Friday, June 28, 2019

ஓம் பூர் புவஸ்வஹ..... (பயணத்தொடர், பகுதி 110 )

உண்மையில் இங்கே போகணும் என்ற திட்டமே இல்லை. இன்னும் சொன்னால்..... இப்படி ஒரு இடம் இருக்குமுன்னு கூடத் தெரியாது. நம்ம முத்துமாரியம்மன் தரிசனம் முடியும்போது மணி ஏறக்கொறைய பத்தேமுக்கால்.  இவ்ளோ சீக்கிரமா அறைக்குப் போவானேன்? கொஞ்சம் ஊர் சுத்திப் பார்க்கலாமேன்னு மஞ்சுவிடம் சொன்னதுக்கு  'டீ ஃபேக்டரி  போகலாமா'ன்னார்.  வேணாம். இப்போதானே மூணார்லே போய் வந்தோம். சும்மாத் தோட்டத்துப்பக்கமும் ஊருக்குள்ளும் சுத்தலாமுன்னதும் சரின்னு ஒரு பாதையில் போறார்.  எண்ணி ஏழாம் நிமிட், ஒரு பெரிய சிவலிங்கம் துணி போர்த்திக்கிட்டு ஒரு மண்டபத்தின் தலையில் உக்கார்ந்துருக்கு.
ஸ்டாப்........

கொஞ்சம் முன்னால்  ஸ்ரீலங்காதீஸ்வரர் கோவில்னு பார்த்ததும் இறங்கிட்டோம். மஞ்சு இங்கே போய்ப் பார்த்ததில்லையாம். அதனால் தகவல் ஒன்னும் தெரியாது.
காயத்ரி சித்தர் பீடம்.

 நுழைவுவாசலுக்குள் போனால் இடமும் வலமுமா படிகள் கீழே போகுது.  ஊரே மலையில் இருப்பதால்  அங்கங்கே சாலையை விட்டுக் கீழே போனால்தான் வீடு வாசல் கோவில் எல்லாமே...

வலப்பக்கம் படிகளில் இறங்கிப்போனோம்.  ஒரு மண்டபத்தில் எக்கச்சக்கமான ஆவுடையார்கள்! நேரா அந்தாண்டை போனால் கோமாதா ஒன்னு!  இப்பதான் பூஜை முடிஞ்ச நிலையில் மாலையும் கழுத்துமா !
பெரிய முற்றம் போல இருக்கேன்னு கண்ணைச் சுழட்டினால்.... வலப்பக்கம் ஒரு கட்டிடம், எனக்கிடப்பக்கம் ஒன்னு. இடப்பக்கம் இருப்பதின் தலையில் பெருமாள்!

சலோன்னு அதுக்குள்ளே போனால்  நம்ம பெருமாள்,  நிம்மதியா நிக்கறார்.  ஏகாந்தம்.  உலோகச் சிலைதான் ! விக்ரஹம் :-)


இவருடைய சைஸுக்கு ஏத்தாப்லெ  ஒரு பெருமாள் குடை ஒரு மூலையில் :-)

ஸ்ரீலங்காவில் குத்துவிளக்குகள் வேற மாடலில் இருக்கு. தலையில் பொதுவா நம்மூரில் இருக்கும் அன்னப்பட்சிகள்  காணோம். நிறைய இடங்களில்  சேவல் பார்த்தேன்.  இங்கே பெருமாள் முன்னே  மயில்!
பெருமாளைக் கும்பிட்டதும், இந்தாண்டை கட்டடத்துக்குள் போனால் உள்ளே பெரிய ஹால்! சுத்திவர சந்நிதிகள் . நல்ல கூட்டம் வேற ....  சாமி புறப்பாடு நடக்குது!  உள்ளேயே  வலம் வர்றாங்க. காயத்ரி மந்திரம்  ஒலிக்குது. சிடி போட்டுருக்காங்க போல!


