Monday, April 11, 2005

போயிட்டு வரட்டா?

ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் தொடர்ச்சி!!! பாகம் 10

நம்ம கண்ணன், இந்த முஸ்தஃபா கடையைப் பத்தி ஒரு பதிவு போட்டிருந்தது
நினைவிருக்கா?

இந்த முறை சிங்கை வந்தப்பவும் எப்பவும் போறமாதிரி அங்கெயும் போனோம். அட!!! பரவாயில்லையே!!!
பேஷ் பேஷ்ன்னு சொல்ற வகையிலே மாற்றங்கள் இருந்துச்சு! நிறைய இளவயதுக்காரர்கள் வேலை செய்யறாங்க.
அதிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியா பெண்கள் அதிகம்!!!! முந்தியெல்லாம் ஏனோதானோன்னு இருப்பாங்களே
அப்படியில்லாம,நாம கேக்கற பொருளைத் தேடிக் கொடுக்கற தன்மை( குறைஞ்ச பட்சம் எங்கே இருக்குன்னாவது
சொல்றாங்க) பெரிய நிறுவனம், நிறைய ஆளுங்கன்னு சொல்றப்ப பெண்களுக்கு சில இடங்களில் ஏற்படுகின்ற
'பாலியல் தொல்லைகள்' ஏற்பட வாய்ப்பு இருக்காதுதானே? ஒரு நம்பிக்கைதான்!!!!


பொருளாதார ரீதியில் ஆண்களைச் சார்ந்திருக்காம இருக்கறதுதான் உண்மையான 'பெண் சுதந்திரம்'னு நம்பறேன்.
'ஃபைனான்சியல் ஃப்ரீடம்' இருந்தாத்தான் பெண்கள்கிட்டே தன்னம்பிக்கை உருவாகும்.இதுவே ஒரு மனோதிடத்தையும்
தரும். இதுக்கெல்லாம் அடிப்படை, பொண்ணுங்க ஒரு வேலை செஞ்சு சம்பாரிச்சுத் தன்காலுலே நிக்கறது.என் மகளுக்கும்
இதைத்தான் சொல்லிவச்சுருக்கேன்.மத்தபடி எது சரி, எது இல்லைன்றதை அவுங்கவுங்க அனுபவத்துலே படிச்சுக்கணும்!

24 மணி நேரமும் இந்தக் கடை திறந்திருக்கறதுலேயும் ஒரு நன்மை இருக்கு. வேற வேற டைம்ஸோன்லே யிருந்து
வர்றவங்க தூக்கம் வராம இருக்கறப்ப ஷாப்பிங் செஞ்சுக்கலாம்! கடைகளிலே சாமான்கள் அடுக்குகளும் விஸ்தாரமா
இருக்கு! அதுலேயும் அந்த பழைய கட்டிடம்( முந்தி கல்யாண சுந்தரம் கடை இருந்த இடம்) சையத் ஆல்வித் தெரு
முஸ்தாஃபாவைவிட நல்லாவே இருக்கு!!! ஆனா இங்கே ராத்திரி 11 மணிக்கு மூடிடறாங்களாம். அதுக்கப்புறமும்
கடைக்குப்போகணுமுன்னா பக்கத்துச் சந்துலே போகலாம்தானே!!!!

சாமான்கள் வாங்கினபிறகு, 'செக் அவுட்'லே பையோட வாயை இறுக்கக் கட்டிக் கொடுக்கறாங்கன்னு நம்ம கண்ணன் அதைக்
குறையாக் குறிப்பிட்டு இருந்தாரு. கடைக்காரங்க நிலையிலே கொஞ்சம் இருந்து பார்த்தா, அதுலே அவ்வளவா ஒண்ணும்
தப்புல்லேன்னு தோணுது! நம்ம ஜனங்க சில பேர்கிட்டே இன்னும் நேர்மைக்குறைவு கொஞ்சம் இருக்கே! வழியெல்லாம்
ச்சின்னச் சின்னப் பொருளா ஏராளமா குவிச்சு வச்சிருக்கற இடத்துலே 'ஷாப் லிஃப்டிங்' நடக்காம கவனிக்கறது
ரொம்பவே கஷ்டம் இல்லையா? உலக அளவுலே இதாலெ எவ்வளவு நஷ்டம்ங்கறதும், இந்த நஷ்டத்தையெல்லாம்
ஈடு செய்யறதுக்காக எப்படி பொருளோட விலை கூடிப்போகுதுன்னும் யோசிச்சுப் பாருங்க! இப்ப 'சர்வீஸ்' நல்லா
இருக்கே, அதைப் பாராட்டலாம்தானே!!!! இதைப் பத்தி( கண்ணன் பதிவு)மககிட்டே சொல்லிக்கிட்டே வந்தேன்.
அப்ப மகள் அவளோட கையிலே இருந்த முஸ்தாஃபா பையைக் காட்டினா. அவுங்க கட்டி வச்சிருந்த 'வாய்'
கட்டவிழ்ந்து கிடந்துச்சு!!!!! ச்சும்மா பேருக்கு ஒரு கட்டு!!!!!!!

