Showing posts with label Chennai. Show all posts
Showing posts with label Chennai. Show all posts

Thursday, June 03, 2010

பாவம் புள்ளைத்தாய்ச்சி........

கோயம்பேடு போய்வந்து பல்பு வாங்குனதை மறக்கவே முடியலை. மனசில் ஓரத்தில் நமநமன்னு இருந்துக்கிட்டே.......
சென்னையைவிட்டு போறோமுன்னதும் இங்கே போகத்தான் வேணுமுன்னு முடிவு செஞ்சேன். இதுக்கு ரொம்பத்தோதா இன்னொரு காரணமும் கிடைச்சது. ஓசிச் சாப்பாடு. விட முடியுதா?

பொழுதோட கிளம்பிப்போய் புள்ளைத்தாய்ச்சியைக் கண்டுக்கிட்டு, அப்படியே தோழி வீட்டுக்குப்போய் வெட்டிவிழுங்கணும். ஜம்பமா , சொன்னது 'விசேஷமா ஒன்னும் செய்யாதீங்க. ஒரு 'தால் பாத் போதும்'.

வேதவாக்கா எடுத்துப்பாங்கன்னு யார் கண்டா? :(
ஸ்ரீ வைகுந்தவாசன் கோவிலுக்குள் நுழைஞ்சேன். நவதிருப்பதிகளில் இருக்கும் நுழைவுவாசல் போல சிம்பிளான முகப்பு. முன்வாசல் திறந்திருந்தாலும் கோவில் கருவறை முன்மண்டப வாசக்கதவு பூட்டி இருக்கேன்னு விசாரிச்சதில் பட்டர் வந்து விளக்கேத்தி வச்சுட்டு, இப்பத்தான் பூட்டிக்கிட்டுப்போனார். பக்கத்துக் கோவிலுக்குப் போயிருக்கலாம் இதோ வந்துருவார்ன்னு சொன்னாங்க. இந்தக் கோவிலுக்கு வலப்பக்கத்துலேதான் குசலவபுரீஸ்வரர் கோவில் இருக்கு. போனமுறை அதைமட்டும் பார்த்துட்டு வந்துருந்தேன். திருக்குளத்தின் முன்னே இருக்கும் மண்டபத்தின் (இங்கேதான் சரபேஸ்வரர் ஒரு தூணில் இருக்கார்) கடைசிவரை போயிருந்தால் இந்தக் கோவில் கண்ணுலே பட்டிருக்கும். அந்தக் கடைசியில் இருந்து எண்ணி நாலே எட்டு வச்சால் போதும்!
அதுவரை கோயிலை வலம்வரலாமுன்னு போனோம். தலவிருட்சம் நூல்கட்டுகளால் சுற்றியிருக்கு. இதுக்கு முன்னால் ஒரு புள்ளையார் சந்நிதி. கோவிலுக்குப் பின்பக்கம் ஒரு புத்து. கொஞ்சம் தள்ளி, மின்னும் சேஷவாகனம். கருவறை மேல் இருக்கும் அழகான விமானம் சமீபத்துலே புதுப்பிச்சு வர்ணம் அடிச்ச நிலையில் தெளிவான சுதைச்சிற்பங்களோடு.! ஒரு பக்கம் ஆதிசேஷன்மேல் பள்ளிகொண்ட பெருமாள். நாபிக்கமலத்தில் ப்ரம்மன். கால் அமுக்க ஸ்ரீதேவி இல்லாமல் தனியாக் கொட்டக்கொட்டக் கண்முழிச்சுக்கிட்டுச் சிந்தனை செய்யறார்.

தேவி இல்லாத பள்ளிகொண்டானை இதுவரை பார்த்ததே இல்லை. அட்லீஸ்ட் கொஞ்சம் ஓரடி தள்ளியாவது அம்மா உக்கார்ந்திருப்பாள். உசரே அடுத்த அடுக்கில் நரசிம்மம் குத்துக்காலிட்டு அய்யப்பன் போஸில்.. அதுக்கு மேல் அடுக்கில் ஒரு காலை மடக்கி, வலதுகையால் அருள் முத்திரை காமிக்கிறார் அதே நரசிம்மர்.

மும்மூணு அடுக்குள்ள சாயா விமானம். இந்த விமானத்தின் இன்னொரு பக்கம். இதே அரவணையில் ஒரு காலை மடக்கி உக்காந்துருக்கும் மஹாவிஷ்ணுவும் இரு பக்கமும் ஸ்ரீதேவி பூதேவியருடன். மூணாவது பக்கம் ராமன் லக்ஷ்மணன் சீதை. நோ ஆஞ்சநேயர்! நாலாவது பக்கம் பார்க்க இயலாது. கோவிலின் முன்மண்டபம் வந்து பார்வையை மறைச்சுருது.

கோவிலின் முன்மண்டபத்து வெளிச்சுவர்களில் முகப்பில் தசாவதார சிற்பங்கள். வலது புறம் புற்றில் இருக்கும் வால்மீகி முனிவரிடம் நாரதர் 'சேதி' சொல்றார். சீதையும் வால்மீகியும், சீதை மடியில் இரட்டையர், அஸ்வத்தை பிடித்துக் கட்டி வைக்கும் லவனும்குசனும்.

