Friday, May 31, 2019

அண்டைநாட்டில் அடி எடுத்து வச்சாச் :-) (பயணத்தொடர், பகுதி 98 )

நம்ம லோடஸ்ஸிலே எனக்குப் பிடிச்சவிஷயம் என்னன்னா......   இங்கிருந்து அக்கம்பக்கம் டூர் போகக்கிளம்பினா, நம்ம பெரிய் பெட்டிகளை ஸ்டோரேஜில் போட்டுட்டுப் போகலாம்.  போகுமிடத்துக்கெல்லாம் தேவையில்லாமக் கட்டிவலிக்கேண்டா...
நியூஸிக்குப் போகும் சாமான்களையெல்லாம் பெட்டிகளில் அடுக்கி வச்சுட்டு, ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போனோம்.  ரெண்டுங்கெட்டானா  இருக்கப்போகுதுன்னு  ஹெவியா சாப்பிட்டேன்.  ஃப்ளைட்டுக்கு மூணு மணி நேரம் இருக்கும்போது ஏர்ப்போர்ட் போயிடணுமாம்.....

நம்ம ஃப்ளைட் நாலு மணிக்கு. அப்போ ஒருமணிக்கு ஏர்ப்போர்ட்.  அங்கே போக ஓலா புக் பண்ணிக்கணும். அதுக்குப் பயணநேரமா சுமார் ஒரு மணி ஒதுக்கணும்.  ட்ராஃபிக் அதிகமா இருந்தால்  கஷ்டம். கூட்டிக்கழிச்சுப் பார்த்து  பனிரெண்டுக்கு கேப் புக் பண்ணனுமோ?

அதெல்லாம் ஒன்னும் வேணாம். ஒன்னே காலுக்கு வண்டிக்குச் சொல்லலாம்.  ரெண்டுமணிக்கு ஏர்ப்போர்ட்டில் இருந்தால் போதும்னார் 'நம்மவர்' இந்த ஃப்ளைட்டுக்குக் கூட்டம் இருக்காதாம். ஓ....

அதே போல் ஆச்சு. உள்ளே  போறதுக்குமுன்னால்  எங்கெயாவது  எதாவது சாப்பிடலாமுன்னு தேடுனவர் கண்ணில் 'சங்கீதா' பட்டது. எனெக்கென்னமோ இந்த சங்கீதா மேல் அவ்வளவா  விருப்பம் இல்லை.  நம்ம  அடையார் சங்கீதாவுக்கு அடிக்கடி போயிருக்கோம் சென்னை வாழ்க்கையின் போது.  ரொம்பவே சுமார் ரகம்தான். அதுக்கு சரவணபவன் தேவலைன்னு என் எண்ணம். இப்போ இதையெல்லாம் பார்க்க முடியுமா?  சரின்னுட்டு அங்கெ போய்  பட்டியலைப் பார்த்து, நெய் இட்லி சொன்னோம்.
முதலில் காசைக் கட்டிடணும். கட்டியாச்.  இட்லி வருது. நெய் இல்லையாம். தீர்ந்துபோச்சாம்.  அப்ப எனக்கு வேணாம்னு சொன்னதுக்கு.....  'பில் போட்டாச்சு மேடம்....  இனி திருப்பி எடுக்க முடியாது'ன்னு பதில்.  நான் நினைக்கறேன்.....  நெய் என்ற சமாச்சாரம் ஆரம்பம் முதலே இல்லை.  அன்றைக்குத் தீர்ந்து போயிருந்தால் கடைசியா  யாருக்காவது  கொடுத்துருக்கும்போது இதோடு  தீர்ந்ததுன்னு நினைவில் இருக்காதா? என்னவோ போங்க.....  வியாபாரத்துலே அல்பம் அதிகம். சரி. சாம்பாராவது இருக்கான்னா....  பாத்திரத்தின் அடியில் சுரண்டுது அந்தப் பொண்ணு.  எனக்கு வெறுத்துப்போச்சு......

பயணிகள் 'பயண அவசரத்தில்' இருப்பதைத் தங்களுக்கு சாதகமாப் பயன்படுத்திக்கும் அல்பகுணம்.  காசைத் திருப்பிக் கொடுத்தால் வேலையாட்கள் சம்பளத்துலெ பிடிச்சுக்குவாங்களாம். 'தொலையட்டும் போ' ன்னு  அதைத் திருப்பிக்  கொடுத்துட்டு உள்ளே போனோம். சங்கீதாக்காரனுக்குப் போன ஜென்மத்துக்குக் கடன்  பாக்கி தீர்ந்தது.

