Wednesday, July 24, 2019

சரித்திரத்துக்குள்ளெ நுழைஞ்சேன்........... (பயணத்தொடர், பகுதி 121 )

யானைகளைப் பார்த்ததோ என்னவோ.... யானைப்பசி. மொதல்லே போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கலாமுன்னு போனால்.... டைனிங் ரூம் கலகலன்னு இருக்கு. முக்கால்வாசிப்பேர் நம்மைப்போலவே  சஃபாரி அது இதுன்னு வெளியே போயிட்டு இப்பதான் சாப்பிட வர்றாங்க.

சாப்பிட்டு முடிச்சு அறைக்குப்போய் பால்கனியில் உக்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.  காலையிலேயே யானை சவாரி தொடங்கிருது போல.  பாவம்....அந்த யானை  ஏரிக்கரையோரமாவே போறதும் வாரதுமா ட்ரிப் அடிச்சுக்கிட்டு இருக்கு.



நேத்துப் பார்த்த ப்ரைவேட் குளத்தில் ஒரு சலவைத் தொழிலாளி, துவைச்சுத் துவைச்சுக் கும்பாரமா போட்டுக்கிட்டு இருக்கார்!  இப்படியாட்களையெல்லாம் பார்த்தே எவ்ளோ வருஷங்களாச்சுல்லே?

ஹபரணவுக்கு நாம்  வந்த வேலை முடிஞ்சது, பதினொரு மணிக்குக் கிளம்பிடலாமுன்னு முடிவு. செக்கவுட் செஞ்சதும், இந்த யானை எதுவரை போகுதுன்னு பார்க்கணுமுன்னு ஏரிக்கரையோரமா நாமும் போனோம். ரொம்ப தூரம் இல்லை.... ஒரு கிமீ போயிட்டுத் திரும்பி வந்துருது !   நாமும் அப்படியே :-)



இங்கிருந்து ஒரு மணி நேரப்பயணம் அடுத்தது.  போற வழியில் கொய்யா விக்கறாங்க  !  நாம் பூனாவில் இருந்தப்பதான் இப்படிப் பச்சைக்கொய்யா பார்த்துருக்கோம். அம்ருத்!  சைஸ் கூடப் பெருசா இருக்கும்  ! உள்ளே வெள்ளைதான். அப்படி ஒரு ருசி!



நாமும் ஒரு கிலோ (நாலே நாலுதான்) வாங்கினோம்.  நறுக்கி மிளகாய்ப்பொடி உப்பு தூவித் தர்றாங்க.  அது மஞ்சுவுக்கு. நமக்கு  வெறும் கொய்யா  :-)
பயணம் தொடர்ந்தது......   ராணுவத்தலைமையகம்.... வாசலில் டேங்க் !
அதையடுத்துக் கொஞ்ச நேரத்துலே  அந்தக்காலத்துலே  விழுந்து விழுந்து வாசிச்ச சரித்திர நாவல்களில்  ரொம்பவே பரிச்சயமாயிருந்த  அனுராதபுரத்துக்குள்ளே நுழைஞ்சாச்சு!

கடைவீதிகள் எல்லாம் ரொம்பவே சாதாரணமா தெருவோரக் கடைகளாவே இருக்கு. ஒரு முச்சந்தியில் நிக்கும்போது பார்த்தால்.... எதிரில் ஒரு ஹிந்துக்கோவில்! ஆனா அந்தாண்டை வாசல் எந்தப்பக்கமுன்னு தெரியலை....

 தொடர்ந்து போனால் இன்னொரு முச்சந்தியாண்டை புத்தர் ! போற போக்கில் பார்த்துக்கிட்டே நாம் போய்ச் சேர்ந்தது இசுருமுனிய கோவிலுக்கு!


கார்பார்க்கையொட்டியே ஒரு பெரிய ஏரி, ஏராளமான தாமரைச்செடிகளோடு !
இந்தாண்டை (வழக்கம்போல்) தமிழில் மட்டும் தப்பும்தவறுமா எழுத்துப் பிழைகளோடு (பிழை பிடிப்பதில் பெரிய ஆள் இல்லையோ நான் ) என்ன பார்க்கக்கிடைக்குமுன்னு தகவல்  நம் பார்வைக்கு!
உள்ளே போக ஆளுக்கு ஒரு இருநூறு !  வாசலில் செருப்பு ஸ்டேண்டில்  காலணிகளை விட்டுட்டு, சாதாரணமா இருக்கும் வாசலில் நுழைஞ்சு போனால்.....  மணல்வெளியில் அந்தாண்டை ஒரு கேரள வீடு !

