Thursday, July 31, 2008

வந்தான்யா... வந்தான்யா வெள்ளைக்காரன்................(ஃபிஜிப் பயணம் பகுதி 6)

மகளையும் நண்பரையும் இன்னிக்கு இங்கே கூட்டிவருவதான ஏற்பாட்டின்படி காலை எட்டுமணிக்கெல்லாம் நாங்க புறப்பட்டோம். கல்யாண வீட்டில் இன்னிக்குப் பத்து மணிக்குப் பெரிய பூஜை நடக்கப்போகுது. எப்படியும் அது முடிய மூணுமணி நேரமாகும். அதுக்குள்ளே வந்து சேர்ந்துக்கலாமுன்னு.........


ஃபர்ஸ்ட் லேண்டிங் போகணுமுன்னா லௌடூக்கா ( Lautoka) நகரைத் தாண்டித்தான் போகணும். இதுதான் நாட்டின் சுகர் சிடி( Sugar City). ஃபிஜி சுகர் கார்ப்பரேஷன் ஆலை இங்கே இருக்கு. ஆரம்பிச்சப்ப இது கலோனியல் சுகர் கம்பெனி (Australian Colonial Sugar Refining Company.). ஆரம்பிச்சது வெள்ளைக்காரர்கள். ஆமாம்.....வெள்ளையர்கள் இங்கே எப்ப, எப்படி வந்தாங்க?


18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (டிசம்பர் 1787) கேப்டன் வில்லியம் ப்ளை William Bligh என்றவர் இங்கிலாந்திலே இருந்து 45 பேர் அடங்கிய ஒரு குழுவோடு புறப்பட்டு H.M.S. Bounty. என்ற கப்பலில் Tahiti தீவை நோக்கி வந்தார். இவ்வளோதூரம் வரும் நோக்கம் என்னவா இருக்கும்?
ரொம்ப அல்பத்தனமானது. இங்கே கிடைக்கும் ப்ரெட் ஃப்ரூட் என்ற மரத்தின் கன்னுகளை எடுத்துக்கிட்டுப்போய் மேற்கிந்தியத் தீவுகளில் நடணுமாம். நல்லதுதானே? இதுலே என்ன அல்பத்தனம்?


மேற்கிந்தியத் தீவுகளில் இவுங்க கொண்டுவந்து வச்சுருக்கும் ஆப்பிரிக்க அடிமைகளுக்குச் சாப்பாடா இந்த ப்ரெட் ஃப்ரூட்டைக் கொடுக்கணுமாம். மலிவாக் கிடைக்கும் சமாச்சாரம். ஒரு மரத்திலே ஏராளமான காய்கள் காய்க்கும். அப்படியே பறிச்சுத் தின்னுங்கடான்னு சொல்லி விட்டுரலாம். ரொட்டின்னா அதைச் செஞ்சு கொடுக்கணும். 'ஈஸ்ட்டைப்போடு, மாவு பிசைஞ்சு அதைச் சுட்டு எடு'ன்னு ஆயிரத்தெட்டு வேலை. இது பெயரிலேயே ப்ரெட் இருக்கே. இதைத் தின்னா.... ரொட்டியையே தின்றதுக்குச் சமம்னு ஒரு நல்லெண்ணம். அடிமைகள்கிட்டே வேலை மாத்திரம் வாங்கிக்கணும். துன்னச் சோறுகூடப் போடக்கூடாது. ஹூம்.....

இந்த மரத்தின் காய்கள் பார்க்கறதுக்குப் பலாப்பழம் போல இருக்கும். ஆனா சைஸ் சின்னது. ஒரு பெரிய தேங்காய் அளவுலே இருக்கும். கேரளாவில் இதை 'கடச் சக்க'ன்னு சொல்வாங்க. தோலைச் சீவிட்டுப் பெரிய துண்டுகளா வெட்டி அப்படியே வேகவச்சுத் திங்கலாம். உருளைக்கிழங்கு போல ஒரு ருசி. இதுலே மசாலா போட்டுக் கறி பண்ணிக்கலாம். மெலிசாச் சீவி, சிப்ஸாப் பொரிச்சு எடுக்கலாம். நமக்குச் சொல்லித்தரணுமா என்ன?


