ஃபிஜி அனுபவம் பகுதி 10
***********************
நாளை என்பதைப் பற்றிய கவலையே இல்லாத மக்கள்! அவர்கள் தேவைகள் மிகவும் குறைவு என்பதால் எப்போதும்
முகத்தில் சிரிப்பு இருந்துகொண்டே இருக்கும்!
இங்கு அடிக்கிற வெயிலுக்கு ஆடைகள் கூடுதலாக அணிவதே கஷ்டம்தான். ஆகவே நெஞ்சுவரை ஏற்றிக்கட்டிய சுலுவுடன்
சர்வ சகஜமாக நடமாடுவார்கள். மரநிழல்களில் பாயை விரித்து, அப்படியே தூங்கியும் விடுவார்கள். கடலுக்கு அருகாமையில்
உள்ளவர்கள் எப்போதும் தண்ணீரிலேயே இருப்பார்கள். மீன் பிடிப்பது தூண்டில் போட்டு அல்ல. ஒரு குத்தீட்டி மாதிரி
ஒன்று மரத்தில் இருக்கும். அசையாமல் நின்றுகொண்டிருந்துவிட்டு, மீன் அருகிலே வரும்போது ஒரே வீச்சு. ஈட்டி பாய்ந்து
அடுத்த நிமிடம் மீன் தண்ணீரில் மிதக்கும்!
சில நாட்களில் அந்த மீன்களை ஒரு தென்னை ஓலையால் கட்டி, சின்னப்பிள்ளைகள் மெயின் ரோடருகில் நிற்பார்கள். ஏதாவது
வாகனம் வருவதைக் கண்டால், கை உயர்த்திக் காட்டுவார்கள். ஜனங்களும், வண்டியை நிறுத்தி, என்ன விலை என்று கேட்டு
அவர்கள் சொல்லும் விலையில் பாதியை கொடுத்து வாங்கிப் போவார்கள். புதிய மீன்களாக இருக்கும் அவற்றை வாங்குவது
அனைவருக்கும் பிடிக்கும்.
இவர்களுக்குத் தெரிந்த ஒரே விளையாட்டு என்ன தெரியுமா? இது தான் இவர்களின் தேசீய விளையாடான 'ரக்பி'
நேரம் கிடைக்கும்போதெல்லாம் விளையாடுவது இந்த ரக்பி விளையாட்டுதான்! இந்த விளையாட்டு வந்ததே ஒரு கதை(!)தான்.
'அந்தக் காலத்தில்' எதிரிகளைக் கொன்றுவிட்டு, அவர்கள் தலையை உருட்டி விளையாடினார்களாம்.நல்ல வேளை! தலையின்
இடத்தை இப்போது பந்து பிடித்துக் கொண்டது!
சரித்திரக்கதைகளில் 'எதிரிப்படையைக் கொன்று குவித்துத் தலைகளைப் பந்தாடினான்'என்று படித்தது நினைவுக்கு வருகிறதா?
இந்தப் பந்து மட்டையோடு கூடிய தேங்காய் வடிவத்தில் இருக்கும். இரண்டுபுறமும் தட்டையாக இருக்காமல் கொஞ்சம் கூம்பினது!
என்னத்துக்கு இந்த விளக்கம். ச்சும்மா முட்டை வடைவம் அதாவது டைனோசாரின் முட்டைன்னு வைத்துக்கொள்ளலாம்!
அநேகமாக இப்போது உலகில் அனைவருக்கும் இந்த விளையாட்டுப் பழக்கப்பட்டிருக்கலாம். அதுதான் எப்போதும்
தொலைக்காட்சியில் விளையாட்டுப் பகுதியில் வந்து கொண்டிருக்கிறதே.
இந்த விளையாட்டு விளையாட நல்ல உரமான உடல் வேண்டும். இந்தியர்களுக்கு அவ்வளவாக உடல் வலு இல்லாததால் பெரிய
அளவில் அவர்கள் இந்த விளையாட்டில் கலந்துகொள்வதில்லை. பள்ளிகளில் படிக்கும்போது விளையாடுவதுடன் சரி. ஆனால் எல்லார்
வீட்டிலும் ஒரு ரக்பி பந்து மட்டும் கட்டாயம் இருக்கும்!
