Friday, June 07, 2019

தேவனே............. என்னைப் பாருங்கள்.... (பயணத்தொடர், பகுதி 101 )

சிறகொடிந்த காக்கை ஒன்னு  பரிதாபமா ஒரு கல் மேலே ஏறி உக்கார்ந்துருக்கு. ப்ச்......

சிறகொடிந்த என்னை, நீராவது காப்பாற்றக்கூடாதா ?
ஏ காக்கா.... என் கதியைப் பார்த்துமா இப்படி ஒரு கேள்வி ?
பின்னப்பட்ட ஏசுநாதர்...... இன்னொருபக்கம் நின்னு  புலம்பிக்கிட்டு இருக்கார்.....
கொச்சிக்கடைன்னு இந்த இடத்துக்குப் பெயர். இப்போ நாம்  வந்துருக்கறது அந்தோணியார் கோவிலுக்கு.  ஒரு காலத்தில்  சென்னையில் இருந்தப்ப,  நண்பர்களோடு ஆர்மீனியன் தெருவில் இருக்கும் (ஹைக்கோர்ட் முன்னாலே பாரிஸ் கார்னர்) அந்தோணியார் கோவிலுக்குச் செவ்வாய்க்கிழமைகளில்  (ஆஃபீஸ் லஞ்ச் டைம்) போய் வர்றது பழக்கம். அன்றைக்கு முழுக்க அங்கே தரிசனத்துக்கு வர்றவுங்க எல்லோருமே இந்துக்கள்தான். ஆஞ்சி வால்போல  நீளமாப் போகும் வரிசை. அதென்னமோ அந்தோணியார் மேலே அப்படி ஒரு நம்பிக்கை நம்ம மக்களுக்கு!

அந்த நினைவு சட்னு வந்துச்சுக் கோவிலுக்குள் நுழையும்போதே.....

நுழைவு வாசலிலேயே  கண்ணாடிப்பொட்டிக்குள் அந்தோணியார், குழந்தை ஏசுவைக் கையில் சுமந்தபடி!  நிறைய சின்னச் சின்னச்சிலைகளை ஷோகேஸில் வச்சுருக்காங்க.





உள்ளே  புனித நீர்னு ஒரு கிணறும் தண்ணீர்த்தொட்டியும்.  'அலுத்தணுமாம்'  ஒருமுறை குடிச்சால் வாழ்நாள் எல்லாம் தாகமே எடுக்காதாம்..... எல்லாஞ்சரி. குடிக்கும் தண்ணீர் இருக்கும் இடத்தின் அழகைப் பார்த்தால்....  குடிக்கத்தோணுமோ? எனக்குத் தோணலை....
சரி, வாங்க கோவிலைச் சுத்திப் பார்க்கலாம். அங்கங்கே  சின்னதும் பெரியதுமா அறைகளும் கூடங்களுமா இருக்கு. பாவமன்னிப்பு கேட்கன்னே சில அறைகள்.


முக்கியமான கருவறைக்கு வந்துருந்தோம். ஆல்ட்டர் !





சனக்கூட்டம் கொஞ்சம் இருக்கு. டூரிஸ்ட்டுகளா இருக்கலாம்.  கத்தோலிக் கோவில் என்றபடியால் நம்மைப்போல்  கடவுளர் சிலைகளும்,  சிலைகளுக்குச் சூடிய பூமாலைகளுமா  இருக்கு!





அங்கே இருந்த பெஞ்சில் உக்கார்ந்து ரெண்டு நிமிஷம் சாமி  ஸ்லோகம் சொல்லி (மனசுக்குள்தான்) கும்பிட்டுக்கிட்டேன்.  எல்லா சாமிகளும் ஒன்னுதான்னு இருப்பதால் எனக்கொன்னும் பிரச்சனையே இல்லை.  இங்கே எங்கூர் (க்றைஸ்ட்சர்ச் நகரம்) சர்ச்சுகளிலும் இப்படித்தான் எப்போதும்.  அங்கே  உசரமா இருக்கும்   விதானத்துக்கும் தரைக்குமிடையில் பெருமாளின் விஸ்வரூபம்கூட  கண்ணில் தெரிஞ்சுருக்கு.....




வெளியே ஒரு செவ்வகத்தொட்டியில் தண்ணீர் நிரப்பி வச்சுருக்காங்க.  தாமரைத் தண்டு போல்  மெல்லிசா, நீளமா இருக்கும் மெழுகுவர்த்திகள்  வச்சுருக்காங்க. அதைக் கொளுத்தி, அந்தத் தண்ணீர் தொட்டியில் 'நட்டு' வச்சு (விளக்கேத்தி)கும்பிட்டுக்கலாம். தீ மலர்கள் !

பெரிய அளவிலான கோவில்தான். பழைய கோவிலும் கூட....  கிபி 1806 ஆம் வருஷம் அஸ்திவாரம் போட்டு கிபி 1828 ஆம் வருஷம் திறந்துருக்காங்க.  22 வருஷமா ஆச்சு கட்டி முடிக்க?

