Thursday, October 07, 2004

புயலுக்கு முன்னே ஐஸ்க்ரீம் !!!

ஃபிஜி அனுபவங்கள். பகுதி 6

புயலுக்கும், ஐஸ்க்ரீமுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? இருக்கே! எப்படி ?

புயல் வரப் போகிறதென்ற அறிவிப்பு ரேடியோவில் வந்தவுடன் ஃப்ரீஸ்ஸரில் இருக்கும் ஐஸ்க்ரீமையெல்லாம் தின்னு தீர்த்துவிட வேண்டும்! இன்னும் ஃப்ரீஸ் செய்து வைத்துள்ள கோழி இறைச்சி முதலானவைகளை வெளியே எடுத்து, சமைத்து தின்றுவிட வேண்டும்!

'ஏன் அரக்கப் பரக்கத் திங்கணும்?' என்று கேட்டால் ஒரே பதில்தான். கரண்ட் நின்று போய்விடும்! சரிதான். எப்பத் திரும்பிவரும்? யாருக்குத் தெரியும். பல நாட்கள் ஆகும்!


இங்கே வருடா வருடம் 'புயல் திருவிழா'வும் உண்டு. டிசம்பர் மாதம் தொடங்கி, மார்ச் மாதம் வரை புயல் காலம்! அதுவே கோடைக்காலமும் ஆகும். வெய்யில் கொளுத்தக் கொளுத்தப் புயல் வருவது நிச்சயமாகிவிடும்!

'வங்கக் கடலிலே மையம் கொண்டுள்ள புயல்..... என்ற இடத்திலே நாளை மறுநாள் கரையைக் கடக்கவிருப்பதால், சென்னையிலும் அதன்சுற்றுப் புறங்களிலும், இடியுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இது ஆகாசவாணியின் செய்திஅறிக்கை'

இதுதான், சென்னைவாசியான எனக்குப் புயலின் கூட உள்ள சம்பந்தம். ஒரு நாளும் புயலின் நிஜ சொரூபத்தைப் பார்த்ததில்லை!

ஃபிஜியில் எங்களது முதல் புயல் அனுபவம் வேறுவிதமாக இருந்தது!

வானொலியில் எச்சரிக்கை செய்தபடி இருந்தார்கள். மேலும் 'டெலிஃபோன் டைரக்டரி'யின் கடைசிப் பக்கத்தில் என்ன முன்னெச்சிரிக்கை எடுக்க வேண்டுமென்றும் விலாவரியாகச் சொல்லப்பட்டு இருந்தது!

ரேடியோக்கும், டார்ச் லைட்டுக்கும் ஆன பேட்டரிகள், குடிநீர், முதல் உதவிப் பெட்டி, டின்களில் அடைத்த பதப்படுத்தப்பட்ட உணவு என்று ஒரு பெரிய பட்டியல்.

குறிப்பிட்ட நேரத்தில் காற்று வீசத் தொடங்கிவிட்டது. அதற்கு முன்பே எல்லோரும் வீடு திரும்பிவிட்டனர். காற்றின் வேகம் அதிகரிக்க, அதற்கு ஏற்றாற்போல மழையின் வேகமும் அதிகரிக்கிறது! ' ஹும்ம்ம்ம்ம்'மென்ற சத்தம் இப்போது பெரும் இரைச்சலாக இருக்கிறது..

எல்லாஜன்னல், கதவுகளையும் இழுத்துப் பூட்டியிருந்தாலும், வீட்டிற்குள்ளே தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அவற்றைத் தடுக்க, பலவிதமானதுணிகளை ( கைக்கு எட்டினதை) வைத்து அடைக்கிறோம். அதெல்லாம் எந்த மூலைக்கு?


இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் தளர்ந்து போய், கட்டிலில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இருப்பது மாடியில்! கீழே இருக்கும் வீடுகளின் நிலமை என்ன என்று தெரியவில்லை!

இந்தக் களேபரத்தில், காற்றின் ஓசையையும் மீறி வேறு ஏதோ சத்தம் கேட்கிறது. நம்முடைய பிரமையோ? இரவு நேரம்வேறு! எப்போது கண்ணயர்ந்தோம் என்று தெரியவில்லை. விழிப்பு வந்தபோது, காற்று நின்றிருந்தது! பால்கனிக் கதவை மெதுவாகத் திறந்து பார்த்தால், தெருவெங்கும் வீசி எறியப்பட்ட மரக்கிளைகள். பக்கத்து வீட்டில் மாடிக்கும் கீழேயுமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். என்ன விவரம் என்று தெரிந்ததும் என் நெஞ்சே நின்றுவிடும்போல ஆனது. அவர்கள் வீட்டு மூத்த மருமகள், புயல் அடித்த சமயம் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொண்டார்களாம்!

பேய்மழையின் காரணத்தால், எங்கும் வெள்ளப் பெருக்கு. மருத்துவ மனைக்கோ ஆற்றைக் கடந்து போக வேண்டும். பாலம் எல்லாம் நீரில் மூழ்கி விட்டிருந்தது. சாலைகள் எல்லாமே தண்ணீரில் மூழ்கி இருந்தன! படகு வைத்திருப்பவர்கள் தெருக்களிலே படகுகளில் போய்வந்து கொண்டிருந்தனர்!

தீக்காயம் அடைந்தவரையும் ஒருவழியாகப் படகிலே ஏற்றி, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பயனில்லை. இறப்பதற்கு முன், 'ஏதோ ஒரு குரல் இப்படிச் செய்'யச் சொன்னதாகச் சொன்னாராம்!

கூட்டுக்குடும்ப வாழ்க்கை. 23 பேர் உள்ள குடும்பம்! என்ன மன அழுத்தமோ?
(இதன் பின் ஒவ்வொரு முறை புயல் எச்சரிக்கை வரும்போதும் என்னை அறியாமலேயே இந்த சம்பவம் நினைவுக்கு வந்துவிடும்!)

அநேகமாக எல்லா இந்திய மக்களுமே கூட்டுக் குடும்பமாகவே வாழ்கின்றனர். மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களாகவே நிறையகுடும்பங்கள்.

முதியோர் இல்லங்கள் எங்குமே இல்லை. சொந்தங்கள் இல்லாமல் தனியாகிவிடும் முதியோர்களையுமே, யாராவது தங்கள் வீடுகளில்கொண்டு வைத்துப் பராமரிக்கின்றனர். மனிதனின் மனத்தில் இன்னும் ஈரம் இருக்கிறதென்பதற்கு இவையே சாட்சி!

அரசாங்கம் எந்தவிதமான பராமரிப்புச்செலவும் தருவதுமில்லை. மருத்துவ வசதிகளும் வெகு நல்ல முறையில் உள்ளதென்று சொல்ல இயலாது. ஆனாலும், காலம் முடிவடையும் வரை வாழவேண்டுமல்லவா?

சரி, புயலுக்கு வருவோம்! பகல் நேரமென்றால், புயலடித்து ஓய்ந்தபின், எல்லோரும் அவரவர் வீடுகளில் இருந்து புறப்பட்டு, இதுவரை நடந்த சேதாரங்களைப் பார்வையிடப் போவார்கள். கடைகள் வைத்துள்ள வியாபாரிகள், கடைகளுக்குச் சென்று, தண்ணீர்,கடைகளில் புகுந்து எவ்வளவு சேதம் விளைவித்துள்ளது என்றும் பார்க்க வேண்டுமல்லவா?

இப்போதெல்லாம், காப்பீட்டு நிறுவனங்களும், புயல் சேதத்திற்கு காப்பீடு வழங்குவதை நிறுத்திவிட்டன. வருடா வருடம் இதேகதி என்றால் அவர்களுக்கும் பெருத்த நஷ்டமல்லவா?

இன்னும் வரும்.

4 comments:

said...

நல்லாச் சொன்னீங்க! இப்ப நாங்க புயலில் இருந்து, பூகம்பத்துக்கு மாறிட்டோம்!

இப்ப இருக்கற ஊரு, கடல் மட்டத்தைவிடவும் குறைவாம். அதனாலே 'சுநாமி வேவ்' வரும்னு சொல்லிகிட்டு இருக்காங்க!

said...

என்னங்க துளசி, ஒரு பக்கத்துல - ஐஸ் கீரீம் சந்தோசம், மின் தடை சோகம், கூட்டுக்குடும்ப மகிழ்ச்சி, புயல் பரபரப்பு என்று ஊடுகட்டி கலக்குறீங்க. உங்கள் எழுத்து படிக்க இனிமையாக இருக்கிறது, தொடருங்கள்.

said...

அன்பு,

உங்க அன்புக்குக்கும், ஆதரவுக்கும் என் நன்றி.

நம் வாழ்க்கையில் எல்லாம் எந்த மாதிரி அனுபவங்களின் கலவையாக இருக்கிறது என்று நான் எண்ணி ஆச்சரியப்படாதே நாளே இல்லை.

முடிந்தவரை என் அனுபவத்தை எழுத்தில் கொண்டுவர முயல்கின்றேன்.

என்றும் அன்புடன்,
துளசி.

said...

துளசி, புயலுக்குப் பின்னெ அமைதின்னா - இங்கே துக்ககரமான சம்பவம். ம்ம்ம்ம் - ஐஸ்கிரீம் இறைச்சி - ச்சாப்ப்பாடு ச்சுப்பர் தன் - புயலெப் பத்திக் கவலெப்படாம சாப்புடலாம். கூட்டுக்குடும்பங்கள் - முதியவர்கள் - அரசாங்க இயலாமை - காப்பீடி இல்லாமை - ம்ம்ம்ம்ம்ம் - எழுத்தில் திறமை பளிச்சிடுகிறது.

சரோஜ் நாராயண சாமியின் குரலில் புயல் எச்சரிக்கை -வானொலி அறிக்கை - ஆகாசவாணியில் கேட்ட உங்களுக்கு கண் முன்னெ புயல் - ம்ம்ம் - அனுபவங்கள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.