Tuesday, May 25, 2010

கோவிந்தா............. கோவிந்தா......

சனிக்கிழமைன்னா எனக்கு ஒரு கோவிலுக்குப் போகணும். விஷ்ணு கிடைச்சால் சிரேஷ்டம். இல்லைன்னா வேறு எந்தக் கோவிலானாலும் சரி. சி.செயில் இருந்தவரை அடையார் அனந்தபதுமனைக் குத்தகைக்கு எடுத்துருந்தேன். இங்கே ஒரு பாலாஜி கோவில் இருக்கு பக்கத்துலே பஞ்ச்குலாவில்னு கண்டுபிடிச்சுச் சொல்லியிருந்தார் கோபால்.

செக்டர் 12A.. மாலை அஞ்சரைக்குக் கோவில் திறக்கறாங்க. இந்தப் பக்கமெல்லாம் சம்மர் டைம் விண்ட்டர் டைம் இப்படி வெவ்வேற நேரங்களில் கோவில் டைம்ஸ் உண்டு. சரியான நேரத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். போகும் வழியில் இன்னொரு கோவிலும் அதன் தலையில் ஒரு ப்ரமாண்டமான சிவலிங்கமும் கண்ணில் பட்டது. வரும்போது கவனிச்சுக்கறேன்னு சொல்லிவச்சேன். ரெண்டுக்கும் இடையில் கூப்பிடு தூரம்தான்.
இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி டெம்பிள் அது ஸ்ரீ ஹரிஹர் மந்திர்.

தென்னிந்தியக் கோவில்கள் வரிசையில் இங்கே ரெண்டே கோவில்கள்தான். ஒன்னு இந்த பெருமாள் கோவிலும் இன்னொன்னு ஸ்ரீ கார்த்திக்ஸ்வாமி கோவிலும்.(இதைப்பற்றி அப்புறம்....)

பெருமாள் கோவில் கோபுரம் நம்ம பக்கம் இருக்கும் வகையில் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு. ஒரு மிடில் சைஸ் வளாகத்தில் (ஒரு மூணு க்ரவுண்ட் இடம் இருக்கலாம்) நடுவில் ஒரு ஹால் போன்ற அமைப்பு. ஹாலின் ஒரு கோடியில் மூன்று சந்நிதிகள்.
நடுவில் ஸ்ரீ ஸ்ரீனிவாஸப்பெருமாள். அவருக்கு வலது கைப்பக்கம் சந்நிதி ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு. இடது புறம் சந்நிதி ஸ்ரீ தர்த்தி மாதா. அட...நம்ம பூதேவிதாங்க. கண்ணுக்கு வெள்ளித் தகடு பொருத்தி வச்சுக் கொஞ்சம் முழிச்சுப் பார்க்கறாய்ங்க இவுங்க ரெண்டு பேரும். ஸ்ரீநிவாஸருக்கு வச்சுருக்கும் ப்ரபையில் தசாவதார உருவங்கள் இருக்கு. ஒரு நாலடி உயரச் சிலைதான். திருப்பதியில் இருந்தே கொண்டு வந்ததாம். ப்ரமாண்டமான பதுமனைப் பார்த்தக் கண்களுக்கு இது 'ச்விக்'ன்னு சின்னதாத் தெரியுது. ஒன்னரை அடி உசரத்துலே உற்சவமூர்த்திகள் பஞ்சலோகச் சிலைகளா அவருக்கு முன் இருக்காங்க. ரொம்ப சிம்பிள் அலங்காரம்தான்.
பட்டர் ரொம்பச் சின்னதா பூஜையை முடிச்சார். 16 உபசாரங்களில் 13 மிஸ்ஸிங்! ஆரத்தி காமிச்ச கையோடு தீர்த்தம் சடாரி கொண்டு வந்து ஹாலில் இருக்கும் மேசையில் வச்சு பக்தர்களுக்கு .வழங்கினார். ஒரு பெரிய பாத்திரம் நிறைய புளியோதரை இருக்கு. அதில் இருந்து ப்ரசாதம் கிடைச்சது.
ரொம்ப ட்ரையா இருக்கே பார்க்கன்னு நினைச்சேன். எம்டிஆர் புளியோதரை மிக்ஸ்ன்னு வாயில் போட்டதும் உணர்ந்தேன்!!!! நம்ம வீட்டில் அங்கே (? ! நியூஸியில்) இதே மிக்ஸ்தான். ஆனால் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா முந்திரி, நிலக் கடலை, கருவேப்பிலை எல்லாம் பொரிச்சுப் போட்டு பார்க்க அம்சமா பண்ணிருவேன். இங்கே புளியோதரைப் பாக்கெட்டில் இருக்கும் செய்முறையை அடிபிறளாமல் பின்பற்றி இருக்காங்க. (கிடைச்சதா...தின்னோமான்னு இல்லாம இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா?)
பெருமாளைப் பார்த்த மாதிரி பெரிய திருவடி. மரத்தில் செய்யப்பட்டவர். வித்தியாசமான கோணத்தில், கருடவாகனத்தில் இருக்கறாப்புலெ. அவருக்குப் பக்கமா அதே மேடையில் ஒரு வலம்புரிப் புள்ளையாரும்( இவர் மண்ணால் ஆனவர்) ஒரு சிவனின் படமும்.

