Showing posts with label ப்ரிஸ்பேன். Show all posts
Showing posts with label ப்ரிஸ்பேன். Show all posts

Monday, August 27, 2012

போனால் வராது.... பொழுது போனால் கிடைக்காது..... (ப்ரிஸ்பேன் பயணம் 29)

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையாமே! பனிவிழாத ஊரில் ஐஸ் ஸ்கேட்டிங் செஞ்சுக்க வேற வழி? கிங் ஜியார்ஜ் சதுக்கத்துலே விண்ட்டர் ஃபெஸ்டிவல் நடக்க ஏற்பாடாகுதுன்னு நேத்து பார்த்து வச்சுக்கிட்டதை ஞாபகமா கோபாலிடம் சொல்லி வச்சேன்.

 காலையில் வழக்கம்போல் எழுந்து கடமைகள் முடிச்சு காலை உணவுக்கு கீழே ரெஸ்ட்டாரண்ட் போய் வந்ததும் முதல் வேலையா பொட்டிகளை அடுக்கி வச்சோம். இன்னிக்கு மாலை ஃப்ளைட்டில் வீடு திரும்பணும்.


 ஆறுமணிக்குத்தான் விமானம் என்பதால் லேட் செக்கவுட்டு கேட்டு மதியம் மூணு வரை கிடைச்சது. பக்கத்து பேட்டையில் ஒரு மால் இருக்கு, அங்கே போகலாமுன்னு குவீன்தெரு மாலுக்கடியில் இருக்கும் பஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். ஜிலோன்னு கிடக்கு. தகவலில் பார்த்தால்.... நாம் போய் கொஞ்சம் சுத்தி வரவே குறைஞ்சது நாலு மணி நேரம் ஆகும்போல இருக்கு. இதே வெஸ்ட்ஃபீல்ட்ஸ் நம்ம ஊரில் இருக்கே. வேணாமுன்னு தோணுச்சு.

 பார்த்துவச்ச பையை வாங்கிக்கலைன்ற துடிப்பு கோபாலின் முகத்தில் தெரிஞ்சது. குவீன்தெரு மாலில்தானே இருக்கோமுன்னு மையர்ஸ் கடையில் போய் பையை வாங்குனதும்தான் புள்ளி முகத்தில் மகிழ்ச்சி. மடிக்கணினியும் ஒரு நாளுக்குள்ள துணிமணியும் வச்சுக்க வாகாய் இருக்காம்! சும்மாவே பை பைன்னு ஆடுவார்., இப்போ இந்த மடிக்கணினி தூக்கும் வழக்கமும் சேர்ந்துக்கிட்டதால் வகைவகையா இந்த ரகம் பைகள் சேர்ந்து கிடக்கு வீட்டுலே!

 விலை கொஞ்சம் கூடுதலுன்னு நானும், நியூஸியை விட விலை மலிவுதான். பத்து வருச இன்ட்டர்நேஷனல் கேரண்டீ வேற இருக்குன்னு அவருமா எண்ணம். ஆமாம்... பத்து வருசம் இந்தப் பையை வச்சுருக்கப் போறதுமாதிரிதான்......

 அப்படியே பார்த்து வச்ச ஷர்ட்ஸ்ம் வாங்கிக்கிட்டு காலாற நடந்து ஒரு ஆர்கேடுக்குள் நுழைஞ்சோம். கப் அண்ட் சாஸர்ஸ் விக்கும் கடையில் புது அலங்காரம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. பூனை டீ ஜக் ஒன்னு நல்லா இருந்துச்சு.



 மால் கலகலன்னு இருக்கு. வீக் எண்ட் கூட்டம் வேற! பலூன்காரர் ரொம்ப மகிழ்ச்சியோடு இருக்கார். எங்க சாமிதான் ஒஸ்த்தின்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க ஒருத்தர். இருந்துட்டுப் போகட்டும் எனக்கு பிரச்சனை இல்லை!


 கிங் ஜியார்ஜ் சதுக்கத்துக்கு வந்தோம். விழா ஆரம்பிச்சு ஃபுல் ஸ்விங்க்லே இருக்கு. 23 டாலர் டிக்கெட்டுலே 45 நிமிஷம் பனிச்சறுக்கு விளையாடிக்கலாம். ஸ்கேட்ஷூவும் தர்றாங்க. டவுன் கவுன்ஸில் முன்னால் இருக்கும் இடத்துலே தண்ணீரைத் தேக்கி Ice Skating Rink போட்டுருக்காங்க.

 Bobby is a seal skating aid ஒன்னு ஏழரைக்குக் கிடைக்கும். இது 12 வயசுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு மட்டும். ஆனா.... 2 டைம்ஸ் பன்னிரெண்டு வயசெல்லாம் அதுலே ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தாங்க.. போனா வராது, பொழுது போனாக் கிடைக்காதுன்னு ...... கொண்டாட்டம்தான்.

 நமக்கோ........ ஐஸைப் பார்த்துப்பார்த்துப் போதுமுன்னு ஆகிருச்சு. எங்கூர்லே நம்ம வீட்டிலிருந்து ஒரு மணி நேர ட்ரைவ் போனால்.... முழுசா ஒரு ஏரியே உறைஞ்சு கிடக்கும். இலவச ஸ்கேட்டிங்தான். பக்கத்துலே இருக்கும் குன்றுச் சரிவில் கொட்டிக்கிடக்கும் பனியில் மெள்ள ஏறி ஒரு முப்பது மீட்டர் போனதும் ப்ளாஸ்டிக் விரிச்சு அதுலே உக்கார்ந்தால் சர்ருன்னு ஒரே சறுக்கு. சின்னப்பிஞ்சுகளையெல்லாம் கூட்டிவந்து அஞ்சாறு மீட்டர் சரிவில் உக்கார வைப்பாங்க. சறுக்கி வரும்போது சிரிப்பைப் பார்க்கணுமே!!!!