நிறைய வியாபாரம் ஆகறதாலே, விலையும் நியாயமாவே இருந்துச்சு! கொஞ்சம் வயசான கடைஆளுங்கதான்( பழைய
ஆளுங்களாயிருக்கும்!) ஏதோ சுமையைத் தூக்கிவச்சிருக்கற பாவனையுடன், அங்கங்கே கவலையோடு 'கதை' பேசிக்கிட்டு
இருந்தாங்க!ஆனா இளவயது விற்பனையாளர்கள் எல்லாம் அந்தந்த வயசுக்கே உரிய கேலி, குறும்புத்தனத்தோடு
அவர்களுக்குள் அப்பப்ப ஏதாவது பேசியபடி வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாங்க!!!! இனி ஒண்ணும்
வேணாமுன்னு இருந்த நாங்களும் சும்மா 'விண்டோ ஷாப்பிங்' செஞ்சுக்கிட்டு இருந்தோம்.

அப்படியே கொஞ்ச நேரம் போச்சு. மறுபடி வெளியே வந்து பொடிநடையா நடந்துபோய், காய்கறிக் கடைகளை
வேடிக்கை பார்த்தோம். அங்கிருந்த எல்லா நாளும் காய்கறிக் கடைகளைப் பார்த்தாக் கொஞ்ச நேரம் நின்னு,
அதை என் கண்ணாலே 'தின்னு'ட்டுத்தான் போவேன். இங்கே கிடைக்காத அருமையான பல காய்கறிகளைப்
பார்த்து, பெரு மூச்சு விட்டுப்போறதுதான். எவ்வளோ நீள முருங்கைக்காய்!!! ஹைய்யா.. சேப்பங்கிழங்கு
பாரேன்! அட வாழைப் பூ! புடலங்காய் ஏன் இப்படி குள்ளமா இருக்கு இப்படி......ஒரு கடையிலே
முருங்கைக்கீரை கூட இருந்துச்சு! தக்காளி மட்டும் தனியா வாங்குனா கிலோ 1.30 ஆம். மத்த காய்கறிகளோட
வாங்குனா 1 வெள்ளிதானாம்! இது நல்லா இருக்கே! ரெண்டு கத்தரிக்காய் வாங்கினாப் போச்சு -)))))

"சரி, நேரமாகுது. திரும்பலாம். ஏதாவது சாப்பிடணுமுன்னா சாப்பிட்டுக்கோ.ப்ளைட்டுலே சாப்பாடு வர
நேரமாகும். நமக்கு 'ஹிந்து மீல்ஸ்'ன்றதாலே ஊருக்கு முன்னாலே கொண்டுவந்து கொடுத்துருவாங்கதான்!!!
ஆனாலும் 11 மணி ஆயிரும்!"

" பசியே இல்லைமா! வெறும் காஃபி குடிக்கலாம்"

சரின்னு கோமளவிலாஸ் போய் நல்ல ஸ்ட்ராங்கா காஃபி கேட்டுக் குடிச்சிட்டு வெளியே வந்தோம்.முத்துவும் இருந்தார்.
அவர்கிட்டேயும், 'போயிட்டு வரோம். நல்லா இருங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன்.

