Monday, July 21, 2008

ஆத்தாடி மாரியம்மா....... உன் பிள்ளை ரொம்ப அழகனம்மா....(ஃபிஜிப் பயணம் பகுதி 3)

நவாத்து மாரியம்மன் கோயில். முந்தி நாங்க குடியிருந்த நவாத்து வீதியின் கடைசியில் இருக்கு. ஆடி மாசம் வருதுன்னு கோவில் முழுக்க வெள்ளையடிச்சு சுத்துப்புறமெல்லாம் சுத்தம் செஞ்சு வச்சுருக்காங்க. முன்னைக்கு இப்போ கோவில் ரொம்ப நல்லா பெருசாக் கட்டி அம்சமா இருக்கு. அப்ப இருந்த 'பூஜாரி நைனா' குப்புசாமி பூவுலகில் இருந்து மறைஞ்சுட்டார். இவரோட பாஸ்போர்ட்டை முந்தி ஒரு சமயம் பார்த்துருக்கேன். Cooppusami ன்னு இருந்துச்சு. கப்பலில் வந்தப்ப வெள்ளைக்காரர்கள் பதிவு செஞ்சுவச்சது இப்படித்தானாம். Cooper என்ற நினைவில் எழுதுனதா இருக்கும். அவரது நினைவா ஒரு பீடம் & நடுகல் வச்சுருந்தாங்க.


அங்கிருக்கும் அரசமரத்தடியில் ஒரு தம்பதியினருக்கு என்னவோ பூசை செஞ்சுவச்சுக்கிட்டு இருந்தார் இன்னொரு பூசாரி. மரத்தைச் சுற்றி நூல் கயிறுகளாக் கட்டி இருந்துச்சு. முந்தி இதெல்லாம் இங்கே இல்லவே இல்லை. புதுசா வந்துருக்கும் வழிபாடுகள். அங்கே முருகன் கோயிலிலும் இப்படி ஒரு மரத்தை நேத்துப் பார்த்தேன்.



கர்ப்பக் கிரகத்தில் எப்போதும்போல 'நைலக்ஸ் புடவை'யில் மாரியம்மாக்கள் அருள் பாலித்துக் கொண்டு இருந்தாங்க. சிலைகள் எல்லாம் முந்தியிருந்ததேதானாம். புதுசா வர்ணம் பூசுனாங்களாம். அங்கே நமக்குத் தெரிஞ்சவங்களைப் பத்திக் கொஞ்சம் விவரம் கிடைச்சது. மயிலக்கா (நான் வச்ச பேர்தான்) கனடாவில் இருக்காங்களாம். வேலா நாய்க்கரின் அம்மா இவுங்க. ஒரு முறை இந்தியா போயிட்டு வரும்போது அங்கிருந்து மயில் முட்டை சிலதை ஜாக்கெட்டில் ஒளிச்சுக் கொண்டுவந்து இங்கே கோழி அடைகாக்கும்போது கூடவே வச்சுட்டாங்களாம். ரெண்டு மயில் குஞ்சு கிடைச்சு அது பெருசா வளர்ந்துருச்சு. வெராந்தாவை அடைச்சு பெரிய கூடாக்கி அதில் வச்சு வளர்த்தாங்க. மகளுக்கு மயில் காமிக்க (எனக்கும்தான் மயில் ஆசை) அங்கே கொண்டு போவோம்.



'மயில் இன்னும் இருக்கா'ன்னு கேட்டேன். இருக்காம். வேலாதான் பார்த்துக்குறாராம். 'வேலா பஹூத் பீமார். ஹாஸ்பித்தால் மே பர்த்திஹை'ன்னார். (அனைவருக்கும் இங்கே போஜ்புரி இந்திதான் பேச்சுமொழி)



இந்தக் கோவிலில் ஆடிமாசம் தீமிதித் திருவிழா 10 நாள் நடக்கும்.
தீ மிதிக்கும் பக்தர்கள் இந்தப் பத்து நாட்களும் கோவிலிலேயே தங்குவாங்க. அலங்கரிச்சக் கரகத்தைத் தலையில் சுமந்துக்கிட்டுக் கொட்டு முழக்கோடு தினமும் ஒவ்வொரு பகுதியா நம்ம மக்கள் இருக்கும் வீடுகளுக்கு வருவாங்க. வீடுகளில் இந்தக் கரகங்களுக்கு கற்பூராதனை செஞ்சு சிறப்பா எதாவது பிரசாதங்கள் செஞ்சு வச்சுருந்து கொடுப்பது வழக்கம்.



(நம்ம அக்கா வீட்டுக்குக் கிரகம் வந்த போது)




நம்ம ஆட்கள் மட்டுமில்லாம குஜராத்திகள் கூட இந்த 'மா(த்)தா மந்திர்'க்கு நிறைய பொருள் உதவி செய்றாங்க. ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன். நான் எடுத்த படங்கள் எல்லாம்( அப்பப்பக் கோபாலின் மடிக்கணினியில் போட்டுவச்சுருந்தவை) மாயமாய் மறைஞ்சு போச்சு(-:


ஃபர்ஸ்ட் லேண்டிங் போகணும். இங்கேதான் மகளும்,நண்பரும் தங்கி இருக்காங்க. எப்படியும் அங்கே போக 80 நிமிசம் எடுக்கும். அதுக்குள்ளே நேத்து கோயிலைப் பத்திச் சொன்னதின் மீதியை இப்பப் பார்க்கலாம். ம்ம்ம் எங்கே விட்டேன்? ம்ம்ம்.......... ஒளிச்சுவச்சப் புள்ளையார் சிலை?