 பெரிய பெரிய ஸ்கீ ஃபீல்ட் இருக்குன்னாலும் அதுக்கெல்லாம் போய் ஆட நேரம் ஏது? ஒரு ஆசைக்கு இப்படி அநேகமா எல்லாக் குடும்பங்களும் வந்துரும். என்ன ஒன்னுன்னா..... முதல்நாள் நல்ல பனி பேய்ஞ்சு மறுநாள் நல்ல வெய்யில் இருக்கணும்!

 இங்கே வந்த புதுசில் நாங்க போடாத ஆட்டமா? இப்போ ஒன்னும் வேணாம். குளிர் குளிருன்னு கொஞ்சம் வெறுப்பாக்கூட இருக்கு. ஆனா இள ரத்தத்துக்குக் குளிர் தெரியாது.



 இங்கத்து மக்களுக்குக் குளிர்காலம் ரொம்பப் பிடிக்குமாம். ஈ ஒன்னும் இருக்காதே அப்போன்னு ஒரு சந்தோஷம். லிப்டன் சாய்க்காரங்க தனிக் கூடாரம் போட்டு உள்ளே ஃபயர்ப்ளேஸ், ஹீட்டர்ஸ் எல்லாம் வச்சு இருக்கைகள் போட்டு வச்சு அதிதி உபச்சாரம் செய்யறாங்க. இலவச ச்சாய் வேற! சூடாக் குடிச்சுக்கிட்டே ஸ்கேட்டிங் ரிங்க் பார்த்துக்கலாம்.

 ச்சாய் நல்லாத்தான் இருக்கு. ஆனால் பெரிய கப்! குடிச்சு முடிக்க நாலுநாளாகும் போல இருக்கு! வீட்டுலே போய் போட்டுக் குடிக்க இலவசப்பாக்கெட் நாலும் கொடுத்தாங்க. எல்லாம் அதுலே இருக்கு. கொதிக்கும் நீர் ஊத்துனால் போதும் ச்சாய் ரெடி!

 நல்லா ஹெவியா விளம்பரப்படுத்திக்கறாங்க லிப்டன் டீ நிர்வாகத்தினர்.


 எந்த ஊருக்குப் போனாலும் கிளம்பும் சமயம் வந்துட்டால்.... கொஞ்சம் ஃபீலிங்ஸ் ஆகிப்போகுதுல்லே? ஆன்ஸாக் சதுக்கம்வழியா அறைக்கு வந்துக்கிட்டு இருக்கோம். செயிண்ட் ஆண்ட்ரூஸ் சர்ச்சை உள்ளே போய்ப் பார்க்கலையேன்னு போனால்.... காலை 12 மணி வரைதான் திறந்திருக்குமாம் சனிக்கிழமைகளில்:( போயிட்டுப்போகுது. அடுத்த முறைக்கு வச்சுக்கிட்டால் ஆச்சு.

 எதிரில் ரயில் ஸ்டேஷனில் வண்டிகள் கிளம்ப ரெடியா இருக்கு. பேசாம ஏர்ப்போர்ட்டுக்கு ரயிலில் போகலாம். :"வேணாம்மா.... பெட்டிகளை உருட்டிக்கிட்டு தெருவிலே வரணும். " (வந்தால் என்ன ? )

 பகல் சாப்பாடு இப்போதைக்கு வேணாம். குடிச்ச ச்சாய் பசியைப் போக்கடிச்சுருச்சு:(   ஏர்ப்போர்ட் லவுஞ்சில் போய் (ஓசியில்) சாப்பிட்டுக்கலாம்.

 அறைக்கு வந்ததும் புதுப்பையிலே கொஞ்சம் பொருட்களை எடுத்து அடுக்கி அழகு பார்த்தார்! முகம் முழுசும் ஒரு பூரிப்பு! இப்போ நாம் போகப்போவது ஏர் நியூஸிலண்ட் விமானச்சேவை. அதுலே கோபாலுக்கு ரெண்டு கேபின் பைகள் அனுமதி உண்டு.

 சாமான்களை எடுத்துக்கிட்டு லாபிக்கு வந்தோம். கணக்கை முடிச்சுக்கிட்டு டாக்ஸிக்குச் சொன்னப்ப, அப்போதான் யாரையோ கொண்டு இறக்குன வண்டியே தயாரா இருக்குன்னாங்க.

 ஐயோ..... வேன்... வேணாமுன்னா.... ட்ரைவரைப் பார்த்துட்டு, இதுலேயே போலாமுன்னு கோபால் சொன்னார். ட்ரைவர் ஒரு இந்தியர். பஞ்சாப். லூதியானாக்காரர் வந்து ஒரு வருசம் ஆச்சாம். கொஞ்சம் கூட நளினமே இல்லாத சாரத்யம். நிதானமா போகச்சொன்னால்..... கேட்டுட்டாலும்.....

 சமையல் வேலைக்கு படிக்க வறேன்னு அளந்துட்டு விஸா வாங்கிக்கறாங்க. இங்கே வந்ததும் காசு சம்பாரிக்க எதாவது ஒரு வேலை கிடைச்சுருது..

 வடக்கே முக்கியமா தில்லி, சண்டிகர் பஞ்சாப் ஹரியானா பயணங்களில் எங்கே பார்த்தாலும் ஆஸி, நியூஸி, இங்கிலாந்து, அமெரிக்கா,கனடா போகணுமான்னு ஏகப்பட்ட விளம்பரங்களும் ஏஜன்ஸி ஆஃபீஸ்களும் பார்த்தோம். விஸா, டிக்கெட், படிக்கக் கட்டவேண்டிய ஃபீஸ், இங்கே வந்தால் தங்கவும் உணவுக்கும் ஆகும் செலவுக்குக் காசுன்னு எல்லாத்தையும் கூட்டிப்பார்த்தால் சில லட்சங்களுக்குக் குறையாது.. ஆனால் எப்படித்தான் சமாளிக்கலாம் என்ற தைரியத்தில் வர்றாங்களோ தெரியலை:(

 சென்னையில் இப்படி ஏஜன்ஸிகளின் விளம்பரம் பார்த்த நினைவில்லை எனக்கு. ஒருவேளை அந்த ஏரியாவுக்கு நான் போகலையோ என்னவோ!