இதை எதுக்கு இப்படி விலாவரியாச் சொல்றேன்னா.... நீங்க யாராவது  அங்கே போய் எதாவது வாங்கணுமுன்னா முதல்லெ  நீங்க  வாங்க நினைக்கும் பொருள், அதுக்கான ஆக்செஸரீஸ் எல்லாம் இருக்கான்னு கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டு காசைக் கொடுங்க. நெய் இட்லிக்குக் காசு வாங்கிக்கிட்டு இட்லியே இல்லைன்னு சொன்னாலும் சொல்வாங்க.  டில்லில் என்ட்ரி போட்டா அது யானைவாயில் போன கரும்பு. 
உள்ளே போனால்.....    எங்கோ ஒரு மூலையில் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் செக்கின் கவுண்ட்டர்.  பெட்டிகளை ஒப்படைச்சு, செக்கின் செஞ்சு போர்டிங் பாஸ் வாங்கியாச்சு.  ஏர்ப்போர்ட்டின் இந்தப் பகுதி நல்லாவே இருக்கு. புதுசு போல!

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸில் ஒரு கால் கிலோ இனிப்பு  (ஸ்பெஷல் கலா கண்ட்) வாங்கினேன். கூடவே கொஞ்சம் மிக்ஸரும் காரத்துக்கு!   வழித்துணைக்கு இருக்கட்டுமே. ஒரு வழியா  மூணே முக்காலுக்கு  விமானத்துக்குள்ளே போனோம்.   சொன்ன நேரத்துக்குக் கிளம்பலை. பத்து நிமிட் லேட்.


எல்லாத்துலேயும் தமிழில் எழுதித்தான் இருக்கு.  முதலில் சிங்களம், ரெண்டாவது தமிழ், மூணாவதா இங்லிஷ்.
இண்டர்நேஷனல் ஃப்ளைட் என்பதால்   சாப்பாடு உண்டு.  பொதியைத் திறந்தால்  ஒரு ஜூஸ் & ஒரு ரோல்.  நம்ம  சாம்பார் சாதத்துக்குத் தொட்டுக்க உண்டாக்கும் காரம் போட்ட உருளைக்கிழங்குக் கறிதான் ஃபில்லிங்.  தொண்டைக்குள் மாட்டி விக்கிக்காமல் இருக்க அந்த ஆப்பிள் ஜூஸ்.   திங்க லாயக்கு இல்லை.... ப்ச்....

(ப்ரிஸ்பெர்ன் முருகன் கோவிலில்  ஒருமுறை வாங்குன மசால் தோசைக்குள்ளும் இப்படித்தான் உ. கிழங்கு வச்சுருந்தாங்க.  மசால்தோசை, பூரி வகைகளுக்குண்டான  உ.கி. செய்முறை, இலங்கை மக்களுக்குத் தெரியலைன்னு நினைக்கிறேன்.....  )


பண்டாரநாயகெ  விமானநிலையத்தில் இறங்குனப்ப மணி அஞ்சரை.  எழுபது நிமிட்  ஃப்ளைட். விஸா எல்லாம் ஆன்லைனில் வாங்கினதுதான். ஒரு பிரச்சனையும் இல்லாமல் இமிக்ரேஷன் முடிஞ்சது.
ஏர்ப்போர்ட்  சின்னதா இருந்தாலும் பளிச்ன்னு சுத்தமா இருக்கு.  ஆரவாரமான இடத்துலே  புத்தர் அமைதியா உக்கார்ந்துருக்கார்.
உள்நாட்டுப் பயனுக்கு ஒரு ஸிம் கார்ட் வாங்கிக்கணும். அதுவும் ஆச்சு.   கொஞ்சம்  ஸ்ரீலங்கன் காசும் எடியெம்மில் எடுத்துக்கிட்டோம்.
 முழிபெயர்ப்பு சரியான்னு தெரியலை....    இலங்கைத்தமிழோ என்னவோ?


வெளியே வந்தோம்.  கோபால் & துள்ஸிக்காக மஞ்சு வந்து காத்திருந்தார்!