கோவில் வளாகத்தில் காம்பவுண்டுச் சுவரை ஒட்டி பூச்செடிகள். அரளி, நந்தியாவெட்டை, எலுமிச்சம் மரம், தங்கரளி, வாழைமரங்கள் இப்படி. ரெண்டு மூணு சின்னத் தொட்டிகளில் துளசி. வாழைமரங்களுக்கு நடுவில் ஒரு எண்ணெய்தீபத்தை வச்சு ஒருத்தர் கும்பிட்டார். இவர்தான் கோவிலுக்கு இப்போதைய ட்ரஸ்ட் மெம்பரில் ஒருத்தர். அவர் போன பிறகு அங்கே என்ன இருக்குன்னு எட்டிப் பார்த்தேன். சின்னதா கைப்பிடி அளவுள்ள புள்ளையார், சிம்மவாஹினி இப்படிச் சின்னச்சின்ன மண் பொம்மைகள், கொலுவில் வைப்போமே அதைப்போல! வீட்டில் இருந்து கொண்டு வந்து வச்சுருக்காரோ என்னவோ! இவர்தான் குட்டிக்குட்டி மண் அகல்களில் எண்ணெய் ஊத்தித் திரி போட்டு அங்கங்கே வச்சுக்கிட்டு இருந்தார். 'பெருமாள் கோவிலாச்சே.... சிறிய திருவடி இல்லையா?' ன்னு கேட்டேன். கூப்பிடு தூரத்தில் நிற்கும் கோவிலைக் காட்டி அங்கேன்னார். ஓக்கே....அங்கே போய்த்தான் ஆகணும் போல. கோவிலைப் படம் எடுக்கலாமான்னு கேட்டதுக்கு பட்டரைக் கேக்கணுமுன்னார்.

பட்டரைக் கேட்டதுக்கு சரின்னு தலை ஆட்டினார். நம்ம கெமெரா அப்பப் பார்த்துச் சதி செஞ்சுருச்சு. மூலவரை க்ளிக்குனதும் ஃப்ளாஷ் அடிச்சுருச்சு:( பட்டருக்கு அப்பத்தான் நான் கேட்டது புரிஞ்சுருக்கணும். வேணாம் என்பது போல இன்னொரு தலையாட்டல்.

இந்தக் கோவிலைக் கட்ட ஸ்ரீ பூரண்சந்த் அரோரா அறக்கட்டளை (டில்லி-குருக்ஷேத்ரா) அஞ்சு லட்சம் ரூபாய் நன்கொடை தந்துருக்காங்க.

தென்னிந்தியர்களுக்கு இந்தக் கோவில் ஒரு மீட்டிங் ப்ளேஸ். கோவையைச் சேர்ந்த ஜோடியைச் சந்திச்சோம். இந்த ஊர் வந்து ஒன்னரை வருசமாச்சாம். முதல்முறையா இந்தக்கோவிலுக்கு வந்துருக்காங்க. பாலாஜியைத் தேடித்தேடி இப்போதான் கிடைச்சாராம்!!!! இங்கே தமிழ்ச்சங்கம் ஒன்னு இருக்குன்னு இவுங்க மூலமாத் தெரியவந்துச்சு. விலாசம், தொலைபேசி எண் எல்லாம் வாங்கிக்கிட்டோம். நல்ல நட்புணர்வு உள்ள இளம் தம்பதிகள். யானை பார்டர் போட்ட புடவையால் அறிமுகம் ஆச்சு:-))))))
ஹரிஹர் மந்திருக்குப் போனோம். குருத்வாரா ஸ்டைல் முகப்பு. அதன் தலைமேல் ஒரு பக்கத்தில் சிவலிங்கம். அதன் தலையில் ஒரு நாகம். 733