ஃபிஜியன்களும் 'ப்ளாக் மேஜிக்' செய்வதில் வல்லவர்களாம். இந்த ரக்பி போட்டிகள் நடக்கும்போது, எதிரி அணி தோல்வி அடைய
வேண்டி மந்திரங்கள் செய்து, 'கோல் போஸ்ட்' டின் அடியில் புதைப்பார்களாம்! இதுவரை அந்த மந்திரங்கள் எல்லாம் கண்டிப்பாக
பலித்ததாகத் தெரியவில்லை. ஜெயித்துவிட்டால் மந்திரம் நன்றாக வேலை செய்தது என்றும் தோற்றுவிட்டால் எதிரி அணி நம்மைவிட
'ஸ்ட்ராங்க ஸ்பெல்' போட்டுவிட்டார்கள் என்றும் சொல்லிக் கொள்வார்கள்.
இந்த மந்திரம் செய்பவர்களுக்கு தட்சிணையாக விஸ்கி, பிராந்தி போன்ற குடிவகைகளும், யகோனாப் பொடியும் தரவேண்டுமாம்!
இந்த 'யகோனாப் பொடி 'என்பது, ஒரு வகையான செடியின் வேரைக் காயவைத்து இடித்துப் பொடிக்கும் தூள். இதைத் தண்ணீரில்
கலக்கிக் குடிப்பார்கள். இது இங்கே தேசீய அளவில் ஒரு சம்பிரதாய பானம்.
இதைக் கலப்பது என்பதே ஒரு நிகழ்வு. 'யகோனா செரிமனி' இதைக் கலக்கவென்றே மரத்தாலான ஒரு பெரிய பாத்திரம் உண்டு.
இந்தப் பாத்திரம் இவர்களது நாணயமான ஒரு சதத்தில் இடம் பெற்றுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் இதன் முக்கியத்துவத்தை!
தேசீயத்தலைவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தாலும், அரசாங்கத்தின் தரப்பில் இந்த செரிமனி நடக்கும். உடலெங்கும் எண்ணெய் பூசிக்கொண்டு
கரு கரு என்று இரண்டு ஆஜானுபாகுவானவர்கள், நாரினால் செய்யப்பட்ட சுலு கட்டிக் கொண்டு வி.ஐ.பி. முன்பு மண்டியிட்டு
அமர்ந்து இதைக் கலக்குவார்கள். அப்புறம், வழுவழுப்பாகத் தேய்க்கப்பட்ட ஒரு தேங்காய் சிரட்டையில் அதைக் கோரி இரண்டு கைகளால்
அந்த வி.ஐ.பி.க்குக் கொடுப்பர்கள். விருந்தினர் அதை வாங்கிக் குடிக்கவேண்டும். வேண்டாம் என்று மறுத்தால் அது அரசாங்கத்தையும்
அவர்களின் கலாசார(!)த்தையும் பழித்தது போலவாம்!
பார்ப்பதற்கு ஏதோ மண்ணைக் கலக்கினது போல வெளிர் நிறமாக இருக்கும் இது, குடித்தால் சுவை ஏதும் இல்லாமல் இருக்குமாம்.
ஆனால் நாக்கு மரத்துப் போவது போல இருக்குமாம். கொஞ்சம் போதையாகவும் இருக்குமாம்.
ஃபிஜியன் கிராமங்களிலும் ஆண்கள் எல்லோரும் வட்டமாக உட்கார்ந்துகொண்டு இதைக் குடித்துக்கொண்டே
பேசிக்கொண்டிருப்பார்கள.
இந்த பானம் பருகாத இந்திய ஆண்களே ( குஜராத்திகள் நீங்கலாக) இல்லை எனலாம்! வீடுகளில் நடக்கும் விழாவானாலும் சரி,
பொது விழாக்களானாலும் சரி, நம் ஆட்கள் இதை ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பேஸினில் கலக்கி, ஒரு துணியில் வடிகட்டி
(டீ வடிகட்டுவது போல) விடுவார்கள். இந்தப் பழக்கம் எல்லாம் யாரும் சொல்லித்தராமலேயே வந்துவிடும்!
என்னவோ சொல்ல ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன்! ஃபிஜியன் பெண்கள்் நிறையபேர் நர்ஸ் வேலை செய்கிறார்கள் என்று
குறிப்பிட்டு இருந்தேன் அல்லவா? இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரியவே விரும்புகின்றனர்.
