Wednesday, June 12, 2019

தங்கக்குடங்களில் தங்கத்தாமரை மொட்டுகளோடு (பயணத்தொடர், பகுதி 103 )

இன்னும் ஒரு இடம் பார்த்துட்டுப் பகல் சாப்பாட்டுக்குப் போகலாமுன்னு இதே பேட்டையில் இருக்கும் புத்தர் கோவிலுக்குப் போறோம்.  சாலையில் போகும்போது தலைநகரத்துக்குள்ளேயே இருக்கும் 'கெத்து' காண்பிக்காத சாதாரணக் கடைகள் கண்ணுலே பட்டன. அப்ப திடீர்னு  மணி சத்தமும், சின்னதா கொட்டு அடிக்கிற சத்தமும் கேட்குதேன்னு சாலை ஓரம் கண்ணு நட்டேன். நாலைஞ்சுபேர் கொட்டடிச்சுக்கிட்டுப் போறாங்க.  தலையில்  ஒரு உருமால்..... வெள்ளை வேட்டியும் வெள்ளைத் தலைப்பாகையும்... இடுப்பில் ஒரு காவித் துண்டுமா....  தலையில் கரகம் மாதிரி  ஒன்னு தாங்கி வர்றார் ஒருவர்.  அதுக்குக்குடை பிடிச்சபடி இன்னொருவர் ! அவுங்களைத் தொடர்ந்து  கொஞ்சம் பின்னால்   புத்தபிக்ஷுக்கள்  வந்துக்கிட்டு இருக்காங்க. கையில் பிக்ஷைப் பாத்திரம்!


 புத்தமத சந்நியாசிகளுக்குப் பயங்கரக் கட்டுப்பாடுகள் உண்டு.  ஒரு நாளைக்கு ஒருமுறைதான் சாப்பாடு. அதுவும் இரந்துண்டு வாழ்வு.  யாரிடமும் 'எனக்குப் பிக்ஷை போடுங்கள்'னு கேட்கப்டாது. போய்க்கிட்டெ இருக்கும்போது யாராவது தாமே முன்வந்து  உணவு கொடுத்தால் சரி. ஒன்றும் கிடைக்கலைன்னா  அவ்ளோதான், பட்டினி. இனி அடுத்த நாளுக்குத்தான் பிக்ஷைக்குப் போகணும்.  பகல் ஒரு பதினொன்னரை போல  Pindapatha வுக்குக் கிளம்பிப் போவாங்க.
பிக்ஷைக்குன்னே தனிப் பாத்திரங்கள் (Paththara)இருக்கு. அலாய் என்னும் உலோகப்பாத்திரம் தருவாங்களாம்.  அடிக்கடி பாத்திரத்தில் துரு பிடிச்சு வீணாப்போகுதுன்னு இப்பெல்லாம் ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் பாத்திரமாம்.
கிடைச்ச உணவை மடத்துக்குக்  கொண்டுவந்து  எல்லாத்தையும் மொத்தமாக் கலந்து எல்லாரோடும் பகிர்ந்து சாப்பிடணும்.
வரிசையில் போகும் பிக்ஷுக்களுக்கு அங்கங்கே சிலர்  அவுங்க பாத்திரத்தில் எதோ உணவைப் போடுறது கண்ணில் பட்டது. ஒருவர், தண்ணி பாட்டில்களை வச்சுக்கிட்டு ஆளுக்கொன்னு கொடுத்துக்கிட்டு இருந்தார். அதுவும் தானே தேவைப்படுது இல்லையோ....
முந்திக் காலத்தில் எல்லாம் குடும்பத்தில் ஒரு பிள்ளையை கோவிலுக்குத் தர்ற வழக்கம் இருந்ததாம். வீட்டுக்கொருவர் புத்தபிக்ஷூவானால்  மொத்தக்குடும்பத்துக்குமே மோக்ஷம் (அவுங்க மொழியில் 'நிர்வாணா' ) கிடைச்சுருமுன்னு நம்பிக்கையாம். இப்ப காலப்போக்கில்  இந்த வழக்கம், வழக்கொழிஞ்சு போச்சுன்னாங்க. அப்படியும்   வேற நாடுகளில் நிறைய சின்னப்பிள்ளைகளை மடத்தில் பார்த்துருக்கேன். (எனக்கு ஐயோன்னு இருக்கும்)
விவரம் சொல்லிக்கிட்டே மஞ்சு  வண்டியை நிறுத்துன  இடத்தில் தங்கக்கிண்ணங்களில் தங்கத்தாமரை மொட்டுகளோடு  ஒரு அலங்காரம் தெருவிலிருந்தே ஆரம்பிக்குது. இன்னும் தாமரை மலரலையே.....  இது கங்காரமய புத்த விஹாரா.......