இலங்கைப்பயணம் போகலாமுன்னு முடிவு செஞ்சப்பவே நம்ம தோழி புதுகைத் தென்றலிடம் விவரங்கள் கேட்டுக்கிட்டோம்.    அங்கேயெ பல வருஷங்களா  வேலை செஞ்சுக்கிட்டு இருந்த அவுங்க ரங்க்ஸ்  இந்தியாவுக்கே வந்துட்டாலும் கூட இப்பவும் வேலைவிஷயமா அடிக்கடி போயிட்டுத்தான் வர்றார். அவரும்  நம்ம குடும்ப நண்பர் என்பதால் , 'கவலையை விடுங்க. நானே எல்லா ஏற்பாடும் செஞ்சு கொடுத்துடறேன்'னார். தென்றலும் பல வருஷங்கள்  இலங்கையில் குப்பைகொட்டுனவுங்கதான்  :-)

நம்ம பயணத்திட்டம் எத்தனைநாள், எங்கெங்கே போக விருப்பம் எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்தாப்லெ ஏற்பாடுகள்.

நம்மை ஏர்ப்போர்டில் இருந்து கூப்பிட்டுக்கொண்டுபோய், பயணநாட்கள் முடியும்வரை நம்மோடவே இருந்து, புறப்படும்நாளில் திரும்ப  ஏர்ப்போர்ட்  கொண்டுவிடும்வரை ஒரு காரும், அதுக்கான ட்ரைவரும்  வேணுமுன்னு சொல்லி இருந்தோம்.

முதல்  ரெண்டு நாட்கள் கொழும்பு. அங்கே  அவருக்குத் தெரிஞ்ச கெஸ்ட் ஹௌஸில் தங்கல். அதன்பிறகு நம்ம பயணத்திட்டத்தின்படி அங்கங்கே ஹொட்டேலில் தங்குவதற்கான ஏற்பாடுகளை,  அவருடைய நண்பர் (அந்த கெஸ்ட் ஹௌஸ் உரிமையாளர்) செஞ்சுதர்றார். நல்லது.

  அந்த கெஸ்ட் ஹௌஸ் நகரத்துக்குள் இல்லைன்னு நினைக்கிறேன். அநேகமா ஒரு நாப்பது கிமீ தொலைவு. சுமார்  ஒரு மணி நேரமாச்சு (55 நிமிட் இருக்கும்) அங்கே போய்ச் சேர. இருட்டிப்போனதால் வழியில் எங்கும் படங்கள் எடுக்கலை.  தெருக்கள் எல்லாம் அகலக்குறைவாச் சின்னதா சந்துபோலவே வந்துக்கிட்டு இருக்கு!

நண்பரின் நண்பர் நம்மை வரவேற்று விட்டு, நமக்கான அறைகள் தயாரா இருக்குன்னார். சிங்களவர்கள்தான். இங்கெ ரெண்டு பேர் உதவிக்கு இருக்காங்க. அவுங்களிடம் சொன்னால் நமக்குத் தேவையானவைகளைச் சமைத்துத் தருவாங்கன்னுட்டு கிளம்பிப்போனார். நாங்களும் மாடியில் இருக்கும் அறைக்குப் போனோம். நல்ல விசாலமான பெரிய அறை! பால்கனியும்  இருக்கு!  ஆனால் இருட்டில் ஒன்னும் தெரியலை. கதவைத் திறந்தால்  காட்டுப்பூச்சிகளும், கொசுவும்  வரும் என்றதால் இரவு நேரத்தில் கதவைத் திறப்பது உசிதம் அல்லவாம். இதே போல  இன்னும்  மூணு அறைகள் இருக்காம்.  ஒரு தளத்துக்கு ரெண்டு என்ற கணக்கு.  அதுக்குமேலே மொட்டை மாடி!

 இரவு டின்னருக்கு  சமைக்கட்டுமான்னு  உதவியாளர்கள் கேட்டாங்க. அந்த நேரத்துலே தொல்லைப்படுத்த வேணாம், வெளியில் போய் சாப்பிட்டு வரலாமுன்னு  நம்மவர் சொன்னார். காலையில் ஒழுங்காய் ப்ரேக்ஃபாஸ்ட் எடுத்ததோடு சரி.  வேறொன்னும் சரி இல்லை. இப்போ பசி அதிகமா இருக்கு போல!


நல்ல ரெஸ்ட்டாரண்ட்  போகலாமுன்னு மஞ்சுவோடு கிளம்பிப் போறோம். சந்துத்தெருக்களில் போகும்போது   ஒரு இருவது நிமிஷப் பயணத்தில் சூப்பர்மார்கெட் போல ஒன்னு கண்ணில் பட்டது. எட்டிப் பார்த்துட்டுக் கொஞ்சம் பழங்கள் வாங்கினோம்.
அங்கிருந்து இன்னும் ஒரு அரைமணித் தொலைவில்  'தாலீஸ்' வாசலில் நிறுத்தினார் மஞ்சு. இந்தியர்கள் நடத்தும் ரெஸ்ட்டாரண்ட். வடக்கு, தெற்குன்னு எல்லாவித உணவும் இருக்காம்!