தேடுதேடுன்னு தேடியும் கிடைக்கலை. அப்ப அங்கே ஒரு பெண் யாருகிட்டேயோ எப்படித்தான் சிலையை ஒளிச்சுவச்சோமுன்னு பெருமையடிச்சுக்கிட்டு இருந்ததை ஒட்டுக் கேட்ட ஒருத்தர் கோயில் ஆட்களுக்குப் போட்டுக் கொடுத்துட்டார். பொம்பளைங்க ரகசியத்தைக் காப்பாத்த மாட்டாங்கன்னு சொல்றதெல்லாம் சில சமயம் சரிதான்போல:-) ராத்திரியோட ராத்திரியா நா(ன்)டி கோவிலைச் சேர்ந்த சிலர் ரெண்டு ஃபிஜியன்களையும் கூட்டிக்கிட்டு அங்கே டாங்கிடாங்கி போய், அங்கே குறிப்பிட்ட ஒரு கிணத்துலே ரெண்டு ஃபிஜியன்களையும்( நம்மைவிட ரெண்டு மடங்கு பலசாலிகள்) இறங்கித் தேடச்சொன்னாங்க. சிலை கிடைச்சுருச்சு. சாக்குப்பைகளை தொட்டில்போலக் கட்டி அதுலே சிலையை வச்சு மெள்ள வெளியில் எடுத்துக்கிட்டு ஓசைப்படாம திரும்ப ஊர் வந்துட்டாங்க. அவரை பிரதிஷ்டை செஞ்சு விழா எடுத்து ஒரே கொண்டாட்டம்தான்.
வருசங்கள் உருண்டன:-)))))


பழைய கொடிமரம் சிதிலமாகி வர்றதாலே கோவிலுக்குப் புது கொடிமரம் சிமெண்டு வச்சுக் கட்டிக்கலாமுன்னு தோணி இருக்கு. அதான் வருசாவருசம் வரும் புயல் மழைக்கு ஈடு கொடுக்கும். இதுக்கும் பொருள் உதவி செய்ய ஒரு பக்தை கிடைச்சார். முத்தம்மா கவுண்டர். கொடிமரம் என்பது மரத்தாலேதான் இருக்கணும் என்பது ஆகமவிதியாம். யாருக்குத் தெரியும்?




1984 இல் தமிழ்நாடு அரசாங்கத்தின் (அப்போதிருந்த அறநிலைய அமைச்சராக இருந்த திரு வீரப்பன் அவர்களின் பரிந்துரை) மூலமா இங்கே ஒரு குருக்கள் வந்தார். திருவாரூர்க்காரர். மகாலிங்க குருக்கள். அவர் வந்த பிறகு கோவிலில் பூஜை புனஸ்காரங்கள் ரொம்ப நல்லா நடக்க ஆரம்பிச்சது. உற்சவங்கள் ஓஹோன்னு நடந்துச்சு. கோயிலில் கூட்டமான கூட்டம் சேர ஆரம்பிச்சது இந்த சமயம்தான். ஏன்னா ஸ்வாமி அலங்காரங்கள் அப்படி திவ்யமா இருக்கும்.


கந்த சஷ்டி ஏற்கெனவே வருசாவருசம் ஒரே நாள் உற்சவமாக் கொண்டாடப்பட்டு இருந்தாலும், இப்போ 7 நாள் கொண்டாட்டமாத் தினம் ஒரு அலங்காரம், உற்சவ மூர்த்தி ஊர்வலம், சூரசம்ஹாரம்னு அமர்க்களம்தான். இவ்வளவு பக்கத்தில் இருந்து அலங்காரம் பூஜைகள் னு நான் பார்த்ததே இல்லை.


என் மகளுக்கு அவர் சாமித் தாத்தா. நாங்கள் ஊர்க்காரர்கள் என்றபடியால் எல்லா இடங்களிலும் விசேஷ அன்பு. சங்கத்தின் கோயில்களுக்கு பூஜை செய்ய முதலில் இளைஞர்களைப் பயிற்றுவிச்சதும் இவர்தான். ஆரம்பகால முறைகளைப் படிச்சுக்கிட்டவங்க, அதுக்குப்பிறகு ஹாவாய்த் தீவுகளில் இருக்கும் ஹிந்து மடம் போய் இன்னும் பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தாங்க.


இங்கே 1987 முதல் ராணுவப்புரட்சி வந்ததும் சாமித் தாத்தாத் தமிழ்நாட்டுக்குத் திரும்பும்படியா ஆச்சு(-: சைலேஷ் கவுண்ட்டர், நம்ம குருக்களிடம் விதிமுறைகளைக் கத்துக்கிட்டு அடுத்த பூஜாரி ஆனார். 1991 வது வருசம் இந்தியாவுக்குப் போனவர் பழனி தண்டாயுதபாணி தேவஸ்தானத்தில் தங்கி பூஜைமுறைகளைப் படிச்சுத்தேர்ந்து சதாசிவன் என்ற பெயருடன் திரும்பவந்தார்.


இதுவரை அனைத்துச் சாதியினரும் இங்கே அர்ச்சகர்களா இருந்துருக்காங்க. விதிமுறைகளைக் கற்றுத் தேர்ந்திருக்கணும் என்பதுதான் நிபந்தனை. வட இந்தியர்களும் (இதிலும் ஜாதிப் பாகுபாடெல்லாம் கிடையாது)
இந்தியாவில் வந்து சாஸ்த்திரப் பிரகாரம் பூஜைகளை, வழிபாடுகளை நடத்தப் பயிற்சி எடுத்துக்கிட்டு வந்து இங்கே 'பண்டிட்'களாகத் தொழில் செய்கிறார்கள். சத்தியநாராயணா பூஜைகள், நவகிரக ஹோமங்கள், இன்னும் கல்யாணம் கருமாதின்னு எல்லாத்துக்கும் இவுங்க சேவை கிடைக்குது.


கோயிலைப் பெருசு படுத்திக் கட்டறதுக்குச் சங்கம் முயற்சி செய்து வேற ஒரு இடத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தை வாங்கினாங்க. இப்ப இருக்கும் இடம் நதிக்கரையில் தாழ்வா இருப்பதால் அடிக்கடி வெள்ளம் வந்து ஒரு பிரச்சனையா இருந்துச்சு. இந்தப் புது இடத்துக்கு, ஆரம்பகாலத்தில் பூமி பூஜை செஞ்சு அடிக்கல் நடும் விழாவில் அப்போதிருந்த இந்திய ஹை கமிஷனர், ' இந்திய மக்கள் எல்லோரும் ஒன்று பட்டு இருக்கணுமுன்னு' பேசிட்டாராம். உடனே ராணுவ அரசு, 'ஹை கமிஷனையே மூடிக்கிட்டுப் போங்க'ன்னு துரத்திருச்சு.