நிறையப்படிகள் ஏறிப்போகணும். தொட்டடுத்து ஒரு பெரிய குளம் !  வாவ்.... குளக்கரையில்  புள்ளையார்! கூடவே ரெண்டு யானைகள். புள்ளையாரின் இடப்பக்கப் பாறையில்  தும்பிக்கை தூக்கின யானை.. அட!  யானைக்குளம் !

இடதுபக்கம் இன்னொரு கட்டடம். அதுக்குப்பின் ஒரு பெரிய சைத்யா.  குன்றின்மேல் ஒரு கூட்டம் !

வீட்டுக்குப்பின்புலமா  அடர்ந்து நிக்கும் பாறைகளால் ஆன குன்று ! படிகளின் ஆரம்பத்தில் பக்கத்துக்கொன்னா ரெண்டு  சிலைகள். த்வாரபாலகரா நிக்கறது  நாகராஜன். படிகளில் ஏறிப்போனால்.....  இது வீடு இல்லை.  பழைய கோவிலாம். இசுருமுனிய ராஜமஹா விஹாரை !

உட்பக்கமா ரெண்டு பெரியபுத்தர்கள் நின்ற நிலையில். அங்கே போகும் வழி கண்ணாடித்தடுப்பு வச்சு மூடி இருக்கு.  ஒரு மேடையில் இருந்த நிலையில் ஒரு சமாதிபுத்தர். கண்ணாடித்தடுப்பின் வழியாப் பார்க்கலாம்.  தடுப்புக்கு இந்தாண்டை  படையல்.

கும்பிட்டதும் வெளியே  வந்தால் சின்னதா பால்கனி போல  ரெண்டு பக்கங்களில்.  கோவில் வாசலுக்கு இடப் பக்கம்  மட்டும்  பாறையோடு சேர்த்துக் கட்டி இருக்கும் இடத்தில்  அந்தப்பாறையில் ஒரு செதுக்கு சிற்பம்!
ஒரு ஆள் கம்பீரமா உக்கார்ந்துருக்கார்.  வலப்பக்கம் ஒரு குதிரைத்தலை.  குதிரையின் கடிவாளம் போல ஒரு கயிறு  அந்த ஆளின் வலக்கையின் மேல் பாகத்தில் சுத்தி இருக்கு!
இந்தச் சிற்பம் என்ன ஏதுன்றது ஒரு புரியாத புதிர் என்ற நிலையில்  பல ஆராய்ச்சியாளர்கள் பலகாலமா ஆராய்ச்சி செய்துருக்காங்க. அதுலே ஒருவர்,  அந்த மனிதர் கபிலர், அந்தக் குதிரைதான் பகீரதனின் முன்னோர் அனுப்பிய அஸ்வமேதக் குதிரைன்னு சொன்னார்.

ஓ....  இருக்கலாம்.  அந்தக் குதிரையை இந்திரன் கவர்ந்து போய், கபிலரின் ஆஸ்ரமத்துலே  கட்டிப்போட்டுருந்தான் இல்லையோ? அதைத்தேடி வந்த அறுபதினாயிரம் பேர், இங்கே (தவத்தில் லயித்து ) கண்மூடி  இருந்த கபிலர்தான் குதிரையைத் திருடி வந்துட்டு இப்போ ஒன்னும் தெரியாதவராட்டம்  தவம் செய்யும் பாவனையில் இருக்கார்னு அவரை  எழுப்ப ஓங்கி அடிச்சதும், கண் திறந்த முனிவர் பார்வையில் பட்ட அத்தனைபேரும்  எரிஞ்சு சாம்பலாகிடறாங்க.

அப்புறம் பகீரதன் தவம் செஞ்சு கங்கையை பூமிக்கு வரவழைச்சு முன்னோர்கள் சாம்பலைக் கரைச்சு அவுங்களைக் கரையேத்துறான்.

இந்தக் கதை உங்களில் அநேகம்பேருக்குத் தெரிஞ்சுருக்கும்தான்.  தெரியாதவங்க  இப்படியே இலங்கையில் இருந்து ஒரே தாவில் இந்தியாபோய் இந்தச் சுட்டியில் எட்டிப்பார்த்துக்கலாம். நம்ம ஹரித்வார், ரிஷிகேஷ் பயணப்பதிவில் இருந்துதான்........