நான்  ஆனியன் ஊத்தப்பம். 'நம்மவர் ஆனியன் ரவா தோசை, மஞ்சு மஸால் தோசை. கூடவே ஆளுக்கொரு வடை.    விலை கொஞ்சம் அதிகமோன்னு ஒரு தோணல். இப்படியாகும் சமயங்களில்,  அதை நியூஸி காசுக்கு மாத்திப் பார்த்தால்  சின்னத் தொகையாக வந்துரும் :-)
கெஸ்ட் ஹௌஸுக்குத் திரும்பிட்டோம். மஞ்சுவுக்கு வீடு  இதே ஊரில்தான் என்பதால் அவர் காலை எட்டரைக்கு வந்தால்  போதும்.

நாமும் போய்த் தூங்கலாம். நாளை முதல் ஊர் சுத்தலாம்! சரியா?

தொடரும்......


12 comments:

said...

//முழிபெயர்ப்பு சரியான்னு தெரியலை..// - ஸ்பெல்லிங் மிஸ்டேக் துளசி டீச்சர். "மலசல கூடம்", "தானியக்கி" என்று தோன்றுகிறது.

said...

ஆனியன் ஊத்தாப்பம் என்ன... மலைமேல நிறுத்திவச்ச மாதிரி இருக்கு?

said...

அருமை நன்றி

said...

ஆஹா... இலங்கையின் அழகை உங்கள் கண்களால் தரிசிக்கக் காத்திருக்கிறோம்.

said...

ஆகா! நம்ம நாடு. இயற்கை அழகு எப்படி?

உருளைக்கிழங்கு பில்லிங் இங்கு எல்லோரும் காரம் விரும்பிகள் என்பதால் மிளகாய்தூள் மட்டும் போட்ட காரகிழங்காக செய்வார்கள்.இந்திய உணவகங்களில் மட்டும் மசாலாத் தோசை கறி இருக்கும்.

எப்போது வந்தீர்கள்?

தொடர்கிறேன் நமது ஊர் சுற்ற.....

said...

பல நாட்களுக்கு முன் வந்த பயணம் என நினைக்கிறேன். இப்பொழுது நடந்த சம்பவத்தால் வெளிநாட்டினர் வருகை குறைந்துள்ளது.காலம்தான் மாற்ற வேண்டும்.எங்கும் அமைதி நிலவ பிராத்திப்போம்.

'தாலீஸ் "கிறிலப்பனையில் அமைந்துள்ளது. நாங்களும் ஒருதடவை சென்றிருக்கிறோம்.

பயணம்இனிதே தொடரட்டும்.

said...

உலகம் சுற்றும் நண்பர்களே பயணம் இனிக்கட்டும் ஆனால் என்ன மங்களாசாசனம்செய்த கோவில்கள் இருக்கா

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

தமிழ் தமிழ்னு தமிழை முன்னிலைப்படுத்தப் படாத பாடுபடும் நாட்டில், அரசு வேலைகளில் தமிழ் தெரிஞ்ச யாருமே இல்லையோன்னு எனக்கொரு சந்தேகம் வருது... ப்ச்.... இங்கே மட்டுமில்லை அநேகமா எல்லாப் பகுதிகளிலும் இப்படி எதாவதொன்னு.....

ஊத்தப்பம்..... ஹாஹா.... விலையேற்றம் போல அது மலையேற்றம் !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க கீதமஞ்சரி.

நலமா? பார்த்து ரொம்ப நாளாச்சே....

இயற்கையைப் பாழாக்காமல் விட்டால் அதுவே ஒரு அழகுதான், இல்லையோ!!!

said...

வாங்க மாதேவி.

பயணத்தில் உங்களையும், மற்ற இலங்கை நண்பர்களையும் நினைத்துக்கொண்டது உண்மை!

போனவருடம் ஜூலை கடைசி வாரம் அங்கே வந்திருந்தோம். பதிவுகள் எழுதத்தான் ரொம்பவே தாமதமாகிறது... இப்பெல்லாம்....

பார்க்காத மற்ற பகுதிகளுக்கு இன்னொருமுறை பயணிக்க ஆசை.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நம்ம ஆழ்வார்கள் அங்கே அடியெடுத்து வைக்கவில்லை. ஆனால் பெருமாள் போயிருக்கார் !

மங்களாசாஸனம் செய்த கோவில்கள் அங்கே இல்லை. புத்தர் கோவில்கள்தான் பெரும்பாலும்....