Showing posts with label School holidays. Show all posts
Showing posts with label School holidays. Show all posts

Wednesday, February 11, 2009

குரங்காய்த்தான் ஆரம்பிச்சு.......

மூணு குரங்குகள் பொம்மையைப் பார்த்ததும் என்ன ஞாபகம் உங்களுக்கு வரும்? (இன்னும் ஒரு குரங்கைக் கூடுதலாச் சேர்த்து நாலு குரங்குகளாகவும் சில இடங்களில் கிடைக்குதாமே) இந்த கூட்டு எல்லாம் நமக்கு வேணாம். இந்த மூணே போதும், இல்லை?

மூணு என்ற எண்ணுக்கு உரிய விசேஷ குணங்கள் என்னென்ன? தெரிஞ்சவுங்க சொல்லுங்க பார்க்கலாம்.

குரங்கைவிட்டுட்டு எங்கியோ போயிட்டேன்........

இந்தக் குரங்குகள் பலவிதமா மாறி யானைவரைக்கும் வந்துருக்கு.




அதுக்குப்பின்?

யானைக்கொரு காலமுன்னா பூனைக்கொரு காலம் இருக்கே.....

இப்பப் பூனையாவும் ஆகியாச்சு.


( எல்லாம் மகள், அவ்வப்போதுத் தாய்க்குக் கொடுத்த பிறந்தநாள் பரிசுகள் )


இதுகள் எல்லாம் என்ன சொல்லுதுன்னு கவனிச்சீங்களா?

கெட்டதைப் பார்க்காதே

கெட்டதைப் பேசாதே

கெட்டதைக் கேட்காதே

மூணே மூணு அன்புக் கட்டளைகள்.

கடைப்பிடிச்சுக்கிட்டு அமைதியா இதுவரை நடந்த பாடங்களை 'எப்பவாவது' படிச்சுக்கிட்டு ஓய்வு எடுத்துக்குங்க. பாவம். உங்களுக்கும் வகுப்புக்கு வந்து அலைச்சலா இருக்கும். பரிட்சை வேற வருது!!!!

மூணு வாரம் நல்லா ஓய்வெடுத்துக்கிட்டு வாங்க.

அப்ப டீச்சர்....?

உங்களுக்காக ஒரு டூர் போய் மேட்டரைத் தேத்திக்கிட்டு வரேன்.

பத்திரமா இருங்க. டேக் கேர்.

இதுதான் உங்களுக்கு ரிவிஷன் ஹாலிடேஸ்.

Wednesday, December 24, 2008

பசிச்சவள் பார்த்தப் பழங்கணக்கு.

'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரக்' ன்னு காதுக்குள்ளே வந்து விழுந்த சத்ததில் அப்படியே ஆடிப்போயிட்டேன். 'ஐயோ'..... எங்கே வெட்டறீங்க?

"ஒன்னுமில்லை. நீ ஆடாம இரு. சரியாத்தான் வெட்டறேன்"

தப்பான ஆள்கிட்டேத் தலையைக் கொடுத்துட்டேன். நம்பியே இருக்கக்கூடாது.....காதுக்குள்ளே இன்னும் சத்தம் வந்து விழுது. இனிக் கூக்குரலிட்டுப் பயன் இல்லை. ஆனாலும் கத்தாம இருக்க முடியுதா? ஒரு பேயாட்டம் ஆடிட்டுத்தான் ஓய்ஞ்சேன்.

போன வருசத்தின் கடைசிநாள். குளித்து முடிச்சு ஈரத்தலையைப் படிய வாரி எல்லா முடிகளையும் சேர்த்துப்பிடிச்சுக் கச்சிதமா ஒரு க்ளிப் போட்டுக்கிட்டு இருந்தப்ப, எங்க வீட்டுக்கு மேலே ஆகாயத்துலே பறந்து போய் ஆளைத் தேடிக்கிட்டு இருந்த சனியன், 'ஆப்ட்டுக்கிட்டாண்டா' என்ற சந்தோஷத்துடன் சட்னு இறங்கிவந்து உக்கார்ந்தது, கோபாலின் நாவில்.

" ஒரே லெவலில் இல்லையே. நான் வேணுமுன்னா கொஞ்சம் ட்ரிம் செஞ்சு விடவா?"

சனியன் இடம் மாறி என் தலையிலே வந்து உக்கார்ந்தது தெரியாமல் தலையை ஆட்டுனேன் நான்(-:

பின்பக்கத் தோட்டத்தில் நான் நிக்கக் கத்திரியும் கையுமா இவர். ( கொஞ்சம் முதல் வரிக்குப் போங்களேன்). சரியா அந்தக் க்ளிப்புக்குக் கீழே, அதைத் தொட்டதுபோல 'நறுக்.'

நான் ஆடுன ஆட்டத்தில் பயந்து போய் இடதுகையில் பிடிச்சிருந்த மயிர்க்கற்றையை லூஸில் விட்டு, அது தோட்டம் பூராவும் பரவி ஓடிப்பிடிச்சு விளையாடுது.

