Friday, June 10, 2022

அழுதாலும் புள்ளை அவள்தான் பெறணும், இல்லையோ ! ஹாஹா.....

நியூஸியின் கோடைகாலம் இப்பன்னு சொன்னேனில்லையா....  டிசம்பர், ஜனவரி, ஃபிப்ரவரி இந்த மூணு மாசமும் தான்  கொஞ்சம் மனதுக்கு உற்சாகம் தரும் மாசங்கள்.  
இந்தக் குளிர்கால மூணு மாசங்களில்  முன்னும் பின்னுமாய் ஒன்னரை + ஒன்னரைன்னு மூணு மாசம் குளிரோடு சேர்ந்து நம்மை வாட்டுவதைப்போல்  கோடையில் முன்னொட்டும் பின்னொட்டும் இருக்கப்டாதோ ?  ஊஹூம்.....  கோடைன்னு சொல்லிக்கும் அந்த மூணு மாசங்களிலேயே 'அசல் 'வெயிலா ஒரு பத்துப்பதினைஞ்சு நாட்கள் அங்கொன்னும் இங்கொன்னுமா  சுமார் முப்பது டிகிரி செல்ஸியஸ்  வந்து,  வெள்ளையர் எல்லோர் வாயிலும்' இண்டியன் சம்மர்' என்ற புலம்பலை ஆரம்பிச்சு வைக்கும். (எனக்குத்தான் அந்த முப்பதுவும் உரைக்காது) நம்ம ரஜ்ஜு இந்தக்கூட்டத்தில் சேர்ந்து புலம்ப ஆரம்பிப்பான்.  அப்பாதான் ஏஸி போடறதும், ஃபேன் போட்டு வைக்கறதுமா  அவனுக்கு வால் பிடிப்பார்:-)

என்னைத்தவிர செடிகளும் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் பூத்துக்குலுங்கும். இந்த முறை, செடிகள் இருக்கும் தொட்டிகளைச் சீர்ப்படுத்தி அடுக்கி வைக்கத் தோணுச்சு.  

இங்கே நம்மூரில் கட்டடம் கட்டப் பயன்படுத்திய கற்கள், கதவு , ஜன்னல்னு எல்லாப் பொருட்களையும் இடிக்கப்பட்டப் பழைய வீடுகளில் இருந்து  கொண்டுவந்து விற்பனைக்கு வைக்கும் ஒரு  வியாபாரம் இருக்கு.  வீகெண்ட் ஆனால் போதும் சனம், இங்கேதான் சுத்தும். ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் பண்ணிக்கத் தோதா எதாவது கிடைக்குமான்னு பார்க்கிற மக்கள்தான்.  இவைகளைத் தவிர, புது  மரப்பலகைகள், கட்டைகள் எல்லாம் கூட விற்பனைக்கு வச்சுருப்பாங்க.  மஸ்க்ரூவ்னு பெயர்.



செடிகளை மேடையில் அடுக்கடுக்காய்கொலுப்படி போல்  வச்சால்  நல்லதுன்னு  கொஞ்சம்  கற்கள் வாங்கிக்கப்போனோம்.  காங்க்ரீட் ப்ளொக்குகள்தான். ஏற்கெனவே இப்படித்தான் வச்சுருந்தாலும் இன்னும் கொஞ்சம் வேண்டித்தான் இருந்தது. வாசல் ஃபென்ஸில், இல்லை தோட்டத்துலே அலங்காரமா வைக்க இரும்புத்தகடுலே செஞ்ச மிருகங்கள் கொஞ்சம் வச்சுருக்காங்க. யானை இருக்கு. ஆனால் யானைக்கு 'யானைவிலை' !  ஐய்ய.... துருப்பிடிச்சுக்கிடக்கு... வேணாம் போ....  'நம்மவர்' மனசில் பால் வார்த்தேன்.  (ஹாஹா) 
ம்ம்ம்ம்ம்ம்  சொல்ல விட்டுப்போச்சே.... எதெடுத்தாலும் DIY (Do it Yourself)தான். சின்ன வேலைகளுக்கெல்லாம் ஆள் வச்சால் கட்டுப்படி ஆகாது. முதலில் ஆள் கிடைக்கணுமே....


