Wednesday, September 03, 2008

புள்ளையாருக்கு இன்னிக்கு நேரம் சரியில்லை

புள்ளையாருக்கு இன்னிக்கு நேரம் சரியில்லை!


சோதனைமேல் சோதனை வந்தால் பாவம் அவர்தான் என்ன செய்வார்? இன்னிக்குச் சோதனை என் (விபரீத) எண்ணத்தால் வந்துருச்சு.

சோதிச்சுப் பார்க்கணுமுன்னு நினைச்சிருந்த அயிட்டத்துக்குப் பொருத்தமான நாள் அதுவா வந்து அமைஞ்சது பாருங்க. மைக்ரோவேவ் கொழுக்கட்டை.

ரெண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல், ரெண்டு டேபிள் ஸ்பூன் ப்ரவுண் சக்கரை, கால் தேக்கரண்டி நெய். இதை ஒரு சின்ன கண்ணாடிப் பாத்திரத்தில் வச்சு மைக்ரோவேவ் ஒரு நிமிஷம் போட்டேன். முதல் தப்பு இங்கேதான். எப்பக் கண்டுப்பிடிச்சேன்? சக்கரை கேரெமெல்லா ஆனதுக்கு அப்புறம்.

அடுத்ததாக நாலு டேபிள் ஸ்பூன் அரிசிமாவைச் சிட்டிகை உப்பு சேர்த்து அம்பது மில்லித் தண்ணீரில் கரைச்சு ரெண்டு நிமிஷம் மைக்ரோவேவினேன். பரவாயில்லாம சரியா வெந்து வந்தது. கொஞ்சம் ஆறட்டும். அப்புறம் சொப்பு செஞ்சுக்கலாமுன்னு எடுத்துவச்சேன்.
பூரணம் சரியான கமர்கட் பதத்தில் இருக்கு. வேற செய்யணும். ஆனா 2 x 15 ன்னு வச்சுக்கலாமா? ஆச்சு. நாட் பேட் அட் ஆல்.

நம்ம வீட்டுப் புள்ளையாரும் அவர் ஃப்ரெண்டும்
இன்னிக்குக் காலையில் குளிச்சு முடிச்சு சாமிகளுக்கு ஆடைஅலங்காரம் மாத்தும்மோதுதான் தோழி வந்தாங்க. அப்பம், அவல்பொறி, உளுந்துவடை, பூரணம், கொழுக்கட்டை, பாயஸம் எல்லாம் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போனாங்க. இப்பெல்லாம் அரிசியில் மட்டுமில்லாது மேற்படிச் சமாச்சாரங்களில்கூடச் சாப்பிடுறவங்க பெயர்களைச் சாமி எழுதி வச்சுக்கிட்டு இருக்கார். அடுத்த ரெண்டாவது நிமிசம் மகளும் நண்பரும் வந்தாங்க.
இன்னிக்கு 'எலிஃபெண்ட் ஹெட்டட் காட்'ஸ் பர்த்டே' ன்னு சொல்லி பிரசாதங்களைக் கொடுத்தேன். சாப்பிட்டுட்டு ஒன்னும் சொல்லாமப் போயிட்டாங்க:-)

சொப்பு செஞ்சுக்க மாவைக் கையில் எடுத்தால்...... எடுத்தால்..... எடுத்தால்..... அப்படியே அப்பமாக் கிளம்புது. யோசிச்சப்பத்தான் ஐடியா வந்துச்சு. அப்பத்தை எடுத்து ஃபுட் ப்ராசர்லே போட்டு நாலைஞ்சு சுத்து. வெழுமூனா ஆகலை. ஆனாலும் கையில் பிடிக்கலாம். எண்ணி அஞ்சே அஞ்சு கொழுக்கட்டை 'உருண்டைகள்'.

மைக்ரோவேவில் வைக்கும் ஸ்டீமர்ன்னு ஒன்னு விக்குது. அது வாங்கிக்கலைன்னு எனக்கு ஏகப்பட்ட வருத்தம். கஷ்டப்பட்டு கேஸ் அடுப்பை மூட்டி அதுலே வச்சு வேகவச்சேன்.

ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுக்கக் கைவரலை!!!!

ஆகக்கூடி இந்தப் பரிசோதனையில் கண்டுபிடிச்ச விவரங்கள்:

கொழுக்கட்டை, மைக்ரோவேவுக்கு லாயக்கில்லை.பாவம் புள்ளையார். அவர் ஜென்மத்துக்கு இந்த மாதிரிப் புதுக் கொழக்கட்டை சாப்பிட்டே இருக்கமாட்டார். அவரை உலகின் அடுத்தபக்கத்துக்கு அனுப்பிவைக்கறேன். கொஞ்சம் வாய்க்கு ருசியா சமைச்சுக் கொடுங்க.