வந்த வேலையை முடிச்சு, நிறைய கன்னுகளை எடுத்துக்கிட்டுத் திரும்பிப்போகும் வழியில் கப்பலில் இருந்த மாலுமிகளுக்கிடையே கருத்துவேறுபாடு சண்டைன்னு ஆகி ரெண்டு குழுவா பிளவுபட்டுப் போச்சு. இந்த கேப்டன் தன் கப்பலில் இருக்கும் மற்ற மாலுமிகளைக் கொஞ்சமும் மதிக்காம அடிமைகள் போல நடத்துவாராம். போதாததுக்கு ஆபாசமாத் திட்டவும் செய்வாராம். எத்தனை நாள்தான் பொறுத்துப்போவாங்க. சிலபேரைக் கொன்னுத் தண்ணியிலே தூக்கிப்போட்டுட்டு, கேப்டனையும் அவருக்கு ஆதரவா இருந்த 18 மாலுமிகளையும் கப்பலில் இருந்த ஒரு 23 அடி நீளப்படகில் ஏத்திவிட்டுட்டுப் பொழைச்சாப் பொழையுங்க, செத்தா சாவுங்க''ன்னுட்டுக் கப்பலை ஓட்டிக்கிட்டு போயிட்டாங்க கேப்டனின் 'எதிரிகள்.'இந்தப் படகையே, தன்கிட்டே இப்ப மிச்சம் இருக்கும் 17 பேரை(ஒருத்தர் செத்துட்டார்) வச்சுக்கிட்டு 3618 மைல் ஓட்டிக்கிட்டுப் போயிருக்கார். . சரியான கில்லாடிக் கேப்டந்தான். இந்த சம்பவம் இவருக்கு வீரதீரமான ஆள்தான்னு நல்ல பெயரைச் சம்பாரிச்சுக் கொடுத்துருக்கு. அப்படிப் போகும்போது ஃபிஜித் தீவுகளில் ரெண்டு பெரிய சைஸ் தீவுகள் இருக்குன்னு சொன்னேனில்லையா? அதுகளுக்கிடையில் பயணம் செஞ்சுருக்காங்க அப்ப. இவ்வளவுதூரம் இந்தப்பக்கம் வந்தாலும் ஃபிஜித்தீவில் இறங்காமச் சும்மாப் போனவங்கதான் இவுங்க.


மூணாம் முறையாக இந்தப் பஸிபிக் கடல் பகுதிகளுக்கு கேப்டன் ஜேம்ஸ் குக் பயணப்பட்டப்ப , வில்லியம் ப்ளையைத் தன் குழுவில் சேர்த்துக்கிட்டார். வில்லியம் சார்ட் வரைஞ்சு குறிப்பு எடுத்து வைப்பதில் நிபுணராம். கேப்டன் குக்கிடம் ரொம்ப நல்ல பெயர் வாங்கி இருக்கார்.


ஒரு பயணத்தில் ஹவாய்த்தீவில் இருந்த ஒரு குழுவினரால் கேப்டன் குக் கொல்லப்பட்டார் . தலைவனை இழந்த கப்பலைத் தைரியமா இங்கிலாந்துவரை திருப்பிக்கொண்டுவந்து சேர்த்தவர் இந்த வில்லியம் ப்ளை.


சரித்திரக்குறிப்புகளின் படி இந்தத் தீவுகளை முதலில் 'கண்டவர்' இவர்தான்.


19 ஆம் நூற்றாண்டுகளில் ஒரு காலக்கட்டத்தில்தான் முதல்முதலா சில வெள்ளைக்காரங்க இங்கே கால் பதிச்சாங்க. கப்பல் உடைஞ்சுப்போய் அப்படியே மிதந்து வந்தவங்க, ஆஸ்தராலியாவில் இருந்து தப்பி ஓடிப்போன குற்றவாளிகள்ன்னு ஒரு சிலர். சரியான வருசத்தைப் பத்தி எந்தக் குறிப்பிலும் இல்லை என்பதுதான் விசனம்.


