ஃபிஜி அனுபவம் பகுதி 7
******************************
இப்போது தெரிந்திருக்குமே, இந்தப் பகுதி யாரைப் பற்றி என்பது! நீங்கள் அனுமானித்தது ரொம்பச் சரி! எல்லாம் நம் 'குஜ்ஜு' மக்களைப் பற்றித்தான்!
இவர்கள் வியாபாரம் செய்வதற்காகவே ( பிறந்தவர்கள்) வந்தவர்கள். 'பனியா'வின் பிரத்தியேகக் குணம் இவர்கள் ரத்தத்திலேயே கலந்துள்ளது! அந்தக் காலத்தில், இவர்கள் வந்தபோது அப்படி ஒன்றும் வாழ்க்கை சுலபமாக அமைந்துவிடவில்லையாம்! சின்னக் கடைகள் வைத்துக்கொண்டு, அங்கேயே சமைத்து, சாப்பிட்டு, கடைகளின் 'கவுன்ட்டர்' மேலேயே உறங்கி, பணம் சம்பாரிப்பது ஒன்றே தவமாய் இருந்திருக்கிறார்கள். ஓரளவு வசதிகள் பெருகியதும், தாய் மண்ணுக்குத் திரும்பிப் போய், தங்கள் குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு வந்தவர்களே பெரும்பாலோர்!
இன்னும் அவர்களின் வேர்கள் இந்தியாவிலும், விழுதுகள் ஃபிஜியிலுமாய் இருக்கிறார்கள்.
இவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது முக்கியமாகச் சொல்லவேண்டியது இவர்களின் 'உழைப்பு!' இதில் வயசு வித்தியாசமோ, ஆண், பெண் என்றபாகுபாடோ இல்லை. அவரவருக்குத் தக்க முறையில் உழைக்கத் தயாராக இருக்கும் ஒரு கூட்டத்தினர்!!
இவர்களும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்கின்றனர். சில வீடுகளில் நான்கு தலைமுறைகள் ஒன்றாக வாழ்கின்றனர்!
ஒரு சிறிய அளவில் கடை வைத்துள்ள வியாபாரியாகத்தான் இருக்கட்டுமே, குடும்பம் பூராவும் அந்தக் கடையில் வேலை செய்வார்கள்.
பெரும்பாலோர், இன்னமும் தங்கள் கடைகளின் அருகிலேயே வீட்டை அமைத்துக் கொண்டுவிடுகின்றனர். காலையில், அவரவர் சம்பிரதாயப்படி பூஜையை முடித்துக்கொண்டு ஆண்கள் கடைகளுக்கு வந்துவிடுவார்கள். பெண்கள் , எல்லாக் கடமைகளையும் வேகமாகச் செய்து முடித்து விட்டு, அவர்களும் கடையில் வியாபாரத்தைக் கவனிக்க வந்துவிடுவார்கள்.
பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள், மாலை வீடு வந்தவுடன், கடைகளிலே வந்து அவர்களால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள். மிகவும் சிறிய குழந்தைகள் என்றாலும், குறைந்த பட்சம் கடையிலே ச்சும்மாவாவது உட்கார்ந்து இருப்பார்கள்!
முதியோர்களும், கடையிலேயே தங்கள் பொழுதைக் கழித்துவிடுவர். வியாபாரம் நடக்கிறதோ இல்லையோ கடையில் இருப்பார்கள்! சோம்பல் என்றால் என்ன? என்று கேட்கும் ரகம்! எப்போதும் வெகு சுத்தமான ஆடைகளுடன், முகத்தில் ஒரு வாட்டமும் இன்றி இருக்கும் அவர்களைப் பார்க்கும்போதே, நமக்கும் ஏதோ ஒரு உற்சாகம் வந்துவிடும்!