இடது பக்கம் ராமனை எதிர்த்து அம்பெய்யும் குசலவர்கள், வால்மீகியை வணங்கும் ராமன், ராமர் குடும்பம், வால்மீகி, குசலவர்களுக்கு மகாவிஷ்ணு காட்சியளித்தல் .எல்லாமே சுதைச்சிற்பங்கள்தான். ஆனாலும் முக அழகு சொல்லமுடியாதபடி ரொம்பத் திருத்தமாகவும் வசீகரமாவும் இருக்கு.
பட்டர் வரும்வரை, கொஞ்சம் கதையைப் பார்க்கலாமா? நாட்டுமக்களில் ஒருவர், சீதையைப் பற்றிச் சொன்ன 'அவதூறு' காரணம் ராமன் கர்ப்பிணி மனைவி சீதையைக் காட்டுக்கு அனுப்பிட்டான். பழிச்சொல் தாங்க முடியாத சீதை, உயிரைவிட உத்தேசிக்கும் சமயம், வால்மீகி முனிவர் அங்கே வர்றார். (இந்த சேதிதான் நாரதர் சொல்லி இருக்கணும்) 'தற்கொலை செஞ்சுக்கறது பாவம், அதிலும் வயிற்றில் இன்னொரு ஜீவன் வளர்ந்துவரும் சமயம் தற்கொலை செஞ்சுக்கறது மகா பாவம்'னு சீதைக்கு எடுத்துச் சொல்லி 'என்னுடைய ஆசிரமத்தில் வந்து தங்கிக்கோம்மா'ன்றார். தயங்கும் சீதையிடம், 'அரசிக்குரிய எந்த அலங்காரமும் அணிமணியும் இல்லாமல் ஆசிரமத்தில் இருக்கும் மற்ற சாதாரணப் பெண்களோடு தங்கினால் வேறெந்தப்பேச்சும் வராது'ன்னு சொல்றார். சம்மதிச்ச சீதை அதே போல சிம்பிளாத் தலைமுடியைக் கோடாலிமுடிச்சுப் போட்டுக்கிட்டு அங்கே போய் தங்கி, காலக்கிரமத்தில் ரெட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுக்கறாள். பாய்ஸ்!
குழந்தைகள் வளர்ந்து வர்றாங்க. ஆசிரமத்துலேயே கல்வி, வில்வித்தை எல்லாம் படிக்கிறாங்க. அப்போதான் அஸ்வமேத யாகத்துக்கான குதிரை ஊர் ஊரா எல்லா இடங்களுக்கும் போய்க்கிட்டு இருக்கு. அப்படியே இங்கே இந்தப் பகுதிக்கும் வந்தப்ப, பசங்க ரெண்டு பேரும் அந்தக் குதிரையைப் பிடிச்சுக் கட்டிவச்சுட்டாங்க.
குதிரையோடு வந்த சத்ருக்னன், பசங்களிடம் 'குதிரையை விட்டுருங்க பசங்களே. இது அரசனோட அஸ்வமேத யாகத்துக்கான குதிரை'ன்னான். 'அதெல்லாம் விடமுடியாது. எங்க ஆசிரம எல்லைக்குள் ட்ரெஸ்பாஸ் பண்ணிருச்சு'ன்னாங்க. இதென்னடா வம்பாப் போச்சு. சின்னப் பசங்ககிட்டே சண்டை போட்டா நல்லாவா இருக்குமுன்னு அவன்போய் லக்ஷ்மணனிடம் விஷயத்தைச் சொன்னான். 'நான் வந்து என்னான்னு கேக்கறேன்'னு லக்ஷ்மணனும் கிளம்பி வந்தான். அவன் கேட்டுக்கிட்டாலும் குதிரையை விடமாட்டேன்னு பசங்க சொல்லிருச்சு. சண்டை ஆரம்பிச்சது. லக்ஷ்மணசத்ருகர்களை சண்டையில் ஜெயிச்சுத் துரத்துச்சுங்க பசங்க.
சேதி கேள்விப்பட்ட ராமன், தானே புறப்பட்டு வந்தான். அவனையும் பசங்க எதிர்த்து நின்னாங்க. அப்போ வால்மீகி முனிவர் வந்து, பசங்க யாருன்னு தெளிவு படுத்தினார். பசங்களுக்கும் அப்போதான் ராமன் தங்களோட தந்தைன்ற விஷயம் தெரியுது. அப்பாவை வணங்கி மன்னிப்புக் கேக்கறாங்க. அவரும் நடந்ததுக்கெல்லாம் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டுக்கிட்டார். அப்போதான் வால்மீகி முனிவர் ராமன், மகாவிஷ்ணுவின் அவதாரமுன்னு விளக்கி, ஸ்ரீ வைகுண்டத்தில் வாசம் செய்யும் விஷ்ணுவின் திருக்கோலத்தில் எங்களுக்குக் காட்சி கொடுக்கணுமுன்னு வேண்ட அவ்வாறே ஆச்சு.

கடவுளர்களின் வழக்கபடி ஆசி வழங்கிட்டு, 'என்ன வரம் வேண்டுமுன்னு கேளுங்கோ'ன்னதும், 'இதே திருக்கோலத்தில் இங்கே கோவில்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி அனுகிரஹிக்கணுமு'ன்னு வேண்டினார் வால்மீகி. சரின்னுட்டார் பகவான். ஆனா ஸ்ரீவைகுண்டத்தில் திருப்பாற்கடலில் ஆதிசேஷன் சுருண்டு கிடக்க அவனை மெத்தையாப் போட்டுக்கிட்டு இருந்தோ, கிடந்தோ இருக்கும் கோலமில்லாமல் நின்னவாக்கிலே நின்னு அருள்பாலிக்கிறார். அஃப்கோர்ஸ், கூடவே தேவியரும் உண்டு. அதான் மூலவருக்கு வைகுண்டவாசர்ன்னு பெயர்.
ஒரிஜனல் வைகுண்டவாசன் இப்படி(யும்) இருக்கலாம்!

பட்டர் வந்து கோவிலைத் திறந்தார். இன்னும் ஒரு குடும்பம் தரிசனத்துக்கு வந்துருந்தாங்க. தீபாராதனை முடிஞ்சதும் அவுங்க போனபிறகு பட்டரிடம் பேச்சுக் கொடுத்தேன். (பல்பு வாங்குன கையோடு ஹோம்ஒர்க் கொஞ்சம் செஞ்சு வச்சுக்கிட்டதால் எளிதா இருந்துச்சு) மரவுரி தரித்த ராமர் இருக்காராமே. அவரைத் தரிசனம் பண்ணிவையுங்கோன்னதும் அவருக்குப் பரம சந்தோஷம். முன்மண்டபத்துலே இடது பக்கத்தில் சின்னச் சந்நிதியில் இருக்காங்க ராமனும் சீதையுமா. எப்பவும் கூடவே இருக்கும் லக்ஷ்மணர் கிடையாது.
மண்டபத்தின் வலப்பக்கம் இருக்கும் சிலைகளில் வால்மீகியும் இருபக்கமும் குசலவர்கள். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பமாம். அடுத்து நின்ற கோலத்தில் சீதை. பிள்ளைத்தாய்ச்சி. நிறைய வளையல்களை மாலைமாதிரி போட்டு வச்சுருக்காங்க. கர்ப்பிணியை இங்கே காட்டுக்குக் கொண்டுவந்து விட்டுட்டுப்போனது லக்ஷ்மணனாம். இதுகூட சீதையின் செயலுக்கு ஒரு தண்டனையாம். பொன்மானா வந்த மாரீசன், ராமனின் அம்பு பட்டு இறக்கும் சமயம் 'லக்ஷ்மணா'ன்னு ராமர் குரலில் அலறினான். சப்தம் கேட்ட சீதை, தனக்குக் காவலாக இருந்த லக்ஷ்மனனைப் போய் 'என்ன ஏதுன்னு பார்க்க'ச் சொல்றாள். 'அது அண்ணன் குரல் இல்லை. அவருக்கு ஆபத்து ஏதும் வராது. வந்தாலும் தன்னைக் காப்பாத்திக்குவார். இங்கே உங்களுக்குக் காவலா இருக்கச் சொல்லிட்டுப்போன அண்ணனின் சொல்லைத் தட்டமாட்டேன்'னு லக்ஷ்மணன் சொல்ல, கோபத்தில் சீதை அவன்மேல் சந்தேகப்பட்டுத் 'தகாத எண்ணத்தோடு நீ இங்கே இருந்து போகமாட்டேங்கறே'ன்னு சொல்லிடறாள். அதுக்குப் பனீஷ்மெண்டாத்தான் லக்ஷ்மணனையே சீதையைக் காட்டுலே கொண்டுபோய் விடச்சொன்னார் ராமர்ன்னு சாவிச் சங்கிலி தோளில் தொங்க, பட்டர் அனந்த கிருஷ்ணன் சொன்னார்.
இதுக்குள்ளே நம்மைபற்றியும் என்ன ஏதுன்னு விசாரிச்சவரிடம், இந்தக் கோவிலைப்பத்தி எழுதணுமுன்னு வந்திருக்கேன்னேன். வெளியே படம் எடுத்துக்கலாமான்னு அனுமதி கேட்டதுக்கு அவர் கோவில் நிர்வாக அதிகாரிகிட்டே ஒரு வார்த்தை கேட்டுக்குங்கோன்னு செல் நம்பர் கொடுத்தார். ரொம்ப நல்லவராம். நல்லமுறையில் கோவிலை நடத்தராறாம். திரு.மோகனசுந்தரம். எக்ஸிக்யூடிவ் ஆஃபீஸர். இவரிடம் கேட்டு அனுமதி வாங்கித்தான் குசலவபுரீஸ்வரர் கோவிலில் கொஞ்சம் படங்கள் எடுத்திருந்தேன் போனமுறை. உடனே தொலைபேசியில் கூப்பிட்டு அனுமதி கேட்டதும், எடுத்துக்குங்கோன்னார். நன்றி தெரிவிச்சேன்.
கோவில் தலவிருட்சம் கொஞ்சம் ஸ்பெஷலானது. வில்வமரமும் வேப்பமரமுமாச் சேர்ந்து பெருசா, மூணு 'அடிமரங்களா'ச் சேர்ந்து வளர்ந்திருக்கு. இங்கே குடும்ப நலனுக்குப் பிரார்த்தனை செஞ்சு வழிபடறாங்களாம். திருமணம் தடைப்பட்டவர்கள், இங்கே வேண்டிக்கிட்டுச் நூல்சரடு, மரத்துக்குச் சுத்தி வழிபட்டா, சீக்கிரம் திருமணம் கைகூடுதாம்.