அங்கெயே ஒரு டாக்ஸி கிடைச்சது. அதுலேயே ஹோட்டெலுக்கு வந்து நம்ம பெட்டிங்களை எடுத்துகிட்டு ஏர்போர்ட்
போய்ச் சேர்ந்தோம். வர்றப்ப வழியெல்லாம் மனசு கொஞ்சம் வெறுமையா உணர்ந்தது. ஏதோ சொந்த ஊரை
விட்டுப் பிரிஞ்சுபோற உணர்வு!அதே சமயம் மறுநாள் நம்மவீட்டுக்குப் போயிருவோம்ன்றதும் ஒரு சந்தோஷத்தைக்
கொடுத்துச்சு!

ஏற்கெனவே எந்த 'ஸீட்'ன்னு 'நெட்'லே பதிவு செஞ்சிருந்ததாலே, லக்கேஜ் மட்டும் செக் இன் செஞ்சோம். ரெண்டு
பேராப் போனா, கடைசியிலே இருக்கற 'இரட்டை ஸீட்'தான் வசதி!!!!

போறப்ப பார்த்த அதே படங்கள்தான் இப்பவும். தமிழ்லே கில்லி, ஆயுத எழுத்து. ஹிந்தியிலே 'சோக்கர் பாலி,
Kyun, hO gaya na . கொஞ்ச நேரம் கேம்ஸ்( எல்லா கேம்ஸும் பழசுதான். இன்னும் அப்டேட் செய்யவே இல்லை)
விளையாடிட்டு, கொஞ்சநேரம் படிச்சுட்டு, சாப்பாடு கிடைச்சவுடன் சாப்பிட்டுட்டு தூங்கியாச்சு!

ப்ரேக் ஃபாஸ்ட் வந்தப்ப மகள் அதை முதல்லே ஒரு ஓரமாத் திறந்து பார்த்துட்டுச் சிரிச்சா. நான் பல்தேய்ச்சுட்டு
வந்து பார்த்தேன். ரவா கிச்சடியும், வடையும்!!!!!! வடை என்னை விடறதாயில்லே!!!!!

இமிகிரேஷன்லே நமக்கு முன்னாலெ இருந்த குடும்பத்து ஆட்களுக்கு ஏதோ குழப்பம். வரிசையிலே நிக்கறப்ப
எப்பவும் நமக்கு முன்னாலே நிக்கறவுங்க 'ஸ்டக்' ஆயிருவாங்க. சூப்பர் மார்கெட் க்யூவிலேயும் அடிக்கடி
இப்படித்தான்!!! இப்ப என்னன்னு பார்த்தா, அவுங்க 'காலாவதி'யான பாஸ்போர்ட்லே வந்திருக்காங்களாம்!
இந்த நாட்டு ஆளுங்கதான்!!!! எல்லாக்(3) கவுன்டரில் இருந்த ஆளுங்களும் இதுலேயே 'பிஸி' யாகிட்டாங்க!

ஒருவழியா எங்க முறைவந்து வெளியே வந்தோம். எப்பவும் செய்யறதுபோல எல்லாத் தீனிங்களையும், 'டிக்ளேர்'
செய்யற மத்த சாமான்களையும், தனியா ஒரு 'கேபின் பேக்' லே வச்சுடறதாலே எல்லாம் ரொம்ப ஈஸியாப் போச்சு!

வெளியே வந்தா குளுருது! 16 டிகிரி! 35லெ இருந்து வந்தவங்களாச்சே!

எல்லா விஷயத்துலேயும் நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கறதைப் போலவே இந்தப் பயணத்தாலெயும் சில நல்லதும்
ஒரு கெட்டதும் நடந்தது!!!

நன்மைன்னு சொன்னா, முடிஞ்சவரைக்கும் எல்லா நண்பர்களையும் சந்திச்சது! கோயில், நல்ல சாப்பாடு,இப்படி.
முக்கியமா ஒண்ணு சொல்லணுமுன்னா மகளோட 9 நாள் இருந்தது! இப்ப அவ தனியா ஃப்ரெண்ட்ஸ்களோட
ஃப்ளாட்டிங் செய்யறதாலே, தனியா அவளோடு ஒன் டு ஒன்னா பேச சந்தர்ப்பம் அமையறது இல்லை.எல்லா
உறவுகளையும் போலவே இந்த பெற்றோர், பிள்ளைங்க என்ற உறவுக்குமொரு கனமான பாலம் வேணும்,
இல்லையா?அதுவும் தோளுக்குமேல் வளர்ந்தாத் தோழி!! அதுதானே பழமொழி? அதுக்கு இந்தப் பயணம் ரொம்பவே
உதவியா இருந்தது!!!

