Wednesday, December 03, 2014

முதல் மரியாதை ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 2)

உறக்கச் சடைவு இருந்தாலும்,  அன்றைய நாளை வீணாக்க மனசு வருதா?   ஊர்வந்து சேர்ந்த விவரத்தை மச்சினருக்குச் சொல்லிட்டு, ஏழரைக்குக்   காலைக் கடமைகள் முடிச்சு, கீழே  ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போனோம். சின்னதா  ஒரு ரெஸ்ட்டாரண்ட். தொட்டடுத்து வெளியே (செயற்கை) புல்வெளியில்  போட்டு வச்சுருந்த  செட்டிங்ஸ் நல்லா இருக்கு.  நம் காலை உணவு அங்கேயே இருக்கட்டும்.


மூலிகைகளும் வெள்ளரிக்காயும்  சேர்த்த  ஆரோக்கிய பானம் குட்டிட்டம்ப்ளரில்  கொண்டுவந்து  விளம்பினாங்க. பஃபேதான் என்றாலும் கூட, 'என்ன வேணும்? தோசை போட்டுக் கொண்டுவரட்டுமா?  ஆம்லெட்டுக்குச் சொல்லவா?'ன்னு   ஏகத்துக்கும் விசாரிப்பு. முகத்தில் புன்சிரிப்போடும்  இனிமையான சொற்களுடனும், பணிவோடும் நம்மை உபசரித்த பணியாட்கள்.  அப்பாடா.... நேத்து இரவு விமான நிலைய வரவேற்புக்கு மாற்றுமருந்து.

நேற்று இரவு ஹொட்டேல் வரவேற்பிலும்  மிகச் சிறிய வயதுடைய இளைஞர்களே.  மரியாதையுடனான அன்பான சொற்களும், இனிய புன்னகை முகங்களும் நமக்கு உற்சாகம் தந்தது உண்மை.

புது ஹொட்டேலாம். ஆரம்பிச்சு  ஒரு ஏழெட்டு மாசம் ஆகுதாம். இந்தியாவின் பல இடங்களில்  ஆரம்பிச்சுக்கிட்டே போகும் செயின் ஹொட்டேல் பிஸினெஸ். இதுவரை 16  ஊர்களில் ஆச்சு.



குடையைப் பார்த்தீங்களா? இதுபோல நம்மூரில்  இல்லைதானே?

அட! ஆமாம்!!!


எட்டேகாலுக்கு மச்சினர்  வந்துட்டார்.    கோபாலின் தம்பி Bபூபால். ( இவருக்கு இளையவர் நந்தகோபால். என் மாமியாருக்கு நல்ல ரசனை, பெயர் வைப்பதில்! இன்றைக்கு டிச. 3. என் மாமியாரின் நினைவுநாள்.) ட்ரைவர்  வர நேரமாகுமுன்னு  ஆட்டோவில் கிளம்பி வந்திருந்தார்.   நாங்களும்   அவருடன் வீட்டுக்குப் போனோம்.  அதிக தூரமில்லை, ஒரு அஞ்சு கிமீ வரும்.  பெங்களூர் சாலைகளை எல்லாம் சீரமைப்பு என்று தோண்டிப்போட்டு வச்சுருக்காங்க.  போகும் வழியில் எல்லா இடங்களிலும் மழைத்தண்ணீர் தேங்கலும், குப்பையும், ப்ளாஸ்டிக் குவியலும் அழுக்குமாக இருக்கு. மக்கள் தொகை கூடக்கூட இதெல்லாம்  இருக்கத்தான் செய்யும் என்ற  பதில் கிடைச்சது.
எது எப்படி இருந்தாலும் போகும் வழியில் பார்த்த சுவர் சித்திரங்கள்  அருமையே!