ஆனால் புறப்பாடு காயத்ரிக்கு இல்லைன்னு தோணுச்சு.  முகம் அப்படி இல்லையே.....  இல்லே காயத்ரிதானோ?
காயத்ரி சந்நிதிக்கு மேலே  தமிழ், சிங்களம், இங்லிஷ்னு மூணு மொழிகளில் நியான் லைட்டில் மந்திரம் எழுத்துகளில் ஓடிக்கிட்டு இருக்கு!





ஸ்ரீ விஷ்ணு காயத்ரி, ஸ்ரீ ராம காயத்ரி, ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜெய தேவன், அகஸ்திய மஹரிஷின்னு  மாடங்களில் சிலைகளும், உற்சவமூர்த்திகளுமா  அந்த ஹாலில் சுத்திவர வச்சுருக்காங்க. கூடவே முருகேசு சித்தர், ஸ்ரீ சிவபால யோகி மஹராஜ், ஸ்ரீ ரமணர்  என்று 'மஹான்களின்' படங்களும்!
போயா தினத்தின்  அரசு  விடுமுறையை வீணாக்காமல் ஹிந்துக்களும் தமக்கான முறையில் கொண்டாடிக்கறாங்க. இதுவும் நல்லதே!



நாங்க தரிசனம் கண்டு, கிளம்பி வெளியே வரும்போது காயத்ரி சித்தர் மஹாசமாதின்ற  போர்டு  இருந்த  இன்னொருபக்கம்  படிகளில் சனம் இறங்கிப்போறதைப் பார்த்தோம். அந்தப்பக்கமும் ஒரு பெரிய கட்டடம் இருக்கவே, என்னன்னு பார்க்கப்போனால் அது ஒரு பெரிய த்யான மண்டபமா (ஹால்) இருக்கு.


ஏகப்பட்டக் கூட்டம்! ஒரு அழகான மேடை அமைப்பில் காயத்ரி தேவியின் சிலை!  புள்ளையார் விக்ரஹம்! நல்ல அலங்காரம் ! இன்னொரு மேடையில் (சமாதி) காயத்ரி சித்தரின் உருவச்சிலை !
சித்தர் சிலையைப் பார்த்ததும்  சித்தர்களைத் தேடிப்படிக்கும், அவர்கள் இருந்த இடங்களைத் தேடிப்போகும் சித்தர்ப்ரேமியான  தோழி க்ருத்திகா ஸ்ரீதரின் நினைவு வந்தது உண்மை.





இந்தக் கோவிலையும் (ஸ்ரீலங்காதீஸ்வரர் )காயத்ரி மடத்தையும் ஸ்தாபிச்சவர் காயத்ரி சித்தர் என்று பெயர் பெற்ற ஆர் கே முருகேசு என்பவர். சமீபகால சித்தர் என்றும் சொல்லலாம்.
1933 ஆம் ஆண்டு கண்டியில் பிறந்திருக்கார். வறுமையான குடும்ப சூழல் என்பதால் ரொம்பச் சின்ன வயசுலேயே வயல் வேலைகள் செய்ய ஆரம்பிச்சவர்.  அப்ப யாரோ ஒரு மஹான், இவருக்குக் கணபதி மந்திரத்தைச் சொல்லச்சொல்லி அதுக்கான ஸ்லோகங்கள் உள்ள புத்தகத்தைக் கொடுத்து இருக்கார். தினமும் சொல்ல ஆரம்பிச்சு அப்படியே  ஆன்மிகத்துலே லயிச்சுட்டார்.

அப்புறம் இந்தியாவுக்குப்போய் ஒரு ஆஸ்ரமத்துலே  சேர்ந்து , அங்கே  இருந்த குருவுக்குச் சிஷ்யராக இருந்து, காயத்ரி மந்திரத்தை ஆராய்ந்து சில புத்தகங்கள் எழுதியிருக்கார்.
அப்புறம் இலங்கைக்குத் திரும்பி வந்து இந்த ஸ்ரீ லங்காதீஸ்வரர் கோவிலை ஆரம்பிச்சு நடத்தும்போது இவருக்கு வயது நாப்பத்தியொன்னு !