அப்ப இங்கே பிஜியன்களிடம் ரொம்பவே நாகரிகம் இல்லாத காட்டுமிராண்டிகள் வாழ்க்கை. அவுங்க வந்தே 3300 வருசம் ஆகி இருந்துருக்கு. உடல் பலம் உள்ளவன் தலைவன் ஆகறது, வெவ்வேற குழுக்களாப் பிரிஞ்சு சண்டை, சச்சரவுன்னு இருந்துருக்காங்க. கூடவே நரமாமிசம் தின்னும் பழக்கம்வேற. 'மதம் பிடிக்காத' வாழ்க்கை. மெலனீசியா, பாலினீசியான்னு வெவ்வெற இடங்களில் இருந்துவந்து அப்படியே துண்டுபோட்டு உக்கார்ந்தவங்கதான். சில குழு மக்களுக்கு நீள முடி, கம்பி மாதிரி சுருண்ட முடி, மாநிறத் தோல், சிலது நல்ல கருமையான நிறமுன்னு இருந்தாலும் எல்லாரும் வாட்டசாட்டமான உடலமைப்பும் உயரமும் கூடுனவுங்க. சின்னச்சின்னதா குழு. அந்தக் குழுக்களுக்கு தலைமையா இன்னொன்னு தலைக்குத் தலையா அமைச்சுக்கிட்டு வாழ்ந்துக்கிட்டு இருந்தாங்க. கூட்டம் பெருகப்பெருகப் பாலினீசியர்கள் மெள்ள மெள்ள இடம் பெயர்ந்து சமோவா, டோங்கான்னு பக்கத்துத் தீவுகளுக்குப் போயிட்டாங்க. இப்ப இதெல்லாம் தனித்தனி நாடுகள்.வெள்ளையர்களைத் தொடர்ந்து சில வியாபாரிகள், சீனர்கள் எல்லாம் வந்துருக்காங்க. ரெண்டாவது பெரிய தீவுன்னு சொன்ன வனுஆ லெவு தீவில் சந்தன மரங்கள் இருந்துருக்கு. ஒரு பத்துவருசம் இதே வேலையா இருந்து மரங்களையெல்லாம் வெட்டிக்கிட்டுப் போயிருக்காங்க சில வியாபாரிகள்.
அதே சமயம் மதம் என்ற ஒன்னு இல்லாத மனிதர்களுக்கு மதபோதனை செய்ய கிறிஸ்த்துவ மெஷினரிகள் வந்து சேர்ந்தாங்கப்பா. (ரெண்டு மூணு பேரைக் காணோமாம். ருசியா இருந்துருப்பாங்க போல!) ரெண்டு பெரிய குழுக்களுக்கு இடையே பொழுதன்னிக்கும் சண்டை இருந்துக்கிட்டு இருந்த காலக்கட்டம். சண்டைகளால் தளர்ந்து போயிருந்த ஒரு குழுவின் தலைவர்
Ratu Seru Cakobau என்பவர் 1854 வது வருசம் கிறிஸ்த்துவ மதத்தைத் தழுவினார். இதுக்குள்ளே இங்கே இருந்த வெள்ளையர்கள் 2000 பேருக்குக்கிட்டே ஆகி இருந்தாங்க.ஊர் ரெண்டு பட்டா....யாருக்கோ கொண்டாட்டமாமே! அதுதான் ஆச்சு. நாங்க எதுக்கு இருக்கோம்? உங்க நாட்டை நாங்க எப்படி நல்லா ஆக்கிக் காட்டுறோம் பாருன்னு தலையை விட்டாங்க. அப்ப இங்கே இருந்த முக்கியமான ஏழு குழுக்களின் தலைவர்களைக் கூப்புட்டுப்பேசி நாடு முழுசுக்கும் ஒரு தலைவர் இருக்கணுமுன்னு சொல்லி Ratu Seru Cakobau 1865 லே முதல் தலைவர் ஆனார். (இந்த ஏழு தலைவர்கள் தான் இன்னமும் கிரேட் கவுன்சில் ஆஃப் சீஃப். இவுங்களில் ஒருத்தர், தலைகளுக்கு மேலே ஒரு பெருந்தலையாத் (paramount chief )தேர்ந்தெடுக்கப்படுவார். எல்லாம் இந்த ஏழு குழுக்களுக்குள்தான். வெளியே இருந்து யாரும் உள்ளெ நுழைஞ்சுற முடியாது) ரெண்டு வருசத்தில் டோங்கா தீவைச் சேர்ந்த ஒருத்தர் தலைவரா உள்ளே நுழைஞ்சதும் சண்டை மறுபடி ஆரம்பிச்சுருச்சு. பழைய தலைவர் சமயம் பார்த்து, தன்னை இந்த நாட்டுக்கு ராஜாவா அறிவிச்சுக்கிட்டார். ராஜான்னு ஆனதும் வருசாவருசம் தலைவனைத் தேர்ந்தெடுக்கறது என்ற பிரச்சனையை ஒழிச்சார். மத்தவங்க சும்மா இருப்பாங்களா?