இந்தப் புதுக்கோவிலுக்கு முதல் முறையா நான் வந்துருக்கேன். . 1994 இல் கட்டி முடிச்சு மஹா கும்பாபிஷேகம் நடந்துச்சாம். 2006 வருசம் 12 வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் கும்பாபிஷேகம் நடந்துருக்கு.
கோபால் சில வருசங்களுக்கு முன்னே போயிருந்தார். அப்போ இவர் எடுத்து வந்த சில படங்களை இந்தப் பதிவில் சேர்த்துருக்கேன்


கோயில் வாசலில் நாங்கள் வண்டியை நிறுத்துனப்ப மேளதாளங்கள் முழக்கம். அட்டகாசமா இருக்கு கோபுர தரிசனம். பிள்ளையார் சின்ன மண்டபத்தில் கொடிமரத்தின் பக்கத்தில் இருக்கார். உள்ளே போய்ப் பார்த்தப்ப முன் மண்டபத்தில் ஒரு முப்பதுபேரு சுத்திவர உக்கார்ந்திருக்க ஹோமம் நடக்குது. தனியார் விழாவா இருக்கணுமுன்னு நாங்கள் ஒரு ஓரமாப்போய் உள்ளே மூலவரைத் தரிசித்தோம். பெரிய அளவிலான சிலா ரூபம். ராஜ அலங்காரம். சந்நிதியில் நாங்க ரெண்டே பேர். மனசு நிறைஞ்சு போச்சு.



அதென்னவோ இப்பெல்லாம் முருகனைப் பார்த்ததும் மனசுக்குள்ளே நம்ம ஜீரா வந்து உக்கார்ந்துக்கிறார். சமீபகாலமா அவர்கூடவே உண்மைத் தமிழனும் வர்றார். வரவர இந்தப் பதிவர்கள் தொல்லை தாங்கமுடியலை. எந்த ஒரு விசயத்துக்கும் அது சம்பந்தமான பதிவர்கள் நினைவு மனசோடு வந்து ஒட்டிக்குது. உண்மையைச் சொன்னால் உறவினர்கள் நினைவைவிட இவுங்க ஆக்கிரமிப்பு அதிகம் ! முருகா முருகா.... இன்னும் வலையில் இருக்கும் முருக பக்தர்களுக்கும் சேர்த்து சாமிக்கு ஒரு கும்பிடு போட்டேன். அங்கே நின்னுக்கிட்டு இருந்த ஒரு பூசாரி (இளைஞர்) தரிசனம் செஞ்சு வச்சார். 'பழனி முருகன்' என்று சாமியை அறிமுகம் செஞ்சார். தமிழ்நாடா என்று கேட்டதுக்கு ஆமாவாம். திருத்தணிக்காரராம். என்ன விழா நடக்குதுன்னு கேட்டதுக்கு கலசாபிஷேகம் நடக்கப்போகுது. நீங்க கலந்துக்கலாம்னு சொன்னார்.



நாங்களும் ஒரு பக்கமா உக்கார்ந்து ஹோமம் நடப்பதைப் பார்த்துக்கிட்டு இருந்தோம். மூணு மேசைகள் போட்டு ஒவ்வொன்னிலும் ஏராளமா நிறைகுடங்கள் அலங்கரிச்சு வச்சுருந்தாங்க. கடைசியில் தீபாராதனை காட்டி அதை குருக்கள் உயர்த்திப் பிடிச்சதும் எல்லாரும் இருந்த இடத்தில் இருந்தே கைகளை நீட்டி மானசீகமாத் தொட்டு வணங்குனாங்க. இது எனக்குப் புதுமையாவும் அதே சமயம் ரொம்ப மகிழ்ச்சியாவும் இருந்துச்சு. நம்மூரில் கூட்டத்தில் சிலசமயம் நாம் கையை நீட்டிக்கிட்டே இருந்தாலும் தீபாரதனையைக் கையில் தொட்டு(??) கண்ணில் ஒத்திக்கக் கிடைக்காது.


இப்ப குருக்கள் ஒவ்வொரு மேசையில் இருக்கும் நிறைகுடக் கலசங்களை ஒவ்வொருத்தர்கிட்டேயும் எடுத்துக் கொடுத்துக்கிட்டு இருந்தார். வாங்குனவங்களைத் தனியா மூணு குழுவா நிக்க வச்சார். கோபால் ரகசியமா என்கிட்டே, 'நீயும் போய் ஒன்னு வாங்கிக்கோ'ன்னு சொன்னார். 'சும்மா இருக்க மாட்டீங்களா? அவுங்க எல்லாரும் பூஜைக்கு ஸ்பான்ஸார் செஞ்சுருக்காங்க போல. நான் உங்களோடு இங்கே நின்னு பார்த்துக்கறேன். அது போதுமு'ன்னு சொல்லி வாய் மூடலை. குருக்கள் என்னப் பார்த்து, 'ஆப் இதர் ஆயியே'ன்னுட்டார். கைப்பையை கோபால் வச்சுருந்த பெரிய துணிப்பையில் போட்டுட்டுப் போனேன். பச்சை நிறப் பட்டுச் சுற்றி இருந்த கலசம் எனக்குக் கிடைச்சது. இன்னும் கலசம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. கடைசியா பெரிய கலசங்கள் சில இருந்த மேசை. அதில் ஒன்னை எடுத்துக் கோபாலைக் கூப்பிட்டுக் கொடுத்தாங்க.



மேளதாளங்கள் ஒலிக்க எல்லாருமாக் கோயிலை வெளியில் சுற்றி வர்றோம். முழங்கையில் பையுடன் கலசம் கொண்டுவரும் இவர் எங்கே கீழே போட்டுருவாரோன்னு கலக்கமா இருக்கு. வலம் வரும் வரிசையில் நாங்கள் கொஞ்சம் பிந்தங்கி மெதுவா நடந்து வர்றோம். ஒரு இடத்தில் நகராமக் கூட்டம் நிக்குது. இன்னும் நான் கோவிலை முழுசாச் சுற்றிப் பார்க்காததால் அங்கே ஏன் வரிசை நிக்குதுன்னு தெரியாம எட்டிப் பார்த்தேன்.


'அடக்கடவுளே' எனக்காகத்தான், அதாவது என் கையில் இருக்கும் கலசத்துக்காகத்தான் வெயிட்டிங். குருக்கள் கை அசைச்சு 'வா வா' ன்றார்.
நவகிரக மேடை. எங்க குழுவில் எல்லாருடைய கலசமும் அந்தந்த தேவனுக்கு முன்னால். என்னோடது புதன் கிரகத்துக்கானது. அட! அதுதான் பச்சை நிறமா? என்ன ஏதுன்னு புரியாமலேயே வாங்கி வச்சுருக்கேன் பாருங்க. ஒவ்வொரு கலசமா எடுத்து அந்தந்த கிரக தேவனுக்கு அபிஷேகம் ஆச்சு. கலசம் சுமந்து வந்தவங்களை அவுங்கவுங்கக் கலசத் தேங்காய்களை எடுத்துவச்சுக்கச் சொன்னாங்க.