அங்கெல்லாம் குழந்தை பிறந்த பிறகு, சுமார் மூணரை வயது வரை, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வீடுகளுக்குப் போய்
குழந்தையின் வளர்ச்சியைக் கவனிப்பது வழக்கமா இருக்கிறது! இரண்டு பேர் கொண்ட அணியாகவெ இவர்கள் வீடுகளுக்குப
போவார்கள். தெரிந்தவர்களின் வீடு என்றால் கேட்கவே வேண்டாம். ஆற அமர இருந்து சாப்பிட்டு விட்டும் போவார்கள்.
இப்படி வழக்கமாக வரும் இவர்களிடம், ஒரு நாள் நம்ம 'கிரேக்'கின் கால்களைப் பற்றிப் பேச்சு வந்த போது, அவர்கள் சிரித்துக்
கொண்டே சொன்னது, ரக்பி விளையாடப்போகும் கால்கள் இல்லையா, வளர வளர சரியாகிவிடும்! இந்தியர்களுக்குத்்தான்
எப்போதும் சின்னப் பிள்ளைகளுக்கு எண்ணெய் போட்டு மசாஜ் செய்யும் பழக்கம் உண்டே அதுபோலவும் செய்யலாமெ
என்றும் குறிப்பிட்டனர். அது என்னமோ உண்மைதான். அங்கெ பழைய தமிழ் ஆட்களிடம் இந்தப் பழக்கம் இருக்கிறது.
'மாலீஷ் செஞ்சாத்தான் குழந்தைக்கு உடம்பு வலி இல்லாமல் இருக்கும். அப்பத்தான் நீட்டமா வளரும்' என்று சொல்வார்கள்.
நானும் நினைத்துக் கொள்வேன் இது என்ன புடலங்காயா? நீட்டமாக வளர என்று. ஆனால் இதெல்லாம் குழந்தைக்கு
ரெண்டு வயது வரைதான்.
அதன்பின் நம் வீட்டு வேலைகளுக்கு வரும் உதவியாளர்( அவர்களை இங்கே 'ஹெளஸ் கேர்ள்' என்பார்கள்)மூலம் இவனுக்கு
தினமும் மாலீஷ்தான்!
அவர்கள் வீடு மாடி என்பதினால் இவனும் என் மகளும், தினமும் ஒரு ஆயிரம்தடவையாவது ஏறி இறங்கிக் கொண்டிருப்பார்கள்.
எந்த மாடிப்படிக்குப் பயந்து நான் வீடு மாறினேனோ அதே மாடிப்படி இவர்களின் விளையாட்டு இடமாகிவிட்டது! கொஞ்சம்
கொஞ்சமாக இருவரும் ரக்பி பந்தை உதைத்து விளையாட ஆரம்பித்தனர்! ஒரு அஞ்சாறு மாதத்தில் அவன் கால் நேராகிவிட்டது.
பந்தை உதைத்து விளையாடினதால் சரியானதா அல்லது நம் எண்ணெய் மாலீஷின் பலனா என்று தெரியவில்லை!
ஏதாயாலும், இதுவேஇங்கு தேசீய விளையாட்டு! நிறைய ஃபிஜியன் ஆளுங்க ரக்பி ஆட்டத்துலே கெட்டிக்காரங்களாச்சே.
அவுங்க இந்தப் பகுதிகளில் ஆஸ்தரேலியா, நியூஸிலாந்து(இங்கெல்லாமும்கூட இந்த ரக்பிக்கு மதிப்பு மிக அதிகம்!) டீம்களில்
சேர்ந்து விளையாடி கோடிக்கணக்காக சம்பாதிக்கிறார்கள்! போதாக்குறைக்கு ஜப்பானுக்குவேற போய் அங்கே இந்த ஆட்டத்துக்கு
'கோச்சிங்'வேற செய்கிறார்கள்!
இது ரொம்ப முரட்டு ஆட்டம் என்பதே என் தனிப்பட்ட கருத்து!
இன்னும் வரும்.
**************
Saturday, October 23, 2004
ரக்பி த பிக் கேம்!!!!!
Posted by துளசி கோபால் at 10/23/2004 03:29:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment