Showing posts with label christchurch NZ. Show all posts
Showing posts with label christchurch NZ. Show all posts

Monday, April 30, 2012

காலி நாற்காலியின் 'கனம்' Christchurch Earthquake 10

வெறுமையா இருக்கும் காலி நாற்காலிகளைப் பார்க்கும்போது மனசு அப்படியே கனத்துப் போகுது. இந்தக் 'காலி நாற்காலி' 'யை ஆரம்பிச்சுவச்சவர் யாருன்னு கொஞ்சம் துருவனுமேன்னு பார்த்தால் நமக்குக் கூடுதல் வேலையே வைக்கலை, இந்தக் கலைஞர். சார்லஸ் டிக்கன்ஸ் மறைந்த சமயம், அவருடைய கதை ஒன்றுக்குப் படம் வரைஞ்சுக்கிட்டு இருந்த ஓவியக்கலைஞர் Samuel Luke Fildes டிக்கன்ஸ்ஸின் நாற்காலியையும் எழுதும் மேசையையும் எழுத்தாளர் இன்றி தனிச்சு இருக்குன்னு காட்டும் ஓவியம் ஒன்றை ஜூன் 1870 வரைஞ்சார்.
இதை மனசில்வச்ச Van Gogh 1888 ஆண்டு தனித்தனியா ரெண்டு காலி நாற்காலிகளை வரைஞ்சு, அது இப்போ நேஷனல் ம்யூஸியத்திலே காட்சிக்கு இருக்கு.

இருந்த ஆள்,  இல்லாமப் போகும்போது அவர் விட்டுப்போன இடம்,  இட்டு நிரப்பவே முடியாத நிலையில் காலியா நிக்கும்போது மனசு வலிக்கத்தான் செய்யுதில்லையா? போன வருசம் ரெட்டை கோபுரத்தாக்குதல் நடந்து பத்து வருசங்கள் ஆனதையும், அதுலே உயிரிழந்த 2753 மக்கள் நினைவாகவும் Bryant Park நியூயார்க்கில் காலி நாற்காலிகளை வச்சு அஞ்சலி செலுத்துனாங்க. எல்லாம் ஒன்னுபோல இருக்கும் நாற்காலிகளின் வரிசை!
போலந்து நாட்டில் நடந்த யூதர் இன அழிப்பை நினைவு கூறவும், அமெரிக்கா Oklahoma city குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கும் இதுபோல நினைவுச்சின்னங்கள் வச்சு அஞ்சலி செலுத்தினாங்க. சுற்றுலாப்பயணிகள் அங்கே போகும்போது தவறாமல் பார்க்கும் இடங்களில் இவைகளும் முக்கிய இடத்தைப்பிடிச்சதென்னவோ உண்மை.


 போன வாரம் ஏப்ரல் 25 எங்களுடைய 'கொடி நாள்' இந்தப் பக்கங்களில் இதை ஆன்ஸாக் டே ANZAC DAY ( Australian and New Zealand Army Corps.) என்று Gallipoli என்ற இடத்தில் எதிரிகளால் அழிக்கப்பட்ட வீரர்களுக்கு அஞ்சலி என்று சொல்லி ஆரம்பிச்சு, இப்போது உலகப்போர்களிலும், மற்ற போர்களிலும் போராடி உயிர்துறந்த வீரர்களை நினைவு கூறும்நாள். அரசுவிடுமுறை தினம்.
எங்க வார்மெமோரியல் இருக்குமிடம்(மேலே உள்ள படம்) சமீபத்திய நிலநடுக்க அழிவுகளில் சிக்கிக்கொண்டதால் தாற்காலிகமா வேறொரு இடத்தில் அஞ்சலிக்கு ஏற்பாடு செஞ்சாங்க. விடுமுறை தினமாச்சேன்னு நிதானமாக் கிளம்பிப்போனால்.... சர்வீஸ் நடந்த இடத்தைக் கழுவிக் காயவச்சதுபோல் எல்லாம் சுத்தம். நகரின் மையப்பகுதியிலும் சுற்றிவர அக்கம்பக்கங்களிலும் நிலநடுக்க அழிவுகளை அப்புறப்படுத்தி சீராக்கும் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. எப்பப்போனாலும் ( anyone given time) அழிவுகளைப் பார்க்க, கண்ணீர் வடிக்க, புனரமைப்பு வேலைகளை வேடிக்கை பார்க்கன்னு ஒரு கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கும். (நாலுபேருக்கு மேல் போனால் கூட்டம் என்று கொள்க) நாமும் அந்த ஜோதியில் கலந்தோம்.
 " ஒன்னும்தான் இல்லைன்னாலும் ஆட்கள் என்னத்துக்கு சிட்டிபக்கம் வர்றாங்க? " 

 "மனசு கேக்காமதான். இது நம்மூர் என்ற பாசமும், என்ன ஆச்சோன்ற பதைப்பும்தான். இப்ப நீ வரலையா?"

 போக்குவரத்துக்கு மூடிவச்சுருந்த மதராஸ் தெருவைத் திறந்துட்டாங்கன்னு உள்ளூர் தினசரியில் சேதி. அங்கே போய்வரலாமுன்னு போனால் கம்பீரமா நிற்கும் சர்ச்சைக் காணோம்! இடிஞ்சு போயிருச்சாம்!

நம்மூர்லே முக்குக்கு முக்கு இருக்கும் புள்ளையார் கோவில்களைப் போலத்தான் இந்த ஊரில் சர்ச்சுகள். நிலநடுக்கத்துலே எத்தனை இடிஞ்சுபோச்சுன்னு எண்ணுறதைவிட எத்தனை பொழைச்சுருக்குன்னு எண்ணுவது சுலபம். உருப்படியா நிற்பது ரெண்டோ மூணோதான். அதுவும் சமீபத்து மாடர்ன் கட்டிடங்கள். அங்கேயும் சின்ன விள்ளல் விரிசல்ன்னு ..... ஹூம்.... எதுவுமே தப்பிக்கலை:(

எண்ணி நாப்பதே விநாடிகளில் ஊரின் தலைவிதி மாறியே போச்சு என்பதுதான் நிஜம்.

 இந்த இடத்தில் இருந்த பாப்டிஸ்ட் சர்ச் இந்த நகரத்தைவிட 13 வயசு சின்னது. 1863 ஆம் ஆண்டு வழிபாட்டுக்கான சபை ஒன்னு வேணுமுன்னு தீர்மானிச்சு அதுக்கடுத்த ஆண்டு நகரின் வேறொரு பகுதியில் மரக்கட்டைகளைக் கொண்டு கட்டப்பட்டது. 1870 வது ஆண்டு சின்னதா வேறொன்னு கட்டிக்கிட்டாங்க. வழிபாட்டுக்கு வரும் மக்கள்தொகை பெருக்கத்தை அனுசரிச்சு 1881 வது ஆண்டு லண்டனில் இருக்கும் பாப்டிஸ்ட் சர்ச் டிஸைனையொட்டி, இங்கே முகப்பில் பிரமாண்டமான தூண்களோடு கட்டி முடிச்சு நகரத்துக்கே ஒரு அலங்காரமா விளங்குச்சு. மகளின் பள்ளிக்கூட வாழ்வில் பாட்டுப்பயிற்சி, பாட்டுப்போட்டின்னு பலமுறை இங்கே கூட்டிவந்துருக்கோம்.

 அக்கம்பக்கம் இருக்கும் பல நல்லவிஷயங்களை அவைகள் இருக்கும்போதே பாராட்டி அனுபவிக்க மனசுக்குத் தெரியலை பாருங்க. எல்லாத்தையும் taken for granted கதைதான்:( 





போனவருசத்துக்கு முந்தின (செப் 4, 2010) நிலநடுக்கத்தில் இந்த சர்ச் கொஞ்சம் பாதிக்கப்பட்டுச்சுன்னாலும் ஆறு மாசம் கழிச்சு ஏற்பட்ட (ஃபிப்ரவரி 22 2011) நிலநடுக்கத்தில் உள்ளே அப்படியே இடிஞ்சு விழுந்துருச்சு. அடுத்தவருசம் 150 வது வருசக்கொண்டாட்டம் நடத்தணுமுன்னு தீர்மானிச்ச சமயம் இப்படி ஒரு இடி! இந்த நிலையிலும் இங்கே இருந்த சர்ச்சுக்கு என்ன ஆச்சோன்னு தவிக்கும் மக்களுக்காக படங்களுடன் ஒரு தகவல் பலகையை சர்ச்சு நிர்வாகம் வச்சுருப்பதைப் பாராட்டத்தான் வேணும்.
 உள்ளூர் கலைஞர் Pete Majendie இந்த சர்ச் இருந்த(!!!) இடத்துலேயே ஒரு நினைவுச்சின்னம் வைக்க அனுமதி வாங்கினார். 185 உயிர்களின் இழப்புக்கு முன்னால் மற்ற எதுக்குமே முக்கியம் இல்லைன்னு ஆகிப்போச்சு. 120 இருக்கைகளை ட்ரேட் மீ என்ற ஆன்லைன் சந்தையில் வாங்கினார். . உள்ளூர் மக்களும் இங்கே உள்ள ஒரு இருக்கைகள் மட்டுமே விற்கும் கடையும் சிலபல இருக்கைகளைத் தானமாக் கொடுத்தாங்க. ஒருத்தர் தன்னுடைய சக்கரநாற்காலியைக்கூடக் கொடுத்தார்.
 நாலைஞ்சு தன்னார்வலர்களின் துணையுடன் இருக்கைகளை வரிசையில் ஒழுங்குபடுத்தி வெள்ளை நிறப் பெயிண்ட் அடிச்சுருக்கார். வெள்ளை என்பதே பரிசுத்தத்தின் அடையாளம் அல்லவா!!!!
மணிகூண்டு இருக்கைகளைப் பார்த்தபடி மௌனசாட்சியா எதிர்சாரியில் நிற்கும் இடிஞ்சுபோன மணிக்கூண்டு. சம்பவம் நடந்த நேரத்தை 12.51 என்று துல்லியமாக் காட்டியபடி நிக்குது. சின்னதா ஒரு அமைப்பில் பிரார்த்தனை ஒன்னு ஒட்டி வச்சுருக்காங்க. கூடவே இந்த நினைவு அஞ்சலிக்கான விளக்கமும். ஒரு மேசையில் பின்னூட்டமிட நோட்டுப்புத்தகமும் பேனாவும் வச்சுருந்தாங்க. நாலுவரி எழுதிட்டுத்தான் வந்தேன். எந்த இருக்கையில் வேண்டுமானாலும் உக்காரலாம் என்ற அறிவிப்பு வேற! அநியாயமாப்போன உயிர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்திக்கலாம். பிரார்த்திச்சேன்.
 உயிரிழந்த அப்பாவிகள் வாழ்க்கையின் பல பருவங்களில்/நிலைகளில் இருந்தவர்கள். வேலையில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் முதல் அஞ்சு வாரக் குழந்தைவரை. பலநாடுகள் பல வயதுகள்...... எத்தனை வகை இருக்கைகள்!!! லெதர் சோஃபா, Bean Bag, கம்ப்யூட்டர் சேர்ஸ், பியானோ ஸ்டூல், மூங்கில் ஆசனங்கள், மர நாற்காலிகள் இப்படி எத்தனையெத்தனை வகை!!! கைக்குழந்தையைக் கொண்டுபோகும் பேபி ஸீட் கண்ணில் பட்டதும், மனம் கதறியழுதது:(

Monday, April 23, 2012

அமாவாசையா, இல்லே பவுர்ணமியா?

ஒரு மனுசிக்கு இப்படியெல்லாம் சந்தேகம் வந்துருச்சே:( பவுர்ணமிக்குப் பிறந்தார். பவுர்ணமிக்கு ஞானம் பெற்றார், பவுர்ணமிக்கு நிர்வாணம் அடைஞ்சார். பவுர்ணமிக்கு உடலைத் துறந்தார் என்றெல்லாம் பள்ளிக்கூட நாட்களில் படிச்ச ஞாபகம் இருக்கு. மேலும் வைகாசி விசாகம் (பொதுவா இந்த நட்சத்திரத்துலேதான் வைகாசி மாசப் பவுர்ணமி இருக்கும்! ஐயம் உள்ளவர்கள் தமிழக முதலமைச்சரின் சமீபத்திய விளக்கம் பார்க்கவும்) நாளன்றுதான் புத்த பூர்ணிமான்னு கொண்டாடுவாங்க.

இங்கே என்னன்னா...... சித்திரை அமாவாசையில் பொறந்தநாள் கொண்டாட்டம்!!!! எங்கூர்லே International Buddhist Association ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்னால் புத்தர் கோவில் ஒன்னு கட்டுனாங்க. நாம் பொதுவாப் பார்க்கும் பகோடா (தின்னும் பொருள் இல்லை கேட்டோ!)கோபுரம் எல்லாம் இல்லை. ரொம்ப நவநாகரிகமான மாடர்ன் பில்டிங். அப்பதான் க்ரீன் கான்ஸப்ட் Eco ஒன்னு பரவலா அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சமயம் உள்ளூர் கட்டிடவடிவமைப்புக் கம்பெனி இதுலே ஆர்வம் காமிச்சு டிஸைன் போட்டுக்கொடுத்தாங்க. சூரிய சக்தி மின்சாரத்தால், கோவிலுக்குள்ளே சீரான வெப்பநிலை, செடிகொடிகள், இயற்கையான வெளிச்சம், ஜன்னல்கள்ன்னு இல்லாமலேயே வெளிப்புறக்காட்சிகள் தெரியும்விதமா வெளிக்கட்டிட அமைப்புன்னு புதுமாதிரியா இருந்துச்சு. 

படம்: சாமிக்கு எதிரில் தெரியும் மலை வ்யூ

 'கதவைத் திற.......... மலைகள் தெரியும் ' 'என்று ஒரு சீனப்பழஞ்சொல் இருக்காமே! அதையொட்டிய மாதிரி புத்தர் கண்ணைத் திறந்தால் மலையைப் பார்க்கும்விதமா மாடியில் கோவில், கீழ்தளத்தில் வெஜிடேரியன் உணவுக்கடை, அவர்கள் மத சம்பந்தமான படிப்பு, தியானம் எல்லாம் சொல்லிக்கொடுக்கும் வகுப்பு நடத்த இடம், சின்னதா ஒரு ஆர்ட் கேலரி, சாமி சமச்சாரம் விற்கும் கடைன்னு.... நடுவில் ஒரு சின்னப்புல்வெளின்னு இருந்துச்சு. நம்மூர்க்கோவில், நாம் போகலைன்னா எப்படின்னு திறப்பு விழா சமயம் போய் சேவிச்சுட்டு வந்தோம். மேடையில் பிரமாண்டமா(!!) ஒரு புத்தர் சிலை மட்டுமே இருந்துச்சு. போர்ஸலீன் சிலையோன்னு தோணும்படி இருக்கேன்னு விசாரிச்சதில் வெண் பளிங்குன்னு சொன்னாங்க. தரையில் உக்கார்ன்து பிரார்த்தனை செய்ய வரிசையா மணைக்கட்டைகள், புத்தகம் வச்சுக்க மடக்குப் பலகைன்னு ஹாலில் சிம்பிளா வரிசைகள். அதுக்குப்பிறகு வாரம் நாலுமுறையாவது கோவிலைத்தாண்டி போறோம்வாரோமே தவிர உள்ளே போய்க் கும்பிட வேளை வரலை. நமக்குதான் ஹரே க்ருஷ்ணா இருந்துச்சே! ஒரு நாள் போகணுமுன்னு நினைச்சுக்கிட்டே அஞ்சு வருசத்தை ஓட்டிட்டேன். 

புத்தருக்கு பர்த்டே கொண்டாட்டமுன்னு உள்ளூர் (இலவச)பத்திரிகை சேதி. மகளுடைய லேப்டாப் மண்டையைப் போட்டதால் புதுசு ஒன்னு வாங்க வேண்டிய நெருக்கடி. மாலுக்குப்போய் மூணு கடைகளிலும் மாறிமாறிப் படையெடுத்துக் கடைசியில் ஸோனி ஒன்னு 25 சதம் கழிவில் கிடைச்சது. மகளை வீட்டில் கொண்டுபோய் விட்டுட்டு நாங்க கோவிலுக்குள் நுழையும்போது கொண்டாட்டம் முடிஞ்சு கூடாரங்களைக் கழற்றி எடுத்துக்கிட்டு இருந்தாங்க. போயிட்டுப்போகுது..... பர்த்டே பாய் இருப்பாரேன்னு உட்புற முற்றத்தைக் கடந்தால்.... அங்கே நின்ற திருக்கோலத்தில் புதுசா ஒரு புத்தர் சிலையும் ரெண்டு பக்கமும் சுத்தம் வலியுறுத்தும் சேவை செய்யும் குட்டிகளின் சிற்பங்களும். ஒன்னு துடைப்பம் வச்சுப் பெருக்குது. இன்னொன்னு கிணற்றில் தண்ணீர் இறைக்குது. மனம் நிறைஞ்ச அமைதியுடன் முகங்கள் கொள்ளை அழகு!
வெளிமுற்றம்


கட்டிடத்துக்குள்ளே நுழைஞ்சதும் (நாம் கார்ப்பார்க்கில் இருந்து புழக்கடை வழியில் உள்ளே போய்க்கிட்டு இருக்கோம்) இடப்பக்கம் ஒரு வெஜிடேரியன் உணவிவிடுதி. வலதுபக்கம் நினைவுப்பொருட்களும் சாமிப்பொருட்களும் விற்கும் கடை.
கடை
மாடிப்படியேறி கோவில் கருவறைக்குள் போறோம். சிரித்த முகத்துடன் வரவேற்று கையில் ஊதுவத்திக் குச்சியைக் கொடுத்தார் கோவில் தன்னார்வலர்களில் ஒருவர். நமக்கு இங்கே ஏகாந்த ஸேவைக்கு விதிச்சிருக்கு! ஆஹா...... எரியும் விளக்கில் ஊதுபத்தியைக் கொளுத்தி அங்கே அதுக்குன்னு வச்சுருக்கும் உருளியில் குத்தி வைக்கணும். வச்சோம். கருவறை அலங்காரங்கள் எல்லாம் சமீபத்துலே மாற்றி அமைச்சுருக்காங்க. முந்தி பெரூசா இருந்த புத்தர் இப்போ மீடியம் சைஸுலே இருக்கார். அதே சிலையா இல்லை புதுசான்னா..... அதே தானாம். எப்படி இளைச்சாராம்? நான் ஊதியதால் என் கண்ணுக்கு அவர் இளைச்சுட்டார்ன்னு கோபால் சொல்றார்!!!

சந்நிதி
முந்தி வெறும் சிலை மட்டும்தான். இப்போதான் பரிவாரதேவதைகளும் எக்ஸ்ட்ரா அலங்காரங்களுமா நிறைஞ்சு இருக்குன்றார்.

சந்நிதிக்கு இரண்டு புறமும் ஒரு உருளி போன்ற பாத்திரத்தில் குழந்தை புத்தர் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற ஸ்டைலில் வலக்கையை உயர்த்தி ஆள்காட்டிவிரல் காமிக்கிறார். இவருக்கு நாமே அபிஷேகம் செய்யலாம். என்ன முறை என்பதை விளக்கமா எழுதி வச்சுருக்காங்க. முதலில் சாஷ்டாங்கமா விழுந்து வணங்கிட்டு சிலைக்கு எதிரில் இருக்கும் சின்ன இருக்கையில் முழந்தாளிட்டு, உருளியில் இருக்கும் புனித நீரை அதுலேயே இருக்கும் குட்டி அகப்பையால் கோரி புத்தரின் இடது தோளில் வார்க்கணும். முதல்லே இடது பக்கம். அப்புறம்தான் வலது பக்கம். தலையில் தண்ணீர் ஊத்தக்கூடாது. கைக்கூப்பி கும்பிட்டு உங்கள் வேண்டுதலை மனசில் சொல்லிக்கணும். ( இதைத்தான் மறந்துட்டேன்) அப்புறம் எழுந்து நின்னு, இடுப்புவரை குனிஞ்சு ஒரு கும்பிடு.
புத்தர் க்ளோஸ் அப்

பெர்ஸிமோம் பழ டிஸைனில் வரிசையா விளக்குகள் எரியுது. பூக்களும் பழங்களுமா அலங்காரம். பத்மாஸனத்தில் அமர்ந்து கண்களைப் பாதித் திறந்த நிலையில் அருள் பொங்க நம்மைப் பார்க்கும் திருமுகம். பளபளன்னு ஒரு ஜொலிப்பு. அவருக்கு வலது பக்கம் இருக்கும் பரிவார தேவதை யாருன்னு தெரியலை:( கோவில் ஆளிடம் கேட்டதுக்கு அவர் இப்பதான் வகுப்புகளுக்குப்போய் படிச்சுக்கிட்டு இருக்காராம். எங்க டீச்சரைக்கேளுங்கன்னு டீச்சரை முன்னால் கொண்டுவந்து நிறுத்தினார். அவருக்கும் தெரியாது போல! அந்த மாதிரி முழிச்சுக்கிட்டே காவலாளின்னார். நல்லவேளை கூர்க்கான்னு சொல்லலை!


 'ஆக்லாந்து நகரில் இதே கோவில் ஒன்னு இருக்கு. நான் அங்கேதான் கோவிலில் சேவை செஞ்சுக்கிட்டு இருக்கேன். அங்கே பெரிய சிலை. இந்தப் பொறந்தநாள் கொண்டாட்டத்துக்குக்காக இன்னிக்கு இங்கே வந்தேன்' ன்னு சொன்னார். நீங்க எந்த நாடுன்னார்? ஆஹா..... ' 'ஐ ஆம் ஃப்ரம் தெ லேண்ட் ஆஃப் புத்தா 'ன்னேன். கிடைச்ச கேப்பில் கெடா வெட்டிட்டம்லெ:-))))) 


எங்கூர் புத்தரை இப்படி நீங்க எல்லோரும் கொண்டாடுவது மகிழ்ச்சியா இருக்குன்னுட்டு, ஆமாம்..... புத்தர் பவுர்ணமிக்காரராச்சே.... எப்படி இன்னிக்கு சித்திரை மாச அமாவாசைக்குப் பொறந்தநாள் கொண்டாடுறீங்கன்னேன். (சித்திரா பவுர்ணமின்னாக்கூட மனசு கொஞ்சம் சமாதானமாகி இருக்கும் இல்லே?) ஆக்ச்சுவல்லி அடுத்த சனிதான் புத்தர் பொறந்தார். (ஙே!) அடுத்தவாரம் ஆக்லாந்து கோவிலில் கொண்டாட்டம் வச்சுருக்கோம். எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் மாலை 7 முதல் 8.30வரை  'தர்மா' ' என்னும் விசேஷ பூஜை நடக்கும்.. வாங்கன்னார். தைய்வான் மக்கள் நடத்தும் புத்தர் கோவில் இது. அப்ப இங்கே தாய்லாந்து மக்கள் நடத்தும் புத்தர் கோவிலில் என்னைக்கு விசேஷமாம்? அப்படி ஒரு கோவில் இருக்கா? தெரியவே தெர்யாதுன்னார்!!!!! ஆமாம். பதிவுலகத்துக்குக்கூடத் தெரியாது. இன்னும் எழுதலை:(

மாடியில் ஜாடிகள் எல்லாம் வச்சு அழகுபடுத்தி இருக்காங்க. போனவாரம் வந்துருந்தால் கோடுபோட்ட ரோடுக்கு அருமையான படம் கிடைச்சிருக்கும்.
களிமண் பழங்கள்

களிமண் பூச்சாடி

இந்த ZEN வாழ்வின் எல்லாத்தருணத்திலும் கலைகளிலும் இருக்குன்னு சொல்றதைப்போல களிமண் வச்சுக் கலைப்பொருட்கள் செய்யும் ஆர்ட் ஸ்டூடியோ நடத்தும் சீனர் Yi Ming ( எலக்ட்ரானிக் எஞ்சிநீயர்) கொஞ்சம் பழங்களையும் பூக்களையும் டிஸ்ப்ளே செஞ்சுருக்கார். பூச்சாடி அலங்காரம் எட்டு நூறாம்!!!! மண்ணைப் பொன்னாக்கும் வித்தை தெரிஞ்சவர்!!!!
 அமைதியா இரு  என்றார் புத்த சந்நியாசி