இலங்கை கொழும்பு நகரில் ரொம்பப் பழமையான புத்த விஹாரை இதுதானாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலே ஆரம்பிச்சுருக்கார் பிக்ஷூ Hikkaduwe Sri Sumangala Thero .  சின்ன அளவிலே ஆரம்பிச்சது இப்போ பெரிய அளவில் வளர்ந்து நிக்குது. இது கோவில் மட்டுமில்லை.... ஒரு கலாசாலைக்குரிய எல்லாமே இருக்குன்னு சொல்றாங்க. மதம், மதம் சார்ந்த கலாச்சாரம், வழிபாட்டுமுறை, குழந்தை பிக்ஷுக்களை வளர்த்துத் தேவையான கல்வியைப் போதிப்பதுன்னு  பெரிய அளவிலெல்லாமே நடக்குதாம்.  பிக்ஷுக்கள்  இரந்துண்ணும்  பாரம்பர்யத்தை விடாமல் கடைப்பிடிப்பதும் இங்கேதானாம்.  அப்ப நாம் வரும்வழியில் பார்த்த புத்த பிக்ஷூக்கள் இந்த மடத்தைச் சேர்ந்தவர்கள்தான் போல!

கோவிலுக்குள் போக டிக்கெட் வாங்கிக்கணும்.  ஆளுக்கு முன்னூறு ரூ.  உண்மையில் கோவிலுக்கு சாமி கும்பிடப்போனால்  உள்ளூர் மக்களுக்கு டிக்கெட் கிடையாது.  வெளிநாட்டு மக்களிடம் மட்டுமே இப்படி டொனெஷன் என்ற பெயரில் வசூலிக்கிறாங்கன்னு அப்புறம் தெரிஞ்சது.  அதுவும் இங்கே  இருக்கும் ம்யூஸியத்தைப் பார்வையிடவும் சேர்த்தேதான்.

தியானம் பண்ணறேன்னு இப்படி  எலும்பும் தோலுமா இருந்தால்....  ப்ச்....

வாசலிலேயே   ஒரு பக்கம் வரிசையா நாற்காலிகள் போட்டு வச்சுருக்காங்க. நாம் வசதியா உக்கார்ந்து காலணிகளைக் கழட்டி அங்கே இருக்கும் ஒரு ப்ளாஸ்டிக் கூடையில் போட்டு, இதுக்காக ஒதுக்கி இருக்குமிடத்தில் வச்சுட்டுப் போகலாம்.  சர்ச் போல இல்லாமல் புத்தர் கோவில்களில் நம்ம ஹிந்துக்கோவில்கள் போலவே காலணிக்காலுக்கு  அனுமதி இல்லை.
வாசல் முற்றத்தில்  சிங்கம் !

கட்டடத்தில் நுழைஞ்சதும் புள்ளையார்!  கும்பிட்ட கையோடு சந்நிதிக்குள் போறோம்.  கருவறையில் அமர்ந்த கோலத்தில் ஸேவை சாதிக்கிறார், அமைதியான அழகான முகத்தோடு புத்தர். பெரிய சிலை!  இவரைச் சுற்றி காந்தர்வர்களும், அரசர்களும் சிஷ்யர்களுமாக   பின்புலத்திலும் பக்கவாட்டிலும் ஒரு கூட்டம்!  ஒவ்வொரு முகத்திலும் அழகு அப்படியே கண்ணைக்கட்டி இழுக்குதுன்னா பாருங்க!


விளக்குகளும் பூக்களும், பழங்களும், ஜூஸுமாப்  படையல் போட்டு வைக்கிறாங்க....
பெரியவருக்கு துணை போல  சின்னதா கையளவு புத்தர் சிலையிலிருந்து வெவ்வேற அளவுகளில் நின்றும் இருந்தும் கிடந்தும் ஸேவை சாதிக்கும் புத்தர்கள் நூத்துக்கணக்கில்.....
கருவறை விதானம் ரொம்பவே உயரத்தில். அதுக்கு ஈடு கொடுப்பதைப்போல்  நின்றநிலையில் இருக்கும் புத்தர்கள் சுமார் இருபதடி உசரமா இருக்கணும். ஹைய்யோ!!!