ஆமாமாம்....  இவர் கபிலரேதான்னு சனம் நினைக்கும்போது....   வேறொரு ஆராய்ச்சியாளர் 'இல்லவே இல்லை'ன்னு சாதிச்சார். அவருடைய ஆராய்ச்சியின்படி  இவன்  வருணன் (பர்ஜன்யா)!  அந்தக் குதிரை அக்னி (வேஷம் போட்டுக்கிட்டு வந்துருக்கு !)  ரெண்டுபேரும் பூலோக விஸிட் வந்துருக்காங்க :-)

இன்னொருத்தர் சொல்றார்.... இவன் குதிரை விக்கற ஆள். அப்பெல்லாம் வெளிநாடுகளில் இருந்துதான் குதிரைகளை இறக்குமதி பண்ணுவாங்க.  குதிரை வணிகம்  ஜே ஜேன்னு இருந்த காலங்கள் !

இப்படி ஆராய்ச்சியாளர்கள் ஆளாளுக்கு  ஒன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போது  உள்ளே வந்தார் இன்னொருவர்.

அந்த மனிதன் அரசன். உக்கார்ந்துருக்கும் ஸ்டைலைப் பாருங்க.

ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு !   கையில், காதில், கழுத்தில், காலில்  நகைநட்டென்ன !   அட! ஆமால்லெ?
பல ஆண்டுகள் தவம் செஞ்சு உடல் வத்திப்போயிருக்கும் முனிவர் மாதிரியா இருக்கு?  அதானே?  (குதிரைதான் இப்படி மெலிஞ்சு இருக்கோ? )

தான் நிர்மாணிக்கும் நகரைப் பார்த்துப் பெருமிதத்துடன்  கம்பீரமா உக்கார்ந்துருக்கும் அரசனே இவன் என்று அடிச்சுச் சொல்லி இருக்கார். இது அவனுடைய குதிரைன்னு முடிச்சுருக்கலாம். ஆனால்  அதுதான் இல்லை..... அந்தக் குதிரையை...

முன் பிறவிகளில் யக்ஷிணியா இருந்தவள்தான் இந்தப்பிறவியில் குதிரையா வந்துருக்காள். இவள் அரசர் பாண்டுகபயவின் குதிரை.  அனுராதபுரத்தின் முதல் அரசன் இவந்தான்.  அரசனின் தோழியா கூடவே  கடைசி வரை துணையா நின்னு காப்பாத்தினாளாம். இவளுக்குச் சிலை வச்சு, கடவுளா ஆக்கிட்டானாம் அரசன். ஆச்சு இதெல்லாம்  ரெண்டாயிரத்து முன்னூத்துச் சொச்சம்  வருஷங்களுக்கு முந்தி.....     மஹாவம்சத்துலே இதைப்பற்றியெல்லாம் இருக்குன்னு முத்தாய்ப்பா சொல்லி, குதிரையும் மனுஷனும் 'புதிரை' (இப்போதைக்கு)  விடுவிச்சுருக்கார்.  குதிரையின் பெயர் Cetiya .

(எனக்கென்னமோ ராஜஸ்தான் பயணத்துலே பார்த்த  மஹாராணா ப்ரதாப் சிங்கின் பட்டத்துக் குதிரை 'சேதக்'  ஞாபகம் வந்தது உண்மை)

பார்க்கலாம்.....  வருங்காலத்தில் வேற யாராவது வந்து ஆராய்ச்சிசெஞ்சு என்ன  முடிவு சொல்லப்போறாங்கன்னு.... வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு, இல்லையோ?
இந்த அரசன் பாண்டுகபயவின் கதைகூட சுவாரஸ்யமானதுதான் ! மஹாவம்சத்தில் இருக்குன்னு தகவல்!

ஆராய்ச்சி விவரங்கள்  தொல்லியல் துறை பக்கங்களில் இருந்து கிடைத்தன. அவர்களுக்கு  நன்றி!

இங்கேயே குதிரை மனுஷன் முன்னால் இவ்ளோ நேரம் நின்னுட்டோமே.....    வாங்க இன்னும் என்ன இருக்குன்னு பார்க்கலாம்.....