அனைவருக்கும் புள்ளையார் சதுர்த்திக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

பின் குறிப்பு:

கோபால் அதிர்ஷ்டசாலி. தப்பிச்சுட்டார்:-)

56 comments:

said...

துளசி அம்மா,

முதல் படத்தில்.....
முருகனிடம் ஞானப்பழத்தை பிடிங்கியதும் இல்லாமல் மயிலையுமா ?

பிள்ளையார் பொல்லாதவராக இருப்பார் போல.


கொழுக்கட்டை சரியாக வரலை என்றால் கவலைப்படாதிங்க....என்ன வெந்த மாவு வெல்லப் பூரணம் எந்த விகிதத்தில் கலந்தாலும், வடிவமே இல்லாவிட்டாலும் சுவைதான்.
:)

said...

//துளசி கோபால் has left a new comment on your post "காலம் கலிகாலம் ஆகிபோச்சுடா...":

நம்மவீட்டுலே கலிகாலக் கொழுக்கட்டை ரெடி.

வாங்க. //

துளசி அம்மா,

நீங்க கூப்பிடும் முன்பே வாசனை பிடிச்சு வந்திட்டேன்.

said...

****கொழுக்கட்டை, மைக்ரோவேவுக்கு லாயக்கில்லை.****

ஏதாவது நல்ல ஜேர்னல் (journal) க்கு அனுப்புங்க, உங்க ஆராய்ச்சியின் விளைவை? உலகத்துக்கு உதவும்! :-)))

ஆமா, இந்த மாதிரி எக்ஸ்பெரிமெண்ட் எல்லாம் பண்ண உங்களுக்கு நம்ம பிள்ளையார் பொறந்தநாள் தான் கிடச்சதா?!

said...

ரீச்சர் அவரை இங்க அனுப்பி விடுங்க. கூடவே கொழுக்கட்டையையும் அனுப்பிடுங்க. போட்டோ எல்லாம் சூப்பர்!!

said...

ஓ.. இது தான் கொழுக்கட்டை பிடிக்கப் போய் இட்லியான கதையா? நல்லா இருக்கு.. :)
அனைவருக்கும் வாழ்த்து(க்)கள்!

said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

said...

அடடா இங்கயும் கொழுக்கடடை இல்லைன்னுட்டாங்களே...:)

said...

டீச்சர்,
கடைசியா நீங்க செஞ்ச அந்த பதார்தத்துக்கு என்ன பெயர் வைச்சீங்க?
மைக்ரோவேவ் மாவு உருண்டை க்கு ஒரு நல்ல பெயர் வைச்சு புது பலகாரமா உலகத்துக்கு அறிமுகப்படுத்தலாம்ல?

said...

வாங்க கோவியாரே.

இன்னிக்கு உலகம்பூராவும் சுத்தணும். மாம்பழத்தை எடுக்க அம்மையப்பனைச் சுத்திட்டு உலகம் சுத்துனேன்னு ரீல் விடமுடியாது.

அங்கங்கே என்(னை)ன மாதிரி கொழுக்கட்டைகள் இருக்கோ? அதான் மயிலை இன்னிக்கு ஒரு நாள் தம்பிகிட்டே இருந்து இரவல் வாங்கி இருக்கார்:-)

நீங்க சொன்னது பூரணமாச் சரி.

அஞ்சுலே ஒன்னு போனால் நாலு:-)

said...

வாங்க வருண்.

இவரை மாதிரி ஒரு நல்ல தோஸ்து கிடைக்குமா? அதுவுமில்லாம கொழுக்கட்டையைப் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் செஞ்சால் நல்லாவா இருக்கும்?

ஜேர்னல் முகவரி உடனே அனுப்புங்க:-)))

said...

வாங்க கொத்ஸ்.

கிளம்பிட்டார் இங்கிருந்து. எப்படியும் நாளைக்கு அங்கே ஆஜர்:-)

said...

வாங்க தமிழ் பிரியன்.


வாழ்த்துகளுக்கு நன்றி. நம்ம வத்தலகுண்டு பிள்ளையாரைப் பத்தி ஒரு நாள் எழுதணும். அந்த பார்க்கை ஒட்டி இருந்த சின்னக் கோயில்!

said...

வாங்க தமிழன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

கொழுக்கட்டை இல்லையா? இருக்கே நாலு.
சீக்கிரம் வாங்க:-)

said...

வாங்க ஜோசஃப் பால்ராஜ்.

பெயர் வைக்கணும். அதான் ஜாதகம் கணிக்கச் சொல்லி நம்ம சுப்பையா வாத்தியார்கிட்டேக் கேட்டுக்கலாமுன்னு இருக்கேன்:-)

இப்போதைக்கு' ச்செல்லக் கொழுக்கட்டை'ன்னு செல்லமாக் கூப்புட்டுக்கலாம்:-)

said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் அம்மா. நல்லாருந்துச்சு கொழுக்கட்டை கதை :) பிள்ளையார்தான் பாவம் :(

said...

தலைப்பை பாத்தவுடனே "நம்ம வீட்ல தங்கமணி கொழுக்கட்டை செய்றது அவ்ளோ தூரத்துல இருக்குற டீச்சருக்கு எப்படி தெரியும்"னு நெனச்சேன். அப்புறம்தான் புரிஞ்சது இன்னிக்கு விநாயகருக்கு உலகம் முழுக்க இருந்து அட்டாக் அப்படின்னு. ஆனாலும் தலைவர் சமாளிச்சிடுவாரு..

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

எங்க வீட்டுல பிள்ளையார் கொழுக்கட்டைக்கு தப்பிச்சுட்டார். ஆனா போன ஞாயித்துக்கிழமையே சுண்டலும், கேசரியும் சாப்பிட்டார்.

said...

எங்க வீட்டுப்பிள்ளையாருக்கும் இன்னைக்கு சோதனை தான்.. நான் எப்போவும் அம்மா திரிச்சி அனுப்பற மாவில் வெந்நீர் ஊற்றி தான் கொழுக்கட்டை செய்வது வழக்கம்.. இந்த முறை அரிசி மாவு தீர்ந்துவிட்டது கடை மாவு எனக்கு பிடிப்பதில்லை..

அதனால் எங்க மாமியார் , மற்றும் மாமியாருக்கு மாமியார் வழக்கத்தில்.. அரிசியை ஊறப்போட்டு மிக்சியில் அரைத்து இருப்புச்சட்டியில் வதக்கி மோதகம் பிடிக்கலாம்ன்னு சோதனை செய்தேன்..
ஓரளவுக்கு வெற்றி தான்.. என்ன ஒன்னு மிக்சியில் இருந்து இருப்பு சட்டிக்கு மாற்றிவிட்டு கை யை கழுவுவதற்குள் கொஞ்சம் கெட்டியாகிடுச்சு மாவு. அதனால் கொழுக்கட்டை யும் கொஞ்சமே கொஞ்சம் கடினமா இருந்தது.

உள்ள வைக்க வெல்லம் வாங்கல அதனால் கருப்பட்டி கொழுக்கட்டை நல்லாவே இருந்தது இனிப்பு.. :)ப்ரெண்ட்லி காட் தானேன்னு நாம சோதனை செய்யறோம்..

said...

மேடம், ஆனை முகத்தான் எப்பவுமே ரொம்ப friendly. அன்போட நாம் செய்ததை அப்படியே ஏத்துப்பார். Dont worry:)!

said...

****துளசி கோபால் said...
வாங்க வருண்.

இவரை மாதிரி ஒரு நல்ல தோஸ்து கிடைக்குமா? அதுவுமில்லாம கொழுக்கட்டையைப் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் செஞ்சால் நல்லாவா இருக்கும்? *****

இப்போ நீங்க டீச் பண்ண வேண்டிய நேரம் வந்துட்டதுங்க எனக்கு!

என் கேள்வி!!!

ஆமா, அது ஏன் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை பண்றாங்க? அது அவருக்கு ரொம்பப்பிடிக்குமா?
ஏதாவது கதை இருக்கா? சொல்லுங்களேன், ப்ளீஸ்!

***ஜேர்னல் முகவரி உடனே அனுப்புங்க:-)))***

"Journal of Food Science" னு ஒரு ஜேர்னல் இருக்குங்க. ஆனால் உங்க "நெகட்டிவ் ரிசல்ட்" எல்லாம் எடுத்து "பப்லிஷ்" பண்ணுவாங்களானு தெரியலை!

மறுபடியும் முயன்று முழு வெற்றியடைந்ததும் சொல்லுங்க. அனுப்பிவிடலாம்! ;-)

said...

சதுர்த்தி வாழ்த்துகள் துளசி. அவருக்குச் செய்ய வேண்டியது பாலு,தேனு,பாகு
நல்லாவே வச்சிட்டிங்க. கவலை என்ன.
பிள்ளையார் இப்பத்தான் இங்க வந்து, துளசி கொழுக்கட்டை சாப்பிட்டதில் கம்னு இருக்குமா. கொஞ்சம் சுக்கும் வெல்லமும் கொடுன்னு சொன்னார்:0)
அவ்வளவு நல்லா இருந்தததாம்/

said...

