப் போட்டுக்கிறேன்:)
வீடியோ நல்லா இருக்கு. அப்பாடி எவ்வளவு பெரிய சக்கி!!அத்தனை மாவு வேணுமோ??
வாங்க தமிழ் பிரியன்.
இத்தனை நாள் கல்யாணக் கொண்டாட்டம் இருக்குமுன்னு தெரியாமல் நானும் உடைகளைக் கொஞ்சமாக்(??) கொண்டு போயிட்டேன்.
அட்ஜஸ்ட் பண்ணியாச்சு ஒரு வழியா. இனிமேல் கல்யாண அழைப்பு வந்தால் எத்தினிநாளுன்னு கண்டிப்பாக் கேட்டுக்கிட்டுக் கிளம்பணும்.
கோச்சுக்கிட்டுப் போனவரை புடிச்சாந்தாச்சு( பாட்டுப்பாடியே):-))))
வாங்க பிரேம்ஜி.
ஆர்க்கெஸ்ட்ராவா என்ன? எல்லாரும் ஒவ்வொரு 'பிட்சு'லே பாடிப் பட்டையைக் கிளப்புனாங்க.
ஆனா..... கம்யூனிட்டி 'ஸ்ப்ரிட்'டைப் பாராட்டத்தான் வேணும்:-)
வாங்க அருவை பாஸ்கர்.
கூட்டிட்டுப்போனவள் திரும்பிக் கூட்டிவந்து விடறேனான்னு வந்து பார்த்துக்கிட்டுப் போங்க:-))))
வாங்க குமார்.
இங்கே நியூஸியில் பலவேலைகளில் இப்படிச் சொல்றாங்க. மெக்டோனால்ட்ஸ், KFC யிலும் இதே ரூல்ஸ்!
காதுலே கம்மல்ஸ் கூட சில இடங்களில் அனுமதிப்பதில்லை.
வாங்க சின்ன அம்மிணி.
எப்படிப்பா மாறுவாங்க? தமிழ் சினிமா அப்படி மாற விட்டுருமா?:-)
வாங்க கயலு.
நல்ல பழக்கம்தான். ஆனா இதுவும் இல்லைன்னா தங்கம் என்ற விசயம் பல ஏழைக்குடும்பத்தில் இருக்கவே இருக்காது.
//அவனும் பாத்து வச்சிக்கிறான் ,சவுத் இண்டியனா கயிறா இருந்தாலும் இழுத்துவை.. உள்ள குண்டுமணி இருக்குமுன்னு..//
ஆனா.....கணவன் உயிருக்கும் இந்தக் கயிறுக்கும் போடும் முடிச்சுதான் ஃபோர்மச்சாக எனக்குப் படுது.
இது இல்லாமலும் எத்தனையோ கணவன்மார் மகிழ்ச்சியா நீண்ட ஆயுளுடன் இருக்காங்கதானே?
வாங்க ராஜ நடராஜன்.
இப்ப இந்தக் காலத்துலே தொலைக்காட்சிப்பெட்டிதான் செவிலித்தாயா இருக்கு!
நரி சிலருடைய பதிவுகளை ஒடைஞ்ச முறுக்கா ஆக்கிருது. (எ.கா: ஆயில்யன்)
எக்ஸ்ப்ளோரருக்கு ஜிமெயிலுடன் கொஞ்சம் சண்டை போல இருக்கு. தபால்பெட்டியைத் திறக்க அழிச்சாட்டியம் பண்ணும். நரிக்கு அதெல்லாம் இல்லை. பொட்டியை லகுவாத் திறந்துருது.
வாங்க வல்லி.
ஆமாம்ப்பா. இந்த மெட்டல் டிடெக்டர்....
கழட்டாம இருப்பதுதான் தாலின்னு வச்சுக்கிட்டா எனக்கு வளையல்தான்:-)
ஒவ்வொருமுறையும் அவுங்க கழட்டச் சொல்வதும், கையை வெட்டித்தான் எடுக்கணுமுன்னு நான் பதில் சொல்வதும் வழக்கமா இருக்கு:-)
ஒவ்வொருவேளையும் 150 பேர் சாப்பிடணுமுன்னா அவ்வளவு மாவு வேணாமா? :-)
நெருப்பு நரினா என்ன ஃப்யர் பாக்ஸா? இப்படி முதல் முறை கேள்விப்படறேன் :) :)
மீண்டும் நல்ல பதிவு.
//ஆனால் அதுகளை நமக்கு வேண்டிய இடத்துக்கு இழுத்துக்கிட்டு வர முடியலை.//
மேடம், படங்களை இங்கே அங்கேன்னு இழுக்காதீங்க. சமயத்திலே காணாப் போயிடும். EDIT HTML அப்படீன்னு ஒரு மெனு இருக்கு பாருங்க( அது COMPOSEக்கு பக்கத்திலே இருக்கும்) அதைத் திறந்து படத்துக்கான நிரலை(HTML code) வேண்டிய இடத்துல cut paste பண்ணிடுங்க. Centre, left align இல்ல right align இதெல்லாம் திரும்ப COMPOSE மெனுக்குள்ள வந்து பண்ணிக்கலாம்.
நான் எப்பவுமே படங்களுக்கான HTML ஐ Note Pad-ல சேமிச்சப் பிறகு தான் இந்த வேலையெல்லாம் செய்யறது. நடுவுல அது காணாப்போச்சுன திரும்ப அந்த code கிடைக்காது :)
வாங்க க.ஜூ.
நெருப்பு நரிக்கே இப்படிச் சொன்னா எப்படி?
இன்னும் நிறைய இருக்கு. நம்மாளுங்க இப்படி நிறையக் கண்டுபிடிச்சு வச்சுருக்காங்க:-))))
அப்பப்ப வரும்போது புரிஞ்சுக்குவீங்க.
வாங்க கபீரன்பன்.
நீங்க சொல்வதை முயற்சித்துப் பார்க்கிறேன்.
சரியா வந்துருக்கான்னு பார்த்துட்டு டிலீட் செஞ்சுக்கலாம். இல்லே இன்னொரு நாள் பதிவுக்கு சேமிக்கலாமுன்னா இந்த கூகுள் ரீடர் பூனைக்குட்டியை வெளியில் விட்டுருது(-:
Post a Comment