 ச்சைனா டவுனைத் தாண்டும்போதுதான் .... அட இதை எப்படி மறந்தோமுன்னு நினைச்சேன். ப்ரிஸ்பேன் நதியையொட்டிப் போகும் சாலையில் பயணம். ஹொட்டேலை விட்டுக் கிளம்புன இருபத்தியஞ்சாவது நிமிசத்துலே ஏர்ப்போர்ட். வந்தோமுன்னா வேகம் எப்படி இருக்குமுன்னு பாருங்க.


ஆளரவம் இல்லாத விமான நிலையத்தில் எப்பவும்போல ஒரு கருப்புப் பசு நின்னுக்கிட்டு இருக்கு. நானும் ஒரு ஆறேழுவருசமாக் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். இரத்தப்புற்று நோய்க்கு ஆளான சின்னஞ்சிறு சிறுவன் நாலுவயசு Lachlan வரைஞ்ச படங்களை,  தன் உடலெங்கும் தாங்கிப்பிடிச்சு நிக்கும் பசு. சிகிச்சை நடக்கும்போது ஏற்பட்ட பலவிதமான உணர்வுகளுக்கு வடிகாலா பெயிண்டிங் செஞ்சவைகள்.

 தூரத்தில் ப்ரிஸ்பேன் நகரின் வானளாவும் அடுக்குகள். 

செக்கின் செஞ்சுட்டு லவுஞ்சுப்போய் கொஞ்சம் சாப்பிட்டோம். அப்புறம் தமிழ்மணம் மேய்ச்சல். அஞ்சரைக்கு அறிவிப்பு வந்துச்சேன்னு நம்ம கேட்டாண்டை போனால்..... நம்ம டிக்கெட் ஆறரை மணி ப்ளைட்டுக்காம்.

 நாம் முதலில் செவ்வாய் மாலை மகளுடனே திரும்பிவர்றதாத்தான் திட்டம். அது இதே ஆறுமணி விமானம்தான். அதுக்குப்பிறகு கோபாலின் அலுவல் காரணம் எங்க ரெண்டு பேருக்கு மட்டும் இன்னும் நாலுநாள் கழிச்சு மாற்றி எடுக்கச் சொன்னப்ப, கோபால் ஆஃபீஸ்லே ட்ராவல் கவனிக்கும் நபர் செஞ்ச மாற்றம் இப்படி. ஜெட் ஸ்டாருக்கு ஏர் நியூஸிலேண்ட் தேவலைன்னு நினைச்சிருப்பார் போல!

 நல்லவேளை அரைமணி தாமதமானது. ஒருவேளை காலை ஃப்ளைட்டுக்கு மாற்றி இருந்தா? பொழுதன்னிக்கும் போறார் வாரார். அப்படி இருக்க ஏன் டிக்கெட்டை எடுத்துப் பார்க்கலைன்னா.......... ஙே..........

  'உன் கூட வரும்போது (பயத்தில்) உலகையே மறந்துடறேன்' னு சொல்லத் தெரியலை பாருங்க:-))))

 சரியா நடுராத்திரிக்கு விமானம் விட்டிறங்கி வர்றோம்.... எங்க முன்னாலே நடந்து போகும் பயணியின் ஜாக்கெட் பையில் ஒரு வாழைப்பழம் எட்டிப் பார்க்குது. அவரைக்கூப்பிட்டு பழமெல்லாம் கொண்டு போனால் 200 டாலர் ஃபைன், போர்டைப் பாருன்னா.... ஐயோ என்ன செய்யறதுன்னு முழிக்கிறார். பேசாம உரிச்சுத் தின்னுட்டுத் தோலை குப்பைத்தொட்டியில் போடு. ஆச்சு. ஒரு ஆஸி பயணியின் காசைக் காப்பாத்திக் கொடுத்த புண்ணியம் நம்ம கணக்குலே:-)

 சாப்பாட்டு ஐட்டம் இருக்குன்னு என் கார்டில் எழுதி வச்சுருந்தேன். என்னன்னு கேட்டப்ப ச்சாய் னு எடுத்துக் காமிச்சப்ப, அதிகாரியின் கண்ணில் மின்னல். அட சுடுதண்ணீ ஊத்துனாப் போதுமா!!!!

 ஆஹா.... அப்ப இன்னும் இது  நியூஸிக்கு வரலை போல!!!!

 டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வந்தப்ப மணி பனிரெண்டரை! வழியெங்கும் நாலுநாளைக்கு முன்னே விடாம ரெண்டு நாளாக் கொட்டுன பனி கெட்டிப்பட்டுக் கிடந்துச்சு.

 மறுநாள் 'ஞாயிறு' வீட்டின் புழக்கடைப் பனியைக் கரைக்க முயன்று கொண்டிருந்தது!

  கடைசியா ஒரு சேதி!  ' பயணம் முடிஞ்சு வந்து ஒரு மாசம் கழிச்சு கோபிட்வீன் ப்ரிட்ஜ் பாதையில் போனப்ப டோல் கட்டாம போயிட்டே. அதுக்கு 30 டாலர் அபராதம் கட்டணுமுன்னு நோட்டீஸ் வந்துருக்கு அதையும் உன் க்ரெடிட் கார்டுலே சார்ஜ் பண்ணிட்டோமுன்னு கடிதாசு போட்டுருக்கு வாடகைக்கார் நிறுவனம்! காரெடுக்கும் பயணிகளுக்கு எங்கெங்கே டோல் கட்டணுமுன்னு ஒரு விவரம் வச்சுருக்கக்கூடாதா?

