Showing posts with label மரத்தடி நினைவுகள்.. Show all posts
Showing posts with label மரத்தடி நினைவுகள்.. Show all posts

Friday, September 05, 2008

நமது நிருபர்/ தகவல் ஒலிபரப்பு இலாகா( மரத்தடி நினைவுகள்)

மக்களே!

முன் குறிப்பு:

பழையபடி உங்களயெல்லாம் 'வத்தலகுண்டு'க்கு கூட்டிகிட்டுப் போறேன். அந்த ஊரு மனசுலே ஆழப் பதிஞ்சிடுச்சு.மலரும் நினைவுன்னாவே அங்கிருந்துதான் ஆரம்பிக்குது.
'அச்சானியமா' இதைப்பத்தியெல்லாம் சொல்றேனேன்னு நினைச்சுக்காம 'கருத்து' சொல்லுங்கோ!

==================================================================

எனக்கு எத்தனை வயசு? ம்ம்ம்ம்ம்ம் ஏழு முடிஞ்சு எட்டு. அது என்னமோ தெரியல்லே, 'சாவு'ன்னா எனக்கு பயமே கிடையாது. என்கூடப் படிக்கற பசங்கல்லாம், எல்லாம்னா ஒட்டு மொத்தமா எல்லாம் இல்ல, கொஞ்சம்பேருக்கு பயம்.எனக்கோ உடனே போய் பாக்கணும்! அதும் இங்கெல்லாம், சாவு வீடுன்னா, முதல்ல வாசல்லே ஒரு சின்னப் பந்தல் போட்டுருவாங்க. சங்கும், சேகண்டியும்
அடிச்சுகிட்டு ஒரு ஆள் இருப்பாரு. சின்ன ஊராச்சுங்களா, நமக்குத் தெரியாம ஒண்ணும் நடந்துராது!

(ஒரே சீரான இடைவெளியில் ஒலிக்கும் அந்த வெண்கலத்தட்டிலிருந்து வரும் நாதம் சோகத்தைச் சுமந்துக்கிட்டு வருதோன்னு இருக்கும். அந்த ஒலியின் தாலாட்டில் உறங்க ஆரம்பிக்கும் மனசைத் தட்டி எழுப்பும் விதமா அப்பப்ப 'பூம்' என்ற சங்கொலி. சங்கே முழங்குன்னு தலைப்பு வச்சுருக்கலாமோ?)


மொதல்ல உள்ளபோய் 'போனது' ஆம்புளையா இல்ல பொம்புளயான்னு பாப்பேன். செத்துக்கிடக்கறவங்களைவிட, நம்ம இண்டரெஸ்ட் அங்க ஒப்பாரி வச்சுகிட்டு இருக்கறவங்கதான். அப்புறம் ஆளுங்க ஒரொருத்தரா
வர்றப்ப, அடங்கியிருக்கற அழுகை ஒரு வேகத்தோட கிளம்பும். ஒரு அஞ்சு நிமிஷத்துலே கொஞ்சம் சமாதானமாயி, எப்படி, எப்போ செத்துட்டாங்கன்னு வந்தவுங்ககிட்ட சொல்வாங்க.

"நல்லாத்தான் இருந்தாரு. முந்தாநா கூட, மச்சான் வீட்டுக்குப் போகணும்னு சொல்லிகிட்டிருந்தாரு. நேத்துதான் ஒரு மாதிரி மயக்கமா வருதுன்னாரு. என்ன ஏதுன்னு பாக்கறதுக்குள்ள இப்டியாய்ப்போச்சு"

" ஒண்ணுமில்ல மதினி, வயக்காட்டுக்குப் போய்வந்து, காப்பித்தண்ணி கேட்டாரு. கொண்டுவரதுக்குள்ள சாஞ்சிட்டாரு"

" என்னத்தைன்னு சொல்றது, ஆறு மாசமா மருந்து, மாத்திரைன்னு செய்யாத செலவுமில்லை. பாக்காத வைத்தியமும் இல்லை.இப்ப மூணு நாளா சோறு தண்ணி இறங்கலை. டாக்டரம்மா வந்து பாத்துட்டு, சொந்த
பந்தத்துக்கு ஆள் விடுங்கன்னுட்டாக. பொழுதுவிடியறப்ப,உசிரு அடங்கிடுச்சு"

இப்படி ஏதாவது ஒரு தகவல் வரும். அதென்னமோ பலபேருகிட்ட சொல்லச் சொல்ல விவரம் கூடிகிட்டே போகும்.
யார்மேலேயும் தொட்டுக்காம ஒரு ஓரமா நின்னு, எல்லாத்தையும் கவனமாக் கேட்டுகுவேன். இன்னும் யாரு வரணும், எப்ப எடுப்பாங்க இப்படி பல தகவலையும் திரட்டிடுவேன். அப்புறம் ஒரே பாய்ச்சல். நேரா வீடுதான்.

வீட்டுக்குள்ள நுழையும் போதே, அக்காங்களுக்கு 'நியூஸ்' சொல்லிகிட்டேதான் வருவேன். பாவம் இந்த அக்காங்க! வெளியிலே எங்கேயும் போகாம வீட்டுலேயே இருக்காங்களா? சின்னக்காப் பள்ளிக்கூடம் போயிட்டு வருதுதான். ஆனா அது உலகமே தனி. சமுதாய அக்கறை கொஞ்சமும் கிடையாது. நாட்டுலே நடக்கறதை நாஞ்சொல்லாட்டா வேற யாரு சொல்லுவா?