கொஞ்சம் கொஞ்சமா இவரைப் பின்பற்றத் தொடங்கிய சனம் இப்போ பெரிய அளவில் இருக்காங்க. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கூட இவரது ஆசிகளைப் பெற்றுப்போக வந்துருக்காங்க.
ஸ்ரீ லங்காதீஸ்வரர் கோவிலுக்கான சிவலிங்கத்தை நர்மதா நதியில் இருந்து (சாளக்ராம்) கொண்டுவந்து இங்கே ப்ரதிஷ்டை செஞ்சவர் ஸ்ரீ சிவபாலயோகி மஹராஜ் அவர்கள்.
அதுக்கப்புறம் அதே நர்மதா நதியில்  ஒரு இடத்தில் நூத்தியெட்டு சிவலிங்கங்கள்  இருப்பதை ஒரு ஜெர்மனி நாட்டுக்காரர் உறுதிப்படுத்த, காயத்ரி சித்தர் அவைகளையெல்லாம் இங்கே கொண்டு வந்துருக்கார். அந்த லிங்கங்களை ப்ரதிஷ்டை செய்வது அடுத்த முயற்சி. அதற்குத்தான் நாம் உள்ளே வரும்போது பார்த்த ஆவுடையார்கள் தயாராகின்றன!  அதுவரை அந்த நூற்றியெட்டு லிங்கங்களையும் இந்த தியானமண்டபம் என்ற யக்ஞசாலையில் வச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க.
யாகத்துக்கான சமித்துக்குவியல்கள் ஒருபுறம் இருக்கு!
நர்மதை நதியில் கிடைக்கும் லிங்கங்களைப் பாணலிங்கம் என்று சொல்கிறார்கள்.
எல்லாம் தயாராகி ப்ரதிஷ்டை செஞ்சால் மஹாசிவாலயம் ஆகும்.! இதைப் பார்க்கும் பாக்கியம்தான் காயத்ரிசித்தருக்கு இல்லாமல் போச்சு. 2007 ஆம் வருஷம், சாமிகிட்டே போயிட்டார்.  காயத்ரி சித்தரின் நேரடி சிஷ்யர்கள் பலர் இப்போ வெளிநாடுகளில் காயத்ரி பீடத்தின் கிளைகளை அமைச்சு நடத்திக்கிட்டு வர்றாங்களாம்!

 காயத்ரி பீடமும் காயத்ரி கோவிலும் இலங்கையில் வேறெங்குமே கிடையாதாம். இங்கே மட்டும்தான் இருக்கு. அதிலும் இந்த இடத்தின் விசேஷம் என்னன்னா.....

மேஹநாதன் என்னும் இந்த்ரஜித் (ராவணனின் மகன்) போரில்  ராமனை வெல்லவேண்டி  நிகும்பல யாகம் செய்தது இதே இடத்தில்தானாம். அப்ப அந்த யாகத்தின் முடிவில் த்ரிமூர்த்திகளான  சிவனும் விஷ்ணுவும் ப்ரம்மனும் காட்சி கொடுத்தாங்கன்னு......
நம்பணும். நம்பிக்கைதான் சாமி என்று கூறிக்கொண்டு .....
நம்ம  ஹொட்டேல் அறைக்குத் திரும்பினோம்.



தொடரும்.......... :-)

PINகுறிப்பு :  எப்படி இவ்ளோ லிங்கங்களைக் கொண்டு போயிருப்பாங்க?  நதிகளில் இருக்கும்  கற்களும் (சாளக்ராம் வகைகள் ) வியாபாரிகள் வசம் போயிருச்சு இல்லே? போகட்டும்..... குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்துலே இருப்பதும் ஒரு வகையில் நல்லதுதான் !  மனக்குரங்கின் ஆட்டங்களில் ஒன்னு..... ஆடிட்டுப்போகட்டும்.... 


Wednesday, June 26, 2019

உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி..... (பயணத்தொடர், பகுதி 109 )

மன்னர்கள் கோவில்களைக் கட்டுன காலமெல்லாம் போய் இப்போ மக்கள் கட்டும் காலமாகிப்போச்சு...

அதனாலே?
இஷ்டத்துக்கு இடத்தை வளைச்சுப்போட்டுப் பிரகாரங்களைக் கட்ட முடியாது இல்லையா?

ஒரே கட்டடத்தில் 'இருக்கும்' எல்லா சாமிகளையும் அங்கங்கே சின்னச்சின்ன சந்நிதிகளா அமைச்சால் ஆச்சு. தவிர மன்னன் என்றால் அவனுடைய இஷ்ட தெய்வத்துக்கு மட்டும் கோவிலை நிர்மாணிக்கலாம்.  மக்கள் என்றபடியால் அவரவருக்கு ஆயிரம் தெய்வங்கள். புராணங்களில் சொல்லப்பட்டவைகளைவிட, இந்த கலிகாலத்தில் இன்னும் ஏகப்பட்டதுகள் வேற  வந்துக்கிட்டு இருக்குல்லையோ.... ப்ச்....

சீதைக்கோவிலில் இருந்து திரும்பி வரும் வழியில், இதே பாதையில் காலையில் போகும்போது பார்த்து வச்ச புத்தர் கோவிலையும் எட்டிப் பார்த்தபிறகு (ரொம்பச் சின்னதுதான். ஜஸ்ட் ஒரு புத்தர் சிலை மட்டும் ) அடுத்துப்போனது  ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில்!

இந்த நுவரா எலியாப் பகுதியில் தேயிலை பயிரிடுவதற்கான இட அமைப்பும் காலநிலையும் இருப்பதைக் கவனிச்ச ப்ரிட்டிஷார், 1824 ஆம் வருஷம் செடிகளை நட்டுப் பயிரிட ஆரம்பிச்சாங்க. அதுக்குப்பின் அங்கே தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய  இந்தியாவிலிருந்து (அப்போ பாரதம்)மக்களைக் கூட்டிப்போனதும் நடந்துச்சு. அப்போ இந்த வேலைக்குன்னு போனவங்க பெரும்பாலும் தமிழ்ப் பேசும் மக்களே!

அப்ப இது அவுங்க தேவைகளுக்காகக் கட்டப்பட்டக் கோவிலா இருக்கணும். சரியான காலம் தெரியலை. ஆரம்பகாலத்திலே  ரொம்பச் சின்னக் கொட்டிலில் ஒரு  கல்லில் சூலம் சாய்ச்சு வச்சுக் கும்பிட ஆரம்பிச்சுருக்காங்க.
1930 ஆம் ஆண்டுதான்  கோவிலைக் கட்டியதாம். அப்புறம் 1960 களில் கொஞ்சம் விஸ்தரிச்சுக்கட்டி இருக்காங்க. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து நிக்குது இப்போ!  ராஜகோபுரம் கூட 2005 ஆம் ஆண்டுதான் கட்டுனாங்களாம்.

இது சம்பந்தமா ஒரு சின்ன வீடியோ ஒன்னு யூட்யூபில் கிடைச்சது. விருப்பம் இருந்தால் எட்டிப் பாருங்க. தமிழில்தான் கதைக்கிறாங்க! 1996 செப்டம்பரில் மகாகும்பாபிஷேகம் செஞ்சப்ப 54 சிவாச்சாரியார்கள் பங்கேற்று நடத்துனாங்களாம்!




பழைய காலம் போல  மல்ட்டிகலர் சுதைச்சிலைகள் இல்லாம, இப்பெல்லாம் ராஜகோபுரங்களுக்கும், கோவிலின் மற்ற விமானங்களுக்கும் அழகா டெர்ரகோட்டாவும் தங்கமுமா வண்ணம் பூசிடறாங்க. பார்க்கவே அழகா அட்டகாசமா இருக்கு!

அதுவுமில்லாம, தமிழ்நாட்டைவிட, இங்கே இலங்கையில் கோவில் பராமரிப்பு ரொம்பவே நல்லா இருக்குன்னு எனக்குத் தோணுது. அடிக்கடி பழுதுபார்த்துப் புதுவண்ணம் பூசி அருமையா வச்சுருக்காங்க. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னே போய் வந்தோமே அசோகவனம் சீதைக்கோவில், அது கூட தங்கமா ஜொலிக்குது. பழைய படங்களில் பார்த்தால் தெரியும் :-)

நல்ல உயரமான அஞ்சடுக்கு ராஜகோபுரம்.   கோவில் மணிக்கூண்டு (மணிக்கோபுரம்)இங்கெல்லாம் நல்ல தனி மண்டபமாக் கட்டி இருக்காங்க. !

கோவில் வாசலுக்கு எதுத்தாப்லெ தனி மண்டபத்தில் ஒரு சிலை.  யாருன்னு தெரியலை....   மாரிக்குக் காவல் தெய்வம் யாரு? கருப்பு வேட்டியும் முறுக்கு மீசையுமாக் கையில் கதை வச்சுக்கிட்டு, இடதுகாலை மடக்கி, வலதுகாலைத் தொங்கப்போட்டு உக்கார்ந்துருக்கார்!  ஐயனாரோ?
ராஜகோபுர வாசலில் நின்னு பார்த்தாலே கோவில் மூலவர் முத்துமாரி, ஜொலிக்கும் கருவறையில் இருக்காள்!  கிட்டப்போய்ப் பார்த்தால்  கழுத்து நிறைய எலுமிச்சை மாலைகள்!
ஆடிவெள்ளிக்கிழமை! சிறப்பு அலங்காரம்! அதுவும் அரசு விடுமுறை (போயா)தினம் வேற ! கேட்கணுமா? நிறையப் பெண்கள்  குடும்பத்தோடு கோவிலுக்கு வந்து வெவ்வேற சந்நிதிகளில் விளக்கேத்திவச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க.
விஷ்ணுதுர்கைக்கு ராஹு காலப்பூஜை நடக்குது !







புள்ளையார், முருகன், சிவன், நவகிரஹங்கள், ஐயப்பன்னு சந்நிதிகள்  உள்ளுக்குள்ளேயே சுத்திவர .........
உற்சவமூர்த்திகளுக்குத் தனியிடம். நல்ல அலங்காரத்தில் !

கோவில் நோட்டீஸ் போர்டு பார்த்தால்.....  வாழும் கலை மையம் இலங்கையில் நல்லாவே காலூன்றி இருக்காங்க போல!
இன்னொருக்காப்போய் முத்துமாரியம்மனைக் கும்பிட்டுக்கிட்டுக் கிளம்பிப்போன இடம் 'த ஒன்லி ஒன் இன் ஸ்ரீலங்கா '! !

தொடரும்....... :-)

PINகுறிப்பு:  துர்கை, மாரியம்மன் மூலவர்களுக்கெல்லாம் இந்த எலுமிச்சம்பழம் மாலை போடுவது எனக்கு உடன்பாடில்லை. எவ்ளோ கனம்?  கழுத்து என்ன ஆறது?  அம்மன்கள் பாவமில்லையோ....  ஒரு தட்டில் எலுமிச்சம் பழங்களைக் குவிச்சு அம்மன்முன்னால் வைக்கப்டாதோ? 

இது என் சொந்தக் கருத்து. யாரும் பொங்க வேண்டாம்...