 கண்ணுக்குப் புலப்படாத இடத்தில் டோல் பூத் வச்சுருந்தா நாம் என்ன செய்வது? இந்தியாவில் இருப்பது போல சாலையை வழிமறிச்சு வசூல் பண்ணத்தெரியலை பாருங்க:(

 போகட்டும் எல்லாம் நமக்கொரு படிப்பினைதான்.

 அதுக்காக பயணம் போகாமல் இருக்க முடியுமா?

 பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!!! 



 பி.கு: எங்க ஊரில் டோல் ரோடு எதுவுமே இல்லை. இன்னும் சொன்னால் தெற்குத்தீவில் சாலைப்பயணம் முழுசும் இலவசமே! தைரியமா வாங்க:-))))

Friday, August 17, 2012

அடடா..... நம்ம மெரினாவில் இப்படி வச்சா நல்லா இருக்காது? (ப்ரிஸ்பேன் பயணம் 26)

மதியச் சாப்பாடு தேடலாமேன்னு,   சர்ச்சுக்கு நேரா சனங்க போய் வந்துக்கிட்டு இருந்த இடைவெளியில் புகுந்தேன். இது தலைமைத் தபாலகத்தை ஒட்டியே இருக்கு. கோட்டைகளில் இருப்பதைப்போல அழகா ஆர்ச் வச்ச பாதை.


 பாதசாரிகள் கடக்க வச்சுருக்கும் க்ராஸிங்கில் பச்சை மனுஷன் வந்ததும் நம்பி கடக்கலாம். எங்கே கவனிக்காமல் போயிருவோமோன்னு டப்டப்ப்ன்னு மெஷின்கன் சுடுவதுபோல ஒரு சத்தம் வேற இந்த ஊரில் வருது. எங்க நியூஸியில் எல்லாம் சைலண்டே!


 வருத்தத்தோடு குறிப்பிடும் ஒரு சமாச்சாரம்....இந்தியாவில் வண்டி ஓட்டிகள் பெடஸ்ட்ரியன் க்ராசிங்கில் பாதசாரிகளுக்காக வண்டியை நிறுத்துவதே இல்லை:( பச்சைமனுஷனை நம்பி நாம் சாலையில் இறங்கினால் சிகப்பு மனுசனா ஆஸ்பத்திரிக்கு போகவேண்டி இருக்கும். சண்டிகரில் இன்னும் ஒரு விசேஷம், எல்லா ரவுண்டபௌவுட்களிலும் ஒரு ஆம்புலன்ஸ் வேற தயாரா நிக்கும். ரைட் ஹேண்ட் ரூல்ஸ் எதுவும் இல்லை. நாலாபக்கங்களிலும் ஒரே சமயத்தில் பாய்ஞ்சு இடிச்சுத்தள்ளிக்கிட்டு வரும் வண்டிகள் முட்டிமோதி யாராவது அடிபட்டா தூக்கிக்கிட்டு ஓடுவாங்களாம்! 

 சரி. ஆர்ச் வாசலுக்கு வருவோம். இது குவீன் தெருவில் வந்து சேருது. எதுத்தாப்போல பரந்த புல்வெளி. போஸ்ட் ஆஃபீஸ் சதுக்கம்.அதுக்கடியிலே ஃபுட் கோர்ட். பத்துப் படிகளோடு எஸ்கலேட்டர் போட்டு வச்சுருக்காங்க. நோகாம நோம்பு கும்பிடலாம்.



 சுத்திவரக் கடைகளும் நடுவிலே இருக்கைகளுமாப் போட்டு வச்சுருக்காங்க. மேலே வட்டமான சீலிங் கண்ணாடி வெளிச்சம் கொண்டுவருது. எல்லா துரித உணவகங்களும் இடம் புடிச்சு உக்கார்ந்துருக்கு. ரெண்டுமூணு இந்தியக்கடைகளும் 'கர்ரி' ' வித்துக்கிட்டு இருக்கு. ஒரு கடையில் 12 மணிக்கு முன்னால் வாங்கினால் சிக்கன் கர்ரி அஞ்சே டாலராம். முழுசா எல்லா கடைகளையும் சுத்திப்பார்த்துட்டு ஸப்வேயில் ஒரு ஆறு இஞ்ச் வாங்கி முழுங்கிட்டு அடுத்த பக்கத்தில் வெளியே வந்தேன். இது அடிலெய்டு தெரு.

 பரந்து கிடக்கும் புல்தரையின் நடுவில் வட்டமான தடுப்பு. இதுக்குள்ளில் இருக்கும் கண்ணாடிதான் அடித்தளத்தில் இருக்கும் ஃபுட் கோர்ட்டின் நடுவில் இருக்கும் கண்ணாடி ஸீலிங். லஞ்சு ப்ரேக் சமயமானதால் ஏகப்பட்ட கூட்டம். ஓய்வா உக்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு அரட்டையடிச்சுக்கிட்டு இருந்தாங்க. மக்களுக்கு உற்சாகம் கொடுக்கத் தெருப்பாடகர்கள் வேற பஸ்கர் என்ற பெயரில். ஒருமாதிரிப் பிச்சைன்னும் வச்சுக்கலாம். நாம் விருப்பப்பட்டுக் காசு போட்டால் சரி. போடலைன்னா அதுக்காக நம்மூர் போல சொற்களால் குதறமாட்டாங்க.

 எனெக்கன்னவோ இந்த பஸ்கர்களைக் கண்டால் கொஞ்சம் பிடிக்காதுதான். நம்மூரில் பொழைக்க வேற வழி இல்லைன்னாதான் பிச்சை எடுப்பாங்க. இங்கெ என்னன்னா எதாவது கலையைக் கத்துக்கிட்டு அதை தெருவில் காட்சிப்படுத்தறாங்க. எங்கூர்லே வருசாவருசம் ரெண்டு வாரத்துக்கு பஸ்கர்ஸ் ஃபெஸ்டிவல் வேற நடக்கும். உலகெங்குமிருந்து தங்கள் திறமைகளைக் காமிக்க பஸ்கர்ஸ் வர்றாங்க. 

