Monday, June 20, 2022

சொந்தமாய் ஒரு சொர்கவாசல்.

பத்தொன்பது வருஷங்களுக்கொருவாட்டி இப்படி வருமாம். எது  ? எல்லாம் இந்த வைகுண்ட ஏகாதசிதான். சீரங்கம் கோவிலில் கூட  கைசிக ஏகாதசியையே வைகுண்டஏகாதசியாகக் கொண்டாடி, சொர்கவாசலையும் திறந்தாச்சு.  ஆனால் என் மனசு என்னமோ சமாதானப்படவே இல்லை.  என்னைப்பொறுத்தவரை மார்கழியில் தான்  வைகுண்டவாசல் திறக்கணும். 
அவனே.... மாதங்களில் நான் மார்கழின்னு சொல்லி இருக்கானே !
 

இந்த சொர்கவாசல் திறப்பை ஒருமுறையாவது நேரில் பார்க்கணுமுன்னு எனக்கு ரொம்பவே ஆசை.  அதுக்கு வாய்ப்பே அமையலை.  முதலில் அந்த சமயங்களில் இந்தியாவில் இருக்கணுமே... .  அப்படியும்  அங்கே இருக்க நேர்ந்த ஒரு சில வருஷங்களில், காலையில் நாலுமணிக்கெல்லாம் கோவிலுக்குப் போறதை நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது. 'நம்மவர்' சம்மதிக்கவே மாட்டார்.  தினம் தினம் பார்க்கிற அதே சாமியை, விசேஷநாள்ன்னு  கோவிலைச் சுத்திச்சுத்தி மூங்கில் கம்பால்  வரிசை கட்டி விட்டு அதுக்குள் ஊர்ந்து போறதுக்குள்ளே விடிஞ்சுடாது ?
சரி.  டிவியில் காமிப்பாங்க.... லைவா பார்க்கணுமுன்னு ஒரு முறை (2009லே) நாலுமணிக்கெல்லாம்  எழுந்து, பல்தேய்ச்சு, தூக்கக்கலக்கம் போக சூடா ஒரு காஃபியையும் முடிச்சு,  ஹாலில் போய் டிவி பார்க்க உக்கார்ந்தேனா....  மூடிய சொர்கவாசலைக் காமிச்சுக்கிட்டு இருக்காங்க. பக்தர்கள் கூட்டத்தைவிடப் போலிஸ் கூட்டம் அதிகமாக் கதவைச் சூழ்ந்து நிக்குது. இதோ அதோன்னு காத்திருக்கேன்.... நம்ம சீரங்கம் கோவில், நம்ம பார்த்தசாரதி கோவில்னு மாத்தி மாத்திக் காமிக்கிறாங்க....    எப்போ எப்போன்னு இருந்து அப்படியே தூங்கியிருக்கேன்.  சட்னு கண்ணைத் திறந்து பார்த்தால்...... சொர்கவாசல்  'பா.....' ன்னு திறந்துகிடக்கு, பெருமாளைக் காணோம்.....

நமக்கு டிவி எல்லாம் சரிப்படாது. நேரா 'அங்கே' போகும்போதுதான் பார்க்கணுமுன்னு இருக்கும்படியா  ஆச்சு.....  அப்புறம் ஒரு சில கோவில்களில் திறந்து வச்சுருந்த சொர்கவாசல் வழியாப் போகும் பாக்கியம் கிடைச்சது.... ஆனால் அதெல்லாம் மாலை நேரத்தில்.  நம்ம உறையூர் கமலவல்லி  நாச்சியார் கோவிலில்  சொர்கவாசல் திறப்பு,  இன்னொரு தனிநாளில்தான்.  மாசி மாத ஏகாதசிநாள்.  ஆனால் எனக்குக் கொஞ்சம் கருணை காமிச்சார் நாச்சியார் !  விவரம் கீழே சுட்டியில்....

http://thulasidhalam.blogspot.com/2016/12/104.html

இந்தமுறை மார்கழி மாச ஏகாதசி... மாசக்கடைசி நாளில் வருது. சொல்லிவச்சாப்போல போகிப்பண்டிகையும்  அன்றைக்குத்தான் இல்லையோ !  காய்கறிக்காக ஃபிஜி இண்டியன் கடைக்குப் போயிருந்தப்ப.... எனக்காகக் காத்திருந்தார் என் பெருமாள் ! எத்தனையோ முறை இந்தக் கடைக்கு வந்திருந்தாலும், கண்ணில் பட்டது இந்த முறைதான்.  ரெண்டுவருஷமா வேற பயணம் ஒன்னும்  போகலை, குறிப்பா இந்தியா..... இனி போவோம் என்ற நம்பிக்கையும் இல்லை இந்த கோவிட் சனியனால்.  சட்னு எடுத்துக்கிட்டேன்.  'நம்மவரிடம்' காண்பிக்கக்கூட இல்லை.  மூக்கு சரியில்லை, முழி சரியில்லைன்னு ஏதாவது சொல்வார்.....  இது வழக்கம்தான்.  இப்படிச் சொல்லிச் சொல்லியே என் 'பாவை விளக்குகள்' ஆசை இன்னும் நிறைவேறவே இல்லை. சின்னதா இருக்கும் சிலைகளில் மூக்கும் முழியும் எப்படிங்க அச்சடிச்சாப்ல இருக்கும்? அதனால்  இனி அபிப்பிராயம் கேட்கவேப்டாது. பிடிச்சுருந்தா வாங்கிக்கணும் என்ற கொள்கை எடுத்துருந்தேன்.
நிக்கிற மஹாவிஷ்ணு !  இதே அளவில் ஒரு நிக்கிற மஹாலக்ஷ்மியை பல வருஷங்களாத் தேடிக்கிட்டே இருக்கேன்.  எப்போ வேளை வருமோ ? ஹூம்.....