இவ்ளோ உயரமும் அகலமுமா இருக்கும் சிலைகளை  எல்லாம் ஒரே ஃப்ரேமுக்குள் அடக்கவே முடியாது....  தனித்தனியாத்தான் க்ளிக்க வேண்டி இருக்கு!

புத்தரின் தலைமுடியை இங்கே ஒரு கண்ணாடிப்பேழையில் பாதுகாத்து வச்சுருக்காங்களாம். நமக்கு ஏகாந்த தரிசனம் என்பதால்  வேற யாரிடம் கேக்கறதுன்னு இருந்துட்டேன்.
வெளியே வளாகத்தில் அங்கங்கே சிலைகளோ சிலைகள். புத்தமதம் செழித்து வளர்ந்த மற்ற நாடுகளில் இருந்து கொண்டு வந்து வச்சுருக்கும் சிலைகள்  ஏராளமாப் பெரிய அளவிலும் இருக்கு! நம்ம வீட்டு தன்வந்திரி (ஃப்ரம் பாலி) மாதிரிகூட ஒருத்தர் இருக்கார்!

அழகான மண்டபத்துக்குள்ளே  அழகான புத்தர்!
அடுத்த கூடத்தில் இருக்கும் எமெரால்ட் புத்தா, நம்ம தாய்லாந்து அரண்மனையில் இருக்கும் புத்தரை நினைவுக்குக் கொண்டுவந்தார்.  பளபளன்னு நம்ம பச்சை :-)


நம்ம கஜராஜனைப்போல இன்னொருத்தன்!  ஹைய்யோ!!!!!
திறந்தவெளி முற்றத்தைக் கடந்து போறோம். முற்றத்தின் நடுவில் பகோடா(சைத்யா) ஒன்னு!  வெளியே சுத்தி புத்தர் சிலைகள்!
அடுத்த கட்டடத்துக்குள் நுழைஞ்சால் ம்யூஸியம். என்னத்தைச் சொல்றது?   சொற்களால் விவரிக்கவே முடியாத  அளவில் கலைப்பொருட்கள்  குமிஞ்சு கிடக்கு.  புத்தர் சிலைகள் மட்டுமில்லை....  ஹிந்துக் கடவுளர்களின்  சிலைகளும் ஏராளம். அம்மன், புள்ளையார், பெருமாள், சிவன்பார்வதின்னு எதையும் விட்டுவைக்கலை !  உலோக விளக்குகள் பகுதியில் நம்ம காமாக்ஷி விளக்குகூட இருக்கு! (பேசாம ஒரு ஆல்பம் போட்டுற வேண்டியதுதான்!!)

மாடிப்பகுதிக்குப் போறோம்.  இங்கேயும் இதே! புத்த பிக்ஷூ படிப்புக்கு, வகுப்பெல்லாம் இங்கேதான் நடக்குதுபோல....   வகுப்பறை மாதிரி இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க....
கலைப்பொருட்கள் கலெக்‌ஷன் வகையில் ஒரு இடத்தில் எக்கச்சக்கமான கைக்கடிகாரங்கள் !  இது எந்த வகையில் வருதாம்?

ஒருவேளை...   காலம் பொன்போன்றதுன்ற காலக்கணக்கோ?   அப்படியும்  நாம் ஒரு காலத்துலே கட்டி இருந்த கடிகாரம் இருக்கான்னு கண் தேடுனது உண்மை....  :-)

கீழே இருக்கும்  வேறொரு திறந்த வெளி முற்றத்தில் பெருசா வளர்ந்து நிக்கும் போதிமரம்! அதுக்கு முன்னால்  நாம் உக்கார்ந்து ப்ரார்த்திக்க இருக்கை அமைப்பு.  அமைதியான சூழலில் இருந்து வணங்கினோம். இங்கே மக்கள் நடமாட்டம் இருந்தாலும் எல்லோரும் அமைதியைக் கடைப்பிடிச்சு மெள்ள நடக்கறாங்க.  எல்லோரும்  வெளிநாட்டுப் பயணிகள்தான்.
அனுராதபுரத்துலே இருந்து கொண்டுவந்த போதிமரத்தின் கிளையில் இருந்து வளர்ந்து நிக்கும் மரம் இது!

