இன்னும் தை மாசம் முடியலை, இல்லை ? நம்மூர்லே இருக்கும் ரெண்டாவது தமிழ்ச்சங்கப் பொங்கல் விழா கொண்டாட்டத்துக்குப் போறோம். ஆரம்பிச்சு மூணுவருஷம் ஆகுது. கேண்டர்பரி இந்தியத் தமிழ்ச்சங்கம். CITA. இங்கேயும் பிள்ளைகளுக்குத் தமிழ் வகுப்பு, நடனம், சின்னச் சின்னக் கைவேலைன்னு சொல்லிக் கொடுக்கறாங்க. நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு!
இந்த முறை பகல் விழாவாக இல்லாமல் மாலை நேரத்து நிகழ்வாக அமைஞ்சது. நடக்கும் இடம் நம்மூர் கிளை நூலகங்கள் ஒன்றில் இருக்கும் ஹால்களில் ! கம்யூனிட்டி விழாக்களுக்கு மலிவான கட்டணமும், தனிப்பட்ட விழாக்களுக்கு கொஞ்சம் அதிகமாகவும் கட்டணம் வசூலிக்குது நம்ம சிட்டிக் கவுன்ஸில் !
மகளோட கல்யாண வரவேற்பு விருந்து நிகழ்ச்சியை நாங்க இங்கேதான் ஏற்பாடு செஞ்சுருந்தோம். நல்ல வசதியான இடம்தான் !
சீனியர் சிட்டிஸனா லக்ஷணமா குத்துவிளக்கேத்தி விழாவை ஆரம்பிச்சு வச்சேன். வாழ்த்துப்பாடல், வரவேற்புரை, ஆடல் பாடல்னு நடந்துமுடிஞ்சதும், வருஷம் முழுதும் சங்கப்பணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கிய ஜோடியை உங்களுக்கு நல்லாவே தெரியும்தானே :-)
பிள்ளைகளுக்குச் சிறு விளையாட்டுப்போட்டி, தம்பதிகளுக்கு, மறுபாதியின் ரசனையை பற்றிய விவரம் அறியும் போட்டி, உறியடின்னு சில ஆச்சு. வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசளிப்பும்!
பகல் நேர விழாவாக நடந்தப்பக் கோலப்போட்டியும், வெளியே சூரியனுக்குப் பொங்கல் வைப்பதும் உண்டு.
சங்கத்தலைவர் சிலகாலம் இந்தியாவுக்குக் குடும்பத்தோடு போறார் என்பதால் அவருக்கான பிரிவுபசாரமும் ஆச்சு.
உள்ளூர் ரெஸ்ட்டாரண்டு மூலம் விருந்து. மாலை நிகழ்ச்சியாகப்போனதால் இங்கே அடுப்பு வச்சுப் பொங்கல் வைக்கலை. அதையும் அந்த ரெஸ்ட்டாரண்டே செஞ்சு கொண்டுவந்துருந்தாங்க. ஓனர் நமக்குத் தெரிஞ்சவர்தான். எங்கூரில் முதல் இண்டியன் பஃபே ரெஸ்ட்டாரண்ட் இவுங்கதான் ஆரம்பிச்சாங்க. இது மூணாவது வருஷம். போன வருஷம் ஒரு பஞ்சாபி பஃபே ரெஸ்ட்டாரண்டும் ஆரம்பிச்சுருக்கு !
ஓனர் Khursheed Jahangir from Hydarabad வந்து உணவின் தரம் சுவை பற்றிக் கேட்டார். 'உண்மையைச் சொன்னேன்' !