கெட்டதுன்னா.....

நம்ம வீட்டுப் பூனைங்க ரெண்டும் கோபாலை நல்லா ஏமாத்தி இருக்குங்க! 'டின் ஃபுட்' கொடுத்தாச் சாப்பிடாம
இருந்துச்சுங்களாம். ஐய்யோ அதுங்க சாப்பிடலையேன்ற 'பயத்துலெ' இவர் தினமும் சூப்பர் மார்கெட்லே இருந்து
( அதான் நம்ம வீட்டுக்கிட்டே இருக்கற சூப்பர் மார்கெட் 24 மணி நேரமும் திறந்திருக்கே!)நல்ல இறைச்சியும்,
மீனுமாப் போட்டு( மனுஷன் தின்ற க்வாலிட்டி!!!)வந்திருக்கார்.என்னைப் பார்த்ததும், 'ஐய்யோ வந்துட்டாளே'ன்ற
விதமா ஒரு பார்வை பார்த்துட்டு, முதுகைத் திருப்பிக்கிட்டு போகுதுங்க!!!! போதாக்குறைக்கு பொன்னம்மான்னு
அதுங்க வர்றதுக்கு வச்சிருந்த வாசலை'கேட் டோர் ஃப்ளாப்' உடைச்சும் வச்சிருக்குதுங்கள்!!!!!

ரெண்டு வாரம் ஆகியும் இன்னும் அதுங்களை என் வழிக்குக் கொண்டுவந்த பாடில்லை(-


இதுவரை பொறுமையா இந்தத் தொடரைப் படிச்ச எல்லோருக்கும் நன்றி.அப்பப்ப பின்னூட்டத்துக்கு பதில்
எழுதிரலாமுன்னா 'ப்ளாகர்' மக்கர் பண்ணுது(((((-

பின்னூட்டப் பெட்டி ( சுரதா)சரியா இல்லேன்னும் சில பேரு தனிமடலிலே எழுதியிருந்தாங்க.
அவுங்களுக்கும்,தொடரின் ஆரம்பம் முதல் பின்னூட்டம் இட்டு ஊக்கப்படுத்திய அன்பு, அல்வாசிட்டி விஜய்,
மூர்த்தி, கிறிஸ்டோஃபர், மதி, செல்வநாயகி, பாலாஜி-பாரி,ஈழநாதன், முருகன், பாலு மணிமாறன்,
எம்.கே. குமார், வாய்ஸ் ஆன் விங்க்ஸ்( ஏம்பா, இவர் பேரே இதுதானா?), அருணா, மீனா இவுங்களுக்கும்,
இன்னும் பின்னூட்டம் எழுதாம இருந்த மத்த இணைய நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை
மீண்டும் சொல்லிக்கறேன்.

எல்லோரும் சிங்கை இணைய சந்திப்பைப் பத்தி எழுதி அது ஆறி அவலாகப் போனபிறகு, இதை எழுத ஆரம்பிச்சதால்
இதுக்கு 'ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் ( கோழி அடிச்சுக் கும்பிட்ட கதையா)னு தலைப்பு வச்சேன். அது என்னவொ எழுத
எழுத ஒரு ஆர்வத்தாலே நீண்டுபோய் பயணக்கட்டுரையா அமைஞ்சிடுச்சு!

வணக்கம். மீண்டும் சந்திப்போம்...

8 comments:

said...

«ì¸¡... ÅÆì¸õ §À¡Ä§Å ¿øÄ ÍšÊÂÁ¡ ±Ø¾¢ þÕ츣í¸... ±ô§À¡ þó¾¢Â¡ ÅÃô§À¡È£í¸..?

said...

அக்கா... வழக்கம் போலவே நல்ல சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க... எப்போ இந்தியா வரப்போறீங்க..?
(மன்னிச்சுக்கோங்க அக்கா... போன பின்னூட்டம் திஸ்கியில் போட்டுட்டேன்...)

said...

சுவையான (பயணக்கட்டுரை) தொடர்! நன்றி!

அன்புடன்,
கிறிஸ்

said...