ஆர்ட்
கீழ்தளத்தில் ஆர்ட் கேலரியில் பெயிண்டிங் எக்ஸிபிஷன் நடக்குது. ஸென் பெய்ண்டிங்! நாம் ZEN ஸென் ஸென் என்று சொல்றோமே அந்தச் சொல் சீன மொழியில் ச்சன் CHAN என்று உச்சரிப்பாம்.ஸென் கதைகள் கொஞ்சம் அங்கே இங்கேன்னு வாசிச்சு இருக்கேனே தவிர சித்திரங்கள் பார்த்ததில்லை. கதைகளைப்போலவே ரொம்ப சிம்பிளா இருக்குன்னாலும் சொல்லும் விஷயங்களில் ஆழம் அதிகம் இருக்கும் போல! ஆர்ட்டிஸ்ட் , ஒரு சித்திரத்தைக் காட்டி அஞ்சு நிமிசம் விடாம விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தார் இன்னொரு சீனப்பெண்மணிக்கு!!!! என்னைப்போல இருக்கும் ஞானசூனியங்களுக்காக சித்திரத்தின் அருகில் ஒரு ஆங்கிலத் தலைப்பு! இந்தப் பெயிண்டிங் 'டிவோட்டட் ஃபாலோவர்ஸ்'



சித்திரக்காரர் பெயர் ( Kim Hoa Tram) கிம் ஹோ ட்ராம். அண்டை நாடான அஸ்ட்ராலியா, மெல்பெர்ண் நகரத்தில் இருந்து வந்துருக்கார். எழுதப் போறேன்னதும் (!!!!) படம் எடுத்துக்க அனுமதி கொடுத்ததோடு, அவரைப்பற்றிய சுருக்கமான விவரத்தையும் தந்தார். எனக்கும் அந்தக் கட்டுரையை அனுப்பமுடியுமான்னார். நோ ஒர்ரீஸ். எழுத்தெல்லாம் எங்க மொழியில் இருக்கும். அதில் உங்க படங்களை நீங்க பார்த்துக்கலாம். மெயில் ஐடி கொடுங்கன்னு வாங்கி வச்சுக்கிட்டேன்.
கிம்
மறக்காம அவருக்கு லிங்கு அனுப்பிவிடணும்:-))))
படம் 1





படம் 2



படம் 3


சமீபகாலமா ஸென் புத்தமதம் உலகிலே ரொம்பவே பரவிவருதுபோல! அதைப்பற்றித் தெரிஞ்சுக்கிட்டு ஆழ்ந்த தியான நிலைக்குப்போய் ஆன்மீகவாதியா மாற நமக்கு வேளை வரலை!!!!

ஒரு படத்துலே நம்ம கப்பு மரத்துமேலே உக்கார்ந்துருக்கு!!!!! 

 ரி. எல்லாம் இருக்கட்டும். புத்தர் எப்பத்தாம்ப்பா பொறந்தார்?????

Tuesday, January 20, 2009

குப்பைத் தொட்டி வைக்கலேன்னா...... இப்படித்தான்.

ரெண்டுவிதமான கருத்துகள் (இப்போதைக்கு) இருக்கு இந்தக் குப்பை விவகாரத்துலே. குப்பைத் தொட்டின்னு ஒன்னு வச்சால் அதுலே குப்பை போடுவோம். வைக்கலைன்னா? கண்ட இடத்தில் குப்பைகளை வீசி எறிஞ்சுட்டுப் போவோம். (குப்பைத் தொட்டி வச்சாலும் அதுலே போடாமல் கண்ட இடத்துலே போடும் 'மாக்கள்' இந்தக் கணக்கில் இல்லை(-: யாராலே முடியுது, பத்தடி நடந்து போய்க் குப்பைத்தொட்டியில் போட! )

மூணாவது கருத்து.........குப்பைத் தொட்டி வச்சால் அதுலே குப்பையைப் போடுவோம். இல்லேன்னா எங்க குப்பைகளை நாங்களே கையோடு எடுத்துக்கிட்டுப்போய் எங்க வீட்டுக் குப்பையில் சேர்த்துருவோம். இது எப்படி இருக்கு?

பகல் சாப்பாடு ஆனதும் நார்த்லேண்ட் மால் வரை போகலாமுன்னு கிளம்புனோம். நகரின் அடுத்த கோடியில் இருக்கு. லீவு காலத்தை வீட்டுக்குள்ளேயே ஓட்டலாமா? ஆன்னா ஊன்னா 'மால் டெவெலெப்மெண்ட்'ன்னு உள் & வெளி அமைப்புகளை மாத்தி மாத்திக் கட்டிக்கிட்டே இருக்காங்களே. எப்பப் போனாலும் புதுமைதான். அக்கம்பக்கம் இருக்கும் கடைகளையெல்லாம் வளைச்சுப்போட்டு அந்த ஏரியாவிலேயே பெரியமால்னு நமக்குக் காட்டிக்கிட்டு இருந்தாங்க. அடப்போய்யா..... எப்படின்னாலும் எங்க ரிக்கர்ட்டன் மாலை அடிச்சுக்க முடியாது. தெற்குத் தீவிலேயே பெரூஊஊஊஊஊசு எங்களுது.


முட்டாய்க் கடை ஒன்னு புதுசா வந்துருக்கு. கண் எதிரில், கண்ணாடித் தடுப்புக்குப் பின்னே முட்டாய் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஒரு முட்டாய் 135 டாலராம். எப்படிப் புடிச்சுத் தின்னணுமுன்னு தெரியாததால் வாங்கிக்கலை:-))))கிறிஸ்மஸ் அலங்காரங்கள் எல்லாம் இன்னும் ஒரு 10 நாள் வரை அப்படியே இருக்கும். அழகா அலங்கரிச்சு இருந்தாங்க. எல்லா மால்களிலும் சாண்ட்டாவுக்கு ஒரு இடம். அழகான நாற்காலியில் சேண்ட்டா குறிப்பிட்ட நேரங்களில் வந்து அமர்ந்துருப்பார். பிள்ளையும் குட்டிகளுமா வரும் மக்கள் சேண்ட்டாவுடன் படம் புடிச்சுக்கலாம். இதுக்குன்னே ஒரு ஃபோட்டோக்ராஃபர் எல்லா முஸ்தீபுகளும் செஞ்சுவச்சுக்கிட்டு தயாரா இருப்பாங்க. சில குழந்தைகள் அழுது அமர்க்களப்படுத்திரும். அவ்ளோ பெரிய தாடியைப் பார்த்துப் பயந்துரும்போல. எத்தனை காப்பி வேணுமோ அதுக்குண்டான காசைக் கட்டிட்டு வாங்கிக்கலாம். உற்றார் உறவினருக்கு அனுப்பணுமே.
நம்ம வீட்டு சேண்ட்டா:-)

இதுலேகூட எங்க வீட்டுக்கிட்டே இருக்கும் ஒரு ஷாப்பிங் செண்டர் தாராளமனசோடு ஒரு குடும்பத்துக்கு ஒரு படம் இலவசம் ன்னு விளம்பரம் கூடச் செஞ்சாங்க. அப்படியாவது ஆள் வருதான்னு பார்க்கறாங்க.

நார்த் லேண்ட் மாலின் சுற்றுப்புறக் கடைகள் ஒன்னில் ரொம்ப நாளாப் பார்த்துவச்ச (வேற ஒரு இடத்தில்) சக்கூலண்ட் அரைவிலையில் கிடைச்சது. கடைகளைப் பொறுத்தவரை எல்லாமே செயின் ஸ்டோர்ஸ்.
புத்தருக்கு முன்னால் வச்சால் அம்சமா இருக்கும். ஆனால் கொளுத்தமாட்டேன். இன்னிக்குன்னு பார்த்து அரைவிலை. புத்தர் அதிர்ஷ்டம் செஞ்சவர். (புத்தர் இதைவிட மலிவு)
என்ன இது வெய்யில், இந்தப் போடு போடுது இன்னிக்கு. பேசாம க்ரோய்ன்ஸ் பார்க் போகலாம். இங்கிருந்து 10 நிமிஷ ட்ரைவ்தான். இதுவும் நம்ம சிட்டிக் கவுன்ஸில் பராமரிக்கும் தோட்டம்தான். குப்பைகள் இல்லாத குடும்பப் பார்க். Litter free zone!!!! அங்கங்கே பார்பெக்யூ செஞ்சுக்க கேஸ் அடுப்புகள் வச்சுருக்காங்க. காசு போட்டால் அடுப்பெரியும். அவுங்கவுங்க, சுட்டுக்கிட்டுச் சுத்தம் பண்ணிட்டால் வேலை ஆச்சு. எங்கேயும் குப்பைத் தொட்டிகள் இல்லை. அவரவர் குப்பைகளை அவரவர் கையோடு எடுத்துக்கிட்டுப் போயிறணும்.

அங்கங்கே குப்பைத் தொட்டிகள் வச்சு அதுக்கு ப்ளாஸ்டிக் பை மாட்டி அப்பப்போ சுத்தம் செஞ்சு, இதுகள் சுத்தத்தைப் பராமரிக்கன்னு ஆள் போட்டு, அவருக்கு சம்பளம் அது இதுன்னு ஆகும் செலவைச் சரிக்கட்ட மக்கள் வரிப்பணத்தைச் செலவு செஞ்சுன்னு......இப்படி ஒன்னுபின்னாலே ஒன்னுன்னு தொடர்ந்துக்கிட்டு இருக்கு பாருங்க. இந்தக் குப்பையில்லாத் திட்டத்தை ஒரு பரிசோதனைக்காகன்னு ஆரம்பிச்சு இப்போ முழு இடமும் பளிச்ன்னு இருக்கு.