ராஜா என்ற அந்தஸ்த்தோடு இன்னொரு ராஜாகிட்டே உதவி, பேச்சுவார்த்தை (நேரடியா ராஜாகிட்டே இல்லை. அவரோட பிரதி நிதிகள் மூலமாத்தான்) எல்லாம் ஆனது. October 10, 1874 ஒப்பந்தம் போட்டு முடிச்சாங்க. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் இன்னொரு காலனியா இருந்துட்டுப்போகட்டுமே...... பெரிய மனசுதான்:-)ஃபிஜி நாட்டுக்குன்னு சில கொள்கைகள் உருவாக்குனாங்க. இங்கே இருக்கும் லோக்கல் ஃபிஜியர்களின் கலை கலாச்சாரம் எல்லாம் முற்றிலுமா பாதுகாக்கறோமுன்னு முதல்படியா, நாட்டில் இருக்கும் நிலமெல்லாம் ஃபிஜியன்களைத்தவிர வேற யாருக்கும் விக்கவோ வாங்கவோ அதிகாரம் இல்லைன்னு சட்டம் போட்டாங்க.இந்த கவுன்சில் ஆஃப் சீஃப், அரசுக்கு உதவியா இருந்து அரசாங்கத்தை வழி நடத்தணும். எந்த மாற்றம் கொண்டுவந்தாலும் அவுங்க சரின்னாத்தான் முடியும். அரசு அதிகாரிகளா இருக்கும் உரிமை ஃபிஜியர்களுக்கு மட்டும்தான்.எந்த நிலையிலும் ஃபிஜியர்களின் நல்வாழ்வுதான் முக்கியம். அவுங்க விவகாரத்தில் தலையிட மத்த ஆட்களுக்கு உரிமை இல்லைன்னு பலவிதமான சட்டங்கள்.

( Ba அருகில் இருக்கும் கிராமத்தின் தலைவர் குடியிருப்பு)
பிரிட்டன் பிடிக்கும் இடங்களில் எல்லாம் மக்களை உக்கார்த்திவச்சுச் சோறு போட்டு வளர்ப்பாங்களா? அங்கே இருக்கும் மக்களைக்கொண்டே எதாவது செஞ்சு பணம்காசு சேர்த்து அதை ராஜாவுக்குக் கொடுக்கணும். அதே சமயம் அந்த நாடும் கொஞ்சம்போல வளரவும் செய்யும். என்ன செய்யலாமுன்னு திட்டம் போட்டப்ப இனிப்பான விஷயம் மாட்டுச்சு. அதுதான் கரும்பு.


முதல் கவர்னரா Sir Arthur Gordon வந்து சேர்ந்தார். இவர் ஏற்கெனவே மொரிஷியஸ் தீவுகளுக்கு கவர்னரா இருந்தவர். அனுபவஸ்த்தர். என்னமாதிரி அனுபவம்? நாப்பது வருசம் முன்னேயே (1834) கரும்புத்தோட்டக் கூலிவேலைக்கு இந்தியாவில் இருந்து ஆட்களை மொரிஷியஸுக்குக் கொண்டு போனதுதான். அதே டெக்னிக்கை இங்கே செஞ்சுட்டா வேலை சுலபம். அஞ்சே வருசம் பக்கவாத் திட்டம் போட்டு 1879லே இந்தியாவிலே இருந்து 463பேரைக் கொண்டு வந்து இறக்கியாச்சு. கரும்புத்தோட்டத்திலே கரும்பும் விளைஞ்சு நிக்குது.இனி கரும்பைச் சக்கரையா மாத்தணுமுல்லே? அங்கங்கே சின்னச்சின்னதா ஆலைகள் முளைச்சது. சரியான நிர்வாகம் இல்லாம எல்லாம் நஷ்டம். அதனாலே Colonial Sugar Refining Company(ஆஸ்தராலியன் கம்பெனி)
கலோனியல் ஷுகர் ரிஃபைனிங் கம்பெனிகிட்டே ஒப்பந்தம் போட்டு அவுங்க வந்து இங்கேபெரிய தீவில் மூணும், ரெண்டாவது பெரிய தீவில் ஒன்னுமா மொத்தம் 4 இடத்துலே பெரிய அளவில் ஆலைகள் வச்சாங்க.. கரும்பு கொண்டுவர்றதுக்குப் போட்ட ரயில் பாதைகள் எல்லாம் அப்போ போட்டதுதான். 1880 முதல் 1973 வரை இந்தக் கம்பெனிதான் ஆலைகள் நடத்துச்சு.96 வருசம் பிரிட்டிஷ் காலனி நாடா இருந்த ஃபிஜிக்கு 1970, அக்டோபர் மாசம் 10 ஆம் தேதி சுதந்திரம் கொடுக்கப்பட்டது. அதுக்குப்பிறகு வெளிநாட்டுக் கம்பெனிகள் மெள்ள மெள்ள பின்வாங்கிட்டாங்க. அந்தக் காலக்கட்டத்தில் (1973)சக்கரை ஆலைகளும் ஃபிஜி ஷுகர் கார்ப்பரேஷனா ஆச்சு.