வால்மீகி தவம் செஞ்சப்ப அவரைச் சுத்தி புத்து வளர்ந்து மூடியதை நினைவுபடுத்தும் விதமா இங்கேயும் புத்து ஒன்னு இருக்கு. அதுக்குள்ளே 'அது' இருக்குமோன்னு நம்ம கோபாலுக்கு ஒரு சம்சயம்:-)
இன்னொரு விசேஷம் இந்தக் கோவிலுக்கு இருக்குன்னார் பட்டர். சீமந்தம் வளைக்காப்பு விசேஷங்களை நிறையப்பேர் இந்தக் கோவிலில் கர்ப்பிணி சீதை முன்னால் நடத்திக்கிறாங்களாம். சுகப்பிரசவமும் ஆரோக்கியமான குழந்தையும் கிடைக்குமுன்னு நம்பிக்கை. வெளிநாட்டில் இருக்கும் பலர், அங்கே சீமந்தமோ வளைக்காப்போ சாஸ்த்திரப்படி செஞ்சுக்கப் போதுமான வசதி இல்லாதவர்கள்'' இங்கே வேண்டிக்கிட்டு அவர்களுக்காக அந்தந்தக் குடும்பத்தினர் இங்கே சீதைக்கு வளைகள் அணிவித்து வளைக்காப்பு நடத்தறதும் உண்டாம்.எல்லாம் நல்லதா நடக்கும் என்ற நம்பிக்கைதான்னார். சீதையின் கழுத்தில் இருந்த வளைமாலையில் நாலு பச்சை வளைகளை எனக்குப் ப்ரசாதமாக் கொடுத்தார்.
நன்றி சொல்லிக் கிளம்பும் சமயம் போனவருசம் நடந்த மகாகும்பாபிஷேகத்தின் போது விழாவுக்காகச் சிறப்பாக எடுத்த மரவுரி ராமனும் சீதையும் இருக்கும் படத்தையும் (அதுக்குள்ளே வீட்டுக்கு ஆள் அனுப்பி எடுத்துவரச் சொல்லியிருக்கார்!) நம்ம பதிவில் போடறதுக்காகவே தந்தார்.
அனந்தகிருஷ்ண பட்டர் கொஞ்சம் அப்பாவிதான் போல. என்னையும் எழுத்தாளருன்னு நம்பிட்டார் பாருங்களேன்!

Tuesday, June 01, 2010

நத்தை மனிதராகிறோம்!!! (தொடர்ச்சி)

சென்னையில் இருந்து கிளம்பனுமுன்னு முடிவானதும் இதே கம்பெனியைக் கூப்பிட்டு ஒரு செலவுக்கான மதிப்பீடு கேட்டோம். ஒரு 'நல்ல தொகை' சொன்னாங்க. எதுக்கும் இன்னொரு கம்பெனியையும் கேக்கணுமேன்னு வேற ஒன்னிலும் மதிப்பீடு கேட்டோம். அவுங்க இவுங்களைவிட 25 குறைச்சுச் சொன்னாங்க. என்ன ஒன்னு, ரெண்டாவது கம்பெனி சாமான்களை ட்ரக்லே ஏத்தி அனுப்பிருவாங்க. இங்கே வந்ததும் அவுங்க நியமித்திருக்கும் ஏஜெண்டு க்ளியர் செஞ்சு தருவார். முதல் கம்பெனி சொல்லுச்சு, நாங்க சாமான்களை கண்டெயினர் ட்ரக்கில் ஏத்திட்டு, இங்கே இருந்து ஒரு நபரைக் கூடவே அனுப்புவோம். அவர் கடைசிவரை இருந்து எல்லாப் பெட்டிகளையும் பிரிச்சு அடுக்கி அந்தந்த இடத்தில் வைக்க ஏற்பாடு செய்வார்.. பரவாயில்லையே இது நல்ல ஏற்பாடா இருக்கே! ஆனாலும் கேட்கும் தொகையில் 25 வித்தியாசம்? கண்ணை உறுத்துச்சு.

முதல் கம்பெனியைக் கூப்பிட்டு உங்களைவிட குறைஞ்ச தொகைக்கு எனக்கு கொடேஷன் கிடைச்சுருக்குன்னதும், தொகையைக் கேட்டவங்க டகால்ன்னு 23 குறைச்சுக்கிட்டாங்க. ரெண்டுதான் இப்போ கூடக் கொடுக்கணும். ஆனா ஒரு ஆள் சாமான்களோடு கூடவே காவலுக்குப் போறாரே! அப்ப அதுதானே நல்லது. அதன்படியே ஆச்சு.

நாம் சொன்ன நாளில் ஆறுபேர் காலையிலே வந்தாங்க. பரபரன்னு பேக்கிங் ஆரம்பிச்சது. ரெண்டு நாளில் எல்லாத்தையும் பொதிஞ்சுட்டாங்க. முதலில் இங்கே இருந்து சாதா ட்ரக்கில் வண்டலூர் கொண்டுபோய் அங்கிருந்து கண்டெயினர் ட்ரக்கில் ஏத்தறதா ஒரு ஏற்பாடு. அதான் இங்கே நம்ம ஏரியாவில் கண்டெயினர் அனுமதி இல்லையாமே. ஆனா......