//
பாவம் புள்ளையார். அவர் ஜென்மத்துக்கு இந்த மாதிரிப் புதுக் கொழக்கட்டை சாப்பிட்டே இருக்கமாட்டார். அவரை உலகின் அடுத்தபக்கத்துக்கு அனுப்பிவைக்கறேன்.
//

ஆனாலும் உங்களுக்கு அபார நம்பிக்கைங்க. இனிமே யாருனா கொழுக்கட்டை குடுத்தா அவரு வாங்கிப்பாரு?? கொழுக்கட்டையும் வேணாம், மாங்கொட்டையும் வேணாம்னு தெரிச்சி ஓட மாட்டாரு?? :0)

said...

///ப்ரெண்ட்லி காட் தானேன்னு நாம சோதனை செய்யறோம்..///

###இவரை மாதிரி ஒரு நல்ல தோஸ்து கிடைக்குமா?###

***மேடம், ஆனை முகத்தான் எப்பவுமே ரொம்ப friendly. ***

பாவம் அவர் ஃப்ரெண்ட்லியா இல்லாமல் கொஞ்சம் "சீரியஸான" வரா இருந்து இருந்தால், எல்லோரும் கொஞசம் கவனமாகவே கொழுக்கட்டை செய்து, கொஞ்சம் "டேஸ்டியான" நல்ல கொழுகட்டை அவருக்கும் மற்றும் எல்லோருக்கும் கிடைத்து இருக்கும்! LOL!!

ஃப்ரெண்லியா இருந்தால் எல்லோருக்கும் இளக்காரம்தானா? LOL!

said...

நம்ம முயற்சிக்கெல்லாம் ப்ரெண்ட்ஸ் கூட இருந்து துணை செய்யறது இல்லையா.. வருண்..
சைக்கிள்ள டபிள்ஸ் கத்துக்கும்போது பின்னாடி உக்காந்து முட்டியை உடைச்சிக்கறது யாரு? நம்மப்ரெண்ட் தானே..( இப்படி பல லிஸ்ட் பல பேர்கிட்ட இருக்கும்.. )

said...

புள்ளையாருக்கா நேரம் சரியில்ல ?
கொஞ்சம் எண்ணிப்பாருங்க !

இது உங்களுக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸ் தர புள்ளையார் தீர்மானம் செய்திருக்கிறார்.
எதையும் என்னால் சுவைபட செய்யமுடியும் என்று, மனதிலே எங்கோ ஒரு இடத்தில்
ஒரு ஸம் ஸார்ட் ஆஃப் இன்டலக்சுவல் ஈகோ இருந்திருக்க‌லாம் அல்லவா ? ஐ ஆம் நாட் ஷ்யூர்.
அதை ஒரு லேசா ஒரு தட்டு தட்டியிருக்கிறார் புள்ளையார். வலிக்காதே !ஏன் என்றால்
வலிக்கும்படியா தட்டமாட்டார் புள்ளையார். அதனால்தான் கோபால் ஸார்
தப்பிச்சுட்டார்.

விக்னங்களைத் தருவதும் புள்ளையார். விக்னங்களை அகற்றுவதும்
புள்ளையார்.
வேகத்தைத் தணிப்பவரும் புள்ளையார். விவேகத்தைத் தருபவரும் புள்ளையார்.

ஒன்னும் பிரச்னையில்ல. ஓவன்லே டெம்பரேச்சர் அட்ஜஸ்ட் செய்ய மறந்திருப்பீங்க.

இல்லைன்னா, அப்பவே நினைச்சேன். "மேடம் கவி நயா வலைக்கு வந்து தன்னை மறந்து
"முந்தி விநாயகனே " அப்படின்னு பாடிட்டே இருக்காங்களே ! வூட்டிலே குக்கர்
சத்தம் கேட்டுகினே இருக்குதே" அப்படின்னு.


போகட்டும், அடுத்த பிள்ளையார் சதுர்த்திக்கு 100008 கொழுக்கட்டை செய்து உங்கள்
பதிவுக்கு வரும் எல்லோருக்கும் தலைக்கு 108 கொழுக்கட்டை
வினியோகம் செய்வேன் என புள்ளையார்பட்டி புள்ளையாருக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.

சரின்னு சொன்னா நான் முதல்லே வந்து க்யூலே நிக்கறேன்.


மீனாட்சி பாட்டி
தஞ்சை.