மொத்தம் 93 ஹெக்டேர் இடத்தைக் கொண்டிருக்கும் இந்தத் தோட்டத்துலே நாய்களுக்கான தனிப் பகுதி ஒன்னு இருக்கு. நாய்களுக்கு தினசரி உடற்பயிற்சி செஞ்சுக்கச் சரியான இடம். முழுசும் வேலிகள் போட்டு, நாய்களும், அவுங்க உடமையாளர்களும் கவலையில்லாமல் வந்து பொழுது போக்கிட்டுப் போகலாம். இங்கே குப்பைத் தொட்டி வசதிகள் செஞ்சு வச்சுருக்காங்க. நாய்களின் மானிடத் தோழர்கள் Dog doo bag கையோடு கொண்டுவந்து அவுங்கவுங்க நாய்த் தோழர்களின் 'வஸ்து'க்களை வாரி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுறணும். மனுசங்களை நல்லாப் பழக்கிவச்சுருக்கோம். (இங்கே மட்டுமில்லை பொதுவா நாய்களைத் தெருக்களில் நடக்கக் கொண்டுபோகும்போதும், கடற்கரைக்கு விளையாடக் கொண்டுபோனாலும் கடைப்பிடிக்கவேண்டிய முறை இது)

தொங்கு பாலம் ஒன்னு கம்பிவலைகளால் அமைச்சுருக்காங்க. இங்கே கறுப்பு அன்னப் பறவைக் குடும்பம் ஒன்னு இருக்குமேன்னு தேடுனேன். காணோம். பாலத்துக்கு இந்தப் பக்கம் பசங் (ஒருமை) தண்ணீரில் குதிச்சு விளையாடிக்கிட்டு இருக்காங்க. அந்தப் பக்கம் தெளிஞ்சு கிடக்கும் தண்ணீரில் வாத்துக் குடும்பங்கள். ஒரு பாப்பா மட்டும் அம்மாகூடவே வந்து அஞ்சு நிமிசத்துக்கு, ஒருமுறை தண்ணிக்குள்ளே முங்கி இரைதேடும் பயிற்சி எடுத்துக்கிட்டு இருந்துச்சு. பாலம் கட்ட வலை பின்னுவதில் உதவி செஞ்சவுங்க உள்ளூர் உயர்நிலைப்பள்ளி மாணவமணிகள். மகள் படிச்ச பள்ளிக்கூடம்.




கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி போல, இங்கே வாத்து போல மாறு வேஷம் போட்டுக்கிட்டு ஒரு பறவை. கொண்டையை மறைக்கத் தெரியலை பாருங்க:-))))



பாலத்துக்கு அந்தப் பக்கம் படகுச் சவாரி. ( நம்ம முட்டுக்காடு ?)
வலது கைப்பக்கம் இருக்கும் ஒத்தையடிப் பாதையில் காட்டுக்குள்ளே போனால் 'ஜோ'ன்னு தண்ணீர் விழும் குட்டி அணை. Groyne ன்னு சொல்லும் காங்க்ரீட் தடுப்புச்சுவர் வச்சுருப்பதாலே இந்த இடத்துக்கும் Groynes Park ன்னு பெயர் வந்தாச்சு. (நம்ம வடுவூரார் சுவர் விளக்கம் தருவார் என நம்புகின்றேன்) வைமாக்காரிரி(Waimaakariri River) ஆத்துத் தண்ணி ஓடையா இங்கே வந்து சேருது. சூடுதாங்காம தண்ணீர் திரைக்குப் பின்னால் உக்கார்ந்துருக்காங்க மக்கள். ப்ரிட்டிஷ்காரங்கன்னு 'பேச்சு' சொல்லுச்சு.



ஒருக்கால் குளிக்கலாமுன்னு இருக்காரோ?


அணையில் இருந்து வழியும் தண்ணீர் சின்ன ஆறா ஓடிக்கிட்டு இருக்கும் இயற்கை அழகை எல்லாம் கெமெராவில் புடிச்சுக்கிட்டு, ஒரு சுத்து சுத்திவந்துப் படகுத் துறைக்கு எதிரில் மரத்தடி மீட்டிங் போட்டோம். எழுத்தாளர் & வாசகர்/க்ரிடிக். புதுக்கெமரா வாங்கவேண்டியதின் அவசியத்தைப் பற்றி ஒரு மணிநேர லெக்சர் கொடுக்கும்படியா ஆச்சு எனக்கு. எதிராளி கப்சுப்!
ஏரித்தண்ணீர் நிறைஞ்சு வழிஞ்சு ஒரு பச்சைத் திரை போட்டது. எல்லாம் பாசி பிடிச்சுக்கிடந்த இடம். ஆனால் கலைக்கண்ணோடு பார்த்தேனா.......... ஹைய்யோ.......இதுவும் ஒரு அழகுதான்.

(பதிவின் நீளம் கருதி என்னுடைய ஐஸ்க்ரீம் வாயில் வைக்குமுன் கீழே விழுந்ததையும், கெட்ட எண்ணத்துக்கு அப்படித்தான் நடக்குமுன்னு கோபால் சொன்னதையும், கடைசியில் ஐஸ்க்ரீம் தின்னக் கொடுத்து வைக்காதவங்க யார் என்பதையும் உங்க ஊகத்துக்கே விடுகிறேன்)