" ஏண்டி, சாவு வீட்டுக்கா போயிட்டுவரே?"

" ஆமா, ஆனா நான் யாரையும் தொடலே, ஒரு ஓரமா தள்ளி நின்னு பாத்துட்டு வரேன்"

" எல்லாம் தெரியும், நீ மொதல்லே அந்த கவுனைக் கழட்டிட்டு, கைகாலு களுவிட்டு உள்ளே வா. வேற உடுப்பு போட்டுக்கோ"

இந்த மாதிரி சமயத்துல மட்டும் மறுபேச்சு பேசமாட்டேன்!

சாவுக்குன்னு சில சம்பிரதாயங்கள் இருக்குல்லெ. அந்தப்பக்கமெல்லாம் செத்துப்போனவங்களைக் குளிப்பாட்ட தண்ணிய ஆத்துலே இருந்து கொண்டாருவாங்க. நம்ம வத்தலகுண்டுலெ இருக்கற ஆத்துக்குப் பேரு என்ன
தெரியுமா? மஞ்சளாறு.

சங்கு ஊதிகிட்டே, கூட சேகண்டியும் அடிச்சுகிட்டே ஆளுங்க குடங்களை எடுத்துகிட்டு ஆத்துக்குப் போவாங்க.
திரும்பி வரப்போ, நாலுஆளுங்க ஒரு வெள்ளை வேஷ்டியை நனைச்சு, நாலு பக்கமும் நாலுமூலையை குடையாட்டம் பிடிச்சுகிட்டு வருவாங்க. அந்த நிழலுக்குள்ளே தண்ணிக் குடத்ததோட ஆளுங்க நடந்து வருவாங்க. இந்த சடங்குக்குப் பேரு 'நீர்மாலை'. தண்ணி கொண்டாந்துட்டா, குளிப்பாட்டிட்டு
எடுத்துருவாங்க. இதுக்குள்ளே வாசப்பக்கம் ஒரு ஓரமாப் பச்சை ஓலை முடைஞ்சுப் பாடையும் ரெடியாயிரும்.

அக்ரஹாரத்துக்கு இந்த சடங்கெல்லாம் இல்லை. அங்கே சங்கு ஊதறதும் கிடையாது. சத்தமில்லாம 'சைலண்டா' சாவு எடுத்துருவாங்க!

வத்தலகுண்டு சுடுகாட்டுக்கு, நம்ம ஆஸ்பத்திரியைக் கடந்துதான் போணும்! ஆஸ்பத்திரிக்குப் பக்கமா ஒரு சின்னப் பாதை பிரியும். பொம்பிளைங்கெல்லாம் இதுவரைக்கும் வரலாம். அங்கே பாதை பிரியுற இடத்துலெதான், பாடையைக்
கீழே இறக்கிவச்சிட்டு, ஒரு புதுப்பானையிலே தண்ணிஎடுத்து, தோள்மேலெ வச்சிகிட்டு ஒருத்தரு சுத்திவர, ஒரு ஆளு வெட்டுக் கத்தியாலே அந்தப் பானையிலே ஓட்டை போடுவாரு. அந்தத் தண்ணி அப்படியே வெளியே பீச்சிகிட்டு விழும். இப்படியே மூணு சுத்துக்கு, மூணு ஓட்டை போடுவாங்க.அப்புறம் அந்தப் பானையை அங்கெயெ கீழே போட்டு
ஒடைச்சுடுவாங்க! இதுக்கப்புறம் ஆம்பளையாளுங்கதான் பொணத்தோட போவாங்க. சின்னப்பசங்களையெல்லாம் விரட்டி விட்டுடுவாங்க!

வழக்கமாவே சாவு எடுக்கறப்ப சாயந்தரமாயிரும்.அதுக்குள்ளெ நம்ம பள்ளிகூடமெல்லாம் விட்டுருக்கும்லெ. வீட்டுவாசல்லேயே
காதை வச்சிக்கிட்டு இருப்பேன். சத்தம் கேட்டதும் ஒரே ஓட்டமாப் போயி கலந்துகிட்டு, சின்னப்புள்ளீங்களத் தொரத்தறது வரைக்கும் இருந்துட்டுத்தான் திரும்பி வருவேன். நல்லாப் பாக்கணும்ங்கறதுக்காக கூட்டத்துக்குள்ளே புகுந்து முன்னாலெ போய் நின்னுக்குவேன்.

வீட்டுக்கு வந்ததும் இன்னொருக்கா சட்டையெல்லாம் மாத்தணும்! அது பரவாயில்லே. ரொம்பக் கஷ்டமா என்ன?

பள்ளிக்கூடம் இருக்கற நாள்லெதான் 'நீர்மாலை'யெல்லாம் வேடிக்கைப் பார்க்க முடியாது. ஆனா சத்தம் கேக்குமே. அப்பத் தெரிஞ்சுரும் யாரோ போயிட்டாங்கன்னு!

கொஞ்சம் இருங்க, சங்கு சத்தம் கேக்குது! என்னன்னு போய்ப் பாத்துட்டு வந்து விவரம் சொல்றேன்!