பின் குறிப்பு: வயசாகி விட்டதாலே கொழக்கட்டை எதுவும் பண்ண முடியலே. அதனாலே எங்கள் வீட்டிலே " பாலும் தெளிதேனும்
பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன், கோலம் செய் துங்கக்கரிமுகத்து தூமணியே நீ எனக்கு, சங்கத்தமிழ் மூன்றும் தா" என்று அந்த‌
கரிமுகத்தானுக்கு சொல்லிவிட்டேன். புள்ளையாரும் " நோ மேட்டர். பத்ரம்
புஸ்பம், பலம், தோயம், நீ எது குடுத்தாலும் வாங்கிக்கறேன்னு சொல்லிப்போட்டார்.


இருக்கட்டும், உங்க புள்ளையார் முன்னாடி நின்னுக்கிட்டு, எங்க வீட்டு ஐயா
கவினயா மேடம் பாடின பாட்டை பாடுறார் பாருங்க. கேட்டீகளா யூ ட்யூபிலே ?
ராகம் கானடா.

http://ceebrospark.blogspot.com
http://menakasury.blogspot.com

said...

வருண் said...//ஃப்ரெண்லியா இருந்தால் எல்லோருக்கும் இளக்காரம்தானா? LOL!//

:)! அப்பா வருண். கடவுள் மட்டுமல்ல மனிதர்களிலும் யாரும் இளக்காரம் இல்லை. இப்ப நம்ம வீட்டுக்கு வரும் கெஸ்ட் என்னதான் நெருக்கம் என்றாலும் அவர்களுக்கு விருந்து சமைக்கும் போது சரியா வராது போன நிச்சயமா டென்ஷனாயிடுவோம். யாரும் சரியா வராமப் போகணும்னு கவனக்குறைவாகவும் செய்ய மாட்டோம்தான். இருந்தாலும் சில சமயம் அப்படி ஆயிடுத்தில்லையா? அதே நம்ம அம்மா வந்திருக்கப்போ சமைக்கும் போது இப்படி ஆனா வருத்தம் எட்டிப் பார்த்தாலும் டென்ஷன் வராது. அம்மாவும் அதனால என்னன்னு சந்தோஷமா சாப்பிடுக்கிறதில்லையா? அது போலத்தான் நம்ம கணேஷாவும்னு சொல்ல வந்தோம்:).

அப்புறம் LOL-ன்னா புரியலையே:(?

துளசி மேடம் இதுவும் வலை பாஷையில் ஒன்றா? இது எனக்கு நீங்க சொல்லியே தரலியே:)!

said...

உங்களுக்கு இன்னொரு விசயம் தெரியுமா! தெரியாமல் இருக்காது.
இந்தப்புள்ளையார் பலே கெட்டிக்காரர்.
மூஞ்சூறு ஒன்னை கேட் கீப்பர் மட்டுமல்ல,
ஃபுட் டெஸ்டராகவும் வைத்திருக்கிறார்.

ஏகப்பட்ட அப்பம், வடை, பாயசம், சுண்டல்,
கொழுக்கட்டை (தினுசு தினுசா, கோலி, வெல்லம், தேங்காய், எள்ளு போட்டது)
இதெல்லாம் போதாதென்னு பழ வகைகள் விளாம்பழம், கோவா, வாழை, ஆரஞ்சு,
திராட்சை, கிளாக்காய், ஆப்பிள், கொய்யா எல்லாத்தையும் மூஞ்சூறு டேஸ்ட்
பண்ணி ஓ.கே. சொன்னப்பறம் தான் புள்ளையார் எடுத்துப்பார்.

அதனாலே கொழக்கட்டை பாதி வேகல்லைன்னா, இல்லை அதிகம் வெந்து போயிடுத்துன்னா நோ ப்ராப்ளம்.

சுப்பு தாத்தா.
தஞ்சை.

said...

ராமலக்ஷ்மி, LOL-னா "laughing out loud" :)

said...

அருமையான கொழுக்கட்டையை கொடுத்துட்டீங்க போல, பரவாயில்லை நம்ம விநாயகர் எல்லாத்தையும் ஏத்துக்குவார்.

said...

முத்துலக்ஷ்மி-கயல்விழி & ராமலக்ஷமி!

உண்மைதாங்க நம்மிடம் ஃப்ரெண்ட்லியா இருக்கவங்க மேலே உள்ள அன்பை, நாம் "அசட்டையாக" இருந்துதான் அதைக் காட்டுகிறோம்!

கடவுளை ஃப்ரெண்ட்லியாக நினைப்பது ஒரு வித்தியாசமான நல்ல சிந்தனைனு நினைக்கிறேங்க.

நான் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன் என்பதை "இண்டிக்கேட்" பண்ண "LOL" பயன்படுத்தினேன்!