 பல சமயங்களில் சூப்பர் மார்கெட் வாசலில் சின்ன, பள்ளிக்கூடப் பசங்க ஒரு வயலினையோ, ரெக்கார்டரையோ வச்சுக்கிட்டு கீங் கீங்ங்கிங்கீன்னு நம்ம காதைத் துளைச்சுக்கிட்டு வாசிப்பாங்க. ஃபண்ட் ரெய்ஸிங்காம். ஸ்கூல் கேம்ப் இப்படி எதுக்காச்சும் போக! 

 எனக்குப் பெற்றோர்கள் மேல்தான் கோபம் பொங்கும். வெல்ஃபேர் டிபார்ட்மெண்டுலே விஷயம் சொல்லிக் கேட்டால் காசு கிடைக்கும். இல்லைன்னா பள்ளிக்கூடமே கூட காசு போட்டுப் பிள்ளைகளைக் கூட்டிப்போகும். பள்ளிக்கூட முதல்வரிடம் ரகசியமாச் சொன்னால்கூடப் போதும். எத்தனையோ பிள்ளைகளுக்கு பகலில் ஸ்கூல் லஞ்ச் கூட எங்கிருந்து வருதுன்னு ரெண்டாம்பேருக்குத் தெரியாம பரிமாறப்படுது. இப்படி இருக்கும் நாட்டில் பிள்ளைகளை சூப்பர்மார்கெட் வாசலில் நிறுத்துவதா? ஏற்கெனவே சோஸியல் வெல்ஃபேர் சிஸ்ட்டத்தில் இருக்கும் பெற்றோர்கள்தான் இப்படியெல்லாம் செய்யறாங்க:( 

 வெல்ஃபேர் சிஸ்டத்தை ஏமாத்தி மக்கள் வரிப்பணத்தைக் கூசாமல் வாங்கிக்கும் பலரில் நம்மாட்கள் கூட இருக்காங்க. அதெல்லாம் தனிக்கதை. என்னமோ போங்க:( 



 இந்த அண்டர்கிரவுண்ட் ஃபுட் கோர்ட் பார்த்ததும் சென்னை மெரினாவில் இப்படி ஒன்னு அமைச்சுட்டா.... கடற்கரையின் அழகு பாழாகாமல் இருக்குமே. சனம் தின்னு முடிச்ச குப்பைக்கூளம் எல்லாம் நெடூக பரந்த கடற்கரை மணலில் பறந்து சுற்றுப்புறத்தைப் பாழாக்காதேன்னு இருந்துச்சு. இப்ப ஒரு மூணு வருசம் முந்தி மெரீனாவை அழகு படுத்தறோமுன்னு கட்டி வச்சுருக்காங்க பாருங்க. அதுக்கடியிலேயே ஃபுட் கோர்ட் வைக்கலாம். நினைச்சுப் பார்க்கப்பார்க்கப் பெருமூச்சுதான்.

 மெரீனா எவ்வளவு அழகான நீளமான கடற்கரை! இப்படிப் பாழடிச்சு வைக்கும் சனத்தை என்னன்னு சொல்ல:(


 நம்ம வங்கிக்கட்டிடம் ப்ரமாண்டமா நிக்க அதுலே ஒரு நவீன சிற்பம். என்ன சொல்லுதுன்னு தெரியலை. உன் மார்பெலும்புவரை தோண்டிப் பார்த்து இருக்கும் காசை எடுத்துவோம் என்பதா? இல்லை நெஞ்சு பிளந்தாலும் உங்களுக்கு சேவை செய்வோம் என்பதா? இல்லையாம். வங்கி எப்படி தொழில்துறைக்கு உழைக்குதுன்னு காமிக்குதாம். நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்............





குவீன்தெரு டேவிட் ஜோன்ஸுக்குள் நுழைஞ்சு முந்தாநாள் கோல்ட் கோஸ்ட்டில் பார்த்து வச்ச காலணி, இங்கே  என் சைஸுக்குக் கிடைக்குதான்னு நேத்து நோட்டம் விட்டு ரெண்டு அளவுகளில் ரெண்டு ஜோடி எடுத்து வைக்கச் சொன்னதைப் போட்டுப் பார்த்தேன். (டிப்ஸ்: ஷூ வாங்கும்போது சாக்ஸ் போட்டுக்கிட்டு செக் பண்ணிக்கணும். )நேத்து செருப்புப் போட்டுருந்ததால் காலுறை  'கையில்'  இல்லை:-)))))


ஷனால் கடைக்கு வெளியே வரிசைகட்டி நிற்கும் கூட்டம். உள்ளே என்ன ஆடுது? விசாரிச்சால் ஸேல் போட்டுருக்காங்களாம்.  நவ்வாலுபேராத்தான் உள்ளே விடுவதால்  வரிசையில் காத்து நிக்கறாங்களாம்.  இதுலே எல்லாம் யானை விலை. ஆனாலும் ச்சும்மா உள்ளே போய்ப் பார்க்க இம்மாம் கூட்டமான்னு இருக்கு!    காசு இருக்கப்பட்டவன் எதையெல்லாம் வாங்குவான்னு தெரிஞ்சுக்கவும் ஒரு கூட்டம் தயாரா இருக்கு பாருங்க!








 காலுக்குச் சரியா இருந்ததை வாங்கிக்கிட்டு கொஞ்சம் மற்றகடைகளைச் சுத்திவந்தப்ப,  டீக்கடை ஒன்னு கண்ணில் பட்டது. அழகழகான பீங்கான் கப் அண்ட் சாஸர்கள், டீ செட்டுகள் ன்னு அமர்க்களமா இருக்கு. ஏழெட்டுவகை சாயா போட்டு வச்சுருக்காங்க. குடி குடின்னு உபச்சாரம் வேற!