கோபாலின் கையில் இருந்த பையை நான் வாங்கிக்கிட்டுக் கலசம் சுமக்கும் மற்றவர்களுடன் சேர்ந்து போய்க்கிட்டு இருக்கேன். பயந்தது நடந்துருச்சு. 'டமால்'னு கலசத்தில் இருக்கும் தேங்காய் கீழே உருண்டது.கூடவே அதில் போட்டு வச்சுருந்த பூமாலை, எதோ ஒரு மடிச்சுவச்சத் துண்டுக்காகிதம், மாவிலைகள். ( இந்த இடத்தில் ஒரு தொடரும் போட்டுருக்கலாம்)அடடடா.......கோபால் கையில் சுமக்கும் கலசம் ஒழுங்கா நல்லாவே பத்திரமா இருக்கு. அப்ப இது யாரோடது?



ஒரு இளைஞர் அவசர அவசரமா எல்லாத்தையும் வாரித் திரும்பத் தன் கலசத்தில் வச்சார். ரெண்டே எட்டு இன்னொரு டமால். சரியாப் பார்த்து வைக்கக்கூடாதா?


கோயிலைச் சுத்திவரும்போது கவனிச்சது : ஊர்வலத்துக்கான தேர், காவடித் திருநாளுக்கான காவடிகள் எல்லாம் ஒரு ஷெட்டில் பத்திரமா வச்சுருக்காங்க.


இதுக்குள்ளே கோவிலுக்குள்ளில் வந்துட்டோம். ரெவ்வெண்டு கலசங்கள் பிள்ளையார், மகாலக்ஷ்மி, மதுரை மீனாட்சி, சிவன் சந்நிதிகளில் எடுத்துவச்சார் குருக்கள். அந்தத் துண்டுக்காகிதத்தில்தான் எது எங்கே என்ற விவரம் இருக்கு.
கடைசியா 5 கலசங்கள் பாக்கி. மூலவருக்குப் போவது. அதில் கோபாலோடதும் ஒன்னு........ நாங்கள் எல்லாம் கருவறையை ஒட்டிய மண்டபத்தில் உக்கார வைக்கப்பட்டோம். குருக்கள் கர்ப்பக் கிரகத்தின் உள்ளே இருந்து ஒவ்வொன்னா வாங்கி மூலவருக்கு அபிஷேகம். அஞ்சாறடி தூரத்தில் இருந்து கண்குளிரப் பார்க்கின்றோம். மறுபடி கற்பூராதனை. தூக்கிப்பிடிக்கிறார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, பழனி மலை முருகனுக்கு அரோகரான்னு கோஷம் முழங்க இருந்த இடத்தில் இருந்தே மானசீகமா கண்ணுலே ஒத்திக்கிட்டாச்சு.


திரைபோட்டாங்க. அலங்காரம் ஆரம்பம். அதுவரை வெளியே ஹோம குண்டம் இருக்கும் முன்மண்டபத்தில் எல்லாரும் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம். கோபாலின் கலசத்தில் இருந்த சீட்டில் 'வாயு பகவான்' ன்னு எழுதி இருந்துச்சாம். ஓஹோ....அப்ப அது அஞ்சும் பஞ்ச பூதங்களைக் குறிப்பிட்டதா?
நல்லதுதான். உங்களுக்கு ஹனுமானோட அப்பா வந்தார்'னு சொல்லிவச்சேன்.


புரியாம முழிச்சவருக்குக் கொஞ்சமா ஹனுமன் கதை. ( சான்ஸ் கிடைக்கும்போது விடலாமா?) கையில் உள்ள தேங்காயை என்ன செய்யணுமுன்னு அங்கிருந்த தர்மகர்த்தாவிடம் கேட்டேன். இன்னுமா உடைக்கலைன்னு கேட்டுக்கிட்டே வெளியே தேங்காய் உடைக்க ஒரு இடம் இருக்குன்னு காமிச்சார். அங்கே நல்ல பாறாங்கல்லைப் புதைச்சுவச்சுத் தொட்டிபோலக் கட்டி விட்டுருக்காங்க. பேஷ் பேஷ். சிதறு தேங்காய் போட்டார் கோபால். உள்ளேயே தெறிச்சு விழுந்துச்சு. பேஷ் பேஷ்.


திரும்ப மண்டபத்தில் வந்து உட்கார்ந்தப்ப அந்த சின்ன குருக்கள் வந்து எங்க பக்கத்தில் உக்கார்ந்து குசலம் விசாரிச்சார். நாங்களும்தான். திருத்தணியில் இருந்து இங்கே வந்து USP யுனிவர்சிட்டி ஆஃப் சௌத் பஸிஃபிக்லே பி.காம் 3வது வருசம் படிக்கிறார். முதல் செமிஸ்ட்டர் முடிஞ்சு லீவு ஆரம்பிச்சுருக்கு. அக்கா வீட்டுக்கு வந்துருக்கார். அக்காவின் கணவர்தான் இப்போதைய (பெரிய)குருக்கள். ஊர் திருத்தணி. அஞ்சு வருசமா அக்கா & கணவர் இங்கே இருக்காங்க. கோவிலுக்குப் பின்பக்கம் தோட்டத்தில் வசிக்க வீடு (குவாட்டர்ஸ்) கொடுத்துருக்காங்க. அடுத்த வருசம் மேற்படிப்புக்கு ஆஸி போக விருப்பம். பெயர் கார்த்திக்.


அலங்காரம் முடிஞ்சது. எல்லாரும் மறுபடி உள்ளே கருவறை அருகில் உட்கார வைக்கப்பட்டோம். கம்பீரமான மகாராஜாவா இருக்கார் முருகர்.


பதினாறு உபசாரங்கள் நடந்துச்சு. நான்


பழனி மலை முருகா
பழம் நீ திருக்குமரா
பழம் ஒன்று எந்தனுக்குத் தா.....
ஞானப் பழமொன்று எந்தனுக்குத் தா
முருகா ...


இளமை நில்லாது யாக்கை நிலையாது
வளமையோ செல்வமோ நலமொன்றும் தாராது
நிலமை இதுவாக தலைமைப் பொருளாக
நிம்மதியை எந்தனுக்கு தா ... முருகா ...


உளநாள் ஒவ்வொன்றும் உன் திருப்புகழ் பாடி
உண்மைப் பொருளாக உந்தனையே நாடி
சிலநாள் வாழ்ந்தாலும் செம்மையையே தேடி
செந்தமிழே அன்பே நீயும் நானும் கூடி
மகிழ்ந்திட வரம் ஒன்று தா
மனம் மகிழ்ந்திட வரம் ஒன்று தா
முருகா ...
பாடினேன்( மனசுக்குள்ளேதான்)


வெற்றிவேல் முருகா, வேல்வேல் முருகான்னு அரோகரா கோஷம்.
தீபாராதனை முடிஞ்சதும் மானசீகமாத் தொட்டுக் கும்பிட்டோம்.சாமிக்கு முன்பாக இருந்த உள்புற மேடையில் நெய்விளக்கும் தட்டில் விபூதியும் கொண்டுவந்து வச்சார். அவுங்கவுங்களே எடுத்துக்கலாம். 'காசு போடு, இந்தப் பக்கம் வா, போ'ன்னு ஒரு உத்தரவும் இல்லை:-))))) அருமையான ஏற்பாடு. சாமிக்கு முன்னே எல்லோரும் சரிசமம். எனக்கு ரொம்பத் திருப்தியா இருக்கு.


வெளியே வந்ததும் கார்த்திக், பெரிய குருக்களை அறிமுகப்படுத்தினார். அஞ்சு நிமிசம் பேசிட்டுக் கிளம்பலாமுன்னா சாப்பாடு ஏற்பாடாகி இருக்கு. கட்டாயம் சாப்பிட்டுட்டுத்தான் போகணுமுன்னு முருகனின் கட்டளை.. ...ஆஹா..............
இன்னிக்கு என்னதான் விசேஷமாம்?


கோவிலுக்குப் பொறந்த நாள். ஜூலை ஒன்னுதான் முதல் முதல் மகா கும்பாபிஷேகம் நடந்த நாளாம். அதனால் ஒவ்வொரு வருசமும் இதுக்கு முதல்நாள் & மறுநாளைச் சேர்த்து 3 நாள் உற்சவமாம். அந்தக் கணக்கில் இன்னிக்குக் கடைசி நாள். கொஞ்சம்கூட எதிர்பாராமல் கிடைச்ச ஒவ்வொன்னையும் நினைச்சு நினைச்சு மனசு பொங்கி வழிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. இன்னிக்குன்னு பார்த்து வரத்தோணுச்சேன்னு .............

சாப்பாட்டுக்காக தனியா நிரந்தரமான அமைப்போட ஒரு ஷெட் போட்டுவச்சுருக்காங்க.. ஹல்வா( நிறமில்லாத கேசரிதான். அம்பியை நினைச்சுக்கிட்டேன்) கொண்டைக்கடலை சுண்டல், தக்காளிச் சட்டினி, ஸாலட், பருப்பு, ஆலு பைங்கன், சோறு. இன்னைக்கானக் கட்டளைதாரர் பெயர் அங்கிருந்த கரும்பலகையில் எழுதி இருக்கு.



கடை வீதியின் கட்டக் கடைசியில் கோவில். அக்கம்பக்கத்துக் கடைகளில் வேலை செய்யும் ஆட்கள் எல்லாம் (அதான் எல்லாருக்கும் இப்ப யூனிஃபார்ம் கொடுத்துருக்கே) சாப்பாட்டு வரிசையில் நின்னு வாங்கிச் சாப்பிட்டுப் போனாங்க. தட்டுகள்தான் டிஸ்போஸபிளா இல்லாம அலுமினியமா இருந்துச்சு.


இந்தப் புதுக் கோயிலுக்குள் படம் எடுக்கத் தடை போட்டுருக்காங்க.
கோயில் வர்ணனையை அப்புறமா ஒரு நாள் சொல்றேன். முருகன் என்னை மூணு முறை வரவச்சுட்டார்:-)


அதுக்கப்புறம் இங்கே கடை வச்சுருக்கும் நெருங்கிய தோழிக்கு ஒரு சர்ப்ரைஸ் விஸிட். ஒன்னரை மணி நேரம் சம்சாரிச்சு:-)))) கண்டுட்டு கொல்லங்களாயில்லே?. 20 வருசம் 4 மாசத்துக்கப்புறம் சந்திக்கறோமே!!!


கல்யாண வீட்டு விஷயங்கள்:


மூன்றாம் நாள்.


இன்னிக்கும் என்ன நடந்துச்சுன்னு தெரியாது. காலையில் பூஜை செய்துட்டு மண்குடங்களுக்கு வர்ணம் தீட்டுனாங்களாம். பர்ஃபி செஞ்சு வச்சாங்களாம்.

வழக்கம்போல 100/150 மக்களுக்கு ரெண்டு வேளையும் சாப்பாடு.


ஃபிஜித்தீவின் அரசாங்க விதிகளின் படி திருமணங்கள் எல்லாமே பதிவுத் திருமணங்கள்தான். கல்யாணம் செஞ்சுக்கப்போறவங்க, அரசாங்கத்தின் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கணும். ஒரு ரெண்டு மூணு வாரத்துலே அனுமதி கிடைக்கும். அதுக்கான காவல்துறை விசாரிப்புகள் எல்லாம் நடத்த இந்த மூணுவாரம் பிடிக்குமாம். முக்கிய நிபந்தனை வயசு.
ஆணுக்கு 18, பெண்ணுக்கு 16 முடிஞ்சுருக்கணும்.


அதுக்குப்பிறகு நமக்கு அனுமதி கிடைச்சவுடன், பொண்ணு, பையன் தங்களது அப்பா, அம்மா நெர்ங்கிய உறவினரோடு அங்கே அலுவலகத்தில் போய் பதிவுத் திருமணம் செஞ்சுக்கணும். இதுக்கு மேரீட் ஃபார்ம் போட்டோம். ரெஜிஸ்த்தர் ஆயிருச்சுன்னு சொல்றாங்க.



இது முடிஞ்சபின் சட்டப்படி அவுங்க கணவன் மனைவி. ஆனாலும் அவுங்கவுங்க தங்கள் பெற்றோர் வீட்டுலேயே இருந்துக்குவாங்க. ரெண்டு குடும்பமும் சேர்ந்து நல்ல நாள் பார்த்து சாஸ்த்திரப்படி
அவுங்கவுங்க மத ஆச்சாரத்தின் படி சக்திக்கேற்ற அளவில் உறவினர் நண்பர்களுடன் பிள்ளைகள் கல்யாணத்தை நடத்தி வைக்கிறாங்க.



இந்தக் கல்யாணத்துக்கு வந்திருக்கும் உறவினர் குடும்பத்துலே அவுங்க மகனுக்கு அடுத்தவாரம் நிச்சயதார்த்தம். அந்தப் பிள்ளையை பார்த்தாப் பள்ளிக்கூடத்துப் பையன் மாதிரி இருக்கு. என்ன இவ்வளோ சீக்கிரம்முன்னு பையனோட அம்மாவைக் கேட்டால்...............