நல்லவேளை துளசி அம்மாவிற்கு கொழுக்கட்டை நல்லா வரலை! அப்படி வந்திருந்தால் இப்படி ஒரு அழகான பதிவு வந்து இருக்காது. நம்ம பிள்ளையார் ரொம்ப ஃப்ரெண்ட்லி யானவர் என்றும் எனக்கு தெரிந்து இருக்காது! பிள்ளையாருக்கு உண்மையிலேயே நல்ல நேரம், அதனால்தான் கொழுக்க்கட்டை இந்த "அழகு" ல வந்து இருக்கு போலும்! ;-)

சில சின்னத்தவறுகள் செய்யும் போதுதான் நிறைய கற்றுக்கொள்கிறோம்!

said...

வாங்க கவிநயா.

வருசாவருசம் 'புதுக்கதை'யா எழுதவைக்கிறார்:-))))

said...

வாங்க வெண்பூ.

//உலகம்பூரா அட்டாக்...//

ரெண்டு நாளா வயித்துலே குத்தல் குடைச்சலுன்னு புலம்பிக்கிட்டு இருக்காராம். இப்பத்தான் சேதி வந்துச்சு.

said...

வாங்க சின்ன அம்மிணி.

நானும் ஒரு வருசம் 'கேசரிக் கொழுக்கட்டை' செஞ்சேன்:-)

பிடிச்சுவச்சாக் கொழுக்கட்டைதானே?

said...

வாங்க கயலு.

ரொம்ப வருசங்களுக்கு முன்னே நம்ம பக்கத்துவீட்டுலே சந்திரா அக்கான்னு ஒருத்தர் இருந்தாங்க. டான்ஸ் டீச்சர்.

அவுங்க தங்கை அடிக்கடி ரெண்டு மூணு நாளுக்கு ஒரு தடவை மோதகம் பண்ணி புள்ளையாரைக் கும்பிடுவாங்க.
ஒரு ஆழாக்கு அரிசியை ஊறவச்சு நம்ம வீட்டுக் கல்லுரலில் அரைச்சுக்கிட்டுப் போவாங்க. கல்லுரல் சொந்தக்காரின்னு எனக்கும் ஒரு பாகம் வந்துரும். அப்ப எவ்வளோ நல்ல சான்ஸ் எனக்கு....

செய்முறையைப் பக்கத்தில் உக்கார்ந்துக் கத்துக்கிட்டு இருந்துருக்கலாம். கோட்டை விட்டுட்டேன்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

எனக்குப் பதிலாக் கவலைப்படவேண்டியது அவர்தான். நல்ல புத்தி கொடுக்கலையேன்னு விம்முறார்!!!!

said...

வருண்,

கதையெல்லாம் இருக்கான்னு தெரியாது. ஆனால் இது அவருக்கு ஒரு புதிர் விளையாட்டு. வெள்ளையா மேலே மட்டும் இருக்கும். உள்ளே என்ன பூரணம் இருக்குமுன்னு கண்டுபிடிக்கணும்:-))))

நம்ம கீதா ஒருமுறை மோதகத்துக்கு ஒரு விளக்கம் எழுதி இருந்தாங்க.

"கொழுக்கட்டையானது நம் உடலின் உள்ளே உள்ள மகத்தான பூரணத்துவத்தையும் அதன் இனிமையையும் மறைமுகமாய் நமக்கு உணர்த்துகிறது. எவ்வாறு வெறும் அரிசிமாவினால் செய்த தோலினுள் உள்ளே உள்ள பூரணம் இனிப்பாக இருக்கிறதோ அவ்வாறே நம் உடலின் உள்ளே உள்ள அம்ருதமயமான ஆனந்த நிலையை விநாயகன் துணையால் நாம் அடைவதும் இனிப்பாக இருக்கும்."

said...

வாங்க வல்லி.

அப்படியா சொன்னார்? இத்தனைக்கும் ஐங்கரனுக்கு அஞ்சே கொழுக்கட்டைதான் செஞ்சேன். எல்லாம் பஞ்ச ரத்தினம். இங்கே வாயை மூடிக்கிட்டு இருந்தார். அங்கே வந்து சுக்கும் வெல்லமுமா?

இருக்கட்டும் இருக்கட்டும். அடுத்தமுறை இஞ்சிக் கொழுக்கட்டை செஞ்சுறலாம்:-))))

said...

வாங்க அதுசரி.

அவர் உருவத்தைப் பார்த்தால்..... ஓடற மாதிரியா இருக்கு? முடியாததால்தானே அம்மையப்பனைச் சுத்திவந்து மாம்பழம் வாங்கிக்கிட்டார்:-)))

ஆனாலும் அவரை விடறதா இல்லை. வருசாவருசம் அவருக்குன்னு 'சோதனைகள்' விதிக்கப்பட்டு இருக்கு:-)

said...