"வேணாம். இப்போதான் லஞ்ச் முடிச்சேன். "

"ஆமாம்...  டீ யைச் ச்சாய் ன்னு சொல்வது இந்திய வார்த்தை. நீங்க எப்படி டீயை அதே பெயரில் சொல்றீங்க? "

 "இது விதவிதமான ஸ்பைஸ்கள் சேர்த்தது அதான் சாய்ன்னு சொல்றோம்."

" அய்ய..... வெறும் டீதான் எங்களுக்கு ச்சாய். நீங்க சொல்வது போல ஸ்பைஸ் எல்லாம் சேர்த்தால் அது மஸாலா ச்சாய். "

" அய்யய்யோ..... அப்படியா? இப்படி ஒரு பெயர் இருப்பதே எனக்குத் தெரியாதே! உங்க மஸாலா சாய்லே என்னென்ன ஸ்பைஸ் போடுவீங்க? "

 "சிம்பிளா வேணுமுன்னா இஞ்சி தட்டிப்போட்டுக்கலாம். இல்லை கூடவே ரெண்டு ஏலக்காய் தட்டிப்போட்டுக்கலாம். இல்லைன்னா டீ மஸாலான்னு ஒன்னு தனியா விக்குது. அது குறுமிளகு, பட்டை, கிராம்பு , ஏலக்காய், சுக்கு எல்லாம் கலந்த பொடி . சாயா தயாரிக்கும்போது இந்த மசாலாப்பொடியில் அரை டீஸ்பூன் சேர்த்துட்டா மஸாலா சாய் ரெடி. ஆனால் ஒன்னு,  நாங்க எந்த டீயா இருந்தாலும் அதுலே பால் சேர்த்துத்தான் குடிப்போம். அதுவும் சூடான பால். "

 லெக்சர் கொடுக்கச் சான்ஸ் கிடைச்சால் விடமுடியுதா?

 " அட! ச்சாயில் இவ்வளோ விஷயம் இருக்கா!! விளக்கமா சொல்லித்தந்ததுக்கு நன்றி. நான் இனி வாடிக்கையாளர்கள் கேக்கும் கேள்விகளுக்கு நல்லா விளக்கத்தோடு பதில் சொல்வேன். லாட்டே ச்சாய்ன்னு பால் சேர்த்த திடீர் சாயா கூட இப்ப வந்துருக்கு. வெறும் சுடுதண்ணி சேர்த்தால் போதும். வேணுமா?  "

  " லிப்டன் டீதானே? பார்த்தேன். வேணாம். நான் டில்மா டீ வச்சுருக்கேன் "

 அம்பாரிவச்ச யானைப்படம் போட்ட லிப்டனை பார்க்காம மிஸ் பண்ண முடியுமா? 

நல்லா விளம்பரம் பண்ணிக்கறாங்க. ஊர் முழுசும் இருக்கும் வாடகை சைக்கிள் எல்லாம் லிப்டன் டீ குடிக்கச்சொல்லுதே!

 1890 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்துக்காரர் தாமஸ் லிப்டன் ஆரம்பிச்ச டீ யாவாரம். இப்ப உலகெல்லாம் கொடிகட்டிப்பறக்குது! வகைவகையான ருசி, மணங்கள்ன்னு தூள் கிளப்புறாங்க. ஐஸ் டீன்னு இப்ப இங்கே லோல்படுது சூப்பர்மார்கெட்டுகளில். ரெடி டு ட்ரிங்.


 " கடையைப்படம் எடுக்கலாமா? "

 " பொதுவா எடுக்கக்கூடாது. நீங்க எனக்கு இவ்வளோ விஷயம் சொல்லிக்குடுத்துட்டீங்க. நான் அந்தப்பக்கம் போயிடறேன். நீங்க படம் எடுத்துக்குங்க. நான் பார்க்கலை:-) "

 அட! பேரம் படிஞ்சுருச்சே:-)))))).

 பொடி நடையில் அன்ஸாக் சதுக்கம் தாண்டி நடந்து அறைக்குப்போய்ச் சேர்ந்தப்ப மணி ரெண்டேகால்:-)

 கொஞ்ச நேரத்துக்கு வலை மேயலாம். கட்டுன காசு வீணாகலாமோ?

 தொடரும்.............:-)

Wednesday, August 01, 2012

தலைக்கு மேலே வெள்ளம் போனால்............ ( ப்ரிஸ்பேன் பயணம் 22)

போதும் நிறுத்துன்னு கால்கள் மக்கர் பண்ண ஆரம்பிச்சது. நானும் பார்க்கறேன்.. நாலு மணி நேரமா நடந்துக்கிட்டே இருக்கே? ஓ... நியாயம்தான். கொஞ்ச நேரம் பார்க் பெஞ்சு ஒன்னில் உக்காரலாமா? கண்ணு கரிச்சுருக்கும்போல வானத்துக்கு.... லேசா மழைதூறல் ஒன்னு ரெண்டுமா...... குடை குடைன்னு அலைஞ்சு வாங்கிட்டு இப்போ அதை அறையிலே வச்சுட்டு வந்துருக்கேன் யார் சுமப்பதுன்னு:( 

மெயின் கேட்டை நோக்கி வரும்வழியில் ஃப்ளட்லைன் இருக்கு. இதுவரை வந்த முக்கிய வெள்ளங்களின் அளவுகளை சொல்லும் அமைப்பு. கணக்கெல்லாம் ஒரு 188 வருச சரித்திரம்தான். அதுக்கு முன்னால் இந்த ஊருக்கு என்ன பெயரோ? பெயரே இல்லாமக்கூட இருந்துருக்கும்? இருந்திருந்தால் அபாரிஜின் மொழிப்பெயராக இருந்திருக்கலாம்.