பெரிய தீவில் இருக்கும் மூணு ஆலைகளில் நாட்டின் மேற்கில் பெருசுதான் இந்த லௌடொகா நகரில் இருக்கு. ( ஆமாம். உழக்கு மாதிரி இருக்கும் நாட்டுக்கு கிழக்கும், மேற்கும் பார்த்துக்கிட்டு இருக்கேன்) இந்த ஊருக்கு இன்னொரு பெருமையும் இருக்கு. இங்கேதான் துறைமுகம்( இதுவும் மேற்குக்கானது) இருக்கு. கிழக்குக்கானது தலைநகரில் சுவா சிட்டியில். மேற்கில்தான் தொழிற்சாலைகள் கூடுதல் என்பதால் இந்தத் துறைமுகம்தான் எப்போதும் பரபரப்பாக இயங்குது.
( படத்தின் பின்புலத்தில் தெரிவது பிஜி ஷுகர் மில்)


ஜப்பான் நாட்டுக்கு இங்கிருந்து பைன் மரத்தூள் ஏற்றுமதி. அந்தப்பக்கம் வரும்போது குவிச்சுவச்சுருக்கும் மரத்தூள் மலையில் இருந்து 'கும்'ன்னு வாசம் அப்படியே ஆளைத் தூக்குது. துறைமுகத்துக்கும் சக்கரை ஆலைக்கும் இடைப்பட்ட விளையாட்டு மைதானத்தில் பல்வேறு குழுக்கள் 'ரக்பி' பயிற்சிக்காக விளையாடிக்கிட்டு இருக்காங்க. ஃபிஜி ரக்பி குழுவும் ரொம்ப ஸ்ட்ராங்கானதுதான்.


சனிக்கிழமை கோவிலுக்குப்போகும் வழக்கத்தை விட்டுறவேணாமுன்னு லௌடோகா நகரில் இருக்கும் ஹரே கிருஷ்ணா கோவிலுக்குப் பத்து நிமிசம் போயிட்டுப்போகலாமுன்னு வண்டியை அந்தப் பக்கம் திருப்புனார்.
இடது பக்கம் இருக்கும் பொட்டானிக்கல் கார்டனில் ரோடுக்குப் பக்கத்தில் நாலு தாழை மரம். மஞ்சளா அங்கங்கே தாழம்பூக்கள்.
'கிருஷ்ணா காளியா மந்திர்' நமக்கேத்தமாதிரி கருப்புக் கிருஷ்ணர். காளிங்கன் மேல் நர்த்தனம் ஆடுகிறார். பளிங்குச்சாமியையே பலவருசமாப் பார்த்துக்கிட்டு இருக்கேனேன்னு அதுக்கு மாற்றாகக் கம்பிக்கதவுகளுக்கு அப்புறம் இருந்து அருள் பாலிக்கிறார். முன்வாசலில் துளசிச் செடிகள் தளதளன்னு நிக்குது.சாமி கும்பிட்டு முடிச்சு ரிஸார்ட் நோக்கிப் போகும் வழியில் இருக்கும் ஒரு கோரோவில் இளநீர் சீவி அடுக்கி வச்சுருக்கறது கண்ணில் பட்டுச்சு. மட்டாவாலு கிராமம். 'அதிர்ஷ்டக்கார பயபுள்ளே'ன்னு நினைச்சுக்கிட்டேன். இவுங்களைக் கூட்டிக்கிட்டு வரும்போது அங்கே வண்டியை நிறுத்துனோம்.
ஆளுகளைப் பார்த்ததும் ஓடிவந்த பெண்மணியுடன் கூடவே சில குழந்தைகளும், நாய்களும்.