***துளசி கோபால் said...

வருண்,
நம்ம கீதா ஒருமுறை மோதகத்துக்கு ஒரு விளக்கம் எழுதி இருந்தாங்க.

"கொழுக்கட்டையானது நம் உடலின் உள்ளே உள்ள மகத்தான பூரணத்துவத்தையும் அதன் இனிமையையும் மறைமுகமாய் நமக்கு உணர்த்துகிறது. எவ்வாறு வெறும் அரிசிமாவினால் செய்த தோலினுள் உள்ளே உள்ள பூரணம் இனிப்பாக இருக்கிறதோ அவ்வாறே நம் உடலின் உள்ளே உள்ள அம்ருதமயமான ஆனந்த நிலையை விநாயகன் துணையால் நாம் அடைவதும் இனிப்பாக இருக்கும்."****


பால் கொழுக்கட்டைனு ஒண்ணு செய்வாங்க அது மட்டும்தான் வெள்ளையா செய்வாங்க எங்க வீட்டிலே!

மற்றபடி கொழுக்கட்டை அச்சு வெல்லத்தில் தான் செய்வாங்கனு நினைக்கிறேன்! தேங்காய் அதோட சேர்ப்பாங்க இல்லைனா தனியாக சேர்த்து சப்பிட தேங்காய் சில்லு வைத்து இருப்பாங்க,

"பிள்ளையார் சுத்தி" க்கு "ரிஃபைண்ட்" சுகர்" ல கொழுக்கட்டை செய்ய மாட்டாங்க.
அதனால் வெளியில் நிறமும் சரி, உள்ளே மனசும் சரி, எனக்கு கொஞ்சம் தூய்மை கம்மிதான் போல- நம்ம கீதா சொல்றபடி பார்தால்.

பரவாயில்லை விடுங்க!

----------------

அதுக்கப்புறம், கொழுக்கட்டை, இடியாப்பம், இட்லி போன்றவைகள் எல்லாம் "நீராவியில்" (steam) சுட வைக்கனும்னு நினைக்கிறேன். மைக்ரோவேவ்ல நீராவி வைத்து சுட வைக்க முடியாது இல்லையா? அதனால்தான் சுமாராக வந்ததோனு எனக்கு தோனுது! இது என்னோட தியரி! ;-)

said...

வருண்,

கடவுள் மட்டும் ஃப்ரெண்ட்லி இல்லேன்னு வச்சுக்குங்க..... நாம் பண்ணும் அக்கிரமத்துக்கு அன்னிக்கேப் போட்டுத் தள்ளி இருக்கமாட்டாரா?

அவனன்றி ஓர் அணுவும் அசையாதுன்னு எனக்கு நம்பிக்கை ரொம்பவே இருக்கு.

கொழுக்கட்டை நல்லா வரலேன்னாலும் அதுக்கும் அவர்தான் காரணம்:-))

said...

கயலு,

உதவும்கரங்களுக்கு நன்றி:-))))

said...

வாங்க மீனாட்சி அக்கா.

இந்த ஈகோவை நானும் இத்தனை வருசமா விடலை. அவரும் தலையில் தட்டுறதை விடலை!!!!!

பாட்டெல்லாம் அமோகமா இருக்கு.

அடுத்த வருசம் முதல் புள்ளையாருக்குப் பதிவுக் கொழுக்கட்டைதான் நிவேத்தியம்:-)

said...

ராமலக்ஷ்மி.

LOL மட்டுமா ?

ROFL க்கூட இருக்கு. கண்டுபிடிச்ச புண்ணியவான்கள் நல்லா இருக்கணும்.

Rolling On the Floor Laughing

said...

வாங்கோ சுப்பு.

மகாராஜாக்கள் எல்லாம் ஃபுட் டெஸ்டர் வச்சுக்கும்போது இவர் மகாராஜாவுக்கே மகாராஜா. பெரிய இடத்துப்பிள்ளை.
இவர் ஃபுட் டெஸ்டர் வச்சுக்கலைன்னா எப்படி? :-))))

நானும் கொய்யா கொடுத்தேன். நான் கொய்யாத கொய்யா. டின்னுலே வந்தது. எல்லாம் க்ருஷ்ணார்ப்பணம்தான்!

said...

கவிநயா,

நயம்பட உரைத்ததுக்கு நன்றி.

said...

வாங்க கைலாஷி.

திருக்கயிலையே நம்ம பதிவுக்கு வந்த்துக்கு நன்றி.

இந்த வகையில் பார்த்தால் இது 34 வது வகை. ரகம்ரகமாச் செஞ்சு அவர் கண்ணுலே காட்டிக்கிட்டு இருக்கேன்.