தொடரும்........ :-)


17 comments:

said...

awesome blog sir keep it up Daily e-papers

said...

ஆச்சர்யமா இருக்கு. நிறைய இடங்களில் பிள்ளையார் சிலை. நானும் இந்தோனேஷியா, தாய்லாந்திலெல்லாம் பார்திருக்கேன்.

யானைச் சவாரியை ஏன் விட்டுவிட்டீர்கள்?

இசுருமுனிய விகாரை - நன்றாக இருக்கு. தொடர்கிறேன்.

said...

அருமை நன்றி

said...

யானை மேல் ஏறி சவாரி செய்வது அத்தனை சுகமில்லை

said...

அநுராதபுரம் முழுவதும் ஓடிஓடி பார்பதற்கு குறைந்தது ஒருநாள் முழுவதும் தேவை.

இசுறுமுனி சிற்பங்கள் பிரசித்தம் காதலர்சிற்பமும் இதில் அடங்கும். சென்றிருக்கிறேன்.

said...

யானை சவாரி தொடர்பான படங்கள் மிகவும் அருமை.

said...

முதல் படமே ஆஹா..பழங்கள்.. எனக்கு குதிரை,யானை சவாரி செய்ய மனம் வராது. எகிப்தில் ஒட்டக சவாரிக்கு அழைத்தார்கள் நான் போகல. ஆனா அந்த ஒட்டக காரர். என்னால் வருமானம் இல்லாமல் போகுது என(ஆள் கூடினால் வருமானமெல்லோ) புலம்ப் பணம் மட்டும் கொடுத்தாச்சு.
பிரசித்த மான இடம் அநுராதபுரம். அங்கு பார்க்க வரலாற்று இடங்கள் இருக்கு. படங்கள் அருமை.

said...

ராஜ்ஸ்தானில் சேதக்... இங்கே சேதியா! :)

உங்களுடன் நானும் தொடர்ந்து பயணத்தில்... விடுபட்ட பகுதிகளைத் தான் படிக்க இயலவில்லை!

தொடர்கிறேன்.

said...

வாங்க அட்மின் இ பேப்பர்,

நன்றி !

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

ஆசியநாடுகள் பலதிலும் புள்ளையார் இருக்கார்! நம்ம நியூஸியில் கூட முதல்முதலில் வந்தவர் புள்ளையார்தான். வெலிங்டன் ம்யூஸியத்தில் நியூஸியின் முதல் புள்ளையார் இருக்கார். இந்தியர்கள் வர ஆரம்பிச்சப்ப, ஒரு குஜராத்திக் குடும்பம் அவரைத் தூக்கிட்டு வந்தாங்களாம்!

யானை சவாரி ஒருமுறை பாலியில் போனதே போதும். டெய்ஸிக்குக் கஷ்டம் கொடுத்துட்டோமோன்னு பாவமா இருந்தது.....

பழைய கால விஹாரைகள் எல்லாமே ஒரு விதத்தில் அழகே!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா,

உண்மைதான்!

said...

வாங்க மாதேவி,

ஒரு ரெண்டுநாட்கள் தங்கிப்பார்க்க வேண்டிய இடம். விவரம் அறியாமல் நிறைய கோட்டை விட்டுட்டேன். பார்க்கலாம் இன்னொருமுறை வாய்க்குமா என்று !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,


வருகைக்கு நன்றி !

said...

வாங்க ப்ரியசகி,

ராஜஸ்தான் பயணத்தில் கோபாலையும், நம்ம ட்ரைவரையும் ஒட்டகத்தில் ஏத்தியாச்சு :-)

அநுராதபுரம் ரொம்பவே அருமைதான்ப்பா!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சில சரித்திர சம்பவங்களை வெவ்வேற இடங்களில் பார்க்க நேர்ந்தால் ஹிஸ்டரி ரிப்பீட்ஸ் என்பது சரிதான் போல!


எப்ப நேரமும், மனமும் கிடைக்கிடைக்குதோ அப்போது வாசிக்கலாம். இதுதான் வலைப்பூவில் முக்கியமான அம்சம்!

said...


யானை சவாரி படங்கள் எல்லாம் செம்ம யா இருக்கு ..

இசுருமுனிய ராஜமஹா விஹார்..அமைப்பு வீடு போல இருந்தாலும் வித்தியாசமாய் அழகாய் இருக்கிறது ..