மைத்துனர் மனைவி சாந்தியுடன்  கொஞ்ச நேரம்  வீட்டுக்காரியங்கள் பேசினோம். ஃப்ரிட்ஜைத் திறந்தபடியே  'பகல் சமையலுக்கு  என்ன வேணும் ?'என்று கேட்டாங்க.  'எப்பப் பார்த்தாலும் அடுப்பைக் கட்டிக்கிட்டு அழணுமா?  வெளியே போய் சுற்றிப் பார்த்துட்டு அப்படியே  வேறெங்காவது சாப்பிடலாம்' என்று சாந்திக்கு ஓய்வு கொடுத்தேன். அதுக்குள்ளே ட்ரைவர் வந்துட்டார்.  அன்றாட  வீட்டு வேலைக்கான உதவியாளரும் வந்துட்டதால்    அவைகளை முடிச்சுட்டு சாந்தியை ரெடியாகச் சொல்லிட்டு,   அக்கம்பக்கம் இருக்கும் கோவிலுக்குப் போகலாமுன்னு ஐடியா கொடுத்தார் பூபால்.

ஆறே நிமிசத்தில்  கோவில்கள்,  நாலு சேர்ந்து இருக்கும் இடத்துக்கு வந்திருந்தோம்.  மல்லேஸ்வரம், பதினைஞ்சாவது குறுக்குத் தெருவாம். கோவில்வாசல்களுக்கே உரிய பூக்கடைகளும்  பக்தர்களின் கூட்டமுமா  கலகலன்னு  இருக்கு அந்தப் பகுதி. முதலில் எங்கே போகலாமுன்னு  பிரமிப்பு வந்தது.    நம்ம பெருமாளாகவே இருக்கட்டுமுன்னு (அதான் வாசலில் யானை வேற இருக்கே!) பத்துப்பதினைஞ்சு  படிகள் ஏறி ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்துக்குள் நுழைஞ்சோம்.  பார்வைக்குப் பழைய கோவிலாக இருக்கே தவிர  கட்டி முடிச்சு 32 வருசங்கள்தான்  ஆகி இருக்கு.


தனியார் கோவில்தான்.சின்னக்குன்றின்மேல் கட்டி இருக்காங்க.  உள்ளேயும் அங்கங்கே  ரெண்டு மூணு படிகள் ஏறணும்.  விஸ்தாரமான  பிரகாரம் கடந்து நேரெதிராக் கருவறை முன்மண்டபம்.   அடுத்த பாகத்தில்  ஸ்ரீநரசிம்மர், லக்ஷ்மியை  இடது மடியில் அமர்த்திப்பிடிச்சு உக்கார்ந்துருக்கார். பளபளக்கும் கற்கள் வச்ச திருமண்ணும்(!) தங்கக் கண்களும், தங்கக் க்ரீடமும்,  தங்கக் கவசமுமாய் ஜொலிப்போ ஜொலிப்பு.  நீட்டிய நாக்கு முழுசும்  கெம்புக்கல் வரிசை!  அலங்காரம் அட்டகாசம்.


பட உதவி:  நம்ம கூகுளாண்டவர்

கோவிலுக்குள் நுழைஞ்சது முதல் என் இனிய தோழியின் நினைவே மனசில் வந்து மணை போட்டது. நாம் போன நேரம், நமக்கு  ரொம்ப நல்ல நேரம் போல!  பூஜை ஆரம்பிக்கப்போகுதுன்னு  தெரிஞ்சதும் சட்ன்னு கருவறை முன்மண்டபத்தில் இருந்த ஆண்களுக்கும் பெண்களுக்குமாத் தனித்தனியா இருந்த வரிசையில் சேர்ந்துக்கிட்டோம்.

சும்மாச் சொல்லக்கூடாது... இந்த கர்நாடகா கோவில்களில் பூஜைகளை ரொம்பவே  விஸ்தரிச்சு  ஆத்மார்த்தமா செய்யறாங்கன்னு தோணுச்சு. நம்மூர் கோவில்களின் பூஜை முறைகளைவிட பலவித்தியாசங்கள் இருப்பதைக் கவனிச்சேன். நரசிம்ஹப் பெருமாளுக்கு தூபதீபம் எல்லாம் காட்டுன கையோடு  அவருக்கு இடப்பக்கம் அந்த  தீபங்களை  காமிக்கிறார் பட்டர்.  நான் நிற்கும் இடத்திலிருந்து   அங்கே வேறென்ன சிலாமூர்த்தி இருக்குன்னு புலப்படலை:(

கருவறை வாயிலைச் சுற்றி  இருந்த  தங்கமூலாம் பூசிய  அலங்காரத்தில்  மஹாவிஷ்ணுவின் சிலபல அவதாரங்களையும், பாற்கடலில் பள்ளிகொண்டவனாயிருக்கும் கோலங்கள்  இருந்தாலுமே என் கவனத்தைக் கவர்ந்தது....  அங்கே இருந்த  நரசிம்மந்தான். இடப்பக்கத்துலே இருக்கும்  அவதார கோலங்களில்  ஒன்றாக தூண் ஒன்று  ரெண்டாகப்பிளக்க, நரசிம்ஹர் தோன்றுகிறார்.  இடுப்புவரை  வெளியே தெரிகிறது.  (அடடா... இப்படி இதுவரை எங்கேயும் பார்த்த நினைவு இல்லையே!)

இதுக்கு நேரா வலப்பக்கம்,  நரசிம்ஹர் மடியில்  , ஹிரண்யகசிபு கிடக்க, நகங்களால் வயிற்றைக் கீறும் தோற்றம்.

சுமார் அரைமணி நேரம் விலாவரியா பூஜை நடந்து முடிஞ்சது. யாரோ அர்ச்சனைத் தட்டை நீட்டவும்,  சுமார் பத்து நிமிசங்களுக்கு  அஷ்டோத்ரம் எல்லாம்  சொல்லி  நிதானமா அர்ச்சனை செய்தார் பட்டர். நம்மூர் கோவில்களில் அர்ச்சனை என்றால் சகஸ்ரநாமத்தில் ஒரு ஸ்லோகம் (எ.கா. சாந்தாகாரம், புஜகசயனம்...) ஆரம்பிச்சு அதில் முதல்வரியைமட்டும் ஆர்ப்பாட்டமாக தொடங்கி, அடுத்த வரிகளை முணுமுணுன்னு சொல்லி முடிச்சு அரை நிமிசத்தில்  தீபாரத்தித் தட்டை நம் முன் நீட்டும் அவசரம் ஒன்றுமில்லை அங்கே!

பூஜை முடிந்ததும் எல்லோரும்  கருவறை மண்டபம் விட்டு வெளியேற, நான் அந்தப்பக்கம் (ஆண்கள் வரிசை ) ஓடிப்போய்ப் பார்த்தேன். அங்கிருந்து  அந்த சிலாமூர்த்தி தெரிஞ்சார். அட! நம்ம நேயுடு!!!

தூணில் இருந்து வெளிப்படும் நரசிம்ஹனை, நம்ம கோபாலுக்குக் காமிக்கலாமுன்னா....  எங்கே?  அதுக்குள்ளே  கோவிலை வலம் வர  பிரகாரத்துக்குள்  போயிட்டார். கோபாலுக்குக் கொடுத்து வைக்கலை. பூபாலுக்குக் காண்பிச்சேன்.  அவர் முகத்தில் வியப்பு! கருவறையின் பின்புறம் இன்னொரு பெரிய ஹாலும் அங்கே சில சந்நிதிகளுமா இருக்கு.   சில பல பக்தர்கள்  குடும்பத்தினர்   அங்கங்கே கூடி இருந்து  தனிப்பட்ட குடும்ப விசேஷங்களை நடத்திக்கிட்டு இருந்தாங்க.  கோவில்கள்,  ஒரு சமூகக்கூடம் போல செயல்படுவதைக் கண்ட திருப்தி எனக்கு! படம் எடுக்க முடியலையே என்ற குறை மட்டும் மனசுக்குள்ளே:(  அனுமதி  வாங்கலாமான்னா.... யாரிடம் கேட்பது என்ற தயக்கம்.