சாமி நம்ம மனசை மட்டும் பார்க்கிறார்ன்னு எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

said...

வருண்,

மைக்ரோவேவில் வைக்கும் ஸ்டீமர்ஸ் வர ஆரம்பிச்சுருச்சு. நான் இன்னும் அது வாங்கிக்கலை. அஞ்சாறு டாலர்தான். ஆனா வாங்கணுமுன்னு தோணலை. இனி அப்படி இருக்க முடியாது:-)

அதானால் கொழுக்கட்டையை நீராவி புடிக்கவச்சது கேஸ் அடுப்பில்தான்.

நீராவிப் புள்ளையார்ன்னு ஒருத்தர் ஜாஃப்னாவில் குடிகொண்டிருக்கார். நம்ம நண்பர் ஒருத்தர்தான் அந்தக் கோயில் ட்ரஸ்டி & உரிமையாளர். அவர் முன்னோர்கள் கட்டிய கோவில்.

அடுத்தவருசம் மைக்ரோவேவ் ஸ்டீமர் வாங்கிச் சோதிக்கணும்:-))))

said...

****துளசி கோபால் said...
வருண்,

கொழுக்கட்டை நல்லா வரலேன்னாலும் அதுக்கும் அவர்தான் காரணம்:-)) ***

உண்மைதான், இது கடவுள் செய்த குற்றம்தான்! ;-))))))

said...

***துளசி கோபால் said...
வருண்,

மைக்ரோவேவில் வைக்கும் ஸ்டீமர்ஸ் வர ஆரம்பிச்சுருச்சு. நான் இன்னும் அது வாங்கிக்கலை. அஞ்சாறு டாலர்தான். ஆனா வாங்கணுமுன்னு தோணலை. இனி அப்படி இருக்க முடியாது:-).

அடுத்தவருசம் மைக்ரோவேவ் ஸ்டீமர் வாங்கிச் சோதிக்கணும்:-)))) ***

போற போக்கைப்பார்த்தால் மைக்ரோ வேவில் இட்லி சுட்டுருவீங்க போல இருக்கு! LOL!!!

சரி, "patent" பண்ண மறந்துடாதீங்க!;-))

said...

//வெழுமூனா//

அப்படின்னா என்ன?

said...

//வெழுமூனா//

அப்படின்னா என்ன?

nice like a paste.

appadinnu artham.

meenachi paatti.

said...

வாங்க மீனாட்சி அக்கா.
திவாவுக்குப் பதில் சொன்னதுக்கு நன்றிக்கா.

மை(ய்)யா அரைக்கணுமுன்னு சொல்றதுக்கு வெழுமூனான்னு சொல்வாங்கதானே?

இந்தச் சொற்களெல்லாம் எப்படியோ மனசின் மூலையில் தங்கிக்கிடக்கு.

said...

வருண்,
ஸ்டீமர் வரட்டும். இட்லியையும் விடறதில்லை,ஆமாம்:-))))

பருப்புருண்டைக் குழம்புக்கு பருப்பு உருண்டைகளை நீராவியில் வச்சுவேகவிடறதுக்குப் பதிலா மைக்ரோவேவில் சுலபமாச் செய்யலாம்.

said...

இதுக்குத்தான் லேசா உருண்டைக்கொழுக்கட்டை செய்யனுங்குறது. பச்சரிசி மாவை மெதுமெதுவா கொஞ்சம் பெரிய சுண்டைக்கா அளவுல பதமா உருட்டிக்கிறனும்.... தண்ணி விட்டு வெல்லம் விட்டு ஏலம் போட்டு லேசா கொதிச்சு வர்ரப்பா உருண்டைகளைக் கொஞ்சங் கொஞ்சமாச் சேத்து நல்லா வேக விடனும். கடைசியில தேங்காத் துருவித் தூவி எறக்கனும். அவ்ளோதான்.

said...

வாங்க ராகவன்.

நீங்க சொல்ற மாதிரித்தான் பால் கொழுக்கட்டை செய்வோம்.

இப்பப் பிரச்சனை என்னன்னா.... சாமியே சாப்பிட்டா எவ்வளவோ தேவலை. ஆசாமிகள் சாப்புடறதாலே ஷுகர், அது இதுன்னு ஏகப்பட்டக் கட்டுப்பாடுகள். ஒரு பழக்கவழக்கத்தை விட்டுறக்கூடாதேன்னு நினைச்சாலும் செஞ்சாத் திங்க ஆள் வேணாமா?

அரைக் கப் மட்டுமுன்னு செய்ய முடியுதா என்ன?

செஞ்சுவச்சுட்டு அய்யா குடி அம்மா குடிதான்(-:

Anonymous said...

Hi

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com