படிகளேறிப்போனோம். ரெண்டு புறம் இருக்கும் படிகளுக்கு நடுவில் நந்தி! அசப்பில் பார்க்க எமவாகனம் போல இருக்கு!!!! . கொம்பு மட்டும்தான் வித்தியாசம். நமக்கிடது பக்கம் தனி அறையில் சிவன் சந்நிதி. வட இந்திய வழக்கப்படி பக்தர்களே அபிஷேகமோ, பூஜையோ செஞ்சுக்கலாம்.
மெயின் கோவிலுக்குள் போனோம். இங்கேயும் பெரிய ஹால். ஒரு கோடியில் நல்ல அகலமான மூணு சந்நிதிகள். நடுவில் லக்ஷ்மிநாராயணன், அவருக்கு வலப்பக்கம் ஸ்ரீ ராமர்& கோ. இடப்பக்கம் சந்நிதி ராதா & க்ருஷ்ணா. எல்லாமே ஆளுயரப் பளிங்குச்சிலைகள். கண்ணாடிகள் எல்லாம் பதிச்சு ஒரே கலர்ஃபுல்லா அலங்கரிச்சு ஜொலிக்குது. இங்கிருந்த பட்டர்(?) படம் எடுக்க அனுமதி கேட்டதுக்கு, ஆஹா........கொஞ்சம் இருங்க, லைட் போடறேன்னு சந்நிதிகளில் விளக்குகளைப் போட்டுவிட்டார். லக்ஷ்மி நாராயணருக்கு ரெண்டு பக்கமும் கஜேந்திர மோட்சமும்., திருப்பாற்கடல் ஸீனுமா பளிங்கு & கண்ணாடிச் சித்திரங்கள்.


லக்ஷ்மிநாராயன்

ராதா & க்ருஷ்ணா

ராம் & கோ

சந்நிதி முன் பக்தர்கள் உட்கார்ந்து வழிபடக் கம்பளங்கள் தரை முழுக்க விரிச்சு வச்சுருக்காங்க. வலப்புறம் விஷ்ணுதுர்கை, சரஸ்வதி, ஆஞ்சநேயர், சிவன் பார்வதித் தம்பதிகள் நடுவிலே மூத்த மகனுடன் தனித்தனிச் சந்நிதிகள் வரிசை. கடைசியில் ஒரு மூலையில் சிந்தூரப்பூச்சில் ஹனுமன்.
ஹரிஹர் கோவில் இருந்து கூப்பிடுதூரம் பெருமாள் கோவில்.


ரெண்டு கோவில்களுமே அமைதியாவும் சுத்தமாவும் இருக்கு. தென்னிந்தியக் கோவில்கள் பழக்கப்பட்ட மனசுக்கு முதலில் கொஞ்சம் லயிப்பு இல்லாமப்போனாலும்.... கடைசியில் இதுவாச்சும் இருக்கேன்னு ஒரு நிலை வருது பாருங்க. அப்ப எல்லாக் கோவிலுமே ஒன்னுதான்னு ஞானோதயம் பொறந்துரும். அந்த நிலையில் இப்போ நாங்க இருப்பதால் பிரச்சனை ஒன்னும் இதுவரை இல்லை.

ரெண்டாம் தடவை போனப்ப, புதுப் பட்டர் வந்துருக்கார். இளைஞர். சந்தோஷ் குமார். ஹிந்தி சுத்தமாத் தெரியாதாம். ஒரிஜனல் பட்டர் லீவு எடுத்து ஊருக்குப் போயிருக்கார். இவர் அவருக்கு பர்த்தி. ஆந்திராக்காரர். நம்ம தெலுங்கைக் கூர் தீட்ட வேண்டியதாப் போச்சு:-)))))

நேத்து பாருங்க..... சாயங்காலம் சின்னதா ஒரு வாக் போகலாமுன்னு கிளம்புனப்ப ஒரு குருத்வாரா கண்ணில் பட்டுச்சு. நம்மூர் புள்ளையார் கோவில்கள் போல முக்குக்கு முக்கு ஏகப்பட்ட குருத்வாராக்கள். முதல்முறையா இந்திய குருத்வாராக்கள் ஒன்னுலே நுழைஞ்சோம். குருக்ரந்த் ஸாஹிப் ஜிகினாத்துணியால் போர்த்தி வச்சுருந்தாங்க. பூஜை நேரம் இல்லை போல. தப்லாவும் ஹார்மோனியமும் வச்சு ரெண்டு பேர் மெல்லிசான சவுண்டில் வாசிச்சுக்கிட்டு இருந்தாங்க. சேவிச்சுக்கிட்டுப் பிரசாதம் கொடுத்ததை வாங்கிக்கிட்டோம். கோதுமைமாவுலே கேசரி மாதிரி ஒன்னு கிளறி வச்சுருக்காங்க. எங்க கிறைஸ்ட்சர்ச் குருத்வாராவில் இப்படித்தான். இது ஒரு ஸ்டேண்டர்ட் ப்ரசாதம் போல!