அனுராதபுரத்துக்கு மரம் எப்படி வந்தது? நம்ம அசோகச் சக்ரவர்த்தியின் மகள் சங்கமித்ரை, புத்தருக்கு மெய்ஞானம் கிடைச்ச  போதிகயாவில் இருக்கும் மரத்தின் (அந்த மரத்தடியில் அமர்ந்துதான் புத்தர் மூணுநாட்கள் தவம் செஞ்சு ஞானம் லபிச்சுருக்கு!) கிளையைக் கொண்டுவந்து  அனுராதபுரத்தில் நட்டு வச்சாங்களாம். ஆமாம்.... போதிமரமுன்னு சொல்லும் மரம் என்ன மரம்னு தெரியுமோ?  நம்ம அரசமரம்தான்!

தாய்மரத்தின் கிளையில் இருந்து எடுத்து வெவ்வேற நாடுகளிலும், கோவில்களிலுமா  இப்ப ஆயிரக்கணக்கான  போதிமரங்கள்  உலகமெங்கும் (குளிர் இல்லாத நாடுகளில் ) வளர்ந்துருக்கு! இங்கே இலங்கையிலேயே  ஒரு பத்தாயிரம் இருக்குமோ என்னவோ !!!!
சின்னதும் பெருசுமாத் தங்க அரச மரங்களை(!) புத்தர் சந்நிதியில் அங்கங்கே வச்சுருக்காங்க. எனக்கும் ஆசையா இருந்தது.  வாங்கினேனா?  இல்லையா பின்னே.... ஆனால் இங்கே இல்லை... வேறொரு ஊரில்...  ஒரு குட்டியூண்டுச் செடிதான். ஹிஹி....

மாடியில்  ஒரு ஹாலில் நாலு செல்லங்கள்....   தேமேன்னு தூக்கத்தில்! ம்யூஸியம் காவலாளிகள் போல !
மாடிக்குப்போய்வர அந்தக் கால லிஃப்ட் ஒன்னு சுவாரஸ்யம். கயிறு கட்டி இழுக்கும் பெட்டி அமைப்பு!  ஒரு ஆள் மேலே போக பத்தாள் சேர்ந்து இழுக்கணுமோ!!!!  மரப்பெட்டியே எட்டாள் கனம் இருக்கும் போல!!!
டூரிஸ்டுகளுக்கு மட்டுமே ரெஸ்ட்  ரூம் ! நல்ல சுத்தமாக வச்சுருக்காங்க.  பொதுவாப் பயணங்களில்  குறிப்பா இந்தியப் பயணங்களில்  இதை நினைச்சுத்தான்  துக்கம் அதிகம் ஆகும்.  இலங்கை மக்கள் சுத்தம் அனுசரிக்கறாங்கன்றது மகிழ்ச்சி!

இந்தக் கோவிலுக்கு வயசு 120 தானாம்!  1900 களின் இறுதியில்  இலங்கையில் கடல்வாணிகத்தில் கொடிகட்டிப்பறந்த  டி ஸில்வா  ஜெயசூர்யா கூனேவர்தனெ முதலியார் (!) ஒரு கோவில் கட்டன்னு இடம் வாங்கித் தந்தாராம். ரெண்டு சின்ன நீரோடைகளுக்கிடையே உள்ள  நிலம் !
 இதன் பின்புறத்தையொட்டி ஒரு ஏரி இருக்குன்னும் ஏரிக்கு நடுவில்  ஒரு சந்நிதி இருக்குன்னும், அங்கே படகில் போய்ப் பார்க்கறதுக்கும் சேர்த்துத்தான் இந்த டிக்கெட்னு  அப்புறம் தெரியவந்தது..... ப்ச்..... நாம்தான் கோட்டை விட்டுட்டோம். அதுவும் ஒரு நன்மைக்குன்னுதான் நினைக்கிறேன்.
எதாவது விவரம் விட்டுப்போச்சோன்னு இதை எழுதும்போது வலையில் தேடினால்..... அங்கே கங்கா என்னும் பெயருடைய  இளவயசு யானையை அசைய விடாமல் கட்டிப் போட்டுருக்காங்கன்னும் அது அழுதுகிட்டே இருக்குன்னும் 'விக்கிபீடியா' சொல்லுது. ஐயோ.....

