Saturday, April 02, 2005

அழகே அழகு!!!!!

( ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாளின் தொடர்ச்சி. பாகம் 4)

சிராங்கூன் ரோடு ஆரம்பத்துலேயே, அதான் மார்க்கெட்டுக்கு எதிர் பக்கம் ஒரு மால்(Tekka Mall) திறந்திருக்காங்கல்லே, அங்கே
போனோம்.

'நாராயணா பேர்ல்ஸ்' கடை அங்கே திறந்திருக்கறதா ஒரு விளம்பரம் மங்கையர் மலரிலே பார்த்த ஞாபகம். அதாலே
அதைத் தேடலாமுன்னு நினைச்சேன். கஷ்டம் வைக்காம கண்ணுக்கு ஆப்டுச்சு! ச்சும்மா உள்ளே போனோம்.
கடைக்காரம்மா, சாப்புட்டுக்கிட்டு இருந்தாங்க.அங்கேயே கவுண்டருக்குமேலே சில பேப்பர்களைப் பரத்தி, அதுக்கு
மேலே ஃபுட் ராப்பர்னு ஒரு ப்ரவுண் கலர் வேக்ஸ் பேப்பர்லேதான் சாப்பாடு! வாழை இலைக்கு பதில் போல!


எங்களையும் 'சாப்பிட வாங்க'ன்னு அன்பாக் கூப்பிட்டாங்க. நம்ம மனிதர்கள்கிட்டே எனக்கு ரொம்பப் பிடிச்சது
இதுதான். முன்பின் தெரியாதவங்களையும் கூட உபசரிக்கிற இந்தப் பண்பு!

முதலாளி ஊருலே இல்லைன்னும், அதனாலே அவுங்களே காலையிலிருந்துக் கடையைப் பார்த்துக்க
நேர்ந்துடுச்சுன்னும் சொன்னாங்க. 'தெரிஞ்ச கடையிலே சாப்பாடு வாங்கிட்டு வந்துட்டேன். கொஞ்சமா
வேணுமுன்னு 2 வெள்ளிக்குத்தான் வாங்கினேன். ஆனா ஒரு ஆள் சாப்பாடு பாக்கி இருக்கும். நீங்க சாப்பிடுங்க'ன்னு
வற்புறுத்திச் சொன்னாங்க. பரவாயில்லை,எங்களுக்கு சாப்பாட்டு நேரம் இப்ப இல்லை. நீங்க நிதானமாச் சாப்பிடுங்கன்னு
சொன்னோம். அப்புறம் அவுங்க கோயில்களைப் பத்தியும், அவுங்க இப்ப ஒரு மண்டலம்( 40 நாள்) விரதம் இருக்குறதைப்
பத்தியும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. விரதம் எதுக்குன்னு கேட்டதுக்கு 'மகனுக்குக் கல்யாணம் நடக்கணும், நல்ல
பொண்ணாக் கிடைக்கணும்'னு விரதமாம்! நல்ல மாமியார் போங்க!!!! மனுஷங்களைத் தெரிஞ்சிக்கறது ரொம்பவே
சுவாரசியமான விஷயம். இல்லே?

அதே மால்லே ஒரு 'கேரளா குஸீன்' இருக்கு. அங்கே போய் நாங்க பகல் சாப்பாட்டை முடிச்சுகிட்டோம்.
சாம்பார், ரசம், மோர்கறி, அவியல், கோவைக்காய் மெழுக்குபுரட்டி,பப்படம், பாயாசம்ன்னு இருந்தது( மதி, இவ்வளவு
விளக்கம் போதுமா?) நடத்துறவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு சேட்டன். அவரோடு இத்திரி நேரம் மலையாளம்
சம்சாரிச்சுட்டு, சாப்பாடு நல்லா ருசியா இருந்ததையும் சொன்னேன்.( ஏன் ருசியா இருக்காது? ஒரு வேலையும்
செய்யாம, யாராவது ஆக்கித் தந்தா அபார ருசி இருக்கத்தானே செய்யும்!!! ஒம்போது நாளுக்கு அடுப்பைக்கூடப்
பார்க்கமாட்டேனே! ஹைய்யா....)