எப்படின்னு தெரியலை அன்னிக்கு மாலையே ஒரு கண்டெயினர் ட்ரக் வந்து வீட்டுமுன்னால் நின்னது. அதுலே வந்த ரெண்டு பேரில் ஒருத்தர் ட்ரைவர். ஹரியானாக்காரர். சரக்கு சண்டிகருக்குப் போகுதுன்னு சொன்னதும் அவருக்கு பயங்கர சந்தோஷம். அவர் வீடு அங்கே பக்கத்துலேதானாம். போய் ரொம்ப நாளாச்சு. இந்தமுறை போகச்சான்ஸ் கிடைச்சுருச்சுன்னார். ட்ரக் ட்ரைவர்கள் வாழ்க்கையை 'ஆராய்ஞ்சால்' அதுலே ஏராளமான 'கதைகள்' கிடைக்கும்!

இன்னொரு சின்ன வண்டியில் அஞ்சு இளைஞர்கள் வந்து இறங்குனாங்க. எதுக்கு? பொட்டிகளை வண்டியில் ஏத்த!!! அடுத்த ஒரு மணி நேரத்துலே எல்லாத்தையும் ட்ரக்கில் அடுக்கியாச்சு. பூட்டலாமுன்னா அதுலே தொங்கும் பூட்டைத் திறக்க முடியலை. நம்ம கிட்டே பூட்டு ஏதாவது இருக்கான்னு கேள்வி. பால்கனியில் நின்னு சம்பவத்தைக் கவனிச்சுக்கிட்டு நிக்கும் என்னிடம், பூட்டு ஏதாவது நம்மகிட்டே இருக்கான்னு கோபால் கேக்கறார். 'ஓ. இருக்கே! ட்ரக்குக்குள்ளே அடுக்குன பொட்டிகள் ஒன்னில் இருக்கு. எடுத்துக்குங்க'ன்னேன்.

'ஙே ..............'

கடையில் ஒன்னு வாங்கியாந்தால் ஆச்சு. அதுக்குள்ளே ஒரு ஸீல் எடுத்து இதைவச்சு ஸீல் பண்ணிறலாமுன்னார் ட்ரைவர் ராஜேஷ் ஷர்மா.

அப்ப வழியில் ஆக்ட்ராய் கட்ட திறந்து பார்க்கணுமுன்னா?

அது அப்பப் பார்த்துக்கலாம். பிரச்சனை இருக்காது. விவரம் எல்லாம் பக்காவா இருக்குன்னார்.


ஒன்னு சொல்ல விட்டுப்போச்சே. சாமான்களை எல்லாம் பேக்பண்ணி பெட்டிகளுக்கு நம்பர்ஸ் போட்டு பக்கவா லிஸ்ட் தயார் செஞ்சபிறகு, அதுக்கெல்லாம் வேல்யூ போடணும். இன்ஸூரன்ஸு எடுக்கணுமேன்னதும் லிஸ்ட்டை வாங்கிப் பார்த்த கோபால் ஒவ்வொன்னுக்கும் மதிப்பு போட்டார். சரியா இருக்கான்னு நான் செக் பண்ணால்.....விஸ்வரூபம் எடுக்க வேண்டியதாப் போச்சு. ஒரே ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன் நீங்களே புரிஞ்சுக்குங்க. 42 அங்குல ப்ளாஸ்மா டிவி அஞ்சாயிரம்:-)

அப்புறம் எல்லாத்தையும் மாத்தி எழுதி ............... ம்ம்ம்ம்ம்ம்ம்

சரி. வாங்க வாசலுக்குப் போலாம். ட்ரக்கு நிக்குதே. ட்ரைவர்கூட வந்தவர் சொல்றார், 'இப்போ வண்டியை எடுக்க முடியாது. ராத்திரி 11 மணிக்கு மேல்தான் இந்தத் தெருவில் போக அனுமதி. அதுவரைக்கும் இங்கேதான் இருக்கப்போறோம்'. காலி வீட்டுலே நாம் இருந்து என்ன செய்ய? சென்னையை விட்டுக் கிளம்பும்வரை ஹொட்டேலில் தங்க ஏற்பாடு இருக்கேன்னு நாங்களும் கிளம்புனோம்.
" சார். உங்க கண்முன்னாலேயே சாமான்களை ஏத்துனா நல்லதுன்னு அனுமதி இல்லாத நேரத்துலே ( கூட) எப்படியோ வண்டியை இங்கே கொண்டுவர வழிகாட்டினேன். என்னைக் கொஞ்சம் கவனிங்க"

"நீங்கதான் வண்டியில் கூடவே போறவரா?"

"இல்லீங்க. நான் ட்ரக்கை இங்கே கொண்டுவர 'வழிகாட்டுனேன்' . அதுக்கு வேற ஆள் இருக்கார் கூடவே போக"

வழிகாட்டிக்கு ஸ்பெஷல் கவனிப்பாமுல்லே!!!!!!

எல்லோரையும் 'கவனிச்சுட்டு', ட்ரைவரின் செல் நம்பர் வாங்கிக்கிட்டு நாங்க கிளம்பினோம். கம்பெனி 10 நாளாகுமுன்னு சொல்லுச்சு. ராஜேஷ் சொல்றார் அஞ்சே நாளிலே போயிருவேன்னு! பத்திரமாப் போய்ச்சேருங்கன்னு சொன்னோம்.

நாலாம்நாள் செல்லில் கூப்பிட்டால் டெல்லிக்கு சமீபமா இருக்காராம். பிரச்சனை ஒன்னும் இல்லைன்னார்.

நாங்க அஞ்சாம்நாள் மாலை டெல்லி வந்து சேர்ந்து அங்கிருந்து காரில் சண்டிகருக்கு வந்துட்டோம். ஹோட்டேலில் தங்கல். ஆறாம்நாள் செல்லில் கூப்பிட்டால் டெல்லியில்தான் இருக்காராம். ' மூவிங் கம்பெனியின் டெல்லி கிளையின் பொறுப்பு இனிமேலே'ன்னார். கம்பெனியைக் கூப்பிட்டப்ப, சண்டிகர் நகருக்குள்ளே வீடுகள் இருக்கும் பகுதிகளில் கண்டெயினர் வர அனுமதி இல்லை. நாங்க எல்லா சரக்கையும் சாதாரண ட்ரக்கில் மாத்தி அனுப்புவோம். பயப்படாதீங்க. எல்லாம் பத்திரமா வந்துருமுன்னு சொன்னாங்க. நாளைக்குக் காலையில் எட்டுமணிக்குச் சாமான்கள் வந்துருமுன்னு சொன்னதால் நாங்க காலை ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்து, காலி வீட்டில் இருந்த ஒரே கட்டில் மேல் 'ஏறி' உக்காந்து விக்விக்குன்னு 'தேவுடு' காத்தோம்!

பொறுமை இழந்து 12 மணிக்கு கம்பெனியைக் கூப்பிட்டால்..........

ட்ரக் விபத்தில் மாட்டிக்கிச்சு:(

ஐயோ...... யாருக்காவது அடிபட்டுருச்சா?

சரியாத் தெரியலை. இங்கிருந்து ஆட்கள் புறப்பட்டுப் போயிருக்காங்க. அவுங்க தகவல் தெரிவிச்சவுடன் உங்களுக்குச் சொல்றோம்.