யாரோ ஒரு புண்ணியவான்   இந்தக் கோவிலில்  நடக்கும் பூஜையின் ஒரு பகுதியை  யூ ட்யூபில் போட்டுருக்கார்.   நல்லாவே இருக்கு. நேரமும் விருப்பமும் இருந்தால் இங்கே பாருங்களேன். ஒரு மூணரை நிமிசப்படம்தான். (புண்ணியவானுக்கு  நம் நன்றிகள்.)






பயணம் தொடரும்.....:-)



32 comments:

said...

கடமை தவறாத பட்டர் வாழ்க...

said...

அருமை

said...

சுவாமி தரிசனம் சிறப்பா ஆகிடுச்சு போல மேடம். நீங்க போயிருப்பீங்களான்னு தெரியலை, நாமக்கல்ல மலையை குடைஞ்சு பல்லவர் காலத்துல அமைச்ச நரசிம்மர் கோவில் இருக்குது. அங்கேயும் நரசிம்மர், ஹிரன்யகசிபு சிற்பங்கள் எல்லாம் பிரமிப்பா இருக்குது. அந்த கோவில்ல வேலை செய்யுற பட்டர்கள்ல, குறிப்பிட்ட ஓரிருவர் மட்டும்தான், அதுக்கு பிரமாதமான விளக்கம் கொடுக்குறாங்க. அவங்க சொல்றத கேட்கும்போது, சிற்பங்களை பாக்குறதவிட நமக்கு பல மடங்கு பிரமிப்பு இருக்கும்.

said...

15வது குறுக்குத் தெருவின் பெயரே “டெம்பிள் ரோட்”தான். இன்னொன்றும் கவனித்தால், மூலஸ்தானத்தில் மின்விளக்குகள் உபயோகிப்பதில்லை. உயரமான அடுக்கு விளக்குகளின் ஒளியில்தான் பிரகாசிப்பார்கள் லக்ஷ்மியும் நரசிம்மரும். இலங்கைக்குச் செல்லும் வழியில் இந்தக் குன்றின் மேல் சற்று ஓய்வெடுத்துச் சென்றதாக இராமரின் பாதங்கள் பிரகாரத்தின் பின்பக்கத்தில், பாறைமேல் செதுக்கப்பட்டிருக்கும். படம் எடுக்க அனுமதி கிடையாதென்றே நினைக்கிறேன்.

said...

நம்பள்கி has left a new comment on your post "முதல் மரியாதை ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 2)":

கோபாலின் தம்பி Bபூபால். ( இவருக்கு இளையவர் நந்தகோபால். என் மாமியாருக்கு நல்ல ரசனை, பெயர் வைப்பதில்! இன்றைக்கு டிச. 3. என் மாமியாரின் நினைவுநாள்.)

பால் பால் என்று ஒரு தமிழ் சினிமா பாட்டு கேட்டு இருக்கிறேன்! அதன் விளைவோ--அல்லது மாமனாருக்கு பால் வியாபாரமோ!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நானும் அவரை அப்போது மனதார வாழ்த்தினேன்.

அங்கே பட்டர்கள் ஒருவருக்கொருவர் தமிழில்தான் பேசிக்கிட்டு இருந்தாங்க என்பது கொசுறுத் தகவல்:-)

said...

வாங்க செங்கதிரோன்.

வணக்கம். முதல் வருகைக்கு நன்றி.

மீண்டும் வரணும்.

said...

வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.

இந்தப்பயணத்தில் நாமக்கல், திருச்செங்கோடு எல்லாம் முதல் திட்டத்தில் இருந்தது. மதுரை பதிவர் மாநாடு எல்லாத்தையும் இப்படிப் புரட்டிப் போட்டுருச்சே!

தகவலுக்கு நன்றி.

//கோவில்ல வேலை செய்யுற பட்டர்கள்ல, குறிப்பிட்ட ஓரிருவர் மட்டும்தான், அதுக்கு பிரமாதமான விளக்கம் கொடுக்குறாங்க. //

இது என்னவோ உண்மைதான்.

எனக்கும் இந்த அனுபவம் உண்டு.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

உள்ளுர்காரர், நீங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும்:-)

ஆமா.... நரசிம்மர் எதுக்கு இலங்கைக்குப் போனாராம்? அதுவும் லக்ஷ்மியுடன்!

said...

