ஃபிஜி அனுபவம் பகுதி 8
***************************
கொஞ்சம் அப்படி, கொஞ்சம் இப்படின்னு எல்லா ஊர்லேயும் நடக்குற விஷயம்தான். முதல்லே இதை எழுதணுமான்னு கொஞ்சம் யோசனையாதான் இருந்தது! ஊர்லே, உலகத்துலே நடக்காததையா எழுதறோம்னு நினைச்சு, இப்ப எழுதறேன்!இங்கே வந்த புதிதில். இந்த விஷயங்களைக்க் கேள்விப்பட்டபோது, என்னவோ கேட்கக் கூடாதை ஒன்றைக் கேட்டுவிட்டதாக எண்ணினேன். இந்தியாவில் நாம் வளர்க்கப்பட்ட விதம் அப்படி!
இங்குள்ள இந்தியர்களிடையே ( குஜராத்திகள் நீங்கலாக) இதற்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. எல்லோரும் இதை வழக்கத்திற்கு மாறாக நினைக்காமல் ரொம்பச் சாதாரணமாகவே எடுத்துக் கொள்கின்றனர். எதற்கு இவ்வளவு 'பீடிகை' போடுகிறேனென்று நினைக்கின்றீர்களா? எல்லாம் கொஞ்சம் 'சென்சிடிவ் ஆன விஷயம்'தான்.
சின்ன வீடுகள் ! ஆனால் இந்தியாவில் சில இடங்களில் உள்ளது போல இது பெரும் அளவில் காணப்படுவதில்லை என்றாலும்கூட, சிறிய நாடாக இருப்பதாலும், எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருப்பதாலும், அதிகமாக நிகழ்வதுபோன்ற ஒரு தோற்றம் கிடைக்கிறது!
'உஸ்கோ ச்சோடுதீஸ். இஸ்கோ ரக்தீஸ்' ( இவர்கள் பேசும் ஹிந்தி போஜ்புரி ஸ்டைல். இவளை விட்டுவிட்டான், அவளை வைத்துகொண்டான் என்று அர்த்தம்) என்று சாதாரணமாகச் சொல்லிவிடுகின்றனர். ஒளிவு மறைவு என்றெல்லாம் இல்லை. அதேபோல இது நிகழ்ந்த மக்களுக்கும், சமூகத்தில் எந்த விதமான எதிர்ப்போ, ( நம் நாட்டில் சில கிராமங்களில் உள்ளது போல ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பது போன்ற நிலைகள்) அல்லது அவமதிப்போ ஒன்றும் கிடையாது. அப்படியே
அவர்களை அங்கீகரிக்கிறார்கள்.
அது போகட்டும். வெள்ளையர்கள் நாட்டில் நடக்காததா?
இங்குள்ள மக்களின் சில நம்பிக்கைகள் மிகவும் கவலையூட்டக்கூடியது!
மந்திரம், மாயம் இவைகளில் பரவலான நம்பிக்கை உண்டு! ' செய்வினை செஞ்சிருக்காங்க' இதை அடிக்கடி கேட்க வேண்டி இருக்கும். எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் வரும். செய்வினை செய்கிறவர்களிடம் யாராவது போய், 'இன்னார் குடும்பம் கெட்டுப் போகவேண்டும். இதற்கு செய்வினை செய்யவேண்டும்' என்று கேட்பார்களா? கொஞ்சம் அசிங்கமாக இல்லை?
மேலும், 'எங்களுக்கு யாரோ செய்வினை வச்சிட்டாங்க'ன்னு சொல்கின்றவர்களும், அப்படி ஒண்ணும் அமர்க்களமான வாழ்வு நடத்தும் ஆசாமிகளும் இல்லை. அங்கே என்ன இருக்கிறது, இவர்களைக் கெடுப்பதற்கு என்று ஆச்சரியமாக இருக்கும்.