முந்தியெல்லாம் இப்படி 21/22 வயசுலே கட்டிவைக்கற பழக்கம்தானாம். சில வருசங்களுக்கு முன் அதை 28/30ன்னு மாத்தி வச்சுப் பார்த்தாங்களாம். ஒன்னும் சரிப்படலை. பசங்க காதல் அது இதுன்னு விவகாரத்துலே மாட்டிக்கிதுங்க. குடும்பத்துக்கு பேஜாரா ஆயிருது சில சமயம். அதான் பழைய மாதிரியே 21 இல்லை 22க்கு மாத்திட்டோம்.



இளமையான மாமியார்களும் பாட்டிகளுமா இருக்காங்க 40, 42 வயசுகளில்:-)))))


மாலையிலும் பார்ட்டியோ பார்ட்டி.


தொடரும்..........................:-)


47 comments:

said...

கிரிக்கெட் நேர்முக வர்ணணை போல ஒரே சிக்சரும் பவுண்ட்ரியுமா இருக்கு டீச்சர். பிஜி எனக்கு பக்கத்து வீடு போல ஆக்கிட்டீங்க, உங்க பதிவால..

//கண்டுட்டு எத்தர கொல்லம் ஆயி//
தமிழ்,இங்க்லீஷ்,ஹிந்தி,தெலுங்கு, மலையாளம்.. எல்லா பாஷையும் உங்களுக்கு அத்துப்படி போலிருக்கு..
கன்னடமும் கொத்தா? :-)))

said...

வாங்க தமாம் பாலா.

இப்போதைய தாதாக்கள் மொழியில் 'சிக்ஸர்'ன்னா வேற அர்த்தமாம்(-:

கன்னடம்?
ஸ்வல்ப்ப கொத்து:-))))))

ஆமாம். தமிழ்மணம் காமிக்கலையே.... ரீடர்லே பார்த்தீங்களா?

said...

எவ்வளோ நீளமா பதிவு இருந்தாலும் அவ்வளவும் சுவாரஸ்யமா தான் இருக்கு.

said...

முருகன்னதும் என்னோட நினைவு வர்ரதாச் சொன்னீங்களே. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு டீச்சர். வேலும் மயிலும் துணை. வடிவேலனே துணை. முருகா.

முருகனுடைய திருவுருவம் மிக அழகாக இருக்கிறது. வேலைப் பிடித்தன் காலைப் பிடித்தவர்க்கு ஏது குறை! முருகா.. உனை என்றென்னும் மறவாமை வேண்டும்.

// புரியாம முழிச்சவருக்குக் கொஞ்சமா ஹனுமன் கதை. ( சான்ஸ் கிடைக்கும்போது விடலாமா?) //

இது டீச்சர் ஸ்டைல் :D

said...

வாங்க பிரேம்ஜி.

என்னதான் முயன்றாலும் கொஞ்சம்(??) நீளமாப் போயிருது......

சுணங்காமப் படிச்சதுக்கு நன்றி

said...

வாங்க ராகவன்.

ஆன்மீகச் செம்மலை மறக்க முடியுதாப்பா? :-)))

said...

அவரு கையில் ஒரு பெரிய பை. அதுக்குள்ள நம்ம கைப்பையையும் போட்டாச்சு. அதையும் எடுத்துக்கிட்டு கலசத்தையும் தூக்கிட்டு வராரு. ஆனா யாரோ கீழ போட்ட கலசத்துக்கு இவருக்குத் திட்டு.

நல்லா இருங்க ரீச்சர்!! :))

Anonymous said...

/வரவர இந்தப் பதிவர்கள் தொல்லை தாங்கமுடியலை// ஆமாம் டீச்சர், எனக்கும் இதே தொல்லை தான். ஆண்டாள் பாசுரம் கேட்ட கேஆரெஸ் ஞாபகம் வந்துர்றார். தசாவதாரம் பாத்தப்ப அஸின் 'பெருமாளே'ன்னப்ப யார் ஞாபகம் வந்திருக்கும்னு நினைக்கறீங்க :)

said...

வாங்க சின்ன அம்மிணி.

யார்?

என் நினைவுன்னு சொன்னால்....தற்பெருமையா இருக்குமா? :-))))

டீச்சர்கிட்டே கேள்வியெல்லாம் கேக்கப்பிடாது.ஆமாம்.........

நீங்களே பதிலைச் சொல்லுங்க பார்ப்போம்.

said...

நீளமா இருந்ததே பின்னூட்டபெட்டிய பார்த்து தான் தெரிஞ்சது அதுபாட்டுக்கு படிச்சிட்டே போயிட்டேன்.. :)

said...

உள்ளேன் டீச்சர்!

மயிலக்கா சொந்தமா மயில் வளத்தாங்களா? ஜோர், ஜோர்.

அப்புறம், அப்புறம், :-| பதிவு ஸ்கோரோல் ஆகிட்டே போச்சா, கீழ போய், அலுமினியத் தட்டில் இருந்த சாப்பாடப் பார்த்ததும் பசிக்க ஆரம்பிச்சுடுச்சு....:-0

மீதி அப்புறம் வந்து கண்டிப்பா படிக்குறேன் டீச்சர் :)))). தப்பா எடுத்துக்காதீங்க டீச்சர்.....

said...

வாங்க கயலு.

இதை ஒரு பாராட்டா எடுத்துக்கலாமா? :-)))))

said...

டீச்சர்,

பகுதி முன்று எனக்கு தெரியுது. நான் தமிழ்மணத்துல வாசிக்கலை. உங்க ப்ளாக்ல தான் வாசிக்கிறேன். 10 கேள்வி கூட ரெடி பண்ணி வச்சிட்டேன் பரிட்சைக்கு.

said...

//சிலநாள் வாழ்ந்தாளும் செம்மையையே தேடி
செந்தமிழே! அன்பே! நீயும் நானும் கூடி
மகிழ்ந்திட வரம் ஒன்று தா//


டீச்சர், எங்க அப்பா அதிகாலையில எழுந்து இந்த பாட்டு சாதகம் பண்ணும் போது அரை தூக்கத்துல என் காதுல தேனாப் பாயும்.

ம்ம், ஒரு பத்து வருஷம் என்னை பின்னோக்கி போக வெச்சுட்டீங்க.



//ஹல்வா( நிறமில்லாத கேசரிதான். அம்பியை நினைச்சுக்கிட்டேன்) //

ஹிஹி, டேங்கிஸ்,

கேசரிக்கு நிறமில்லைன்னா என்ன, மணமும், சுவையும் தான் முக்யம்.

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ!