வாங்க நம்பள்கி.

தவறுதலா உங்க பின்னூட்டம் டெலீட் ஆகிருச்சு. இப்ப காப்பி பண்ணி இங்கே போட்டுருக்கேன்.

நோட்புக்லே பப்ளிஷ் தொடும்போது, விரல் டெலீட்டைத் தொட்டுருச்சு போல:(

மாமனாருக்கு பால் வியாபாரம் இல்லை:(

காய் வியாபாரம். ஏலக்காய்.!

பயணத்தில் தினம் குறைஞ்சது ரெண்டுமுறையாவது உங்களை நினைச்சுக்கிட்டேன் என்பதே மெய்.

உங்க தளத்தை யாரோ ஹேக் பண்ணிட்டாங்கன்னு சேதி வந்ததே:(

நல்லவேளை மீண்டு(ம்) வந்தமைக்குப் பாராட்டுகள்.

said...

இங்கேயும் சாரதாபீடம் கோவிலில் பூஜை சிறப்பா இருப்பதாகத்தான் எனக்கும் தோணுது.

said...

லக்ஷ்மியும் நரசிம்மரும்.. அப்புறம் full stop இருக்கு பாருங்க:)! இராமரின் பாதங்கள் என்றே சொல்லியிருக்கிறேன். அதுவும் செவிவழியாக அறிந்த கதையே.

said...

அட ராமா!!!!

இப்படிப் புள்ளியைக் கவனிக்கலையே, ராமலக்ஷ்மி:(

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ரொம்பநாளைக்கு ரொம்பநாளு!

நலமா?

அம்மம்மா சேதி கேட்டு வருந்துகின்றேன்.

நானும் உங்கூர் வந்தப்பப் பார்த்தேனே! கோவில்களில் பூஜை ரொம்ப சிரத்தையோடுதான் செஞ்சாங்க.

said...

ரொம்பநாளைக்கு ரொம்பநாளு!
இப்படித்தான் அடிக்கடி ப்ரேக் எடுத்திடறேன்.

நலமா?
//நலமே நலம். :)

அம்மம்மா சேதி கேட்டு வருந்துகின்றேன்.//

ரொம்ப வருத்தம் தான். ஆனால் ரொம்ப கிடக்காம இருந்தாங்களேன்னு ஆண்டவனுக்கு நன்னி சொல்லிக்கறேன்.

said...

மணைபோட்டு அமர்ந்த தோழிக்கு மனநிம்மதி கிடைக்கட்டும். இந்தக் கோவிலுக்குப் போயிருக்கிறேன் துளசி. அந்த டெம்பிள் ரோடில் பூராவும் கோவில்கள் தான். ஷீர்டி பாபா கோவில் கூட இருக்கும். மல்லேஸ்வரம் நல்ல இடம். நீங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அழகாக இருக்கிறது. சாந்திக்கு நீங்கள் விடுமுறை கொடுத்த அழகு அற்புதம்.செங்கட்சீயம் செய்யும் மாயம் தொடரட்டும்.

said...

உங்கள் புண்ணியத்தில் பெங்களூரூவில் உள்ள Citrus Cunningham Hotel பற்றி தெரிந்து கொண்டேன். அவர்களது Web site சென்று பார்த்தேன்.

// 'எப்பப் பார்த்தாலும் அடுப்பைக் கட்டிக்கிட்டு அழணுமா? வெளியே போய் சுற்றிப் பார்த்துட்டு அப்படியே வேறெங்காவது சாப்பிடலாம்' என்று சாந்திக்கு ஓய்வு கொடுத்தேன்.//

நல்ல காரியம் செய்தீர்கள். உங்கள் வழி .... தனி வழிதான்.

மல்லேஸ்வரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலய தரிசனம் கண்டேன். பகிர்வுக்கு நன்றி.

said...

அருமையான பதிவு !!

said...