அதே மாலில் கீழே பேஸ்மெண்டில் ஒரு சூப்பர் மார்க்கெட் இருக்கு. 'நாலு நாளா சூப்பர் மார்கெட் விஸிட் இல்லாம
ரொம்ப போரடிச்சு, மனசு ஒடிஞ்சு இருப்பீங்க. அதனாலே ஒரு அஞ்சு நிமிஷம் போய்ப் பாருங்க'ன்னு மகள் சொல்றா!
என்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்கற மகள்! அங்கே போனப்ப தப்பான பக்கம் போயிட்டோம். உயிரோடு
நிறைய 'கடல் வாழக்காய்கள்' கிடக்கு! 'அம்மா, க்ராப் உயிரோடு இருக்கு'ன்னு பரிதாபப்படும் மகள்!!!

அடுத்த பக்கம் நிறைய பழவகைகள் இருந்தன. தோல்சீவக் கஷ்டமான பழங்களை, வெட்டி, அழகா சின்னத்துண்டுகள்
போட்டு ஒரு ட்ரேயில் அடுக்கி வச்சிருக்காங்க. 'ஜஸ்ட் ரெடி டு ஈட்' இங்கே எங்களுக்குக் கிடைக்காதவகைப்
பழங்களாப் பார்த்து வாங்கினோம்.விலையும் ரொம்பவே மலிவு. ஒரே ஒரு வெள்ளிதான்! இப்ப எங்க நியூஸி
டாலர் நல்லா இருக்கறதாலே, எங்க விலையிலே வெறும் 85 செண்ட். வாழைப்பழமும் இதே மாதிரி உரிச்சு
வச்சிருக்காங்களான்னு பாத்தேன். ஊஹூம்.. இல்லே! -) இதுதான் நோகாம நோம்பு கும்புடறது!!!

நேத்தும் இப்படித்தான் மார்கெட் உள்ளே போய் எல்லா பழவகைகளையும் நோட்டம் விட்டுட்டு, லைச்சீ, ஸ்டார்
ஃப்ரூட், பன்னீர்ப் பழமுன்னு நம்ம ஊருலே சொல்ற 'ரோஸ் ஆப்பிள்' வாங்கி விழுங்கியாச்சு.எல்லாம் கொஞ்சம்
கொஞ்சம்தான்! இப்ப தினமும் பழமார்கெட் விசிட் வேற! நம்ம கண்ணு முன்னாலேயே வெட்டி, சுளை பிரிச்சுக்
கொடுத்த பலாப் பழத்தையும் அரைக்கிலோ வாங்கி 'ஹேண்ட் பேக்'லே வச்சுக்கிட்டு ஊர் சுத்துனது இப்ப
நினைவுக்கு வருது! அங்கங்கெ காசு எடுக்கக் கைப்பையைத் திறந்தாப் போதும்,
'கும்'முன்னு ஆளைத் தூக்கற வாசனை!!!

மகளுக்கு மூக்குத்தி வேணுமாம். நம்ம தமிழ் நாட்டு வழக்கப்படி இருக்கற திருகாணி இருக்கறது கூடாதாம். வெறும்
கம்பி இருக்கறது வேணுமாம். ஊருக்கெல்லாம் ஒரு வழின்னா இடும்பனுக்கு வேறு வழியாச்சே! இவதான் எங்க
வீட்டு 'இடும்பி!'இதுக்காக கொஞ்ச நேரம் சுத்துனோம்.அப்பதான் கண்ணுலே பட்டது அந்த 'மூக்குத்தி கார்னர்!'