நமக்கு வேணுங்கற கற்களையும்  பலகைக் கட்டைகளையும்  வாங்கியாச்.  பொதுவாக  பெரிய சாமான்கள் வாங்கினால் கொண்டுபோக  இலவசமா ட்ரெய்லரும் கடன் கொடுப்பாங்க,  இங்கத்துக்கடைகளில் . ட்ரெய்லரில் ஏத்த உதவியும் செய்வாங்க.  வீட்டுக்கு வந்தபின் எடுத்துவைக்க உதவி தேவைப்படும்.  வயசாகுதில்லையா.... முந்தி மாதிரி மாங்குமாங்குன்னு வேலை செய்ய முடியறதில்லை. வர்ற வழியிலேயே மகளுக்குச் சேதி சொன்னதால் அவுங்க கணவனும் மனைவியுமா வந்து  கீழே இறக்கிப் புழக்கடையில் வச்சுட்டுப்போனாங்க. அவுங்க வீட்டுக்குக் கொடுத்தனுப்பும் மரத்தடுப்புகள் (நம்ம கன்ஸ்ர்வேட்டரி போட்டப்பக் கழற்றி வச்சவை)  இருந்ததால்  அதையும் அதே ட்ரெய்லரில் ஏத்தி, அங்கெ கொண்டு போட்டோம். ஆச்சு வேலை.
மறுநாள்  கொஞ்சம் கற்களை அடுக்கிக் கட்டைகளை வச்சுச் செடிச்சட்டிகளை அடுக்கியாச்.  மீதம் இருக்கும் பலகைகளை வச்சுத் திண்ணைகளும் ஆச்சு.  தேவைப்படும்போது  கற்களைப் பயன்படுத்திக்கலாம்.


கொஞ்சம் வெயில் காயணுமுன்னால்  திண்ணையிருப்பது சுகம்.  ஆனால் அதிகம் பயன்படுத்துவதென்னவோ  .....   நம்ம ரஜ்ஜுதான் :-)

செடிச்சட்டின்னு சொல்றேனே தவிர,  அதிகமா வச்சுருக்கறது  ப்ளாஸ்டிக் வாளிகள்தான். வெறும் தொன்னூறு சென்ட்னு மலிவாக் கிடைச்சுக்கிட்டு இருந்தது ஒரு காலத்தில்.  ஒரே நிறத்தில் வாங்கினால் ஆச்சுன்னு இருந்து,  இப்ப அதே வழக்கமாகவும் ஆகிப்போச்சு.  எப்படியும் ஒரு மூணு வருஷத்துக்கு வரும்.  காதைப்பிடிச்சுத் தூக்காமல்  இருந்தால் இன்னும் ஒரு மூணு வருஷம் வரலாம். 'நம்மவர்'  ஒரு கையால் காதைப் பிடிச்சே   எல்லாத்தையும்  ஒடைச்சுருவார்.  ச்சும்மாத் தொட்டேன், உடைஞ்சுருச்சுன்னுவார்.  

'வீடு' களையறேன்னு போய், நல்ல செடிகளை, வீடுன்னு நினைச்சுக் களைஞ்சு போட்டுட்டு, வீடுகளைப் பத்திரமா விட்டுட்டு வருவார்.  இதெல்லாம் நான் வீட்டுக்குள் மற்ற வேலைகளில் முழுகிப்போய் இருக்கும்போதுதான் ஓசைப்படாமல் நடக்கும். நான் போய்ப் பார்க்கும்போது....   என் கையில் கத்தியோ, அரிவாளோ இல்லாதது அவரவர் செய்த புண்ணியம் அன்றி வேறில்லை.
செடிகளால் மனசுக்கு எவ்வளோ மகிழ்ச்சியோ... அதே அளவு சண்டைக்கும்  கேரண்டீ !


12 comments:

said...

//என் கையில் கத்தியோ, அரிவாளோ இல்லாதது அவரவர் செய்த புண்ணியம் அன்றி வேறில்லை//

கோபால் சார் உங்க ப்ளாக் படிக்கறதில்லைங்க தைரியம் உங்களுக்கு; இருக்கட்டும் வத்தி வைக்கிறேன்.

said...

செடிகள் வளர்ப்பது சல்லியம் என்றாலும் காய்த்து, பூப்பூக்கும்போது மிக்க மகிழ்ச்சிதான்.