ஆமாம்.... அன்பைப் போதித்த (! போதிச்சார் தானே? ) புத்தர் கோவிலில் இப்படி இரக்கமே இல்லாம யானையை வச்சுருப்பாங்களா என்ன?  ப்ச்....

 தொடரும்.......... :-)

10 comments:

said...

அழகான கோவில்.

அடடா.... யானை அழுது கொண்டிருக்கும் காட்சி பற்றி படிக்க மனதில் சங்கடம்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்..

மனசுக்குச் சங்கடமாப் போச்சு..... அதுக்கும் ஒரு கர்மா இருக்கு.... இல்லே? ப்ச்....

said...

எண்ணிலடங்கா புத்தர்கள். போதி மரம். ஒப்புநோக்கிற்காக என் ஆய்விற்காக நான் படித்தபோதுகூட இந்த அளவிலான புத்தர் சிலைகளை ஒரே நேரத்தில் பார்த்ததில்லை. ஆய்வாளன் என்ற நிலையில் மனமார்ந்த நன்றி.

said...

படங்கள் எல்லாம் அருமை . யார் எடுத்தது? ஒரு தொழில் முறை நிழற் படம் எடுப்பவர் (professional photographer)எடுத்தது போல இருக்கிறது.

said...

நான் அங்கிருந்துமே இக்கோவிலை பார்த்ததில்லை. கண்டி தலதா கோவில் பார்த்திருக்கேன். இன்னும் சில இடங்கள் இம்முறைதான் சென்று பார்த்திருக்கேன். சுவாரஸ்யமா எழுதுறீங்க டீச்சர்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

ஒவ்வொரு இடத்திலும் இது பௌத்தநாடுன்னு குறிப்பிடும் வகையில் எங்கே பார்த்தாலும் புத்தர் சிலைகள்தான் ! புத்தமதம் செழித்திருக்கும் மற்ற ஆசிய நாடுகளில் செஞ்ச பயணங்களில் கூட இத்தனை புத்தர்களைப் பார்க்கலை என்பது உண்மை!

கடவுள் விஷயத்தில் இவுங்களுடைய அட்வான்டேஜ்.... ஒரே ஒரு சாமி என்பதே! இதே ஹிந்துக் கடவுளர்கள் சிலைன்னா..... இருக்கும் ஆயிரத்தெட்டு சாமிகளில் யாருக்குன்னு ஆட முடியும் சொல்லுங்க !

said...

வாங்க செந்தில்பிரசாத்,

படங்கள்... ஹிஹி... எல்லாம் பாட்டும் நானே பாவமும் நானே வகைதான். ஒன்வுமன் ஷோ :-)

said...

வாங்க ப்ரியசகி,

உள்ளூர் சமாச்சாரமுன்னா... இப்படித்தான். அப்புறம் ஒருநாள் போகலாமுன்னு நினைச்சே நாட்கள் கடந்து போயிருது....

வெளியூர் ஆட்களுக்கு, இப்போ விட்டுட்டால் அடுத்து எப்போ? என்பதால் ஓடியோடிப் பார்த்துக்கணும் :-)

said...

கருவறை விதானம் ரொம்பவே உயரத்தில். அதுக்கு ஈடு கொடுப்பதைப்போல் நின்றநிலையில் இருக்கும் புத்தர்கள் சுமார் இருபதடி உசரமா இருக்கணும். ஹைய்யோ!!!....எவ்வொலோ புத்தர் சிலைகள் ...பார்க்கவே பிரமிப்பு ...ரொம்ப அழகா இருக்கு எல்லா சிலைகளும் படங்களும் ...


வாவ் ..வாவ் ன்னு ஒரு சத்தம் மனசுக்குள் ..

said...

எத்தனையோ தடவை இப்பக்கத்தால் போய்வந்திருந்தாலும் வெளியே பார்ததுடன்சரி உள்ளே செல்ல இன்னும் நேரம் வரவில்லை.

ரோட்டுக்கு அடுத்துள்ள பெய்ராலேக் சிறிய கோவில் பார்ககவில்லையா? எனது தளத்தில் மூன்பு பகிர்ந்திருக்கிறேன்.