அன்னிக்கு ராத்திரிவரை தகவலும் வரலை. என்னடா வம்பாப்போச்சு? யாருக்கும் ஒன்னும் ஆகாம இருக்கணுமேன்னு நமக்கோ மன உளைச்சல்.
காலையில் போன் செஞ்சா யாராவது எடுத்தால்தானே? ஒருவழியா பதினோரு மணிக்குத்தான் வேலைக்கு வறாங்கபோல இந்தப் பக்கங்களில். வெறுத்துப்போச்சுன்னு வையுங்க.

கொஞ்சம் விடுவிடுன்னு 'டோஸ்' கொடுத்தபிறகு தகவல் எங்களுக்கே ரொம்ப லேட்டாத்தான் வந்துச்சு. அகாலநேரமுன்னு உங்களைக் கூப்பிடலைன்னாங்க. த்தோடா......

ஒரு ஆளுக்குக் கொஞ்சம் அடி. ட்ரைவருக்கு ஒன்னும் ஆகலை. ட்ரக் ஒரு பாலத்துலே இடிச்சு பாதித் தொங்கிக்கிட்டு இருக்கு. அதுலே இருக்கும் சாமான்களை ரோடில் இறக்கி வச்சுக் காவலுக்கு ஆள் போட்டுருக்கோம். வேற வண்டிக்கு ஏற்பாடு நடக்குது. அதுலே ஏத்தி வீட்டுக்கு அனுப்பிருவோம். எப்படியும் நாளைக் காலையில் சாமான்கள் வந்துரும்.

எங்கே விபத்து ஆச்சு? எந்த ஊர்லே?

உங்க ஊருக்குள்ளே வரும்வழியில்தான். வீடு வந்து சேர ஒரு அரைமணி நேரந்தான் இருந்தப்ப, விபத்து நடந்துருச்சு.

அட ராமா......

மறுநாள் காலையில் வீட்டுக்கு வர்றோம். கொத்தவால்சாவடிக்குக் காய் வரும் வண்டிபோல கண்டாமுண்டான்னு சாமான்களை அடுக்குன ஒரு லாரி டார்ப்பாலின் போட்டு வாசலில் நிக்குது. கூடவே ரெண்டு சைக்கிள் ரிக்ஷா வேற !
அழகா அம்சமா ஏத்துன ட்ரக் எங்கே.....கடைசியில் வந்து நிக்கும் இது எங்கே!!!!

கம்பெனி லோகோ இருக்கும் சட்டையைப் போட்டுக்கிட்டு ஒரு நாலு பேர் வந்தாங்க. டார்பாலின் பிரிச்செடுத்து, சாமான்கள் வீட்டுக்குள்ளே வர ஆரம்பிச்சது. அவுங்களுக்கு எக்ஸ்ட்ரா உதவியா மூணு உள்ளுர் ஆளுங்க. எல்லாம் அந்த ரிக்ஷாவாலாக்கள்தான். கொஞ்ச நேரத்துலே இன்சூரன்ஸ் மதிப்பீடு பண்ண ஒருத்தர் வந்தார். கம்பெனி அனுப்பிச்சுருக்காம். விபத்து நடந்துபோச்சுல்லே!!!!

முதல்லே அந்த விபத்தில் சிக்கினவர் என்ன ஆனார்? விபத்து எப்படி ஏற்பட்டுச்சு? ன்னு கேள்விகளால் துளைச்சு எடுத்துட்டோம். ட்ரக் ஒழுங்காத்தான் வந்துக்கிட்டு இருந்துச்சாம். கம்பெனி ஆள் ஒருத்தர் (டெல்லிக் கிளை) கூட வந்துக்கிட்டு இருந்தார் கேபினில். எதிரில் ஆடிக்கிட்டே கண்ட்ரோல் இல்லாம ஒரு கார் வந்துருக்கு. அதுக்கு இடம்விட வண்டியை ஒடிச்சுத் திருப்பியிருக்கார் ட்ரைவர். அதிர்ஷ்டம் பாருங்க அப்போ சம்பவம் நடந்த இடம் ஒரு பாலம். வண்டிபோய் பாலத்துச்சுவரில் இடிச்சு அந்தப் பக்கம் நழுவி நிக்குது. முன் சக்கரம் இரண்டும் அந்தரத்தில். இடிச்ச வேகத்தில் விண்ட் ஸ்க்ரீன் உடைஞ்சு தூளாகவும், நிலை குலைஞ்ச கம்பெனி ஆள் அந்த ஓட்டையினூடே நழுவித் தெறிச்சு அங்கே இருந்து வெளியே கீழே தண்ணி இல்லாத பாலத்தடியில் விழுந்துருக்கார்:(

பின்பாரம் அதிகமோ என்னவோ வண்டி தலை குப்புற விழலை. ட்ரைவர் சமாளிச்சு இறங்கி இருக்கார். எல்லாம் அதிகாலை இருள்பிரியும் நேரத்துலே நடந்துருக்கு. அக்கம்பக்க மனிதர்கள் உதவிக்கு ஓடிவந்து கீழே பள்ளத்தில் இருந்தவரைத் தூக்கி இருக்காங்க. நல்ல காலம். உயிருக்கு ஆபத்து இல்லை. ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துருக்காங்க. மேல்கை எலும்பு தோள்பட்டைவிட்டு நழுவிருச்சு. டிஸ்லொகேஷன்.

விபத்துன்னு போலீஸ் வந்து, இவர் கம்பெனிக்கு விவரம் சொல்லி, அக்கம்பக்கத்து ஆட்களோடு சாமான்களை இறக்கி ரோட்டுலே வச்சுன்னு களேபரம். கம்பெனி உடனே அஞ்சு பேரை அனுப்பி வச்சுருக்கு என்ன ஏதுன்னு பார்க்கச் சொல்லி. அட! பரவாயில்லையேன்னு முதலில் நினைச்சேன். ஆனா.........

கண்ணாடிப் பாத்திரங்கள் உள்ள பெட்டிகளைப் பிரிக்க வேணாம். தேவையானதை மட்டும் பிரிச்சுக்கலாமுன்னு நாங்க ஒரு திட்டம் போட்டு வச்சுருந்தோம். ஆடியோ சிஸ்டம் பாக்ஸ்லேயே இருக்கட்டுமுன்னு இவர் சொல்ல. என் பங்குக்கு டிவியும் பாக்ஸ்லேயே இருந்துட்டுப் போகட்டுமுன்னு நானும் சொல்ல...கடைசியில் நாமொன்று நினைக்க வேறொன்று நடந்துருச்சு. இப்ப இன்சூரன்ஸ் மதிப்பீட்டுக்காக எல்லாத்தையும் பிரிச்சே பார்க்கணுமுன்னு ஆகிப்போச்சு.