வெளியே வந்து என்ன குருத்வாரான்னு பெயரைப் பார்த்தால் நிஹங்காரி தர்பார், ராவல்பிண்டின்னு இருக்கு. அச்சச்சோ..... இது பாகிஸ்தானா!!!!

காலநிலை: வெய்யில் 38 C. கொஞ்சம் காற்று வீசுவதால் பரவாயில்லை. ஆனால் உச்சிப்போதுக்கு 43 C ஆக உயருமாம்.

22 comments:

said...

"கோவிந்தா" "கோவிந்தா" "கோவிந்தா" "கோவிந்தா"

Padam Arumai

Pakistanaa ? But Hindu Temble

Ok,Ok

said...

//தென்னிந்தியக் கோவில்கள் பழக்கப்பட்ட மனசுக்கு முதலில் கொஞ்சம் லயிப்பு இல்லாமப்போனாலும்.... கடைசியில் இதுவாச்சும் இருக்கேன்னு ஒரு நிலை வருது பாருங்க//

ரொம்பச்சரி.. ஆரம்பத்துல கோயில்ங்கிற நினைப்பே வராது. பளிங்குச்சிலைகளும், கையைத்தட்டிக்கிட்டு ஆரத்திப்பாட்டு பாடுறதும்... வித்தியாசமான கோயிலமைப்பும்.. மனசுல இடம்பிடிக்க கொஞ்சம் நாளாகும்.

said...

நான் இதை முன்பும் ஒரு குறையாக சொல்லி இருக்கிறேன், இப்போதும் சொல்கிறேன், மன்னித்து கொள்ளவும்.

உங்களின் பதிவுகளை தொடர்ந்து படிக்கமால், இடையில் ஒரு பதிவை எடுத்து படிக்கும் என் போன்ற வாசகர்களுக்கு எந்த ஊர் பற்றி எழுதி உள்ளீர்கள் என்பது புரியவே இல்லை.

தூர்தர்ஷன் செய்தியில் இப்படிதான் வசிப்பார்கள். செய்தி ஆரமபித்து இரண்டு நிமிடம் கழித்து நீங்கள் தூர்தர்ஷன் சேனல் சென்றால் இப்படி போகும்- அங்கு அமைச்சர் நல திட்ட உதவிகள் வழங்கினார்., பின்னர் அமைச்சர் அங்கு உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் மனுக்களை பெற்று கொண்டார். பின்னர் அவர் அங்கு புதிதாக திறந்த சோதனை கூடத்தை திறந்தார். அதன் பின்பு அவர் கே எஸ் திருமண மண்டபத்தில் நடந்த கட்சியின் செயல் வீர்களா கூட்டத்தில் பங்கு கொண்டார்.

எந்த அமைச்சர் என்ற பெயரே நமக்கு தெரியாது, புரியாது.

said...

see I am not joking, Mr.Sukihari has asked whether it is Pakistan. I cant blame him.

Even I assumed it is USA (when i read sector 12 A).

said...

வாங்க சுகிஹரி.

எழுதி இருப்பது சண்டிகர் நகர வாழ்க்கை.

பாகிஸ்தான் கோவிலுன்னு குறிப்பிட்டுள்ளது ஒரு குருத்வாரா. சீக்கியர்களின் கோவில்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

மனசுக்குப் பழக்கப்பட்டவைகளைத்தான் சுலபமா விரும்பறோம் இல்லையா? நம்ம சாப்பாடும் இப்படித்தானே!!!


கொஞ்சநாள் வெளியே போயிட்டால்தான் 'பக்குவம்' வந்துருது:-)

said...

வாங்க ராம்ஜி_யாஹூ.

குழப்பமுன்னா சொல்றீங்க?????

குறிச்சொல் 'சண்டிகர்'ன்னு கொடுத்துருக்கேனே!

ஒவ்வொரு முறையும் இன்ன ஊர் இந்த நாடுன்னு குறிப்பிட வேணுமான்னு விட்டதுதான்.

தொடர்ந்து வாசிக்கலைன்னாலும் குறிச்சொற்களைக் கண்டுக்கிட்டால் குழப்பம் வராதே.