கேமெராவைப் பார்த்ததும் களங்கமில்லாத சிரிப்புடன் போஸ் கொடுத்தாங்க. பெயர் செரியானா. ஒரு இளநீரில் உள்ளே தேங்காய் முற்றி இருந்துச்சு. அதை வேணாமுன்னு கீழே போட்டதும் நாய்கள் அதைக் கவ்வி எடுத்துக்கிட்டுப் போய்ப் பல்லில் சுரண்டித் தின்னுச்சுங்க. எனக்கு மனசெல்லாம் அப்படியே....... நாயாப் பொறந்தாலும் நியூஸியில் பொறக்கணும்.
இங்கே கல்யாணவீட்டுக்கு வந்து சேரும்போது 11.30 ஆகிருச்சு. ரொம்ப ஒன்னும் மிஸ் பண்ணலை. ( இங்கே நடந்தவைகள் தனிப்பதிவாக வரும்)
நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் மகளின் நண்பரின் முகத்தில் திகைப்பு, வியப்பு, சிரிப்புன்னு எட்டு ரஸங்களும் ( நவத்தில் கோபம் நீங்கலாக) மாறிமாறி வருவதைக் கவனிச்சேன்:-) அதான் அவுங்களுக்கு நேர் எதிரா நானும் மகளும் உக்கார்ந்துருந்தோமே. மகளும் இதைக் கவனிச்சவள் என்னிடம், ' இதுதான் ஆலன் பார்க்கும் முதல் இந்தியக் கல்யாணம்' என்றாள். அடக் கடவுளே..... புள்ளெ பயந்துட்டா என்ன செய்யறது? ஏழுநாள் கல்யாணமா அமைஞ்சுபோச்சே.....'தென்னிந்தியக் கல்யாணங்கள் எல்லாம் இப்ப ரொம்பவே சுருங்கிப்போச்சு. ஒன்னரை நாள்தான் அதிகபட்சம். வேணுமுன்னா நாம் அதை இன்னும் சுருக்கி ஒரு நாள் இல்லே அரைநாளில் முடிச்சுடலாமு'ன்னு அஷ்ஷூரன்ஸ் கொடுத்தேன். அதுவும் இந்தியாவில் நடத்தினால் பெண்களுக்கு இவ்வளவு வேலையும் இருக்காது. நோகாம நோம்பு கும்புட்டுறலாம் இல்லை?


அதுக்குள்ளே பகல் நிகழ்ச்சிகள் முடிஞ்சதும், விட்டதைப் பிடிப்பதுபோல 'குடி' உரிமை நிலை நாட்டப்பட்டது. அங்கே இருந்த இளந்தாரிகள் எல்லாம் ஆலனைப் போதும் போதுமென்ற அளவு உபசரிச்சாங்க. அவரும் எல்லாரிடமும் விகல்பம் இல்லாமப் பேசிக்கிட்டு அதை சமரசம் உலாவும் இடமா மாற்றிக்கிட்டு இருந்தார்.


சாப்பாட்டுக்கு அப்புறம் மகள் பிறந்த ஆஸ்பத்திரி, முதல்வீடு, முதல் பள்ளிக்கூடம், கிண்டர்கார்டன், விளையாடிய பார்க் இப்படி எல்லா இடத்துக்கும் கொண்டுபோய்க் காமிச்சுட்டு ( பின்னாளில் அவள் பதிவு எழுதும்போது பயன்படலாம்) ரிஸார்ட்டில் கொண்டுபோய் விட்டுட்டு வந்தோம். போகும்போதே பாதிவழியில் மழை ஆரம்பிச்சது. நேரமாக ஆக வானமே பொத்துக்கிட்டதுபோல அடிச்சுப்பேய்ஞ்ச பேய்மழையை பலவருசங்களுக்குப் பிறகு அனுபவிச்சோம்.மழைக்கு இதமா ஒரு காஃபி குடிச்சா எவ்வளோ நல்லா இருக்கும்? சக்கரை நகரில் தேடித்தேடி அலைஞ்சுக் கடைசியில் ஒரு சீனக்கடையில், அந்த நபர் ஒன் காஃபி ஒந்தாலர்ன்னு 'மிரட்டியும்' கேக்காமல் ரெண்டு காஃபி வாங்கிக் குடிச்சுட்டு பா போய்ச் சேர்ந்தோம்.