பெரிய சோஃபா, நாற்காலிகள், மேசைகள், ஃப்ரிட்ஜ், கட்டில் எல்லாம் பிரிச்சு அந்தந்த இடத்தில் போட்டாச்சு. டிவி, கண்ணாடிக் கேபினெட், ஆடியோ சிஸ்டம், மைக்ரோவேவ் எல்லாம் ஒரு நடுக்கலோடுதான் பிரிக்கப்பட்டுச்சு. எல்லாம் வேலை செய்யுதான்னு செக் பண்ணிக்கணும். அதேபோல் அடுக்களைச் சாதனங்கள் பிரிச்சு அடுக்கினோம். ஒரு கண்ணாடி க்ளாஸ் உடைஞ்சுருந்துச்சு. என்னுடைய மடிக்கணினி மேசை கால் வளைஞ்சு போய் நாட்டியப்போஸில். சுத்தியல் வச்சுத்தட்டிக்கொட்டிச் சரி செஞ்சாங்க. இன்னும் ரெண்டு அலமாரிகள் டேமேஜ். ஆளைவிட்டு அனுப்பி ஃபெவிக்கால் வாங்கியாரச்சொல்லி அவுங்களே ஒட்டிக்கிட்டி ஒரு மாதிரி சரிபண்ணாங்க. இதுக்குள்ளே எதுவானாலும் நடக்கட்டும் என்ற ஞானியின் நிலையில் நான் இருந்தேன்.

மாலை அஞ்சரை ஆனதும் வேலை நேரம் முடிஞ்சுருச்சு. மீதி நாளைக் காலைன்னு எல்லோரும் போயிட்டாங்க. இதுவரை அவிழ்த்தெடுத்த கார்ட்போர்டு, பேப்பர்கள், அட்டைகள் பொட்டிகள் பபுள் ராப் எல்லாம் ஒழுங்கா மடிச்சு ரிக்ஷாவாலாக்கள் எடுத்துக்கிட்டுப்போனாங்க. நாங்களும் ஹொட்டேலுக்குப் போயிட்டோம்.

மறுநாள் காலை எட்டரைக்கு மறுபடியும் ஆட்கள் வந்து பாக்கி இருந்த எல்லாத்தையும் பிரிச்சு, அடுக்கின்னு சாயந்திரம் வரை வேலை இருந்துச்சு. ஒரு வழியா முக்கிய பொருட்கள் ப்ரிண்டர்ஸ், ஸ்கேனர்ஸ் எல்லாம் வேலை செய்யும் கண்டிஷனில் இருக்கான்னு செக் பண்ணி மனசமாதானம் ஆச்சுன்னு வையுங்க. கோபாலுக்கு இந்தியாவில் ஹோம் ஆஃபீஸ் என்றபடியால் ஃபைல்ஸ், இன்னும் தேவையான மற்ற உபகரணங்கள்ன்னு அதுவே கால் ட்ரக் சாமான்களா இடம்பிடிச்சுருந்துச்சே! இந்த அழகில் என்னோட தையல் மெஷீன், ஓவர்லாக்கர், தையல் கேபினெட் இன்னபிற பொருட்கள் வேற. என்னமோ தைச்சுக் கிழிக்கற மாதிரி! (இன்னும் அந்த ரெடிமேட் தொடரை முடிக்கலை)

ரொம்ப ஒன்னும் டேமேஜ் இல்லை. போகட்டுமுன்னு சொல்லிட்டார் கோபால். க்ளெய்ம் பண்ணனுமுன்னா அதுக்கு நாம் ஒரு excess சார்ஜ் கட்டணுமில்லேன்னார். தொலையட்டுமுன்னு விட்டாச்சு. டெல்லி ஆட்கள் கிளம்பும்போது , ஒரு பேச்சுக்காக எப்ப டெல்லி போவீங்கன்னு கேட்டேன். இப்படியே நேராக் கிளம்பிடுவோம். நிறைய பஸ் இருக்கு. ராத்திரி போய்ச் சேர்ந்துருவோம்ன்னாங்க. ஏன்? முந்தாநேத்து நீங்க வந்த கார் எங்கேன்னா.....அப்பவும் பஸ்ஸுலேதான் வந்தோம் மேடம்ன்னாங்க.

அட ராமா!!!!! அவசர உதவிக்கு அரசாங்க பஸ்ஸா? கிழிஞ்சது போங்க. கம்பெனியில் வேலை செய்யும் ஒரு தொழிலாளிக்கு விபத்துன்னா பாய்ஞ்சு வரவேணாம்? அங்கே HR பிரிவு இல்லையா? இல்லே இது இந்தியா. இங்கே எல்லோரும் ஒன்னுபோல. மக்கள் உயிர் (அதாவது அரசியல்வியாதிகளைத் தவிர மற்ற பொதுமக்கள்) என்ற ஒன்னு இருக்கே அதுக்கு மதிப்பே கிடையாது. ரொம்ப சல்லிசு. ரூபாய்க்கு 1000 ன்ற கணக்கு:(


மறுநாள் நாங்க அறையைக்காலி செஞ்சுட்டு வீட்டுக்கு வந்தோம். ' ஒரு பத்துப்பதினைஞ்சு நாளா ஆக்கி அரிக்கலையே...பழக்கம் விட்டுப்போச்சுன்னா மீட்டெடுப்பது கஷ்டமாச்சே' ன்னு சோறு ஆக்க குக்கரை (மைக்ரோவேவ் குக்கர்) எடுத்தால்..... அடியில் பெரிய விரிசல்! போயிட்டுப்போகுது. இன்னொண்ணு இருக்கே அது போதுமுன்னு பார்த்தால் அதுலே அடிப்பகுதியில் ஒரு 'துண்டை'க் காணோம்!!!!!

'அப்பாடா..... சமைக்கும் வேலையில் இருந்து தப்புனோம்' என்ற உள் மகிழ்ச்சியிடன், முகத்தைக் கொஞ்சம் சோகமா வச்சுக்கிட்டு 'குக்கர்கள் எல்லாம் உடைஞ்சுபோச்சு. சமைப்பதெப்படி'ன்னு 'அப்பாவியாக் கேட்டேன்.


PIN குறிப்பு: இங்கே சரவணபவன்கள் இல்லை:(

நத்தை போல வீட்டையே தூக்கிட்டுப்போனால் இப்படித்தான்....... ஆனாலும் மூவர்ஸ் என்றொரு அற்புதம் நல்லாத்தான் இருக்கு.

Monday, May 31, 2010

நத்தை மனிதராகிறோம்!!!

அதே நாற்காலி, அதே சோஃபா, அதே எல்லாம்னு இப்ப ஆகிவருது, பார்த்தீங்களா? முந்தியெல்லாம் ஊர் மாற்றிப்போகும்போது சாக்கு மூட்டைகள் நிறைய பண்டபாத்திரங்களும், துணிமணிகள் அடைச்ச நாலைஞ்சு ட்ரங்கு பொட்டிகளும் சுருட்டுன மெத்தைகளுமா 'பஸ் டாப்'லே போட்டுக்கிட்டு போறதுதான். அதுவும் அநேகமா வருசாவருசம் இடமாற்றல் கிடைச்சுக்கிட்டு இருந்த காலம் அப்போ. போற இடங்களில் ஏற்கெனவே நமக்கு குவாட்டர்ஸ் இருக்கும். கொண்டு போன சாமான்களை வச்சுக்கிட்டும்,. அங்கே அப்போதைய தேவைக்குன்னு எதாவது ஏற்பாடு செஞ்சுக்கிட்டும் இருந்துருவோம். அரசாங்க சப்ளையான பூதம்பூதமா இருக்கும் மேசைகளும் நாற்காலிகளுமா ஒரு மாதிரி அலங்காரத்தோடு வீடு இருக்கும். அதைப்பற்றி அப்போ ஒரு கவலையும் கிடையாது. பட்டாம்பூச்சி போல கவலை(??) ஏதுமின்றி பறந்த நாட்கள்.