வாலறுந்த நரியாக நான். 'அதெல்லாம் வளர்ந்துரும். கவலைப்படாதே'ன்னு சொன்னார் கோபால்.


ஸ்க்ரஞ்சின்னு சொல்லும் துணியால் ஆன ரப்பர்பேண்ட்களை வச்சுச் சமாளிச்சேன். பெரிய சோகம் என்னன்னா.... இங்குள்ள நட்புவட்டத்தில் ஒருத்தரைத் தவிர வேற யாருமே கண்டுபிடிக்கலை:-)))))

இதோ அடுத்த புதன் வந்தால் டிசம்பர் 31. சரியா ஒரு வருசம். பழங்கணக்குப் பார்க்கும்போது அவ்வளவு பிரமாதமான வருசம் இல்லைன்னாலும் அவ்வளவு மோசமும் இல்லை. இந்தப் பதிவோடு 183 பதிவுகள். நம்ம வகுப்புக்குக் கூடுதலா இன்னும் சில மாணவர்கள். வாசகர் வட்டம் கொஞ்சம் பெருசா ஆகி இருக்கு. ஒரு சிலருக்காவதுப் பயன்படும் பதிவுகள் வந்துருக்குன்னு 'இலா'வின் பின்னூட்டம் சொல்லுது:-)

தமிழில் புகைப்படக்கலை என்ற நம் PIT பெருமக்களால் புகைப்பட ஆர்வம் கூடிப்போய் இருக்கு. எதை பார்த்தாலும் கை 'பரபர' தான். வரப்போகும் போட்டிகளுக்கு இந்தத் தலைப்பு வந்துருச்சுன்னா...... (பதிவுகள் எண்ணிக்கை கூடுனதுக்கு இதுவும் ஒரு காரணம்.)

அடுத்த வருசமாவது இன்னும் கவனமா எழுத்தை மேம்படுத்திக்கணும், மனசுலே குறிச்சுவச்சுருக்கும் சில சரித்திர நிகழ்வுகளை மறக்காம எழுதணும். எங்கெ போனாலும் கெமெராவைக் கையோடு எடுத்துப்போக மறக்கக்கூடாது.



24 செ.மீ. வளர்ந்துருக்கு. அஸினோ பிஸினோ வரும் விளம்பரத்தைப் பற்றிப் படிச்சதைக் கவனமா மனசுலே இருத்திவச்சுக்கிட்டேன். ப்ளாட்டினம் எப்படி இருக்குமுன்னு கோபாலுக்குத் தெரியாதாமே!!!! அந்த தனிஷ்குக்கு நியூஸிவரக் கொடுத்துவச்சுருக்குதோ என்னவோ:-)

ஃபாலோ அப்ன்னு சொன்னால், 'வோடாஃபோனு'க்குக் கண்ணீர்க்காவியமெல்லாம் சொல்லி அவுங்க பாதி இறங்கிவர, நானும் சமாதானக்கொடி பிடிச்சு மெதுவா மேலேறி நடுவழியில் சந்திச்சு 40 டாலர் நம்ம கணக்குலே வரவு வந்துருக்கு. 50% வெற்றி. 'அடிசறுக்குன யானை'யை பாதிவரை தூக்கிவிட்டாச்சுன்னு வச்சுக்கலாம்.


உலகம் முழுசும் பொருளாதாரம் கொஞ்சம் கீழ்நோக்கி இருக்கும் இந்த சமயத்தில் அனாவசியச் செலவுகளைக் குறைக்க முதலில் கத்துக்கணும். எந்தக் காரியமும் அது நல்லதோ அல்லதோ வீட்டில் இருந்துதானே ஆரம்பிக்கணும். அதனால் இந்த வருச கிறிஸ்மஸ் பண்டிகைக்கான அலங்காரத்தில் முதலில் கை வச்சேன். பழைய அலங்காரப் பொருட்கள் இருந்த அட்டைப் பெட்டிகளைக் குடைஞ்சு கிறிஸ்மஸ் ரீத் செஞ்சு மாட்டியாச்சு. இந்த வகையில் 25 டாலர் மிச்சம்!
நாமும் பண்டிகை கொண்டாடுவொம்லெ:-))))



ரீத்துக்கான வளையம் குக்கர் கேஸ்கட்:-))))




நம்ம வகுப்புக் கண்மணிகளுக்கு விடுமுறை விட்டாச்சு. நாளை முதல் 15 நாள் டீச்சரை மறந்துருங்க. ஆனால் வகுப்பை மறக்காதீங்க. புதுவருசத்தில் உங்களையெல்லாம் மீண்டும் சந்திக்கும் வரை உங்கள் அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்மஸ் பண்டிகை & புதுவருசத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

என்றும் அன்புடன்,

துளசி,

கோபால்
&
கோகி என்ற கோபாலகிருஷ்ணன்.

நம்ம ஊர் விழாக் காட்சிகளில் சில:












நேட்டிவிடி ஸீன் நம்ம ' டிபிஆர்ஜோ' வுக்காக.