தொடரும்............:-)

21 comments:

said...

அந்த வீடு அழகா இருக்கு..
அந்த அம்மா அழகாசிரிக்கிறாங்க
ஒரு ப்டம் விட்டுப்போச்ச்சே..
அந்த அதிர்ஷ்டக்கார நாய் படம் போடலயா

said...

வழக்கத்துக்கு மாறாக வேற நேரத்தில் பதிவைப் போட்டுருக்கேன்.

எதுக்காம்?

ச்சும்மாத்தான், ஒரு சோதனை :-))))

said...

வாங்க கயலு.

நாயர் மூஞ்சைத் திருப்பிக்கிட்டார். அதுதான் போடலை. ஆனா நேயர் விருப்பமா நீங்க கேட்டுட்டதாலே இப்ப சேர்த்துருக்கேன்:-)

said...

அட .. போட்டுட்டீங்களா..

அதுக்கு தெரியல உலகம்பூரா நம்மள பார்க்கப்போறாங்கன்னு போதுபோங்க..


ஆமா அது என்ன சோதனை .அதையும் அடுத்த பின்னூட்டத்தில் சொல்லிடுங்க..

said...

நீங்க எப்ப பதிவு போட்டாலும் மூக்குல வேர்த்துடும் எங்களுக்கு. :)

கொஞ்சமும் கவலையின் ரேகையே இல்லாம அந்தம்மா என்னமா சிரிக்கறாங்க!

இந்த படத்தை பிட்டுக்கு அனுப்பி இருக்கலாம் இல்ல? ஆனா போட்டி நடத்தி 2 மாசம் ஆச்சோ?

நாய்க்கு முழு தேங்காய் கிடச்ச மாதிரி!னு ஒரு பழமொழி நினைவுக்கு வந்தது. :))

said...

கேமெராவைப் பார்த்ததும் களங்கமில்லாத சிரிப்புடன் போஸ் கொடுத்தாங்க. பெயர் செரியானா. ஒரு இளநீரில் உள்ளே தேங்காய் முற்றி இருந்துச்சு. அதை வேணாமுன்னு கீழே போட்டதும் நாய்கள் அதைக் கவ்வி எடுத்துக்கிட்டுப் போய்ப் பல்லில் சுரண்டித் தின்னுச்சுங்க. எனக்கு மனசெல்லாம் அப்படியே....... நாயாப் பொறந்தாலும் நியூஸியில் //

இதுதான் துளசி.
ரொம்ப விவரம் சேகரிச்சு கொடுத்து இருக்கீங்கப்பா. நல்லா இருந்தது படிக்க. உலக முச்சூடும் அப்பாவி மக்களைக் கொண்டு இந்த சாம்ராஜ்ஜியம் வெட்கமில்லாமல் வளர்ந்து இருக்கு.,

said...

என்னப்பா கயலு,
இப்படி எல்லாத்துக்கும் விளக்கம் கேட்டா எப்படிப்பா?

அதான் நேரங்கெட்ட நேரத்துலே பதிவைப் போட்டுருக்கேன்னு சொல்லி இருக்கேன்லெ!!

நம்ம கோவியாரைத்தான் கேக்கணும் அப்ப எமகண்டம் இருந்துச்சான்னு:-)))

said...

வாங்க அம்பி.

நல்லவேளை பழமொழிப்படி தேங்காயை முழுசாக் கொடுக்காம ரெண்டா வெட்டித்தான் போட்டாங்க.

ஆனாலும் பார்க்கப் பரிதாபமா இருந்துச்சு.
அதான் இருக்குமிடத்தில் இருக்கணும் பிறக்குமிடத்தில் பிறக்கணும்.

said...

வாங்க வல்லி.