டச்சு நாட்டு மன்னர் ஆட்சியில்  இலங்கைத்தீவு இருந்த  சமயம் (1640 - 1796) ஒரு பாதிரியார் யாருக்கும் தெரியாமல் இங்கே வந்து கடற்கரை மணலில் ஒரு சிலுவையை நட்டு கிறிஸ்தவமதத்தை இங்கே ஆரம்பிச்சு வச்சாராம். அப்போ கத்தோலிக்கப்பிரிவு இங்கே தடைசெய்யப்பட்ட காலம்.

கடலோரக்கிராமங்கள் கடல் அரிப்புகளுக்குத் தப்ப முடியாதில்லையா?  அதிலிருந்து  கிராமத்தைக் காப்பாத்த சிலுவையை நட்டதாகவும், கடல் அலைகள் அதுக்குப்பின்  ஒழுங்குமரியாதையா நடந்துக்கிட்டு அந்தப் பகுதியில் கரையை அழிக்காமல் விட்டுட்டதாயும், அதனால் அந்த மீனவர்கள்  மதம் மாறினதாகவும் சர்ச் வரலாறு சொல்லுது.  அப்படியே  இருந்துதான் டச்சு ஆட்சி முடிஞ்சு போன  பத்தாம் வருஷம் கோவில் கட்டும் எண்ணம் வந்து கடக்கால் போட்டுருக்காங்க. அதுக்குள்ளே ப்ரிட்டிஷ்காரன் வந்து ஆட்சியைப் பிடிச்சுட்டான்......

பராமரிப்பு வேலை நடக்குதோ என்னமோ.....   ஆல்ட்டரைத் தவிர மத்த இடங்கள்  ரொம்ப சுமாராத்தான் இருந்தது.
இந்தக் கோவிலில்தான்  ஈஸ்ட்டர் சமயத்தில்  வெடிகுண்டு வச்சு நிறையப்பேர் மரணமுன்னு சேதி பார்த்ததும்.... 'ஐயோ'ன்னு இருந்துச்சு .  நாம் பார்த்த இடம் என்னும்போது மனசு பதறுவது உண்டுதான், இல்லே?  ஹூம்.....
இங்கே நியூஸியில் நம்ம பேட்டையில் இருக்கும் கத்தோலிக் சர்ச்சுக்கு இந்த வெடிகுண்டு சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கான இரங்கல் கூட்டத்துக்குப் போய் வந்தோம்.   இலங்கை கிறிஸ்துவர்கள்  இத்தனை பேர்  இங்கே இருக்காங்கன்னு  தெரிஞ்சதும் அப்போதான்!   அநேகமா எல்லோருமே சிங்களர்கள்தான். தமிழ்க் கிறிஸ்துவரைப் பார்க்கலை.  நமக்கும்  இந்த முப்பத்தியிரண்டு வருஷத்தில் இங்கே போனது இதுவே முதல்முறை !  மேரியும் குழந்தை ஏசுவுமா  சிலை, அழகுதான்!

மதத்தின் பெயரில் சண்டையும் அழிவும், கொலையும் நடப்பது மனசுக்குக் கஷ்டமா இருக்கு.

மனுஷ்யன் மதங்களை ஸ்ருஷ்டிச்சு
மதங்கள் தெய்வங்களை ஸ்ருஷ்டிச்சு
மனுஷ்யனும் மதங்களும் தெய்வங்களும் கூடி...
மண்ணு  பங்கு வச்சு  .....  மனஸு  பங்கு வச்சு.....

(வயலார் ராமவர்மா எழுதிய பாடல்)

தொடரும்.........  :-)


6 comments:

said...

வணக்கம் டீச்சர். நலமா? சற்றே இடைவெளிக்குப் பின் உங்கள் பக்கம் வந்தேன்.

மதத்தின் பெயரால் சண்டை, சச்சரவுகள், அழிவு - கொடுமை. இறைவன் பெயரால் அழிவுகள். நடத்துவது கேடுகெட்ட மனித இனம். என்ன சொல்ல.

நிறைய பதிவுகள் படிக்க வேண்டிய பட்டியலில்..... முடிந்த போது ஒவ்வொன்றாக படிக்கிறேன்.

said...

கொச்சிகடை அந்தோனியார் மிகவும் பிரபலமான சர்ச் சாதிமதமின்றி அனைவரும் தரிசிக்கும் இடம்.

said...

நன்றி

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நானும் உங்க பக்கம் வந்து பின்னூட்டி நாளாச்சு..... அங்கொன்னும் இங்கொன்னுமாக் கண்ணில் பட்டவைகளைப் பார்த்தேன். இனிமேல்தான் வாசிக்கணும்.

said...

வாங்க மாதேவி.

மக்கள் அநேகமா பேதம் பார்க்கிறதில்லை.... மதத்தலைவர்கள்தான் தூண்டி விடறாங்க போல.... :-(

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றிக்கு நன்றி :-)