தூணை பிளந்து கொண்டு நரசிம்மர் - கோவில்களில் இதுவரை எங்கேயும் பார்த்ததில்லை. நவராத்திரி கொலு பொம்மைக் கடையில் இம்முறை வந்திருந்ததாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

தோசை பசியை கிளப்புது....:) மாமியாரின் ரசனை நல்லாயிருக்கே...:) இங்கே நான் ஆதிலட்சுமி, என் மாமியார் விஜயலட்சுமி, அவங்க மாமியார் ஜெயலட்சுமி...:))

அன்னத்தை முயற்சித்து பார்த்தேன். ம்ஹூம்.. அந்த அளவுக்கு வரலை...:))

தொடர்ந்து வரேன் டீச்சர்.

said...

நெறைய கொசுவத்தி சுத்த வெச்சிட்டீங்க.

கன்னிங்கம் ரோட்டுல என்னடா இப்படியொரு ஓட்டலான்னு நெனைக்கும் போதே.. இப்பதான் கட்டியிருக்காங்கன்னு நீங்களே சொல்லிட்டீங்க. பெங்களுருக்கு நான் போனா அடையாளமே தெரியாது போல.

அந்த நரசிம்மர் கோயில் ரொம்ப அருமையான கோயில். அங்க போகச் சிறந்த நேரம் விடியக்காலை. அதுலயும் திருமஞ்சனம் குடுத்துப் போனா இன்னும் நல்லாயிருக்கும். திருமஞ்சனத்தப்போ எண்ணெய்க் கிண்ணத்தில் மல்லிகைப் பூவைத் தொட்டு நம்ம கைல வைப்பாங்க. அந்த எண்ணெய் வாசனை.. ஆகாகா!

இங்கயும் ரொம்பக் கூட்டம் வருதுன்னு வீடியோல இருந்துத் தெரியுது. கூட்டம் வராத காலத்துல என்ன அங்க வரவெச்ச கடவுளுக்கு நன்றி.

said...

நான் அனுப்பிய கருத்துரையைக் காணோம். நம்பள்கியின் கமெண்ட்டோட என்னுடடைய கருத்துரையும் நீங்கி விட்டது போலிருக்கிறது. நான் அப்போது எழுதிய கருத்துரை இதோ -

உங்கள் புண்ணியத்தில் பெங்களூரூவில் உள்ள Citrus Cunningham Hotel பற்றி தெரிந்து கொண்டேன். அவர்களது Web site சென்று பார்த்தேன்.

// 'எப்பப் பார்த்தாலும் அடுப்பைக் கட்டிக்கிட்டு அழணுமா? வெளியே போய் சுற்றிப் பார்த்துட்டு அப்படியே வேறெங்காவது சாப்பிடலாம்' என்று சாந்திக்கு ஓய்வு கொடுத்தேன்.//

நல்ல காரியம் செய்தீர்கள். உங்கள் வழி .... தனி வழிதான்.

மல்லேஸ்வரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலய தரிசனம் கண்டேன். பகிர்வுக்கு நன்றி.

said...

உங்கள் பதிவைப் பார்த்ததும் பெங்களூரிலேயே பலமுறை மாதக்கணக்கில் இருந்தும் இம் மல்லேசுவரக் கோவில்களுக்குப் போனதில்லை. எப்போதுமே அருகிலுள்ள கோயில்களுக்குப் போய்வந்தோமே தவிர முயற்சித்ததே இல்லை. எவ்வளவு தவறவிட்டிருக்கிறேன். ராஜராஜேசுவரி கோயில்,எப்போதும் பான்ஸவாடி ஆஞ்ஜநேயர், மற்றும் அருகிலுள்ள சிவன் கோயில்கள் தான். நினைக்கவே இப்படியா என்று தோன்றியது. உங்கள் பதிவு மூலம் அருமையான தரிசனங்கள். மனது நிறைந்தது.
பெங்களூர்பூரா உறவினர்கள்தான்.
கட்டாயம் அடுத்துப் போகும்போது, துளசிகோபாலை நினைத்துக்கொண்டு யாவரையும் தரிசனம் செய்ய வேண்டும். காலம் கடந்த நல்ல யோசனை. விக்ரஙங்களின் வர்ணனை தரிசனம் செய்தமாதிரியே
கற்பூர தரிசனம், அழகிய படங்கள்
மிக்க நன்றி.
அந்ததோசை பெங்களூர் ப்ரபலம். ஆஹா. அன்புடன்

நினைக்கவே

said...