கலக்கல நிறைவு செஞ்சிருக்கீங்க. நல்லாயிருக்கு பயணக்கட்டுரை. இந்த மாதிரி நீங்க நிறைய பயணம் மேற்கொள்ளனும். எங்கேங்கே போறீங்களோ அங்கெல்லாம் ப்ளாக்கர் மீட்டிங் போடுங்க. அங்கேயும் நான் இருப்பேன் ;-)

ரவா கிச்சடி சூப்பரா இருக்கு.... ரவாகிச்சடி-உங்க பதிவு

said...

அக்கா, சச்சினும் ஷேவாக்கும் கூட ஏமாத்தலாம். நீங்க தொடர் முழுக்க ஏமாத்தலை! கலக்கிட்டீங்க! போங்க!

ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் அள்ளிக்கோ தள்ளிக்கோன்னு எங்கே போன ஒருத்தி மறக்காம எதையோ எடுத்துட்டுப்போனமாதிரி நம்மளையும்
கோப்பி வகையிறாவுல (ஃபில்டர் காஃபி!)கண்டுக்குட்டீங்க. ரொம்ப நன்றி!

அடிக்கடி வாங்க, கூடிக் கூடி சிரிக்கிறதுக்குக்கும் பேசுறதுக்கும் உங்கள மாதிரி ஆளுங்கதான் வேணும்! மத்ததெல்லாம் இங்கே கிடைக்கும்.

முஸ்தபால இப்போ செம அழகு சாமான்யகள் நெறைய இருக்கு! செல 'சாமான்கள்' பொண்ணுங்க மாதிரியே கூட இருக்குன்னா பாத்துக்குங்க!:-)

மதுமிதாவுக்கும் என்னோட ஹாய் சொல்லுங்க.

அடுத்த டிரிப்புக்கு ரெடியா இருங்க.
உளுந்து ரொம்ப சாப்பிடாதீங்க! :-)

அன்புடன் தம்பி
எம்.கே.குமார்.

said...

மலேசியாவுக்கு வரேன்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் வந்து அழைச்சு போயிருப்பேன்ல அக்கா.. அன்னைக்கு நம்ம கூட்டம் நடந்தப்பகூட நீங்க சொல்லலை.. போங்க நான் பேசமாட்டேன். உங்ககூட நான் டூ!!!

said...

///சாமான்கள் வாங்கினபிறகு, 'செக் அவுட்'லே பையோட வாயை இறுக்கக் கட்டிக் கொடுக்கறாங்கன்னு நம்ம கண்ணன் அதைக் குறையாக் குறிப்பிட்டு இருந்தாரு///

நீங்க என்ன சொன்னாலும் தமிழர்களை இழிவுபடுத்தும் ஒரு செயல். தமிழனுக்கு ஒரு கடை நாகரீகம் கூட இல்லையா? அதுவும் சிங்கப்பூர் போன்ற ஒரு சர்வதேச கேந்திரத்தில். "ஆடத்தெறியாதவள் தெருக்கோணல்" எனும் கதையாக கடை அமைப்பை கொஞ்சம் செலவழித்து முறை செய்தால் இப்படி எல்லோரையும் அவமானப்படுத்தும் ஒரு வழக்கம் சிங்கையில் இல்லாமல் போகும்.

///அவுங்க கட்டி வச்சிருந்த 'வாய்' கட்டவிழ்ந்து கிடந்துச்சு!!!!! ச்சும்மா பேருக்கு ஒரு கட்டு!!!!!!! ///

உங்க அதிர்ஷ்டம் அப்படி! நான் பார்த்த அத்தனை பேரும் 'பாவம்' வாங்கிய பொருளை மீண்டும் ஆசைக்குப் பார்க்கமுடியாமல் (ஷாப்பிங்கின் சந்தோஷமே அதில்தானே உள்ளது) கட்டிய மூட்டையைப் பார்த்துக்கொண்டு 'ஆனந்தபவனில்' தேமேனென சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்! ஆனாலும், துளசி, நீங்கள் கஸ்டமர் பக்கம் நின்று பார்க்காமல் முதலாளிகள் பக்கம் நின்று பார்ப்பது சரியில்லை :-)

said...

ப்ரிய துளசி,

மிக எளிமையான, நகைச்சுவை இழையோடும் தொடர் வழங்கியதற்கு வாழ்த்துக்கள்.

சமயம் கிடைக்கும் போது நேரில் சந்திப்போம் (இரண்டு வலை பதிவாளர்கள் சந்தித்தால், வலை மாநாடுதான்:-).

சுரேஷ்