Friday, October 01, 2004

கரும்புத் தோட்டத்திலே !!!!

'பாரதி' யின் கரும்புத் தோட்டத்திலே படித்திருக்கின்றீர்களா?

ஃபிஜித் தீவில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்களல்லவா? இவர்களில் மூன்று பிரிவினர் உண்டு.தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்.

இவர்களில் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்களை, 'மந்த்ராஜிகள்' என்று மற்ற பிரிவினர் குறிப்பிடுகின்றனர். வட இந்தியர்களை 'குருவிக்காரங்க' என்று நம் 'மந்த்ராஜிகள்' கூறுவார்கள். குஜராத்தைச் சேர்ந்தவர்களை உலகம் பூராவும் எல்லா இடத்திலும் சொல்வதுபோலவே 'குஜ்ஜுஸ்' என்றும், நேடிவ் ஃபிஜி ஆட்களை, நம்ம ஆளுங்க எல்லாம் 'காட்டுப் பூச்சி' என்றும் சொல்வார்கள்.
எல்லாம் மறைமுகமாக, ரகசியமாகத்தான். ஆனால் இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு ரகசியம்.


நம் தமிழ் ஆட்கள் தங்களோடு கூடவே தம் கடவுளர்களையும் கொண்டு வந்துவிட்டனர்.

இங்கே 'ம்பா' என்னும் இடத்தில் உள்ள 'மாரியம்மன் கோயில்' மிகவும் பிரசித்திப் பெற்றது. ஆடிமாதத்தில், 'தீமிதி' உண்டு. தீமிதித் திருவிழாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, தீயில் இறங்கும் ஆட்கள் அனைவரும் காப்புக் கட்டிக்கொண்டு விரதம் அனுஷ்ட்டிப்பார்கள். உணவு, உறக்கம்எல்லாமே கோவிலில்தான். கரகம் ஒன்றை அல்ங்கரித்து, தினமும் மேளதாளத்துடன் (சுத்தி இருக்கற பதினெட்டுப் பட்டி) கிராமங்களுக்குப் போவார்கள். அங்கங்கே கிராம மக்கள் , கிரகத்துக்கு கற்பூரதீபம் காட்டி, பிரசாதங்களை வைத்துப் பூஜித்து அந்தக் குழுவினருக்கு வழங்குவார்கள். வீடுவீடாகஇந்தக் கரகமும், தீமிதிக்கும் குழுவினரும் போவார்கள். இங்கே ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் நடுவே கரும்புத் தோட்டங்கள் காணப்படும்! ஏழெட்டு வயதுமுதல், முதியோர்கள்வரை இந்த தீமிதிக்குழுவில் இருப்பார்கள். அட்டைகளால் செய்யப்பட்ட ஒரு உருவம் 'மெகா சைஸஸில்' கூடவே வரும்! அதற்குள்ளே ஒரு ஆள் இருந்து அதைச் சுமந்துகொண்டு வருவார்!
மாரியம்மன் சிலையும் சும்மா பெரிதாக 'லைஃப் சைஸ்'ல் இருக்கும். நல்ல நைலக்ஸ் புடவை உடுத்தியிருக்கும் சாமி சிலைகள் எல்லாம். களிமண் கொண்டு பூசிய சிலைகள். கண்கள், முகம் எல்லாம்பெயிண்ட் கொண்டு வண்ணம் பூசப்பட்டிருக்கும்.


தெருக்கூத்து நாடகமும் உண்டு! ஒரே கதைதான். அசுரனைக் காளி நிர்மூலம் செய்தது! கட்டியங்காரர்,விதூஷகர் எல்லாமும் உண்டு. தமிழும் ஹிந்தியும் கலந்துதான் நாடக வசனக்கள் இருக்கும்.

பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் பேசுவார்கள். இப்போதுள்ள தலைமுறையினர், தாங்கள் மந்த்ராஜிகள்தான் என்றும் தாத்தா, பாட்டிதான் மந்த்ராஜி பேசுவார்கலள் என்றும் இவர்களுக்குத் தெரியாது என்றும் ஹிந்தியில் சொல்வார்கள்.

சுமார் 150 வருடங்களுக்கு முன்பூ 'ப்ரிட்டிஷ்' காரர்களால் கரும்புத் தோட்டத்தில் கூலிவேலை செய்யக்கொண்டுவரப்பட்டவர்கள் இவர்கள்.

இன்னும் வரும்
****************

6 comments:

said...

கோபால், பிஜி தீவிலிருந்து எழுதறீங்களா? அப்படீண்ணா, அந்த நாட்டைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை நிறைய எழுதுங்க... வாழ்த்துக்கள்!

said...

எனக்குத் தெரிந்த விவரங்களை எழுத முயல்கின்றேன். அங்கே ஆறு வருடங்கள் இருந்தோம்.
இப்போது நியூஸிலாந்து வாசம்!

அன்புடன்,
துளசி.

said...

//நல்ல நைலக்ஸ் புடவை உடுத்தியிருக்கும் சாமி சிலைகள் எல்லாம்.//

:))

said...

ஆறு வருட வாழ்வின் மலரும் நினைவுகள் - பலே பலே

இன்னும் வரும் என பயமுறுத்தல் வேறு - கலக்கி இருக்கீங்க துளசி

said...

ஓ! பிஜித் தீவில் இருந்தீர்களா? உங்கள் பதிவுகளைப் போலவே உங்கள் வாழ்க்கையும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று தோன்றுகிறது. நீங்கள் தகவல்களைக் கொடுக்கும் விதம் சுவை!

அடுத்த பதிவிற்குப் போகிறேன்.

said...

Naanum painekeran.