(கே)சரி, (கே)சரி, யாரவது கல்ல விட்டு எறிய போறாங்க.

said...

பதிவு வழக்கம் போல அல்வா மாதிரி ஜவ்வா இனிக்குது! :)

said...

அது பாராட்டில்லாம வேறென்ன துளசி :)

said...

வாங்க புதுவண்டு..

அப்புறமா வந்து 'நல்லாப் படிச்சு' நல்ல பின்னூட்டமாப் போடுங்க. நீங்க மீண்டு(ம்) வந்ததுக்கு அதுதான் சாட்சி:-)

said...

வாங்க விஜய்.

10 கேள்வி ரெடி பண்ணியாச்சா?

எப்படி ?

நீங்க 'ரோல்' மாற்றலா? :-))))

said...

வாங்க அம்பி.

10 வயசு குறைஞ்சுருச்சா? பேஷ் பேஷ்.

இது தெரியாம இங்கே பத்துவயசைக் குறைக்கிறோமுன்னு ஒரு டிவி காட்சி வந்துக்கிட்டு இருக்கு:-))))

அல்வா கிளறும்போது தவறுதலா(??) சூயிங் கம் விழுந்துருச்சு!!!

said...

கயலு,

நீங்க சொன்னாச் சரி:-)))

நன்றி

said...

//10 கேள்வி ரெடி பண்ணியாச்சா?

எப்படி ?

நீங்க 'ரோல்' மாற்றலா? :-))))//


சே....சே.... அப்பிடி எல்லாம் இல்ல டீச்சர். நான் சும்மா எனக்கு பரிட்சைல எப்பிடி எல்லாம் கேப்பாங்கன்னு ஒரு டிரயல் மாதிரி ரெடி பண்ணேன். அவ்ளோதான். ஸெல்ப் கொஸ்டின்ஸ் டீச்சர்...

said...

உண்மைத்தமிழன் என்று எழுதினாலே பதிவு நீளமாகிவிடும் போல் இருக்கே!! :-)

said...

//முந்தியெல்லாம் இப்படி 21/22 வயசுலே கட்டிவைக்கற பழக்கம்தானாம். சில வருசங்களுக்கு முன் அதை 28/30ன்னு மாத்தி வச்சுப் பார்த்தாங்களாம். ஒன்னும் சரிப்படலை. பசங்க காதல் அது இதுன்னு விவகாரத்துலே மாட்டிக்கிதுங்க. குடும்பத்துக்கு பேஜாரா ஆயிருது சில சமயம். அதான் பழைய மாதிரியே 21 இல்லை 22க்கு மாத்திட்டோம். //

பேசாம அங்கேயே பொறந்திருக்கலாம் டீச்சர்.. ம்ஹ்ம்ம்ம்

said...

இளமையான மாமியார்களும் பாட்டிகளுமா இருக்காங்க 40, 42 வயசுகளில்:-)))))
//

ஒரு பதினஞ்சு வருஷம் முன்னாடி நம்பூர்லயும் இப்படிதான டீச்சர் இருந்தது.

said...

//நம்ம ஜீரா வந்து உக்கார்ந்துக்கிறார். சமீபகாலமா அவர்கூடவே உண்மைத் தமிழனும் வர்றார்//
LOL

நான் தவறாமல் படிக்கும் பகுதி, நன்றாக இருக்கிறது :)

நீங்க நிஜமாவே டீச்சரா?

said...

விஜய்,

நம்ம வகுப்பு லீடர் இப்பக் கொஞ்சம் கூடுதல் பிஸியா இருக்கார். அவருக்கு ஒரு 'உதவி வகுப்புத் தலைவரை' ஏற்பாடு செய்யலாமான்னு யோசனையில் இருக்கேன்.

பட்டியலில் உங்க பெயரைச் சேர்க்க எண்ணம்:-)

said...

வாங்க குமார்.

பெயர் (ராசி)பலன் என்பது இதுதான் போல:-)

said...

வாங்க ரிஷான்.

என்ன இவ்வளவு நீண்ட பெருமூச்சு.

கவனிச்சவரைச் சொல்றேன்.....

அங்கே பசங்களுக்கு ரொம்பப் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. தாய்தந்தை சொல்லும் பெண்ணைக் கட்டிக்குறாங்க.

said...

வாங்க புதுகை அப்துல்லா.

//ஒரு பதினஞ்சு வருஷம் முன்னாடி நம்பூர்லயும் இப்படிதான டீச்சர் இருந்தது.//

அட! அப்படியா?

34 வருசமுன்பு இப்படி இருந்ததைக் கவனிச்சுருக்கேன்( என் கல்யாண காலத்திலே)

இப்ப நம்ம இளைய தலைமுறை, செட்டிலானபிறகுதான் கல்யாணமுன்னு சொல்லிக்கிட்டு இருக்கு.

வாழ்க்கையைத் துணைப் பற்றிய எதிர்பார்ப்பும் கூடிக்கிட்டே போகுதுல்லையா?

said...

வாங்க க.ஜூ.

இதிலென்ன இன்னும் சந்தேகம்?

சொன்னா நம்பணும்.ஆமா:-))))

said...

//அப்ப அங்கே ஒரு பெண் யாருகிட்டேயோ எப்படித்தான் சிலையை ஒளிச்சுவச்சோமுன்னு பெருமையடிச்சுக்கிட்டு இருந்ததை ஒட்டுக் கேட்ட ஒருத்தர் கோயில் ஆட்களுக்குப் போட்டுக் கொடுத்துட்டார். பொம்பளைங்க ரகசியத்தைக் காப்பாத்த மாட்டாங்கன்னு சொல்றதெல்லாம் சில சமயம் சரிதான்போல:-) //

ஹா ஹா ஹா ஹா

//கம்பீரமான மகாராஜாவா இருக்கார் முருகர். //

கலக்கலா

//ஃபிஜித்தீவின் அரசாங்க விதிகளின் படி திருமணங்கள் எல்லாமே பதிவுத் திருமணங்கள்தான். கல்யாணம் செஞ்சுக்கப்போறவங்க, அரசாங்கத்தின் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கணும். ஒரு ரெண்டு மூணு வாரத்துலே அனுமதி கிடைக்கும். அதுக்கான காவல்துறை விசாரிப்புகள் எல்லாம் நடத்த இந்த மூணுவாரம் பிடிக்குமாம். முக்கிய நிபந்தனை வயசு.
ஆணுக்கு 18, பெண்ணுக்கு 16 முடிஞ்சுருக்கணும்.//

நல்ல விஷயம் தான்.