//உலக முச்சூடும் அப்பாவி மக்களைக் கொண்டு இந்த சாம்ராஜ்ஜியம் வெட்கமில்லாமல் வளர்ந்து இருக்கு.,//

மெத்தச் சரி.

'ஏழைக்கு ஏது இன்பம்'னு ஒரு பாட்டு நினைவுக்கு வருது.

said...

வாவ்...உண்மையில் அருமையா இருக்குங்க. இன்றைக்கு அலுவலகத்துக்கு வந்ததும் உங்க பதிவைத்தான் முதலில் வாசித்தேன்...

said...

வாங்க இனியவள் புனிதா.

//இன்றைக்கு அலுவலகத்துக்கு வந்ததும் உங்க பதிவைத்தான் முதலில் வாசித்தேன்.//

அதுசரி. காலையில் எழுந்ததும் படிப்பு:-)

said...

அட..அந்தக் காய் எங்க நாட்டுலையும் இருக்கே டீச்சர்...அதோட சிப்ஸ் சூப்பர் :)

said...

18 1/2 ஆம் நூற்றாண்டில் தொடங்கி, 19, 20 களில் எல்லாம் நடந்ததை சொல்லி 21ல் நடப்பதையும் சொல்லிவந்த நீங்கள், தொடரும் என்றதும் 22ல் என்ன ஆகும் என சொல்வீர்களோ? 463 சீனிவாசன்கள் போய்த்தானே ஃபிஜி தீவுக்கு சீனி கிடைத்தது.
சகாதேவன்

said...

மீண்டும் நல்ல பதிவு துளசி டீச்சர்(சரி, எனக்கு மீட்டிங் இல்லாத நேரத்தில் நீங்க எப்படி இந்த பதிவை போடலாம்?) :) :)

said...

முதல் நாய்/மரங்கள் எல்லாம் எப்படி பிஜிக்கு வந்துந்து என்ற தகவல் மட்டும் தான் இல்லை,இந்த பதிவில்.:-))
ஒரு இளநீர் முழுவதும் குடிக்கமுடிந்ததா?

said...

வாங்க ரிஷான்.

இந்த மரம் கேரளாவிலும் நிறைய இருக்கே.

இலங்கையிலும் கேரளாவிலும் அநேக விஷயங்களில் (சமையலில் தேங்காய், தேங்காய்ப்பால் சேர்ப்பது உள்பட) ஒரு ஒற்றுமை இருப்பதைக் கவனிச்சீங்களா?

said...

வாங்க சகாதேவன்.

வாசன்கள் மட்டுமா? அதில் வாசனிகளும் கூட இருந்துருக்காங்க.

22 நூற்றாண்டில் வேற யாராவது புது வலைப்பதிவர் வந்து விளக்கலாம்:-)

said...

வாங்க க.ஜூ.

எந்த நேரம் மீட்டிங் இருக்குன்னு தெரியாமப் போட்டுட்டேனே:-))))

said...

வாங்க குமார்.

நாய், பூனை எல்லாம் வெள்ளையருடன் வந்தவைதான்.

அங்கே இருக்கும் மிருக வகைகளை விரல்விட்டு எண்ணிறலாம்.

ஆடு, மாடு(எருமை இல்லை)குதிரை, நாய் & பூனை.
கீரி இருக்கு. ஆனால் பாம்பு இல்லை!!!

இளநீர் பெருசுதான். கஷ்டப்பட்டுக் குடிச்சு முடிக்கணும்:-)

said...

வாசிக்கும் போது பிஜீ நாட்டுக்கு போகவேணும் போல இருக்கிறது.

said...

வாங்க அரவிந்தன்.

நீங்கதான் வனவாத்துத் தீவில் வீடுகட்டி அடிக்கிறீங்களே!!!!!

அந்தத் தீவு போல இன்னும் அவ்வளவா
ரிஸார்ட்டுகள் முன்னேற்றம் காணலை இங்கே.

எல்லாத்திலும் 'அரசியல்' கலந்து வெளையாடுது போல!!!!

ஆனால்.... ஒரு விடுமுறைக்குப் போய் வாங்க. நம்ம இந்தியக் கலாச்சாரமும் இங்கே எப்படி இன்னும் மறையாம இருக்குன்னு பார்ப்பதும் ஒரு அனுபவம்தான்!!!