நல்ல அம்சமான மஹாவிஷ்ணுதான், ஆதிசேஷன் குடை விரிக்க,  அழகா நிக்கறார். சட்னு  ஐடியா வந்தது. சொந்தமாய்  சொர்கமே  சிருஷ்டிக்க நானென்ன விஸ்வாமித்ரிணியா என்ன ?  ஆனால்  ஒரு வாசல் மட்டும்  'கஷ்டப்பட்டு'  வச்சுட்டால், அதன் வழியாக பெருமாள் வரமாட்டாரா என்ன ? 
சொர்கத்துலே எல்லாமே தங்கமும் வைரமுமா இருக்குமுன்னு எனக்குத் தோணல். நம்மாண்டை இருக்கும் தங்கத்தையும் வைரங்களையும்  ஒரு  வாசல் நிர்ணயமாச்சு !  நாளைக்குக் காலையில் ப்ரம்ம முஹூர்த்தத்தில் கதவைத் திறந்து காட்சி கொடுக்கப்போறார் எம்பெருமாள் என்ற நினைப்பே மகிழ்ச்சியா இருந்தது.

அடுத்த பிரச்சனை என்னன்னா...  அன்றைக்கே போகிப்பண்டிகையும் வருதே.... ஏகாதசின்னு பட்டினி கிடக்கணுமா  இல்லை பண்டிகைன்னு பலகாரம் தின்னணுமா ?  பெருமாளே... இப்படி ஒரு பிரச்சனையில் என்னை மாட்டிவிட்டீரே.....

சரி... யாருக்கும் வேணாம்... சொர்கவாசல் வழியாக வரும் பெருமாள் , நம்ம வீட்டில் போகிப்பண்டிகை கொண்டாடப் போறார் ! 

அதிகாலையில் நம்ம சொர்கவாசல் திறந்து காட்சிகொடுத்த பெருமாளைக் கும்பிட்டுக் கிட்டோம்.  போகிப்பண்டிகைக்காக போளி & வடை தயாரிக்கும் வேலை முடிஞ்சது. பொழுதன்னிக்கும் கதலி என்ன வேண்டிக்கிடக்குன்னு  ப்ளோட்ஸ் ஆச்சு.   

புதுசா மார்கெட்டில் வந்துருக்கு. ப்ளம் & ஆப்ரிகாட் கலப்புத்திருமணத்தில் பொறந்த குழந்தை !  சுவை எப்படி இருக்குமுன்னு தெரியாது.... பெருமாள் சாப்பிட்டுப்பார்த்துச் சொல்லட்டும்!
பகல் சாப்பாடு ஆனதும்  மறுநாளைக்கான பொங்கல் அலங்கார  வேலைகளை ஆரம்பிச்சேன்.
பொங்கல் டிஸ்ப்ளே அலங்காரமும் ஒருவழியா ஆச்சு.  ரங்கோலியும் போட்டு வச்சாச்சு. இனி ஜன்னுவுக்கு அலங்காரம் பாக்கி.  ஆண்டாள் வேஷம் மார்கழியோடு போச்சு :-)


ராத்ரி அந்த வேலைகளையும் முடிச்சதும் ஒரு நிம்மதி. பொழுதுவிடிஞ்சால் பொங்கல் பண்டிகை !



சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல், நம்ம வீட்டு விளைச்சல்களில் கொஞ்சம் போதாதா என்ன ? 
தீபாவளிக்குன்னு எடுத்து வச்ச புடவை, பொங்கலுக்காச்சு :-)

சாயங்காலம், நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலுக்குப்போய் ஸ்வாமி தரிசனம் ஆனதும்..... பண்டிகையும்  முடிஞ்சது !    





6 comments:

said...

வைரம் ஜொலிக்கும் சொர்க்க வாசல் கதவு பிரமாதம்.  ரஜ்ஜுவுக்கு அப்படி என்ன தூக்கம்!

said...

அருமை சிறப்பு நன்றி

said...

சொர்க்க வாசல் வீட்டுக்குள் வந்துவிட்டது சிறப்பு.
பொங்கல் அலங்காரம் நன்றாக இருக்கிறது . ஜன்னு க்யுட்.

said...

வாங்க ஸ்ரீராம்.

பொதுவாப் பூனைகள் நாளுக்குப் பதினெட்டு மணி நேரம் தூங்கும். ரஜ்ஜு வயசானவன் இல்லையோ... அதான் கூட ஒரு ரெண்டு மணி நேரம் !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

ரசிப்புக்கு நன்றி !