முதியோரை அவர்கள் பராமரிக்கும் விதமே தனி. எப்போதும் , எது செய்தாலும் அவர்களின் கருத்துக்களைக் கேட்டே செய்வார்கள். வீட்டில் மருமகள் ஒரு ஊறுகாய் தயாரிக்க வேண்டுமென்றாலும், தன்னுடைய மாமியாரைக் கலந்து பேசி, அதில் போடும் உப்பு, காரத்தின் அளைவைக்கூட அவர்களிடம் கேட்டே செய்வார்கள். இத்தனைக்கும் அந்த மருமகள் கல்யாணமாகி வந்து 30 ஆண்டுகள் ஆனவராக இருப்பார்! இதுபோன்ற செயல்களால், முதியவர்களுக்கு, ஒரு மனநிறைவும், இன்னும் தான் தன் குடும்பத்துக்குத் தேவைப்படுகின்றோம் என்ற திருப்தியுமாக வாழ்க்கை ஓட்டம் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்து வளரும் இளைய தலைமுறையினரும், முதியோர்களை மதிக்கவும் கற்றுக்கொண்டு விடுகிறார்கள். எல்லாம் சொல்லித் தராமலேயே வருகின்றது! இதனால் குடும்பங்களில் மன அமைதியும், மகிழ்ச்சியும் நிலவுகின்றது. ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்கக் கற்றுக் கொள்கின்றனர், இளைய தலைமுறையினர்!
இப்போது நவராத்திரி சீஸன் வருகிறதல்லவா? குஜராத்திகள் எல்லாம் 'அம்பா மாதா'பூஜை செய்து, இந்த ஒன்பது நாட்களிலும் அவர்கள் பாரம்பரிய முறைப்படி, 'கர்பா' என்னும் நடனம் ஆடிக் கொண்டாடுகிறார்கள். இந்த நாட்களில், மாலை கடைகளை அடைத்தபிறகு, நம் வீட்டின் அருகேயுள்ள ஒரு பூங்காவில் அனைவரும் கூடி, பூஜை, நடனம் எல்லாம் குறைவின்றி நடத்தி, அவரவர் கொண்டுவரும் பிரசாதங்களை விநியோகம் செய்து, வீடு திரும்ப இரவு பத்துமணி ஆகிவிடும்! இதுபோலவே எல்லா (ஒன்பது) நாட்களும்!
நவராத்திரி முடிந்தவுடன் வருவது தீபாவளிப்பண்டிகை. அதையும் சிறப்பாகவே கொண்டாடுகின்றனர். அதற்கு மறுநாள் 'குஜ்ஜு'க்களுக்குப் புது வருடம் பிறக்கிறது! அதற்கான லக்ஷ்மி பூஜையும் மிகவும் சிறப்பாக வீடுகளிலும் ,கடைகளிலும் கொண்டாடப்படுகின்றது. பூஜைமுடிந்தவுடன், பட்டாசு வெடிப்புகள். இனிப்பு வழங்குதல். இவை எல்லாவற்றிலும், குடும்பாங்கத்தினர் ஒருவர் விடாமல் அனைவருமே கலந்து மகிழ்கின்றனர். நம் கம்பெனியின் உரிமையாளர்கள் குஜராத்திகள்தான். எங்களுக்கான வசதிகளைப் பார்த்துப் பார்த்து செய்து தந்தார்கள். ஆறு வருடங்கள் இவர்கள் சமுதாயத்தில் நாங்களும் ஒரு அங்கமாகவே இருந்தோம். அவர்களிடமிருந்து பல நல்ல விஷயங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது. அவர்களும், நம் இட்டிலி,சாம்பார், ரசம் தோசையெல்லாம் செய்வதற்கு என்னிடம் இருந்தும் கற்றுக் கொண்டனர்.
மாதம் ஒருமுறை அருகிலுள்ள ஏதாவது இடங்களுக்கு ஒரு 'பிக்னிக்' நிச்சயம் உண்டு! நான் வழக்கமாகக் கொண்டுபோகும் இட்டிலியை எதிர்பார்த்து இருப்பார்கள். இட்டிலியைக் கையில் எடுத்து, கத்தியால் அதை ரெண்டாக 'ஸ்லைஸ்' செய்து, சட்டினியைத் தடவி, 'சாண்ட்விச்' ஆக்கிவிடுவார்கள். எங்களை, அவர்கள் குடும்ப அங்கத்தினர் போன்றே வேற்றுமையில்லாமல் கருதியிருந்தார்கள்.