சரி. இதற்கு என்ன மாற்றுவழி என்று பார்க்கலாம் என்றால், செய்வினையைத் திருப்பி எடுக்கவென்று ஒரு கூட்டம்வேறு இருக்கிறது.கிடைக்கும் கொஞ்சநஞ்சக் காசையும் இதற்குச் செலவு செய்துவிட்டுக் கஷ்டப்படுவார்கள்.
ஒரு சமயம், இந்தியாவிலிருந்து மூன்றுபேர் ஒரு பெண்ணும், இரண்டு ஆண்களுமாக வந்திருந்தனர். எல்லாருக்கும் நடுத்தர வயது. இவர்கள் எதற்காக வந்தார்கள் என்று தெரிந்தால் உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கும். இவர்கள் இங்கே ஜோசியம் பார்க்க வந்தார்களாம். எப்படி வந்தார்கள், எப்படி விசா எடுத்தார்கள் என்று எங்களுக்குத் தெரியாது.
இவர்கள் ஒவ்வொரு ஊராகப் போய், ஜோசியம் சொல்லிக் கொண்டு நாங்கள் இருந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்கள். வழக்கம் போல விவரம் எங்களுக்கு வந்துவிட்டது. அதுதான் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியுமே!
நாங்களும், இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்களே என்று அவர்களை உணவுக்காக அழைத்தோம். அப்போதுதான் தெரியவந்தது, அவர்கள்ஜோதிடம் பார்ப்பது, இன்னும் மந்திர மாயங்கள் செய்வது மற்றும் குடும்ப சந்தோஷத்திற்காக பூஜைகள் செய்வது என்று பலதும் செய்கிறார்கள் என்பது. இதில் வேடிக்கை என்னவென்றால், குழந்தை இல்லாதவர்களுக்கு, பூஜைமூலம் குழந்தை பிறப்பதற்கு வேண்டிய பரிகாரம் செய்வார்களாம்.
இதில் என்ன வேடிக்கை ?
ஏன் இல்லை? இந்தப்பூஜையின் மூலம் குழந்தை கண்டிப்பாகப் பிறக்குமாம். ஆண் குழந்தை வேண்டுமென்றால் பூஜைக்கு ஆகும் செலவு 250 டாலர்கள். பெண் குழந்தையே போதும் என்றால் 150 டாலர்கள்தான் செலவு!
இது எப்படி இருக்கு?
இன்னும் வரும்.
*****************
Wednesday, October 13, 2004
வீடுகள்????????????
Posted by துளசி கோபால் at 10/13/2004 09:11:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
என்னங்க துளசி கதை போற போக்கப்பார்த்தா இந்தியாவுள உள்ள ஒரு (வளமான)கிராமத்தைத்தூக்கி அங்க வைச்சு அதுக்கு ஃபிஜி தீவுன்னு பேர் வச்சமாதிரி இருக்குது... அங்கு தமிழர்களும் அதிகம் இருக்கிறார்களா?
அன்பு,
நீங்க நினைச்சது ரொம்பச் சரி. தமிழ் ஆளுங்க எக்கச் சக்கம். ஆனா எல்லாருமே ஹிந்திதான் பேசுவாங்க.
நமக்கும், வெளிநாடுன்ற எண்ணம் இருக்காது. எங்கோ வட இந்தியாவுலே வசிக்கற உணர்வுதான் இருக்கும். ஆனா தென் இந்தியா சீதோஷ்ணம் & உணவுப் பொருட்கள்!
நீங்கள் சொல்லியுள்ளது சரிதான்.இங்கு நானிருக்கும் ஊரில் நடந்த ஒரு சம்பவம்
http://www.krqe.com/crime/expanded.asp?RECORD_KEY[Crime]=ID&ID%5BCrime%5D=7261
இதைப்பற்றி உள்ளூர் நாளிதழில் விரிவாக எழுதியிருந்தார்கள்.ஃபீஜியிலிருந்து வந்திருந்த உறவினர்கள் பெயரில் சின்னக்கண்ணு என்றொருவர் இருந்தார்!
அனுப்புநர்: வாசன்
Post a Comment