மூட்டையைப் பிரிச்சால் பாத்திரங்களில் சொட்டைகள் ஏராளமா வந்துருக்கும். எல்லா ஊர்களிலும் பாத்திரத்தின் நசுங்கலை எடுக்கவும், ஈயம் பூசவும் ஆட்கள் தெருவிலே கூவிக்கிட்டு வருவாங்க. அவுங்களை வேலைக்குக் கூப்பிட்டு நம்ம வீட்டு வாசலிலே உக்காரவச்சு தட்டிக்கொட்டி ரிப்பேர் செஞ்சு வாங்கிக்குவோம். சின்னதா அடுப்புக்கரி பத்தவச்ச குழிகளில் தோல்துருத்தி வச்சு புஸ் புஸ்ன்னு காத்தடிச்சு ஈயம் உருக்குவதையெல்லாம் கண்கொட்டாம இருந்து வேடிக்கை பார்ப்பேன். அப்படியே நம்மூட்டுப் பாத்திரங்களுக்கும் காவல்!

சில வருசங்களில் அம்மாவுக்கே போரடிச்சுப்போச்சு போல. இதுலே பலசமயம் அக்காக்களின் ஃபேவரிட் பாத்திரங்களும் அடிபட்டு நசுங்கிப் போயிருதுன்னு அவுங்க கூச்சல் ஒரு பக்கம். அம்மா, தச்சுவேலை செய்யறவரிடம், ஒரு பெரிய மரப்பெட்டி செய்யச் சொன்னாங்க. கட்டில் மாதிரி அதுமேலே ஒரு ஆள் (அது நான் தான்) கால்நீட்டிப் படுக்கலாம்.
யானைப்பெட்டின்னு அதுக்கு நான் பேர் வச்சேன்:-) அதுலேதான் முக்கிய பாத்திரங்கள் இடம்பிடிக்கும். சொட்டையாகும் பாத்திரங்கள் எண்ணிக்கை கொஞ்சம் குறைஞ்சது.

என்னுடைய குடித்தனம் ஆரம்பமான காலக்கட்டங்களில் எண்ணி ஒரு பத்துப் பாத்திரங்கள் இருந்தாலே அதிகம். ஆனாலும் குடும்பப் பெட்டிக் கலாச்சாரத்தை அப்படியே ஃபாலோ பண்ணிக்கிட்டு இருந்தேன். நோ யானைப்பெட்டி:( இது கோகோகோலா கான்ஸண்ட்ரேட் வரும் அட்டைப்பெட்டியா இருந்து, அப்புறம் ஒரு டீ செஸ்ட்க்கு மாத்திக்கிட்டேன். டீசெஸ்ட் செஞ்ச அதிர்ஷ்டம் பாருங்க.... அது பூனா வந்தபிறகு உள்ளூர்லேயே ஆறு மாசத்துக்கு ஒரு வீடுன்னு மாற்றல்தான் முதல் மூணு வருசங்கள். அந்த செஸ்ட்டும்,டைனிங் டேபிள், வரவேற்பறை மேசை, அடுப்பு மேடைன்னு எடுக்காத ரூபம் இல்லை நம்மூட்டுலே!

அயல்நாட்டுக்குக் கிளம்பி வந்தபோது.... ட்ரங்கு பொட்டிகள் போய் ஸூட்கேஸ் வந்துச்சு. அதே பத்துப் பாத்திரங்களை ஒரு பெரிய லெதர் கேரி பேக்லே போட்டுக்கிட்டுப் போனோம். அந்த நாட்டுலே இருந்து வேறு நாடு போகும் போதுதான் முதல்முறையா பேக்கிங் செய்யும் ஆட்கள் வந்தாங்க. அவுங்க வந்து எடுத்துவைக்குமுன்னேயே நம்மாளு பேக்டரியில் இருந்து பொட்டிகளைக் கொண்டுவந்து 99% சாமான்களை 'அடைச்சு' வச்சுட்டார். திகைச்சு நின்னவங்க, வந்துட்டோமேன்னு அவுங்க பங்குக்கு டிவியை மட்டும் பொதிஞ்சு எல்லாத்தையும் வாரிக்கிட்டுப்போய் அனுப்பி வச்சாங்க.

நியூஸி வந்து சேர்ந்த சாமான்களில் பலதெல்லாம் தூளாகிக் கிடந்தது, நம்ம கைங்கர்யத்தாலேன்னு புரிஞ்சதும் ஆள் கப்சுப்:-) இதுக்கு அப்புறம் இடமாற்றம் வருமுன்னு நான் கனவுகூடக் காணலை. (நான் மட்டும் வெறுங்கையுடன் தனியா ஒவ்வொரு இரவும் இந்தியா வந்து போய்க்கிட்டு இருந்தேன். இது கணக்கில் வராத பயணம்)

போனவருசம் வேலை காரணமா இந்தியா வரவேண்டியதாப் போயிருச்சு. இந்த முறை சாமான்கள் மேலே கையை வைக்கக்கூடாதுன்னு நம்மாளுக்குக் கண்டிஷன் போட்டேன். தொழில்முறையான
பேக்கர்ஸ் வந்து மூணு நாளில் சகலத்தையும் ஒழுங்கா பேக் பண்ணி முடிச்சாங்க. இந்தியா கொண்டுவரவேண்டியவை, அங்கேயே ஸ்டோரேஜ்லே போட்டு வச்சுட்டு வரவேண்டியவைன்னு ரெண்டு பிரிவு. அமர்க்களமா அருமையா வேலையைச் செஞ்சாங்க. நாம் எதையும் தொட்டுப் பார்க்கலை. எது எதுன்னு சொன்னதோடு சரி. நானும் இதையெல்லாம் சுத்திச்சுத்திப் படம் எடுத்துக்கிட்டுக் கிடந்தேன்.