இன்னொரு முக்கிய குணம், இவர்களில் யாராவது ஒருவர், ஏதோ காரணத்தால் வியாபாரத்தில் நஷ்டம் அடைந்து, கஷ்டத்தில் இருக்கும்படிநேர்ந்துவிட்டால், அந்த சமூகத்தினர் அனைவரும் உதவி செய்து, அந்தக் குடும்பத்தைக் கைகொடுத்து மேலே தூக்கிவிடுவார்கள்.அதுவும் மற்ற சமூகத்திற்கு தெரியாத முறையில்! எவ்வளவு நல்ல குணம் பாருங்கள்!
உழைப்பு எப்படியோ அப்படியே ஓய்வும்! மாலையில் வேலை முடிந்து, குடும்பத்தினர் அனைவரும் ஒருங்கே இருந்து சற்று நேரம் உரையாடி மகிழ்வார்கள். அப்போது, உ.பா. உண்டு. சின்னப் பசங்களும், பெண்களும் 'சாஃப்ட் ட்ரிங்க்ஸ்'ம், ஆண்கள் லிக்கரும்(ஸ்மால் ஒன்லி) எடுத்துக்கொள்வார்கள். வயதில் முதிர்ந்த பெண்மணிகளும் விஸ்கி, பிராந்தி எல்லாம் எடுப்பார்கள்.
காந்தி பிறந்த குஜராத்தில் மதுபானம் இல்லையென்பது தெரிந்திருந்த எனக்கு, முதலில் இது ஒரு 'ஷாக்'காகவே இருந்தது! அப்புறம் நான் தெரிந்து கொண்டது, 'குஜராத்தில் மட்டும்தான் இல்லை' என்பதே!
இந்தியாவில் சென்று கல்யாணம் செய்துகொண்டு வருவது, இன்னும் சர்வசாதாரணமாக நடக்கிறது. கூடவே, உள்ளூரிலேயே அவர்கள் சமூகத்தில் திருமணங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வரதட்சிணை என்றெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. ரொம்ப வசதியான குடும்பங்கள் , ரொம்ப சாதாரண வசதியுடையவர்களுடன் சம்பந்தம் செய்து கொள்வது பரவலாக காணப்படுகின்றது. பணக்காரக் குடும்பங்களிலும்கூட பெண்குழந்தைகளுக்கு, எல்லா வீட்டுவேலைகளையும் செய்ய நல்ல முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல, கல்லூரியில் படிக்கும் பையன்களும்கூட நேரம் கிடைக்கும்போதெல்லாம், கடையில் வந்து வியாபாரத்தைக் கவனிக்கவும்ஆர்வம் காட்டுகின்றனர்.
இவர்கள் சமூகத்தில், மற்றவர்வீட்டு சுப, அசுப நிகழ்ச்சிகளிலும் எல்லாரும் கலந்துகொண்டு அதைச் சிறப்பிக்கின்றனர். கல்யாணம்போன்ற விசேஷங்களில், 'மொய்' எழுதும் பழக்கம் உண்டு. அந்த 'மொய்ப் பணம் ரெண்டேகால் டாலர்'தான். எல்லோரும் அது மட்டும் தான் எழுதவேண்டும். நெருங்கிய சொந்தங்கள் மட்டும் தங்கமாகத் தருவார்கள். அதுவும் தனியாக, வீட்டில் வைத்து. சபையில் அல்ல! எங்களுக்கும் 'ஜாலி'தான்! கல்யாணங்களுக்குப் போகும்போது ஒரு ரெண்டேகால் டாலர் கொண்டு போனால் போதுமே!
இவர்களுக்கும், மற்ற ஃபிஜி இந்தியர்களுக்கும் உள்ள உறவு சுமுகமாகவே இருந்து வருகின்றது.
இவர்கள் வாழ்வில் உள்ள ஒரு ஒழுங்குமுறை அதிசயிக்கத்தக்கது! இவர்களிடமிருந்து, நாம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கிறது!
இன்னும் வரும்.
Saturday, October 09, 2004
கேம்ச்சோ? ரைட்ச்சே!!!!
Posted by துளசி கோபால் at 10/09/2004 04:09:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment