Monday, June 03, 2019

முதலில் கிடைச்சவர் பெருமாள் ! (பயணத்தொடர், பகுதி 99 )

பறவைகளின்  ஒலி கேட்டுக் கண் முழிச்சேன். பரம சுகம்!  பால்கனிக் கதவைத் திறந்தால்  இளங்காலைக் காற்று!  கண்ணெதிரே காடு மாதிரி பச்சையோ பச்சை!  நிம்மதியா ஓய்வெடுக்கப் பொருத்தமான இடம்தான்.  ஆனால்.... நம்ம கால் ஓய்வெடுக்கவா வந்துருக்கு? பார்த்துக்கிட்டு நிக்கும்போதே.... ஒரு ஆஞ்சி சட்னு கிளைக்குக்கிளை தாவிப் போய்க்கிட்டே இருக்கு!  சகுனம் சரி :-)
ப்ரேக்ஃபாஸ்ட் ரெடின்னு ஒருவர் வந்து சொன்னார். சட்னு ரெடியாகிக் கீழே போனோம். மணி எட்டு! மாடிப்படிதான் கொஞ்சம் கீக்கிடமா இருக்கோ.....
டைனிங் டேபிளில் இடியப்பம் ! வாவ்!  எனக்கு ரொம்பப்பிடிக்கும்! தொட்டுக்க? ஐயோ.....   குழம்பு போல ரெண்டு வகை!  சொதி!  எனக்கு இப்படி இதைத் தொட்டுச் சாப்பிடப்பிடிக்காது. இடியப்பம், ஆப்பம்   இதுக்கெல்லாம் சக்கரை, தேங்காய்ப்பால்,  புட்டுன்னா  நெய், சக்கரைன்னுதான் பழக்கம். அதெல்லாம் இல்லைன்னு தெரிஞ்சாலும்  இந்த  நாக்கு சொன்ன பேச்சைக் கேக்கறதில்லைப்பா.....

இடியப்பமும், சக்கரையும் வெறும் பாலுமா முடிச்சுக்கிட்டேன். நம்மவர்  மற்றதைச் சாப்பிட்டுட்டு உறைப்பு அதிகம்னு சொன்னார். வெளியிடங்களில் காஃபி நல்லா இருக்காதுன்றதால் பொதுவா டீன்னு சொல்லிருவேன்.  சிலோனில் சிலோன் டீ நல்லா இருக்குமேன்னு  பார்த்தால், இங்கே போட்ட டீ அட்டகாசமா இருந்துச்சு!  நல்ல திக் டிகாக்‌ஷன்! பின்னே.... இவ்ளோ டீத்தூள் போட்டால்....
  ஆனாலும் நல்லா இருந்ததை நல்லா இருந்ததுன்னு சொல்லணும்தானே?

மஞ்சுவும்  வந்துட்டார். அவரையும் சாப்பிடச் சொல்லிட்டு நாங்க மேலே போய்   தண்ணி பாட்டில்களும் 'பேக் பேக்'குமாக் கிளம்பி வந்தோம்.
இன்றைக்கு எங்கே போகப்போறோமுன்னு மஞ்சுவிடம் கேட்டதுக்கு,  விஷ்ணு டெம்பிள் இருக்கு, போகலாமான்னார்!

ஹைய்யோ!!!

தெஹிவளை மஹாவிஷ்ணு கோவில் நம்ம கெஸ்ட் ஹௌஸில் இருந்து ஒரு ஏழு கிமீ தூரத்தில் இருக்கு.  போகும்வழியிலேயே பார்த்த ஆட்டோக்கள் எல்லாம் ஒவ்வொன்னும் ஒரு நிறத்தில்! அட !

கோவில் முன்வாசலில் பார்க்கிங் ஏரியாவில் ஒரு வரிசை ஆட்டோக்களுக்குன்னு ஒதுக்கி இருக்காங்க. ப்ரைவேட் ஆட்டோக்கள் இல்லையாம்.

பொதுமக்களுக்கானவைதானாம்.  முக்கியமாச் சொல்ல வேண்டியது இவை எல்லாம் எலக்டிரிக் ஆட்டோஸ்.  பெட்ரோல், புகை இதெல்லாம் ஒன்னுமே இல்லை!
 ஹைய்யோ!!!

இதை ஏன் நம்ம  தமிழ்நாட்டில் இன்னும் கொண்டுவரலை?  புகை இல்லாம இருந்தா ஊரு உலகத்துக்கு நல்லதுதானே!
கோவில் இருக்கும் தெருவுக்குப் பெயரே விஷ்ணு கோவில் வீதி!  ஒரு இடத்தில் இப்படியும், இன்னொரு இடத்தில் விஷ்ணு கோவில் றோட் !
கோவில் முகப்பிலேயே ப்ரிவ்யூ கிடைச்சுருது.  உள்ளே பெருமாளும்,  ராமனும் , க்ருஷ்ணனுமா இருக்காங்க:-)
முகப்பைக் கடந்து உள்ளே காலடி வைக்கும்போதே நம் வலப்புறத்தில் மணிக்கூண்டு!  கோவில் மணி ஓசைதன்னை.... அதைத்தொட்டடுத்தாப்லெ 'நான்' :-)

இடப்பக்கம் ஒரு சந்நிதி, சரியாக் கவனிக்கலை.  ஆனாலும்  முகப்பு வாசலுக்கு முன் கொஞ்ச தூரத்தில் பளபளன்னு மின்னும் தங்கத்தேரில்  மண்டியிட்டுக் கைகூப்பி 'ஒருத்தன்' உக்கார்ந்துருக்கான்!

இருக்கட்டும் அப்புறம் பார்க்கலாமுன்னு விடுவிடுன்னு போகும் நம்மவரைத் தொடர்ந்தேன். அழகான பெரிய முன்மண்டபம் கடந்தால் கருவறையில்  நம்ம வெங்கி!  கோவிலுக்குப் பெயர் என்ன தெரியுமோ?  தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மஹாவிஷ்ணு மூர்த்தி கோவில் !
மூலவரைக் கும்பிட்டதும் துளசி ப்ரஸாதம் கிடைச்சது!  அடுத்த சந்நிதிகளை தரிசிக்கலாமுன்னு வலம் போறோம்.  ரொம்பப்பெரிய வளாகமுன்னு சொல்ல முடியாது. ஆனால்  ஏராளமான தனித்தனி சந்நிதிகளும், மண்டபங்களுமாக் கட்டி நிரப்பி இருக்காங்க.
மகாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும்... 'அவர்' ஒய்யாரமா உக்கார்ந்துக் காலை நீட்டுவாராம். தாயார் காலை அமுக்கி விடணுமாம்!
புள்ளையார், விஷ்ணு துர்கை, காளி, ஆஞ்சி, அநந்தன்,  ஐயப்பன், ஸ்ரீராமர், சுதர்ஸனர்,  நம்ம ஆண்டாளம்மா,  ராதா கிருஷ்ணா, அனந்த பதுமன்,  இவருக்குப் பக்கத்தில்  க்யூட்டா ஒரு சொர்கவாசல்!



இவுங்களைத்தவிர சிவனும் அம்மனுமா தனியா இன்னொரு இடத்தில்!



ச்சும்மாச் சொல்லக்கூடாது.... ஒவ்வொரு சந்நிதியின் விமானமும் கொள்ளை அழகு! அந்தந்தக் கடவுளின் சிறப்பம்சங்களைச் சுதைச்சிற்பங்களாச் செஞ்சு பொருத்தி இருக்காங்க. ஐயப்பன் கூரையில் ரெண்டு புலிகள் !
நவகிரஹ சந்நிதிக்கு ஏழுகுதிரை பூட்டிய தேரில் சூரியன்!
கட்டட ஸ்தபதி தமிழ்நாட்டில் இருந்து வந்தாராம்.

தீர்த்தவாரிக்கான திருக்குளத்தில் தண்ணீர் இல்லை. ஆனால் படு சுத்தமா இருக்கு.  விழா சமயத்தில் தண்ணீர் ரொப்பிக்குவாங்க போல!  இதன்கரையில்தான் நாம் கோவிலில் நுழைஞ்சவுடனே பார்த்த தங்கத்தேர்  இருக்கு!
லைஃப் சைஸில் நாலு குதிரைகள் பூட்டி இருக்கு!  தேரோட்டி கீதை உபதேசிக்க, அந்த 'ஒருத்தன்' கைகூப்பிக் கேட்டுக்கிட்டு இருக்கான்!  அர்ஜுனா.... நீ கொடுத்து வச்சவன்!

இந்தப் பதிவு எழுதும் சமயம்..... எனக்கு  மேலதிகத் தகவல் சொல்ல பெருமாள் ஒருத்தரை அனுப்பினார்னு சொன்னால் நம்பணும்.  இலங்கைத்தோழி ஒருவர் நம்ம வீட்டுக்கு   விஸிட் வந்தாங்க. அவுங்க கொழும்பு மக்கள். 'நூறாயுசு உங்களுக்கு, இப்பதான் இலங்கைப்பயணம் எழுதிக்கிட்டு இருக்கேன். தெஹிவளை விஷ்ணு கோவில்'னு சொன்னதும், 'அட!  அது எங்க வீட்டுக்கு ரொம்பப் பக்கத்தில் இருக்கு.  பத்து நிமிசத்திலே  நடந்து போயிடலாம். அடிக்கடி அங்கே போவோம்'னாங்க.

'புதுக்கோவிலா'ன்னு கேட்டதுக்கு,  'இல்லையே ஒரு அம்பது அறுபது வருசம் ஆகி இருக்குமே'ன்னாங்க. 'விஷ்ணு கோவில்னு சொல்லி உள்ளே  சிவனும் அம்பாளும் கூட இருக்காங்கதானே' ன்னதுக்கு,  'வெளியே மரத்தடியில்தானே சிவனும் அம்மனும் இருக்காங்க'ன்னுட்டு, 'அங்கே சித்தர் சந்நிதி ஒன்னு இருக்கு பார்த்தீங்களா'ன்னதும் 'ஙே'ன்னு முழிச்சேன்.
லேப்டாப்பில் இருக்கும் கோவில்படங்களை ஒன்னொன்னாக் காமிச்சுக் கொஞ்சம் விளக்கமும் கேட்டேன். அப்பதான்  'சித்தர் அங்கே ஜீவசமாதியில் இருக்காருன்னும் அவருக்கு ஒரு விளக்குப் போட்டு வந்தால் நல்லதுன்ற  விவரமும்'  சொன்னாங்க.  இந்த சித்தரின் முயற்சியில்தான் இந்தக் கோவிலை இங்கே  கட்டி இருக்காங்களாம்.  சித்தர் சந்நிதி எதுன்னு படத்தில் பார்த்தும் சொன்னாங்க. நாம்தான்  விவரம் இல்லாமல் விட்டுட்டோம்....
மேலே படம் சித்தர் சமாதி

 கூடவே இன்னொரு சுவாரஸியமான தகவல். சிங்களத்துலே  'தெஹி' ன்னால் எலுமிச்சையாம்.  அந்த இடத்தில் ஒரு காலத்துலே எலுமிச்சைத் தோப்பு இருந்துருக்கணும். அதான் தெஹிவளான்னு பெயர் வந்துருக்கு!

அவுங்க போனதும் கோவில் சரித்திரம் கிடைக்குமான்னு  வலைவீசினால்.....  ஒரு  ஃபேஸ்புக்  பதிவு ஆப்ட்டது.  அதில் நமக்குத் தேவையான விவரம் இல்லையேன்னு  இன்பாக்ஸில்  கேட்டதுக்கு, கோவிலுக்கு முன்னூறு வருஷ சரித்திரம் இருக்குன்னும், இப்போ பளபளன்னு புத்தம் புதுசாத் தெரியும் கோவிலை 1993 யில்தான் புதுப்பிச்சுக் கட்டினாங்கன்னும் சொன்னாங்க.

அப்படியே விட்டுற முடியுமா? இன்னும் கொஞ்சம் தொணப்பி எடுத்ததில் இன்னும் கொஞ்சம் விவரம் கிடைச்சது.
பலவேசம் என்ற பெயரில் ஒரு சித்தர் இருந்துருக்கார். அவருடைய முயற்சியால்தான் இந்தக்கோவிலை  டச்சு நாட்டார் சிலோனை ஆண்ட சமயத்தில்  (1658 -1796) கட்டி இருக்காங்க. அவருடைய சமாதிதான் இங்கே இருக்கு. இவருக்குப்பின்  தீரன் என்பவர் கோவிலைக் கவனிச்சுக்கிட்டு இருந்துருக்கார்.  அவர் சித்தரின் மகன் என்றும் ஒரு  சேதி.
பாருங்களேன்.... நம்ம துளசிதளத்துக்குப் பெருமாள் எப்படியெல்லாம் தகவல் தேடித்தர்றார்னு!!!!   தேங்க்ஸ் பெருமாளே!
தோழி மறுநாள் இலங்கைக்குப் போறாதாச் சொன்னாங்க. அவுங்க வீட்டுப் பக்கம் இருக்கும் இந்தக்கோவிலுக்கு அடிக்கடி போய் வர்றதால் முகப்பு வாசல் இடப்புற முதல் சந்நிதியில் யார் இருக்காங்கன்னு பார்த்துட்டு வந்து சொல்றேன்னாங்க.

 நாம் போன இந்தப்பயணச் சமயத்திலும் அவுங்க இலங்கையில்  கொழும்புவில்தான்  இருந்தாங்க என்றாலும், எனக்கு அவுங்களை அவுங்க வீட்டில் போய் சந்திக்க நேரமில்லாமல் போச்சு.
கிடைச்ச முதல் கோவிலிலேயே ரொம்பத் திருப்தியான தரிசனம் அமைஞ்சது மகிழ்ச்சிதான்.  இனி எல்லாமே  நல்லா அமையும் என்ற நம்பிக்கையோடு அடுத்த இடத்துக்குப் போகலாமா?

தொடரும்............  :-)

10 comments:

said...

புதிய கோயில் போலத் தெரிகிறது. எலக்டிரிக் ஆட்டோக்கள் இதுபோல நம் ஊர்களிலும் கொணரப்படவேண்டும்.

said...

தெஹிவளை விஷ்ணு கோவில் அருமை. அதிலும் திருக்குளம் ரொம்ப நல்லாவே இருக்கு.
சன்னிதிகளும் சிறப்பா இருக்கு.

எலெக்டிரிக் ஆட்டோ - எனக்கு என்னவோ இலங்கை கல்வி முறை, பொதுப்பணித்துறை (ரோடு எல்லாம்), சுற்றுலாத்துறை போன்றவை, நம்மைவிட பலமடங்கு முன்னேறி மிக நல்லாவே பண்ணறாங்கன்னு எண்ணம். அவங்க கல்வி முறையும் நம்மைவிட மிக அருமையானது.

said...

விஷ்ணு கோவில் தரிசனத்துடன் ஆரம்பம் தகவல்கள் சிறப்பு.

நாங்கள் முதல் முதல்சென்றது 1986 இல். அப்போது வெளிமண்டபம் இல்லை. அமைதியான கோவில்.

said...

அருமை நன்றி

// கோவில் மணி ஓசைதன்னை.... // எப்பப்பார்த்தாலும் என்ன சினிமா பாட்டு வேண்டிக்கிடக்கு - என்ற டயலாக் இங்கே எதிர்பார்த்தேன்.

said...

தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மஹாவிஷ்ணு மூர்த்தி கோவில் ....

நல்லா பள பள ன்னு இருக்கு .. ...கோபுரம் எல்லாம் தங்க நிறத்தில் மின்னுது ...அழகு

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

கோவில் 300 வருஷப்பழசு. புதுப்பிச்சுக் கட்டுனது 1993 இல். ஆச்சு 25 வருஷங்கள். ஆனாலும் பளபளன்னு சுத்தமா வச்சுருக்காங்க !!!!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

உண்மைதான். சின்னச் சின்ன நாடுகளில் கூட எவ்ளோ அருமையா வச்சுருக்காங்கன்னு பார்த்தால்..... நம்ம நாடு ஏன் இப்படி ன்ற எண்ணம் வராமல் இல்லை.....

நம்ம சனத்துக்கு அலட்சியம் அதிகம்.... நம்ம அரசியல்வியாதிகளும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் காசு சேர்ப்பதில் மட்டும் கவனமா இருக்காங்க.

எப்படியாவது நாடு நல்லா ஆகாதா என்ற எண்ணம் ஒவ்வொரு வெளிநாட்டுவாழ் இந்தியருக்கும் இருக்கு.... ஆனாலும்.... ஹூம்..... எங்கே நடக்கப்போகுதுன்ற ஆயாசம் இல்லாமல் இல்லை....ப்ச்....

said...

வாங்க மாதேவி.

கோவில் புதுப்பிச்சது 1993 ஆண்டுதான். சமயம் கிடைத்தால் இன்னொருக்காப் போகலாம்!

said...

வாங்க விஸ்வநாத்.

டயலாக் எல்லாம் இப்போ மனக்குரலில் உள்ளேயே அடங்கிருதோ? ஹாஹா.... அதன் வாயைக் கட்டிட்டாங்க...

said...

வாங்க அனுப்ரேம்.

நல்ல அழகுதான்ப்பா !