வாங்க வல்லி.

சிரிச்ச முகத்துடன் செங்கட்சீயம் காட்சி கொடுத்தார்ப்பா:-)

மல்லேஸ்வரத்தில் மட்டுமல்ல, பெண்களூரில் தடுக்கி விழுந்தா கோவில் வாசலாத்தான் இருக்கும்.

இது எங்க கிறைஸ்ட்சர்ச்சுக்கு சிஸ்டர் சிட்டி. அக்கா முறை. எங்களுக்கு இங்கே இந்துக்கோவில்ன்னா ஒன்னே ஒன்னு,

அக்காவுக்கும் தங்கைக்கும் வித்தியாசம் பாருங்களேன்!!!

said...

வாங்க சசி கலா.

நன்றிப்பா. படிக்க போரடிக்காம இருக்குதானே?

said...


வாங்க ரோஷ்ணியம்மா.

ஆஹா.... வீடு முழுக்க லக்ஷ்மிகளா!!!

அதுதான் வீடே ஒரே ரோஷ்ணியா இருக்கு:-)

யூட்யூபிலே towel animals னு போட்டுப் பாருங்க. யானை கூடசெய்யலாமாம்!

டவல் நல்ல கனமானதாவும் பெருசாவும் இருக்கணும். நான் ஒரு ஸ்வான் செஞ்சு பார்த்தேன்.சுமாரா வந்தது:-)

said...

வாங்க ஜிரா.

அப்பவே நீங்க அனுபவிச்சதை, நாங்க இப்பத்தான் அனுபவிக்கிறோம் பாருங்க!

அதிகாலைக் கோவில் எல்லாம் இனி இல்லை. எப்படியும் கிளம்பவே எட்டு ஆகிருது, பயணங்களில்.

எங்கேபார்த்தாலும் கூட்டமோ கூட்டம்தான்:(

said...

வாங்க தமிழ் இளங்கோ.

அடடா.... உங்க பின்னூட்டமும் டிலீட் ஆகிருச்சா?

சிரமம் பார்க்காமல் மீண்டும் அனுப்பினதுக்கு நன்றி.

டேப்ளட்டில் விரலால் தொடக்கூடாது இனி:-)

நாந்தான் இடும்பியாச்சே. அதான் தனி வழி:-))))))

said...

வாங்க காமாட்சி.

அங்கேதான் ஏகப்பட்ட கோவில்கள் இருக்கே! நானும் இந்த முறை அஞ்சு கோவில்களை தரிசிச்சதோடு சரி.

அப்புறம் ஸ்பெஷல் கோவில்களா மூணு ஊருக்கு வெளியே!

பதிவில் எழுதணும்.

தோசை, பார்க்கவே அட்டகாசமா இருந்தது என்பது நிஜம். அந்த இளம் ப்ரவுன் நிறம் வீட்டுலே சுட்டால் கிடைப்பதில்லை:(

வருகைக்கு நன்றி.

said...

எங்க ஊர்ல நாங்க பார்க்காத கோவில் எல்லாம் நீங்க பாத்துட்டீங்க! நீங்கள் எழுதினதுக்கப்புறம் போகாமலிருக்க முடியாதே! மல்லேஸ்வரம் விசிட் ஒரு நாள் வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல விஸ்தாரமான விவரிப்பு, தகவல் புகைப்படங்கள் என்று அருமையாக இருக்கிறது.

said...

ஆலய தரிசனம் கிடைக்கப்பெற்றோம்.

said...

வாங்க மாதேவி.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ரஞ்ஜனி.

ஒரு வீக் எண்ட் (சனிக்கிழமையா இருக்கட்டும்) போயிட்டு வாங்க.

பெருமாள் சூப்பர்!