//இளமையான மாமியார்களும் பாட்டிகளுமா இருக்காங்க 40, 42 வயசுகளில்:-))))) //

;-)

மேடம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவா போட்டுட்டீங்க ..

said...

//'டமால்'னு கலசத்தில் இருக்கும் தேங்காய் கீழே உருண்டது.கூடவே அதில் போட்டு வச்சுருந்த பூமாலை, எதோ ஒரு மடிச்சுவச்சத் துண்டுக்காகிதம், மாவிலைகள்.

( இந்த இடத்தில் ஒரு தொடரும் போட்டுருக்கலாம்)//

ஹா..ஹா..ஹா...டீச்சரின், 'நச்' ''டச்'....சும்மா அதிருதுல்ல....:))))

said...

//
அதான் பழைய மாதிரியே 21 இல்லை 22க்கு மாத்திட்டோம்.
//

அப்போ பொண்ணுக்கு????

<21-ஆ? :-|

said...

வாங்க கிரி.

சம்பவங்கள் சம்பவிச்சுக்கிட்டே....... போறதால் நிறுத்த முடியலையேப்பா:-)

அதான் அடுத்த பதிவு ரெண்டு பாகமா வரப்போகுது:-)

said...

வாங்க புதுவண்டு.

அதான் பொண்ணுக்கு 16 வயசாகி இருந்தால் போதுமே:-)

பையன் 21ன்னுன்னா பொண்ணு 18 இல்லே 19ன்னு பார்க்கிறாங்க.

எங்க உறவினர் ஒருத்தர் சென்னையில் இருக்கார். அவருக்குப் பொண் பார்க்கப்போய் வந்த அவர் சொன்னது
கிழவியைப் பொண்ணுன்னு கொண்டுவந்து காமிச்சாங்கன்னு.

பொண்ணு முத்திப்போய் இருந்துச்சாம்.( காய் வாங்கறாங்களா என்ன?)

அப்ப அவருக்கு 28 வயசு. அந்தப் பெண்ணுக்கு 26 வயசு.

அதுக்கப்புறம் அவுங்க இளசாப் பார்த்து வாங்குன பொண்ணு, கல்யாணத்துக்கப்புறம் ஊதி ரொம்பவே முத்தலா ஆகிப்போச்சு.

said...

ஆடி மாசம் அம்மனை விட்டு விட மாட்டேன்.. சரியா சொன்னீங்க மேடம். அம்மனோடு பிள்ளைகளையும் தரிசனம் பண்ணியாச்சு! [ஒளிச்சு வச்சாலும் பிள்ளையாருக்குத் தெரியாதா என்ன எப்போ எப்படி வெளிவந்து எங்கே அமர வேண்டும் என:)?]

said...

//விஜய்,

நம்ம வகுப்பு லீடர் இப்பக் கொஞ்சம் கூடுதல் பிஸியா இருக்கார். அவருக்கு ஒரு 'உதவி வகுப்புத் தலைவரை' ஏற்பாடு செய்யலாமான்னு யோசனையில் இருக்கேன்.

பட்டியலில் உங்க பெயரைச் சேர்க்க எண்ணம்:-)//


யீச்சசசர்ர்ர்ர்......,

எவ்ளோ பெரிய கௌரவம் இது... வாவ்..... சொல்லுங்க டீச்சர், என்னா பண்ணனும்ன்னு. நன்றி டீச்சர் நன்றி..

said...

வாங்க ராமலக்ஷ்மி.

இன்னிக்கும் ஆடி வெள்ளிதான்.

அம்மா, பிள்ளைகள், மருமகள்கள்னு எல்லாரையும் பதிவு பார்க்கக் கூப்புடணும்:-)

said...

விஜய்,
இப்போதைய வேலை.....
வகுப்புக்கு வராதவங்களைத் தேடிப்பிடிச்சுக் கூட்டிவந்து, வகுப்பில் உக்காரவைப்பதுதான்:-)))

said...

மேடம் எப்படித்தான் இந்த வேகமோ?பதிவுக்களமா அல்லது தம்பா ராக்கெட் தளமா?

said...

வாங்க ராஜ நடராஜன்.

புதுத் தொடப்பமா இருந்த காலத்தில் தினம் ஒன்னு.

இப்ப வேகம் குறைஞ்சுபோயிருக்கு.
வாரம் 3.

said...

டீச்சர், இப்படியெல்லாம் கூட பதிவு போடலாம, நான் கத்துக்குட்டிங்க, இப்பதான் இந்த bloக் சமாச்சரத்துக்குள்ளேயே வரேன்.. ஹும் நானும் உங்ககூட சேர்ந்துக்கலாமா.. மாணவனாதான்..

said...

வாங்க ராம(ன்)நாமம்.

வணக்கம். நலமா?

புது மாணவர்ன்னா கொஞ்சம் வரவேற்பு வளையம் எல்லாம் உண்டுதான்.

இந்தக் கொத்ஸ் எங்கேய்யா காணோம். க்ளாஸ்( class) லீடர் எங்கிருந்தாலும் மேடைக்கு உடனே வரவும்.

புது மாணவர் வகுப்புலே சேர்ந்துருக்கார். கொஞ்சம் 'கவனி'ங்க.

said...

தங்களது எழுத்து வடிவம் மிக நன்றாக இருக்கின்றது. வாசிக்கும்போது நிகழ்வுகள் கண்முன் தோன்றுகின்றது. வாழ்த்துக்கள்.

said...

வாங்க ராட் மாதவ்.

(ராதா மாதவ்.)

நான் உண்மையில் ஒரு கதை சொல்லி.
அதான் சொல்ல நினைப்பதை அப்படியே சொல்லிடறேன்:-))))

said...

துளசி இதை நான் ஏன் படிக்கலைன்னு பார்த்தேன்.
அப்போ யுஎஸ் போன நாளா இருந்திருக்கு. அட மிஸ் பண்ணிட்டோமேன்னு யோசிக்க வச்சிட்டீங்கப்பா. ரொம்ப அருமை. சர்க்கரைப் பொங்கல் மாதிரி:)
அதாவது நீங்க செய்யற டைப்:)) மனசில் ஆயோ:))

said...

வாங்க வல்லி.

ஆஹா.... அதான் என்னடா ஒரு பின்னூட்டம் குறையுதேன்னு பார்த்தேன்!

இந்த ஃபிஜித்தொடர் இன்னும் ஒரு பத்துப்பதினைச்சு இருக்கும்.

ஒவ்வொன்னாப் படிச்சுட்டு (பின்)ஊட்டுங்க ப்ளீஸ்:-))))