மற்றபடி உடற்பயிற்சிக்கு கோபால் சார் என்ன செய்வார்?

said...

உங்க ஊர் வெயில் தேசமா?  குளிர் தேசமா?

said...

ஹாஹா அக்கா ரஜ்ஜூ பின்னணி  camouflage ஆகி எல்லாம் ஒரே கலரா இருக்கு :)
என் கணவரும் வீடு :) கொல்லர் தான் ரெட் கர்ரன்ட்ஸ் கிளையை தனியே எடுத்து வளர்த்து வந்தேன் அது பூக்கிற நேரம் வேலை பிஸில 3 நாள்தான் கவனிக்கல அப்புறம் பார்த்தா அது உரக்குழியில் .பல்லை நறநறன்னு கடிச்சி திரும்பவும் தண்ணி தெளிச்சு உயிர் குடுத்து வளர்க்கிறேன்.இப்போ குட்டி காய்கள் வந்திருக்கு .எங்க வீட்லயும் இந்த pallets  எடுத்து வந்தார் .நான் சும்மாலாம் வைக்க விட மாட்டேன் எல்லா கோட்டைக்கும் பூச்சாடிக்கும் பெயிண்ட் அடிக்க சொல்லிருக்கேன் .எங்க ஜெசி அது மேலே ஏறி உக்காந்திருக்கு இப்போவே ..எல்லாம் அவளுதாம் :)

said...

காய்த்து குலுங்கும் செடி அழகாக இருக்கிறது மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

said...

ரஜ்ஜு சூப்பராய்ப் போஸ் குடுக்கிறார்:).. எங்கட வீட்டிலும் ஒராள் இருக்கிறா.. டெய்சி.

கார்டின் அழகாக இருக்குது, அங்கத்தைய வெதருக்கு நட்டதெல்லாம் காய்க்கும் தொட்டதெல்லாம் துலங்கும் என நினைக்கிறேன்.. இங்கு எங்களுக்கு குளிராகவே இருக்கும் எப்பவும் சில்லென.. அதனால உருளை, கரட் வெங்காயம் இப்படித்தான் வரும், நம் நாட்டு மரக்கறிகள் எதுவும் வராது:(.

said...

வாங்க விஸ்வநாத்,

கோபால் படிக்கிறாரே ! இந்தக் கத்தி சமாச்சாரம் எல்லாம் அவருக்குப் பழக்கப்பட்டதே! ஒருமுறை இவரை அரிவாளால் கழுத்தை வெட்டுக் கொன்னே போட்டுருக்கேன் !!!!

said...

வாங்க நெல்லைத் தமிழன், டிவி, சினிமா பார்ப்பதெல்லாம் உடற்பயிற்சியில் சேராதா ?

ஹாஹா....
வீட்டில் ட்ரெட்மில்லில் ஓடுவார். ரஜ்ஜு பின்னால் அலைவதே பெரிய நடைப்பயிற்சிதான்

said...

வாங்க ஸ்ரீராம்,

அண்டார்க்டிகா அருகில் இருக்கோம். அப்ப என்ன தேசமாக இருக்குமாம் ? :-)

said...

வாங்க ஏஞ்சல்,

வீட்டுக்கு வீடு, வீடு கொல்லர்களே !
புதுசா எது வீட்டுக்கு வாங்கி வந்தாலும் பசங்க உடனே உரிமை கொண்டாடுதுல்லே !!!

இந்த முறை வாங்கி வந்த கம்ஃபர்ட் டோநட்டை சட்டையே செய்யலைப்பா.... அவனுடைய ப்ளாங்கெட்டைக்கூட போட்டு வச்சேன். ஊஹூம்.....

said...

வாங்க மாதேவி,

உண்மைதான். இந்த வருஷம் ஆப்பிளும் , திராக்ஷையும் பொய்த்துவிட்டது..... அறுவடை சமயம் விடாமல் மழை. அப்புறம் போய்ப் பார்த்தால் எல்லாம் கெட்டுப்போயிருந்தது.

said...

வாங்க அதிரா,

உங்களிடம் கேட்கணுமுன்னு இருந்தேன். அண்டார்க்டிகாவில் எங்கே இருக்கீங்க ? ஸ்காட் பேஸா ?

டெய்ஸிக்கு ரஜ்ஜுவின் அன்பு!