 நகரம் அமைஞ்சது 1824 ஆம் ஆண்டு. என்ன மாதிரி ஆபத்துகள் வரக்கூடும் என்பதையெல்லாம் யோசிக்காமல் நதிக்கு இப்புறமும் அப்புறமுமா நகரை உருவாக்கி நகரமும் கொஞ்சம் கொஞ்சமா விரிஞ்சு போகத்தொடங்கி இருந்துச்சு. அரசு அலுவலகங்கள் பேங்குகள் கடைகண்ணிகள், கூடவே நகருக்கு அழகு சேர்க்கும் தோட்டங்கள் என்று எல்லாமும் நதியை ஒட்டியே! செடிகளுக்குத் தண்ணி எடுத்து ஊத்தக் கஷ்டப்படவேண்டாம் பாருங்க. காலநிலை நல்ல மிதமான சூடு என்பதால் மக்களும் வந்து செட்டிலாகத்தொடங்கி பதினேழு வருசம் கடந்த நிலையில் (1841) புயலும் மழையும் கட்டுக்கடங்காது போய் நதியில் வெள்ளம். ஊரெல்லாம் வெள்ளக்காடு. 27 அடி 8 அங்குல உசரத்துக்கு தண்ணீர் ஏறிப்போச்சு.

 பயந்துபோன வெள்ளையர்களுக்கு ஆறுதல் சொன்னது அபாரிஜின்களே! இதுக்குப்போய் பயப்படலாமா...... முந்தி இன்னும் கூடுதலா வந்துருக்கே.. ரெண்டு பனை உசரத்துக்கு வந்துச்சுன்னு சொல்லி இருக்கலாம். 12 மீட்டர்! அப்போ மீட்டரெல்லாம் ஏது? அடிக்கணக்குக்கூட பூமி புத்திரருக்குத் தெரிஞ்சுருக்கச் சான்ஸே இல்லை:(

 அடுத்து வந்த காலக்கட்டங்களில் சின்னச்சின்ன வெள்ளம் வருவதும் வடிவதுமா இருந்த நிலையில் 1893 ஃபிப்ரவரி மாசம் மூணுமுறை புயலும் மழையும் வெறியாட்டம் ஆடுனப்போ 27 அடி 5 அங்குல வெள்ளம்! நகரின் ஜனத்தொகை 84 ஆயிரம். மூணில் ஒரு பங்கு மக்களுடைய வீடெல்லாம் அடிச்சுக்கிட்டுப் போயிருச்சு. விக்டோரியாப் பாலத்தில் பாதியைக் காணோம்! 35 சாவு. 190 நபர்கள் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில்!

 பூமத்திய ரேகைக்குத் தென்புறம் இருக்கும் நாடுகளுக்குக் கோடை காலம் டிசம்பர், ஜனவரி ஃபிப்ரவரி என்பதால் இந்த மூணு மாசங்களில்தான் மழையும் புயலும் வரும் சீஸன். நாங்க ஃபிஜித்தீவுகளில் இருந்தப்ப வருசாவருசம் வெள்ளத்திருவிழாதான். ஊருக்குள்ளே தண்ணி ஏறிப்போய் படகு மூலம்தான் தெருக்களில் போய் சேதத்தைப் பார்வை இடுவாங்க. பாவம் ஒரு முறை கோபால் Dடிக்கர்லே ஏறிப்போய் ஃபேக்டரி என்ன நிலையில் இருக்குன்னு பார்த்துட்டு வந்தார்! 


 தென்கோள சமாச்சாரம் இன்னொன்னு சொல்லணும். ஊர்லே சிங்க் தண்ணீ எப்படிச் சுத்தி இறங்குதுன்னு பார்த்துருக்கீங்களா? அதுக்கு நேரெதிரா இங்கே தண்ணீர் சுழிச்சு  'இடம் ' போகும். 

 1974 இல் வந்த வெள்ளம் அஞ்சரை மீட்டர் (18 அடி) 6700 வீடுகள் மூழ்கிப்போச்சு. மொத்த நஷ்டக்கணக்கு 200 மில்லியன் டாலர்கள். ஆறுதலான விஷயம் என்னன்னா..... உயிர்ச்சேதம் 14தான்.

 ஒவ்வொருமுறை ஆத்துலே வெள்ளம் வரும்போதும் தோட்டம் கரைமட்டத்தில் இருப்பதால் தண்ணீர் ஊருக்குள்ளே புகுந்து இந்த க்வீன்தெரு மால்தான் முதலில் பாதிக்கப்படும் இடமா இருக்கு. தண்ணீர் ஊருக்குள்ளே வராம இருக்க தடுப்புகளும், ஆற்றின் மட்டம் ஏறாமல் அதிகப்படி வரும் தண்ணீரை இன்னொரு ஆத்துப்பக்கம் (ஸ்டேன்லி ரிவர்) திருப்பிவிட ஏற்பாடுகளும் பண்ணிவிட்டாலுமே வெள்ளம் அதுபாட்டுக்கு வந்துபோய்க்கிட்டு இருக்கு. 1974 வெள்ளத்துக்குப் பிறகு ஒரு அணைகூட கட்டி விட்டுருந்தாங்க. Wivenhoe Dam. ஆறு ஊருக்குள்ளே வர்றதுக்கு 80 கிலோமீட்டர் தூரம் இருக்கும்போதே கட்டுன இது Wivenhoe பெரிய செயற்கை ஏரி!