இப்படி ஒரு அனுபவம் எனக்குக் காத்திருக்குன்றது அங்கே போனப்பதான் தெரிஞ்சது! ச்சின்னக் கடைதான்.
இங்கேயும் கடைக்காரர் பகலுணவுலே பிஸி. எங்களைப் பார்த்துட்டு, அவசர அவசரமாச் சாப்பிட ஆரம்பிச்சார்.
'நிதானமா சாப்பிடுங்க! எங்களுக்கு நேரம் நிறைய இருக்கு. நாங்க கண்ணாடிப் பெட்டிக்குள்ளே இருக்கற மூக்குத்திகளைப்
பார்த்துக்கிட்டு இருக்கோம்'னு சொன்னேன். அப்பவே நேரம் மூணே முக்கால். மத்தியானச் சாப்பாட்டோட
நேரத்தைப் பாருங்க! போட்டும். மனுஷன் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு சம்பாரிக்கறதே இந்த வயித்துக்காகத்தான்.
அதையும் நிம்மதியாத் திங்கவிடலைன்னா எப்படி?

அப்ப கடைக்குள்ளெ நுழைஞ்சாங்க ரெண்டு பெண்கள்(!) அதுலே ஒருத்தர் நம்மை மாதிரி சாதாரணமா இருந்தார்.
சொல்லிக்கறதுக்குன்னு ஒண்ணுமில்லை. ஆனா இன்னொருத்தார்....

கொஞ்சம்கூட நாகரிகமே இல்லாம, நான் அவுங்களைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். என்கண்ணை, மீட்டு எடுக்க
முடியாத ஒரு அழகு! அழகுக்குக்கும் நிறத்துக்கும் சம்பந்தமே இல்லைன்ற உண்மை புரிஞ்சது!

என்ன அழகான கண்கள். கருகருன்னு மை தீட்டிய அஞ்சன விழிகள். அப்படியே அதுக்கேத்தமாதிரி பட்டையா
மையால் எழுதுன புருவங்கள். வெற்றிலை போட்டோ/போடாமலோ இருந்த சிவந்த உதடுகள். அந்த மூக்கு
இருக்கே, அப்பப்பா.... என்ன ஒரு தீர்க்கமா இருக்கு! கூந்தலை அழகாக வாரிப் போட்ட பின்னல். அதுலே
ஒரு கூடைப் பூ! மாட்டிலோடு கூடிய காதுக்கம்மல். பெரீஈஈஈஈஈஈய்ய மூக்குத்தி! அதுவும் கல் வச்சது! கழுத்துலே
அளவான நகைகள். அப்புறம், அந்தப் புடவையைக் கட்டி இருக்கும் நேர்த்தி!!! அடடா..... எனக்கே அப்படியெல்லாம்
கட்டிக்க வராது! அந்தக் கட்டம் போட்ட மஸ்டர்டுக் கலர் புடவைக்கே ஒரு அழகு தனியா வந்ததுபோல நீண்டுத்
தொங்குன முந்தானை. என்னத்தைச் சொல்ல, என்னத்தை விட?

மொத்தத்துலே நான் தினமும் வணங்கும் 'பத்மாவதித் தாயார்'முகம்!!!! அவுங்களை ஒரு பீடத்துலே உக்காரவச்சுக்,
கையிலே ஒரு தாமரைப் பூவையும் கொடுத்துட்டாப் போதும். சந்தேகமே இல்லாம 'மஹாலக்ஷ்மி'தான்! அப்படி ஒரு
லக்ஷணம், அப்படி ஒரு களை!!!!! ஐய்யோ.. என்ன அழகு என்ன அழகு!!!!!!

1 comments:

said...

ஆமாம்.... இதுக்கு ஏன் ஒரு பின்னூட்டமும் வரலை.

சதியா இருக்குமோன்னு பயந்து இப்ப நானே ஒரு பி.க. பண்ணிக்கறேன் ப்ளீஸ்:-)