வந்திறங்கி வீடு தேடி எல்லாம் ஒருமாதிரி அமைஞ்சதுக்குப் பிறகு சாமான்கள் வந்து சேரத் தாமதமா ஆகிருச்சு. தாற்காலிக ஏற்பாடா, ஒரு கட்டில், மைக்ரோவேவ், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷீன், கம்ப்யூட்டர் டேபிள், சில நாற்காலிகள் எல்லாம் வாடகைக்கு எடுத்துப்போட்டு புழங்கிக்கிட்டோம். இதெல்லாம் சென்னையிலே வாடகைக்குக் கிடைக்கும் என்பதே எனக்கு முதலில் தெரியாது. நம்ம கோபால்தான் 'வலைவீசி'த் தேடிக் கண்டுபிடிச்சார். 'ட்ரேடு ஏஜன்ஸீஸ்' ன்னு ஒன்னு, வள்ளுவர் கோட்டம் பக்கத்தில் இருக்கு. போய்ப் பார்த்து நம்ம தேவைகளைச் சொல்லி, சாமான்களைப் பார்வையிட்டு நமக்கு வேணுங்கறதைத் தெரிவு செஞ்சோம். இதன் உரிமையாளர் சம்பத் நல்ல நட்பானவர். 28 வருசமா இந்த பிஸினெஸ் செய்யறாராம். மனைவி மகன்னு குடும்பம் பூராவும் யாவாரத்தைப் பார்த்துக்கறாங்க. வேலை விஷயமா தாற்காலிக இடமாற்றமுன்னு வர்றவங்களும், அமெரிக்காவில் இருந்து முக்கியமா சங்கீத சீசனுக்கு வந்து ஒரு சில மாசங்கள் வீடோ, ஃப்ளாட்டோ வாடகைக்கு எடுத்துத் தங்குற மக்கள்தான் இவருடைய வாடிக்கையாளர்களாம். இப்போ நாமும் அந்த லிஸ்ட்டுலே இருக்கோம்.


சென்னைத் துறைமுகத்துக்கு நம்ம கண்டெயினர் வந்து சேர்ந்ததும் இங்கே சென்னையில் க்ளியரிங் ஏஜண்டு நம்மை துறைமுகத்துக்கு வரச்சொல்லி உள்ளே போக ஒரு நாள் அனுமதி பாஸ் வாங்கிக்கொடுத்தார். இது(வும்) ஒரு அனுபவமுன்னு கிளம்பிப்போனோம். கண்டிஷன் ஒன்னுதான் படா பேஜாராப்போச்சு. கேமெரா கொண்டுவந்துறாதீங்கன்னார். (அவருக்கு எப்படித்தெரியும் நம் புகைப்பட ஆர்வம்!!!!!)

நம்ம கண்முன்னால்தான் கண்டெயினர் பூட்டைத் திறந்தாங்க. அதிகாரி ஒருத்தர் வந்து பார்த்தார். லக்னோக்காரர். ஹிந்திமே பாத் ஹுவா. ஒரு கட்டணம் சொல்லி அதை ட்யூட்டியாக் கட்டிட்டு சாமான்களை எடுத்துக்கச் சொல்லிட்டார். நாலைஞ்சு கையெழுத்தும், சின்னக் கட்டணமுமா எல்லாம் அஃபீஸியலா முடிஞ்சது. கண்டெயினர் துறைமுகத்தைவிட்டுக் கிளம்புச்சு. ஆனால் நம்ம வீடு இருந்த பகுதியில் பகலில் கண்டெயினர் வர அனுமதி இல்லையாம். அதனால் ஏஜெண்டுகளின் கிடங்குக்கு(வண்டலூர்) கொண்டுபோய் அங்கிருந்து ரெண்டு ட்ரக்குகளில் நிரப்பி மறுநாள் காலை வீட்டுக்குக் கொண்டுவந்து எல்லாப் பொதிகளையும் பிரிச்சு, சாமான்களை நாம் சொல்லும் இடங்களில் அடுக்கி, அட்டைப்பொட்டிகள், காகிதம், பப்புள்ராப் எல்லாம் எடுத்துச் சுத்தம் செஞ்சுட்டுப்போச்சு ஒரு குழு. ஒரே ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவின் மூடி மட்டும் விரிசல் விட்டுருந்துச்சு, ஒரு கண்டெயினர் சாமான்களில். இதுலே சாமான்களைப் பிரிக்கும் சிலர், நாங்க இன்னும் இதைவிட அருமையா இங்கே பொதிஞ்சு அடுக்குவோம். எல்லா நாடுகளுக்கும் சாமான்களை அனுப்பி இருக்கோம் அது இதுன்னு சொல்லிக்கிட்டே வேலையைப் பார்த்தாங்க.

அங்கே வீட்டுக்குள்ளே இருந்த சாமான்களை அப்படியே இங்கே மாத்தினதால், புது இடம் என்ற 'திடுக்' எல்லாம் அவ்வளவா இல்லை. எங்கே திரும்புனாலும் பழக்கப்பட்ட சாமான்களும், செட்டிங்ஸ்மா இருந்துச்சு. நம்ம வழக்கமான வேலைகள் யதார்த்தமா நடந்துச்சுன்னு வையுங்க. இந்த வீட்டுலே அடுக்களை முக்கியமாச் சொன்னாப் பேண்ட்ரி நியூஸியில் நம்ம வீட்டுலே இருந்த அளவு இருந்ததால் விறுவிறுன்னு சாமான்களை அடுக்கி முடிக்க சவுகரியமாப் போச்சு. அசௌகரியமுன்னு சொன்னால்.....
சிங்காரச்சென்னையின் அருமையான பகுதின்னு எல்லோரும் சொன்னாலும் கூட ஒரே சத்தமும் தெருப்புழுதியுமாத்தான் நாட்கள் போச்சு. இத்தனைக்கும் நமக்கு எதிர்வீடு (கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கும்) சினிமா நடிகர் விக்ரமோடது. நம்ம வீட்டுக்கு முன்னால் எதிர்வரிசையில் ரெண்டு வருசமுன்னால் வீடு கட்ட ஆரம்பிச்சு இன்னும் வேலை நடந்துக்கிட்டே இருக்கு. இழைச்சு இழைச்சுக் கட்டறாங்கன்னு சொல்வதை தினமும் கவனிச்சுக்கிட்டே இருந்தேன். சரியா ராத்திரி 12 மணிக்கு அங்கே செங்கல் மற்ற சாமான்கள் லோடு இறக்கவரும் லாரிகளின் இரைச்சல் அடங்கவே ரெண்டு மணி ஆகிரும். இதுலே மரவேலை செய்யறவங்க ராத்திரி 11 வரை டொக் டொக்குன்னு சத்தத்தோட வேலை செய்வாங்க. அக்கம்பக்கம் ஆட்களைப் பத்தி யாருக்கும் கவலை இல்லை. நம்ம பக்கத்து பில்டிங்லே சரியா பகல் 2 மணிக்கு தச்சுவேலை சத்தம் ஆரம்பிக்கும். வுட் ஒர்க் நடக்குதாம். நம்ம வீட்டுக்குப் பின்னால் இருந்த காலி மனையில் கட்டிடம் முளைக்க ஆரம்பிச்சுருக்கு. காங்க்ரீட் தூண்கள் போட்டுக்கிட்டு இருக்காங்க. இப்படி சத்தமான சத்தம். இத்தனைக்கும் தெருவில் எங்கள் பகுதியில் பத்தே கட்டிடங்கள்தான்!!!!

தினமும் அதிகாலையில் கடற்கரைக்குப்போய் நடக்கணும். நியூஸி திரும்பும்போது இப்போ இருக்கும் உடம்பு பாதியாக் கரைஞ்சு(!!) போகணுமுன்னு என்னென்னவோ மனக்கோட்டை கட்டிக்கிட்டு வந்துருந்தேன். ஆனா......ப்ச் ............விடுங்க.

பதிவின் நீளம் கருதி மீதி நாளை.