 ஒவ்வொருமுறையும் பொட்டானிக் கார்டன் பாதிக்கப்பட்டால்....திரும்பி அதைச்சரியாக்க ஏகப்பட்ட நாட்களாகுது. செடிகள் கஷ்டப்படுது 1974 வது வருச வெள்ளத்துலே தண்ணீர் சட்னு வடியாம தோடத்துக்குள்ளே 4.6 மீட்டர் உசரத்துக்கு தேங்கி நின்னுபோய் ஏகப்பட்ட செடிகள் பாழ்! தோட்டத்தையே 10 வாரங்களுக்குப் பூட்டிவைக்க வேண்டியதாப்போச்சு:(

 பேசாம தோட்டத்தை வேற இடத்துக்கு மாத்திட்டால் என்னன்னு யோசனை. Mount Coot-tha என்ற இடத்தில் (நகர மையத்தில் இருந்து இது 7 கிலோமீட்டர் தூரம்) புதுசா ஒரு தாவர இயல் பூங்காவை 1976 இல் அமைச்சுருக்காங்க. 52 ஹெக்டேர் பரப்பளவு. ஆறுவருச உழைப்பு! (இங்கே அடுத்த முறை போகலாம், என்ன! ஆஸிக்கு வராமயா இருக்கப்போறோம்?) 

 என்னதான் காபந்து செஞ்சாலும் இயற்கை அழிவுன்னு வரும்போது மனுசனால் எதிர்த்து நிக்க முடியுதா? இதோ போனவருசம்  2011 இன்னுமொரு வெள்ளம் வந்து நகரைப்பதம் பார்த்துச்சு. இந்தமுறை க்வீன்ஸ்லாந்து மாநிலத்தையே பதறவச்சுட்டுப்போச்சு. அன்னிக்கு நேபாளக் கோவில் இருக்குன்னு தென்கரைக்குப்போனோம் பாருங்க.... அங்கே இருக்கும் ஸ்டேடியத்துக்குள்ளே ஆறறை அடித் தண்ணீர் தேங்கி நின்னுச்சு. அந்த ஃபெர்ரி வீல் இருக்குமிடத்தில் ரெண்டு கூண்டுகள் வரை முங்கிப்போச்சு!

 வழக்கம்போல் நகரமையத்துலே பதினாலரை அடி உயரம் வெள்ளம். இப்போ நகரின் மக்கள் தொகை ரெண்டு மில்லியனுக்கும் மேலே! நஷ்டக்கணக்குன்னு பார்த்தால் ஒரு பில்லியன் டாலர்களாம்! கூட்டம் சேரச்சேர எல்லாமே கூடித்தான் போகுது, இல்லை!

 சிட்டி தோட்டத்தையே இப்போ பாதிவரைதான் பார்த்தேன். மீதி இன்னொருக்கான்னு நினைச்சுக்கிட்டு ஆன்ஸாக் சதுக்கத்தின் வழியா அறைக்குத் திரும்பினேன். வழியில் அங்கங்கே சைக்கிள் ஸ்டேண்ட்லே ஒன்னுபோல சைக்கிள்கள். எல்லாத்துலேயும் லிப்டன் டீ விளம்பரம் கண்ணை இழுத்துச்சு. என்னன்னு கொஞ்சம் கிட்டேபோய்ப் பார்த்தால்..... இது ஒரு சூப்பர் ஐடியா!

 சிட்டி சைக்கிள் வலைப்பக்கத்துலே போய் நாம் பதிவு செஞ்சுக்கணும். நம்முடைய கடனட்டை எண்ணோ இல்லை டெபிட் கார்டு எண்ணோ கொடுத்துடணும். நமக்கு ஒரு அட்டையை அனுப்பி வைப்பாங்க. இல்லைன்னா மூலைக்கடையில் ப்ரீபெய்டு கார்டு வாங்கி இதுக்குண்டான டெர்மினலில் நுழைச்சு ரெஜிஸ்தர் பண்ணிக்கணும்.

 நகரத்தின் பல்வேறு பகுதிகளில் 150 சைக்கிள் ஸ்டேண்ட் வச்சுருக்காங்க. ஒவ்வொன்னிலும் குறைஞ்சது 20 வண்டிகள். பல சைக்கிள்களுக்கு ஹெல்மெட் கூடவே இருக்கு. நம்ம கார்டை அதுக்குண்டான மெஷினில் உள்ளெ தள்ளி அது கேக்கும் தகவல்களைப் பதிஞ்சுட்டா ஒரு சைக்கிள் லாக்கிலிருந்து விடுபடும். அதை எடுத்துக்கிட்டு சவாரி போக வேண்டியதுதான். அதிலும் முதல் 30 நிமிசங்களுக்குச் சார்ஜ் கிடையாது. ஒவ்வொரு முப்பது நிமிசத்துக்கும் வெவ்வேற ஸ்டேண்டுலே சைக்கிளை விட்டுட்டு இன்னொரு வண்டி எடுத்தோமுன்னா நாள் பூரா இலவசமாவே சுத்திவரலாமாம். எதுக்கு இந்த அல்பத்தனம்? ஒரு முழுநாள் வாடகையே ரெண்டு டாலர்தான். வருசம் முழுசுக்கும் வாடகை சைக்கிள் வேணுமுன்னா வெறும் 61 டாலர்கள்தான். மாணவர்களுக்கு இன்னும் சலுகை விலை வேற! நமக்கு வார வாடகைன்னா கூட 11 டாலர்கள்தான். சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சா சுற்றுலாப்பயணிகளுக்கு இது ஒரு வரப்ரசாதம். ஒரே ஒரு கண்டிஷன் என்னன்னா குறைஞ்சபட்ச வயசு 17 ஆக இருக்கணும்.

 எங்க நியூஸியில் இது இல்லை:( இங்கேதான் முதல்முதலாப் பார்த்தேன்.

மாலையில் கோபால் வந்தபிறகு மறுபடி பொடிநடையில்  க்வீன்தெரு மால் விஸிட். கழுதை கெட்டால் குட்டிச்சுவர்! வேற போக்கிடம் ஏது?  ராச்சாப்பாட்டுக்கு  இன்னிக்கு ஜோஜோ:-)

 தொடரும்.............:-)))))))