ஒன்னு வேணுமானால் செய்யலாம். தலைப்பில் ப்ராக்கெட்டில் ஊர் பெயரைக் குறிப்பிடலாம். அது தொடருக்குச் சரிவரும்.இதுக்கு எப்படின்னு தெரியலை.


சுகிஹரி, கடைசி பாராவைப் பார்த்துட்டுப் பாகிஸ்தானான்னுட்டார்:-))))

Anonymous said...

ராதா-கிருஷ்ணர் பாத்ததும் புல்லட் சாமியார் தான் நினைவுக்கு வந்தார் :)

said...

யானை பார்டர் போட்ட புடவையால் அறிமுகம் ஆச்சு:-))))))
அதெப்படி லேடீஸ் மட்டும் ஒருத்தரைப் பார்த்ததும் புடவை நகையைப் பார்த்துவிடுகிறீர்கள்? எங்கள் கண்ணுக்கு கோட் சூட்டோ வாட்சோ தெரியமாட்டேனென்கிறதே!!

said...

வாங்க சின்ன அம்மிணி.

புதுப்பட்டர் சந்தோஷ் குமார் ஏறக்குறைய புல்லட் சாமியார்தான்:-)

சுப்ரபாதத்துலே கடைசியிலே வரும் மங்களாசாஸசனம், கடைசி வரியை மட்டும் சொல்லி தீபாராதனையை முடிச்சுட்டார்!!!!!

said...

வாங்க பிரகாசம்.

நாங்க வேற உலகில் இருந்து வந்தவங்களாச்சே. வீனஸ் கிரகமாம்:-))))

அதுவுமில்லாம 'யானை' யை ம(றை)றக்க முடியுதா?

யானை பிடிக்குமான்னு கேட்டவங்களுக்குப் பதில் நம்ம முத்திரை மோதிரம்தான்:-))))

said...

வீனஸ் கிரகமாம்:-))))
பெண்களை கிரகலக்ஷ்மி என்று சொல்வது ஏன் என்று இப்போதுதான் புரிகிறது.

கீழ்க்கண்ட இணைய தளத்தில் வைஷ்ணவப் பாடல்களும் ஸ்லோகங்களும் ஒலி வடிவிலும் பல மொழிகளில் எழுத்துவடிவிலும் கிடைக்கும்

http://www.prapatti.com/

said...

பளிங்கு சிலைகளை பார்க்கும் போது நீங்கள் சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது. முன்பு கோவிலுக்கு சென்றால் கோவில் நினைவு வருவதில்லை இப்பொழுது மனது பக்குவம் அடைந்துவிட்டது. ஒவ்வொரு இடங்களில் இந்த கோவில்கூட இருப்பதில்லை.

said...

I really like the north indian style temples, kind of makes me feel closer to the God. Wishing you a pleasant stay in Chandigarh!

said...

கோவிந்தா ...கோவிந்தா

said...

"சிவலிங்கம். அதன் தலையில் ஒரு நாகம்." வித்தியாசகான அமைப்பு. நன்றாக இருக்கிறது.

லக்ஷ்மிநாராயன்,ராதாகிருஷ்ணர் சிலைகள் ஜொலிக்கின்றன.

said...

பிரகாசம்,

'வேற்று கிரக' லக்ஷ்மிகள்தானே நாங்கள்!

இல்லையா? :-))))

சுட்டிக்கு நன்றி.

said...

வாங்க சுமதி.

இதுவாவது இருக்கேன்னுதான் இருக்கணும்.

நான் நம்ம ஊர் சர்ச்சுகளில் போய் மனதில் இருக்கும் இறைவனைக் கும்பிடுவேன்.

சாமிக்குக் கட்டிட வித்தியாசம் இருக்கா என்ன?

said...

வாங்க சந்தியா.

மெய்தான்.

சாமிக்கும் நமக்கும் நடுவில் குருக்கள் என்னும் குறுக்கீடு இல்லை வட இந்தியக்கோவில்களில்.

said...

வாங்க சந்தியா.

மெய்தான்.

சாமிக்கும் நமக்கும் நடுவில் குருக்கள் என்னும் குறுக்கீடு இல்லை வட இந்தியக்கோவில்களில்.

said...

ரண்டி ரண்டி அது ஒரு கனாக் காலம்.
ஒக்க சாரி கூடச் செப்பண்டி. கோவிந்தா கோவிந்தா........

said...

வாங்க மாதேவி.

பாம்புக்கும் கழுத்தில் இருந்து அலுத்துப்போச்சு. அதான் தலையில் வந்து உக்கார்ந்து ஓய்வெடுக்குது:-)))